Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

  • தொடங்கியவர்

இலிங்கோத்பவர்

ma_ling_p.jpg

முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது. பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது.

linkothpavar23.jpg

பொய் சொன்னதற்காக நான்முகனுக்குக் கோயில் இல்லாமற் போயிற்று! தாழம்பூவும் சிவபெருமானை சூடும் பேற்றினை இழந்துவிட்டது. திருமால் தன் பிழைக்கு வருந்தியதால் உய்வடைந்தார்.

திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி பலவாறு போற்றப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தனது பதிகங்கள் பலவற்றில் ஒன்பதாம் (9) பாடலிலும், திருநாவுக்கரசர் 125 பாடல்களிலும் சுந்தரர் 35 பாடல்களிலும் அரியும் அயனும் தேடற் கரியானைப் பரவுகின்றார்கள்.

'நீண்டமாலும் அயனும்வெருவ நீண்ட நெருப்பு' எனப் போற்றும் மணிவாசகர்.

"அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்

நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்

சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ"

என்று பாடுகின்றார். ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெருஞ்சோதியாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை இவ்வடிவம் இனிது காட்டுகின்றது.

சிவன்கோயில் கருவறையின் மேற்குச்சுவர் நடுமாடத்தில் இலிங்கோற்பவமூர்த்தி இடம் பெறுகிறார்.

"அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

அங்ஙனே பெரிய நீ சிறிய

என்னையாள விரும்பி என் மனம் புகுந்த

எளிமையை யென்றும் நான் மறக்கேன்

முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா

முக்கணா நாற்பெருந்தடந்தோள்

கன்னலே தேனே யமுதமே கங்கை

கொண்ட சோளேச் சரத்தானே"

- திருமாளிகைத்தேவர்

"தேடிக் கண்டு கொண்டேன் - திரு

மாலோடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே

தேடிக் கண்டுகொண்டேன்"

என்னும் அப்பர் பெருமானின் திருஅங்கமாலைப் பாடல் இங்கு சிந்தித்தற்குரியது.

இலிங்கோற்பவமூர்த்தியை வழிபட்டால் எல்லாத் தீங்குகளும் விலகும். மக்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் பேறுகளையும் நல்கும். பூதாதிகளின் தொல்லை இராது. நீண்ட ஆயுளையும் புண்ணியத்தையும், மறுமையில் நிலைத்த பேரானந்தம் கிடைக்கும்.

திருச்சிற்றம்பலம்.

maling.jpg

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

நடராஜர்

Nataraj.gif

சிவபெருமானுடைய ஏழு தாண்டவங்கள்

1. ஆனந்த தாண்டவம்

2. சந்தியா தாண்டவம்

3. உமா தாண்டவம்

4. கெளரி தாண்டவம்

5. காளிகா தாண்டவம்

6. திரிபுர தாண்டவம்

நடராஜ தத்துவம்

திருமுகம்:

எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை:

சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.

கங்கை:

இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்:

சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

குனித்த புருவம்:

பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.

குமிண்சிரிப்பு:

அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.

பவளமேனி:

இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி - மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"- திருநாவுக்கரசர்.

nataraja1220.jpg

  • தொடங்கியவர்

நெருப்பு:

இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.

அபயகரம்:

அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்:

யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.

எடுத்த திருவடி:

இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி:

இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்:

இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்

.

தெற்குநோக்குதல்:

ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.

nataraj.jpg

இறைவனின் உடுக்கை - ஆக்கல்(சிருட்டி), அமைத்தகை - காத்தல் (ஸ்திதி), ஏந்திய அனல் - அழித்தல்(சம்ஹாரம்), ஊன்றிய திருவடி - மறைத்தல் (திரோபாவம்), எடுத்த திருவடி - முத்தி (அனுக்கிரகம்)

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

இறைவன் துடி (உடுக்கை)யைக் கொட்டுவதால் ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தினைச் சுடுகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவ மலத்தை அழுந்தித் தேய்விக்கிறான்; தூக்கிய திருவடியால் உயிர்களைப் பிறவிக் கடலிலிருந்து எடுக்கிறான். அபயகரத்தால் உயிர்களை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றான். மும்மலங்களையும் நீக்கி ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அம்பலத்தான் கூத்தினை அழகாகக் காட்டுகிறது உண்மை விளக்கம்.

Shiva8.jpg

"மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆநந்த

மொண்டிருந்த நின்றாடல் காணுமருண் மூர்த்தியாக்

கொண்டதிரு அம்பலத்தான் கூத்து" - உண்மை விளக்கம் 38

இச்சிவ தாண்டவத்தின் சிறப்பு மூவகையில் அமைந்துள்ளது.

1. திருவாசியால் குறிக்கப்படும் இப்பிரபஞ்சத்துள்ளே அனைத்து இயக்கங்களுக்கு அவரது தாண்டவமே மூலமாக அமைந்துள்ளது.

2. மாயையின் தளையிலிருந்து எண்ணிறந்த உயிர்களை விடுவிப்பதையே அவரது தாண்டவம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. பிரபஞ்சத்தின் மையத்தானமான சிதம்பரம் நமது இதயத்தானமாகும். இதயத்தில் தான் அவரது நடனம் திகழ்கிறது.

"ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்

ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்

ஆனந்தமாக அகில சராசரம்

ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே"

- திருமூலர்

"உலகெலாம் உணர்ந் தோதற்கரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

- சேக்கிழார்

dsc8459_nataraj_shiva_dancing_s.jpg

இங்ஙனம் ஆடல்வல்லான் அருள் வடிவம் உண்மையின் வடிவாக, அன்பின் வடிவாக, கருணையின் வடிவாக, இன்ப வடிவாக, ஆனந்த வடிவாகத் திகழ்கின்றது

  • தொடங்கியவர்

nataraj10.jpg

  • தொடங்கியவர்

15.விரதவியல்

379. விரதமாவது யாது?

மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்.

சிவ விரதம்

380. சிவ விரதம் எத்தனை?

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம் என எட்டாம். பிரதோஷ விரதமுஞ் சிவ விரதம்.

381. சோமவார விரதமாவது யாது?

கார்த்திகை மாச முதற் சோமவாரத் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் ஒரு பொழுது இரவிலே போசனஞ் செய்யக்கடவர்; அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர். இவ்விரதம் வாழ்நாளளவாயினும், பன்னிரண்டு வருஷ காலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும், அநுட்டித்தல் வேண்டும். பன்னிரண்டு மாசத்திலும் அநுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாசத்தின் மாத்திரமேனும் அநுட்டிக்கக் கடவர். (உபவாசம் - உணவின்றியிருத்தல்).

382. திருவாதிரை விரதமாவது யாது?

மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசஞ் செய்தல் வேண்டும். இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து அநுட்டிப்பது உத்தமோத்தமம்.

kum.jpg

383. உமாமகேசுர விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர்; இரவிலே பணிகாரம், பழம் உட்கொள்ளலாம்.

384. சிவராத்திரி விரதமாவது யாது?

மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில், உபவாசஞ் செய்து, நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும். நன்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது உத்தமம். ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது மத்திமம். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி, நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம். சண்டேசுர பூசை நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும். சிவ பூசையில்லாதவர், நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து, நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் உண்பது மத்திமம்; பழம் உண்பது அதமம்; தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம். சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம். நான்கு யாமமும் நித்திரை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் ஆவசியகம் அநுட்டிக்கத் தக்கது.

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

கண்ணப்பநாயனார் புராணம்

நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே

னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி

வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்

குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.

வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்

விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்

காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்

காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்

தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்

சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ

ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப

வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே.

பொத்தப்பிநாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனாகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவிபெயர் தத்தை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணியசுவாமியுடைய சந்நிதானத்திலே சேவற்கோழிகளையும், மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டு வந்தார்கள்

kandaswami01.jpg

சுப்பிரமணியசுவாமியுடைய திருவருளினாலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றாள். அப்பிள்ளையை நாகன் தன் கையிலே எடுத்தபொழுது திண்ணெனவாயிருந்தபடியால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான். அத்திண்ணனார் வளர்ந்து உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகாசமர்த்தராயினார், நாகன் வயோதிகனானபடியால், வேட்டைமுயற்சியிலே இளைத்தவனாகி, தன்னதிகாரத்தைத் தன்புத்திரராகிய திண்ணனாருக்குக் கொடுத்தான்.

அந்தத்திண்ணனார் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினார், வேட்டையாடும்பொழுது, ஒருபன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஓடியது. அதைக் கண்ட திண்ணனார் அதைக்கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்றார். நாணன் காடன் என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினார்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஓடிப்போய், இளைப்பினாலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனார் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடைவாளை யுருவி அதனை இருதுண்டாகும்படி குத்தினார். நாணனும் காடனும் இறந்துகிடந்த அந்தப் பன்றியைக் கண்டு திண்ணனாரை வியந்து வணங்கி, "நெடுந்தூரம் நடந்து வந்த படியால் பசி நம்மை மிகவருத்துகின்றது. நாம் இந்தப்பன்றியை நெருப்பிலே காய்ச்சித் தின்று, த்ண்ணீர் குடித்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு மெல்லப்போவாம்" என்றார்கள். திண்ணனார் அவர்களை நோக்கி, "இவ்வனத்திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது" என்று கேட்க; நாணன் "அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனால், மலைப்பக்கத்திலே பொன்முகலி யாறு ஓடுகின்றது" என்றன். அதைக்கேட்ட திண்ணனார் "இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நாம் அங்கே தானே போவோம்" என்று சொல்லி, அதை நோக்கி; நடந்து, அரைக்காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக் கண்டு, நாணனை நோக்கி, "நமக்குமுன்னாகத் தோன்றுகின்ற மலைக்குப் போவோம்" என்று சொல்ல; நாணன் "இந்தமலையிலே, குடுமித்தேவர் இருக்கிறார். நாம் போனாற் கும்பிடலாம்" என்றான்.

  • தொடங்கியவர்

திண்ணனார் "இந்தமலையைக் கண்டு இதை அணுக அணுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்" என்று சொல்லி அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரைந்து சென்று, பொன்முதலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரநிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனைநோக்கி "தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு; நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வந்து சேருவோம்" என்று சொல்லி, நாணனோடும் அந்தப் பொன்முகலிநதியைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச் சென்று சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருத்தலைக் கண்டார், கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசனவேதியினாலே உருவம் மாறிப் பொன்மயமானாற்போல முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானார். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் ஞெமுங்கும்படி அக்கடவுளைத் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சுவிட்டுக்கொண்டு நின்று, சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள. இரண்டு கண்ணினின்றும் கண்ணீர் சொரிய வெயிலிடைப்பட்ட மெழுகு போல மனங்கசிந்துருக. "இந்தச்சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்" என்று சொல்லி ஆனந்தங் கொண்டார். "ஐயையோ! சிங்கம் யானை புலி கரடி துட்ட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது" என்று சொல்லித் துக்கித்து, தம்முடையகையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறிந்தவரகிப் பரவசமடைந்தார். பின் ஒருவாறு தெளிந்து "இவருடைய முடியிலே நீரை வார்த்துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ" என்றார். அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் "நான் முற்காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ஒரு பிராமணன் இவர்முடியிலே நீரைவார்த்து, இலையையும் பூவையும் சூட்டி உணவை ஊட்டி, சிலவார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன், இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான் போலும்" என்றான். அதைக்கேட்ட திண்ணனார் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு, "ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சிகொடுப்பார் ஒருவரும் இல்லை. இவர் அங்கே தனியே இருக்கின்றார். இறைச்சி கொண்டு வரும் பொருட்டு இவரைப் பிரியவோ மனமில்லை. இதற்கு யாதுசெய்வேன்? எப்படியும் இறைச்சிகொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு, சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் போவார். கன்றைவிட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல அவரிடத்திற்குத் திரும்பி வருவார் கட்டி அணைத்துக் கொள்வார்; மீளப்போவார்; சிறிதுதூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். "சுவாமீ! நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டு வருவேன்" என்பார். "நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக்குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவுமாட்டேன். ஐயையோ! நான் யாது செய்வேன்" என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பார். பின்பு ஒரு பிரகாரம் போய் வரத்துணிந்து, விலை எடுத்துக்கொண்டு, கையினாலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி நாணன்பின்னே வர, பிறவிஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்புமயமாகி, பொன் முதலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புகுந்தார்.

அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு, "நெருப்புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவயவங்களெல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்று போயிற்று. நீர் இவ்வளவு நேரமும் தாழ்த்தது என்னை" என்றான். நாணன் அதைக் கேட்டு "இவர் மலையிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப்பொந்தைப் பற்றிவிடாத உடும்பைப்போல அவரை நீங்கமாட்டாதவராய் நின்றார். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோம்பொருட்டு வந்திருக்கிறார். எங்கள் குலத்தலைமையை விட்டுவிட்டார். அந்தச் சுவாமி வசமாய்விட்டார்' என்றான். உடனே காடன் "திண்ணரே! நீர் என்ன செய்தீர்? என்ன பைத்தியங்கொண்டீர்" என்று சொல்ல; திண்ணனார் அவன் முகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி; அதினுடைய இனிய தசைகளை அம்பினாலே வெவ்வேறாகக் கிழித்து அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பதமாக வெந்தவுடனே, சுவைபார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினாலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச்சிகளெல்லாவற்றையும் தேக்கிலையினாலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல்லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், "இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றார். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி வீணாக உமிழுகின்றார். மற்றையிறைச்சியைப் புறத்திலே எறிந்து விடுகின்றார். தாம் மிகப் பசியுடையராயிருந்தும், தனை உண்கின்றாரில்லை. எங்களுக்குத் தருகின்றாருமில்லை. இவர் தெய்வப் பைத்தியங்கொண்டுக்கின்றார். இதனைத் தீர்க்கத்தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்கவேண்டும். வேட்டைக்காட்டிலே நிற்கின்ற ஏவலாளரையும் கொண்டு நாங்கள் போவோம்" என்று நினைத்துக்கொண்டு போனார்கள்.

kannappar.jpg

  • தொடங்கியவர்

திண்ணனார் அவ்விருவரும் போனதை அறியாதவராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துகொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயினால்முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒருகையிலே வில்லையும் அம்பையும் மற்றக்கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக்கல்லையையும் எடுத்துக்கொண்டு, "ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினால் இளைத்தாரோ" என்று நினைந்து இரங்கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருந்துதற்குத் தாழாதோடுகின்ற பறவைபோல மனோகதியும் பின்னிட ஓடிப்போய்க் கடவுளை அடைந்தார். அடைந்து, அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய காற்செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனநீரைத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தம்முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேல் சாத்தி, தேக்கிலையிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்து, "சுவாமீ! கொழுமையாகிய இறைச்சிக ளெலாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினால் அதுக்கி, நாவினாலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்றாயிருக்கின்றது. எம்பெருமானே! இதை அமுதுசெய்தருளும்" என்று சொல்லி, உண்பித்தார். பின்பு சூரியன் அஸ்தமயமாயிற்று, திண்ணனார் அவ்விரவிலே துஷ்டமிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ்செய்தல் கூடுமென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டும், மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக்குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றார். அப்படி நின்ற திண்ணனார் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும் பொருட்டு, வேட்டையாடுதற்கு மலைச்சாரலுக்குப் போனார். அது நிற்க.

அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைகளெல்லாம் திரண்டொருவடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் கோகிப்பிக்க வல்லமகா செளந்திரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் தழுவினும் பரமாணுப்பரிமாணமாயினும் சிந்தந்திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக்காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகமவிதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர், பிரமமுகூர்த்தத்திலே எழுந்து போய், பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு, சுவாமி சந்நிதனத்திலே போனார். போம் பொழுது அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக் கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினார். ஓடி நின்று, "தேவாதிதேவரே! தேவரீருடைய சந்நிதானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டுவப்புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், அவர்கள் இப்படிச் செய்து போதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ" என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார். பின்பு 'சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது' என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லையையும் திருவலகினால் மாற்றி, சம்புரோக்ஷணஞ்செய்து, மீளப் பொன் முதலியாற்றிலே ஸ்நானஞ் செய்து, திரும்பிவந்து, வேத மந்திரத்தினாலே சுத்திசெய்து, உருத்திரசமா நமகத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி பத்திரபுஷபங்களால், அருச்சனை செய்தார் செய்து, திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின்மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய திருமேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட மெழுகுபோல மனம் மிக உருகி இளசு, நாத்தழும்ப, கீத நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினார். பாடியபின் பலமுறை பிரதக்ஷிணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அருமையாக நீங்கிப் போய், தபோவனத்தை அடைந்தார். அது நிற்க.

முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணனார் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக்கொன்று, அவைகளினிறைச்சியை முன்போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற்றேனைப் பிழிந்து, அதனோடு கலந்து, முன்போலத் திருமஞ்சனமும் புஷ்பமுங்கொண்டு, மலையிலே ஏறி, சுவாமிசந்நிதானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து, "இந்த இறைச்சி முன்கொண்டுவந்தது போலன்று, இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின் இறைச்சி, இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த்திருக்கின்றேன். தேனும் கலந்திருகிறது. தித்திக்கும்" என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றார். அப்பொழுது முதனாட்போன நாணனும் காடனும் ஆகிய இருவராலும் தன்புத்திரராகிய திண்ணனாருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனாரைப் பற்பல திறத்தினாலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிந்தை நொந்து, "இனியாதுசெய்வோம்" என்று சொல்லிக்கொண்டு; அவரை விட்டுத் திரும்பிப்போய்விட்டார்.

  • தொடங்கியவர்

சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைப்பணியின் வழுவாது நிற்குந் திண்ணனார் பகற்காலத்திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக்காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். சிவகோசரியாரும் தினந்தோறும் வந்து, சந்நிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்திசெய்து, சைவாகமவீதிப்படி அருச்சித்துக்கொண்டு, "இந்த அநுசிதம் நிகழாமல் அருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து வந்தார். திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "அன்பனே! அவனை வேடுவன் என்று நீ நினையாதே. அவனுடைய செய்கைகளைச் சொல்வோம்.; கேள். அவனுடைய உருவமுழுவதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவமே. அவனுடைய அறிவுமுழுதும் நம்மை அறியும் அறிவே, அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகிய செய்கைகளே. நம்முடைய முடியின்மேல் உன்னாலே சாத்தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செருப்படி நம்முடைய குமாரனாகிய சுப்பிரமணியனுடைய காலினும் பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகின்றது. அவன் தன் வாயினால் நம்மேல் உமிழுகின்ற ஜலமானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்ற படியால்; கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரிசுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலைமயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழுதல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர்கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற்றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன்பினால் உருகி இளகிய மனசினோடும் மென்று, சுவைபார்த்துப் படைக்கப் பட்டபடியால், வேதவிதிப்படி யாகம் செய்கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமாயிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதனத்தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினோடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவாயிருக்கின்றன. அவனுடைய அன்பினால் ஆகிய செய்கைகளை உனக்குக் காட்டுவோம். நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளிந்திருந்து பார்" என்று சொல்லி மறைந்தருளினார். சிவகோசரியார் சொப்பனாவத்தையை நீங்கிச் சாக்கிராவத்தையை யடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தகளை நினைந்து நினைந்து, "அறியாமையே நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாகமாதி சாஸ்திரங்களிலே மகாபாண்டித்தியமுடைய மகாமுனிவர்கள் தேவர்களிடத்திலும் காணப்படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்பு வந்தது, ஐயையோ! எவ்வளவு அருமை அருமை" என்று ஆச்சரியமும், "இப்படிப்பட்ட பேரன்பர் செய்த அன்பின் செய்கைகளைப் புழுத்தநாயினும் கடையனாகிய பாவியேன் அநுசிதம் என்று நினைந்தேனே! ஐயையோ? இது என்ன கொடுமை" என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி மலையில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக்குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.

  • தொடங்கியவர்

17bedara.jpg

சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடுதற்குச் சென்ற திண்ணனார் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக்கொண்டு அதிசீக்கிரந் திரும்பினார். திரும்பி வரும்பொழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, "இந்தச்சகுனங்களெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என்கண்மணிபோன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித்ததோ! அறியேனே" என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார். அடியார்களுடைய பத்தி வலையில் அகப்படுகின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணனாருடைய அன்பு முழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினார். திண்ணனார் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார் வந்தவுடனே, இரத்தஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ்சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ்கின்ற நாடகப் பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார். விழுந்தவர் எழுந்து போய், இரத்தத்தைப் பலமுறை கையினாலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப்போய் விழுந்தார். நெடும்பொழுது உள்ளுயிர்த்தமின்றி இறந்தவர்கள் போலக்கிடந்தார், பின் ஒருவாறு தெளிந்து, "இப்படிச் செய்தவர்கள் யாவர்" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். எங்கும் பார்த்தார், வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு "என்னுடைய சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ இந்தவனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ! யாதென்று தெரியவில்லையே" என்று சொல்லி, மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார். வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணாதவராகி, திரும்பிவந்து, குறைவில்லாத துன்பத்தினாலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணீர்சொரிய அழுதார். "என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினாலே ப்ரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ! இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே! ஐயையோ! இதற்கு என்ன செய்வேன்" என்றார். இந்த உதிரம் என்னசெய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினாலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலைமருந்துகளை மலையடிவாரத்திலே பிடுங்கிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிக்கொண்டு போனார். தன்னினத்தைப் பிரிந்துவந்த இடபம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினால் வெருட் கொண்டு வனங்களெங்குந் திரிந்து, பல்வகையாகிய பச்சிலைகளைப் பிடுங்கிக் கொண்டு, சுவாமிமேல் வைத்த மனசிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார். அதினால், அக்கண்ணிவிரத்தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவிசோர்ந்து, "இனி நானிதற்கு என்ன செய்வேன்" என்று ஆலோசித்துக் கொண்டு நின்றார். நிற்க. "ஊனுக்கு ஊனிடம் வேண்டும்" என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வந்தது. உடனே, "இனி என்னுடைய கண்ணை அம்பினாலே இடந்து அப்பினால் சுவாமியுடைய கண்ணினின்றும் பாயும் இரத்தம் தடைப்படும்" என்று நிச்சயித்துக்கொண்டு, மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பையெடுத்துத் தம்முடைய கண்ணணத்தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார். அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந்தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினாலே கொட்டி ஆரவாரித்தார் கூத்தாடினார். "நான் செய்த செய்கை நன்று நன்று" என்று சொல்லி வியந்து, அத்தியந்த ஆனந்தத்தினாலே உன்மத்தர் போலாயினார். இப்படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும் பொழுது, திருக்காளத்தியீசுரர் அந்தத் திண்ணனாருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, தம்முடைய மற்றையிடக்கண்ணிலும் இரத்தஞ்சொரியப்பண்ணினார். அது திண்ணனாருடைய அளவில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றோனொருவன் பின்னும் அந்நிரயத்திலே வீழ்ந்தாற் போல, திண்ணவார் உவகைமாறி, கரையில்லாத துன்பக் கடலிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து, "இதற்கு நான் அஞ்சேன், மருந்து கைகண்டு கொண்டேன் இன்னும் ஒருகண்ணிருக்கின்றதே! அதைத்தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்" என்று துணிந்து. தம்முடைய கண்ணைத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்திலிருக்கின்றது என்று தெரியும் பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக் கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தியாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணைத்தோண்டும்படி அம்பைவைத்தார். தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்றாதவராகி, வேதாகமங்கள் தோன்றிய தம்முடைய அருமைத் திருவாய் மலரைத் திறந்து, "நில்லு கண்ணப்ப நில்லு! கண்ணப்ப! என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று அருளிச் செய்து, அவருடைய கண்ணைத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத்திற்றோன்றிய திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரும் வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமாரி பெய்தார்கள். மகாஞானியாகிய சிவகோசரியார் இந்தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரியமடைந்து, சுவாமியை வணங்கினார். அற்றைநாள் முதலாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லிய படியே அவருக்குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிறார்கள். நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன் வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருந்தவஞ் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள் ஆறுநாளுக்குள்ளே பெருகிய அன்பு மேலீட்டினாலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணை இடந்து அத்திருநயனத்தில் அப்புந் திண்ணனாருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டு, "நிஷ்களங்க பத்தியையுடைய கண்ணப்பா, நீ நமக்கு வலப்பக்கத்திலே நில்" என்று திருவருள் புரிந்தார். இதைப் பார்க்கிலும் பெற வேண்டிய பெரும்பேறு யாது?

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சோமாஸ்கந்தர்

somaskanthar.jpg

சிவாலயங்களில் ஐந்து எழுந்தருளும் திருவுருவங்கள் இன்றியமையாதன. கணேசர், முருகர், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர் என்பன அவை. இவற்றுள் தத்துவச் சிறப்புமிகுந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் ஆகும்.

சிவபெருமான் தேவியுடனும் கந்தனுடன் காட்சி தரும் அருட்கோலம் இறைவனை இல்லறத்தானாக - இனிய கணவாக - பாசம் மிக்க தந்தையாகத் தநயனுடன் காட்டும் இவ்வடிவம் களித்து மகிழ வேண்டிய கவின்மிகு கருணை உருவம் ஆகும்.

"ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்

பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை

ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே

மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்"

- கந்தபுராணம்

சச்சிதானந்தம் சோமாஸ்கந்தமூர்த்தியின் தத்துவமாகும்.

சத்து சித்து ஆனந்தம்

உண்மை அறிவு இன்பம்

சிவன் உமை ஸ்கந்தன்

அருமை எளிமை அழகு

சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய அம்மைக்கும் நடுவே ஆனந்தமே வடிவான கந்தனோடு விளங்கியமைந்த சோமாஸ்கந்தர் ஈசானத்தில் தோன்றியவராவர். இவரே சிவாலயத்தில் ஆட்சி செலுத்தும் பிரதான மூர்த்தியாவார். இவ்வடிவின் உட்கருத்துக்கள் பல. "அருமையில் எளிய அழகே போற்றி" என்ற திருவாசக வரியின் உட்பொருள் இவ்வடிவமே என்பர் ஆன்றோர். உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்பதை இக்கோலம் எடுத்துக் காட்டுகின்றது. இம்மூர்த்தத்தில் சிவபெருமான் - கடந்த நிலையையும், இறைவி - கலந்த நிலையையும், கந்தன் - கவர்ந்த நிலையையும் காட்டுகின்றனர். கணவன் - மனைவி - குழந்தை என்னும் இல்லறத்தின் முப்பொருட்டன்மையை முழுமையாக்குவது இவ்வடிவம் என்பாரும் உளர். குழந்தையைப் பெற்றோர் நடுவில் வைத்துக் கொண்டாடும் கோலாகல வடிவம் இது. அனைத்துச் சிவாலயங்களிலும் சோமாஸ்கந்தருக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருப்பினும் திருவாரூர் இப்பெருமானுக்கு உரிய சிறப்புத்தலமாகும். கமலைத் தியாகேசர், ஆழித்தேர் வித்தகர் என்றெல்லாம் இத்தலத்தில் போற்றப் பெறுகிறார். திருவாரூர் நான்மணிமாலையில்

"தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்

செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி

மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்

தானே குடைவேம் தனித்து"

என்று அருள்மிகு குமர குருபர சுவாமிகள் பாடுகின்றார்.

மாபெரும் யோகியான சிவபெருமானை மாபெரும் போகியாகக் காட்டும் இக்கோலம் குறித்து ஐங்குறுநூறு கூறுவன

"மறியிடைப் படுத்த மான்பினை போலப்

புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்

இனிது மன்ற அவர் கிடக்கை! முனிவின்றி

நீல்நிற வியலகம் சுவைஇய

ஈனும் உம்பரும் பெறலருக் குரைத்தே"

somaskandar.jpg

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

masoma1.jpg

சில்பரத்தினம் என்னும் நூலில் இம்மூர்த்தி மூன்று வடிவங்களால் விளக்கப்படுகிறது. சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்து வைத்து, வலக்காலைத் தொங்க அமைத்து விளங்குகிறார். புலித்தோலையும் பட்டினையும் உடுத்த இவர் நான்கு கரங்களுடையவர். வலக்கரங்கள் இரண்டிலும் பரசுவும் (மழு), அபயமும், இடக்கரங்கள் இரண்டிலும் மானும், வரதமும் அல்லது சிம்ஹகரணமுத்திரையும் அமைந்துள்ளன. இவர் வலது காதில் மகர குண்டலம் அணிந்திருப்பார். ஜடா மகுடமும், சர்ப்பக்கணங்களும், பற்பல அணிகலன்களும் இவர் பூண்டிருப்பார். சிவபெருமானுக்கு இடப்பக்கம் தேவி அமர்ந்திருப்பாள். அவளது இடக்கால் கீழே தொங்க, வலது காலை மடித்து அமர்ந்திருப்பாள். அவளது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலரையும் இடக்கரம் சிம்ஹகரணம் அல்லது ஆசனத்தில் வைத்த நிலையில் கொண்டிருக்கும்; சிவபெருமானுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக நிற்கிறார். இவர் உமையின் மடியில் அமர்ந்தோ, நடனமாடிக் கொண்டோ இருத்தலும் கூடும். கரண்ட மகுடம் மகர குண்டலங்கள், சன்னவீரம் ஆகியவற்றை அணிந்திருப்பார். அவரது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலர் வைத்திருக்கலாம்; அல்லது இரு கரங்களிலும் தாமரை மலர் இருக்கலாம். தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும், இடக்கரம் வரதமும் கொண்டிருத்தலும் உண்டு. அம்பிகை பச்சைநிறத்தினளாகச் சிவப்பு பட்டாடை அணிந்து விளங்குவாள். கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின் அவனது இடக்கரம் பழத்தையும், வலக்கரம் சூசி முத்திரையும் கொண்டிருக்கும். சில வடிவங்களில் இடக்கரம் தொங்க விடப்பட்ட நிலையில் அமைந்திருக்கும்.

எனக்கு ஒரு சந்தேகம் நாவலர் தாத்தா ஏன் நாம் கடவுளை கும்பிட வேண்டும்?

  • தொடங்கியவர்

சோமாஸ்கந்த வடிவத்தின் இருபுறமும் நான்முகனும் திருமாலும் தம் தேவியருடன் நீற்றல் வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது.

குடந்தையருகே நாச்சியார் கோயிலை அடுத்த இராமநதீச்சரம் சோமாஸ்கந்தர் வடிவில் அம்பிகையின் கரத்தில் இடபம் காணப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் ஸ்ரீலங்கா திருக்கேதீச்சரத்தில் உள்ளது.

2002120601140602.jpg

சிவத்தலங்கள் சிலவற்றில் சிவபிரான், அம்பிகை, முருகன், ஆகியோர் சன்னதிகள் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளன.

"செய்யமேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகந்துப் பயிரவன்யாம்

உய்ய அமுது செய்யாதே ஒளித்த தெங்கே எனத்தேடி

மையல் கொண்டு புறத்தணைய மறைந்த அவர்தம் மலைபயந்த

தையலொடுஞ் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்"- பெரியபுராணம்.

சோமாஸ்கந்தர் வடிவத்தைத் தொழுவார் இல்லறத்தில் நன்மக்களோடு நலம் பல துய்த்து மகிழ்வர்.

  • தொடங்கியவர்

385. கேதார விரதமாவது யாது?

புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும், கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும், கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும், கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

250px-Meenakshi-marriage.jpg

386. கலியாணசுந்தர விரதமாவது யாது?

பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் உட்கொள்ளல் வேண்டும்.

Dsc01296-trident-small.jpg

387. சூல விரதமாவது யாது?

தை யமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்; இராத்திரியில் ஒன்றும் உட்கொள்ளலாகாது.

I.MysoreNandi.JPG

388. இடப விரதமாவது யாது?

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷ அட்டமியிலே இடப வாகனாரூடராகிய சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

389. பிரதோஷ விரதமாவது யாது?

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)

tn%20top.jpg

  • தொடங்கியவர்

தேவி விரதம்

390. தேவி விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், ஐப்பசி உத்திர விரதம், நவராத்திரி விரதம் என மூன்றாம்.

391. சுக்கிரவார விரதமாவது யாது?

சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

392. ஐப்பசி உத்திர விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

393. நவராத்திரி விரதமாவது யாது?

புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம், பழம் முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

gomathi.jpg

  • தொடங்கியவர்

சைவ வினா விடையை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22751

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.