Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.!

 

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.
 
DSC_0005.jpg
 
இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…”
 
அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார்.
 
என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும்
போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த தலைவர் அவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார். ஒரு தாய் சாதனை படைத்த தன் பிள்ளையை அணைத்த்துக் கொள்வது போல. அனைவராலும் பிரமிப்போடும் பெருமையோடும் நோக்கப்படும் ஆதவன் என்றளைக்கப்படும் கடாபி அண்ணையின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் சாதனைகள். சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளப்பெரும் தியாகங்களையும் சாதனைகளையும் புரிந்துவிட்டு விழி மூடித் துயில் கொள்ளும் இந்த மாவீரனின் வரலாற்றின் சிறு பகுதியை இங்கு தருகின்றேன்.
 
 
 
brigadier-aathavan-2.jpgவடமராட்சி என்ற அழகிய ஊரில் 05 சகோதரர்களுக்கு மூத்தவறாகப் பிறப்பெடுத்தவர்தான் கடாபி அண்ணை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த அவருடைய குடும்பத்தின் சுமையை சிறுவயதிலே சுமக்கும் நிலை கடாபி அண்ணைக்கு உருவாகிறது. தந்தையின் வருமானத்தைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிய அம்மாவை சாமதானப்படுத்திய 5ம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனாகிய கடாபியண்ணை, தன்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தையுடன் இணைந்து பேக்கரி (வெதுப்பகம்) வேலைக்குச் செல்கிறார். பகல் முழுதும் ஓய்வின்றி பேக்கரியில் உழைத்துவிட்டு, இரவு நேரங்களில் “ஐஸ்க்ரீம் கொம்பனி” ஒன்றில் வேலைக்குச் செல்கிறார். இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தியட்டருக்குப் போய் ஆங்கிலச் சண்டைப் படங்களைப் பார்ப்பதே இவரின் பொழுதுபோக்காகின.
 
தன் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த  கடாபி அண்ணைக்கு மறைந்து வாழும் சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய கொள்கைப் பிடிப்பினாலும், இலட்சியப் பற்றினாலும் ஈர்க்கப்பட்ட  கடாபி அண்ணை, அப் போராளிகளுக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றார். எதிரியை உளவு பார்ப்பது, உணவுகள் எடுத்துக் கொடுப்பது, போராளிகள் மறைந்து வாழும் இடங்களில் சாதாரண மாணவன் போல காவல் கடமைகளில் ஈடுபடுவது, தகவல்களைப் பறிமாறுவது போன்ற பணிகளின் மூலம் இவரின் ஆரம்பக் கட்ட விடுதலைப் பணி ஆரம்பமாகியது.
 
 
 
DSCF4369-1.jpgதமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவையை மனசார உணர்ந்து கொண்ட கடாபி அண்ணை அவர்கள்  முழுநேர உறுப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். போராளிக்குறிய முழுமையான பயிற்சிகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இவர், 1984ம் ஆண்டு 6வது பயிற்சிப்பாசறையில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றார். பிருந்தன் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், யான் அண்ணை என இன்னும் பல வீரர்களோடு இவரும் ஒருவராகினார்.
 
பாலகப் பருவத்திலே பல கஸ்ரங்களைத் தாங்கி, ஓய்வின்றி உழைத்த கடாபி அண்ணாவுக்கு பயிற்சிகள் எதுவும் கடினமாகத் தெரியவில்லை. பயிற்சிகளின் பிரதான பயிற்சியான சூட்டுப் பயிற்சியின் முதல் நாளே இலக்கின் நடுப்புள்ளியில் குறிபார்த்துச் சுட்டு பயிரற்சிப் பொறுப்பாளர் பொன்னம்மான் அண்ணாவின் பாராட்டைப் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து வந்த நாட்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ரவைகளையும் இலக்கின் நடுப்புள்ளியில் சுட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களால்த் தெரிவு செய்யப்படுகிறார்.
 
கடாபி அண்ணையின் ஒழுக்கத்தையும், நேர்மையையும், திறமையையும் இனங்கண்டு கொண்ட தலைவர் அவர்கள் அவரை தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக ஆக்கியதோடு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சுடும் சிறப்புப் பயிற்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டார். சாதாரணப் போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தனது பணிகளை ஆரம்பித்த தளபதி கடாபி அண்ணா அவர்கள் கடின உழைப்பால் தனக்கான தகமைகளை வளர்த்துக்கொண்டு உயரிய இராணுவத் தளபதியாக உருவெடுத்தார்.
 
 
 
42170197_1635893916522213_86255731783552
1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபி அண்ணை அவர்கள், தலைவரின் நேரடி நெறிப்படுத்தளின் கீழ் பணிபுரிந்தார். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என மாறி மாறி தலைவரை உயிருடன் பிடிக்க முயன்று தோற்றுப்போன அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்துப் போராடி தலைவரைப் பாதுகாத்த வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளில் கடாபி அண்ணையும் ஒருவராகிறார்.
 
கொடுக்கப்பட்ட பணி எதுவாயினும் தூரநோக்குச் சிந்தனையோடும், நுணுக்கத்தோடும், அழகாகவும் செய்யும் இவர் திறனை அடிக்கடிப் பாராட்டும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த வைக்கோ அண்ணையை தமிழ் நாட்டுக்குக் கொண்டு சென்று விடும் மிக மிக முக்கிய பொறுப்பை கடாபி அண்ணையிடம் ஒப்படைக்கிறார்.
 
வைக்கோ அண்ணையை பாதுகாப்பாக் கூட்டிச் செல்லும் போது, முல்லைத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சமரின்போது கடாபி அண்ணை பலத்த காயம் அடைகிறார். அந்நிலையில் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு வைகோ அண்ணையை எதிரியிடமிருந்து பாதுகாத்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பாகச் சேர்ப்பிக்கின்றார். பலத்த காயம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்தே மருத்துவம் பெறவேண்டிய சூழல் கடாபி அண்ணைக்கு ஏற்படுகின்றது. 06 மாதங்கள் இந்தியாவிலிருந்து கொண்டே மருத்துவ உதவியைப் பெற்ற கடாபி அண்ணை மீண்டும் ஈழம் திரும்பி வந்து, தலைவரின் நேரடி நெறிப்படுதலின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஆரம்ப காலங்களில் “கடல்புறா” என பெயர் கொண்டழைக்கப்பட்ட கடற்புலிகள் படையணிக்கு கேணல் சங்கர் அண்ணை அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். சங்கர் அண்ணை அவர்களை வேறு ஒரு பணிக்காக தலைவர் அவர்கள் நியமித்துவிட்டு கடல்புறாவின் தளபதியாக கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் நியமித்தார்.
 
 
 
42247198_1635893929855545_14380028536868கடல்புறாவை செவ்வென கட்டியெழுப்பும் பணியில் கடாபி அண்ணை அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய கடல் வெளி மரபுவழித் தாக்குதலின் போது வெற்றிலைக்கேணிப் பகுதியால் பெரும் படையோடு ஊடறுத்த இராணுவத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியபோது கடாபி அண்ணை நெஞ்சினில் பலத்த காயம் அடைகிறார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் அழைத்து இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளகப் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கிறார். தலைவரின் பாதுகாப்பு, போராளிகளின் தேவைகள், தாக்குதல், பயிற்சி, புலனாய்வு என பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஓய்வின்றி உழைத்தவர் கடாபி அண்ணை.
 
மாத்தையா அவர்களின் துரோகத்தனத்தை இனம்கண்டு, உறுதிப்படுத்திய பின்னர், பல வழிகளில் விசாரணைகள் நடந்தபோதும், மேலதிகமான, கடுமையான, இறுதிக்கட்ட விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டவரும் கடாபி அண்ணை அவர்களே.
 
முன்னேறிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இலங்கை இராணுவம் மேடிற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரம் கடாபி அண்ணை அவர்கள் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.
 
 
41876557_1635893846522220_67685883836786
1995ம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002ம் ஆண்டுவரை, அதாவது விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டவரை கடாபி அண்ணை அவர்களே இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாகப் பணியாற்றினார்.
 
இம்ரான் பாண்டியன் படையணியென்பது சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணை பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப்பயணத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தினார். கரும்புலி அணி, லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப்படையணி, லெப் கேணல் ராயன் கல்விப்பிரிவு, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆள ஊடுருவித்தாக்கும் அணி, லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப்புலிகளின் கவசப்படையணி போன்ற சிறப்புப் படையணிகளும் படையத் தொடக்க கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணத்திற்கேற்ப்ப உருவாக்கி, வளர்த்து, வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலமைத்துவப்பணிகளின் சிறப்புகளை காணக்கூடியதாக இருந்தது.
 
இப்பணிகளோடு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வந்த கடாபி அண்ணை விடுதலைப்பணிக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாக இருந்தாலும் சரி அல்லது வேவுப் பணியாக இருந்தாலும் சரி, அல்லது தாக்குதல் பணியாக இருந்தாலும்சரி நேரமெடுத்து திட்டமிடலுக்காகவே கூடிய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு பணியையும் சரியாக நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணைக்கு உரியதே. பயிற்சித் திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக் காலத்தை சுருக்க வேண்டிவரும். அப்போதுகூட குறுகிய கால பயிற்சித் திட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார்.
 
 
 
அதே போல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்தாலும் அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணிப் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக கட்டளையிடுவார். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை மேம்படுத்தலாம் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே அவ் ஆவணங்கள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணங்களை தானே சரிபார்த்து போராளிகளுக்குப் புரியவைப்பார்.
 
அத்தோடு இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அனைத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ப திருத்தங்கள், மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான கால கட்டங்களின் போதும் மரபுவழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும், செயற்பாடுகளையும் பேணிவருவதில் மிகமிகக் கவனமெடுத்து செயல்ப்பட்டு வந்தவர்தான் கடாபி அண்ணை.
 
கடாபி அண்ணையை பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு, ஆசிரியர்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிப்பது, முகாம்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்யும் வித்தகராகத் திகழ்ந்தார். பன்முகப்படுத்தப்பட்ட பணிகளையாற்றிய கடாபி அண்ணை அவர்கள் பெண் போராளிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவராவார். 027ஆரம்ப காலங்களில் பெண்போராளிகளுக்கு கனரக ஆயுதப்பயிற்சியை வழங்கியதுடன் சூட்டுப்பயிற்சி, சீறோயிங் கனரக ஆயுதங்களை கையாள்வது, ஆயுதங்களை பராமரிப்பது என எல்லாவற்றையும் ஆழமாக கற்பித்து பல கனரக ஆயுத பெண் ஆசிரியர்களை உருவாக்கியவரும் இவரே. அத்தோடு கல்வியறிவு இல்லாமல் எழுத வாசிக்க கஷ்டப்படும் போராளிகளுக்கு அறிவூட்டல்களைச் செய்வதோடு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்காகச் சிறிய விடயங்களைக் கூட பாராட்டி அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்ததோடு கல்வியறிவில்லாமல் யாருமே இருக்கக் கூடாதென்பதில் அதீத கவனமெடுப்பார்.
 
 
 
அனைவருடனும் சம நிலையில் பழகும் இவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று யாருமே இருந்ததில்லை. அனைவருடைய கருத்திற்கும் மதிப்புக்கொடுக்கும் இவர் சிறியவர், பெரியவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை போராளிகளுக்கு புரியவைத்து, அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களுக்குரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்குவார்.
 
இவருடைய தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில்தான் இவர் நேரடியாகப் பங்குபற்றினார். பல கரும்புலித்தாக்குதல்களுக்கு பயிற்சிகளை வழங்கியதோடு நின்றுவிடாது பல தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வெற்றியீட்டிய பெருமை இவரையே சாரும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு 1995 ம் ஆண்டு எம் இனத்தை குண்டுபோட்டு கொன்றுகுவித்த இரு அவ்றோ விமானத்தை சுட்டு வீழ்த்தி தனித்துவமான பெரும் சாதனையை ஈட்டி தமிழீழ தேசியத்தலைவரின் பாராட்டைப் பெற்றார்.
 
1997 ம் ஆண்டு முல்லைத்தீவு கடலில் உக்கிரமாக சண்டை நடந்துகொண்டிருந்த போது, எதிரியோ மிகப்பலத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். எதிரியின் மிகவும் பலமான தாக்குதலாக உலங்குவானூர்தியால் தாக்கிக்கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு மூழ்க ப் போகும் சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாய் கடாபி அண்ணை அவர்கள் எதிரிக்கு மிகப்பலமாக இருந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினார். களத்தில் நிலவரம் மாறியாது. அத்தனை வீரர்களும் எதுவித சேதமும் இல்லாமல் தளம் திரும்புகிறார்கள். தளம் திரும்பிய அந்த வீரர்கள் சாவின் விளிம்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிய கடாபி அண்ணையைப் பார்த்து கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். இப்படித்தான் நீளும் நினைவுகளாக கடாபி அண்ணையின் சாதனைகள் தொடர்ந்தன.
 
 
 
ஜெயசிக்குறு சமர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பல சாதனைகளோடும் பல இழப்புகளோடும் அச்சமர் தொடர்ந்து கொண்டிருக்கையில், விஞ்ஞான குளத்தில் எதிரியானவன் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை செய்வதற்குத் திட்டமிட்டிருந்தான். முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சிதைப்பதற்கான ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது ஆழுகையின் கீழ் இருந்த கரும்புலி அணியொன்றை எதிரியின் கொலைவலயத்திற்குள் அனுப்பி அத்தாக்குதலை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். அத்தாக்குதலைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக வந்த அதிகாரிகள் கொண்ட உலங்குவானூர்தியை எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து சுட்டுவீழ்த்தி அத்தாக்குதலை முறியடித்து, அங்கிருந்து தப்பி வருகிறார்கள் கரும்புலி வீரர்கள். இத்தாக்குதலை திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தியவரும் எம் கடாபி அண்ணை அவர்களே.
 
அது போலவே அளம்பில் கடற்பரப்பில் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த டோறாக்களை ராங்கைப் (பிரங்கி) பயன்படுத்தி அழித்தொழித்தவரும் கடாபி அண்ணையே. குறிபார்த்துச் சுடும் தனித்திறமை கொண்ட கடாபி அண்ணை அவர்கள் எப்பணி ஆற்றினாலும் அதில் ஓர் தனித்துவம் இருக்கும். ஒரு தடைவை தமிழீழத் தேசியத்தலைவருக்கு புதிய கனரக ஆயுதமொன்று கிடைக்கப் பெற்றது. அதை இயக்கம் முறைக்குரிய ஆவணம் எதுவும் வரவில்லை. அந்த ஆயுதத்தை எப்படி இயக்குவது, எப்படி கழட்டிப் பூட்டுவது என்பதை கண்டுபிடிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் சில பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். பல ஆங்கிலப் புத்தகங்களை புரட்டியும், தாமாக சில நாட்கள் முயன்றும் முடியாமற் போகவே தேசியத்தலைவர் அவர்களிடம் சொன்னார்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த தேசியத்தலைவர் அவர்கள் வேறோர் பணிக்காக வேறு இடத்தில் நின்ற கடாபி அண்ணையிடம் அந்த ஆயுதத்தை கையளித்தபோது, அந்த ஆயுதத்தை வாங்கிய கடாபி அண்ணை அவ் ஆயுதத்தை இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பல பாகங்களாகப் பிரித்து வைத்துவிட்டு, இயக்கும் முறையை புரிய வைத்துவிட்டு, தேசியத் தலைவரை பார்த்தபோது தேசியத்தலைவர் அவர்கள் கடாபி அண்ணையின் தோளில்தட்டி “இதுதான் கடாபி” என அனைவரையும் பார்த்துக் கூற, அனைவரும் இணைந்து பாராட்டியபோது எதுவும் நடவாததுபோல் சாதாரணமாகவே இருந்தார் கடாபி அண்ணை அவர்கள்.
 
பற்பல ஆற்றல்களைக்கொண்ட இவரிடம் தேசியத்தலைவர் அவர்கள் சொல்கிறார் “கடாபி கடல் இண்டைக்கு அமைதியாக இருக்கா? என்று சூசையை தொடர்பெடுத்து கேளு. கடல் அமைதியாக இருந்தால் நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” சொல்லி சில கணங்கள் கூட ஆகவில்லை வானத்தில் உள்ள வெள்ளியை பார்த்துவிட்டு “அண்ணை கடல் இண்டைக்கு நல்ல அமைதியா இருக்கு நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” என்றார். வானத்திலுள்ள நடசத்திரங்களை கணித்தே கடலின் நிலவரத்தை சொல்லுமளவிற்கு திறமையுள்ளவர்தான் கடாபி அண்ணை .
 
brigadier-aathavan-4.jpg
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு கூடவே இருந்து பல விடயங்களைக் கற்று அறிந்து செயலாற்றிய வித்தகர்தான் இவர். தனது குடும்பத்தில் அதிக பற்றுக்கொண்டவர் . தனது மனைவி பிள்ளைகளோடு கழிக்கும் நேரம் மிகச் சொற்பமே. என்றாலும் கிடைக்கும் நேரங்களில் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் செயற்பட்டார். நற்சிந்தனைகளையும் தேசப்பற்றையும் ஊட்டியே வளர்த்தார்.
 
சின்னச் சின்ன விடயங்களில்கூட அதிக அக்கறை எடுத்து செயல்ப்படும் கடாபி அண்ணை அவர்கள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புத் தளபதியாக இருந்த காலங்களில் புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்கான திட்டமிடல்களை வகுத்து மிகமிக அற்புதமாக புதிய பயிற்சியாளர்களை நல்ல போராளிகளாக்கினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படும். புதிய போராளிகளுக்குரிய கட்டமைப்புகளை சீரமைத்து, பயிற்சிகளை வழங்கி, நல்ல போராளிகலாக ஆக்குவது மிகமிக கடினமான பணி. ஒவ்வொரு பிரதேசங்களில், இடங்களில் இருந்து வருபவர்கள் வேறுபட்ட குணவியல்புகளோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடாபி அண்ணை அவர்கள் சரியாக திட்டமிடல்களை வகுத்து பயிற்சி ஆசிரியர்களை அதற்குரிய வகையில் நெறிப்படுத்தி மிகமிக எளிதாக அப்பணியை ஆற்றினார்.
 
2006 ம் ஆண்டிலிருந்து எதிரியின் தொடர் விமானத்தாக்குதலில் அடிக்கடி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நாளுக்குநாள் போராளிகள், மக்கள் என தினமும் பலர் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். அந்தக் காலங்களில் பலதடைவைகள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளை இலக்குவைத்து விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தடைவை கூட ஒரு போராளியோ அல்லது பயிற்சியாளரோ காயப்படவுமில்லை வீரச்சாவு அடையவுமில்லை. அவ்வளவு அழகாக திட்டமிட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் போராளிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல தடைவைகள் நடந்த விமானத் தாக்குதலின்போதும் அத்தனை புதிய போராளிகளையும் காப்பாற்றியது கடாபி அண்ணையின் மதிநுட்பமான திட்டமிடலுடன் கூடிய செயல் மட்டுமே.
தலைவர் அவர்கள் பல தடைவைகள் பொறுப்பாளர்களுக்கு சொல்லியிருந்தார் “கடாபியால் மட்டும் எந்த இழப்புமின்றி போராளிகளை காப்பாற்ற முடியுதென்றால் ஏன் உங்களால் முடியுதில்லை” என்று.
 
புதிய பயிற்சியாளர்களிடமிருந்து கூட கருத்துக்களை பெறவேண்டும் என்பதில் அக்கறையெடுப்பார். வாரத்தில் ஒருதடைவை தானே சென்று பயிற்சியாளர்களுடன் கதைப்பார். அவர்கள் தாமாக கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதால் அனைவரிடமும் காகிதமும் பேனாவும் கொடுத்து “உங்கள் பெயர்களை எழுதாமல் சொல்ல விரும்பும் கருத்துக்களை எழுதித்தாருங்கள். நான் ஏதாவது பிழைவிட்டிருந்தால்கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் எழுதும் விடயம் சரியாக இருந்தால் நிச்சயமாக அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பார் . அதேபோலவே பயிற்சி ஆசிரியர்களிடம் புதிய போராளிகளை வழிநடத்துவது, அறிவுரைகளை பலதடைவைகள் வலியுறுத்துவார். பயிற்சிகள் வழங்குவதோடு போராளிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அத்தோடு முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.
 
எமது போராட்ட வரலாறுகள், ஒவ்வொரு நிகழ்வின் பதிவுகளும் மிகமிக முக்கியமென கருதுவார். எந்த இக்கட்டான சூழலிலும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையாக பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். அப்பணியை முக்கிய பணியாக கருதி அதற்காக போராளிகளைத் தெரிவு செய்து தானே அப்பணியை நேரடியாக நெறிப்படுத்துவார். இறுதிச்சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளைகளில் கடாபி அண்ணை அவர்களில் சண்டைக் களங்களில் பணியாற்றிகொண்டிருந்தார். அந்த நேரத்திலும்கூட அவணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் போராளியைத் தொடர்புகொண்டு அப்பணியின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி எச்சந்தர்ப்பத்திலும் இப்பணியை இடைவிடாது தொடருமாறு வலியுறுத்துவார்.
 
இவ்வாறு பலவேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணை அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரப்பகுதியில் பெருமெடுப்பில் நடந்த யுத்தத்தில் ஒரு பகுதி தாக்குதல் தளபதியாக களமிறங்கினார். தடைசெய்யப்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிரியானவன் புலிகளை அழிப்பதில் முனைகிறான். வாழ்வா? சாவா? என்ற பெரும் யுத்தக்கத்தில் ஒவ்வொரு போராளிகளும் உறுதியோடு போரிட்டு வீரச்சாவு அடைகிறார்கள். எதிரியின் துரோகத்தனத்திற்கு பலியாகவேண்டிய இக்கட்டான சூழல் அது.
 
DSC_0013.jpgகடாபி அண்ணை அவர்கள் தன் அணிக்கு கட்டளை வழங்கி போரிட்டுக் கொண்டிருந்தவேளை எதிரியின் தாக்குதலில் பலத்த காயமடைகிறார். போராளிகள் பலர் அவரைக் காப்பாற்ற முனைகின்றனர். முடியவில்லை……
 
தமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்ட கடாபி அண்ணை அவர்கள்……..
 
DSCF0131-1-scaled.jpg“அண்ணையை காப்பாற்றுங்கோ அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” என அருகில் இருந்த போராளிகளிடம் முணுமுணுத்தபடி அன்னை மண்ணை அரவணைத்தார்.
 
அப்பெரும் யுத்தகளத்தில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி என அழைக்கப்படும் சாதனை வீரனை நினைவு கூருவதோடு அக்களத்தில் வீரமுடன் போரிட்டு வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளையும் நினைவு கூருகிறோம்.
 
“உங்கள் தாகம் தீரும்வரை ஓயாது எம் பயணம்”
 
ஆக்கம் சி.கலைவிழி
 
  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

KlTprcH6Ko8KRXTvvMOk.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.