Jump to content

உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உறுப்பு  - அனோஜன் பாலகிருஷ்ணன்

ஏதோவொரு வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. சன்னலைத் திறந்து வெளியே வேடிக்கை பார்த்தேன். பலாமரத்தில் அணில்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறிய ஆசுவாசம் பரவியது. அவசர அவசரமாக என் பாடசாலை உடைகளைக் களைந்து, மாற்றுடை மாற்றிவிட்டு சாப்பாடு மேசைப்பக்கம் சென்றேன். ஏற்கெனவே போட்டு மூடிவைத்திருந்த மதியத்து சோறு, கறிகளுடன் ஆறிப்போய் இருந்தது. சுவரிலிருந்த மணிக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். இரண்டு நாற்பது. இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன வகுப்புத் தொடங்க. பாதிவரை சாப்பிட்டுவிட்டு, கொப்பிகளோடு லுமாலா சைக்கிளில் ஏறி மிதித்தேன். வெயில் முதுகில் ஊடுருவிச் சுட்டது. 

செம்மண் பாதை வளைந்து நெளிந்து சென்று தார் வீதியில் ஏறியது. இருபது மீற்றர் தூரம் சென்றிருப்பேன். ரணசிங்க என்னைச் சைகை காட்டி மறித்தான். ரணசிங்க ராணுவத்தில் இருக்கும் சிப்பாய். அடிக்கடி என்னை மறித்து, கொச்சைத் தமிழில் குசலம் விசாரிப்பது அவனுக்கு சமீபகால வேலையாக இருந்தது. அவனால் அடிக்கடி வகுப்புக்குப் பிந்திச் செல்வதும் நிகழ்ந்தது. இருந்தாலும், ராணுவச்சிப்பாய் ஒருவனுடன் சிநேகிதமாகப் பேசுவதை மற்றவர்கள் பார்த்துக்கொண்டு செல்லும்போது பெருமையும் கிளர்ந்து மலர்ந்தது. 

ரணசிங்கவிடம் சென்றேன். அவன் சிரிக்கவில்லை. ‘மல்லி எங்க போறது?’ என்றான். தினமும் டியூஷன் வகுப்புக்குச் செல்வது இவனுக்குத் தெரியாதா? தினமும் இந்தக் கேள்வியைக் கேட்பான். நான் இதே பதிலை அட்சரம் பிசகாமல் சொல்வேன். 

‘ட்யூஷன்... படிக்க, படிக்க... வகுப்புக்குப் போறேன் சேர்’ என்றேன். முகத்தில் ஒரு புன்னகையை வைத்துக்கொண்டு. அவன் வீதிக் கரையோரமாக என்னை நிறுத்திவைத்து கதைத்துக்கொண்டிருந்தான். சைக்கிள் ஹாண்டிலை அவன் தடித்த கைகள் அழுத்திப் பிடித்திருந்தன. அவன் தோள்பட்டையில் இருந்து துப்பாக்கி, நாடாவில் இடுப்புக்கு கீழ் தொங்கிக்கொண்டிருந்தது. 
• 

நாங்கள் மொறட்டுவைக்கு வந்தபோது விண்மீன்கள் வானத்தில் ஒளிராமல் இரக்கத்துடன் மறைந்திருந்தன. ஒரேயொரு நட்சத்திரம் மட்டுமே வெண்ணிறத்தில் பிரகாசமாகத் தென்பட்டது. நீண்ட பெரிய மழைக்கு வானம் தயாராகிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. எண்ணியதுபோலவே அன்று இரவு மழை அடித்து ஊற்றியது. அந்த இரவு எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது. ஆனால், அங்கு பிடித்த இரவாக அதுமட்டும்தான் இருக்கும் என்பது எனக்கு அப்போது தெரியாமல் இருந்தது. கல்கிசையில் ஒரு வீடு வாடகைக்குக் கிடைத்திருந்தது. எமது சீனியர்ஸ் அண்ணமார் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து எமக்காக ஒதுக்கியிருந்தனர்.

 முதல்நாள் பல்கலைக்கழக வரவு இனிமையாக இருந்தது. பொறியியல் வளாகத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். நீண்ட சுவர்களுக்குள் அணில்போல் நுழைந்தும் மறைந்தும் சென்றேன். 

அன்று இரவு எமது அறைக்கு நான்கு சீனியர் அண்ணமார்கள் வந்தார்கள். நாங்கள் உருவெடுத்த புன்னகையுடன் அவர்களைப் பாத்தோம். மெலிதான இகழ்ச்சி அவர்கள் முகத்தில் தோன்றி மறைந்தது. 

‘டேய்... எல்லோரும் எழுந்து லைனாக நில்லுங்கடா...’ அந்தக் குரல் கடுகடுப்பாக என்னைச் சுற்றி அலையாக விரிந்தது. அதிலிருந்த அதிகாரம் எரிச்சலைத் தந்தது. இதுவரை அவர்களிடம் இருந்த நட்பார்ந்த முகம், அதிகாலை வைக்கோலில் படர்ந்து காணாமல்போன பனிபோல் காணாமல் போயிருந்தது. வீட்டில் தங்கியிருக்கும் நாங்கள் ஒன்பது பேரும் வரிசையாகிச் சேர்ந்து நின்றோம். 

‘ஏய் சிரிக்காத... யாரும் சிரிக்கக் கூடாது. சீனியர்ஸப் பார்த்து சிரிப்பீங்களாடா?’ ராஜு அண்ணா கையை நீட்டி ஒற்றை விரலை காற்றில் விசுக்கி எங்களில் ஒருவனைப் பார்த்துச் சொன்னார். எனக்குள் நடுக்கம் வேரூன்றி வளர்ந்து எழுந்தது. 

‘யாரும் அசையக் கூடாது... கேக்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்.’

 ‘சரியண்ணோவ்...’ 

‘யார்ரா அது, நக்கலா உனக்கு?’ சொன்னவனின் செவிடு மின்னியது. அறைந்த சத்தம் சுவரில்பட்டு எதிரொலித்துக் கரைந்து அடங்கியது. அவர்களின் விபரீதத்தை அது மிக உக்கிரமாகக் காட்டியது. அந்த வரவேற்பறை அதீத மௌனத்துக்குள் வீழ்ந்து அமிழ்ந்தது. நாங்கள் நிலைகொள்ளாமல் தத்தளிக்க ஆரம்பித்தோம். அறை வேண்டியவனின் விசும்பல் ஒலி என் செவியை வந்தடைய திடுக்கிடலுடன் அவனைத் திரும்பிப் பார்த்தேன். 

‘அசையக் கூடாது என்றல்லோ உன்னிடம் சொன்னேன்...’ விறைத்த தடிமனான கை என் இடப்பக்க கன்னத்தில் வீழ்ந்தது. வலியில் கன்னத்தின் சதைகள் ஒடுங்கின. தலைக்குள் பொறிப் பொறியாக புள்ளிகள் எழுந்து மின்னி மறைந்துவிட்டு அடங்கின. ஒருகணம் நிலைதடுமாறி விழப் பார்த்தேன். என் கால்கள் இயல்பாக புவியீர்ப்புச் சமநிலையைப் பேணத் தடுமாறி நின்றன. 

‘டேய்... எல்லாரும் உடுப்பை கழற்றுங்கடா.’

 • 
ரணசிங்க ‘பொக்கற்றில் என்ன இருக்கு?' என்று கேட்டு கையை விடும்போது சுதாகரிக்கவில்லை. அவன் கை என் ஆணுறுப்பை அழுத்தியபோதுதான் திடுக்கிட்டேன். அவனின் தடித்த கைகளை தட்டிவிட முயன்றேன். அவன் இளித்துக்கொண்டு என்னைப் பார்த்தான். என் கண்கள் சிவந்தன. 

‘குண்டிருக்கா குண்டிருக்கா என்ன இரிக்கி மல்லி’ என்று கேட்டுக்கொண்டு அழுத்தினான். ஆணுறுப்பில் வலியெடுத்தது. விதைப்பையை அவன் கைகள் விராண்டிச் செல்ல எத்தனித்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. 

அன்று வகுப்புச் செல்ல தாமதமாகியிருந்தது. கடைசி வாங்கில் சென்று அமர்ந்தேன். தேகம் வியர்த்து, படபடப்பில் உதறிக்கொண்டிருந்தது. ஆணுறுப்பு கடுகடுத்துக்கொண்டிருந்தது. 

வீடு சென்ற பின் அம்மாவிடம் சொல்லலாமா என்று யோசித்தேன். எப்படி ஆரம்பிப்பது? கொஞ்சம் தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது. பின்வளவுக்குத் தனியாகச் சென்று பாலமரத்தடியில் நின்று யோசித்தேன். குறுக்கும் மறுக்குமாக பாய்ந்துகொண்டிருந்த அணில்கள் என்னைத் தலை நிமிர்த்தி முன்னங்கால்களை ஒன்றுசேர்த்து சந்தேகத்துடன் அவதானித்துவிட்டு, மீண்டும் குதித்தோடின. 

‘ஏன் ஒரு மாதிரி இருக்காய்?’ அம்மா எதேச்சையாகக் கண்டு வினவியபோது ஏதும் சொல்ல இயலவில்லை. மௌனமாகச் சென்றேன். அடுக்களையில் சமைப்பதில் மும்முரமாக எப்போதும்போல அவர் இருந்தார். 

எப்படியும் வகுப்புக்கு அந்த வழியாகவே செல்ல வேண்டும். வேறு சுற்றுவட்டப் பாதைகள் இருக்கின்றதா என்று பார்த்தேன். ம்ஹும்... எப்படியும் அந்த வழியால்தான் சென்றாக வேண்டும். ரணசிங்க அங்கேதான் வீதியோரத்தில் கடமையில் நிற்பான். 

இரண்டு நாள் எனக்கு சாதுவான காய்ச்சலாக இருந்தது. ஆகவே வீட்டில் இருந்தேன். பாடசாலைக்கும் செல்லவில்லை. இரண்டு நாள்களாக வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு மருத்துவரிடம் அப்பா அழைத்துச்சென்றார். ‘சாதாரணக் காய்ச்சல்தான் இதுக்கு ஏன் ஸ்கூல் போகாம இருக்கீங்க... பயப்படும்படி ஒன்றும் இல்லை’ என்றுவிட்டு சில மாத்திரைகளை எழுதித் தந்தார். வீடு வரும்வரை அப்பாவிடம் வசைச் சொற்களை கடுமையாக வாங்கவேண்டியிருந்தது. என் முகம் தடித்துப் போய் ஊதியிருந்தது. 

• 

தினமும் பகிடிவதை என்ற பெயரில் அரங்கேறும் சித்திரவதை தாங்க முடியாத துன்பத்தைத் தந்தது. ஒவ்வோர் இரவுப் பொழுதையும் அச்சத்துடனேயே அணுகினேன். உள்ளுக்குள் முள் தடுமாறிக்கொண்டிருந்தது. ஒவ்வோர் அசைவுக்கும் நொறுங்கினேன். தினமும் இரவில் திடீர் என்று செக்கிங் வரும் ராணுவம்போல சீனியர்ஸ் எங்கள் அறைக்குள் சாடலடியாகப் புகுந்தார்கள். அவர்களிடம் ஒரு வீட்டுச் சாவி இருந்தது எல்லாவற்றுக்கும் வசதியாயிருந்தது. அவர்கள் வந்தவுடன் நாங்கள் எல்லோரும் எழும்பி ஆடைகளைக் களைந்துவிட்டு வெறுமே ஜட்டியுடன் மட்டும் அவர்கள் முன் தலையைக் குனிந்துகொண்டு நிற்க வேண்டும். 

அறைக்குள் அதிகாலை மூன்று மணிபோல் நான்கு சீனியர்ஸ் அண்ணமார்கள் வந்தார்கள். என் தொடையில், இடுப்பில் அவர்களின் பெருவிரலால் எழுப்பத் தடவியிருக்க வேண்டும். இடுப்பில் ஏதோ ஊர்வதுபோல் இருப்பதை அவதானித்துவிட்டு திடுக்கிட்டு எழும்பினேன். எனக்கு முன்னால் இளித்துக்கொண்டு அவர்கள் நின்றார்கள். வழமைக்கு மாறாக அவர்களின் முகத்தில் புன்னகை ததும்பியது. நாங்கள் பேசமால் கொள்ளாமல் பழகிய முகபாவத்துடன் சாரத்தை களைந்துவிட்டு ஜட்டியுடன் அவர்கள் முன்னே நின்றோம். 

‘எல்லோரும் இங்க வாங்கடா... இது என்னவென்று தெரிகிறதா?’ பிரதீஸ் அண்ணா உள்ளங்கையில் அதைக் காட்டினார். வெள்ளை நிறத்தில் சிறிய வளையமாக இருந்தது. மெல்லிய வெள்ளைப் பொலுத்தின் அதைச் சூழ்ந்திருந்தது. நாங்கள் எதையும் சொல்லவில்லை.

 ‘இதுதான்டா கொண்டம்... ஹிஹி... இதை யாராச்சும் பாவிச்சு இருக்கீங்களா?’ நாங்கள் தலையைச் சிறிதுகூட அசைக்கவில்லை. ராணுவ அணிவகுப்பில் நிற்கும் சிப்பாய்கள்போல் விறைந்து நின்றோம்.

 ‘என்னடா பேசாமல் நிக்கிறீர்கள்... வாயைத் திறந்து சொல்லுங்கடா...’ நாங்கள் ஒருமித்து உரத்து ‘இல்லை’ என்றோம்.

‘இப்ப எல்லோருக்கும் ஒவ்வொன்று தரப்போகிறோம். எல்லாரும் உங்கட சாமானில மாட்டணும். லைட்ட ஓஃப் பண்ணுவோம். சுவத்து மூலைக்குச் சென்று கையடித்துவிட்டு இதுக்குள்ள நிறையும் விந்தைக் கொண்டு வந்து காட்டணும். சரியா...’ 

எனக்குத் தலை கிறுகிறுத்தது. அணிலொன்று சீலிங் இடைவெளிக்கால் ஓடிப்போனது. 

மின்குமிழ்கள் அணைக்கப்பட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைக்குச் சென்றோம். என் ஆணுறுப்பு சுருங்கி சிறுத்து இருந்தது. இதயம் வேகவேகமாக அடித்துக்கொண்டது. விறைப்படையச் செய்ய கடுமையாக முயன்றேன். எந்தவித முன்னேற்றமும் இன்றி கொவ்வைப்பழம் போல் சுருங்கியே இருந்தது. நெற்றியில் ஊடுருவியிருந்த நரம்பில் வலியொன்று தொற்றிக்கொண்டது. 

• 

ரணசிங்க என்னை மறித்தபோது உச்சிவெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. அதன் கொதிப்பில் வழிந்த வியர்வையைவிட, உள்ளூர எனக்குள் கிளர்ந்த அச்சத்தால் பொங்கிய வியர்வை அதிகமாக இருந்தது. 

அவனும் சிரிக்கவில்லை. நானும் சிரிக்கவில்லை. இருவரும் ஒவ்வொருவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றோம். சடுதியாக என்னை அருகிலிருந்த வெறும் வளவுக்குள் கூட்டிச் சென்றான். முரண்டுபிடிக்க முடியவில்லை. அவனின் இடிப்பில் அசைந்துகொண்டிருக்கும் துப்பாக்கி கடுமையாகப் பயமுறுத்தியது. ‘சேர்... சேர்... கிளாஸுக்கு போகணும். பிந்தினால் பேசுவாங்க’ என்று முனகினேன். யாராவது என்னைக் காண மாட்டார்களா என்று ஏங்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக வீதியில் எந்தச் சன நடமாட்டமும் இருக்கவில்லை. 

அது மிகப் பழமையான வளவு. துருபிடித்த பழைய இரும்புத் தகரங்களும் குப்பைமேனிச் செடிகளும் குவிந்து பரவியிருந்தன. மிகத் தடிமனான கருதக்கொழும்பான் மாமரம் கிளைகள் பரப்பி வளர்ந்திருந்தது. நிறைய அணில்கள் மரக்கிளைகளில் சுதந்திரமாக இருந்தன. எங்கள் நடமாட்டத்தைக் கண்டு வெருண்டு தலைதெறிக்க ஓடின. மாமரம் அருகில் மண்ணினால் ஆன மதில் பாதி இடிந்த நிலையில் இருந்தது. ரணசிங்கே என்னைக் கூட்டிச் சென்று நிறுத்தினான். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனது பரந்துவிரிந்த தேகத்துக்கு முன் சுண்டெலிபோல் ஒடுங்கி நின்றேன். 

துப்பாக்கியை முதுகுப் பக்கம் திருப்பிக் கொழுவிவிட்டு, அவன் தனது லோவுசர் ஜிப்பைத் திறந்து தனது ஆணுறுப்பை வெளியே எடுத்தான். ஜீரணிக்க முடியாமல் மிகுத்த அரியண்டதுக்குள் உள்ளானேன். சடுதியாக முகத்தைத் திருப்பினேன். என் கையால் அவன் குறியை பற்ற வற்புறுத்தினான். நான் முரண்டு பிடிக்க, அவன் இழுத்து என் மெலிந்த கைகளால் அவன் உறுப்பைப் பிடிக்கவைத்தான். முற்றிய கத்திரிக்காய்போல் தடித்துப் போய் இருந்த அவன் உறுப்பு விறைத்தது. என் எலும்புக்குள் எதோ நுரைத்ததுபோல் இருந்தது. அதற்குப் பின் நடந்ததை விளக்கக் கடினமாக இருக்கிறது. என் முகத்தில் அவன் விந்துத்துளிகள் சிதறியிருந்தன. 

பிற்பாடு என் காற்சட்டையை நீக்கி, என் உறுப்பை அவனின் தடித்த இரும்புக்கையால் உக்கிரமாகப் பிடித்துக் கசக்கினான். என் உடம்பு முழுவதும் வலியேறிப் படர்ந்தது. என்னை மறந்து நான் வலியால் அவலக் குரல் எழுப்பினேன். ‘ஹட்ட வஹாப் பங்சூ’ என்று சொல்லிக்கொண்டு ரணசிங்க என் கன்னத்தில் துவக்குப் பிடியால் ஓங்கி அறைந்தான். கண்கள் இருண்டுகொண்டு வந்தன. நான் மயங்குகிறேனா என்று சுதாகரிக்க முதல் நான் நிலத்தில் மயங்கிச் சரிந்தேன். 

கள்ளுச் சீவ வந்த தம்பிதுரை அண்ணன்தான் என்னைக் கண்டுவிட்டு அரைகுறை மயக்கத்தில் இருந்த என்னை வீட்டில் ஒப்படைத்தார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. ஆனால், அவர்கள் எதையும் என்னிடம் கேட்கவேயில்லை. ஒரு வாரம் சாதுவான காய்ச்சலில் இருந்த என்னை அப்பாவும் அம்மாவும் விழுந்து விழுந்து கவனித்தனர். அதைப் பற்றிக் கேட்பார்கள், கேட்பார்கள் என்று காத்திருந்தேன். ஆனால், அந்தச் சம்பவம் பற்றி எதையுமே கேட்கவில்லை. சலிப்புற்று எரிச்சலில் வீழ்ந்தேன். தலையணையைத் தழுவிக்கொண்டு அழுதேன். அதற்குப் பிற்பாடு நாங்கள் கொக்குவில்லுக்கு வீடு மாறினோம். அதன் பின் வந்த இரண்டு வருடங்களில் நாட்டின் நிலைமை முற்றிலும் மாறியது. யுத்தம் முடிவடைந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினர் முகாமுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்கள். 

எப்போதெல்லாம் என் நண்பர்கள் சுய இன்பத்தைப் பற்றிப் பேச ஆரம்பிகிறார்களோ அப்போதெல்லாம் என் எலும்புக்குள் ஏதோ நுரைப்பதுபோல் இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் ஆணுறுப்பைப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது. சிறுநீர் கழிக்கும்போது முடிந்த வரை ஆணுறுப்பைப் பார்ப்பதைத் தவிர்த்தே வந்தேன். சுய இன்பம் செய்வதை கற்பனை செய்து பார்ப்பதில்கூடத் தோல்வியடைந்தேன். 

• 

எல்லோரும் விந்து நிறைந்த கொண்டத்தினை பிரதீஸ் அண்ணாவிடம் காட்டினார்கள். அவர் ஒரு பென்சிலினால் நிறைந்திருந்த கொண்டத்தினைத் தட்டிப்பார்த்து ‘அட... உனக்கு இவ்வளவு கட்டியா இருக்கு, உனக்கு இவ்வளவு லைட்டா இருக்கு. தினமும் இறைக்கிறீயல்போல’ என்று கமென்ட் கொடுத்துக்கொண்டிருந்தார். 

நான் சுவரைப் பார்த்துக்கொண்டு சோர்ந்துபோய் நின்றுகொண்டிருந்தேன். என் கண்களில் கண்ணீர் வழிந்து உதட்டை நனைத்தது. அதன் உப்புச்சுவை பலதை நினைவுபடுத்தியது. எலும்புக்குள் ஏதோ நுரைத்ததுபோல் இருந்தது. வயிறு குமட்டிக்கொண்டேயிருந்தது. 

‘டேய் நீ என்னடா பண்றாய்... இவ்வளவு நேரம் ஆகிட்டு...’ என்னை நோக்கி பிரதீஸ் அண்ணாவின் குரல் வெட்டிய இரும்புத்துண்டாக வந்து வீழ்ந்தது. மின்விசிறியின் காற்று என்மேல் கவிந்து ஒருகணம் என்னைக் குளிர்ச்சியில் ஆழ்த்தியது. தேகம் புல்லரித்தது. ஜட்டியைச் சரி செய்துகொண்டு அவர்கள் முன் போய் தலையைக் குனித்துகொண்டு, ‘என்னால் முடியலை அண்ணா...’ என்றேன். 

‘ஏன்டா?’

 ‘எழும்புதில்லை.’ நான் சொல்லி முடிக்க, அவர்கள் நால்வரும் வெடித்துச் சிரித்தார்கள். அவமானத்தால் நான் கூனிக்குறுகி நின்றேன். எனக்கு அழுகை முட்டியது.

 ‘படுவா ராஸ்கல்... எல்லோருக்கும் எழும்புது... உனக்கு மட்டும் என்ன? விந்து எடுத்துக் காட்டாமல் போக ஏலா...’ 

என் இயலாமையைப் புரியவைக்க அவர்களிடம் பாடுபட்டேன். அவர்கள் அதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

 பிரதீஸ் அண்ணாவின் கைகளை ‘ப்ளீஸ் அண்ணா...’ என்று சொல்லிக்கொண்டு பிடித்தேன். அருவறுப்புடன் என் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு, ‘சாமானைப் பிடித்த கையால் என்னைத் தொடுறியா நாயே...’ என்று சீறிக்கொண்டு என்னைத் தள்ளிவிட்டார். நான் நிலை தடுமாறி விழுந்தேன். 

‘ஏய் இவனின் ஜட்டியைக் கழற்று...’ பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னார்கள். ஆளாளுக்கு திரும்பிப் பார்த்துவிட்டு நிற்க, சுரேஷ் அண்ணா ‘டேய் சொன்னது விளங்கலையா?’ என்று கத்த, அவர்கள் என்னை அமர்த்திப் பிடித்து, முழு நிர்வாணம் ஆக்கினார்கள். 

அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை இயக்கி போர்னோ படம் ஒன்றை ஓடச்செய்துவிட்டு, என்னைத் திரையின் முன்னால் நிற்கவைத்தார்கள்.

‘நீ இதைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். சாமான் எழும்பும். எழும்பின உடனே டக்குனு முடி’ என்றார்கள். என் தேகம் முழு அவமானத்தாலும் தடுமாற்றத்தாலும் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் ஆகியும் என் உறுப்பு எழும்பவேயில்லை. சிறுத்த கொவ்வைப்பழம்போல ஒட்டியபடி இருந்தது. 

‘இவனுக்கு எழும்பாதாம்’ என்ற செய்தி எங்கள் பீடம் முழுவதும் பரவியது. ‘மலடன்’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது. கூடப் படிக்கும் பெண்கள் சிலர் என் முதுகுக்குப் பின்னால் சிரிப்பதுபோல் தோன்றியது. சில சிங்கள மாணவர்கள் என்னிடம் ‘அப்படியா?’ என்று நேராகவே கேட்டார்கள். அன்றோடு பல்கலைக்கழகப் படிப்புக்கு முற்றுப்போட்டுவிட்டு முற்றிலுமாக விலகினேன். 

• 

எப்போதும் வீட்டில் என் அறையிலே படுத்திருந்தேன். வெளியே செல்வதையே தவிர்த்தேன். நேரத்துக்கு அம்மா சாப்பாடு சமைத்து, அறைக்கதவைத் தட்டி சாந்தமாகத் தந்தார். அவரின் கண்களில் சொல்ல முடியாத துக்கம் ஒட்டிக்கொண்டது. சில சமயம் அவர் தரும் சாப்பாட்டுத் தட்டை விசிறி அவர் முன்னே எறிந்தேன். அவரின் கண்களில் எழும் அச்சத்தை உள்ளூர ரசித்தேன்.

மாவட்ட மட்டத்தில் பன்னிரண்டாவதாக கணிதப் பிரிவில் தெரிவாகி, மொறட்டுவை பல்கலைக்கழகம் சென்ற தனக்கிருந்த ஓரேயொரு மகன் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்துவிட்டான் என்பதில் அப்பாவுக்குச் சொல்ல முடியாத துக்கம். என்னிடம் இரண்டு மூன்று முறை பேச வந்தார். பேச எத்தனிக்கும்போது அவரின் மேல் எரிந்து விழுந்தேன். வெற்றுக் கதிரையை உதைத்தேன். அவர் உள்ளூரத் தடுமாறுவதைக் கண்டு இன்பப்பட்டேன். முடிந்தவரை அவர்களை வேதனைப் படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதில் கிடைத்த சந்தோஷம் மேலும் மேலும் என்னை திருப்திப்படுத்தியது. என் இயலாமையை அது சமப்படுத்தியதுபோல் இருந்தது. என் கண்களைப் பார்ப்பதை அப்பா தவிர்க்கத் தொடங்கினார். 

அம்மா கோயில் கோயிலாகச் சுற்றத் தொடங்கினார். சைக்கிளை எடுத்துக்கொண்டு கைபோன போக்கில் இரவில் சுற்றத் தொடங்கினேன். சண்முகம் கடையடிப் படியில் அமர்ந்து இரவுப் பொழுதில் சிகரெட் புகைக்கப் பழகினேன். கிடைக்கும் காசில் ஊதித் தள்ளினேன். காசு மட்டுமட்டாகும்போது பீடி வாங்கி ஊதினேன். 

தனிமையில் அழுதேன். என் ஆணுறுப்பை வெளியே எடுத்து மெதுவாகத் வருடிக் கொடுப்பேன்.  இப்போது என் உறுப்பை பார்க்க எனக்கு பயமாக இருப்பதில்லை. தூங்கி எழும்போது ஆண் குறி விறைத்து இருக்கின்றது. சாதாரணமாக இயங்குகிறது. ஆனால், உடலுறவை நினைக்கும்போது இயங்குவதில்லை. பயந்து சுருங்குகின்றது. 

அச்சகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். பேப்பர் சுற்றுவது, அச்சாக்குவது என்று முறிந்தேன். அப்பா, அம்மாவுக்கு அது தெரியவர அதிகம் வருத்தப்பட்டு அழுதார்கள். சாப்பாடு தர வரும்போது இதைப் பற்றிப் பேச வந்த அம்மாவிடம் ‘போடி வெளியே...’ என்று கத்தி, தட்டை விசுக்கி எறிந்தேன். சோற்றுப் பருக்கைகள் அவர் முகத்தில் சிதறியிருந்தன. விறைத்த முகத்துடன் திரும்பிப் பாராமல் நடந்தார். அம்மாவின் விசும்பல் ஒலி தெளிவாகவே என் காதில் கேட்டது. 

இன்னும் அவர்களை அழவைக்க விரும்பினேன். இதற்காகவே வேறு எதுவும் படிக்காமல் நாள்களை ஊதாரித்தனமாகச் செலவு செய்ய ஆரம்பித்தேன். 

• 

அனுராதபுரத்தில் எனக்கு யாரையும் தெரியாது. ஆனால், பேருந்தில் ஏறிக் கிளம்பி வந்துவிட்டேன். மொறட்டுவையில் படித்த காலத்தில் பழகிய சிங்களம் ஓரளவுக்கு கைகொடுத்தது. என் இஷ்டப்படி சுற்றித் திரிந்தேன். ஸ்ரீ மகாபோதி ருவான்வெலிசாய, தூபாராமய, லோவமகாபாய, அபயகிரி விகாரை ஜேதவனாராமய போன்றவற்றைச் சுற்றிப் பார்த்தேன். சூரியன் மறையத் தொடங்கும்போது பொடி நடையாக ஒரு கிராமத்தை வந்தடைந்தேன். பெட்டிக் கடையில் இறால் வடையும் இஞ்சி போட்ட பிளேன்ரீ ஒன்றையும் வாங்கி அருந்தினேன். கொஞ்சம் தெம்பாக இருந்தது. இனி எங்கே செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். தென்னை மரத்தில் இருந்து ஓர் அணில் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அதனை உற்றுப்பார்த்தேன். மெதுவாக இறங்கி அருகிலிருந்த ஒற்றையடிப்பாதை வழியே வாலைத் தூக்கிக்கொண்டு நடந்தது. அதன் பின்னே செல்லத் தொடங்கினேன். ஒரு தேர்ந்த வழிகாட்டிபோல என்னை இழுத்துச் சென்றது. எதைப் பற்றியும் யோசிக்காமல் அணிலின் பின்னே நடந்துகொண்டேயிருந்தேன். அந்தப் பாதை தென்னை மரங்களுக்கூடாகச் சென்றது. வழியில் யாருமே எதிர்ப்படவில்லை. இறுதியில் அந்த அணில் வேகமாக குதித்தோடி எங்கேயோ மறைந்தது. என்னைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்ததுபோல அது திருப்தியடைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.

சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். அருகே மிகப் பெரிய வாவி தென்பட்டது. சற்றென்று குளிர்க் காற்று என்னைத் தழுவியது. மெய்மறந்து வாவியைப் பார்த்தேன். மிக அமைதியாக இருந்தது. சொக்கிப்போய் அவ்வாறே பார்த்துக்கொண்டு அதன் அருகில் நகர்ந்து வாகை மரங்களுக்குக் கீழிருந்த புற்களின் மேல் மௌனமாக அமர்ந்தேன். நீண்ட கால்களைக் கொண்ட கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. அப்போதுதான் கவனித்தேன். நீரில் சில சுளிப்புகள் தென்பட்டன. கூர்மையாகப் பார்த்தேன். யாரோ நீந்துகிறார்கள் யார் அது... ஒரு பெண். அட, ஓர் இளம் பெண். நீண்ட கருமையான கூந்தல் அவளுக்கு இருந்தது. நீரில் அலைவுற்று கரும் தாமரைகளாக அவை மிதந்தன. 

அவள் கரைக்கு வந்தாள். நான் மௌனமாகப் பார்த்தேன். நீரில் நனைந்த அவள் உடைகள் அவளின் தேகத்தில் ஒட்டியபடி இருந்தன. இமைகளை வெட்டாமல் அவளைப் பார்த்தேன். இத்தனை நீளமாகக் கூந்தல் இருக்குமா என்று வியப்புற்றேன். கரைக்கு வந்த அவள் சிறிய குடுவையில் இருந்து சோப்பை எடுத்து உடல் முழுவதும் பூசத் தொடங்கினாள். அந்த வாசம் விநோதமாக இருந்தது. இதுவரைக்கும் அப்படியொரு வாசத்தை முகர்ந்ததேயில்லை.

இவ்வளவு தூரத்திலும் இந்த வாசம் எப்படி வருகிறதென்று ஆச்சர்யமாக இருந்தது. என்னுள்ளே எடையிழந்த பனிக்கட்டிகள் மோதி உருகின. அவளின் தேகத்தின் மீதான ஈர்ப்பு என்னை விழுங்க ஆரம்பித்தது. இருள் மென்மேலும் விழுந்து பார்வையின் திறனைக் குறைத்தது. சிறிது நேரம் நீச்சலடித்துவிட்டு இருள் கடுமையாகத் தொடங்க, ஈர உடையின் மேல் ஒரு துவாயைப் போர்த்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் விட்டுச் சென்ற வாசம் மட்டும் என்னுளே எஞ்சியிருந்தது. 

• 

அடுத்தநாள் மதியம் நான் தங்கியிருந்த விடுதியறையில் இருந்து வெளியே புறப்பட்டேன். இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு மாறுதலுக்கு அதனை வாங்கி அருந்தினேன். நடக்க ஆர்மபித்தபோது வெயில் என்னைப் பின்னால் விரட்டிக்கொண்டிருந்தது. நகருக்குள் நுழைந்தேன். புகையிரத கடவையைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது அந்த யோசனை உதித்தது. 

படியால் ஏறி கண்ணாடிக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் மூக்கு நீளமான ஒருவர் அடர்த்தி குறைந்த தேகத்தோடு இருந்தார். சாம்பிராணிப் புகையின் வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. பக்கத்தில் சோபா செட்டி இருக்கைகள் இருந்தன. அதில் சிலர் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார்கள். நான் நேராக வரவேற்பறையில் இருந்தவரிடம் சென்றேன். ‘சாதாரண மசாஜ் செய்ய ஆயிரத்தி முந்நூறு ரூபாய்’ என்றார். காசை எண்ணி அவரிடம் கொடுத்தேன். அருகிலிருந்த அறையைச் சுற்றிக்காட்டி இங்கிருக்கும் பெண்களில் ஒருவரை அழைக்கச் சொன்னார். 

பிங்க் நிற வர்ணம் பூசப்பட்ட அந்த அறையில் ஏறக்குறைய பதினான்குக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தார்கள். எல்லோருடைய முகத்தையும் பார்த்தேன். அளவுக்கு அதிகமாக பௌடர் முகத்தில் பூசி, கடும் நிறத்தில் சிவப்பு உதட்டுச் சாயம் பூசியிருந்தார்கள். அதில் கொஞ்சம் இளையவளாக இருக்கும் ஒருவரை தெரிவு செய்தேன். துள்ளி எழுந்து என்னிடம் வந்தாள். ஹமாம் சோப் வாசம் வீசும் ஒரு துவாயை என்னிடம் தந்துவிட்டு சில போத்தல்களை எடுத்துக்கொண்டு என்னைப் பின்னே வரச் சொன்னாள். 

சிறிய அறை. குறைந்த ஒளியில் மின்குமிழ்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அருகிலிருக்கும் ஷவரில் குளித்துவிட்டு வரச்சொன்னாள். அந்தத் துவாயை சுற்றிக்கொண்டு அந்தக் கட்டிலில் ஏறிப் படுத்தேன். அவள் கையிலிருந்த தைலத்தை பூசி என் உடலை மசாஜ் செய்ய ஆரம்பித்தாள். மிக மென்மையாக அவளின் கை என் உடம்பை பிடித்து அழுத்தி உருவிக்கொடுத்தது. கண்ணை மூடி அவளின் கையின் நகரலை உற்றுநோக்கத் தொடங்கினேன். மயிலிறகின் வருடல்போல் அந்தத் தடவல் இருந்தது. கண்கள் இருண்டுகொண்டிருந்தன. நிறைய அணில்கள் கும்பலாக ஓடிக்கொண்டிருக்கும் காட்சி கண்ணில் தென்பட்டது. இருபது நிமிங்களுக்குப் பிற்பாடு என்னை திரும்பிப் படுக்கச் சொன்னாள்.

இந்தத் தடவை என் மார்பு தொடைகள் என்று அவளின் கை ஊர்ந்தது. எனக்கு கூச்சம் எழுந்து ஆர்ப்பரிக்க தொடங்கியது. பற்களுக்கு இடையில் கூச்சம் சம்பந்தமே இல்லாமல் வந்தது. கண்களை அழுத்தி மூடி என்னை சமப்படுத்த முயன்றேன். என் ஆணுறுப்பு பாடலால் வீரியம் கொள்கிறதா என்று உற்று நோக்க தொடங்கினேன். அவளின் கை சடுதியாக அதைத் தீண்டியதுபோல் இருந்தது.

என்னுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள். நான் கண்களைத் திறந்து அவளின் முகத்தை பார்த்தேன். நேற்று வாவியில் கண்ட பெண்ணின் சருமத்தில் இருந்து வந்த வாசனை என்னை சுற்றி பரவியிருந்ததுபோல் உணர்ந்தேன். என் முகத்தினருகே வந்து ‘ஹாண்ட் ஜோப் கரண்ட ஓனத?’ என்றாள். அதற்காகவே காத்திருந்ததுபோல் ‘ஓவ்’ என்றேன். அதற்காக மேலதிகமாக டிப்ஸ் இப்பவே தரவேண்டுமென்றாள்.   அருகே ஹேங்கரில் கொழுவியிருந்த என் லோவுசர் பொக்கற்றில் இருந்த பேர்சில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து அவளிடம் கொடுத்தேன். நான்காக மடித்து, சிறுபுன்னகையோடு தன் பின்புற ஜீன்ஸ் பொக்கற்றில் வைத்தாள்.

கைநிறையத் தைலத்தை அள்ளிப் பூசிக் கொண்டு என் உறுப்பைத் தொட்டுத் தீண்டத் தொடங்கினாள். இடுப்பைச் சுற்றியுள்ள பிரதேசம் குளிர்ந்தது. கண்ணைத் திறந்து அது நிமிர்ந்துள்ளதா என்று பார்த்தேன். 

நான் வீடு வந்து சேர்ந்தபோது பின்னேரம் நான்கு மணி இருக்கும். பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தார். அடுக்களைக்குச் சென்று எனக்கான தேநீரை தயாரித்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டேன். அனைத்து உடைகளையும் களைந்துவிட்டு கண்ணாடியில் என் உருவத்தை பார்த்தேன். நீண்ட நாட்களின் பின் என்னைப் பார்க்கிறேன். கொஞ்சம் சதைப்பிடிப்பு உடலில் இருந்தது. அரும்பு மீசையை வருடிக்கொடுத்தேன். நான் கொஞ்சம் அழகாகியிருப்பதுபோல் தோன்றியது. என் உறுப்பைப் பார்த்தேன். ஆதரவாகத் தடவிக் கொடுத்தேன். எனக்குள் மகிழ்ச்சி சம்பந்தமேயில்லாமல் பிறந்தது.

‘சேர்... எவ்வளவு நேரம் ஆகியும் உங்க உறுப்பு விறைக்குதேயில்லை’ என்று அவள் களைப்புற்ற கண்களுடன் என்னிடம் சொல்லும்போது என் கண்களை விழித்து, அவளைப் பார்த்தேன். என் உதட்டில் வெறும் புன்னகை மட்டும் தான் இருந்தது. ‘சரி பரவாயில்லை... போதும்’ என்றேன். என் தலையை கோதிவிட்டு ‘உங்களுக்கு ஒரு முத்தத்தைத் பரிசளிக்கவா?’ என்று கேட்டாள். நான் எந்தப் பதிலும் சொல்ல முதல் என் உதட்டில் முத்தமிட்டாள். அப்போது அதைப் புரிந்து கொண்டேன்.

நினைவுச் சுழிகளைக் களைந்து, கண்ணாடியில் இருந்து பார்வையை விலத்தி ஜன்னலால் வெளியே பார்த்தேன். அணில்கள் உற்சாகமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.

.....

 

மூலம்: பச்சை நரம்பு சிறுகதைத் தொகுதி

(அனோஜனின் அனுமதியுடன்)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த முத்தத்தை முதலே குடுத்துத் தொலைத்திருக்கலாம்....... அணில் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியிருக்கும்.....!   😁

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இவர் ராகிங் வேணாம் என்று சொல்லவில்லை?! அன்ரி ராக்கர்ஸ் இருந்தவை தானே?! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்ரி ராகர்ஸ் இருந்தாலும் சிலர் அடுத்த முறை தாங்கள் தங்கள் ஜூனியர்ஸ்க்கு ராகிங் செய்யேலாது எண்டதால அன்ரி ராகர் குழுவில் சேர்வதில்லை. ராகிங்கில் முன்னணியில் இருப்பவர்கள் 2ஆம் வருட மாணவர்கள்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.