Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1

Featured Replies

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1

china-economy-1024x576.jpg

கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின.

புதிய இயல்பு அல்லது புதிய வழமை

கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘New Normal’ எனப்படும் ‘புதிய இயல்பு அல்லது புதிய வழமை’ கொரோனாவால் ஏற்பட்டு வருகின்றது. அதன் அர்த்தம் தனிநபரிலிருந்து சமூகம், நாடு, நாடுகடந்த உலகம் என அனைத்தும் முன்னரைப் போல் இருக்கப்போவதில்லை. பல முனைகளிலும் பல்வேறு இயல்பு மாற்றங்களுக்கும் நடைமுறை மாற்றங்களுக்குமான தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்தப் புதிய இயல்பு ஒருபுறமும், மறுபுறம் அரசியல் பொருளாதார, அதிகாரம் சார்ந்த அர்த்தத்திலும் ‘புதிய உலக ஒழுங்கு’ பற்றிய விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன.

ஒரு பாரிய பூகோள அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது என்ற வகையிலான விவாதங்கள் சர்வதேச அரசியல் சார்ந்து இடம்பெற்றுவருகின்றன.

தொடர்ந்தும் உலக மேலாதிக்க அரசு என்ற நிலையை அமெரிக்கா தக்கவைக்குமா? அல்லது வேகமாக வளர்ந்துவரும் சீனா அந்த இடத்தினைத் தனதாக்கிக் கொள்ளுமா என்பதே சமகால அரசியலின் பேசுபொருட்களில் முதன்மையானதாக உள்ளது. அந்த நிலையைச் சீனா தனதாக்கிக் கொள்ளும் புறநிலைகள் கூடுதலாக இருப்பதாக நம்பப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னரே அமெரிக்க சீன அதிகாரப்போட்டி துருத்திக்கொண்டு தெளிவாகத் தெரிந்த விடயம்தான். கொரோனா நெருக்கடி சீனாவிற்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்கியுள்ளதான கருத்து வலுப்பெற்றுள்ளது.

மேலாதிக்க சக்தியும் வரலாற்று மாற்றமும்

இறுதி நூறாண்டு கால வரலாற்றில் முதலாம் உலகப் போருக்கு முன்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் பொருளாதார, படைத்துறை மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்கா அந்த நிலையைத் தன்னகப்படுத்தியிருந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேலாதிக்கம் என்பதைத் தாண்டி உலகின் ஒற்றை வல்லரசு என்ற நிலையை அமெரிக்கா எட்டியது. இருந்தபோதும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தன்னிச்சையான அமெரிக்காவின் அணுகுமுறைகள், தளம் அமைத்தலுக்கான ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்கா தொடர்பான உலகளாவிய விம்பத்தைப் பலவீனப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் அமெரிக்காவின் அரசியலில் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒற்றை வல்லரசு என்ற தகமையை இழக்கவும் செய்துவருகின்றன.

அமெரிக்கா பலவீனமடைந்து வருகின்ற நிலையில், சீனா நிதானமாகவும் தொலைநோக்கு மூலோபாய அணுகுமுறையுடனும் தனது பொருளாதாரவலுவினை அதிகரிப்பதன் மூலம், மேலாதிக்க எல்லைகளை விரிவுபடுத்தி வருகின்றது. ஐரோப்பிய மட்டத்தில் வணிக உறவுகள் மூலமும், ஆபிரிக்கக் கண்டம், மற்றும் ஆசியப் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் பெரும் முதலீடுகள், துறைமுகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திவருகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கிவரும் சீனா அமெரிக்காவிற்குப் போட்டியாக மட்டுமல்ல, பெரும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடி ஏற்படுத்தி வரும் விளைவுகளும், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்நாட்டிலும் உலகம்தழுவிய கூட்டுச் செயற்பாடுகளிலும் அமெரிக்கா உலக வல்லரசாகத் தனது பொறுப்புகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டது என்பது உலகளாவிய விமர்சனம்.

அமெரிக்கா: தோற்றுப்போன வல்லரசு

அமெரிக்க சமூகத்தைப் பிளவுபடுத்தும் டிரம்பின் அணுகுமுறை பற்றிய விசனங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறையினரால் கறுப்பினத்தைச் சேர்ந்த புநழசபந குடழலன படுகொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்த மக்கள் போராட்டங்களை வன்முறையாகச் சித்தரித்து காவல்துறை, இராணுவத்தினரைக் கட்டவிழத்துவிட்டமை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நேர்த்தியான திட்டமிடலின்மை, செயற்திறனின்மை என டிரம்ப் மீதான அதிருப்திகளின் பட்டியல் நீளமானவை. டிரம்பின் கொரோனா பேரிடர் கையாள்கை என்பது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இன்னொரு வகையில் அமெரிக்காவின் சர்வதேச விம்பத்தை கொரோனா நெருக்கடி உடைத்துள்ளது. அந்த உடைவை ஒட்டவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அரிதானவை. அமெரிக்கா ஒரு தோற்றுப்போன வல்லரசு என்ற கருத்தும் வலுப்பெற்றுவருகின்றது.

உலக ஒழுங்கு என்பது, உலகளாவிய தீர்மான சக்தி யார் என்பதைப் பற்றியது. அரசியல், பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மேலாதிக்கத்தைக் குறிக்கின்றது. அது அதிகார நலன் சார்ந்தது. சர்வதேச ரீதியில் மேலாதிக்கம் செலுத்துவதும், சார்பான அணிகளைக் கட்டியமைப்பதும் பேணுவதுமான வெளிவிவகார உறவு சார்ந்தது. அந்த அணி என்பது பூகோள அரசியல் நலன்கள் மற்றும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவன. இந்த நலன்களைப் பேணும் முனைப்பிற்காக பலம்பொருந்திய நாடுகள் போர்களில் இறங்குவதற்கும் தயங்குவதில்லை என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அமெரிக்காவின் அனைத்துப் போர்களின் பின்னணியிலும் இத்தகைய நலன்கள் இருந்திருக்கின்றன. ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் அண்மைய சிரியா ஈறான அனைத்துப் போர்களும் அதற்கான உதாரணங்கள்.

இந்தோ-பசுபிக் மூலோபாயம்

அமெரிக்கா சோவியத்திற்கிடையிலான பனிப்போர் கால மேலாதிக்கப் போட்டியிலும் பெரியதாக அமெரிக்க – சீன மேலாதிக்கப்போட்டி பார்க்கப்படுகின்றது. இவ்விரு பலம்பொருந்திய நாடுகளுக்குமிடையிலான போட்டி என்பது கடற்பிராந்தியத்தை மையப்படுத்தியது. வணிகப் போக்குவரத்திற்கான கடற்பாதை சார்ந்தது. சீனாவின் எழுச்சியைத் தடுப்பதற்கான மூலோபாயம் ஒன்றினை அமெரிக்கா வகுத்துச் செயற்படுகின்றது. அது இந்தோ-பசுபிக் மூலோபாயம் (Indo-Pacific strategy). இந்தோ-பசுபிக் மூலோபாயம் என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக பிராந்திய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சொல்லாடலாக இருந்து வருகின்றது. இது இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு கருத்தியல்.

இதன் அடிப்படை யாதெனில் தெற்காசியப் பிராந்திய நாடுகளை அமெரிக்காவுடன் அணிசேர்ப்பது. அந்த அணியென்பது பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியைத் தடுப்பதற்கான இலக்கினைக் கொண்டதாகவே இந்த ஆசிய-பசுபிக் மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளது. நாடுகளென நோக்குமிடத்து பிராந்தியத்தின் பெரும் ஜனநாயக நாடுகளாகக் கருதப்படும் இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகியவற்றை அணிதிரட்டி சீனாவைக் கட்டுப்படுத்துவதென்பதே அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயம். இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியாவை இணைப்பதென்பது அந்நாடுகளின் செல்வாக்கின் கீழுள்ள பல்வேறு நாடுகளை இணைப்பதையும் குறிக்கின்றது.
டிரம்ப் ஆட்சிக்காலம் என்பது குறுகிய நலன்களின் பாற்பட்ட முடிவுகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் சீனா தொலைநோக்கு அடிப்படையிலான காய்நகர்த்தல்களோடு தன்னைப் பலப்படுத்திவருகின்றதென்ற கருத்து மேலோங்கியுள்ளது.

ஐரோப்பிய நிலைப்பாடு

அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டிக்கும் செல்வாக்குச் செலுத்தல் காய்நகர்த்தல்களுக்கும் மத்தியில் – இந்த இரண்டு பூகோள அரசியல் அதிகார சக்திகளுக்கிடையில் நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அதுசார்ந்த நாடுகளும் உள்ளன. சீனா தலைமையிலான ஒரு உலக ஒழுங்கு ஏற்படும் பட்சத்தில் ஐரோப்பா தனக்கான பொருளாதார, அரசியல் களங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஐரோப்பிய மட்டத்தில் நிலவுகின்றது.
சீனா ஒரு சர்வாதிகார ஒற்றைக்கட்சி அரசு என்ற விம்பத்தைக் கொண்டிருக்கின்றது ஐரோப்பா. அரசியல் அர்த்தத்தில் அதற்கு எதிரான போக்கினையும் ஐனநாயகத்தை முதன்மையாகக் கொண்ட செயல்வலுமிக்க அரசாங்கங்களையும் பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கின்றன.

China-Heaader.jpg

இந்த அடிப்படையில் சீனாவைத் தமது உண்மையான பங்காளியாக ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. ஜனநாயகம், மனித உரிமை, சூழலியல், ஊடகச் சுதந்திரம் என்பன ஐரோப்பிய ஆட்சிமுறை விழுமியங்களாக ஒப்பீட்டளவில் நடைமுறையில் சிறப்பாகவும் இயங்குகின்றன. இந்நிலையில் சீனாவை விட அமெரிக்கா தலைமையிலான உலகையே ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. ஒருவித கவுழ்த்துக் கொட்டல் அணுகுமுறையைக் கைக்கொள்ளும் டிரம்ம் ஆட்சியின் நான்கு ஆண்டுகளின் பின்னர்கூட அமெரிக்க – ஐரோப்பிய உறவு வலுவானதாகவே உள்ளது.

உலகமயமாக்கல: சீனாவின் வெற்றிகரமான வளர்ச்சி

இருந்தபோதும் உலகமயமாக்கல் சூழலில் சீனாவின் வெற்றிகரமான வளர்ச்சியைக் குறைமதிப்பீடு செய்யமுடியாது. உலகமயமாக்கல் என்பது பாரிய வணிக, உற்பத்தி, நுகர்வு உறவுகளால் இறுகவும் பல்வேறு நுண் இழைகளாலும் பல அடுக்குகளாலுமான சங்கிலிப் பிணைப்பினைக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கலின் பரந்த வெளியில் சீனாவுடன் ஐரோப்பிய நாடுகள் உறவைப் பேணவேண்டியதென்பது நிராகரிக்க முடியாத யதார்த்தம்.

சீனாவுடனான உறவு சார்ந்து ஐரோப்பிய நாடுகள் சீன நலன்களுக்கு முற்றுமுழுதாக அடிபணியாத, அதேவேளை ஒரு பொருத்தமான மூலோபாய அணுகுமுறையை கூட்டாக வகுக்க வேண்டும் என்ற கருத்துகளும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. அதாவது பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தில் சீனாவில் தங்கியிருக்காத ஒரு மூலோபாயம் பற்றிய பிரஸ்தாபிப்பு அது.

ஆபிரிக்காவில் சீன மேலாதிக்க மூலோபாயம்

ஆபிரிக்க நாடுகள் மட்டத்தில், அதாவது ஆபிரிக்க பிராந்தியத்தில் சீனா கைக்கொள்ளும் அரசியல் மூலோபாயங்கள் தொடர்பாக நோக்குவது அவசியம். ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் தனது முதலீடுகளை சீனா 1990களில் தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளில் கணிசமாக விரிவுபடுத்திவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு The forum on China-Africa cooperation, FOCAC  சீன – ஆபிரிக்க ஒத்துழைப்பிற்கான மையம் உருவாக்கம்பெற்றது. இது வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ மையம்.

ஆபிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு விரிவுபடுத்தல் மூலோபாயம் மூன்று வகைப்படும். விவசாயத் துறை, வெவ்வேறு வகைப்பட்ட தனியார் சேவை நிறுவனங்கள், போக்குவரத்துத்துறை, உட்கட்டுமான அபிவிருத்தி, நிலக் கொள்வனவு உட்பட்ட வணிகத் திட்டங்கள் முதலாவது வகை. எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சார்ந்த முதலீடுகள் இரண்டாவது. அபிவிருத்தித் திட்டங்கள் மூன்றாவது வகையாகும்.

உலக வங்கியின் தரவுகளின் படி, சீனாவின் ஆபிரிக்க நாடுகளின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு 2001 – 2003 காலப்பகுதிகளில் ஒரு பில்லியன் டொலர் செலவிட்டது. 2006 காலப்பகுதியில் ஏழு பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அத்தோடு அபிவிருத்திக் கடன் பெருமளவில் வழங்கப்படுகின்றது. ‘பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வளரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்’ எனும் திட்டத்தின் கீழ் இக்கடன்கள் வழங்கப்புடுகின்றன. நெடுஞ்சாலைத் திட்டங்கள், சக்தி உற்பத்தி மற்றும் தொடரூந்துத்துறை அபிவிருத்தி என்பன ஆபிரிக்க நாடுகளில் சீனா மேற்கொள்ளும் உட்கட்டுமானத் திட்டங்கள். சீனாவின் அதிகரித்த செல்வாக்குக் காரணமாக ஆபிரிக்க நாடுகளின் இத்தகைய திட்டங்களிலிருந்து மேற்கு நாடுகளும் அவற்றின் அபிவிருத்தி நிறுவனங்களும் கணிசமாக வெளியேறியுள்ளன.

மேற்கின் அச்சம்

ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகரித்துவரும் சீனாவின் பொருளாதார, அரசியல், இராணுவ வகிபாகம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. ஆபிரிக்கக் கண்டத்தில் மேற்குக்கும் சீனாவிற்குமிடையிலான செல்வாக்குச் செலுத்தல் வலுச்சமநிலை குழம்பிவருவதாக மேற்கு உணர்கிறது. ஆபிரிக்க நாடுகளின் மிகப்பெரிய வணிகப் பங்காளியும் நிதிவழங்கும் நாடாகவும் சீனா விளங்குகின்றது. சீனா கைக்கொள்ளும அணுகுமுறை அல்லது அது கொண்டிருக்கும் அபிவிருத்தி மாதிரி ஆபிரிக்க நலன்களுக்குச் சேவை செய்கின்றதா என்பது மேற்கின் கேள்வி. ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் நிலைகொள் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லப்படுவதைவிட சீன அரச நலன்களே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பது மேற்கின் குற்றச்சாட்டாகும்.

ஆனால் பல ஆபிரிக்க நாடுகள் மேற்கை விட சீனாவை விரும்புகின்றன. ஆபிரிக்க நாடுகளின் தேவைகளை குறைந்த விலையில் சீனா நிவர்த்தி செய்கின்றது, குறைந்தளவு அதிகாரத்துவ நடைமுறைகளுக்கூடான அபிவிருத்தி, வேகமான உட்கட்டுமானத் திட்ட நிறைவேற்றல் என்பன அதற்கான காரணிகள்.

கடன் மீளளிப்பு என்பது பல வடிவங்களில் கோரப்படுகின்றன. கடனுக்கு மாற்றீடாக எண்ணெய், கனிமங்கள் உட்பட்ட இயற்கை வளங்களை அந்நாடுகளிலிருந்து சீனா பெறுகின்றது. துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றது. சக்தி மற்றும் தொடரூந்துக் கட்டுமானப் பணிகளிலிருந்து பெறப்படும் வருமானம், சீன நிறுவனங்கள் அபிவிருத்தித் திட்டங்களை ஒப்பந்த அடிப்படையில் செய்வதோடு, சீனாவிடமிருந்து கட்டுமான மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. நேரடியாக சீனாவிலிருந்து தொழிலாளர்களாகக் கொண்டுசெல்லப்படுவதன் மூலம் சீனர்களுக்குத் தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்றது. சீனா தனது சொந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஆபிரிக்க நாடுகளில் தான் முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றது.

மேலும் வரும்

https://thinakkural.lk/article/78101

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.