"பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம், Lakshmi Jangde
படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார்.
கட்டுரை தகவல்
விஷ்ணுகாந்த் திவாரி
பிபிசி செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
"அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது."
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார்.
அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார்.
அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது.
இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும்.
பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர்.
இந்த நிலை ஏன் ஆபத்தானது?
பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu
படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது.
அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார்.
40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர்.
தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது.
மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது.
பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன.
இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும்.
இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார்.
ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது.
இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள்.
மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார்.
உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்?
பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu
படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார்.
இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார்.
பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம்.
அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார்.
அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும்.
ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.
"கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார்.
நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது.
முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது.
வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
"ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார்.
ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.
"இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர்.
சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார்.
ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது.
தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.