Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்

-என்.கே.அஷோக்பரன்  

“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. 

சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசத்தின் பங்கு உள்வாங்க ப்படவில்லை என்பதுதான், பட்டாவர்த்தனமான உண்மை. சோல்பரி அரசியலமைப்பு என்பது பிரித்தானியர்கள் நீங்கள் சிறுபான்மையினர், உங்களுக்கு பிரிவு 29(2) தரும் பாதுகாப்பே போதுமானது என்று, தமிழ்த் தேசத்தின் கோரிக்கைகளுக்குப் பதிலாக, 29(2) என்ற எந்த விளைபயன்தராத அரசியலமைப்புச் சரத்துடன் நின்று கொண்டது. 1972இன் முதலாவது குடியரசு அரசியலமைப்புருவாக்கத்தின் போது, தமிழ்த் தேசத்தின் குரல்கள் பட்டாவர்த்தனமாக நிராகரிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பெரும்பான்மையினத் தேசியத்தின் அரசியலமைப்பாகவே பிறப்பெடுத்தது. 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு, ஜே.ஆரின் குழந்தை. முதலாவது குடியரசு யாப்பிலிருந்த பெரும்பான்மையினத் தேசியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அத்தனையும் அதிலிருந்தன என்பதோடு, ஜே.ஆரின் அதிகாரங்களைப் பலப்படுத்தும் சர்வாதிகார ஜனாதிபதி முறையும், அதன்பாலான அதிகாரக்குவிப்பும் கொண்டதான, அரசியலமைப்பாக அது அமைந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ராஜிவ் காந்தி அரசாங்கத்தினால், ஜே.ஆர். மீதான அழுத்தத்தின் விளைவாகத்தான், தமிழ் மொழியுரிமை, மாகாணசபைகள் உள்ளிட்டவை அரசியலமைப்புத் திருத்தங்களினூடாகக் கிடைத்தன. இவை தமிழ்த் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறைந்தபட்சத்திலும் குறைந்தபட்சமானவை. 

அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பில் ஃப்ரெஞ்ச் மொழியில் “pouvoir constituant” என்று ஒரு கோட்பாட்டுப் பதமுண்டு. அதன் அர்த்தம், அரசியலமைப்பு ஒழுங்கை ஸ்தாபிக்கும், அதிகாரம் என்பதாகும். சுருங்கக்கூறின் கோட்பாட்டு ரீதியாகப் பார்ப்பின் அரசியலமைப்பே ஒரு நாட்டின் அதியுயர் அதிகாரத்தின் வௌிப்பாடாக இருக்கும் போது, அதனையும் தாண்டிய, அந்த அரசியலமைப்பை உருவாக்கும் பலம்தான் “pouvoir constituant” என்று விளிக்கப்படுகிறது. இலங்கை அரசியலமைப்பின் முன்னுரை இந்த “pouvoir constituant” ஆக இலங்கை மக்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், யதார்த்தத்தில் சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பும் தமிழ் மக்களின், ஆமோதிப்புடன் நிறைவேற்றப்பட்டவில்லை என்பதைவிட, அதனை ஆக்கும் பணியில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின், ஊடாக வௌிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை. ஆக இலங்கையின் “pouvoir const ituant”இன்  ஒரு பகுதி இந்த இந்த அரசியலமைப்புகளை ஆக்கவில்லை. ஆனால் இப்படிக் கூறுவதில் பல கோட்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன. “மக்கள்” என்பது ஒன்று, அதற்குள் பகுதிகள் இருக்க முடியாது என்பது மரபுரீதியான கோட்பாட்டுப் பார்வையாகும். ஃப்ரான்ஸின் சிவில் தேசம், பிராந்திய அடையாளங்களைக் கடந்த “ஃப்ரெஞ்ச்” தேசமெனும் “சிவில் தேச” அடையாளத்தைக் கட்டியெழுப்பி யதன்படி, “மக்கள்” என்பது, ஒன்று என்பது பிரச்சினைக்குரியதற்றதொன்றாகிறது. ஆனால், இனத்-தேசியத்தின்படி பிரிவடைந்துள்ள, குறைந்தபட்சம் இரண்டு இனத்-தேசங்களைக்கொண்டுள்ள நாட்டை, ஒற்றைச் சிவில் தேசத்தைக் கட்டியமைத்துள்ள ஃபிரான்ஸுடன் நேரடியாக ஒப்பிடுவது சிக்கலானது. ஆகவே, கோட்பாட்டு ரீதியில் இந்த வேறுபாட்டினை உள்வாங்கிக்கொள்வது அவசியமாகிறது. நிற்க. 

வர்த்தமானியில், பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20வது திருத்த மசோதாவைப் பொறுத்தவரையில், அது “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்யக்கூடிய,ஜே.ஆர் உருவாக்கிய சர்வாதிகாரமிக்க ஜனாதிபதியாக கோட்டாபயவை மாற்றும் மசோதாவாக இருப்பது வௌ்ளிடைமலை. இதை நாம் எதிர்பார்க்கவில்லை; என்று யாராவது வியப்படைந்தால், அவர்களுக்கு இலங்கை அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம். இந்த நாட்டின் வாக்காளர்கள் 2/3 பெரும்பான்மை வாரி வழங்கிவிட்டபின்னர், அதனை தமது அதிகாரத்தைத் தக்க வைக்க ஆட்சிபீடத்திலுள்ளோர் பயன்படுத்த மாட்டார்கள் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி கோட்டாபய விடம் அதிகாரம் குவிவதன் அரசியல் விளைவுகளை, அதன் பயனாக உருவாகக்கூடிய உட்கட்சி முறுகல்களை, ராஜபக்‌ஷ குடும்பத்தினுள், எழக்கூடிய முரண்பாடுகளைப் பற்றியெல்லாம் ஆரூடங்கள் ஆயிரம் உரைக்கலாம். அவை, கிளர்ச்சியுண்டாக்கும் அரசியல் கட்டுரைகளாகக் கூட அமையும். ஆனால், அவற்றின் அரசியல்ரீதியிலான முக்கியத்துவம் என்பது மிகக் குறைவானது. எந்த வகையிலான முறுகலும் ராஜபக்‌ஷ தரப்பினைக் குறைந்தபட்சம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு உடைக்கப்போவதில்லை. அவர்களுக்குள் உள்ள எந்த முரண்பாடும் ராஜபக்‌ஷ  குடும்பத்தின் வீட்டுவாசலைக் கடந்து சந்திக்கு வரப்போவதுமில்லை. ராஜபக்‌ஷ க்களின் பலம் என்பது அவர்களின் குடும்பம்தான். அதனை ராஜபக்‌ஷக்கள் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். 20ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் அதிகாரங்கள் குவிவது என்பது பெரும் பனிமலையின் முகடு மட்டும்தான். இனிவரவிருப்பதுதான் இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழ்த் தேசம் மற்றும் சிறுபான்மையினருக்கு பெரும் சவாலாக அமையக்கூடிய விடயம். அதுதான் புதிய அரசமைப்பு.  

புதிய அரசமைப்பு என்பது, “சிங்கள-பௌத்த” தேசியத்தின் நலன்காக்கும் அரசமைப்பாக மட்டுமன்றி, அதன் நலன்களை முன்னிறுத்தும் அரசமைப்பாக இருக்கும் என்பது திண்ணம். இந்த முறை வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் ஆளும் மொட்டுக்கட்சிக்கும் (கிழக்கில்), அதன் ஆதரவு மற்றும் நேச சக்திகளுக்கும் (வடக்கில்) வாரி வழங்கிய குறிப்பிடத்தக்களவிலான வாக்குகள், அதன் மூலம் அந்தத் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த “புதிய அரசமைப்புக்கு” வழங்கப்போகும் ஆதரவு, தமிழ் மக்கள் இந்தப் புதிய அரசமைப்புக்கு வழங்கிய அங்கிகாரமாக, பொருள்கோடல் செய்யப்படும் என்பதும் நிச்சயம். இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். 2015-2020 வரை “நல்லாட்சி அரசாங்கத்தின்” பங்குதாரியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்தது என்பது வௌ்ளிடைமலை.

இந்தக் காலப்பகுதியில் வடக்கு-கிழக்கின் பொருளாதாரம் பற்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி இம்மியளவேனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யோசித்து, அதற்குரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்தியிருக்குமேயானால், வேலைவாய்ப்பு வேண்டித் தமது வாக்குகளை அடகுவைக்க வேண்டிய தேவை, தமிழ் மக்களுக்கு வந்திருக்காது. தேசியத்தை வாய்ச்சொல்லால் மட்டும் விற்றுப்பிழைத்துவிடலாம் என்ற கிழட்டுச் சிந்தனையை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டதன் பட்டவர்த்தனமான சமிக்ஞை இது. ஆனால், இதன் விளைவுகூட தமிழ் மக்களை எதிர்மறையாகப் பாதிக்கத்தான் போகிறது.

13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற தீவிர “சிங்கள-பௌத்த” தேசியவாதிகளின் முப்பதாண்டுகளுக்கும் மேலான, அவா தற்போது நிறைவேறக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. இந்தியா என்பது அதற்கான பெரும் முட்டுக்கட்டை. ஆனால், ராஜிவ் காந்தியின் 13ஆம் திருத்தத்தைப் பாதுகாக்க நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் எவ்வளவு அக்கறை காட்டும் என்பது முக்கியக் கேள்வி. இந்தியாவின் வௌியுறவுக் கொள்கை இன்னமும் தெற்காசியாவின் பெரியண்ணன் என்ற சிந்தனையின் தொடர்கிறதா என்பது அடுத்த கேள்வி. பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இன்று நேபாளம் என அயல்நாடுகள் அனைத்துடனும் முறுகல் நிலையைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு, இன்னோர் அயல் நாடுடன் முறுகலில் ஈடுபடும் சக்தி இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

மறுபுறத்தில் இந்திய நலன்கள் தொடர்பில் ராஜபக்‌ஷ அரசாங்கம் கவனத்துடன் நடந்துகொள்ளும்வரை, தமிழ் மக்கள் பற்றி இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்பது, இந்தியா இலங்கையில் தலையிடுவதற்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குமான ஒரு துருப்புச் சீட்டு. அவ்வளவுதான். அதற்குத் தமிழ் மக்கள் மீதான கரிசனை, அக்கறை, மனிதாபிமானம் என, ஆயிரம் அலங்கார வார்த்தைகள் கொண்டு யாரும் அழகுசேர்த்துச் சொல்லலாம். ஆனால் அப்பட்டமான உண்மை யாதெனில், இந்தியாவின் அத்தனை நகர்வுகளும் இந்திய நலன் சார்ந்தது, மட்டுமேயன்றி வேறில்லை. ஆகவே, இன்றைய சூழலில் 13ஐத் தக்க வைத்துக்கொள்ள இந்தியா எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கும் என்பது ஐயத்துக்குரியதே. 13ஆம் திருத்தமும் மாகாணசபைகளும் போய்விட்டால், தமிழ்த் தேசத்தின் அரசியல் நிலை என்ன?

(தொடரும்)
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசமைப்பு-அரசியலும்-தமிழ்த்-தேசமும்/91-255192

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் - 02

 

என்.கே. அஷோக்பரன்   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 11:44 - 0     - 16

 
 

(கடந்த வாரத் தொடர்ச்சி)

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, 13ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படுமா என்ற விடயம் பற்றி நிறைய ஆரூடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

இது இல்லாதொழிக்கப்பட்டால், அது யாருக்குச் சாதகமானது, யாருக்குப் பாதிப்பானது, இது தமிழ் மக்களுக்குப் பாதகமானதொன்றா என்று பார்ப்பதற்கு அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் மூலமான மாகாண சபை முறை யாருக்கானது என்ற கேள்வியை நாம் முதலில் எழுப்ப வேண்டும். 

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13ஆவது திருத்தம், இந்த நாட்டின் பெரும்பான்மையின மக்களையும் சரி, சுயாட்சி வேண்டிய சிறுபான்மையின மக்களையும் சரி திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. 

தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில், சுயநிர்ணய உரிமையின்பாலான சுயாட்சியை வேண்டியதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையாகும். ஆனால் 13ஆம் திருத்தம் செய்தது என்ன? அது, இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்துக்குமென ஒரு மாகாண சபையை ஸ்தாபித்தது. வடக்கு-கிழக்குக்குத் தற்காலிகமானதோர் இணைப்பை ஏற்படுத்தியது. அந்த இணைப்பு முறைப்படி செய்யப்படாததன் விளைவுதான், 2006இல் ஜே.வி.பி-யினர் தாக்கல் செய்த மனுவில், இலங்கை உயர் நீதிமன்றம் வட-கிழக்கு இணைப்பானது அரசமைப்புக்கு முரணானதும், சட்டவிரோதமானதும், வலிதற்றதுமானதும் என்ற தீர்ப்பை வழங்கியதன் பாலாக வட-கிழக்கு பிரிவடைந்தது. 

ஆகவே, இங்கு தீர்வு தேவைப்பட்டது, வடக்கு-கிழக்குக்கு தான். ஆனால், 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை வடக்கு-கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒரே ஒரு தேர்தல் தான் நடந்தது. அது 2 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதிலேயே வலுவில் இருந்தது. அதன் பின்னர், கிழக்கு மாகாண சபை 2008, 2012 என இரு தரமும், வடக்கு மாகாண சபை 2013இல் ஒரு தரமும் பதவிக்கு வந்தது. ஆகவே, 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்து ஏறத்தாழ 33 ஆண்டுகளில், வடக்கு-கிழக்கில் மொத்தம் 4 தடவைகளே மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து, மாகாண சபைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டன. அதிலும் 32 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 ஆண்டுகள் வடக்கு-கிழக்கு மாகாண சபையும் 9 ஆண்டுகள் கிழக்கு மாகாண சபையும் 5 ஆண்டுகள் வடக்கு மாகாண சபையும் உயிர்பெற்றிருந்தன. ஆகவே, வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் அந்த மாகாணங்களில்தான் மிகக்குறைந்தளவு காலம் இயங்கின.  

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_960430cea1.jpgமறுபுறத்தில், 13ஆம் திருத்தம் மூலமான அதிகாரப்பகிர்வு அர்த்தமற்றது என்ற விமர்சனமும், அதிருப்தியும் தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக பதிவுசெய்துவருமொன்றாகும். ஒரு மிகைப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி சபையாக மாகாண சபைகளை ஸ்தாபித்தன என்பதைத் தாண்டி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு 13ஆம் திருத்தத்தினூடாக வழங்கப்படவில்லை. 

இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களுக்குத் தேவைப்படாத, சிறுபான்மையின மக்களைத் திருப்தி செய்யாத 13ஆம் திருத்தம் ஏன் கொண்டுவரப்பட்டது என்ற கேள்விக்கு ஒரே பதில், இந்தியா. இந்தியாவின் தீவிர அழுத்தம் மட்டும்தான் ஜே.ஆர். அரசாங்கமாக இருக்கட்டும், தமிழ்த் தரப்பாக இருக்கட்டும், விரும்பியோ விரும்பாமலோ 13ஐ அமைதியாக சகித்துக்கொள்ளக் காரணம்.   

எது எவ்வாறாயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13ஆம் திருத்தத்தினதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினதும் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எழுத்து மூலமாக இலங்கை ஒரு பல்லின, பல மொழிகள் கொண்ட பன்மைத்துவ சமூகம் என்பதையும், ஒவ்வோர் இனச் சமூகத்துக்கும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட, வேறுபட்ட கலாசாரம், மொழி அடையாளம் ஆகியன உள்ளன என்பதையும், எல்லாவற்றிலும் முக்கியமாக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசம் என்பதையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ள ஒரு முக்கிய ஆவணம் இந்திய-இலங்கை ஒப்பந்தம். 

மேலும், இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுதான் தீர்வு என்பதை ஏற்றே மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. அதன் வாயிலாக அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாகவே 13ஆம் திருத்தம் மாறிப்போனது. அதன் பின்னரான அதிகாரப் பகிர்வு என்பது 13+, 13- என்று பேசப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆகவே, இந்த வகையில் 13ஆம் திருத்தத்தின் முக்கியத்துவத்தை நாம் மறுத்துவிட முடியாது. 

13ஆம் திருத்தத்தை தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக நிராகரிக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் நியாயங்களில் பல உண்மைகளும் உள்ளன. தனது அமைச்சரவையில் மாற்றங்களைக் கூட தான் செய்யமுடியாத நிலையில்தான் மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை கடந்த வடக்கு மாகாண சபையின் அனுபவத்திலிருந்து நாம் அறிந்துகொண்டோம்.

ஆகவே, 13ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் அபிலாஷைகளின் ஒரு பகுதியைக் கூடப் பூர்த்தி செய்வதாக இல்லை. அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல் தீர்வு என்ற அடிப்படையைத் தாண்டி, 13ஆம் திருத்தம் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வாக அமையவில்லை.  

தீவிர தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் 13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்படுவதை சாதகமாகவே பார்க்கக்கூடும். ஏனெனில், அதை அவர்கள் இலங்கையின் யதார்த்த நிலையின் மிகச்சரியான பிரதிபலிப்பாக பார்ப்பார்கள். எந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் இல்லாத ஒரு கட்டமைப்பை இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வாக வைப்பதை அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அந்த அர்த்தமற்ற கட்டமைப்பு களையப்படும் போது, உண்மை நிலை வெட்டவௌிச்சமாகும். 

இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கேள்வி வரும்போது, சாக்குப்போக்கு நியாயத்துக்குக் கூட மாகாண சபைகள் இருக்காது. அந்தவகையில் பார்த்தால், மாகாணசபை முறையை இல்லாதொழிப்பது என்பது அரசாங்கத் தரப்புக்குச் சாதகமற்றதொன்றே.  

மறுபுறத்தில், 13ஆம் திருத்தம் ஸ்தாபித்த மாகாண சபைகள் இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குத் தேவையில்லாத ஒரு கட்டமைப்பு. அதனால்தான் இன்று சில “சிங்கள-பௌத்த” இனத் தேசியவாதிகள் மாகாணசபை முறை என்பது ஒரு தேவையற்ற ‘வௌ்ளை யானை’ என்கின்றனர். இங்கு இன்னொரு முரண் நகையாதெனில், அதிகாரப்பகிர்வு கேட்ட வடக்கு-கிழக்கைத் தவிர ஏனைய மாகாணங்களில்தான் மாகாணசபைகள் அதிக காலம் இயங்கியிருக்கின்றன. ஆனால் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 32 ஆண்டுகளில், மாகாண சபை என்பது இலங்கை அரசியலின் முக்கிய கட்டமைப்பாக மாறியிருக்கிறது. 

முன்பு உள்ளூராட்சி மன்றங்கள், அதற்கு மேலாக நாடாளுமன்றம் என்று கட்டமைந்திருந்த அரசியலில், இரண்டுக்கும் நடுவிலான கட்டமைப்பாக மாகாண சபைகள் உருவெடுத்தன. இன்று நாடாளுமன்ற அரசியலிலுள்ள சில குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் தமது அரசியலை மாகாண சபைகளில் தொடங்கியவர்களே. அவர்களுக்கு மாகாண சபைகள் ஒரு படிக்கல்லாக அமைந்தன என்றால் மிகையாகாது. இன்று நாடாளுமன்றத்தில் உள்ள குறிப்பிடத்தக்க இளைய அரசியல்வாதிகள் கூட, தமது அரசியல் வாழ்க்கையை மாகாண சபை ஊடாக ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் உள்ளூராட்சி மன்ற அரசியலில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்தவர்கள். ஆயினும் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்கான வெற்றிடம் இல்லாமல் இருந்த பலருக்கு, மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றிலிருந்தான ஒரு “பதவி உயர்வாக” அமைந்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம். 

ஆகவே இன்றைய சூழலில், கட்சி அரசியலில் மாகாண சபையின் வகிபாகம் முக்கியமானதொன்றாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த மாகாணசபைகள் முறை ஒழிக்கப்பட்டால், இந்தப் பிரதான கட்சிகளில் மாகாண சபை உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகும். இது கட்சி ரீதியான அரசியலில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும். இதற்குத் தமிழ்க் கட்சிகளும் விதிவிலக்கல்ல.   

இன்று ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஓர் அனுகூலமான சந்தர்ப்பம் உண்டு. அது புதிய கட்சி என்பதால், அதற்கு ஏலவே மாகாண சபை அரசியலில் உள்ளவர்கள் என்று யாரும் கிடையாது. அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளனர், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். 
ஆகவே மாகாண சபை முறையை இல்லாதொழிப்பதில் ஏனைய கட்சிகளை விட இவர்களுக்குச் சவால் என்பது குறைவானதே. ஆனால், அது நாடாளுமன்றம் செல்ல முடியாத அவர்களது கட்சியினரையும், உள்ளூராட்சி மன்றிலிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது, அவர்களது கட்சியினரையும் கடும் விசனத்துக்கு உள்ளாக்குவதாக அமையலாம்.   

13ஆம் திருத்தம் இருந்தாலும், இல்லாது போனாலும், நடைமுறையில் அது தமிழ்த் தேசிய அரசியலின் மீதான அதன் தாக்கம், மேற்சொன்ன அனைவருக்கும் பொதுவான கட்சி அரசியல் சிக்கலைத் தாண்டி, அடையாளப்பூர்வமானது மட்டுமே. இன்று தமிழ் மக்கள் முன்னிருக்கும் கேள்வி இதுதான், .   ஒன்றுமே தராத 13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்படலாமா அல்லது ஒன்றுமே இல்லாததற்கு 13ஆம் திருத்தமாவது இருப்பது நல்லதா என்பதாகும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசமைப்பு-அரசியலும்-தமிழ்த்-தேசமும்-02/91-255358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.