Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை உப-பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விவகாரம் - ஓநாய் அழுத கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் அழுத கதை

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:19Comments - 0

‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது.   

இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.   

ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே நிலத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கடந்த காலம் ஏற்படுத்திய கசப்புகள், இவ்வாறான மனப்பதிவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலைக்கு இவர்களில் யார் காரணம்? இந்த இரண்டு சமூகங்களிலும் யார் சரி, யார் பிழை? என்கிற கேள்விகள் அபத்தமானவையாகும்.   

ஆயினும், இந்த நிலைவரத்துக்கு, நாங்கள் எந்த வகையில் காரணமாக இருந்தோம் என்கிற சுயபரிசோதனைகளை, இரண்டு சமூகங்களும் செய்து கொள்ளுதல் அவசியமாகும்.  

ஒரு காலகட்டத்தில், தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள், தமது அரசியலைச் செய்து வந்தார்கள். மூத்த அரசியல் தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்றோர் இணைந்து, அரசியலரங்கில் பயணித்திருக்கின்றனர்.  

 ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத் தரவில்லையென்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன்’ என்று, ஒரு காலத்தில் தமிழர்களின் அரசியல் மேடைகளில் அஷ்ரப் கூறுமளவுக்கு, இரண்டு சமூகங்களும் நெருக்கமாக இருந்துள்ளன.  

ஆனால், அதே அஷ்ரப்தான், முஸ்லிம்களுக்கு ஓர் அரசியல் கட்சி அவசியம் என்கிற முடிவுக்கு, இறுதியில் வரவேண்டியிருந்தது. ஒரு முஸ்லிமாக, தமிழர் அரசியல், அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருந்தது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.  

அதேபோன்று, சிங்களத்துக்கு எதிராக 30 வருடங்கள் ஆயுதமேந்திச் சண்டையிட்ட தமிழர் சமூகமானது, இப்போது கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் வேண்டாம் என ஆர்ப்பாட்டங்கள் நடத்தி விட்டு, அந்த இடத்துக்கு வந்த ஷான் விஜேலால் டி சில்வாவை அமைதியாக ஏற்றுக் கொண்டுள்ளமையை வைத்தே, தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உடைவின் உக்கிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  

எவ்வாறாயினும், இந்த உடைவுகளும் பிளவுகளும் ஏற்பட்ட காலகட்டங்களை, மிக நூதனமாக நாம் திரும்பிப் பார்க்கும் போது, அங்கு பேரினவாதம் நடத்தியிருந்த ‘விளையாட்டு’களைப் புரிந்து கொள்ள முடியும்.  

யுத்த காலத்தில், தமிழர் ஆயுத இயக்களிடமிருந்து முஸ்லிம்கள் நெருக்குவாரங்களை எதிர்கொண்ட வேளைகளில், முஸ்லிம்களுக்கு உதவும் மீட்பர்களாகப் பேரினவாதம் தன்னைக் காட்டிக் கொண்டது. முஸ்லிம்களைப் பேரினவாதம் அப்போது அரவணைத்துக் கொண்டது.   

அந்த நிலைவரத்துக்கு, தமிழர் ஆயுத இயக்கங்களின் புத்திசாதுரியமற்ற நடத்தைகளும் காரணமாகின. ஒரு கட்டத்தில், முஸ்லிம் சமூகத்தை விடுதலைப் புலிகள் இயக்கம், முற்று முழுதாகவே பகைத்து, கைகழுவி விட்டமையானது, பேரினவாதத்துக்கு முஸ்லிம்களைத் தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள மிகவும் இலகுவாயிற்று.  

முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்து வந்த நல்லுறவு தொடர்ந்திருந்தால், அரச படைகளால் புலிகளை இன்றைக்கும் தோற்கடிக்க முடிந்திருக்காது என்பதை, நேர்மையுடன் பேசும் தமிழர்களே ஒத்துக் கொள்கின்றனர்.  தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பிரித்தாள்வதற்கு, பேரினவாதம் அப்போது மேற்கொண்ட தந்திரங்கள், சூழ்ச்சிகள் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன.  

யுத்தம் முடிவதற்கு முன்னர், சிங்களப் பேரினவாதத்தின் கண்களுக்குள், தமிழர்கள் உறுத்திக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பிறகு, முஸ்லிம்கள் உறுத்தத் தொடங்கினார்கள்.  இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியான வளர்ச்சி, பேரினவாதத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியது. அதனால், யுத்தம் முடிந்த கையோடு, முஸ்லிம்கள் மீது தனது வேட்டையைப் பேரினவாதம் தொடங்கியது.   

யுத்தத்துக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீது பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகளின் போதெல்லாம், முஸ்லிம் மக்களின் பொருளாதாரமே இலக்கு வைத்துத் தாக்கப்பட்டமையைக் காண முடியும்.  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரே, “முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரியுங்கள்” என்று கூறியமையின் மூலம், சிங்களத்தின் கண்களில் முஸ்லிம்களின் பொருளாதாரமே உறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.   

‘சும்மா ஆடிய பேய்க்கு, ஒரு கொட்டு முழுக்கம் போதாதா’ என்பது போல, முஸ்லிம்களுக்கு எதிராகத் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்த பேரினவாதத்துக்கு, சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதத் தாக்குதலானது, முஸ்லிம்களைக் கருவறுக்க, மேலும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டுள்ளது.  

முஸ்லிம்களின் உணவு, உடை, அறபு மொழிப் பயன்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பேரினவாதம் தனது மூக்கை இஸ்டத்துக்கு நுழைத்துக் கொண்டிருக்கிறது.   

முஸ்லிம்களுக்கான திருமணச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக, பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. “நாட்டில் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்; ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கக் கூடாது” என்று, பேரினவாதிகள் கோஷமிட்டுக் கொண்டு திரிகின்றனர். இந்தக் கோஷத்துக்கு கல்முனையில் வைத்து தமிழர்கள் கரகோஷம் செய்தமையைக் காண முடிந்தது.  

image_ef4594e7d7.jpg

கல்முனையிலுள்ள உப-பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று, தமிழர்கள் கோரிக்கை விடுத்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர். கல்முனை மாநகர சபை உறுப்பினர், இந்து மதகுரு உள்ளிட்டோருடன், கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்திருந்தார்.   

மறுபுறமாக, தமிழர் தரப்புக் கோருகின்றமை போல், இனரீதியாகவும் நிலத்தொடர்பற்ற வகையிலும் பிரதேச செயலகமொன்றை வழங்கக் கூடாது என்று கூறி, முஸ்லிம்களும் சத்தியாக்கிரக நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.  

இந்தநிலையில், தமிழர்களிடம் தமது செல்வாக்கை இழந்துள்ள கருணா அம்மான் போன்றோர், உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்குச் சமூகமளித்து, அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப் பேச்சுகளை அள்ளி வீசிவிட்டுச் சென்றிருந்தார்.   

பின்னர், தமிழர் தரப்பின் உண்ணா விரதம் நடைபெற்ற இடத்துக்கு அத்துரலியே ரத்தன தேரர் வருகை தந்தார். இறுதியாக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வருகை தந்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்து விட்டுச் சென்றார்.   

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில், பிரதமரின் செய்தியுடன் வருகை தந்திருந்த அமைச்சர்கள் மனோ கணேசன், தயாகமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், ஆர்ப்பாட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டுள்ளனர். சுமந்திரன் மீது தாக்குதுல் நடத்துவதற்கும் அங்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆக, தமது பிரதிநிதிகளைக் கூட நம்பாமல், பௌத்த தேரர்களிடம் தமது எதிர்காலத்தைக் கையளிக்கும் நிலைக்குத் தமிழர் சமூகம் தள்ளப்பட்டுள்ளமையானது, பேரினவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.   

image_107a6ea45e.jpg

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்களுடன் தமிழர்களை மோதவிட்டு, கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பேரினவாதம் விரும்புகிறது என்பதை மிகத்துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.   

தமிழர்களுக்குப் பிரதேச செயலகமொன்று கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது பரிதாபப்பட்டு, பௌத்த மதகுருமார் கல்முனைக்குப் படையெடுப்பதைப் பார்க்கையில், ‘ஆடு நனைகிறதென்று, ஓநாய் அழுத கதை’ நினைவுக்கு வருகிறது.   

கல்முனையில் உப-பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி, தமிழர் தரப்பு உண்ணாவிரதமிருந்த இடத்துக்கு, மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் வருகை தந்து, தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியமையானது கேலிக்கூத்தாகவே தெரிந்தது.  

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மிகப் பகிரங்கமாக மேற்கொண்டு வருபவர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர். சில வருடங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு - பதுளை வீதியிலுள்ள பாசிக்குடாவெளி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்காக, தமிழர் ஒருவரின் தனியார் காணிக்குள் நுழைந்து நடந்திய அட்டகாசம், இன்னும் நினைவில் இருக்கிறது.   

பட்டிப்பளைப் பிரதேசத்தில், கிராம சேவையாளரான தமிழர் ஒருவரைத் தாக்குவதற்கு முயற்சித்த சுமணரத்ன தேரர், அந்தக் கிராம சேவகரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தமையையும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாகக் காணக்கிடைத்தது. தேரரின் இந்தச் செயற்பாடுகளைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருந்தமையையும் மறந்து விட முடியாது.  

இதில் பகிடி என்னவென்றால், அதேதேரருடன்தான் கல்முனையில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்துக்கு வியாழேந்திரன் சமூகமளித்திருந்தார். அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஹிஸ்புல்லாவை பதவி விலக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நடத்திய சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, வியாழேந்திரனுக்கு நீராகாரம் வழங்கியவரும் இந்த சுமணரத்ன தேரர்தான்.  ஆக, முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில், பேரினவாதிகளுடன் கைகோர்த்துக் கொள்வதற்குத் தமிழர்கள் தயாராகி விட்டார்கள் என்கிற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு விட்டது. இது, தமிழர் - முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயமல்ல என்பதை மட்டும், இப்போதைக்குக் கூறி வைக்க முடியும்.   

தமிழர்களை நசுக்க, முஸ்லிம்களையும் முஸ்லிம்களை நசுக்க தமிழர்களையும் பேரினவாதம் கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை, தமிழர் - முஸ்லிம் சமூகங்கள் விளங்கிக் கொண்டும், அந்தப் பொறிக்குள் மாட்டிக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.  

ஆடுகளின் துயரங்களை ஓநாய்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.  

பிரிவதா உங்கள் விருப்பம்?

கல்முனையில் அண்மைக் காலமாக நடைபெற்று வந்த உண்ணாவிரதம், அவற்றுக்கு பௌத்த துறவிகள் வழங்கிய ஆதரவு போன்றவற்றால், மனம் சலித்துப் போன நிலையில், எழுத்தாளரும் ‘கிழக்கு தேசம்’ அமைப்பின் நிறுவுநருமான, கல்முனையைச் சேர்ந்த வஃபா பாறூக், ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியிருந்த பதிவைக் காலப்பொருத்தம் கருதி, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.   

‘கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து, தமக்கென உள்ளூராட்சி சபையொன்றை உருவாக்க வேண்டும் என, சாய்ந்தமருது மக்கள், தமது விருப்பத்தைத் தாமாகவே வெளிக்காட்டினார்கள். முழு உலகமும் அதையறியும். ஆனால், கல்முனைத் தமிழ் மக்கள், தமது விருப்பத்தைத் தாமாக ஒன்றுபட்டு வெளிக்காட்டியதாக, இதுவரை நாம் அறியவில்லை.  

பன்சலையிலிருந்தும் மட்டக்களப்பிலிருந்தும் ‘எவரெவரோ’ வந்து உண்ணாவிரதம் செய்வதால், அது கல்முனைத் தமிழ் மக்களின் விருப்பின் வெளிப்பாடு என, ஏன் ஊகிக்க வேண்டும்.  

ஓர் அளவீட்டை செய்வதுதானே;  பாடசாலைக் காலங்களிலும் பிற்பட்ட பால்ய வயதுகளிலும் தமிழ் - முஸ்லிம் உறவுகளை, நட்பாய் வாய்க்கப்பெற்ற எம்மைப் போன்றோருக்கு, இந்தச் சந்தேகம் இருக்கவே செய்யும்.  

பாடசாலை முடிந்து, ஆர்.கே.எம் ஊடாக, கந்தையா நொத்தாசியாரின் வீட்டுச்சந்தியில் திரும்பி, புலவர் மணி பெரியதம்பிள்ளையின் மகன், எமது ஆசிரியர் விஜேரத்னம் சேரின் வீட்டால் நடந்து, தாஜ்மஹால் தியேட்டர் முதலாளியின் வீட்டுவழியாக, நாகூரார் வீட்டுச் சந்தியில் மெயின் வீதிக்கு ஏறி, வீடு சேரும் வரை, எந்த வித்தியாசமான மனநிலையும் தோன்றாத எமக்குள், ஒரு பிரிவினைப் பிரியம் இருக்குமென, நான் நம்ப தயாரில்லை.  

சாய்ந்தமருதை விடுங்கள், அது வேறுகதை.  

வீடு வந்து சேருவதற்குள், எனது சகோதரி இடையிலுள்ள எல்லா தமிழ் டீச்சர்களின் வீடுகளுக்கும் எம்மையும் அழைத்துச் சென்று, டீச்சர் இல்லாவிட்டால் அவரின் தாய், சகோதரிகளுடன் உறவாடி, வெளியேறும் போது, வீட்டிலிருப்போரின் அனுமதியுடன் அங்குள்ள மல்லிகை பூக்களை கொத்துக்கணக்கில் ஆய்ந்து, ஒவ்வொருவரும் கைகளில் ஏந்தி, கைகடுக்கக் கடுக்க வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைகால் கழுவிச் சாப்பாடு முடித்து, மத்ரஸா போகுமட்டும் சம்மானம் கொட்டி, அத்தனை பூக்களுக்கும் தண்ணீர் தெளித்து, என் சகோதரி கைகளால் வருடும் போது, அவை தமிழ் பூக்கள் என நினைத்ததில்லை.  

பால்ய வயதில் ‘மைனர்’ உடையணிந்து, மோகனுடன் கலக்கலுக்கு புறப்பட்டு, கவிதாவைக் கண்டதும் புல்லரித்து நின்று, தத்தளித்த போது, அவளும் அழகாகத்தான் இருந்தாள்; மதம் பிரிக்கவில்லை....  

‘எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா’ என்று நளீம் பாடுவதைக் கேட்கும் வரை, கவிதாவை காதலித்தேன்.   

நாம் கவிதாவைக் காதலித்தது, இன்றுவரை அவளுக்கு தெருந்திராது.  கவிதாவும் ஒழுக்கமானவள்; நாமும் அடக்கமானவர்கள்.  

கண்டநேரத்திலெல்லாம், காதலைச் சொல்லும் துணிவு, அந்தக்காலத்தில் இருந்ததில்லை; அது கட்டுக்கோப்பான காலம்.  

ஆனால், அன்பும், காதலும் மதங்களைத் தாண்டி வியாபித்து இருந்தன.  

தமிழ்ப் புத்தாண்டு தினங்களில், கந்தையா நொத்தாரிஸ், வேல்முருகு மாஸ்டர் போன்றோரின் வீடுகளிலிருந்து வரும் பலகாரங்கள், ஒரு வாரத்தை ஆட்கொண்டுவிடும். அந்த பலகாரங்களில், மதம் சேர்க்கப்படவில்லை; மனம் பிணையப்பட்டிருந்தது. ஆதலால் அவை ருசித்தன.  

எமது பெருநாள்கள், அவர்களுக்கும் பெருநாள்களாகவே இருந்தன.  

இப்போது சொல்லுங்கள், கல்முனைத் தமிழ் மக்கள், பிரிய வேண்டும் என்று சொன்னார்களா? நிர்வாக ரீதியாகப் பிரிவதில் தப்பு ஏதுமில்லைதான்.  

என்றாலும் கேளுங்கள், கல்முனை தமிழ் உறவுகளிடம் கேளுங்கள்;  

பன்சலையைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் கூறுவது உண்மையா?  

பிரிவதா உங்கள் விருப்பம்?  

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓநாய்-அழுத-கதை/91-234564

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா போன்ற இனதுவேசிகள் ஆளுநராக இருப்பதையே தமிழ்ச் சமூகம் விரும்பவில்லை.
அவர் போன்ற சிலர் என்னென்ன அநியாயம் செய்தார்கள் என்பது பகிரங்கமானதே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஒரு பிரதேச சபையை தரமுயர்த்த என்ன பாட்டை படுரினம் . கவிதை என்ன கட்டுரை என்ன அப்பப்பா ...
கவிதாவை நீங்கள் காதலித்த காலம் வேறு இப்போது லவ் ஜிகாத் காலம் ,கவிதாவை சாரா ஆக்கி குண்டு வைக்கவைக்கும் காலம். பிரிந்தே ஆகவேண்டும் அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை கல்முனையானாக சொல்கிறேன். இவ்வளவு காலமும் நீங்கள் பேரினவாதிக்களுடன் தேனிலவு கொண்டாடிய போது கசக்கவில்லை. தமிழர்கள் கொண்டாட தலைப்பட்டதும் பொறுக்க முடியவில்லை என்ன ...
அதே அடி தான் உங்களுக்கும் சாட்ச்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
இதை நீங்கள் செய்தால் இராசதந்திரம் நாங்கள் செய்தால் உலகமகா பகிடி ...மூடிக்கொண்டு நடவுங்கள் 
உங்களுடன் சம் சும் நன்றாக கை கோர்ப்பார்கள் அடுத்த தேர்தலில் அவர்களை நீங்கள் தான் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நாளை இதே நிலை எங்களுக்கு வரட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் புலம்ப வேண்டாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.