Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் – டாக்டர் ஜி. ராமானுஜம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம்

 
spacer.png
 

2-1.jpg

 

ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர்.

‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில்   ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை.  1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பாடல்கள்  அவரை உடனடி நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தின.

1966 இல் ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார் எஸ்பிபி. தமிழில் அவர் வரவு எழுபதுகளின் தொடக்கமாக அமைகிறது. சிவாஜி, எம் ஜி ஆர் ஆகியோருக்கு வழக்கமாகக் கம்பீரக் குரலில் பாடிவரும் டி எம் எஸ் குரலுக்குப் பதிலாக அப்போது பிரபலமாகி வந்த  ஹிந்திப்பாடல் அலைகளின் தாக்கத்தில் மென்மையாகவும் , சிருங்காரமாகவும், காதல் உணர்வுடன் ரசித்துப் பாடும் பாணியிலான ஒரு பாடகனின் தேவையை எஸ்பிபி பூர்த்தி செய்தார். பி.பி ஸ்ரீனிவாஸ் இது போன்ற மென்மையான பாடல்களைப் பாடிவந்தார். ஆனால் அவரை விட  இளமைக்குறும்பு, உற்சாகம் ஆகிய குணங்கள் அதிகம் அமையப்பெற்று ஒரு புதுப் பாணியை அமைத்துக் கொண்டார் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்.  (பிறப்பு  ஜூன் 4 1946.)

நெல்லூரைச் சேர்ந்த அவரது தந்தை சாம்பமூர்த்தி ஹரிகதை வித்வான். தாய் சகுந்தலா அம்மாள் சென்ற வருடம் (2019) காலமானார்.

பாலுவின் தமிழ்ப்படத் திரை வாழ்க்கையை மூன்றாகப் பிரிக்கலாம்.

1.எம் எஸ்வி , கே.வி. மகாதேவன் , விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய எழுபதுகள்

2.இசைஞானி இளையராஜா கோலோச்சிய எண்பதுகள்

3.ஏ.ஆர்.ரஹ்மான் , வித்யாசாகர் போன்றோர் தடம்பதித்த தொண்ணூறுகள் தொடங்கி இன்று வரை.

120127521_1482229421974772_4594808092033

 

ஆரம்பத்தில் சொன்னது போல்  கம்பீரமான டி. எம்.எஸ் பாணியிலிருந்து வித்தியாசமான மென்மையாகவும் , மெல்லிய சோகமான பி பி ஸ்ரீனிவாஸ் பாணியிலிருந்து மாறுபாடாக உற்சாக இளமைத் துள்ளலாகவும் தனது பாணியினையும் இருப்பினையும் உறுதி செய்து கொண்டார்.

அதற்கு ஏற்றாற்போல் நடிகர்களின் திரைவாழ்வுகளிலும் மாற்றங்கள் வந்தன. எம் ஜி ஆர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை நோக்கிச் செல்ல சிவாஜி கணேசன் தனது உச்சத்திலிருந்து மெதுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். விஜயகுமார்,.முத்துராமன், ஜெய்கணேஷ், சிவக்குமார் போன்ற நடிகர்கள் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் ”ஆயிரம் நிலவே வா” (அடிமைப்பெண் 1969),  ”அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன் 1973) ’’ பாடும்போது நான் தென்றல் காற்று’’  ( நேற்று இன்று நாளை 1974) என எம்ஜிஆருக்கும் ,பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி 1971) இரண்டில் ஒன்று ( ராஜா 1972) என சிவாஜிக்கும் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். அதன்பின் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுக்காக மகத்தான சில பாடல்களைப் பாடியுள்ளார்.

விஜயபாஸ்கர் இசையில் சம்சாரம் என்பது வீணை (மயங்குகிறாள் ஒரு மாது- 1975)  சங்கர் கணேஷ் இசையில் அவள் ஒரு மேனகை  (நட்சத்திரம்- 1980) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார் .

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் இசையில் வந்த சங்கராபரணம் (1979) அவருக்கு முதல் தேசிய விருதைத் தந்தது. அப்பாடல்கள் செவ்வியல் பாணியிலும் தன்னால் பாட முடியும் என அவர் நிரூபித்ததற்கு சாட்சி.

என்றாலும்…..

எழுபதுகளில் பாலசுப்ரமணியத்தின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்தது எம்எஸ் விஸ்வநாதனின் இசை என்றால் அது மிகையாகாது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பாணியில் இருந்து வெளியே வந்து புதுப் பாணியிலே மெட்டுக்களை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு பாடகர்களின் குரல் வளத்தை மிகவும் உறுதியாக  நம்பி ஏற்ற இறக்கங்கள் எனப்படும் சங்கதிகள் கமகங்கள் ஆகியற்றை மிகவும் இனிமையாக அமைத்தது எம் எஸ் வி பாணி. கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் தத்துவ வரிகளை சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களின் பாடுவது அல்லது   வாலியின் வரிகளில் எம்ஜிஆரின் ஆளுமையை புகழ்ந்து பாடுவது   ஆகிய இரண்டை முக்கியமான பணியாக வைத்திருந்த டிஎம்எஸ் பாணியை விட்டு வெளியே வந்த எம்எஸ் விஸ்வநாதனின் ஒரு புது பாணிக்கு ஆணிவேராக இருந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

எழுபதுகளில் எம்எஸ் விஸ்வநாதனின் இசை அமைப்பில் உச்சத்தைத் தொட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

அதற்கு ஏற்றவாறு கமலஹாசன் என்னும் ஒரு மகா கலைஞனும் பாலச்சந்தர் என்னும் ஒரு திறமையான இயக்குனரும் சேர்ந்துகொள்ள அற்புதமான பல படைப்புகள் வெளிவந்தன அவற்றின் இசை அச்சாணியாக இருந்தவர் பாலு.

SP-Balasubrahmanyam_7_1200-300x200.jpg

 

அவள் ஒரு தொடர்கதை(1974) திரைப்படத்தில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடல் ஒரு கிளாசிக்.  காதல்  தோல்வியின் பின்னணியில் ஒரு கலைஞன் பாடும்  பாடலாக அமைந்த இந்தப் பாடலில் பின்புலமாக சதன்  என்ற கலைஞன் தனது மிமிக்கிரி திறமையால் விலங்குகள் பறவைகள் ஏரோபிளேன் போன்ற ஒலிகளை அற்புதமாக எழுப்பி இருப்பார்.

அவற்றையெல்லாம் தாண்டி எஸ் பி பாலசுப்ரமணியம் தன்னுடைய பாவம் என்னும் உணர்ச்சிப் பெருக்கால் அந்தப் பாடலை ஒரு வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.

இப்படத்தின் தெலுங்கு வடிவில் இப்பாடலை எஸ் பி பியே மிமிக்ரி குரல்கள் எழுப்பிப் பாடியிருப்பதை யூட்ட்யூப்பில் கேட்கக் கிடைக்கிறது. பார்த்தால் அசந்து விடுவோம்.

அதே எம்எஸ்வி ,கமல் ,பாலசந்தர், எஸ்பிபி கூட்டணி. படம் அவர்கள் (1977). அதிலே அதே காதல் தோல்வி, அதே சுஜாதா, கமல்.  ஆனால் அதைவிட ஒரு மிகச் சிறப்பான ஒரு பாடல் ‘ இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்’ என்ற ஒரு அற்புதமான பாடலை அனுபவித்து ரசனையுடன் பாடியிருப்பார் பாலு.

எம் எஸ் வி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் சிறப்புகள் இரண்டு.

ஒன்று அவர் தன்னுடைய பாவத்தினை அதாவது உணர்ச்சி பெருக்கால் பாடியது இரண்டாவது அந்த மெட்டுக்களில் சங்கதிகள் எனப்படும் ஏற்ற இறக்கங்களை வளைந்து நெளிந்து குழைந்து பாடிய மழலைப் பட்டாளம் (1980) என்ற திரைப்படத்தில் வரும் கௌரி மனோஹரியை கண்டேன் என்ற பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் ஒவ்வொரு கௌரிமனோகரியையும் ஒவ்வொரு மாதிரி பாடியிருப்பார் .’ மலைமீது அடித்தாலும் காற்று .அது கடல் மீது தவறினாலும் காற்று .வயதோடு வந்தாலும் காதல்! அது வயதாகி வந்தாலும் காதல்!’  என்று ஒவ்வொரு இடத்திலும் காற்றும் காதலும் ஒவ்வொரு விதமாக ஏறி இறங்கும் அந்த பாணிதான் எஸ் பி பாலசுப்ரமணியம் மேஜிக்.

 நினைத்தாலே இனிக்கும் (1979) திரைப்படத்தில் வரும்  பாரதி கண்ணம்மா என்ற பாடல் நிழல் நிஜமாகிறது (1978) படத்தின் கம்பன் ஏமாந்தான் என்ற பாடல் மற்றும் இலக்கணம் மாறுமோ என்ற பாடல் ஆகியவை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது.

  spb1200-2-300x167.jpg

 

பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற பாடல் தில்லு முல்லு ( 1981) திரைப்படத்தில் ராகங்கள் பதினாறு என்ற பாடல் ‘வறுமையின் நிறம் சிகப்பு  (1980) படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ ‘தீர்த்தக்கரையினிலே’ ‘ நல்லதோர் வீணை செய்தே’ என்ற ஏராளமான பாடல்களை மறக்கமுடியாத பாடல்களாக அமைத்திருக்கின்றன.  47 நாட்கள் (1981) என்ற திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் மான் கண்ட சொர்க்கங்கள் என்ற பாடலை பாடியிருப்பார்  அந்தப் பாடலை கேட்பவர்களுக்கு தெரியும் கிளாசிக் என்றால் என்னவென்று. மீக நீண்ட பாடல். அதைத் தன் குரல் ஒன்றாலேயே தூண்போல் நிலை நிறுத்துகிறார் பாலு.

இதே எம்எஸ்வி -கமல்- எஸ்பிபி கூட்டணியில் இன்னொரு மகத்தான பாடல் சிம்லா ஸ்பெஷல் (1982)  திரைப்படத்தில் வரும்’ உனக்கென்ன மேலே நின்றாய் ‘என்ற பாடல்.

ஒரு பாடல் எந்த கட்டத்தில் இருக்கிறது அந்தப் பாடலைப் பாடும் நாயகன் எந்த உணர்வுடன் அந்தப் பாடலைப் பாடுகிறான் என்பதை முழுமையாக உள்வாங்கி அந்த உணர்வை நூற்றுக்கு நூறு சதவிதம் வெளிப்படுத்தும் ஆற்றல் எஸ் பி பாலசுப்ரமணியம் அளவுக்கு யாருக்குமே இருந்ததில்லை அவர் முறையாக இசை படித்ததில்லை என்றாலும் இந்த உணர்வு பூர்வமாக பாடும் பணியினால் அவர் மிகப் பெரும் வெற்றி பெற்றவராக அமைந்தார்.

எஸ்பிபியின் இசைவாழ்வின் அடுத்த கட்டத்தில் அவரது நண்பர் மற்றும் அவரது இசைக்குழுவில் இருந்த இளையராஜா தமிழ்த்திரை உலகிற்கு 1976 இல் அறிமுகமாகிறார்.

– அடுத்த பாகத்தில்…

 

https://uyirmmai.com/music/tribute-to-s-p-balasubrahmanyam/

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ் பி பி: காதலிக்க வந்த கலைஞன் 2 -டாக்டர். ஜி. ராமானுஜம்

SPB.jpg

ஆலிவர் சாக்ஸ் என்ற ஒரு மிகப் பெரிய புகழ் பெற்ற மூளை இயல் நிபுணர் மியூசிக்கோஃபிலியா (Musicophilia)  என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதாவது இசைப் பித்து. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவர் சொல்லியிருக்கிறார்- மனித இனம்  வாழ்வதற்கு இசையால்   உயிரியல் ரீதியாக எந்த உபயோகமும் இல்லை.இசை இல்லாமல் உயிரினங்கள்  பல்லாயிரம் நூற்றாண்டுகள் கூட இருக்கும். இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கும்- என்கிறார் அவர்.  இசை என்பதையே சுத்தமாக துடைத்து அழித்து விட்டால் கூட  மனித இனம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.  உயிரோடு இருக்கும். அந்த வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்குமா என்பது தெரியாது. நல்ல ஒரு ரோபோவிடம் ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தால் அது இசைக்கும் . ஆனால் அதனால் ‘பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ‘ என்று பாடிக்கொண்டிருக்கும் போதே ஒரு இடையில் ஒரு சிரிப்பு வருமே. அப்படி சிரிக்க முடியுமா? .நம்முடைய  எந்திரத்தனமான
வாழ்க்கைக்கு உயிர்மை கொடுத்த ஒரு கலைஞன் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

spb7-1598012026-300x169.jpg
 

அவரது இசை வாழ்க்கையிலே இரண்டாம் கட்டம் என்பது அவருடன் இசைக்குழுக்களில் நெருக்கமாக இருந்த இசைஞானி இளையராஜா தமிழ் திரை உலகிற்கு அன்னக்கிளி ( 1976) படம் மூலம் அறிமுகமான  பின்னே தொடங்கியது. முதல் கட்டுரையில்  சொன்னது போன்று எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாணி பாடகர்களின் குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால் இளையராஜாவின் பாணி என்பது அதிலிருந்து வேறுபட்டது. இசைக்கருவிகளுக்கும் ஆர்கெஸ்ட்ரா எனப்படும் இசைஅமைப்புக்கும் அதில் பாடகர்களுக்குச் சமமான பங்கு இருக்கும். இசைஞானியைப் பொறுத்தவரை குரலும் ஒரு இசைக்கருவியே. இசைக்கருவிகளும் இசைக்கலைஞனின் குரலே. ஆக குரலிலே மட்டுமே கொண்டுவரக்கூடிய பாவங்களை, உணர்வுகளை எல்லாம் இசைக்கருவிகள் மூலமும் தரமுடியும் என நிரூபித்தவர். மேலும் அவர் ஒரு கறார்வாதி. தான் எழுதியதை மிகச் சரியாகப் பாடகர்கள் பாடினால் போதும் என எண்ணுவார். தனது இசைமேல் அபாரத் தன்னம்பிக்கை உடையவர். ஆனால் இங்கு பாடகர்  பேரெடுப்பது இன்னும் சவாலாக ஆகிறது. அந்தச் சவாலை மிக எளிதாக எதிர்கொண்டார் எஸ்பிபி.

கொஞ்சம் கட்டுப்பாடுகள் கூடுதலாக உள்ள சூழலில் அவர் செய்த சாதனை என்னவென்று பார்த்தால் அற்புதமான இசையமைப்பு உள்ள ஒரு பாடலை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் என்று இருந்ததைத் தனது குரல் வளத்தாலும் , இனிமையாலும், ஈடுபாட்டுடன் உணர்வுப்பூர்வமாகப் பாடும் முறையாலும் ‘ இந்தப் பாடலை எஸ்பிபி தவிர யார் பாடினாலும் எடுபடாது’ என்று தோன்ற வைத்திருக்கிறார். சிறந்த ஒன்றை ஆகச் சிறந்ததாக ஆக்குவது மிகக் கடினம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.

ராஜபார்வை(1981) திரைப்படத்தில் அமைந்திருக்கும் அந்தி மழை பொழிகிறது என்ற பாட்டை நினைத்துப் பாருங்கள் .இந்த பாடலில் பாடல் வரிகள் தொடங்குவதற்கு முன்பே அந்த பாடல் ஒரு ஹிட் ஆகிவிட்டது.  இசைக் கருவிகள் மற்றும் ஹம்மிங்க் மூலம் ஒரு மிகப் பிரமாதமான தொடக்கத்தை கொடுத்து இருப்பார் இளையராஜா . இந்தப் பாடல் தொடங்கும் பொழுது அந்தி மழை பொழிகிறது என எஸ் பி பாலசுப்ரமணியம் எடுக்கும்போது அந்த இசைக் கருவிகளுக்கு இணையாக அவற்றை மேலும் அழகுபடுத்த செழுமைப்படுத்த தனது குரலால் ஆரம்பிப்பார்.

dc-Cover-ubnl22pjf4qj2b5hdmtn1irr07-2017

 

பயணங்கள் முடிவதில்லை (1982) திரைப்படத்தில் வரும் இளையநிலா பொழிகிறது என்ற பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். கிதார், புல்லாங்குழல் என இசைக்கருவிகளின் ஒத்திசைவில் ராஜா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கி உள்ளார்.  வைரமுத்துவின் சிறப்பான பாடல் வரிகள் வேறு.. இவையிரண்டையும் தாண்டி அப்பாடலைத் தனது குரலால் செழுமைப் படுத்தியிருப்பார் பாலு.

பலரும் பார்த்த ஒரு வீடியோ ஒன்று உண்டு.ஒரு மேடைக் கச்சேரி. இளைய நிலா என பாலு எடுத்தவுடனேயே அரங்கம் அதிர்கிறது. அடுத்து வரும் இசைக்கருவிகளின் இசையைக் கேட்டு மெய்மறக்கிறது அரங்கம். அப்போது தலைசிறந்த புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி ஒரு துணுக்கை வாசிக்கும் போது தவறான சுருதி புல்லாங்குழலை எடுத்துவிடுகிறார். அப்படியே நின்று விடுகிறார். எஸ் பி பி சமாளித்து வாயாலேயே ‘ தாரத் தர தர’  என ஹம்மிங் கொடுத்து பாடி முடிக்கிறார். ஆனாலும் என்னவோ குறைந்த உணர்வு. எஸ்பிபி அருண்மொழிக்காக மீண்டும் ஒரு முறை பின்னணி இசையை வாசிக்கச் சொல்ல பிரமாதப் படுத்துகிறார் அருண்மொழி. அரங்கம் அதிர்கிறது.

இந்த நிகழ்வின் மூலம் மூன்று விஷயங்கள் தெரிகின்றன. இளையராஜாவின் இசைத் துணுக்குகள் பாடலோடு கலந்தவை. அவை இல்லாமல் பாடினால் முழுமை இல்லாமல் இருக்கும். இரண்டாவது அவற்றை எஸ் பி பி பாடுவது அழகிற்கு அழகு சேர்ப்பது போல. வேறு யார் பாடினாலும் கொஞ்சம் குறையாகத்தான் உணர்வோம். மூன்றாவதாக எஸ் பி பி என்னும் மகா கலைஞனிடம் இருக்கும் மனித நேயம்.

இளையராஜாவின் இசையில் இசைக்கருவிகளுடன் பின்னிப் பிணைந்து ஒலிக்கத் தொடங்கியது எஸ் பி பி யின் குரல்.  உதயகீதம் (1985) படத்தில் வரும் சங்கீத நேரம் என்ற பாட்டாக இருக்கட்டும், தளபதி (1991) திரைப்படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதியாக இருக்கட்டும் மெல்லத் திறந்தது கதவு(1986) இசை எம் எஸ் வி- இளையராஜா) படத்தின் வா வெண்ணிலா வாக இருக்கட்டும்,  இளமை ஊஞ்சலாடுகிறது(1978) திரைப்படத்தின் ஒரே நாள் உனை நான் ஆகட்டும் பாடல்களின் அதியற்புதமான பின்னணி இசையை உன்னதமாக்குவது எஸ்பிபியின் குரலே. சில மேடைக் கச்சேரிகளில் அவர் பாடிய பாடலை வேறு சிலர் பாடும் போது அந்த உயிர்த்தன்மை குறைவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

எஸ்பிபியின் இசைப் பயணத்தின் மூன்றாவது காலகட்டம் தொண்ணூறுகளில் தேவா ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் என இளம் இசையமைப்பாளர்களோடு பணியாற்றுவதில் தொடங்குகிறது. சாதி மல்லி பூச்சரமே (அழகன்-1991), மலரே மௌனமா (கர்ணா -1995) நலம் நலமறிய ஆவல் (காதல் கோட்டை -1996) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் ஆகச் சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறார் . குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலப் படங்களில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அற்புதமானவை. இளையராஜவின் இசைத் துல்லியமும்  எம் எஸ் வி பாணியில் பாடகர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் அளிக்கும் தன்மையும் கொண்ட பாணியில் அமைந்தவை அவை. காதல் ரோஜாவே (ரோஜா-1992), தொடத் தொட மலர்ந்ததென்ன (இந்திரா-1995) , அழகான ரட்சசியே (முதல்வன்-1999), தங்கத் தாமரை மலரே (மின்சாரக் கனவு-1997), அஞ்சலி அஞ்சலி, என் காதலே என் காதலே ( டூயட்-1994) , பெண்ணல்ல பெண்ணல்ல (உழவன்-1993) என இனிமையும் இளமையும் புதுமையும் நிரம்பி விழியும் பாடல்கள் அவை.

எழுபதுகளில் எம் எஸ் வி யுடனும் எண்பதுகளில் இளையராஜாவின் காலத்திலும் ரஹ்மான் கோலோச்சிய தொண்ணூறுகளிலும் இவர்களோடும் இன்னும் பல இசையமைப்பாளர்களோடும் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். இன்றைய காலத்தின் அனிருத் வரை.

spb1200-300x167.jpg

 

பாடலுக்கு மூன்று அடிப்படையான விஷயங்கள் ராகம், தாளம் மற்றும் பாவம். இதில் ராகம் என்பது சுருதி மாறாமல் சங்கதிகளை இனிமையாக பாடுவது. இதில் எஸ் பி பி ஒரு மாஸ்டர். முறைப்படி இசை கற்கவில்லை என்றாலும் தன்னுடைய இயல்பான பிறவி ஞானத்தால் பாடல்களை அவை அமைந்திருக்கும் ராகம் மற்றும் சுருதி விலகாமல் பாடக் கூடியவர். ஆரம்பத்தில் இளையராஜாவும் இவரைப் போலவே மேற்கத்திய , கர்னாடக இசை அடிப்படைகளைக் கற்கா விட்டாலும் தான் கேட்கும் இசையை அப்படியே ஆர்மோனியத்தில் வாசிக்கும் ஆற்றல் படைத்திருந்தார். பின்னர் அவர் முறைப்படி இசை கற்றார். அது போன்ற ஒரு ரா டேலண்ட் (Raw talent) ஆக இருந்தவர் எஸ்பிபி தன்னுடைய இசை அறிவின் மூலம் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பல பாடல்களை ஆகச் சிறப்பாகப் பாடியிருப்பார் . ரீதிக்கௌளையில் தலையைக் குனியும் தாமரையே (ஒரு ஓடை நதியாகிறது-1983) , கல்யாணியில் வந்தாள் மகாலட்சுமியே (உயர்ந்த உள்ளம் -1985), நதியில் ஆடும் பூவனம், மோகனத்தில் பூவில் வண்டு கூடும் ( காதல் ஓவியம்-1982), தர்மவதியில் இளம் சோலை பூத்ததா (உனக்காகவே வாழ்கிறேன்-1986), சிந்துபைரவியில் வளையோசை கலகலகலவென (சத்யா-1988) என ஏராளமான கர்னாடக இசை ராகங்களில் அமைந்த பாடல்களை சிறப்பாகப் பாடியிருப்பார்.

31g48Y5PbL-300x225.jpg

 

அடுத்ததாக பாடலின் ஜீவனாக விளங்கக்கூடியது பாவம். அதுதான் எஸ்பிபியை  கேட்பவர்களிடம் மிகவும் நெருங்க வைக்கிறது. கிண்டல், ஊற்சாகம், காதல், நட்பு, பிரிவு, சோகம் , காமம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் குரலில அப்படியே கொண்டுவருபவர் அவர். பொன்மானே சங்கீதம் பாடவா எனக் காதலிப்பார் ;  காதல் ரோஜாவே எனப் பிரிவுத்துயரில் ஏங்குவார், அடேய் நண்பா உன்னை வெல்வேன் எனச் சவால் விடுவார்; நான் ஆட்டோக்காரன் என உற்சாகமாகத் துள்ளவும் முடியும். அப்பாடலைக் கேட்பவர்கள் அவர் தங்களுக்காகவே பாடுகிறார் என உணர வைத்தார். அப்பாடல் அவர்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமாகி எஸ்பிபி மானசீகமாகத் தங்கள் தோள் மீது கைபோட்டு, அரவணைத்து, ஆறுதல் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதுவே அவரது இழப்பினை தங்களது சொந்த சோகமாகக் கருத வைத்தது.

எஸ்பிபி வெறும் திரைப்பாடகர் மட்டும் அல்ல. அவர் ஒரு நிகழ் கலைஞர். பல நூறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக மக்கள் முன் பாடியவர். பலமுறை ஒத்திகை செய்யப்பட்டு திரைப்படத்துக்காகப் பதிவு செய்யும் பாடலை அதே செய் நேர்த்தியுடன் மக்கள்முன் நிகழ்த்திக்காட்டியவர். அப்பாடல்களின் நுட்பங்களை , உணர்வுகளை உணர்த்திச் சிலசமயம் மூலப்பாடலை இன்னமும் மேம்படுத்தியவர். அதுவும் அவரை நமது வரவேற்பறைகளில் நம்மோடு அமர்ந்து இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மனிதராக உணரவைத்தது.

அவர் இசையைக் காதலிக்க வந்த கலைஞன். நாமெல்லோரும் அவரைக் காதலிக்க வந்த கலைஞன்.
 

 

https://uyirmmai.com/music/tribute-to-sp-balasubramaniyam/

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீபம் ஏற்றும் பாடகர்கள்

தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/10113542/1963461/Singer-special-prayer-for-sp-Balasubramaniam.vpf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழைதருமோ மேகம் – டாக்டர் ஜி. ராமானுஜம்

01-2.jpg

எஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன் – 3

கடந்த இரண்டு கட்டுரைகளில்,

எம் எஸ் வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என மூன்று இசையமைப்பாளர்களின் மூன்று காலகட்டங்களின் பாடல்களைப் பற்றி மட்டுமே  பெரும்பாலும் பார்த்தோம். அவர்களின் இசையமைப்பில், குறிப்பாக முதல் இருவர் இசையில் எஸ் பி பி ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இதே மூன்று காலகட்டத்திலும் அவர்  பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் பிரமாதமான பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

SPB_1200-3-1-300x200.jpg

முதல் காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் எஸ்பிபி பாடிய முதல் பாடல்களுள் ஒன்றான ‘ஆயிரம் நிலவே வா!’ பாடலே திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அமைந்த பாடல்தான். அடிமைப் பெண் (1969) திரைப் படத்தில் அமைந்தது. பல பாடகர்களது முதல்பாடலைக் கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது. குரலில் ஒரு குழைவும் முதிர்ச்சியும் இருக்காது. அப்படியே நன்றாக இருந்தாலும் அந்தப்பாடல் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத பாடலாக இருக்கும்.

ஆனால்  தமிழில் எஸ் பி பி பாடிய முதல்பாடலே மெக ஹிட்டாக அமைந்தது. அவரது குரல் அந்தப் பாடலிலேயே குழைவு நெளிவுகளுடன் அமைந்திருக்கும். உடன் பாடியது அப்போது உச்சத்தில் இருந்த பி.சுசீலா என்றாலும்’நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க, நாணமென்ன’ பாவமென்ன என சிருங்கார ரசம் பொங்கக் குழைந்து நெளிந்து பாடியிருப்பார்.

அதே கே.வி. மகாதேவன் இசையில்தான் சங்கராபரணம் (1979) திரைப்படத்துக்காகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.  மெல்லிசைப் பாடல்களையே பாடி வந்த எஸ்பிபியைத் துணிச்சலாக கர்னாடக சங்கீதப் பின்புலத்தில் அமைந்த அந்தத் திரைப்படத்தில் பாட வைத்தனர் கே.வி.மகாதேவனும் அவரது உதவியாளர் புகழேந்தியும். தெலுங்கு மொழிப் படம் அதுவும் கர்னாடக இசையை மையமாகக் கொண்டு அமைந்த படப்பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன என்பதை இக்காலத்து மக்களுக்கு நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தத் திரைப்படத்தில் ராகமாலிகையாக அமைந்த ராகம் தானம் பல்லவி, சங்கராபரணம் ராகத்தில் அமைந்த ஓம்கார நாதானு, கல்யாணி ராகத்தில் தொரகுணா இட்டுவண்டி சேவா ஆகிய பாடல்களுடன் புகழ்பெற்ற கர்னாடக சங்கீதக் கீர்த்தனைகளான சாமஜவரகமனா (ஹிந்தோளம்) , ப்ரோச்சேவாரெவருரா (கமாஸ் ராகம்) ஆகிய பாடல்களை அருமையாகப் பாடியிருப்பார். ஆயினும் மெல்லிசைபாணியில் மத்யமாவதி ராகத்தில் அமைந்த சங்கரா என்ற பாடலில்தான் எஸ்பிபியின் குரல் அதிக உயிர்ப்புடன் இருக்கும். இறுக்கமான செவ்வியல் மரபுப் பாடல்களைவிட மெல்லிசையில்தான் தனது முழுத்திறமையையும் உணர்ச்சிகளையும் காட்ட முடிகிறது என உணர்ந்திருப்பார். அதே கே.வி.மகாதேவன் இசையில் தியாகைய்யா (1981) எனத் தியாகய்யரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்திலும் ஏராளமான கர்னாடக இசைப் பாடல்களைப் பாடியிருப்பார். ஆயினும் அதை அவர் முதன்மையாக எடுத்துக் கொள்ளவில்லை. அரிதாகவே அதுபோல் பாடி வந்திருக்கிறார். இசையமைப்பாளர்களும் மெல்லிசைக்கு எஸ்பிபி, செவ்வியல் இசைப்பாடல்களுக்கு ஏசுதாஸ் என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கினர். அதே கே.வி.மகாதேவன் இசையில் ஏணிப்படிகள்(1979) திரைப்படத்தில் பாடிய பூந்தேனில் கலந்து என்ற பாடல் மிக அருமையான ஒரு பாடல்.

SPB-0188-200x300.jpg
 

எழுபதுகளில் எஸ்பிபியை வைத்து அருமையான பாடல்களைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் விஜயபாஸ்கர். கன்னடத்தில் முக்கியமான இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழிலும் மெல்லிசை பாணியில் எஸ்பிபியை வைத்து நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். எங்கம்மா சபதம் (1974)திரைப்படத்தில் வரும் அன்பு மேகமே ஒரு சிறந்தபாடல். வாணி ஜெயராம் உடன் எஸ்பிபி பாடியிருப்பார். தப்புத்தாளங்கள் (1978) திரைப்படத்தில் ஸ்டைலாக ‘என்னடா பொல்லாத வாழ்க்கை!’ என்று பாடியிருப்பார் . விரக்தி கலந்த தத்துவப்பாடலை அலட்சியமாகப் பாடியிருப்பார். ஆடுபுலி ஆட்டம் (1977) திரைப்படத்தில் வானுக்குத் தந்தை எவனோ என்ற பாடலும் ஒரு சிறப்பான பாடல். ஆனால் விஜயபாஸ்கர் இசையமைத்த பாடல்களிலேயே எஸ்பிபியின் மாஸ்டர்பீஸ் திரைப்படம் மயங்குகிறாள் ஒரு மாது (1975) படத்தில் இடம்பெற்ற சம்சாரம் என்பது வீணை என்ற பாடல்தான்.  சந்தோஷம் என்பது ராகம் எனச் சொல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொப்பளிக்கும் அவரது குரலில். மறக்கமுடியாத பாடல்.

இதே காலகட்டத்தில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருந்தவர்கள் சங்கர் கணேஷ். பட்டிக்காட்டு ராஜா (1975) என்ற திரைப்படத்தில் வரும் ‘ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா’ என்ற பாடல் நல்ல துள்ளலான பாடல்.

தாயில்லாமல் நானில்லை (1978)  திரைப்படத்தில் நடிகனின் காதலி நாடகம் ஏனடி பாடலும் அப்படியே. மனிதன் பாம்பாக மாறும் அல்லது பாம்பு மனிதனாக மாறும் வினோத கதையை வைத்து எடுக்கப் பட்ட படம் நீயா(1978). அந்தப் படத்தில் எஸ்பிபிக்கு நல்ல பாடல்களை அமைத்திருப்பார் சங்கர் கணேஷ். ‘நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா’ இளமைப்கொப்புளிக்கும் ஒரு பாடல். விழிகளில் தாபம் படமெடுத்தாடும் எனப் பாடும்போது நிஜமாகவே குரல் பாம்புபோல் வளைந்து நெளிந்து ஆடும். வாணி ஜெயராமுடன் பாடிய ‘ ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாட்டு இன்றும் ஜீவனுள்ள பாடல். அரவணைப்பு என்னும் சொல்லே பாம்புகள் பின்னிப் பிணைந்திருப்பதை வைத்து வந்த சொல்தானே. அதுபோல் ஜோடிக்குரல்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இப்பாடலில். அதே திரைப்படத்தில் அமைந்த  இன்னொரு க்ளாசிக் பாடல் ‘உன்னை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை’ என்ற பாடல்.

சங்கர்கணேஷ் இசையில் எண்பதுகளில் ஓ நெஞ்சே நீதான் (டார்லிங் டார்லிங் டார்லிங் 1981)  நான் உன்னை நெனைச்சேன் ( கண்ணில் தெரியும் கதைகள் -1980), அழகிய கொடியே ஆடடி ( தாய் வீடு 1983)  மாசி மாதம்தான் ( ஊர் காவலன்-1987) என நெஞ்சங்களில் நீங்காத பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. ஆனால் அவரது இசையில் ஆகச் சிறந்த பாடல் என்றால் அது நட்சத்திரம் (1980) திரைப்படத்தில் வரும் அவள் ஒரு மேனகை பாடல்தான். சிவரஞ்சனி  என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் போட்ட டயூன்தான் என்றாலும் அதைத் தமிழில் அழகாகக் கொண்டுவந்திருப்பார். எஸ்பிபி பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. சிவரஞ்சனி, பிலஹரி, சரஸ்வதி, கல்யாணி என அமைந்த ராகமாலிகை பாடல் அது.  சிவரஞ்சனி ……என உச்சஸ்தாயியில் எடுப்பார். அடுத்த வருடம் ஏக் து ஜே கேலியே திரைப்படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ என சிவரஞ்சனி ராகத்தில் ஹிந்தியில் பாடி இரண்டாவது தேசிய விருது வாங்குவதற்கான பயிற்சியாக அப்பாடல் அமைந்தது.

விஜயபாஸ்கர் போன்று கன்னடத்தில் புகழ்பெற்ற இன்னொரு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.  கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு ஏராளமான பாடல்களை இசையமைத்தவர். இளையராஜா ஆரம்பத்தில் இவரிடம்தாம் உதவியாளராக இருந்தார். இவரது இசையில் பொண்ணுக்குத் தங்க மனசு (1973) என்னும் திரைப்படத்தில் ‘ தேன் சிந்துதே வானம்’ என்ற அருமையான பாடலை எஸ்பிபி  பாடியிருப்பார்.

SPB1200_9_instagram-300x200.jpg
 

மலையாளத்தில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷ்யாம் .  ந்யூ  டெல்லி, சி.பி.ஐ டைரிக் குறிப்பு போன்று மலையாளத் திரைப்படங்களின் வீச்சை வெளிப்படுத்திய திரைப்படங்களின் இசையமைப்பாளர். அவர் எஸ்பிபிக்கு மிகப் பிரமாதமான ஒரு பாடலைத் தமிழில் தந்திருக்கிறார்.

மனிதரில் இத்தனை நிறங்களா(1980) என்ற திரைப்படத்தில் அமைந்த மழை தருமோ என் மேகம் என்ற பாடல்தான் அது.. இனிமையும் நெகிழ்வும் ததும்பி வழியும் பாடல் அது.எஸ்பிபியைத் தவிர வேறு யார் குரலிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இன்னும் எண்பதுகள், தொண்ணூறுகளில் பல இசையமைப்பாளர்களின் மெகா ஹிட் பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர் எஸ்பிபி..

அது அடுத்த கட்டுரையில்…
 

 

https://uyirmmai.com/news/cinema/a-tribute-to-sp-balasubramaniyam/

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி - 4 ஐக் காணவில்லை.

 

டி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்

124822953_1011267616016596_4842354014621

எஸ்பிபி- காதலிக்க வந்த கலைஞன் -5

 

spacer.png

கடந்த கட்டுரையில் எண்பதுகள் எழுபதுகளில் பிற இசையமைப்பாளர்கள் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களைப் பற்றிப் பார்த்தோம். இடமின்மை காரணமாக ஒரு முக்கியமான பாடலைப் பற்றிப் பார்க்கவில்லை. முதன்முதலில் அந்தப் பாடலை நான் கேட்டது இருபது வருடங்களுக்கு முன்பு இருக்கும். மதுவந்தி என்ற ஒரு ராகம் பற்றி படித்த ஒரு தகவலில் இந்தப் பாடல் மதுவந்தி ராகத்தில் அமைந்த அருமையான பாடல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிந்துஸ்தானி ராகமான இது சிறு மாறுதல்களுடன் கர்னாடக இசையில் தர்மவதி என இந்த அழைக்கப்படுகிறது. அப்போது இணையம், யூட்யூபெல்லாம் ரொம்ப பிரபலம் கிடையாது. பல ஆடியோ சி.டி கடைகளில் ஏறி இறங்கி ஒரு சி.டி கடையில் எஸ்பிபி ஹிட்ஸ் என்ற ஒரு சி.டியில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. அதைக் கேட்ட போது ஒரு போதை போல மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. அந்தப் படத்தின் பெயரும் அப்பாடலின் முதல் வரிதான். அது நந்தா என் நிலா (1977) படத்தில் அமைந்த ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் . பாடலின் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி. மலையாளத்தின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவர். சுவாமி என மரியாதையாக அழைக்கப்படுபவர்.

நந்தா நீ என் நிலா பாடல் கஜல் பாணியில் அமைந்திருக்கும். நீளமான பல்லவி. பாம்பு போல் வளைந்து நெளியும். எனக்குத் தெரிந்து சரணத்தை விடப் பெரிய பல்லவி இருப்பது இப்பாடலில்தான். அக்காலத்தில் அவ்வளவு பிரபலமாக இல்லாமல் வெகுசிலரால் மட்டுமே சிலாகிக்கப் பட்டுவந்த இப்பாடல் இப்போது சமூக ஊடகங்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் மிகப் புகழ்பெற்றிருக்கிறது. பிற்காலத்தில் இதே ராகத்தில் இளம்சோலை பூத்ததா , மீண்டும் மீண்டும் வா எனப் புகழ்பெற்ற பாடல்களை எஸ்பிபி பாடுவதற்கு அச்சாரமாக இப்பாடல் அமைந்திருந்தது. வேறு பாடகர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சங்கதிகளும் உணர்ச்சி பாவமும் பின்னிப் பிணைந்திருக்கும். /விழி …மீனாடும் விழி/ மொழி தேனாடும் மொழி/ குழல் பூவாடும் குழல்/எழில் நீயாடும் எழில்/ எனத் தமிழ் வார்த்தைகளும் துள்ளி விளையாடும். பாடலை எழுதியவர் பழனிச்சாமி. எஸ்பிபி மிகத்தெளிவாக அவற்றை உச்சரித்திருப்பார். தமிழ்ப்பாடல்களில் எஸ்பிபியின் மிகச்சிறந்த பாடல்கள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் இப்பாடல்.

spacer.png

1980 இல் புயலாக நுழைந்தார் அந்த இசையமைப்பாளர். இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடலாசிரியர், இயக்குநர், நடிகரும் கூட. அஷ்டாவதானி எனச் சொன்னால் அக்காலத்தில் பானுமதி நினைவுக்கு வருவார். இவர்காலத்தில் இவர்தான். அவர்தான் டி.ராஜேந்தர். இக்காலத்து மக்களுக்கு டீ.ஆர் என்றால் டண்டண்டணக்கா போன்ற பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.ஆனால் ஒருகாலத்தில் அபாரமான சில பாடல்களைத் தந்தவர் அவர். அதில் எஸ்பிபியின் பங்கு மிக மிக அதிகம்.

1980இல் வெளிவந்த ஒரு தலை ராகம் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அப்படத்தில் இரண்டு அருமையான பாடல்களை எஸ்பிபி பாடியிருப்பார். காபி ராகத்தில் அமைந்த’ இது குழந்தை பாடும் தாலாட்டு’ என்னும் பாடல் அமர்க்களமாக இருக்கும். தாலாட்டு என்று எஸ்பிபி உச்சரிப்பதைக் கேளுங்கள். என்ன ஒரு இனிமை!! மெல்லிய சோகத்தை , பிரிவின் துயரைத் தன் குரல்களில் தோய்த்து இப்பாடலுக்கு உயிரூட்டி இருப்பார் எஸ்பிபி. சித்தார் ,தபேலா என இரண்டே கருவிகளை வைத்து பின்னணி அமைக்கப் பட்டிருக்கும்.

இதற்கு நேர்மாறாக துள்ளலான ஒரு பாடல் ‘ வாசமில்லா மலரிது’ என்ற பாடல். மேடைக் கச்சேரிகளில் அந்நாட்களில் மைக்குக்கு அடுத்துத் தவறாமல் இடம்பெறக் கூடியது இப்பாடல். படத்திலும் மேடைக் கச்சேரி பாடலாக அந்தக் கால ஸ்டெப் கட்டிங்க் முடியுடன் பெல்பாட்டம் உடையுடன் சங்கர் பாடுவார். வாசமில்லா மலரிது என ஒரு சிரிப்பு சிரிப்பார் எஸ்பிபி. இளமையும் கிண்டலும் கேலியும் கலந்து பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார். இது குழந்தை பாடும் தாலாட்டு சிதார், தபேலா என்றால் இதில் கித்தாரும் ட்ரம்ஸும் அதிரும்.

தொடர்ந்து டி.ராஜேந்தருக்கு ஏராளமான நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். வசந்தம் பாடி வர (ரயில் பயணங்களில் 1981), தஞ்சாவூரு மேளம் ( தங்கைக்கோர் கீதம் 1983) , இந்திர லோகத்து சுந்தரி ( உயிருள்ளவரை உஷா 1983) போன்ற நல்ல பாடல்கள் இருந்தாலும் அவற்றை விடவும் மிகச் சிறப்பான சில பாடல்களையும் பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று ராகம் தேடும் பல்லவி (1982) திரைப்படத்தில் வரும் ‘மூங்கிலிலே பாட்டிசைக்கும்’ என்னும் பாடல் . நிதானமான மெட்டு..எஸ்பிபியின் குரல் வளத்தையும் ஜாலத்தையும் முதலீடாக வைத்து அமைத்த பாடல் . பாடல் முழுதும் சுகமாக வருடும் ஹா ஹா ஹோ ஹோ என எஸ்பிபியின் தென்றல் குரல்.  ‘நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடித் தாலாட்டவே என் கற்பனைக்கு விதை தூவினாள்’ போன்ற வரிகளை குழைந்து நெளிந்து இழைந்து இழைந்து நெய்திருப்பார்.

பூக்களைப் பறிக்காதீர்கள் (1986) என்ற திரைப்படம். டி.ஆர் இசை மட்டும் அமைத்தது. அதில் ஒரு பாடல் ‘ மாலை நம்மை வாட்டுது’ . மெல்லிய விரகதாபம் ததும்பும் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் எஸ்பிபி.

டி.ராஜேந்தர் இசையமைத்த திரைப்படங்களிலேயே எஸ்பிபி பாடிய பாடல்களிலேயே ஆகச்சிறந்த பாடல்களில் இரண்டு மைதிலி  என்னை காதலி (1986)  திரைப்படத்தில் அமைந்தவை.

 முதலாவது பாடல் அதிகாலை நேரத்தில் பாடும் பூபாள ராகத்திற்கு மிகவும் நெருங்கிய சொந்தமான பௌளி என்ற ராகத்தில் அமைந்த பாடல். மிக அரிதாகவே திரை இசையில் பாடப்படும் ராகம். ஏற்கனவே சங்கராபரணம் (1979) திரைப்படத்தில் அதிகாலை சாதகம் செய்யும் பாடலாக ஜானகியுடன் சேர்ந்து இந்த ராகத்தில் ஸ்வரங்களைப் பாடிப் பிரமாதப் படுத்தி இருப்பார் எஸ்பிபி. அந்த  அனுபவத்தில் மிகப் பிரமாதமாக பாடி சிறப்பித்த ஒரு பாடல் ‘ஒரு பொன் மானை நான் காண’  என்ற பாடல். பாடலில் தொடக்கத்தில் வரும் ஆலாபனையில் இந்த ராகத்தை அதிகாலை நேரத்து அழகாக அற்புதமாக பாடி இருப்பார் .’சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம்// மேகத்தை அழைத்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம்// என்பது போன்ற வரிகளை அனுபவித்துப் பாடியிருப்பார்.

spacer.png

 

அதே திரைப்படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல் நானும் உந்தன் உறவை என்ற பாடல்.  சோகத்தை பிழிந்து தரக்கூடிய சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல் இது பொன்மானை நான் காண பாட்டை போலவே ஆலாபனை சுரங்கள் என இந்தப் பாடலிலும் ஒரு மினி இசை கச்சேரியை அடித்திருப்பார் எஸ்பிபி.

 இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் பிற இசையமைப்பாளர்களை விட டி ராஜேந்தர் பாடல்களுக்கு  எஸ்பிபி பாடியதைப் பற்றி அதிகமாக கூறியதுபோல் சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு  காரணம் இருக்கிறது. டி ராஜேந்தர் அமைத்த பாடல்களைப் பற்றி மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்ல வேண்டுமென்றால் பாடல்களில் நன்கு இசை அமைத்திருந்தாலும்  சில இடங்களில் வரிகளில் மெட்டுக்கள்  இல்லாமல் வெறும் வசனம் வாசிப்பது போல் தோன்றும். பிரமாதமான பாடல் வரிகளாக இருந்தாலும் எஸ்பிபி அவற்றுக்கு உயிர் கொடுக்காமல் இருந்திருந்தால் அவை  முழுமை அடைந்து இருக்காது. இப்பாடல்களைப் பிறர் பாடும்போது வசனத்தை அல்லது ஒரு கவிதையை வாசிப்பது போல்தான் இருக்கும். அவற்றைத் தன் குரல் வளத்தால் பிரமாதமான பாடல்களாக்கியவர் எஸ்பிபி.

 

https://uyirmmai.com/music/spb-songs-in-t-rajendar-music/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.