Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரொணா நெருக்கடிக்கு மத்தியில் போரின் முடிவினை நினைவு கூருதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரொணா நெருக்கடிக்கு மத்தியில் போரின் முடிவினை நினைவு கூருதல்

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

73-2-1.jpgகொரொணாத் தொற்றின் காரணமாக இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியும், 2004 ஆம் ஆண்டிலே ஏற்பட்ட சுனாமி போன்றே இன மத பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்கள் யாவரினையும் பாதித்து வருகின்றது. சுனாமி ஏற்பட்டதன் பின்னர், அப்போதிருந்த அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகளும் அன்றைய அரசாங்கமும் சமாதானமான முறையில் இனப் பிரச்சினையினைத் தீர்க்க வேண்டும் எனவும், போர் அனர்த்தனினுள் சுனாமியினால் அழிவுற்ற நாட்டினைத் தள்ள வேண்டாம் எனவும் என சமாதானத்தினை விரும்பும் பலர் வலியுறுத்தினர். ஆனால் அந்த வேண்டுகோளினை உரிய தரப்புக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியில் போர் மீண்டும் ஏற்பட்டு மிகவும் கொடிய இழப்புக்களை ஏற்படுத்தி 2009இல் முடிவுக்கு வந்தது.

நாட்டிலே இனவாதக் கருத்துக்களும், மதவாதக் கருத்துக்களும் சுனாமிக்குப் பின்னரும் எவ்வாறு தொடர்ந்ததோ, அதே போலவே இன்று கொரொணா நிலைமைக்கு மத்தியிலும் அவை தொடர்ந்தவாறு இருக்கின்றன. நிவாரணப் பணிகள், நோயினைக் கட்டுப்படுத்தும் பணிகள் மீதும் இவை தாக்கம் செலுத்துகின்றன‌.

இந்த நெருக்கடியான சூழலிலே போரின் முடிவினை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகிறோம்? அதிலிருந்து நாம் தொடர்ந்தும் கற்க மறுக்கும் பாடங்கள் என்ன? சுனாமிக்குப் பின்னர் நாம் கற்கத தவறிய பாடங்களை கொரொணாவுக்குப் பின்னராவது கற்றுக்கொள்ள முயற்சிப்போமா? எதிர்காலத்தில் நாம் எவ்வாறு எமது அரசியல், பொருளாதார வாழ்க்கையினை முன்கொண்டு செல்லப் போகிறோம்? போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளை மனதிலே நிறுத்தியபடி போரின் முடிவு பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது.

போரின் முடிவு

முள்ளிவாய்க்காலிலே போரின் முடிவின் போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கிறோம் என்று சொல்லியபடி அரச படைகள் போர் வலயத்தினுள்ளே அகப்பட்ட தமிழ் மக்களின் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தினர். மருத்துவசாலைகள், மத வழிப்பாட்டுத் தலங்கள் என எல்லா இடங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்று, அங்கு தங்கியிருந்த மக்கள் மரணித்தனர். பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டது. போரின் பின்னர் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியவில்லை. போரின் போது படையினரால் வலிந்து கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளிலே பல‌ இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

மறுபுறத்திலே போர் வலயத்தினுள் இருந்து தப்பியோட முற்பட்ட தமிழ் மக்களினை விடுதலைப் புலிகள் கருணையற்ற முறையிலே சுட்டனர். சிறுவர்கள் உள்ளடங்கலாக பலர் பலவந்தமாக புலிகளினால் போராட்டத்துக்கு ஆட்சேர்க்கப்பட்டனர். மக்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டன. தமிழ் மக்களின் அழிவுக்கு அரசும் புலிகளும் காரணமானவர்களாக இருந்தனர்.

போரினை நினைவுகொள்ளலும் குறுகிய தேசியவாத அரசியலும்

போராளிகள் உள்ளடங்கலாக போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை முக்கியமானது. போர் ஏற்படுத்திய வடுக்களை தனிமனிதர்களாகவும், சமூகங்களாகவும், சமூகங்களின் கூட்டாகவும் நாம் ஆற்றுப்படுத்துவதற்கு நினைவேந்தற் செயற்பாடுகள் ஒரு வெளியினை உருவாக்குகின்றன. அதேபோல நினைவுகூரற் செயன்முறைகள், நாம் கடந்த காலங்களிலே மேற்கொண்ட அரசியல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த சுய பரிசோதனைக்கும் எம்மை இட்டுச்செல்ல வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் பெற்ற படிப்பினைகள் என்ன? அவற்றினை எவ்வாறு எமது நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகளிலே உள்வாங்கப் போகிறோம்?

ஆனால் இவ்வாறான கேள்விகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதனைக் காட்டிலும், போரின் முடிவானது இன்று தென்னிலங்கையிலே ஒரு வெற்றிக் கொண்டாட்டமாகவே நினைவுகூரப்படுகிறது. சிங்களத் தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சக்திகள் சிவில் யுத்தத்தின் முடிவினை, பயங்கரவாதத்தினை முறியடித்ததாகவும், தமிழர்களை வெற்றிகொண்டதாகவும் விளங்கப்படுத்தி, நாட்டினை ஒற்றுமைப்படுத்திய நாள் என்று முழங்குகிறார்கள். கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. போருக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த பிரச்சினைகளை மறுக்கும் போக்கும், பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோரினை தேசத் துரோகிகள் என்று சொல்லும் அரசியலும் தென்னிலங்கையிலே வேரூன்றியுள்ளன.

மறுபுறத்திலே வடக்கிலே தமிழ்த் தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சில‌ தரப்புக்களினாலே, எந்த சுயவிமர்சனமும் அற்ற வகையில், போரினாலே பாதிக்கப்பட்ட பலரினையும் புறமொதுக்குகின்ற ஒரு நினைவேந்தலாக யுத்தத்தின் முடிவு நினைவுகொள்ளப்படுகிறது. எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோமோ, அந்த மக்களையே போர் வலயத்தினுள் அகப்பட வைத்து அவர்களினை அரசின் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் காவு கொடுத்தனர் என்பது பற்றிய விமர்சனப் பார்வையினை முன்வைப்பது ஒரு துரோகச் செயல் என்று சொல்லும் சுயநலம் மிக்க, சுயபுகழ் விரும்பும் தமிழ்த் தேசியவாதிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தம்மை சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனச் சொல்லும் பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.

ஆயுதப் போராட்டம் குறித்த நியாயமான விமர்சனங்களை முன்வைப்போரினையும், வன்முறையின் மூலம் அரசியல் விடுதலையினைத் தேடுவதனை விரும்பாதவர்களையும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நிந்தனை செய்யும் கீழ்த்தரமான செயல்கள் எம் கண்முன்னே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு வாய் மூடி மௌனிகளாக நாம் வாழுவோமாயின், அது நாம் ஒரு சமூகமாகத் தோற்றுப் போய் விட்டோம் என்பதனையே குறிக்கும். போரில் இருந்து எதனையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பதனையே இந்த நிலைமை எமக்குச் சொல்லுகிறது.

போருக்குப் பின்னரான பிளவுபடுத்தும் அரசியல்

போர் பற்றிய உண்மையினை முழுமையாகச் சொல்லுவதற்குத் தயங்கும் போக்கு அதிகாரம் மிக்க எல்லாத் தரப்பினர் மத்தியிலும் நோக்கப்படுகிறது. அத்துடன் இறந்த மக்களுக்கான நீதியினை உண்ணாட்டுப் பொறிமுறைகளும் சர்வதேசப் பொறிமுறைகளும் பெற்றுக் கொடுக்கத் தவறிவிட்டன. நினைவுகூரற் செயன்முறைகளிலே கூட நாட்டின் எல்லா சமூகங்களும் ஒருமித்துச் செயற்பட முடியாத துர்பாக்கியமான நிலைமையே இருக்கிறது. போர் பற்றிய கதைகளும், நினைவேந்தற் செயற்பாடுகளும், சகவாழ்வினையும், சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையினையும் வளர்ப்பதற்குப் பதிலாக, பிரிவுகளைத் தூண்டுவனவாகவும், குறுகிய தேசியவாதத்தினை ஸ்திரப்படுத்துவனவாகவும் அமைகின்றன.

போரின் கொடூரமான முடிவு அரசியற் பிரச்சினைகளுக்கு வன்முறை மூலம் தீர்வு ஏற்படவில்லை என்ற விடயத்தினை எமக்குச் சொல்லியிருக்கிறது. அதேபோல இந்தப் போர் தனியே தமிழர்களை மாத்திரம் பாதிக்கவில்லை. பல்வேறு விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள், முஸ்லிம் மக்கள், தென்னிலங்கையிலே குண்டுத் தாக்குதல்களிலே கொல்லப்பட்ட சிங்களவர்கள், இராணுவத்தினர் அவர்களின் குடும்பங்கள் எனப் பலரினையும் இந்த யுத்தம் பாதித்தது.

போரின் காரணமாக வடக்கிலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய பொருளாதார அபிவிருத்தி கிடைக்கவில்லை. அரசின் மீள்கட்டுமாணப் பணிகள் முழுமையற்றனவாகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையிலிருந்து தூரப்படுத்தப்பட்டனவாகவும் அமைகின்றன. வடக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களைக் கடன் சுமை கடுமையாகப் பாதித்து வருகின்றது.

வடக்கிலே 1990 இலே புலிகளினால் பலவந்தமாக‌ வெளியேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து மீள்குடியேற விரும்பும் முஸ்லிம் மக்களுக்கு உரிய வசதிகள் கிடைக்கவில்லை. அவர்களை வரவேற்பதற்குக் கூட தமிழ் சமூகத்தினைச் சேர்ந்த சிலர் தயங்குகிறார்கள். யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் வாழும் சோனகத் தெரு அபிவிருத்தி ரீதியில் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

போரின் முடிவின் பின்னர் சிங்களத் தேசியவாதிகளின் வன்முறை மிக்க பார்வை முஸ்லிம் மக்களின் மீது திரும்பியுள்ளது. சில தமிழ்த் தரப்பினரும் இந்த முஸ்லிம் விரோதப் போக்குகளைப் பார்த்து இரசிக்கும் துர்பாக்கியமான நிலைமையினையும் நாம் இன்று காண்கிறோம். மறுபுறத்திலே தமிழர்கள் மத்தியில் இந்து மற்றும் சைவ மேலாண்மை கருத்தியிலை விதைக்கும் சக்திகளும் போரின் பின்னர் வேரூன்ற முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களில் கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். அதற்குப் பின்னர் ஏற்பட்ட திட்டமிட்ட முஸ்லிம் விரோதப் போக்குகள் முஸ்லிம் மக்களை மோசமாகப் பாதித்தன‌.

கவனத்திலெடுக்காத படிப்பினைகளும், தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும்

வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பிராந்திய சுயாட்சிக் கோரிக்கையினை நிராகரித்து, எல்லா அதிகாரங்களையும் மையத்திலே வைத்து, பெரும்பான்மைவாதக் கட்டமைப்புக்களின் ஊடாகவும், இராணுவ மயமாக்கப்பட்ட கட்டமைப்புக்களின் ஊடாகவும் ஆட்சி நடாத்துவதிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இன்றைய கொரொணா நெருக்கடியினைக் கூட இவ்வாறான கட்டமைப்புக்களின் மூலமாக, ஜனநாயகம் அற்ற வகையில் அரசாங்கம் கையாள முற்படுகிறது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து, ஒரு பொருத்தமான அரசியற் தீர்வின் வாயிலாகவும், சமூக விழிப்பூட்டலின் வாயிலாகவும் இனவாத, மதவாத சக்திகளைக் களையும் செயற்பாடுகளிலே, போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முனைப்பாக இருந்திருப்பின், இன்று நாம் கொரொணாக் காலத்தில் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் இல்லாதிருந்திருக்கும்.

பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தினை வீணடித்த நிலையில் இன்று மீண்டும் நாம் போரினை நினைவுகூருகிறோம். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்று 2015 தேர்தல்களினால் ஏற்பட்டது. ஆனால் எமது அரசியல் வர்க்கத்தினர் இந்தச் சந்தர்ப்பத்தினைத் தவற விட்டுவிட்டனர். இந்த நிலைக்கான பெருமளவிலான பொறுப்பினை இலங்கையினைப் போருக்குப் பின்னர் ஆட்சி செய்த அரசாங்கங்களே ஏற்க வேண்டும்.

பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும், சமூகங்களுக்கு இடையில் உரையாடல்களை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் தொடர்ந்து செயற்படுவது மிகவும் அவசியம். அதற்கான ஒரு மொழியினைக் கண்டுபிடித்து அதன் மூலம் இனவாதத்தினை விதைக்கும் சக்திகளுக்கு எதிரான ஒரு குரலினை நாம் கட்டியெழுப்ப வேண்டும். சுனாமியினாலும், போரின் முடிவினாலும் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறிய நாம், கொரொணாத் தொற்றினால் எமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களில் இருந்தாவது இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, சகவாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பிலே முற்போக்காகச் செயற்பட எத்தனிக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமது வாழ்க்கையினை முன்கொண்டு செல்ல எத்தனிக்கிறார்கள். போரின் கொடிய ஞாபகங்கள், தமது குடும்பத்தவரின் இழப்பு, உடைமைகளின் இழப்பு, காணிகள், வாழ்வாதாரங்கள் உள்ளடங்கலாக சமூகமாக அவர்கள் இழந்த பல விடயங்களுக்கு மத்தியிலும், இறுதி யுத்தத்தில் அகப்பட்டுத் தப்பிய மக்கள் இன்று தாம் வாழ வேண்டும், தாமும் தம்முடைய எதிர்கால சந்ததியினரும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சுபீட்சத்தினைப் பெற வேண்டும் எனவும் எத்தனிக்கிறார்கள். கொரொணாத் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது, இவ்வாறு மீண்டெழ முற்படும் மக்களுக்கு ஒரு கூடுதல் சவாலாக அமைகிறது. இம்மக்களின் வாழ்வு மற்றும் எதிர்காலம் மீதான பற்றுறுதியினை நாம் கௌரவப் படுத்த வேண்டுமாயின், பிளவூட்டும், வெறுப்பூட்டும் அரசியற் செயற்பாடுகளைக் கைவிட்டு, அவர்கள் எதிர்கொள்ளும் குறிப்பான சவால்களுக்கும், நாட்டிலே நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வுகளை வழங்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறான இலக்குகளை முன்னிறுத்தி நாம் போரின் அவலங்களை நினைவுகூருவதே எமது விடுதலைக்கு வழி செய்யும்.

 

http://thinakkural.lk/article/41789

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்

இயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த முடியவில்லை. தாயகத்தை பொறுத்தவரை நிலைமைகள் இறுக்கமாக இருந்தன. பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்தன. அது அதன் இயல்பான வளர்ச்சிப்போக்கில் நினைவுகூர்தலை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

இந்த ஆண்டும் அப்படித்தான் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலைமை காரணமாக நாடு இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது காரணமாக ஒன்று கூடுதல் கூட்டமாய் சேர்தல் போன்றன தொடர்ந்தும் தடுக்கப்படுகின்றன. இப்படி ஒரு காலகட்டத்தில் பெருந் கூட்டமாக மக்களை திரட்டி மே 18ஐ நினைவு கூர்வது சாத்தியமா ?

5000-2-2.jpgகோவிட்-19 ஐ ஒரு சாட்டாக காட்டியே அரசாங்கம் நினைவு கூர்தலை முடக்கக் கூடும் கோவிட்- 19 கொண்டு வந்திருக்கும் இயல்பற்ற சூழல் இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கும் பொருந்தும். இப்படிப்பட்டதொரு இயல்பற்ற சமூக பொருளாதார அரசியல் சூழலுக்குள் நினைவுகூர்தல் எப்படி வடிவமைப்பது?

கடந்த மாதம் 22ஆம் திகதி யூதர்கள் இனப்படுகொலையை நினைவு கூர்ந்தார்கள். அந்த நாட்டின் அரசாங்கப் பிரதானிகள் சிலர் கோவிட்- 19 தொற்றுக்கு இலக்காகி தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு சூழலில் அங்கு நினைவுகூர்தல் எனப்படுவது முழுக்க முழுக்க பெருமளவுக்கு வேர்ச்சுவல் ஆக மாற்றப்பட்டது. நாட்டின் பிரதமரின் உரையும் பெருமளவுக்கு வேர்ச்சுவலாகவே பரப்பப்பட்டது. இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் தமது அனுபவங்களை வேர்ச்சுவல் ஆகவே பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த உதாரணத்தை தமிழ் மக்களும் பின்பற்றலாம். குறிப்பாக இணையத்தள வசதிகளை அதிகம் உடைய புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வேர்ச்சுவல் ஆகவே நினைவு கூர்தலில் ஒன்றிணைய முடியும்.

மே 18ஆம் திகதி தாயகத்தில் ஒரு பெருங்கூட்டத்தை திரட்ட முடியாத ஒரு சூழலே பெரும்பாலும் இருக்கும். அரசாங்கம் கோவிட் -19இன் பேரால் ஒன்றுகூடல்களைத் தடுக்க முடியும் .எனவே ஈழத் தமிழர்கள் நினைவு கூர்தலுக்கான மாற்று வழிகளைச் சிந்திப்பது நல்லது.

இது தாயகத்துக்கு மட்டுமல்ல டயஸ்போறாவுக்கும் பொருந்தும். தமிழகத்திற்கும் பொருந்தும். ஏனெனில் வைரஸ் ஆபத்து உலகப் பொதுவானது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள்தான். தமிழகத்திலும் ஒரு சுமுகமான சூழல் ஒரு வாரத்துக்குள் ஏற்பட்டுவிடும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மொத்தத்தில் பெருந்தமிழ் பரப்பில் பெரும் கூட்டங்களைத் திரட்டி மே18ஐ நினைவுகூர முடியாமலிருக்கும்.

எனவே தமிழ் மக்கள் பௌதீக ஒன்றுகூடல்களுக்குப் பதிலாக வேர்ச்சுவல் ஒன்று கூடல்களைப் பற்றி சிந்திக்கலாம். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அவ்வாறு சிந்திக்க வேண்டிய ஒரு சூழலில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இறுக்கமான இணைய வலையமைப்பு உண்டு. எனவே ஒன்று கூடலையும் நினைவு கூர்தலையும் கூடிய பட்சம் வேர்ச்சுவல் ஆக அவர்கள் சிந்திக்கலாம.;அதேசமயம் இலத்திரனியல் நினைவு கூர்த்தலோடு சேர்த்து வேறு எந்த வழிகளில் பெருந்தமிழ் பரப்பை ஓர் உணர்ச்சி புள்ளியில் ஒருங்கிணைப்பது என்றும் சிந்திக்க வேண்டும்.

நினைவுகள் எப்பொழுதும் காட்சிகளோடு தொடர்புடையவை. ஓசையோடு தொடர்புடையவை. சுவைகளோடு தொடர்புடையவை.எனவே குறியீட்டுக் காட்சிகள் மூலம் நினைவுகளை தூண்டலாம். நினைவுகளை கடத்தலாம். நினைவுகளை திரட்டலாம.; நினைவுகளை ஒன்றுகூட்டலாம். அப்படிப்பட்ட குறியீடுகளைக் குறித்து ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும.; இனப்படுகொலையை எப்படி இலத்திரனியல் வடிவில் காட்சிப்படுத்தலாம் ஆவணப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும.; குறிப்பாக ஒரு வேர்ச்சுவல் மியூசியத்தைப் பற்றி யோசிக்கலாம்.

62-4-1024x681.jpgஅடுத்தது ஓசைகள். ஓசைகள் நினைவுகளை மீட்கும் ; நினைவுகளை ஒருங்கிணைக்கும். ஒரு பாடல் அல்லது இசை வடிவம் ஒரு சமூகத்தையே ஒன்று திரட்டும். உலகத்தையே ஒன்று திரட்டும்.மே 18இற்குரிய இசை வடிவங்களை அல்லது பாடல்களை உருவாக்க வேண்டும். முழுத் தமிழ்ப் பரப்பிலிருந்து இதற்குரிய படைப்புருவாக்க மற்றும் நிபுணத்துவ உதவிகளைப் பெறலாம். ஒரு பாடல் இலகுவாக பெருந்தமிழ் பரப்பை இணைத்துவிடும். பௌதீக ரீதியாக நினைவு கூர முடியாத ஒரு சமூகத்தை அது மானசீகமாகத் தேசமாக இணைக்கும். இசை உணர்ச்சிகளைத் திரட்டும.; எனவே ஏதோ ஒரு உணர்ச்சி புள்ளியில் அது சமூகத்தை திரட்டும். பெருந்தமிழ் பரப்பு முழுவதையும் திரட்டும.; எனவே நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுப் பாட்டை ஈழத்தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மற்றது சுவை. சுவையை எப்படி நினைவு கூருதலுக்கான ஒரு கருவியாக மாற்றுவது என்று ஏற்கனவே தமிழ் சிவில் சமூக அமையம் பரிசோதித்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நினைவுகூர்தலில் அவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு கிறிஸ்த்தவ மதகுரு யூதர்கள் மத்தியில் உள்ள “பாஸ் ஓவர்” ஏன்ற ஒரு பொது நிகழ்வை ஞாபகப்படுத்தினார். புனித பைபிளில் காணப்படும் உதாரணங்களை சுட்டிக்காட்டி யூதர்கள் தமது பேரிடப்பெயர்வின் போது அருந்திய ஓர் உணவை இப்பொழுதும் அருந்துவதைப் போல ஈழத்தமிழர்களும் ஏதாவது ஒரு உணவை அதற்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இறுதிக்கட்ட போரில் சாப்பாட்டுக்கு வழியற்றிருந்த மக்களுக்கு புலிகள் இயக்கத்தின் கட்டமைப்புகளால் சமைத்துக் கொடுக்கப்பட்ட கஞ்சியை அப்படி நினைவு கூர்தலுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் கஞ்சியும் வாய்பனும் அதிகமாக உண்ணப்பட்டன கடைசிக் கட்டப் போரின் கடைசி நாளிலும் சனங்கள் படையினரின் கட்டுப்பாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்த கடைசிக் கணத்திலும் அங்கே வாய்பன்கள் விற்கப்பட்டன. எனவே கஞ்சியை அல்லது வாய்ப்பனை நினைவு கூர்தலுக்கான ஒரு உணவாக பயன்படுத்தலாம். கஞ்சி ஒரு எளிமையான உணவு. அதை ஒரு ஊழித் துயரத்தின் குறியீடாக்கலாம்.கடைசிக்கட்டப் போரில் பாலிருக்கவில்லை எனவே பாலாற்ற கஞ்சியை தயாரிக்கலாம். உப்பையும் தவிர்க்கலாம். கஞ்சியின் சுவையின்மையே ஊழித் துயரத்தின் குறியீடாக இருக்கும்.

தமிழ் சிவில் சமூக அமையம் ஏற்கனவே கஞ்சியை அவ்வாறு பயன்படுத்த தொடங்கிவிட்டது. உணவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தில் ஒரு உணவையே நினைவு கூருதலுக்கான கருவியாகவும் பயன்படுத்தலாம் என்று தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது.

இந்தமுறையும் பௌதீக ஒன்றுகூடல்கள் தடுக்கப் படுமாக இருந்தால் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளில் சுட்டிகளை கொளுத்தி நினைவு கூரலாம் என்றும் தமிழ் சிவில் சமூகம் சிந்திக்கிறது.

கோவிட்-19க்கு முன்னரே நினைவுகளை மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவைகள் இருந்தன. ஏனெனில் நினைவுகூர்தலை ஒரு கிராமத்துக்கோ அல்லது ஒரு மாவட்டத்துக்கோ அல்லது ஒரு நாளுக்கோ மட்டும் சுருக்கக்கூடாது. அவ்வாறு சுருக்கினால் அது கோவில் திருவிழாக்களில் ஒருநாள் திருவிழாவை தன்னுடையதாக்கும் உபயகாரர்களை உருவாக்கிவிடும.; இவ்வாறு உபயகாரர்கள் ஒருநாள் நினைவு கூர்தலை தம் வசப்படுத்தினால் நினைவு கூர்தலின் ஆன்மா பொலிவிழந்து விடும்.

எனவே நினைவு கூர்தலை ஆகக் கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும். அதை ஓரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வேண்டும். ஒரு குழுவோ அல்லது கட்சியோ மட்டும் அதற்கு உரிமை கோர முடியாது. முள்ளிவாய்க்கால் எனப்படுவது ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் மட்டும் அல்ல. அது ஒரு புவியியல் பதம் அல்ல. அது ஓர் அரசியல் பதம். அது முழுத் தமிழ் மக்களுக்கும் உரியதொன்று. அதை முழுப் பெருந் தமிழ்ப் பரப்புக்கும் உரியதாக அனுஷ்டிக்க வேண்டும்.

எனவே நினைவு கூர்தலை ஆகக் கூடிய பட்சம் எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். குறிப்பாக ஒரு வைரஸ் தொற்றுக் காலத்தில் சமூக முடக்கத்தின் மத்தியில் அதை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று யோசிக்க வேண்டும்.

தமிழ் சிவில் சமூக அமையம் ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் ஒரு சுட்டியை ஏற்றுமாறு கூறுகிறது. தாயகத்தில் இப்போதுள்ள பயச் சூழலைப் பொறுத்தவரை அதை சாதாரண தமிழ் மக்கள் எப்படி பின்பற்றுவார்கள் என்று தெரியவில்லை. மத அமைப்புகளும் சிவில் அமைப்புகளும் மாணவ அமைப்புகளான யாழ் பல்கலைக்கழகம் போன்றவையும் ஏனைய செயற்பாட்டு அமைப்புகளும் முக்கியமாக கட்சிகளும் முதலில் அதைச் செய்யலாம். பொது அமைப்புகளும் கட்சிகளும் அதை முதலில் செய்தால் சாதாரண சனங்கள் துணிந்து முன் வருவார்கள்.

இன்னுமொன்றைச் செய்யலாம். எல்லா கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மே 18ஆம் திகதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நிமிடங்களுக்கு குறைந்தது மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஆலயமணி மணிகளை தொடர்ச்சியாக ஒலிக்கலாம். ஒரே நேரத்தில் கேட்கும் மணியோசை தமிழ் மக்கள் நினைவு கூர்தலில் ஒன்றாக நிற்பதை உணர்த்தும். அது நீதிக்கான தமிழ் மக்களின் அழைப்பாகவும் இருக்கும்.

தாயகமும் தமிழகமும் அதை ஒரே நேரத்தில் செய்யலாம். அது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு அறிவிக்கப்பட்டது ஏழு மணிக்கு என்று. இப்பொழுது அந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆறு மணிக்கு தேவதைகளுக்கு என்று மணி அடித்தபின் வேறு மணி அடிக்கும் மரபு இல்லை என்று கூறப்படுகிறது அதுபோல இந்தக் குருமாரும் ஆறுமணிப்; பூசை முடிந்ததும் ஆறு பதினைந்திற்கு மணியோசையை எழுப்பலாம் என்று கேட்டுக் கொண்டதன் பிரகாரம் எல்லா வழிபாட்டிடங்களிலும் ஆறு பதினைந்திற்கு மணியோசையை எழுப்புவது என்று யாழ். சர்வமதப் பேரவை தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. ஆறு பதினைந்திற்கு அவ்வாறு மணியோசை ஏழுப்பப்பட்டால் அது நினைவு கூர்தலை இயன்ற அளவுக்கு மக்கள் மயப்படுத்தும்.

இதற்கு ஆகப் பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம். ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களில் கோவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நின்ற சுகாதார சேவை பணியாளர்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தன. மருத்துவப் பணியாளர்களை ஒவ்வொரு நாடும் தன் பாணியில் பாராட்டியது; கௌரவித்தது.

சில நாடுகள் தமது வாகனங்களின் ஹோர்ன் ஒலியை தொடர்ச்சியாக இசைத்தன. சில நாடுகளில் வாகனங்களின் ஹெட்லைட் தொடர்ச்சியாக ஒளிர விடப்பட்டது. சில நாடுகள் இலத்திரனியல் பதாதைகளை உயர்ந்த கட்டடங்களில் கட்டிவிட்டன. சில நாடுகள் மருத்துவத் தொண்டர்களை போற்றி பாட்டுக்களை இசைத்தன. சில நாடுகள் குறிப்பிட்ட நேரத்தில் ஒலியை எழுப்பி அல்லது விளக்குகளை ஒளிரச் செய்து தமது பாராட்டுக்களை தெரிவித்தன.

இந்த ஆகப்பிந்திய உதாரணத்தை தமிழ்மக்கள் பின்பற்றலாம். இவை எல்லாவற்றினுடையதும் சாராம்சம் ஒன்றுதான். நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவது. அதை ஆகக்கூடிய பட்சம் சமூக மயப்படுத்துவது.

ஏற்கனவே ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் கடந்த ஆண்டு நினைவுகூர்தல் நெருக்கடிக்கு உள்ளானது. பௌதீக ரீதியாக மக்களைத் திரட்ட முடியாத ஓர் அரசியல் சூழலில் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று கடந்த ஆண்டிலேயே சிந்திக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் இந்த ஆண்டு ஒரு புதிய சவாலாக கோவிட-19 வந்திருக்கிறது. மக்கள் மயப்பட்ட ஒரு நிகழ்வு அது பௌதீக ரீதியாகத் தடுக்கப்பட்டாலும் மானசீகமாக அனுஸ்டிக்கப்படு;ம். இந்தமுறையும் பௌதீக ரீதியாக ஒன்றுகூடலுக்கான வாய்ப்புக்கள் குறைவு. ஒன்றில் வேர்ச்சுவலாக ஒன்றுகூடலாம். அல்லது வேறு வழிகளில் எப்படி வீடுகளில் இருந்தபடியே நினைவுகளை ஒன்றிணைப்பது என்று சிந்திக்கலாம்.

 

http://thinakkural.lk/article/41950

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த புதிய சிந்தனை வேண்டும்

இலங்கை இனப்பிரச்சனையின் தீ தமிழ் சிங்கள முரண்பாட்;டில் உருவாகியது என்பது உண்மைதான். ஆனால் இலங்கை புவியியல் ரீதியாக இந்தியாவோடு ஒட்டியிருப்பதால் இலங்கை இனப்பிரச்சனை என்பது இந்தியாவின் பிரச்சனையாகவே வளர ஆரம்பித்தது. கூடவே இந்து சமுத்திரத்தின் மையத்தில் இருப்பதால் இந்து சமுத்திரத்தோடு தொடர்புடைய பிரச்சனையாகவும் வடிவங் கொண்டது.

சீனாவின் வருகையோடும் முள்ளிவாய்க்கால் பிரளயத்தோடும் இந்து சமுத்திரத்தின் பிரச்சனை இந்தோ-பசுபிக் பிரச்சனையாக பரிணாம் பெற்றது. இவ்விடத்தில் இந்து சமுத்திரத்தினதும் பசிபிக் சமுத்திரத்தினதும் பிரச்சனைகளை இந்தோ-பசிபிக் பிரச்சனையாக வடிவம் கொள்ளச் செய்ததில் முள்ளிவாய்க்கால்தான் பிரதான பங்கு வகிக்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

அதன்வழி இலங்கை இனப்பிரச்சனையும் இந்தியாவின் பிரச்சனையாக இருந்தபடி இந்தோ-பசுபிக் பிரச்சனையோடு தொடர்புபட்ட பிரச்சனையாக மாறியது.

இப்போது கோரோனாவின் வருகையோடு இந்தோ-பசிபிக் பிரச்சனை இந்தோ-பசிபிக் –அட்லாண்டிக் பிரச்சனையாக மாறும் நிலை உருவாகி வருகிறது. இதனை இன்னொரு விதமாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான இந்தோ-பசிபிக் பிரச்சனை கொரோனாவின் வருகையோடு இந்தோ-பசிபிக் — அட்லாண்டிக் பிரச்சனையாக இன்னொரு புதிய வடிவம் எடுக்கிறது என்று விளக்கலாம்.

தமிழ் மக்கள் நேரடியாகவும், கட்டமைக்கப்பட்டும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் இலங்கை இனப்பிரச்சனை என்பது இந்தியாவின் பிரச்சனையாக இருந்தபடி இந்துமாகடல் பிரச்சனையோடும், இந்தோ-பசிபிக் பிரச்சனையோடும், புதிய. இந்தோ-பசிபிக் — அட்லாண்டிக் பிரச்சனையோடும் தொடர்பு பட்டதாக இப்போது பரிணாமம் அடைகிறது.

கொரோனாவின் பின் புதிய உலக ஒழுங்கு ஒன்று தோன்றப் போகின்றது என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது. “சீனாவுடன் மொத்தமாக உறவை துண்டிக்க வேண்டிய நிலை வந்தாலும் வரும்” என அமெரிக்க அதிபர் வெளிப்படையாக கூறியிருப்பது போன்ற விடயங்கள் பிரச்சனைகளின் ஆழத்தையும் செல்திசையையும் அடையாளங்காண உதவுகிறது.


 
இதனால் “கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கு” என்ற விடயத்தில் இலங்கை இனப்பிரச்சனை என்பது தீப்பிளம்பு ஒன்றின் மையமாக விளங்கக்கூடியது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்கு ஏற்ற வகையில் தம்மைத் தயார்ப்படுத்துவதிலேயே தமிழ் மக்களின் எதிர் காலம் எவ்வாறு அமையும் என்பது தங்கியிருக்கிறது.

ஏனெனில் இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் உருவாகிய பனிப்போர் யதார்த்தத்தை புரிந்து கொள்வதிலும் இந்திய, நேற்றோ சக்திகளை கையாள்வதிலும் அக்காலத்தில் ஏற்பட்ட மூலோபாயத் தவறுகளே கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களிற்கு தொடரும் துயர் கதையின் அடிப்படையாக இருக்கிறது.

விளைவாக தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் என்ற மானிடப் பெருந்துயரை அனுபவிப்பதில் கொண்டு சென்று நிறுத்தியது.

முள்ளிவாய்க்கால் என்பது தோற்றத்தில் யுத்தத்தின் முடிவாக இருந்தாலும் யதார்த்தத்தில் இனப்படுகொலையின் இன்னொரு படி நிலை. ஏனெனில் அக்காலத்தில் நிகழ்ந்தது போரியல் விதிகளோடும் போரியல் மூலோபாயத்தோடும் நடந்த யுத்தம் அல்ல. போரியல் விதிகளை மீறிய இனப்படுகொலையை மூலோபாயமாக கொண்ட யுத்தம் என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் அது தெளிவாக ஒரு இனப்படுகொலையே.


 
இத்தகைய, உலகின் அதிபயங்கரமான இனப்படுகொலையாளிகளாக வலம் வரும் எதிரியின் முற்றுகைக்குள் இறுகியிருக்கும் தமிழினம் இனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டு, யதார்த்தத்திற்கு பொருத்தமாக தம்மைத் தயார்ப்படுத்தி முன்னேறுவதில் தவறிழைத்துவிட முடியாது.

வரலாற்றில் இருந்து பாடங்களைப் படிக்காமல், யதார்த்தத்தை சரியாக விளங்கிக் கொள்ளாமல், உலக அசைவியகத்தை சரியாக கணிக்காமல், செயலாற்றுவது என்பது மீளமுடியாத பெரும் துயரத்தில் மீண்டும் தள்ளி விட்டுவிடும். இதையே கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு இரத்தமும் சதையுமாக தமிழ் மக்களிற்கானபாடமாக சொல்லி நிற்கின்றது.

இந்தக் கட்டத்தில் “கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கு” என்பது மீண்டும் ஒரு மூலோபாய நகர்வுகளுக்குரிய காலத்தைக் கொண்டு வருவதோடு களத்தையும் திறக்கிறது.

இத்தகைய களத்தை, வாய்ப்பை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான விடயம் அல்ல.


 
இது ஒற்றை மனிதனின் மூளையையும், அசைவியக்கத்தையும் நம்பியிருக்கும் சிறுவிடயமும் அல்ல. நல்லதே நடக்கும் எனும் நன்நம்பிக்கை வாதமுமல்ல. இதுவா அதுவா என்று எழுமாற்றாக முயற்சி செய்து பார்க்கும் பரிசோதனை விடயமுமல்ல. செய்திகளை பார்த்தும் நம்பியும் எதிர்வினையாற்றும் உணர்ச்சி வசப்படல் விடயமுமல்ல. வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோகும் விடயமுமல்ல. வாக்குறுதிகளை ஏற்காமல் முரண்படும் விடயமுமல்ல. “”வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் “”என்று கண்களை மூடிக்கொண்டு நடக்கும் ஒரு வழிப்பாதை அரசியலுமல்ல.

இது அயலுறவு, பிராந்திய உறவு என்ற அடிப்படையில் அமைவேண்டிய, பல்பரிமாணம் கொண்ட, தமிழ் மக்களுக்கான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டிய விடயம்.

இதற்கு உண்மைகளை நிர்வாணமாக பார்க்கவேண்டியது அவசியம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வெற்றிகளையும் தொல்விகளையும் பகுத்தறிய வேண்டும். வரலாற்றுப் பக்கங்களை மரபணுப் பரிசோதனை செய்து பார்க்கவேண்டும்.

அறிவுசார் தரப்புகளின் மூளையை, மதியுரைஞர்களின் மதிநுட்பத்தை, பங்களிப்பை, அனுபவசாலிகளின் அனுபவத்தை, நிலக்கரி வைரமாவதுபோல், வைரத்தை பட்டை தீட்டுவதுபோல் பயன்படுத்த வேண்டும்.

இத்தகைய புதிய சூழலை இலாவகமாக கையாளும் சாத்தியக்கூறுகள் எதிர்த்தரப்பான சிங்களவர்களிற்கு அதிகம் உண்டு என்பதை காணமுடிகிறது. அவர்களிடம் நன்கு முதிர்ச்சிபெற்ற ராஜதந்திரப் பாரம்பரியமும், அறிவியல் வளர்ச்சியும், முறையாக படிமுறை வளர்ச்சி கண்ட கட்டமைப்புக்களும் உள்ளன என்பது வெளிப்படை.

ஆனால் தமிழர் தரப்பில் யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது அபாயச்சங்கொலியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தனி மனிதர்களில் தங்கியிருப்பதும் கொண்டாடுவதும் என்ற தொடர் அவலத்தையே காணமுடிகிறது.


 
தமிழ் இனம் இதில் இருந்து மீளவேண்டும். தனக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். அதன்படியே ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கவேண்டும்.

சுதந்திர காலத்தில் சிங்களத் தலைவர்களின் ராஜதந்திரத்தையும் தமிழ்த் தலைவர்களின் மாபெரும் தவறுகளையும் கண்முன் நிறுத்தவேண்டும்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தோன்றிய பனிப்போர்கால சூழலில் விட்ட மூலோபாய தவறை இப்போது தோன்றும் “கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கு” என்ற திருப்பு முனையில் தமிழ்த் தரப்பு விட்டு விடக்கூடாது.

மீண்டும் பயணம் திசை மாறி இருள் நோக்கி சென்று விடக்கூடாது. அவ்வாறு நடந்துவிட இப்போதிருக்கும் நாம்; யாரும் எந்த விதத்திலும் காரணமாகி விடக்கூடாது. நூற்றாண்டாக தொடரும் பேரவல தொடர் கதைக்கு இப்போது வரும் வாய்ப்பை பயன்படுத்தி முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும்.

இன்றைய புதிய உலக ஒழுங்கில் தமிழ் மக்களுக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதே அறவழியிலும் ஆயுதவழியிலும் என்று முள்ளிவாய்க்கால் வரை ஒரு நூற்றாண்டாக வீழ்ந்த நம் சொந்தங்களிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

 

http://thinakkural.lk/article/42016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.