Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம்

**பிரபாஅன்பு**

 

அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை.

சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..?

உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுதிவரை போராடிய போர்வீரன் அவன்.என் சந்தோசத்திற்காக எப்படி அவனை என் மனசில் இருந்து தூக்கியெறிய முடியும்..?

சொல்வது சுகம்.செயல்வடிவம் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்.அதேபோல்தான் எனக்கும் அக்கா கல்யாணம் பேசியபோது இருந்தது,
என்னால் முடிந்த அளவு என் பக்க நியாயங்களை எடுத்துக்கூறினேன்.

ஏன் தர்சி நீ இப்படி ஒரு முடிவு எடுக்கிறாய்..?எனக்கு விளங்குது உன் மனநிலை.நீ தடுப்பில இருந்துவந்து இப்ப எவ்வளவு காலம்..?

ஒரு ஆணின் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் குடும்பத்தை கொண்டு செல்வது எவ்வளவு சிரமம் என்டுறது தனிச்சு வாழுற உனக்கு தெரியாமலில்லை.

நாங்கள் உனக்கு எத்தினதடவை கல்யாணம் பேசினம். மறுமணம் செய்யமாட்டன் என்று சொன்னாய்.சரி இப்பதானே வெளிவாழ்க்கைக்கு வந்திருக்கிறாய். கொஞ்சக்காலம் போகட்டும் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையவிட்டு பார்ப்பம் என்றிருந்தம்.

அதுதான் இப்ப கேட்கிறம்.உனக்கு ஒரு துணை கட்டாயம் தேவை,இயக்கம் இருக்கும்போது இருந்த சூழல்வேற,இப்ப இருக்கிற சூழல்வேற,

உனக்கு பேசுற பெடியன் வெளிநாடு,ஒரு பிள்ளை இருக்காம்,கொஞ்சம் குடிக்கிறதாம், அதால மனிசி விட்டிட்டு போட்டாளாம்,மகனும் தாயோட போட்டுதாம்,விவாகரத்து செய்திட்டுதாம் பெடியன்,

2009 க்கு பிறகு எங்கட நாட்டில,போதைப்பொருளும் குடிவகையும்,கலாச்சார சீர்கேடுகளும் தான் அதிகம்,அதை எதிர்த்து யாரும் கதைக்கேலாது,கண்டும் காணாதபோலதான் போகோனும்.சின்னன் சிறுசுகளே போதையில மிதக்குதுகள்.

யதார்த்தமாக யோசி.இயக்கத்துக்கு போகும்போது எதையும் சமாளிப்பன் என்றுதான் போனனி.அதேபோல கல்யாணமும் உன் ஆசைப்படி உன் முடிவோடுதான் நடந்தது.

ஆனால் சூழல் உன்னை காணாமல் போனவனின் மனைவி என்ற நிலைக்கு கொண்டுவந்திட்டுது,சாதாரண பெண்களைவிட போராட்டத்திற்கு போன பெண்களில் கல்யாணம் செய்யாமல் வாழ்பவர்களும் சரி கல்யாணம் செய்த பெண்களாக இருந்தாலும் சரி பிள்ளைகளோட தடுப்புக்கும்போய் ஏராளமான பல கஸ்ரங்களை அனுபவிக்கிறீங்கள்.

அனுபவிச்சுக் கொண்டும் இருக்கிறீங்கள் என்டுறது தெரியுது.யாரும் உன்ன தப்பா பார்ப்பினம் என்று யோசிக்காத,உலகம் மாறிப்போச்சு.

காலநீரோட்டத்தோட நாங்களும் போகோனும்,மற்றவர்கள் எங்களை என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காத,அப்படி கதைப்பவர்கள் தடுப்பால நீ வர உன்னை பார்த்து ஆறுதல் சொன்னவர்களாகவோ அல்லது உனக்கு உதவியவர்களாகவோ இல்லை,நாங்கள் எங்களுக்காகத்தான் வாழவேணும்,

உவான்ர மனிசன் பெரிய தளபதி.நாங்கள் போய் கதைச்சம் என்றால் எங்களுக்கும்தான் ஆபத்து என்று விலகிபோனவேதான் இந்த ஊரில இருக்கினம், நீ பொதுவாழ்க்கை வாழ்ந்தது போதும்,இனி உனக்காக வாழப்பார்,

நீ இந்த சமுதாயத்திற்கு பயந்தால் உன்னால தலைநிமிர்ந்து வாழ ஏலாது.சகோதரங்கள் உன்னை பார்ப்போம்தான்,ஆனால் எங்களுக்கு வயசுபோற காலத்தில நாங்களே பிள்ளைகளிட்ட தங்கிவாழ வேண்டிய நிலையிலதான் நாங்களே இருப்பம்,

அதுதான் உனக்காக இல்லாட்டியும் உன்ர பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேணும். பெண்ணாகப் பிறந்தவளிற்கு ஒரு ஆண் துணை இந்த காலத்தில மிகவும் முக்கியம்,நல்லது கெட்டதை பகிர்ந்து கொள்ள மன ஆறுதலுக்கு தேவை.

சொத்தியோ,குறுடோ.நல்லவனோ,கெட்டவனோ எங்களிற்கு என்று ஒரு துணை வேணும் யோசிச்சுப் பார் .நல்லவங்கள் இல்லாமலில்ல எங்கயோ ஒரு மூலையில உன் மனநிலையை புரிஞ்சு கொள்ளக்கூடிய உன் குடும்ப நிலையை புரிஞ்சுகொள்ளக்கூடிய நல்ல மனசோட எங்கயாவது ஒருத்தன் இருப்பான் என்றா

என் நா...தழுதழுத்தது.கதைக்கவே ஏலாமல் இருந்தது,தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது,கண்ணீரும் ஓடியது,ஆனாலும் அக்காவோடு கதைச்சேன்,

அக்கா நீங்கள் சொல்லுறது புரியுது,ஆனால் எல்லாவற்றிற்கும் மனம் தான் அக்கா காரணம்,மனசில உறுதியும் சுயகட்டுப்பாடு இருந்தால் போதும்.நாங்கள் ஜெயிச்சிடலாம்,

மகள்களிற்கு 12.10 வயது,அதுவும் பெண் பிள்ளைகள்,அதுவும் மூத்தவள் பெரியபிள்ளைஆகுற வயசு.எனக்குவாற துணை எப்படி வருவான் என்பது தெரியாது.

பெற்ற தகப்பனே பிள்ளைகளை சீரழிக்கிறத காலம் இது.எத்தனை சம்பவங்களை நேரடியா பார்க்கிறம்.ஆனால் எல்லோரும் அப்படி இல்லைத்தான்.

நான் மறுமணம் செய்தால், வாற கணவனிற்கு எனக்கு ஒரு குழந்தை பிறந்திட்டா செந்தாளனிற்கு பிறந்த பெண் பிள்ளைகளில வாறவன் வேற்றுமை காட்டக்கூடும்,தன் பிள்ளையிலதான் அவன் பாசம் காட்டுவான், பிள்ளைகள் பிறகு தகப்பனை நினைத்து இன்னும் ஏங்கக்கூடாது.

என்ர பிள்ளைகளை நான் தனிச்சிருந்து 10 வருசமாக எப்படி கண்ணும் கருத்துமா பார்க்கிறன் என்பது உங்களுக்கு தெரியாததா அக்கா..?நான் சாப்பிட்டனோ இல்லையோ என்ர குஞ்சுகள் இரண்டு பேரையும் ஒரு குறையும் இல்லாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறன்.

என்ர பிள்ளைகள் மனம் நோகக்கூடாது,என்னுடைய ஏதோ ஒரு தேவைக்காகவும் சுகத்திற்காகவும் நான் ஒரு புதுவாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பேல அக்கா,எனக்கு என்ர பிள்ளைகள்தான் முக்கியம்.

என் கணவனோடு நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்,கடைசிவரை நான் செந்தாளனின் மனைவியாகத்தான் என் இறுதிக்காலம்வரை வாழ விரும்புறன்,
இன்னொரு வாழ்க்கைக்குப் போய் என் உயிரான காதல்கணவனின் பெயரை அழிக்க நான் விரும்பேல,

என் கணவனின் இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்கும் தைரியமும் எனக்கில்ல, அதேபோல என் மனதில் என்ர செந்தாளனை தவிர யாருக்கும் இடமும் இல்லை,

என்னுடைய மனசெல்லாம் நிறைந்திருக்கின்ற செந்தாளனின் நினைவுகள் போதும், நான் இறக்கும்வரை அவன் தந்த இனிமையான நினைவுகளோடு என் இறுதிக்காலம் வரை வாழ்ந்திட்டு போவன்.

அக்கா என் கதைக்கு பதில்கூட கூறவில்லை, எதுவும் கூறாமலே சென்றுவிட்டா.

2009 க்கு முற்பட்ட காலங்கள் நினைவில் கண்ணீரோடு...

செந்தாளனை நான் 1999 ஆம் ஆண்டு மணலாற்றுப் பகுதியில்தான் சந்தித்திருந்தேன்.சாள்ஸ் அன்ரனி படையணியின் கட்டளை தளபதியாக இருந்தான்.

நான் படையணி மருத்துவ போராளியாக இருந்தேன்.இராணுவத்தினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்,அதில் மகனார்.மகளிர் போராளிகள் இருபாலருமே அந்த இடந்தை கவர்பண்ணி இருந்தார்கள்,

இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களோடு முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்,எமது போராளிகளிற்கும் இடையில் பெரும் மறிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றது.

இராணுவத்தினர் ஏவிய எறிகணை ஒன்று ஆண்களின் பின்களபகுதியில் விழுந்ததில் ஆண்களின் மருத்துவபோராளி வீரச்சாவைத் தழுவியிருந்தான்,

அதனால் நான்தான் ஆண் போராளிகளிற்கும் காயம்கட்டி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல்,என்னை தொலைத்தொடர்பு கருவியில் அழைத்த ஆண் போராளிகளின் பகுதி தளபதி தமது பகுதிக்கு வருமாறு அழைத்தார்.

அங்கு சென்று சண்டையில் காயம் அடைந்த போராளிகளிற்கு தற்காலிக சிகிச்சைகள் செய்து பின்னுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன்,

சண்டை ஓய்ந்ததும்,நான் எனது பகுதிக்கு போகவேணும்.அப்போது அங்குவந்த பகுதி தளபதி தன்பெயர் செந்தாளன் என்ற கூறி தன்னை அறிமுகம் செய்தான்.என் பெயரையும் கேட்டான்,பிறைநிலா என்று கூறினேன்,

அதன் பின்னால சில நாட்களின் பின்பு செந்தாளன் எனது தொலைத்தொடர்பு எண்ணிற்கு தொடர்பு எடுத்து என்னோடு பேசினான்,இப்படியே இருந்திட்டு எப்போதாவது என்னோடு பேசுவான்,

ஒருநாள் என்னிடம் தனது விருப்பத்தைக் கூறினான்,ஆனால் நான் உடன் பதில் கூறவில்லை.எனக்கு விருப்பம் இல்லைப்போல என்று நினைத்து பின்பு கதைக்காமலே விட்டுவிட்டான்.சில காலங்களும் ஓடிவிட்டது.

ஒரு நாள் நான் அம்பகாமம் பகுதியில் நின்றபோதுதான் மீண்டும் அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.என்னை பார்த்தவன் எதுவும் பேசவில்லை.சென்றுவிட்டான்,ஆனால் எனக்கு அது சரியான மனவேதனையாகவே இருந்தது,

எனது தோழி ஒருத்தியின் ஊடாக எனது விருப்பத்தை தெரிவித்தேன்.அதன்பின் அவன் பகுதி தளபதியாக இருந்தபடியால் அவன் தன் விருப்பத்தை தனது சிறப்புத் தளபதியிடம் கூறிவிட்டான்,

செந்தாளனின் வேண்டுகோளின்படி எனது சிறப்புத் தளபதியான துர்க்கா அக்காவிற்கு தெரிவிக்கப்பட்டது.அக்கா என்னைக் கூப்பிட்டு கேட்டவா.சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி தளபதியான செந்தாளன் என்னை விரும்புவதாக கூறியதை சொன்னா,

எனக்கும் விருப்பமா என்று கேட்டா.அவனை மிகவும் பிடித்திருந்தது.என்னைப்போல மிகவும் உயரமானவன் அத்தோடு கறுப்பிலும் அழகான கறுப்பு நிறமானவன்,அவன் செயற்பாடுகூட வித்தியாசமாகவே இருந்தது.

என்னிடம் விருப்பம் கேட்டவன்.நான் பதில்கூறாத காரணத்தினால் எனது சிறப்புத் தளபதியூடாக அணுகியிருந்தான்,அவனது அந்த குணஇயல்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது,

துர்க்காக்காவிடம் எனது விருப்பத்தை கூறிவிட்டு வந்தேன்,ஆனாலும் நாம் இருவரும் கடமையில்தான் முனைப்பாக இருந்தோம்.நானும் மேலதிக மருத்துவக்கற்றலில் இருந்தேன்.செந்தாளனும் போராளிகளிற்கு பயிற்சி நகர்வுகள் கொடுப்பது என்று ஓய்வின்றி இருந்தான்.

சில வேளைகளில் எமது படையணி நிர்வாக வேசிற்கு வந்து அங்கு நிற்கும் போராளிகளோடும் கதைப்பான்.என்னோடும் கதைத்துவிட்டு போவான்,

2004 ஆம் ஆண்டு.09-08 அன்று ஆடம்பரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் திருமணம் நடைபெற்றது .இரண்டு வருடம் மிகவும் அமைதியான வாழ்க்கை,அழகான வாழ்க்கையாக கழிந்தது.

விட்டுக்கொடுப்பென்றால் என்ன அன்பு,பாசம்.புரிந்துணர்வு,பொறுமை என்று எல்லாவற்றையும் செந்தாளனிடமே கற்றுக்கொண்டேன்,களங்களில் சூறாவளியாக சுழலும் இவனால் குடும்பம் என்று வரும்போது இப்படி அமைதியின் இருப்பிடமாக மாறமுடியுமா..?என்று நான் பலதடவை வியந்து நின்றதுண்டு..

களமுனைகளிற்கு போகாதுவிட்டால் மாலைநேரம் எனது தொலைத்தொடர்பு கருவியிற்கு தொடர்பு எடுப்பான் வீட்டிற்கு வருவதாக.அல்லது தொடர்பு எடுக்காதுவிட்டால் எமது முகாமில் மற்ற போராளிகளோடு நான் நின்றுவிடுவேன்,

சமாதான காலத்தின்பின் 2006 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் யுத்தம் தொடங்கியது.அதன்பின் செந்தாளன் பெரிதாக வீடு வருவதில்லை,களமுனையோடு நின்றுவிடுவான்,அப்படி வருவதாக இருந்தால் மாலையில் வருவான்.மறுநாள் மதியம் போய்விடுவான்,

வந்தாலும் வீட்டிற்கு தேவையான சகல வேலைகளும் செய்து வைத்துவிட்டுத்தான் போவான்,விறகு கொத்திஅடுக்கி. வேலிகளை அடைத்து.மண்வெட்டியில தேங்காய் உரித்து வைச்சு வளவெல்லாம் கூட்டி குப்பையெல்லாம் அள்ளுவான்,

பக்கத்து வீட்டில் இருந்த அம்மா கூறுவார். பிள்ளை இப்படி ஒரு ஆம்பிளைப் பிள்ளையை நான் காணேலயடா,நீ கொடுத்து வச்சனி என்று.உண்மையில் எனக்கு அம்மா அப்பா கல்யாணம் பேசி செய்து வைத்திருந்தால் கூட இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்காது,

வாழ்க்கை என்றால் என்ன.வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தந்தான்.நான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.ஆகாயத்தில் பறந்தான் என்றுதான் சொல்லவேணும்

தனக்கொரு புலிக்குட்டி பிறக்க வேணும்.தன்னைப்போல இயக்கமாக இருந்து தான் தவறவிட்ட கடமைகளை அவன் செய்ய வேணும் என்று கூறுவான்,
ஆனால் வெளியில் ஆம்பிளைப்பிள்ளை வேணும் என்று கூறினாளும் பெண் பிள்ளைகள் என்றால் சரியான உயிர்.

அவன் ஆசைப்படி 2006-02-06 அன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனையில் கானருவி பிறந்தாள்,சாதாரணமாக வயிற்றுக்குத்து ஆரம்பிக்கவே தொலைத்தொடர்பு கருவியில் அறிவித்துவிட்டேன்,ஓடோடி வந்தான்,

நான் வயிற்றுக்குத்து வேதனையில் கத்தி அழுது முகம் எல்லாம் வியர்த்துக்கொட்டியிருப்பதைப் பார்த்து கண்கலங்கியபடி தன் கைகளால் என் முகத்தை துடைத்துவிட்டான்.

அழாத நிலா.கொஞ்ச நேரம்தான் சரியாகிடுமம்மா என்று எனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியபடி இருந்தான்.அந்த நேரம்தான் பார்த்தேன்.கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கமா.?என்று,களமுனைகளில் ஆவேசத்தோடு இருக்கும் செந்தாளனா இன்று நான் அழும்போது தாங்க முடியாமல் கண்கலங்கி நிற்பது..?

இப்படி ஒரு கணவன் கிடைக்க நான் முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறன் என்று நினைத்துக்கொண்டேன்,எனக்கு மாலை நேரம் பெண் குழந்தை பிறந்தாள்,மருத்துவமனையிலேயே கானருவி என்று பெயரும் வைத்துவிட்டான்,

கானருவி என்பது செந்தாளனின் அக்காவின் பெயரே,அவரும் போராளியாக இருந்து சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் 1996 ஆம் ஆண்டு கப்டன் கானருவியாக வீரச்சாவை தழுவியிருந்தா,அவரில் செந்தாளனிற்கு மிகுந்த பாசம்.

செந்தாளன் இயக்கத்துக்கு போயிட்டான் என்று அறிஞ்சதும் தான் போறன் தம்பியை வீட்ட போகச்சொல்லி அக்காவும் போட்டாவாம்,ஆனால் செந்தாளன் வீட்டபோக மறுத்ததால இருவரும் அப்படியே இயக்கத்தில இருந்திட்டினம்,

அக்கா வீரச்சாவு அடைந்தது தன்னாலதான் என்று ஒரே சொல்லும் செந்தாளன்,அதனால அக்காவின் பெயரையே மகளுக்கும் வைச்சிட்டார்.

சும்மாவே என்னை வீட்டில் ஒரு வேலையும் செய்யவிடாது,மகள் பிறந்ததோட அதைவிட என்னை தாங்கினான் என்றுதான் கூறவேண்டும்.
களமுனைக்கு சென்றுவிட்டு மாலையில் விட்டிற்கு வந்துவிடுவார்,

அத்தோடு தெரிந்த ஒரு அம்மாவை என்னை பார்க்க கூட்டிவந்து வீட்ட விட்டிருந்தார்.பெற்றது மட்டுமே நான்,தாயாக மாறி என் செல்லபெண்ணை பார்த்தான்,அழுகை என்றாலே என்ன என்று தெரியாமல் எனக்கான நாட்கள் கழிந்தது.

காலங்கள் உறுண்டோடியது மகளிற்கும் இரண்டு வயதும் முடிந்துவிட்டது,மகள் அப்பா செல்லமாக மாறிப்போனாள்,தகப்பனும் கடமைக்கு போவதற்குமுன் மோட்டச்சைக்கிலில மகள ஏற்றி ஒரு சுற்று சுற்றிப்போட்டுத்தான் கொண்டுவந்து இறக்கிப்போட்டு போவார்.எம் மகிழ்வான காலங்கள் உறுண்டோடியபடி இருந்தது,

2008 ஆண்டு மீண்டும் நான் கர்ப்பமானேன், ஆனால் அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் சூழலில் செந்தாளன் இல்லை.களமுனையில் சூழன்றபடி ஓய்வின்றி இருந்தான்,

இருந்திட்டுத்தான் எப்போதாவது வந்துபோவான்.ஆனால் மூத்த மகள் வயிற்றில் இருந்தபோது இருந்த சந்தோசம் இரண்டாவது மகளிற்கு இல்லாமல் போனது.அம்பகாமம் பகுதியில் ஆழஊடுருவும் அணியினரால் வைக்கப்பட்ட கிளைமோரில் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தான்.

அதனாலோ தெரியவில்லை அவன் மனம் குழம்பிப்போய் இருப்பதுபோல் இருந்தான்.ஒரு நாள் வீட்டிற்கு வந்தபோது கேட்டேன் ஏனப்பா இப்படி இருக்கிறீங்கள்..?மனசு சரியில்லையா.?ஏன் சண்டை பக்கத்தால இழப்புகளா என்று.

அதுவும்தான் சூழல் சாதகமாக இல்லை,அதோட உனக்கு வயிற்றிலும் பிள்ளை,அதுதான் யோசிக்கிறன்,எனக்கு என்ன நடந்தாலும் நீயும் போராளிதானே.நிலமையை சமாளிச்சுக்கொள் நிலா,

நான் எப்போதும் ஒரு பொறுப்புள்ள கணவனாகவும் நல்வழிகாட்டியான தந்தையாகவும் இருக்கத்தான் ஆசைப்படுறன். நீ எப்போதும் மனஉறுதியை தவறவிடாதே.

நான்தான் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அருகில் இருக்கோணும் என்று நினைக்காத,என் நிலை உனக்கு நன்றாக புரியும்தானே.உன்னருகில் நான் எப்போதும் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்,கவனம் அம்மா என்பான்,

செந்தாளன் இந்த வார்த்தைகளை இப்போதெல்லாம் அடிக்கடி சொல்லுவான்,களத்தில் தளபதியாக இருக்கும் ஒருவனிற்கு எக்கணமும் காயம் வரலாம் மரணம் வரலாம் .இவற்றை எல்லாம் யோசித்தத்தான் செந்தாளன் இப்படி சொல்லுறான் என்று விளங்கியது.

2009 ஆண்டு தை மாதம் எனக்கும் பிரசவவலி ஏற்பட்டது,செந்தாளனுக்கு அறிவித்தபோது வரவில்லை.களமுனையை விட்டுவரக்கூடிய சூழல் அமையவில்லை.உக்கிரமமாக இருபகுதியிருக்கும் சண்டை நடைபெற்றபடி இருந்தது.

2009-01-27 அன்று இரண்டாவது மகள் கவியரசி பிறந்தாள்.பிறந்த பிள்ளையின் முகத்தையே பார்க்கவரவில்லை செந்தாளன்,இடம்பெயர்வுகள் அடிக்கடி ஏற்பட்டது. நான் எனது இயக்க பணிகளை நிறுத்திவிட்டு அக்காக்களோடுதான் இருந்தேன்,

நாங்கள் கோம்பாவிலில் இருக்கும்போது ஒருநாள் செந்தாளன் மகள் பிறந்ததற்கு பிறகு முதன்முதலாக களமுனையில் இருந்து வந்திருந்தான்.

சரியா மெலிஞ்சு போயிருந்தான்,தாடி தலைமுடி எல்லாம் வளர்ந்திருந்தது.மூத்தவா ஓடிப்போய் தகப்பன்ர மடியில இருந்திட்டா.

இரண்டாவது மகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தான் செல்லமாக கதைத்து பிள்ளைகளோடு விளையாடி மகிழ்ந்தான்,ஒரு திருமணமான ஆணிற்கு இதைவிட வேறுஏது மகிழ்ச்சி..?

நான் பேசினேன்,முதல்ல தலைமுடி,தாடியை குறைச்சிட்டு வாங்கோ என்று.அதன் பிறகுதான் போய் தலைமுடியையும் வெட்டிப்போட்டு வந்தார்.சிலமணி நேரம் நின்றுவிட்டு எங்கள் மூவரையும் கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்,

பிள்ளைகள் இருவரும் சின்னபிள்ளைகள்,அருகில் இருந்த அக்கா குடும்பத்தோடு சேர்ந்து நானும் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து சென்றபடி இருந்தேன்.

ஆனால் செந்தாளனிற்கு சரியாக கவலை,என்னை தனிக்க விட்டிட்டன் என்று,நான் போராளி என் கணவனின் நிலையை நான் உணர்ந்து கொள்ளாமல் வேறு யார் உணர்ந்து கொள்வார்கள்,

நான் தொலைத்தொடர்பு கருவியில் என்னால் முடிந்த அளவு ஆறுதல் கூறினேன்.பிள்ளைகளை நினைத்து கவலைப்படுவதாக கூறினான்.

தந்தைக்கே உரிய கவலை அது,நான் தேற்றினேன்.இருந்திட்டு எப்போதாவது வந்து என்னையும் பிள்ளைகளையும் பார்த்திட்டு போகும் செந்தாளன்,

ஒவ்வொரு இடமாக நகர்ந்து இறுதியாக வட்டுவாகல்வரை வந்துவிட்டோம்.17 ஆம் திகதி மதியம் வரைகாத்திருந்தேன்.தொலைத்தொடர்பு கருவியில் தொடர்பு கொண்டு எங்களோடு வரும்படி கேட்டேன்.

என்ன பிறைநிலா இப்படி கேட்கிறாய்..?என்னென்று நான் இந்த முடிவு எடுக்கிறது.எத்தனை ஆயிரம் மாவீரர்கள் எங்களை நம்பி மடிந்து போய்விட்டார்கள்,அவர்களிற்கு என்ன பதிலை சொல்லப்போறம்.

என்னால வரமுடியாதம்மா.நான் பார்த்து முடிவெடுக்கிறேன்,நீங்கள் அக்காக்களோட பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்கோ என்னைப் பார்த்துக்கொண்டு நிற்காதையுங்கோ என்று மன்றாட்டாகக் கூறினான்,

கட்டிய காதல் கணவனை விட்டுவிட்டு நான் உயிர்வாழ்ந்து என்ன பிரியோசனம்..?நீங்கள் வாங்கோ செந்தாளன் ஆமியுக்க உள்ளபோவம் என்றேன்,

உனக்கு ஆமிக்காறன்ர குணம் தெரியாதோ,அவன் களமுனைகளில சண்டையில பிடிபடுற பெண்போராளி பிள்ளைகளை விட்டுவைக்கிறேல.எத்தினை பிள்ளைகள் வாழ்க்கையை சீரழிச்சவன்,அவன நம்பி எப்படி சரணடையிறது,

பிறைநிலா நீ போ.நான் சூழலை பார்த்து வாறன் என்றான்.போராளிகளின் தளபதிகள் வெள்ளைக்கொடியோடு சரணடையப்போவதாக கிட்டுபீரங்கிப் படையணி இளஞ்செழியன் அண்ணா எம்மை கண்டு கூறினார்,

உடனே செந்தாளனிற்கு தொடர்பெடுத்து கூறினேன் தளபதிமார் புலித்தேவன் அண்ணா.நடேசன் அண்ணா,லோறன்ஸ் ஆக்கள் என்று பலரும் சரணடைய போயினமாம்.நீங்களும் அவயளோட சேர்ந்து வாங்கோ,இனி இவடத்த இருக்கேலாது,நான் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போறன் என்றேன்.

சரி பிறைநிலா.பிள்ளைகள் கவனம் என்று கூறி எங்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போகும்படி கூறினான்.நானும் பிள்ளைகளோட சரணடைஞ்சிட்டன்,

வட்டுவாகலில் தடுத்து வைத்திருந்து முழுமையான உடல் சோதனைக்குப்பின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டுபோய் ஓமந்தையில் இறக்கினாங்கள்,ஏராளமான மக்கள் குவிந்துபோய் இருந்தார்கள்.

ஒருநாள் இயக்கத்தில இருந்தாலும் பறவாயில்லை,இயக்க நிறுவனங்களில் வேலை செய்தாலும் பறவாயில்லை பெயர் விபரத்தை பதிந்துவிட்டு போகும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தார்கள்.

நான் இரண்டு பிள்ளைகளோடும் இருந்தேன்.நான் போனால் பிள்ளைகளை யார் பார்ப்பது..?அப்போது என் அருகில் ஒரு மெல்லிய பொதுநிறமான ஒருத்தன் வந்து நின்றான்.அக்கா எழும்புங்கோ என்றான் என்னைப் பார்த்து,

எனக்கு அவனை எங்கோ பார்த்த நினைவிருந்தாலும் சரியான நினைவில்லை.என்னைத்தான் சொல்கிறானா என்று மனசுக்கு படபடப்பாக இருந்தது,

வடபோர்முனை கட்டளைத்தளபதி செந்தாளனின் மனைவிதானே நீங்கள்.சோதியா படையணிக்கு முதல் மெடிசின் செய்தது நீங்கள்தானே,சரி எழும்பி போங்கோ என்றான்,

எனக்கு தூக்கிவாரிப் போட்டது,நல்ல சுத்த தமிழில் கதைக்கிறான்.உவனுக்கு எப்படி என்னைத் தெரியும்,ஆமிக்காறனுக்கு இப்படி தமிழ் தெரியாதே..? என்று மனதிற்குள் நினைத்து குழம்பிக்கொண்டு நிற்க அக்கா கெதியா எழும்பி போங்கோ என்றான்,

இவன் இயக்கத்தில இருந்து ஆமிக்காறனிட்ட ஓடிப்போனவனா இருக்கோனும்,இல்லாட்டி முஸ்லீம் ஆளாக இருக்கோணும்.உவங்கள் காசுக்காக செய்யிறா வேலையை பாருங்கோ,இனி நான் என்ர பிள்ளைகளை பிரிஞ்சு வாழபோறன் கடவுளே

இனியும் ஒழிஞ்சு போகாம இருக்கேலாது,அம்மா சின்னவள் நித்திரை நீங்கள் இவளை வச்சிருங்கோ,கானருவியை கூட்டிக்கொண்டுபோய் பெயரை பதிஞ்சிட்டு வாறன் என்றிட்டு மூத்தவளையும் கூட்டிக்கொண்டு பெயர் பதியும் இடத்துக்குப் போனன்,

அங்கு ஏராளமான போராளிகள்,இயக்க நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்று பலரும் இருந்தார்கள்,ஒரு நம்பர் தந்து அதிலே விட்டு போட்டோ எடுத்தார்கள்.சரியான நெரிசல்,நீண்டநேரம் காத்திருந்தோம்,

ஒரு மாதிரியாக பெயரை பதிந்துவிட்டேன்,போட்டோ எடுத்தவர்களை ஒரு கரையால் இன்னொரு இடத்தில் கூட்டிச்சென்று இருத்தப்பட்டு மற்ற பக்கத்தில் இருந்த பொதுமக்களிற்கு தெரியாமல் வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள்,

அம்மா பிள்ளையோட வயசுபோன நேரத்தில அந்தரிக்கப்போறா,பால் குடிக்கிற பிள்ளை,ஒழுங்காக சாப்பிட்டால்தானே பிள்ளைக்கு பாலும் கிடைக்கும்,சரியான சாப்பாடு இல்லாதபடியால் தாய்ப்பாலும் இல்லை,பிள்ளை பசியால இரண்டு நாளா அழுதபடிதான் இருந்தவள்,

நித்திரையா இருந்த படியால் அம்மாட்ட பிள்ளையை கொடுத்திட்டு வந்தன்.வரும்போது என்ர செல்லத்த கொண்டே வந்திருக்கலாம் என்று என் மனம் அழுதது,என்னால என்ர பச்சபாலனை விட்டிட்டு போகமுடியேல,.

ஓடிப்போய் ஒரு ஆமிக்காறனிட்ட சொன்னன்,என்ர மகள் அங்காலிப் பக்கத்த அம்மாவோட இருக்கிறா,சின்ன வவா,பால் குடிக்கிறவா என்று.அவனுக்கு தமிழ் தெரியாது.அவனுக்கு மூத்தவள காட்டியும் கதைசொல்லி பார்த்தன்,

அவனுக்கு ஒன்றும் விளங்கேல,என்னை கூட்டிக்கொண்டுபோய் ஒரு பெரியவன்போல் தோற்றமுடைய ஒரு ஆமிக்காறனிட்ட விட்டான்.அவன் தமிழ் தெரிஞ்ச ஒரு புலனாய்வாளனை கூப்பிட்டு கதை கேட்டான்

மகள் பால் குடிக்கிறவா,சின்ன பிள்ளை,பிறந்து கொஞ்சநாள்தான்,அம்மாவோட விட்டிட்டு வந்ததென்று சொன்னன்,புலனாய்வாளன் மொழி பெயர்த்தான்.சரி என்று என்னை ஒரு தனி இடத்தில் இருத்தி வச்சிருந்தார்கள்,

ஆனால் சிலமணி நேரத்தில் இன்னொரு இராணுவ பொறுப்பாளரால் நான் வேறொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு பூந்தோட்டம் கொண்டு செல்லப்பட்டேன்.

என் குழந்தை பசியோடு என் வயதுபோன தாயாரோடு வவுனியா முகாம் சென்றது,என் கணவனின் நிலைப்பாடும் தெரியாது,என் மூத்த மகள் என்னோடு,என் குடும்பமே சின்னாபின்னமாகிப்போனது,

என்னால் நின்மதியாக இருக்க முடியேல,மார்பில் பால் சுரந்த போதெல்லாம் என் மகளை நினைத்து அழுதழுதே களைச்சுப்போய் சரியான சாப்பாடுமின்றி மயங்கி விழுந்தேன்,

அம்மா வயசுபோன நேரத்தில என்ன செய்வா..?என் மகள் பிறந்து மூன்று மாதம்தான்,பால் குடிக்கிற பிள்ளையையும் தாயையும் பிரித்துக்கொண்டு வந்த வச்சிருக்கிறாங்கள் படுபாவியல்.

என்ர பச்சபுள்ள சாப்பாடில்லாம என்ன பாடுபடப்போகுது,என்னால நின்மதியாக இருக்க முடியாம போட்டுது.செந்தாளன் சரணடைந்தானா..?இல்லையா..?என்று தெரியாது,சின்ன மகளின் நிலைப்பாடும் தெரியாது.

செந்தாளன் சரணடைந்திருக்க வேணும் என்று ஏங்கினேன்.கடவுளே என்ர புருசன என்னிட்ட கொண்டுவந்து தா.நான் இரண்டு பிள்ளைகளோட எவளவு கஸ்ரப்படப்போறன்,
போராட்ட வாழ்க்கைக்குள்ள வாழ்ந்த எமக்கு, இனி வெளிவாழ்க்கை எப்படி அமையப்போகுதென்ற ஏக்கம்,

மூத்தமகளும் தகப்பனை கேட்டு அழுதபடி இருந்தாள்.எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் போனது,சில மாதங்களின்பின் கடிதம் எழுதி அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது,

அதன் பின்பே ஆண்போராளிகள் இருந்த முகாம்களுக்கு செந்தாளனின் பெயரைப்போட்டு கடிதம் அனுப்பினேன் எந்தவித பதிலும் இல்லை, ஆனால் அம்மா அனுப்பிய கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது,

தாங்கள் நலமாக இருப்பதாகவும் சின்னவள் என்ன விட்டுபிரிஞ்ச பிறகு பாலுக்கு அழுததாகவும் சுடுதண்ணியை கொதிக்க வச்சு ஆறவிட்டு அந்த தண்ணீரை குடிக்க கொடுத்தே பசியாற்றியதாகவும் முகாமில் கொடுக்கும் சோற்றை நசித்துப்போட்டு சுட்டாறின தண்ணியில கலந்து பருக்கியதாகவும்,

முதல் கொஞ்ச நாளாஒரே அழுகையாம்,சாப்பிடவும் மாட்டுதாம்,கரைத்து பருக்க பெட்டிமா கூட இல்லை.அதற்குப் பிறகு முகாமுக்கு பொறுப்பாக இருந்த ஆமிக்காறனுக்கு தெரியப்படுத்தினபிறகு தானாம் வெளிய மா வாங்க விட்டதாம்,

அதுவும் ஏதோ நல்ல காலத்துக்கு பெரியம்மா வவுனியாவில இருந்த படியால் கடிதம்போட அவாவந்து பார்த்திட்டு குழந்தைப் பிள்ளையளுக்கு பருக்கிற மா வாங்கிவந்து கொடுத்தவாவாம்.என்று நிறைய எழுதி இருந்தா.

மாதங்களும் உறண்டோடியது,செந்தாளனின் நிலைப்பாடு தெரியாது,பெரும்பாலும் வெள்ளைக்கொடியோடு சரணடையபோனவர்களோடுதான் சென்றிருப்பான் என்று தெரியும்,

மூத்தமகள் தகப்பனையும் தங்கையையும் கேட்டபடி இருப்பாள்.என்னால் எதுவும் கூறமுடிவதில்லை.மௌனமாகவே இருந்து கண்ணீரோடே தடுப்பில் இருந்த காலத்தை நகர்த்தினேன்.

செந்தாளன் எங்க இருந்தாலும் உயிரோட ஆரோக்கியத்தோட இருந்தால் போதும் என்று மனம் ஏங்கியபடி இருக்கும்,நின்மதி என்பதே ஒரு துளிகூட இல்லாத நிலை.சாப்பிடுவதுகூட உடலில் ஒட்டாது,ஏக்கம் பலமடங்காகி இருந்தது.

சில மாதங்கள் போக பார்வையிடவந்த உறவுகள் பட்டியலில் என் பெயர் கூப்பிட்டபோது யார் என்னை பார்க்க வந்தது என்று தெரியாமல் இருந்தது.யார் பார்க்க வந்திருப்பார்கள்..?என்று ஏக்கமாக இருந்தது.

அங்கு கம்பிக்கூட்டடிக்கு போனபோதுதான் தெரிந்தது,அம்மாதான் என் சின்ன செல்லமகளோடு பார்க்க வந்திருக்கிறா என்று.என்ர குட்டியை தூக்க ஓடிப்போனேன்.ஆனால் ஆமிக்காறி என்னை பிடிச்சிட்டாள்,

ஓடரின்படிதான் பார்க்கலாம் என்று.தாய்மை உணர்வை எப்படி அவர்களிற்கு புரியவைக்க முடியும் என்னால்..?பெற்ற வயிறு துடித்தது.பொறுமை இழந்து நின்றேன்.

கால்கள் நிலத்தில் நிற்கவில்லை,நெஞ்சுக்குள் இன்பமான வலிதோன்றியது.கண்களில் இருந்து கண்ணீர் ஓடியபடி இருந்தது,கைகளால் கண்ணீரை துடைத்தபடி இருந்தேன்,எனக்கான நேரம் வந்தபோது போனேன்,

என் மகள் என்னை மறந்திருந்தாள்,உண்மையில் அவளைவிட்டு நான் பிரியும்போது மூன்று மாதமே முழுமையாக முடிந்திருந்தது.ஓடிச்சென்று வாரி அணைத்து முத்தமழை பொழிந்தேன்.என் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டேன்,

மகள் அழத்தொடங்கிட்டாள்.ஆமிக்காறி பேசிக்கொண்டிருந்தாள்.என் குழந்தை அழுவதால் மற்றவர்கள் கதைக்க முடியாமல் இருக்குதென்று.அம்மா என்னிட்ட கேட்டா பிள்ளை அழுகுது,என்னிட்ட தா என்று,நான் பெற்ற செல்வத்தை விருப்பமின்றி அம்மாவிடம் கொடுத்தேன்.இந்த நிலை இனி எந்த தாயிற்கும் வரக்கூடாது என்று அழுதேன்,

அம்மாவோடு வந்த என் செல்ல குட்டிமகள் என் முகத்தைக்கூட பார்க்க மறுத்தாள்.என்னை புதிதாக யாரோ தன்னை தூக்குகிறார்கள் என்றுதான் கதறி அழுதாள்,நான் பத்து மாதம் சுமந்த பிள்ளை. பிறந்தும் மூன்று மாதம் வரை என் அணைப்பின் கதகதப்பில் வாழ்ந்தவள்.

என்னை கண்டு அழுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.என்னிடம் இருந்து அழுத என் மகளை எனது அம்மா வாங்கிக்கொண்டா,அது என்னோட இருக்கிற படியால்தான் பிள்ளை அழுகுது வேறயாரோ என்று.

நீ தடுப்பால வந்ததும் பிள்ளை உன்னோட வந்து அணைஞ்சிடும் யோசிக்காத என்றா என் ஆறுதலுக்கு,மூத்தமகளிற்கு தங்கையை பார்த்தது பெரிய மகிழ்ச்சி.கட்டிப்பிடிச்சு கொஞ்சினா,ஆனால் சின்னவா வீரிட்டு அழத்தொடங்கிட்டா.

அம்மா ஒருக்கா என்ர பிள்ளையை தாங்கோ .நான் பால்கொடுத்திட்டு தாறன்.என்ர செல்லத்துக்கு நான் பால்கொடுக்கோணும் அம்மா.என்று மகளை முட்கம்பிக்கு மேலால தூக்கி எடுத்தேன்,ஆனால் அவள் என் முகத்தையே மறந்திருந்தபடியால் பால்குடிக்க மாட்டான் என்றிட்டாள்.

அம்மாச்சி நான் உன்ர அம்மாவடா நான் உன்னை பத்துமாதம் சுமந்து பெற்றதாயடா.அம்மான்ர முகத்தை ஒருதடவை பாரடா செல்லம் என்று அவள் முகத்தை தடவி அழுதேன்,

ஆனால் என் மகள் என் முகத்தை பார்க்காது என் அம்மாவின் சாறியைப் பிடித்து இழுத்து வீறிட்டு அழுதாள்.

இப்படியான ஒரு நிலையை தாங்கமுடியாமல் அழுதேன்.என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அம்மா பிள்ளைக்கு செந்தாளன்ர மூக்கும் வாயுமம்மா சரியா தகப்பனை போலவே இருக்கிறாள்.

துக்கம் தொண்டையை அடைக்க நா தட்டுதடுமாற கூறினேன்
அம்மாவிற்கு சரியான கவலை சரி பிள்ளை அழாத என்று தேற்றினா.

பார்வையாளர் நேரம் என்பது பத்து நிமிடமே,நேரம் முடிந்துவிட்டது,ஆமிக்காற பெண்கள் வந்தவர்களை வெளியேற்றினார்கள்,என் சின்ன மகளை அணைத்து ஆசையாக முத்தமிட்டேன்,கள்ளக்குட்டி நான்தான்டி உன்னபெத்த அம்மா என்று கட்டி அணைத்தேன்,

அந்த அணைப்பை விலக்கவே முடியவில்லை,என் மார்பு துடித்தது,என் வயிறும் மனசும் பலமாதங்களிற்குப் பிறகு குளிர்ந்தது என்றுதான் கூறவேண்டும்,என்ர மகளைவிட மனம் வரேல,என்னோடயே வைத்திருக்கவேணும் போல இருந்தது,

ஆமிக்காறியிடம் ஓடிப்போய் சொன்னேன்,என்ர மகள்தான் இவா,நான் வாங்கி என்னோட வச்சிருக்கப்போறன் பிள்ளையை வாங்கிறன் என்டன்,அவளுக்கு தமிழ் விளங்கேல.பிறகு போராளிகளை பார்க்க வந்த வெளி நபர் ஒருவர்தான் மொழிபெயர்ப்பு செய்தார்.

ஆனால் ஆமிக்காறி அது றூல்ஸ் இல்லை,உள்ள இருப்பவர்கள் தவிர வெளியில் இருந்து யாரும் உள்ள வரேலாது.யன்ட யன்ட (போங்க போங்க) என்று துரத்தினாள் எல்லோரையும்..

அழுதபடி என் இருப்பிடத்துக்கு வந்தேன்,நடைப்பிணமாக நடமாடினேன்,மகளின் பிரிவும் கணவன் பற்றிய தகவலும் இல்லாமல் உயிர்வதைப்பட்டேன்.

தூக்கம் தொலைந்து போனது,இரண்டுவாய் உணவைத்தவிர மேலதிகமாக ஒரு வாய் உணவுகூட இறங்க மறுத்தது.நீ உன்ர பிள்ளைகளிற்காக வாழவேணும் சாப்பிடு,யோசிக்காத என்று என் போராட்ட சகோதரிகள் ஆறுதல் கூறுவார்கள்.

இப்படியே காலங்கள் உறுண்டோடியபடி இருந்தது.அம்மாவும் சின்னமகளும் செட்டிக்குளம்அகதிகள் முகாமில் இருந்து எங்களை வந்து இடைக்கிடை பார்த்துவிட்டுப் போவார்கள்.ஆனால் செந்தாளனின் தொடர்புதான் இறுதிவரை கிடைக்கேல,

அம்மாவும் முகாமில் இருந்து கிளிநொச்சி திருநகர் போயிட்டா.அம்மாபோய் சில மாதங்களின்பின் ஒன்றரை வருட புனர்வாழ்வை முடித்து நான் தடுப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்,என் காதல் கணவனது நிலைப்பாடு இறுதிவரை தெரியாமலே போனது.

வெள்ளைக்கொடியோடு சரணடைந்த அனைவரையும் இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டதாக கூறப்பபட்டது.பல புகைப்படங்களும் ஆதாரமாக பத்திரிகைகளில் வெளிவந்தது,ஆனால் செந்தாளனின் புகைப்படம் அதிலவரேல.

என் கணவன் இறந்துவிட்டான் என்று நம்புவதா..?அல்லது எங்காவது இருப்பான் என்று நம்புவதா..?கண்ணீர் மட்டுமே சொந்தமாகிப்போனது,

வீட்டிற்குப்போன போது வீடு செல் விழுந்திருந்ததில் தரைமட்டமாக இருந்தது,தற்காலிக தறப்பாள் கொட்டில் போட்டுத்தான் இருந்தேன்.அம்மா எனக்கு மிகவும் உதவியாக இருந்தா.

கிளிநொச்சி ரவுனுக்க டொக்டர் பரணிதரன் பிறைவேற்றாக"தனியார்" கிளினிக் போட்டு நடத்தினார் நான் இயக்கத்தில இருக்கேக்க மருத்துவம் படிச்சிருந்தபடியால் அவரிற்கு உதவியாளராக பணியாற்றினேன்.அதில்வரும் சம்பளம் ஓரளவு என் குடும்ப சுமையை குறைக்க உதவியது,

அத்தோடு கோழி வளர்த்தன்.அதில வரும் வருமானத்தையும் வைத்து என் அம்மா,எனது இரண்டு பிள்ளைகளையும் பார்த்தன்,அக்காக்கள் அம்மாவை தங்களோடு வந்து இருக்க கூப்பிட்டார்கள்,அம்மா போகமாட்டன் என்றிட்டா,

என்ர மருமகன் போகேக்க என்னிட்ட சொல்லிப்போட்டுத் போனது,மாமி பிறைநிலாவையும் பிள்ளைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கோ என்று,அதால நான் நிரந்தரமா கண்ண மூடும்வரை பிள்ளையோடயே இருக்கிறன் என்றுகூறி என்னோடயே இருந்திட்டா,

அதோட சின்ன மகள் என்ர அம்மாவோடதான் தூங்குவாள்,அவளுக்கு நினைவு ஓரளவு தெரிய வரும்போது அவளை வளர்த்தது என்ரஅம்மாதான், நான் தடுப்புக்கு போனபடியால் என்ர பிள்ளை ஒன்றரை வருடமாக என்னோட இருக்கேல,அதால பெரிசா என்னோட ஒட்டிக்கொள்ளமாட்டா.

சில மாதங்களின் பின் வீட்டுத்திட்டம் தந்தார்கள்,அத்திவாரம் போட்டு காட்டினால்தான் மிச்சம் தருவோம் என்று. தெரிந்தவர்களிடமும் அக்காக்களிடமும் கடன்வாங்கித்தான் கட்டினேன்,

ஓரளவு வேலைகள் முடித்தேன்.முழுமையாக வேலைகள் முடியேல,பூச்சுவேலைகள், யன்னல் வேலைகள் இப்பவும் முடிக்கேல,ஆறுதலாக பார்த்துக்கொள்வோம் என்று விட்டிட்டன்,

இயக்கத்தில இருக்கும்போது நான் கற்றுக்கொண்டதுதான் இன்று ஒருவாய் உணவு உண்ண உதவுது,

பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வேணும்,உடுப்பு செலவு.சாப்பாட்டுச் செலவு என்று ஏராளமான தேவைகள்,நான் சரியான சாப்பாடு தண்ணிவென்னி இல்லாம யோசனையோட சக்கரமாக சுழல்வதை பார்த்துத்தான் கல்யாணம் பேசினவா அக்கா.வாழ வேண்டிய வயசில வாழாவெட்டியாக இருக்காத என்று கூறினா,

என் கணவன் போராளியாகவும் ஒரு படையணியில் தளபதியாகவும் இருந்தவன்,அவன் போராளியாக இருக்கும்போது அவனிற்கு இருந்த மரியாதை இப்போது என் கையில்தான் இருக்கு,என் புருசன் ஒழுக்கம் நிறைந்த கண்ணியவான்.

நான்விடும் சிறுதவறுகூட என் கணவனையே சாரும்.நான் தவறிழைத்தால் எல்லோரும் என் கணவனை இழுத்துத்தான் கதைப்பார்கள்,

செந்தாளனின் மனைவியா..?என்று. யாரும் என் கணவனின் பெயரை விமர்சனம் செய்வதை நான் விரும்பேல.நானும் போராளி எனக்கும் என் தலைவன் ஊட்டிய வீரமும்,.துணிவும்.ஒழுக்கமும் இருக்கு,

ஒன்றரை வருடமாக மகளோடு தடுப்பில் பொழுதைக்கழிச்சன்.தடுப்பால வந்தும் இவளவு காலம் என்ர வாழ்க்கையை நான்தான் பார்த்தன். எனக்கு இனி நடக்கப்போவதொன்றும் சுமையாகப்படாது.தீட்டத்தீட்ட கத்தி கூர்பெறுவதுபோலதான் நானும்.என்னை புடம்போட்டு வச்சிருக்கிறன்.

நான் என் மகள்களை நல்லவடிவாகப் படிப்பித்து சமூகத்தில ஒரு நல்ல ஆளுமைமிக்கவர்களாக வளர்த்தெடுப்பன்.அதுதான் இப்ப எனக்கு மனசில இருக்கிற ஒரு ஆசையும் கனவும்,

வெளிநாட்டு சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு... என் கழுத்தில் தாலிகட்டிய ஓர் உன்னதமான போர்வீரனின் பெயரை நான் களங்கப்படுத்த விரும்பேல,மன உறுதியும் சுயகட்டுப்பாடும் இருந்தால் நாம் வாழ்க்கையில நின்மதியாக வாழலாம்,வயதும் ஓரளவு போட்டுது.இனி என்ன புதுவாழ்க்கை.

என் கணவனின் ஆசைப்படி சமூகத்தில் என் பிள்ளைகளை ஆளுமைமிக்கவர்களாக சிறந்த பிள்ளைகளாக வளர்த்தெடுப்பன், காணாமல்போன என் கணவன் என்னிடம் கூறிய இறுதி ஆசையை நிறைவேற்றுவேன்.இதைவிட எனக்கு வேறு சந்தோசம் வேண்டாம்.
 

https://www.tamilarul.net/2019/11/24_29.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இரண்டு  வரிகளில் (அநேகமானவை) கதை நகர்கிறது. வரிக்கு வரி வாசிக்கும் போது மனது வலிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல , சொல்ல எதுவுமில்லை.....தர்சி போன்ற பெண்கள்தான் தேசத்தின் விதைமணிகள்......!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.