புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (29) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் அவரின் அரசாங்கம் உருவாக்கி சில நாட்கள் தான் ஆகின்றன. இவ்வாறான நிலையில் நான் வடக்கின் சில பகுதிகளுக்குச் சென்ற போது அங்கு புதிதாக இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் முளைத்துள்ளன.

59682616_2359056400820686_45143166230410

இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. இவற்றை நான் நேரடியாகவே  காணக் கூடியதாக இருந்தது.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசிலாவது தீர்வுகள் கிடைக்கும் என நம்புகின்றோம். கடந்த அரசில் பல பிரச்சினைகளை நாம் சுட்டிக் காட்டியபோதும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இன்றுவரை உரியத் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

குறிப்பாகச் சட்ட விரோத மீன்பிடிகள், எல்லை தாண்டிய மீன்பிடிகள் போன்றன தீர்க்கப்படவில்லை.மேலும் கடற்தொழிலாளர்களில் பலர் இன்றும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

புதிய அரசிலாவது அவர்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்.புதிய அரசில் வடக்கினை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அமைச்சர் இந்த கடற்தொழில் அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார்.

அவர் எமது பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்பதால் தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கிறேன்.

கோத்தாபயவின் அரசு பொறுப்பேற்றுள்ள சில நாட்களிலேயே இராணுவ சோதனைகளும் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் இந்த அரசு ஊடாக எமது மக்களின் வாழ்க்கைக்குச் சுமுகமான நிலை உருவாகுமா?அல்லது பாதகமான நிலை மாறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது கடற்தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லும் போதும் அவர்கள் வாழும் போதும் புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்குள் வாழ்ந்தனர். இந்த ஆட்சியில் அவ்வாறான நிலைமைகள் உருவாகக் கூடாது என்பதையும் கேட்டுக் கொள்கின்றோம்.என்றார்.

https://www.virakesari.lk/article/70056