Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ப்ரியம் என்பது-நந்தன்

Featured Replies

ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்..

இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும்.

பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒரு வேளை கேட்டிருந்தால் இதுதாண்டா ப்ரியம் என்று அவள் சொல்லி இருப்பாள். அப்படி சொல்லி இருந்தால் அது ப்ரியமாக இருந்திருக்காது.

ஆக என்னைப் பொறுத்தவரை ப்ரியம் என்பது இதுதான் ப்ரியம் என்று சொல்லாமல் இருப்பதும்தான்..
இப்படிப்பட்ட நான்சென்ஸ் ப்ரியங்களை நான் அனுபவித்தே வந்திருக்கிறேன். என்ன ஒரு கடுப்பு என்றால் அவற்றை அனுபவித்த பொழுதுகளில் அவற்றை மதித்ததே இல்லை. அவ்வளவுதான். இந்த குற்றத்தை செய்தவன் நான் மட்டுமில்லை என்பதும் எனக்குத் தெரியும்..

அப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறேன். வயது அவ்வளவுதான் 17 இருக்கும்.. அப்போதுதான் என் நண்பர் அழகு சுந்தரம் காதலிக்க ஆரம்பித்தார்..
அழகு சுந்தரம் என்னை விட குறைந்தது நான்கு வயதாவது மூத்தவர். நான் பி.எஸ்ஸி படித்துக் கொண்டிருந்த அந்த காலததில எம் எஸ்ஸி முடித்து பி எட் படிக்கத் துவங்கி இருந்தவர். அவரோட கெட்ட நேரம் எனக்கு நண்பரானார். நான் இலக்கியம் கழுதை குதிரை என்றெல்லாம் பேசியபடி திரிவதால் என்மீது அவருக்கு டெர்ரர் கலந்த மரியாதை. அவர் படித்த அதிகபட்ச இலக்கியம் பாலகுமாரன்தான். அதிலும் எனது ரெக்கமெண்டேஷனான இரண்டு நாவல்களை மட்டும் ஆழ்ந்து வாசித்திருந்தார்.

அந்த அளவில் அவர் - அது பி. எட். டுக்கான செமினாரா அல்லது எம்.ஃபில் லுக்கான செமினாரா என நினைவிலில்லை - ஒரு செமினாருக்குப் போனபோதுதான் அழகம்மையை சந்தித்தார். செமினாரின் இடைவேளையின்போது பாலகுமாரன் கதையை வைத்து படித்துககொண்டிருந்த அழகம்மையிடம் தானும் பாலகுமாரன் படிப்பதாக அறிவித்துகொண்டபோது நட்பு பூத்தது. அடுத்தடுத்த செமினார்களில அந்த நட்பு காதலாக மாறியது.
என்ன செய்ய.. என் தலைவிதி அதுதான் என்பதால் அழகு என்னை அழகம்மையிடம் அறிமுகம் செய்து வைத்தார்..

சில அறிமுகங்கள் ஒட்டுப் புல் போல.. கண்டதும் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும். அழகம்மையும் அப்படித்தான். கண்ட விநாடியில் தம்பு.. என்றபடி என்னோடு ஒட்டிக் கொண்டாள். தம்பு என்பது தம்பி என்பதன் மரூவுவாகவும் இருக்கலாம். ஏனென்றால் எனக்குத் தெரிந்து அவர்கள் வீட்டில் அவள்தான் மூத்தவள். அவளுக்கடுத்து தங்கை ஒருத்திதான் இருந்தாள். அவளுக்கு தம்பி என்று எவனும் இல்லாததால் என்னை தத்தெடுத்துக கொண்டாளாக இருக்கலாம்..

எது எப்படியாயினும் நான் அவளுக்கு தம்புவானேன்.

அழகுவின் வீடு ரொம்ப கட்டுப் பெட்டியான குடும்பம். அவரது அப்பா வேறு ரிட்டயர்டு போலீஸ் ஆபீசர்.. ஆகவே அவர்கள் வீட்டில் யாருக்கு கடிதம் வந்தாலும் முதலில் அதை அப்பாதான் பிரித்துப் படிப்பார். அப்புறம்தான் கடிதத்துக்குரியோர் அதை படித்துப் பார்க்க முடியும். எங்கள் வீட்டில அப்படியே உல்டா. எங்கப்பா போலீசை விட ரொம்ப கண்டிப்பானவர். ஆனால் அவரவர் கடிதங்களை அவரவர்தான் படிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்துடன் இருந்தவர். ஆகையால் என் பெயருக்கு வரும் கடிதங்கள் பிரிக்கப்படாமலே எனக்கு வந்து சேரும்.

இந்த காரணத்தினாலேயே அழகம்மை அழகுவுக்கு என் வீட்டு விலாசங்களுக்கே கடிதங்கள் அனுப்பினார்..
வரும் கடித உறைகளுக்குள் இரண்டு கடிதங்கள் இருக்கும். எனக்கான கடிதம் மற்றும் அழகுவுக்கான கடிதம்.. அழகுவுக்கான கடிதம் மட்டும் உள்ளே தனி உறைக்குள் போடப்பட்டு தனியாக இருக்கும். ஆனாலும் அந்த தனி உறை ஒட்டப்பட்டிருக்காது. இது நம்பிக்கை சாரந்த விஷயம். எனக்கான கடிதத்தை மட்டும் நான் படிப்பேன். அழகுவின் கடிதத்தை நான் படிக்க மாட்டேன் என்பது அவரது மற்றும் அழகினது நம்பிக்கை. அதை நான் காப்பாற்றியபடியே இருந்தேன். இருந்தாலும் தனி உறையில் கடிதத்தை இட்டு அனுப்புவதின் காரணம் அடையாளத்துககாகத்தான் என்பது அனைவருக்கும்அறிவிக்கப்பட்ட உண்மை..

என்ன விசித்திரம் என்றால் அழகுவுக்கு அழகம்மை எழுதிய கடிதங்கள் இரண்டு அல்லது மூன்று பக்கம் இருந்தது என்றால் எனக்கு அவர் எழுதிய கடிதங்கள் ஆறு அல்லது ஏழு பக்கம் இருக்கும். அழகு மீது அவர் வைத்திருந்த காதலைவிட தம்புவாகிய என்மீது அவர் வைத்திருந்த பாசம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகத்தான் இருந்தது..

செமினார் வரும்போதெல்லாம் எனக்கு இம்சைகள் ஆரம்பிக்கும். நீயும் என்னோடுவா என்பார்அழகு. போவதற்கு ஆசைதான். ஆனால் காசு வேணுமே. அப்போதெல்லாம் சிகரெட்டுக்கு காசு கிடைப்பதே பெரிய விஷயம். இதில் மதுரை போகவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 40 ரூபாய் தேவைப்படும். இந்த லட்சணத்தில் என்னை மதுரை வரச் சொல்லி அழைத்த புண்ணியவானின் நிலைமை என்ன வென்றால் அவங்க அப்பா மதுரைக்கு 16.50 டிக்கெட். போக வர அது 33 ரூபாய். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஸ்டடி செண்டர் போக 50 பைசா டிக்கெட். போக வர 1 ரூபாய். சாப்பிட 11 ரூபாய் என்று கணக்குப் பண்ணி வெறும் 50 ரூபாய் கொடுப்பார். (பாக்கி 5 ரூபாய் அவசர செலவுக்கு..

வீட்டுக்கு வந்ததும் அவசர செலவு இல்லை என்றால அந்த 5 ரூபாயை திருப்பிக் கொடுத்தாகணும்..) என்னதான் மிச்சம் பிடித்தாலும் அந்த 50 ரூபாயில் இரண்டு பேர் போய் வர முடியவே முடியாது. வழக்கம் போல நானே வீட்டில் திருடியும், நண்பர்களிடம கடன் வாங்கியும் பணம் தயார் செய்து கொண்டு அவருடன் மதுரை போவேன்..

மதுரையிலும் அழகம்மை அழகுவிடம் பேசிய பொழுதுகளை விட தம்புவிடம் பேசியபொழுதுகள்தான் அதிகமாக இருக்கும். திடீரென்று கேட்பார்.. உனக்கு இந்த வருஷம் என்னென்ன பேப்பர் என்று..
நான் ரொம்ப சிலிர்த்துக கொண்டு அதைப் பத்தி உங்களுக்கு என்ன.. என்பேன்.. அவர் கோபமாக இப்புடி எல்லாம் உங்க வீட்டுல பேசுற மாதிரி என்கிட்ட பேச முடியாது தம்பு.. மரியாதையா என்னென்ன பேப்பர் இருக்குன்னு சொல்லு.. என்று மிரட்டுவார். நாம் பயந்தால்தானே.. சொல்ல முடியாது.. உங்க வேலை எதுவோ அதைப் பாருஙக.. என்று திமிராக சொல்லுவேன்.. இப்படியாக ஒரு அக்காள் தம்பி சண்டையாகத்தான் எங்கள் சந்திப்பு நிகழும்.

அழகுவிடம் அவர் பேசிய நேரத்தைவிட என்னை சரிசெய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம்தான் அதிகமாக இருக்கும்.. அதில் எனக்கோ அழகுவுக்கோ இல்லை அழகம்மைக்கோ எந்த வருத்தங்களும் இருந்ததில்லை.. மழை பெய்தால் தெருவில் நீர் தேங்குவது இயல்பே போல மதுரை சந்திப்பு எனில் என்னிடம் அவர் கெஞ்சுவதும் கோபப்படுவதும் இயல்பாக நடக்கும். எங்கள் விவகாரத்தில் அழகு தலையிட்டதே இல்லை..

எனக்கு வரும் அந்த ஆறேழு பக்க கடிதங்களும் இதேமாதிரி படிப்பு பற்றிய இம்சைகளைத் தாங்கியபடிதான் வரும். அழகம்மைக்கு என்னபிரச்சினை என்றால் அவள் ரொம்ப நன்றாகப் படிப்பாள். பி எஸ்ஸியில் கோல்டு மெடலை 0.5 சதவீதத்தில் தவற விட்டவள் எம் எஸ்ஸியில் பல்கலைக்கழக முதல் மாணவியாக வந்து கோல்டு மெடலை பெற்று காட்டினாள். பி எட்டிலும் அவள் முதல்மாணவியாகத்தான் வந்தபடிஇருந்தாள். அதன் பின்னர் எம் ஃபில் படித்தபோதும் அதில் முதல் மாணவியாக வந்ததாகத்தான் கேள்வி.. இத்தனை படிப்பையும் வைத்துக் கொண்டு அவளுக்கு, தம்புவானவன் தன் படிப்பை வேஸ்ட்டாக்கிக் கொண்டிருக்கிறானே என்ற ஆதங்கம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை..

இம்சைகள் இதோடு நிற்கவில்லை.. என் தம்பி காரைக்குடி அருகில் செட்டிநாடு எனப்படும் கானாடு காத்தான் பாலிடெக்னிக்கில்தான் படித்து வந்தான். அவன் ஃபர்ஸ்ட் இயரில் கணக்கில் அரியர் வைத்ததை அறிந்து அவனையும் திருத்த முயற்சி செய்தாள். என் தம்பி என்னை முறைத்ததில் அம்முயற்சியை அவளை கைவிடச் செய்தேன். பைத்தியக்காரி மாதிரி கையில் பிரியத்தை வைத்துக் கொண்டு முட்டாள்களுக்கெல்லாம் தரத் துடித்தபடி இருந்தவள் அவள்..

நன்றாக நினைவிருக்கிறது- கல்லூரியில் படிக்கும்போதே மத்திய அரசின் SSC தேர்வில் நான் பாஸ் செய்து விட்டேன். வெறும் கிளரிக்கல் போஸ்ட்டுக்கு அப்ளை செய்யாமல் டைப்பிஸ்ட் கம் கிளர்க் போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருந்ததால் அடுத்த டைப் டெஸ்ட்டுக்கும் வரும்படி அழைப்பு வந்தது- டைப் டெஸ்ட் மதுரையில்தான் நடக்கும். அதற்கு போவதே விநோதமான தயாரிப்பு.. ஒரு வாரம் முன்னமே மதுரை சென்று யாராவது தெரிந்தவரைப் பிடித்து ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் நமக்கு ஒரு டைப்ரைட்டரை புக் பண்ண வேண்டும். அவர்கள் நமது சென்ட்டரை கேட்டுவிட்டு மொத்த வாடகை 30 ரூபாயில் 15 ஐ முன்பணமாக வாங்கிக் கொள்வார்கள்.
அதே சென்ட்டரில் நிறைய பேர் அவர்களிடம் புக் செய்திருப்பார்கள்.. குறிப்பிட்ட நாளில் ஒரு வேனில் அவர்களிடம் இருக்கும் எல்லா டைப்ரைட்டர்களையும் எடுத்துக் கொண்டு எக்ஸாம் சென்ட்டருக்கு வந்துவிடுவார்கள். எக்சாம் ஹாலுக்குள் டைப்ரைட்டர்கள் வரும்முன் பாக்கி பணத்தை தந்து விட வேண்டும். அவர்களே டைப்ரைட்டர்களை நமது இடத்தில்கொண்டு வந்து வைத்து செட் செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள்.

ஒரே நாளில் பல பேட்ச் மாணவர்களுக்கு டைப் டெஸ்ட் நடப்பதால் அவர்களுக்கு அன்று முழுவதும் டைப்ரைட்டர்கள் நல்ல வாடகைக்கு போனபடி இருக்கும். கடைசி நேரத்தில் யாருடைய டைப்ரைட்டராவது மக்கர் செய்தால் அவர்கள் ஓடோடி வந்து ஸ்பேர் டைப்ரைட்டரை வைத்துவிட்டுப் போவார்கள்..

இப்படியாக எங்க அப்பாவிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு நான் சென்று டைப்ரைட்டரும் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.. அதற்கு ஒரு வாரம் முன்னிருந்து நண்பர் அழகுவுக்கு காய்ச்சல்..

டைஃபாயிடு என்று உறுதியானது. அழகம்மைக்கும் நான் கடிதம் மூலம் தகவல் சொல்லி விட்டேன். ஒரு ஞாயிறன்று எனக்கு டைப் டெஸ்ட். சனிக்கிழமை இரண்டாவது தபாலில் (அப்போதெல்லாம் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியாது. தபால்காரர் காலை 10 மணிக்குள் ஒரு தடவை வந்து கடிதங்களை டெலிவர் செய்துவிட்டுப் போவார். அது முதல் தபால். அப்புறம் மாலை மூன்று அல்லது மூன்றரை வாக்கில் ரெண்டாவது ரவுண்டு வந்து தபால்களை கொடுத்துவிட்டு செல்வார்.. அது ரெண்டாவது தபால். ஒரு வேளை தபால்கள் திண்டுக்கல்லில் இருந்து காலையில் ஒரு செட் வருவதும், மதுரை வழியாக மாலையில் ஒரு தபால் பை வருவதுமாக இருந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்..)

மூன்றரை வாக்கில் அழகம்மையிடம் இருந்து தபால்…

சுருக்கமாக, அழகுவைப் பார்க்க வருகிறேன். காலை எட்டு மணிக்கு எல்லாம் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடுவேன். அங்கே எனக்காக காத்திருந்து அழகு வீட்டுக்கு அழைத்துச் செல்லவும். என்று மட்டும் எழுதியிருந்தாள் அழகம்மை. என்ன கொடுமை என்றால் நாளை எனக்கு SSC டைப் டெஸ்ட் இருக்கிறது. வராதே என்ற தகவல் சொல்லஅப்போது போன்வசதி எல்லாம் இல்லை. அப்போதே புறப்பட்டு காரைக்குடி போய் அவள் புறப்பாட்டை தடுத்து விடலாம் என்றாலும் காசு பணம் தேற்றிக் கொண்டு நான் காரைக்குடி அடைவதற்குள் இரவாகி விடக் கூடும்.இரவில்அவள் வீட்டுக்கு போக முடியாது.
காத்திருந்து காலையில் அவள் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது வேண்டுமானால் தடுக்க முயலலாம். அப்படி செய்தாலும் இரவு முழுக்க விழித்துவிட்டு திரும்ப மதுரை வந்து டைப் டெஸ்ட் எழுதுவது கடினம் என்றுதான் தோன்றியது. அவள் பாட்டுக்கு வரட்டும் நாம் மதுரை போய்விடுவோம் என்று நினைத்தாலும். அந்த பெரிய தேனி பஸ் ஸ்டாண்டில் என்னை தேடியபடி அலையும் அவளது உருவம் நினைவில் வந்து மனதை சிக்கலாக்கியது..

வேறு வழி..? டைப் டெஸ்ட்டுக்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று அவள் வருவதற்காக காத்திருந்தேன். கரெக்டாக எட்டு மணி பஸ்ஸில் வந்து விட்டாள்..எப்படித்தான் அவள் ஏறும் பஸ்கள் எல்லாம் சரியான நேரத்துக்கு வந்துவிடுமோ என்பது இன்று வரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது.

நானா கடும் கோபத்தோடு காத்திருந்தேன்.. இப்படி திடீர் திடீரென்று உங்கள் காதல் பொங்குவதனால் நான் பல இம்சைகளுக்கு ஆளாகிறேன் என்று லெஃப்ட் ரைட் வாங்கிவிட வேண்டும் என்று வெறியுடன் இருந்தேன்.. (அதிலும் அக்கா மாதிரியான பெண்களை திட்டி அழவைப்பது அப்போது ரொம்ப பிடித்தமான விஷயமாக இருந்தது என்றே சொல்லலாம். என்ன ஒரு சாடிஸம்..)

இறங்கியதுமே தலைவி கலக்கத்தில் இருப்பது தெரிந்தது. உறங்கி இருக்க மாட்டாள் போல..

அழகுவுக்கு டைஃபாயிடு என்பது அவளை அந்த அளவு பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.. என்னைப் பார்த்ததும் அவரு எப்புடி இருக்காரு என்ற வாக்கியத்தை அவளால் முடிக்க முடியவில்லை. கண்ணீர் பொல பொலவென்று கொட்ட ஆரம்பித்து விட்டது. எரிச்சலுடன் அழுவதற்கு மட்டும் திட்டிவிட்டு (டைஃபாயிடுதானே.. கேன்சர் இல்லையே.. இப்ப எதுக்கு இத்தனை அழுகை..) அவளை மேலும் அழ வைத்து ஒரு வழியாக சின்னமனூருக்கு பஸ் ஏறினோம்.

எனக்கா என்னை யாராவது பார்த்து அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு..
சின்னமனூரில் புது பஸ்ஸ்டாண்டு எனப்படும் பஸ் ஸ்டாண்டு ஊருக்கு வெளியே இருக்கும்.. (கட்டப்பட்டு முப்பது முப்பத்தைந்து வருடம் ஆகியும் இன்னும் அது புது பஸ் ஸ்டாண்டு எனவே அழைக்கப் படுவதுதான் இன்றுவரை வேடிக்கை. இப்பதான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அவுட்டர் பஸ் ஸ்டாண்டு என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.) ஊருக்குள் இருக்கும் உண்மையான பஸ் ஸ்டாண்டு என்பது மார்க்கையன் கோட்டை ரவுண்டாணாவில் இருக்கும், ஒரு நிழற் குடை கூட இல்லாத வெறும் பஸ் ஸ்டாப்தான். ஆனால் எங்கள் எல்லாருக்கும் அதுதான் பஸ் ஸ்டாண்டு. எங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்றால் அந்த ஊருக்குள் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் இறங்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அழகுவின் வீட்டுக்கு போக புது பஸ் ஸ்டாண்டு எனப்படும் அவுட்டர் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொள்ள வேண்டும். அதனால் எங்கப்பாவின் கண்ணில் படுவதிலிருந்து எஸ்கேப்..

அழைத்துக் கொண்டு அழகுவின் வீட்டுக்கு போய் அழகுவின் அம்மாவிடம் இவளும், அழகுவும் ஒன்றாக படிப்பதாகவும், செமினாரில் நோட்ஸ் தொலைந்து விட்டதால் அவனிடம் இருந்து நோட்ஸ் வாங்கிச் செல்ல வந்திருக்கிறாள் என்றும் ஒரு அரைப் பொய்யை சொல்லி நம்ப வைத்து அழகு படுத்திருக்கும் அறைக்குள் அவளை அழைத்துச சென்றேன்.

நோயின் தாக்கத்தால் மேலும் மெலிந்து களைத்துப் படுத்திருந்த தலைவன் இவளைப் பார்த்ததும் லிட்டரலாகவே நடுங்கத் துவங்கிவிட்டான். நீ.. ஏன்.. எப்புடி.. என்று வார்தைகள் கூட வரவில்லை.. வெறும் காத்துதான் வாயிலிருந்து வந்தது. நான் அவனை அதட்டிவிட்டு ஒன்றும் பயமில்லை என்று அவனது அம்மாவுக்கு தெரியாமல் தைரியம் அளித்து விட்டு இருவரையும் பேச வைத்தேன். எங்க பேசினாங்க..ஒரே அழுவாச்சிதான். நான் கடுப்போடு கத்தாத குறையாக அவளை அங்கே இருந்து அப்புறப்படுத்த வேண்டி வந்தது. சனியன்கள் இரண்டு நிமிஷ அழுகைக்காக என்னோட சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையையே கெடுத்துருச்சுகளே என்ற கடுப்பு வேறு.. சரி.. வந்தாச்சு.. பாத்தாச்சு.. ஒப்பாரி வச்சாச்சு.. கிளம்பலாமா.. என்று கொஞ்சம் சிரமப்பட்டு சோடா பாட்டிலில் இருந்து மூடியைப் பிரிக்கிற மாதிரிதான் அவளை அங்கிருந்து ஒரு pop ஒலியுடன் பிரித்து வர வேண்டி வந்தது..

சனியன் அத்தோடு விட்டதா என்றால் இல்லை.. என்னமோ இன்பச் சுற்றுலா வந்தது மாதிரி. வா. உங்க வீட்டுக்குப் போலாம். என்றாள். எனக்கு மனதுக்குள் ஒரு பெரும் பாறை பள்ளத்துக்குள் விழுந்த அதிர்வு.. சும்மா வர மாட்டீங்களா.-? கிளம்புங்க. போலாம் என்றேன் சிடுசிடுப்பாக..

அவளோ சிச்சுவேஷன் புரியாமல். உங்க வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறதுக்கு என்ன பயம்.-? உன் தம்பியை நான் பாத்தும் நாளாச்சு. அப்புடியே உங்க அப்பாம்மாவை பாத்தமாதிரியும் இருக்கும். வா.. என்றாள். உண்மையில் அவள் என் தம்பியைப் பார்த்து அவன் எப்படி படிக்கிறான் என்று கேட்டு அவன் இன்னும் ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸை பாஸ் பண்ணாமல் இருப்பது கண்டு அவனை நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலுகேள்வி கேட்டால் ரொம்ப ரொம்ப சந்தோஷமே.. அதைப் பார்க்க எனக்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.. எப்பவுமே தம்பிகள் நம் வீட்டில் ரொம்ப நல்லவன்களாகவும் பெரிய நல்லபெயர் எடுத்திருப்பவர்களாகவும் அடியே வாங்காதவர்களாகவும் இருப்பதைக் கண்டதில் வருகிற பொறாமைதான் அது. ஆனால் என்ன செய்வது. அந்த கண் கொள்ளாக் காட்சியைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போனால் டைப் டெஸ்ட்டுக்கு நான் ஏன் போகவில்லை என்று கேட்டு கொண்டே போடுவார்களே..

அழகம்மையிடம் இந்த மாதிரி இந்த சந்திப்பால் டைப் டெஸ்ட் நாசமாகப் போயிற்று என்ற தகவலையும் சொல்லவில்லை. சொன்னால் அதற்கு வேறு ஒரு ஒப்பாரியை பார்க்க வேண்டி வரும் என்ற நல்லெண்ணம்தான் காரணம்..

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். கிளம்புவோம் வாங்க என்று அவளை பஸ் ஏறச் செய்வதிலேயே நான் குறியாக இருக்க, அவளோ நான் எங்க வீட்டுக்கு போய் என்னைப் பற்றி அவள் எதாவது வத்தி வைத்துவிடுவாளோ என்று பயப்படுகிறேன் என்று நினைத்து உங்க வீட்டுக்கு போறோம். அப்பா அம்மாவை பாக்குறோம். தம்பி கூட பேசுறோம். அடுத்த அஞ்சாவது நிமிஷம் கிளம்பிர்றோம். நீ சிகரெட் புடிக்கிறதைப் பத்தி எல்லாம் உங்க வீட்டுல சொல்ல மாட்டேன்.. என்று பேரத்தை துவங்கினாள். நீங்க சொல்லாட்டியும் எங்க வீட்டுல தெரியாதாக்கும் என்று கடுப்புடன் சொல்லி எத்தனையோ முயன்றும் அவள் தொடர்ந்து நச்சரிக்கவே வேறு வழியில்லாமல் என்னுடைய டைப் டெஸ்ட் ஹால் டிக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

முதலில் அப்படியே சந்தோஷமாகி, அடப்பாவி.. அப்ஜெக்டிவ் டெஸ்ட் பாஸ் பண்ணி டைப் டெஸ்ட் வரைக்கும் வந்துட்டியா என்று சந்தோஷப்பட்டவள் தேதியைப் பார்த்துவிட்டு அப்படியே அப்செட் ஆனாள். அதற்கு பிறகு நடந்ததை என்னத்துக்கு சொல்லிக்கிட்டு.. அவள் ரொம்ப நாளைக்கு என்னை மன்னிக்கவே இல்லை.. அவ்வளவுதான்..
இப்படியொரு நட்பாகத்தான் இருந்தது அந்த நட்பு. அது நட்பு, பாசம் எல்லாம் தாண்டிய ஒரு பிரியம்.. அவ்வளவுதான்.. அதற்கு மேல் வரையறுக்க அங்கு எதுவும் இல்லை..

திடீரென்று ஓர் அழகற்ற நாளில் அழகு, அவர்களது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தான். காரணம் கேட்டதற்கு அவனது வீட்டில் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னான். எனக்கு வந்ததே கோபம்.. மானாங்காணியாகப் பேசிவிட்டேன்..

கடுமையான வார்த்தைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சாரம் இதுதான் : அழகம்மை காரைக்குடியின் கட்டுப்பாடு மிகுந்த சாதியில்இருந்து வருபவள். அவளுக்கு ஒரு தங்கை வேறு இருக்கிறாள். உன்னை மாதிரி ஒரு பரதேசியை காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டு போனால் அவளுக்குதான் பாதிப்பு அதிகம். அவளது தங்கையின் கல்யாணம் தடைப்படும்.. உனக்கு என்ன ஆம்பிளை தடியனுக்கு.. உன் தங்கைக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. ரெண்டு அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. இதற்கு மேல் நீ காதலித்து கல்யாணம் செய்து கொண்டால்தான் என்ன இல்லை சாமியாராக போனால்தான் என்ன-.? அழகம்மைக்கு இருக்கிற தைரியம் இல்லை என்றால் எதற்காக காதலிக்கிறாய்.. இதை பாடு பொருளாக வைத்து நான் இயற்றிய பாடல்களால் எங்கள் நட்பு முறிந்து போனது. எனக்கு அது பற்றி ஒரு சுக்கு கவலையும் இல்லை.

.
ஆனால் ஒரு வேளை அவன் மட்டும் அழகம்மையை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் இருககிறது வேட்டு என்று சொன்ன எனது சொற்கள் மட்டும் நண்பர்கள் மத்தியில் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொங்கிக் கொண்டே இருந்தது..
அப்புறமும் என் வீட்டுக்குதான் கடிதம் வந்தது. உள்ளே திறந்து பார்த்தேன். தம்புவுக்கு கடிதம் இல்லாத கடித உறை அது. உள்ளே இன்னொரு உறையில் அழகுவுக்கு மட்டும்தான் கடிதம் இருந்தது. அந்தக் கடிதமும்..
ஒட்டப்பட்டு இருந்தது..

அவமானத்தில் நான் கூனிக் குறுகிப் போய்விட்டேன். அழகு என்னை வெறுக்க காரணங்கள் இருந்தன.. அழகம்மை ஏன் என்னை வெறுத்தாள்..? இந்த தம்புவை அவமானப்படுத்த அவளுக்கு எப்படி மனம் வந்தது..? பெரும் துக்கம் என்னை இரவைப் போல் பீடித்துக் கொள்ள நண்பர்களிடம் கொடுத்து அந்த கடிதத்தை அழகுவிடம் கொடுக்கச் சொல்லி விட்டேன். இனிமேல் என் விலாசத்துக்கு கடிதங்கள் வராமல் பார்த்துக கொள்ளுமாறும் சொல்லிவிடச் சொன்னேன்.. பின்ன..? ஒவ்வொரு முறையும் அவமானத்தை யார் சுமப்பதாம்..?

நண்பர்கள் என்னைப் போல் நேர்மையானவர்கள் இல்லை. அல்லது அவர்களது நேர்மைக்கு வேறு அளவுகோல்கள் இருந்தன. நான் கொடுத்து விட்ட கடிதத்தை ஆவியில் பிடித்து பிரித்து உள்ளே இருந்த கடிதத்தின் முக்கியமான வரிகளை மட்டும் ஒரு தனி தாளில் எழுதி வைத்து, (அப்போது ஜெராக்ஸ் என்பது லக்சுரி) பின் கடித உறையை ஒட்டி அழகுவிடம் சேர்ப்பித்து விட்டடார்கள். தனியே எழுதி வைத்ததை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். நான் படிக்கவே மாட்டேன் என்றபோதும் இது முழுக் கடிதம் அல்ல.. கடிதத்தில் உன்னைப் பற்றி இருந்த வரிகள் மட்டும்தான். படி. என வற்புறுத்தி படிக்க வைத்தார்கள்..

அதில்அழகம்மை, தம்பு இவ்வளவு மோசமானவன் என்று நான் நினைக்கவே இல்லை.. அவன் பேசியதாக நீ சொன்னதை எல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. அதை அவனிடம் கேட்காதே என்று வேறு சொல்லிவிட்டாய்.. இப்போது அவனை நினைக்கவே எனக்கு சங்கடமாக உள்ளது.. இனி ஒரு நாளும் நான் அவனிடம் பேசப்போவதே இல்லை.. என்று மட்டும் இருந்தது..

எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. தம்பு சொன்னதாக அழகு அவளிடம் என்ன சொன்னான் என்றும் தெரியவில்லை. அழகம்மையின் பிரியத்தையே அறுக்க வைக்குமளவு மோசமாக சொல்லி இருக்கிறான் என்றால் அதை நான் தெரிந்து கொள்ளவே வேண்டாம் என்றுதான் தோன்றியது.. நண்பர்கள், நடந்ததை விளக்கமாக சொல்லி அழகம்மைக்கு ஒரு கடிதம் போடச் சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. நடந்தவை இப்படியே இருக்க, அவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் போதும். அழகு சொன்னதை அழகம்மையிடம் சொல்லி, அதனால் அவர்களுக்குள் சண்டை வந்து பிரிவு நிகழ்வானேன்.. தம்பு கெட்டவனாகவே இருந்துவிட்டுப் போகிறான். அவர்கள் பிரியக்கூடாது என்று சொல்லிவிட்டான் தம்பு..

அவ்வளவுதான். அப்புறம் காலம் திகுடுதிம்பாக ஓடியது. கால ஓட்டத்தில் நான் அழகுவை அழகம்மையை அவர்களது காதலை தம்புவை எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தேன்.
பின்னர் பல வருடம் கழித்து நண்பர் ஒருவரின் ஆபீசில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் பெரிய தொகையை பேங்க்கில் போட வேண்டும். வேலை பார்ப்பவர்களை அனுப்ப பயமாக இருக்கிறது.. நீ போய் போட்டுவிட்டு வா.. என்று என்னை அனுப்பினார்.. வரிசையில் நின்று பணத்தை கவுண்டருக்குள் நீட்டும்போதுதான் கவனித்தேன். அப்போதுதான் அந்த புது கேஷியரும் என்னை கவனித்தார்.

ஒரு யுகத்தின் மௌனத்தை நான் அப்போதுதான் உணர்ந்தேன். ஒரே ஒரு நொடிதான். மைக்ரோ செக்கண்ட் மௌனந்தான். அவ்வளவுதான் நிகழ்ந்தது. புது கேஷியர் அழகு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கி எண்ணி, சலானில் கையெழுத்து போட்டு என் கையில் கொடுத்தார். தம்புவும் எதுவும் பேசாமல் சலானை வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டான்..

பின்னர்பொதுவான நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது. அழகு, அழகம்மை இருவருமே இப்போது கணவன் மனைவிதான்.
அழகு பேங்க்கில் ஊழியர்- அழகம்மை அரசு ஆசிரியர். இரண்டு குழந்தைகள் வேறாம்..

எனக்கு சந்தோஷமாகவும், மெல்லிய துக்கமாகவும் இருந்தது. எத்தனை கோபம் இருந்திருந்தாலும் திருமணம் என்று அழகம்மை எனக்கு ஒரு தகவலாவது தந்திருக்கலாம் என்றது மனது.. தம்பு தம்பு என்று அவள் அழைத்த ஒலி ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல என் காதோரம் படபடத்து அலைந்தபடி இருந்தது..

ப்ரியம் என்பது என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை..

ஒரு வேளை சொல்லாமலிருப்பதுதான் பிரியம் என்றே எனக்கு மறுபடியும் தோன்றுகிறது..
கல்யாணத்துக்கு சொல்லாமல் இருப்பதையும் சேர்த்துதான் சொல்கிறேன்..

ப்ரியங்களுடன்..
தம்பு என்கிற நந்தன்

face book

நந்தன் ஸ்ரீதரன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் காதலுக்கு கூட இருப்பவர்கள்தான் ஊறுகாய், இது ஒன்றும் புதிதில்லை. காதலே பொய்களின் வேர்களில் விருட்ஷமாவதுதானே. காலம் காலமாய் நடப்பதுதான்.....!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.