Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழி சிவபூமி அருங்காட்சியகம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான தமிழர்களின் தற்காப்புக் கவசமா?

Featured Replies

Jaffna-Sivapoomi-Museum-in-Jaffna-4-700x450.jpg

கடந்த ஆண்டு யாழ். டான் தொலைக்காட்சி, அந்த ஆண்டுக்கான டான் விருதை ஆறு திருமுருகனுக்கு வழங்கிய போது அந்த விருது வழங்கும் வைபவத்தில் எனக்கருகில் இருந்த ஒரு மூத்த சிவில் அதிகாரி ஒரு கருத்தைக் கேட்டார்.

“இந்த விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்படுகிறது. அவரை ஒரு சமயச் சொற்பொழிவாளராகத்தான் தமிழ் சமூகம் அதிகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கும் அப்பால் அவர் முதியோர் பராமரிப்பு, அனாதை சிறார்கள் பராமரிப்பு போன்ற துறைகளில் தமிழில் முன் உதாரணம் மிக்க பல செயல்களைச் செய்திருக்கிறார்.

இவற்றுக்கும் அப்பால் அவர் ஒரு காரியத்தையும் செய்திருக்கிறார். நாவற்குழியில் அவர் கட்டியிருக்கும் திருவாசக அரண்மனை தான் அது.

அந்த அரண்மனையை வெறுமனே ஒரு மதம் சார் மண்டபமாக நாங்கள் பார்க்கத் தேவையில்லை அதற்கும் அப்பால் அதற்கு ஓர் ஆழமான அரசியல் பரிமாணம் இருக்கிறது. நாவற்குழியில் அரசாங்கம் ஒரு விகாரையைக் கட்டியெழுப்பி வருகிறது. அந்த இடத்தில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அடாத்தாக குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியிருப்புக்கான வழிபாட்டு இடமாகத்தான் அந்த விகாரை கட்டப்பட்டு வருகிறது.

இப்படிப் பார்த்தால் அந்த விகாரையானது ஒரு மரபுரிமை யுத்தத்தின் வெளிப்பாடு. யுத்தத்தை அரசாங்கம் வேறு வழிகளில் தொடர்கிறது என்பதற்கு அதுவும் ஓர் உதாரணம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் மிக்க இடத்தில் அந்த விகாரையில் இருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் இந்த திருவாசக அரண்மனை அமைந்திருக்கிறது.

Jaffna-Sivapoomi-Museum-in-Jaffna-5.jpg

அந்த விகாரைக்கு சிங்கள யாத்திரிகர்கள் வருவதைப் போலவே சிங்கள உல்லாசப் பயணிகள் வருவதைப் போலவே இந்த திருவாசக அரண்மனைக்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் வந்து போகிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்களும் திருவாசக அரண்மனைக்கு வந்து போகிறார்கள்.

இப்படிப் பார்த்தால் தமிழ் தரப்பில் சிங்கள-பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தற்காப்பு கவசமாக இந்த திருவாசக அரண்மனையை எடுத்துக்கொள்ளலாமா?” என்று அவர் என்னிடம் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டது சரிதான் என்பதனை திருவாசக அரண்மனை திறக்கப்பட்ட முதலாவது ஆண்டு விழாவை கொண்டாடிய போது நிரூபிக்கப்பட்டது. திருவாசக அரண்மனை அதன் முதலாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அதே நாளில் பௌத்த விகாரையில் விசேட பிரித் ஒதும் வைபவமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஒரே நாளில் சில நூறு மீற்றர் தொலைவில் உள்ள இவ்விரண்டு இடங்களிலும் ஒலிபெருக்கிகள் ஒரேநேரத்தில் ஒலித்தன. அது அங்கு ஒரு மோதல் இருப்பதைக் காட்டியது. திருவாசக அரண்மனைக்கு மதம் கடந்து ஓர் அரசியல் பரிமாணம் இருப்பதனை அது காட்டியது.

Jaffna-Thiruvasaha-Hall.jpg

கடந்த கிழமை திருவாசக அரண்மனைக்கு எதிர்த் திசையில் சிவபூமி யாழ்ப்பாண அருங்காட்சியகத்தை ஆறு திருமுருகன் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

அந்த அருங்காட்சியகம் தொடர்பாக எனக்கு சில கேள்விகள் உண்டு. எனினும் அக்கேள்விகளுக்கும் அப்பால் நான் முன்பு சொன்ன அந்த மூத்த சிவில் அதிகாரி கூறியது போல அங்கே ஒரு மரபுரிமை தற்காப்பு யுத்தமும் இருக்கிறது.

முதலில் அந்த அருங்காட்சியகம் தொடர்பான எனது கேள்விகளைப் பார்க்கலாம்,

முதலாவது கேள்வி, ஒரு அரசத் தரப்பு அருங்காட்சியகத்தை உருவாக்கும் பொழுது அங்கே அரச வளம் முழுவதும் கொட்டப்பட்டு அது அந்த நாட்டின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு தலமாக கட்டியெழுப்பப்படும்.

ஆனால் அரசு இல்லாத தரப்பு அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் கட்டும்போது அதற்கென்று வரையறைகள் உண்டு. இதுதொடர்பான உலகளாவிய அனுபவங்களை உள்வாங்கி மேற்படி அருங்காட்சியகம் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டதா?

இரண்டாவது கேள்வி, ஒரு அருங்காட்சியகத்தை கட்டியெழுப்பும் போது அங்கே மரபைப் பேணுவது என்பதற்கும் அப்பால் அதை எப்படிப் பேணப்போகிறோம் என்பது தொடர்பாக உலகளாவிய அனுபவங்கள் கிரகித்துக் கொள்ளப்பட்டனவா?

அதாவது ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களைப் பேணுவது என்பது நவீனமானதாக அமைய வேண்டும். அவ்வாறு மரபுரிமைச் சின்னங்களைப் பேணும் ஒரு அருங்காட்சியகம் நவீனமாக வடிவமைக்கப்பட வேண்டும். மேற்படி அருங்காட்சியகம் அவ்வாறு நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா?

ஒரு சமூகத்தின் மரபுரிமை என்று வரும்போது அந்த அருங்காட்சியகம் ஆனது தமிழ் தேசியத்தின் பல்வகைமையைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். இன்னும் ஆழமாகச் சொன்னால் தமிழ் தேசியத்தின் ஜனநாயக இதயத்தின் செழிப்பை அது வெளிக்காட்ட வேண்டும். இந்த விடயம் மேற்படி அருங்காட்சியகத்தைக் கட்டியெழுப்பும் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா?

Jaffna-Sivapoomi-Museum-in-Jaffna.jpg

மேற்படி கேள்விகளுக்கு விடை காணும்போது இனிவரும் காலங்களில் கட்டுப்படக்கூடிய அருங்காட்சியகங்கள் அவற்றுக்கான முழுமையோடு உருவாக்கப்பட வேண்டும்.

சிவபூமி அறக்கட்டளை உருவாக்கியிருக்கும் மேற்படி அறக்கட்டளையானது பெருமளவுக்கு ஆறு திருமுருகன் என்ற ஒரு தனி மனிதனின் உழைப்பு தான் இதில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதாக அவர் கூறுகிறார்.

குறிப்பாக ஓவியங்களை வரையும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையின் ஆலோசனைகள் பெறப்பட்டு இருப்பதோடு அந்த ஓவியங்களை படைத்ததும் மேற்கூறிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களுமே என்று அறிய முடிகிறது. எனவே இது விடயத்தில் மேற்படி அருங்காட்சியகம் ஒரு துறை துறைசார் நிபுணத்துவம் பெற்று இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதைப்போலவே சிற்பங்களை வடிவமைக்கும் போதும் அதற்குரிய துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதா?

ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களை பேணுவது என்பது ஒரே நேரத்தில் ஒரு பண்பாட்டுச் செயற்பாடும் அரசியல் செயற்பாடும் ஆகும். குறிப்பாக இன்னொரு பெரிய சமூகத்தின் மரபுரிமை ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் ஒரு சிறிய சமூகத்தைப் பொருத்தவரை அதுவும் அரசற்ற தரப்பாக உள்ள ஒரு சமூகத்தைப் பொருத்தவரை மரபுரிமை பேணுகை எனப்படுவது அதற்கான வரலாற்று விழிப்போடும் பண்பாட்டு விழிப்போடும் அழகியல் விழிப்போடும் அரசியல் விழிபோடும் மிக நவீனமானதாகவும் திட்டமிடப்பட வேண்டும்.

அதாவது அது பல துறைசார் நிபுணர்களின் கூட்டு நடவடிக்கையாக அமைய வேண்டும். அந்தந்தத் துறைக்கு உரிய நிபுணர்களின் துறைசார் நிபுணத்துவம் பெறப்பட்டு ஒரு கூட்டு உழைப்பாக அது உருவாக்கப்பட வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சுவர் ஓவிய அலையைப் போல அது துறைசார் நிபுணத்துவத்தைப் புறந்தள்ளிவிட்டு முழுக்க முழுக்க ஜனரஞ்சக தளத்தில் முன்னெடுக்கப்படும் ஜனரஞ்சக நடவடிக்கையாக மட்டும் குறுக்கக் கூடாது.

Jaffna-Sivapoomi-Museum-in-Jaffna-3.jpg

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆகிய ஆறு திருமுருகனின் தனிநபர் உழைப்பை இக்கட்டுரை போற்றுகிறது. அதேசமயம் நாவற்குழியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மரபுரிமை மோதலை அரசற்ற தரப்பு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

தனிய ஒரு ஆறு திருமுருகனின் தலையில் மட்டும் சுமத்திவிட்டு சமூகத்தின் ஏனைய பொறுப்புமிக்க புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் அவர் திறந்து வைக்கும் அருங்காட்சியகத்தில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டுவிட்டு அதைப் பாராட்டினால் மட்டும் போதுமா?

அதற்கும் அப்பால் இதுபோன்ற மரபுரிமை மோதல்கள் நடக்கும் எல்லா இடங்களிலும் தமிழ் மக்களின் மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு யுத்தத்தை தமிழ் தேசியத்தின் ஜனநாயக செழிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உலகின் ஏனைய அரசற்ற தரப்புகளின் அனுபவங்களையும் உள்வாங்கிய ஒரு நவீன செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.

ராஜபக்ஷக்களின் இரண்டாவது ஆட்சியானது யுத்தத்தை மேலும் புதிய வழிகளில் தொடரக்கூடும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு வந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கமானது ஆயிரம் பௌத்த விகாரைகளைக் கட்டித் தருவேன் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.

ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் நின்ற சஜித் பிரேமதாசவே அவருடைய அமைச்சின் நிதியில் நாவற்குழி விகாரையைக் கட்டினார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. எனவே சிங்கள, பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை ராஜபக்ஷக்களும் நல்லாட்சிக்காரர்களும் ஒன்றுதான்.

அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் களமும் ஏறக்குறைய சற்று முன்பின்னாகத்தான் வரப்போகின்றன. ஜெனிவா கூட்டத் தொடரில் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மோதலை முன்னெடுப்பதன் மூலம் உள்நாட்டில் இன ரீதியாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு ராஜபக்ஷக்கள் முயற்சிக்கக் கூடும்.

எனவே மரபுரிமை ஆக்கிரமிப்பு எனப்படுவது இனிவரும் காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்பட்ட வடிவங்களில் முன்னரை விட தீவிரமான விதங்களில் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகம் தெரிகின்றன. அப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் நாவற்குழியில் திறக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு. ஓர் அரசியல் முக்கியத்துவம் உண்டு. ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் உண்டு.

அரசு இல்லாத தரப்பாகிய தமிழ் தரப்பு தனது மரபுரிமைச் சொத்துக்களையும் செழிப்பையும் தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து எப்படிப் பேணுவது என்பதனை துறைசார் நிபுணத்துவத்தோடும் அழகியல் உணர்வோடும் நவீனமானதாகவும் திட்டமிட வேண்டும்.

http://athavannews.com/நாவற்குழி-அருங்காட்சியக/

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் எடுத்த புத்தில் பாம்பு குடிகொள்ளாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புமுள்ளது.      இதுக்கு மேலால் என்ன செய்யலாம் என்று திட்டம் போடுவான் சிங்களவன்.

ஆறுதிருமுருகனின் முயற்சி முழுமையாக பாராட்டுக்கு உரியது.

ஆறுதிருமுருகன் சில விமர்சனங்களை கவனத்தில் கொண்டு நீண்டகால நோக்கில் சிந்திக்க வேண்டியவராக உள்ளார்.
(1) பல நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைத்திருக்கலாம். முக்கியமாக கணிசமான மலைக்கும் வெள்ளம் தேங்கக் கூடிய பகுதியில் இரண்டு கட்டிடங்களும் நிலமட்டத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது பாரதூரமான குறைபாடு.
(2) ஆறுதிருமுருகன் பொதுமக்களிடம் நிதியை சேகரித்தாலும் குடும்ப உறுப்பினர்களையே முக்கிய நிர்வாகங்களில் நுழைத்து வைத்துள்ளது, அவரது காலத்துக்கு பின்னர் சிக்கலிலும் சர்ச்சைகளிலும்  முடியும்.

இவற்றுக்கு அப்பால் ஆறுதிருமுருகனின் முயற்சி முழுமையாக பாராட்டுக்கு உரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.