Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னாலுள்ள எருமை அரசியல்:: வி.இ.குகநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னாலுள்ள எருமை அரசியல்:: வி.இ.குகநாதன்

spacer.png

 

படம் 1

பொதுவாகவே இந்து சமய விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொல் பழங்குடிகளை ஆரியர்கள் வெற்றி கொண்ட நிகழ்வுகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும்.  இதற்காக ஒரு அரக்கன் கற்பிக்கப்பட்டு, அவனது இறப்பினைக் கொண்டாடும் விழாக்களாகவே அவை கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மகிசாசூரன் { எருமைத் தலையோன்}  வீழ்ச்சியினைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. `பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் தேவர்களைத் துன்புறுத்த, இந்திரன் உட்பட்ட தேவர்களும் தோற்கடிக்கப்பட, துர்க்கை மகிசாசூரனைக் கொல்லுகிறாள்` என `தேவி மகாத்மியம்` எனும் புராணநூல் கூறுகின்றது. இவ்வாறான எருமைத் தலையுடைய மகிசாசூரன் அழிப்பே நவராத்திரியின் இறுதி நாளான `விஜயதசமி` எனக் கொண்டாடப்படுகின்றது {இதனையே `வாழை வெட்டு`/ `மானம்பூ` என ஊரில் கொண்டாடுவார்கள்}. மகிசாசூரன் எருமையினை ஊர்தியாகக் கொண்டவன் எனச் சில இடங்களில் சொல்லப்பட்டாலும், மாமல்லபுரத்திலுள்ள சிற்பம் அரக்கனை எருமைத் தலையுடனேயே காட்டும் {படம்1 காண்க}. இது எவ்வாறு தொல் பழங்குடி ஒன்றின் அழிவாகக் காணப்படும் எனப் பார்ப்பதற்கு முன் எருமையின் இன்றைய நிலையினைப் பார்ப்போம்.

எருமையின் அருமை புரியாத இன்றைய தலைமுறை :-

இன்றைய மனித வாழ்வியலில் வசை பாடுவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு விலங்காக எருமை காணப்படுகின்றது. `எருமை மாதிரி வளர்ந்துள்ளாய் அறிவில்லையா!`, `எருமை மாட்டில மழை பெய்த மாதிரி`,  `அட எருமைப் பயலே` என அடுக்கிக் கொண்டே போகலாம்.  இவற்றில் முதலிரு வசை பாடல்களைப் பார்ப்போம். ஏனைய விலங்குகளுக்கு எவ்வாறு ஐந்து அறிவிருக்கின்றதோ அது போன்றே எருமையின் அறிவும்;  அடுத்ததாக இந்திய எருமைகள் பொதுவாக நீர் எருமைகள்(Water buffaloes   ) எனப்படுவதால், மழை பெய்தால் அவற்றுக்கு எந்தக் கேடும் வராமையால் அவை மழை பெய்வதனையிட்டு இன்னலடையாது. எனவே மேற்கூறிய வசை பாடல்கள் எல்லாம் இயற்கையுடன் பொருந்தாமல், உள் நுழைக்கப்பட்ட வசை பாடல்களாகவே காணப்படுகின்றன.

spacer.png


இன்னொரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம். “உங்களுக்குப் பசுப் பால் தேவையா அல்லது எருமைப் பால் தேவையா” எனக் கேட்டால் பலரும் எதனைக் குறிப்பிடுவார்கள் {பெரு நிறுவனங்களின் பால் பொதிகளில் வேறுபாடு இல்லை}.  பசுப் பாலையே இன்று பலரும் சொல்லுவார்கள். உண்மையில் எருமைப் பாலே சிறந்தது {பசுப் பாலினை விட எருமைப் பாலே அதிகளவு கொழுப்புடையது, கொழுப்புக்கேற்பவே பாலின் பெறுமதி காணப்படும்} . எருமையானது இறைச்சி, பால் ஆகிய இரு அடிப்படைகளிலும் எவ்வாறு மாடுகளை விடச் சிறப்பானது என இக் கட்டுரையின் முதலாவது பின்னிணைப்புக் குறிப்பில் காண்க(1).  மக்களுக்குத்தான் எருமையின் அருமை புரியவில்லை எனில் அரசாவது புரிந்து வைத்துள்ளதா எனில் அதுவுமில்லை.  கோசாலைகள் அமைத்து மாடுகளைப் பேணுவது போன்ற வசதிகளோ அல்லது மாடுகளைக் கொண்டு போகும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விலங்குகள் நல உரிமை சார்ந்த கட்டுப்பாடுகள் எதுவுமோ எருமைகளுக்கு இல்லை. எருமைகள் எவ்வாறு எல்லாம் அரசால் வஞ்சிக்கப்படுகின்றன என இன்றைய இந்திய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தி எழுதிய கட்டுரையினை இரண்டாது குறிப்பில் விரிவாகக் காண்க (2). சரி, இவ்வாறு எருமையானது காலங்காலமாகவே வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளதா என இனிப் பார்ப்போம்.

சிந்துவெளியில் எருமை :-

spacer.png

spacer.png

சிந்துவெளி நாகரிகத்தில் எருமையானது கொண்டாடப்பட்டு வந்துள்ளமையினை, சிந்துவெளி முத்திரைகள் எமக்குக் காட்டும் {படங்கள் 2,3 காண்க}.  உலகிலேயே முதன்முதலில் நீர் எருமைகள் வீட்டு விலங்குகளாக  பழக்கப்பட்டது சிந்துவெளியிலேயே என்றும் இங்கிருந்தே நீர் எருமைகள் மெசப்போத்தேமியாவிற்குச் சென்றது என்றும் சான்றுகள் காட்டுகின்றன.  சிந்துவெளி முத்திரைகளில் எருமையினை உள்ளடக்கிய சடங்குகளைக் கூடக் காணலாம் (3). இன்றும் பழங்குடி மக்களிடம் எருமையானது கொண்டாடப்பட்டே வருகின்றது.  அண்மையில் அரியானா மாநிலத்தில் ராகர்கி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4500 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தினைச் சேர்ந்த எலும்புக்கூடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒன்று செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில்  வெளியி டப்பட்டிருந்தது (இதனை குறிப்பு 4 இல் காணலாம்). இந்த ஆய்வு சிந்துவெளி நாகரிகமானது ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தினைச் சேர்ந்தது எனவும், சிந்துவெளி நாகரிகம் முழுக்க  முழுக்க  திராவிடர்களுடையது எனவும் தெளிவுறுத்தியிருந்தது (4).  இந்த ஆய்வின் நீட்சியானது சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மரபணுவானது  இன்றைய தென்னிந்தியர்களின் மரபணுக்களுடனேயே ஒத்துப் போவதாகவும், அதிலும் குறிப்பாக நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடிகளின் மரபணுக்களே பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறிப்பிடுகின்றது. இந்தத் தோடர்களே எருமையினை இன்றும் சடங்குகளில் முதன்மைப்படுத்துவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். மேலும் நீலகிரி மலைப் பகுதியிலுள்ள மரபுரீதியான எருமைகள் `தோடா` என அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

spacer.png

 

மேலே மரபணுக்கள் எவ்வாறு சிந்துவெளியின் தொடர்ச்சியாக நீலகிரி மலைப் பகுதி பழங்குடிகளைக் காட்டுகின்றதோ, அதே போன்று சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் அதே தோடர்களே காணப்படுவதனை இன்னொரு சான்று காட்டும்.  அதாவது சங்க இலக்கியங்களின் அகப் பாடல்களில் தலைவன்-தலைவியின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் பாடப்படும் ஒரு மரபு சங்க காலப் பாடல்களிலுண்டு; அந்த மரபினை இன்று வரை {ஆய்வின் காலம் வரை- 1950/1960கள் வரை} கடைப்பிடிக்கும் மரபு தோடர்களிடமே காணப்பட்டதாக பேரா.க.கைலாசபதி கூறுவார்(5).  எனவே சிந்துவெளி நாகரிகத்தினையும், சங்க காலப் பாடல்களையும் இணைக்கும் புள்ளிகளில் ஒன்றான தோடர்கள்களால் எருமைகள் போற்றப்படுவதால்; சங்க இலக்கியங்களும் எருமைகளைப் போற்றியிருக்க வேண்டும் அல்லவா! பார்ப்போம்.

சங்க இலக்கியங்கள் பாடும் எருமைகளின் அருமை:-

    சங்க இலக்கியங்கள் எருமைகளை எப்படிப் பார்க்கின்றன எனப் பார்ப்பதற்கு முதலில் ஒரு அகநானூற்றுப் பாடலினைப் பார்ப்போம்.

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு

பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி

:{அகநானூறு 146}

மேலுள்ள பாடலில் எருமையானது `அண்ணல் ஏஎறு` (அண்ணல் எருமை) எனப் புகழப்படுவதனைக் காணலாம். பொதுவாக மதிப்பிற்குரியவர்களையே `அண்ணல்` என அழைப்போம் {எ.கா= அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கார்} . அவ்வாறான மதிப்பிற்குரிய சொல்லால் எருமை அழைக்கப்படுவதனைக் காணலாம். இன்னொரு அகநானூற்றுப் பாடலையும் பார்ப்போம்.

துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,

அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு

ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,

தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,

பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,    5

குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்

போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்

 : { அகநானூறு 316}

       இங்கு எருமை மாடானது போர் வீரனுடன் {மள்ளன்} ஒப்பிடப்படுவதனைக் காணலாம். இன்னொரு கலித்தொகையினைப் பார்ப்போம்.

தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி

எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்

பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய

 

வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த

திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த

ஒருமணம் தான்அறியும் ; ஆயின் எனைத்தும்

தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த

விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்

அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே

               :(கலித்தொகை- 114 : 12-21)

{பொருள்:::என் உறவினர், வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின் கொம்பை வழிபடுகின்றனர். உறவினர் நடத்த எண்ணும் திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம் முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது. விரிந்த கடலை ஆடையாக உடுத்திய உலகத்தைப் பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை”. இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்}.

   இப் பாடலில் எருமையின் கொம்பு {சில உரைகளில் எருமை} வழிபடப்படுவதனைக் காணலாம். இது ஏற்கனவே நாம் பார்த்த சிந்துவெளி நாகரிகச் சடங்கின் தொடர்ச்சியாகும்.  இவை மட்டுமல்ல மேலும் பல இடங்களில் சங்க இலக்கியங்கள் எருமையினைக் கொண்டாடுவதனை திருத்தம் பொன் சரவணன் எழுதிய       `சங்க இலக்கியத்தில் விலங்கியல்` என்ற கட்டுரையில் காண்க ( 6) . தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியி லும் எருமை கொண்டாடப்படுவதனைக் காணலாம்.

எருமை தாழ்ந்தது எவ்வாறு?

spacer.png

   இவ்வாறு பழங் காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட எருமை  பார்ப்பனிய வஞ்சனையாலேயே வீழ்ந்தது. பொதுவாகக் கறுப்பான தமிழர்கள் உட்பட்ட பழங்குடிகளிடமிருந்த அதிகாரம் ஒப்பீட்டுரீதியில் வெள்ளையான பார்ப்பனர்களிடம் கைமாறியபோது, கறுப்பு விலங்குகளும் சடங்குகள் பழக்க வழக்கங்களிலும் தாழ்த்தப்பட்டது. எருமை மட்டுமல்ல; கரும்பருந்தினை பறைப் பருந்து (செம்பருந்து- பார்ப்பரப் பருந்து) எனவும் கறுப்பான பாம்பினை பறைப் பாம்பு (வெள்ளைப் பருந்து- பார்ப்பரப் பருந்து) எனவும் பெயர்கள் மாற்றப்பட்டன. இந்த அடிப்படையிலேயே வெள்ளையான பசு புனிதமாகவும், எருமை வெறுப்புக்குரியதுமாக்கப்பட்டது. எருமை புறக்கணிக்கப்பட்டமைக்கு அதன் நிறம் ஒரு காரணம் எனில் தமிழர்களின் தொன்மத்தினைத் தாழ்த்துதல் இன்னொரு காரணமாகும்.  இதன் தொடர்ச்சியாகவே எருமை எமனின் ஊர்தியாக்கப்பட்டது. இன்னொரு நுட்பமாகவே எருமைத் தலையுடைய மகிசாசூரன் அழிப்பினைக் குறிக்கும் நவராத்திரி விழாவும் ஆகும்.

முடிவு:-

   பார்ப்பனிய வஞ்சனையில் எருமையின் அருமை மறந்து எமது வீழ்ச்சியினை நாமே நவராத்திரி எனக் கொண்டாடுகின்றோம். எருமை தொன்மையானது மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும்   நன்மை அளிக்கக்கூடியது.  காட்டாக, அரியானாவில் வாழும் யுவ்ராச் என்பவர் ஒரு எருமை மூலம் 5 மில்லியன் ரூபாக்களை ஆண்டு வருமானமாகக் கொள்கின்றார் என்றால்  நம்ப முடிகின்றதா! (7).  இதனை ஒரு புறநடையான வருமானமாகக் கொண்டாலும், எருமை வளர்ப்பினூடாக நல்ல வருமானம் கிடைக்கும் என்பதனை மறுக்க முடியாது. எருமையின் அருமையினைப் புரிந்து கொள்வோம். எம்மை நாமே தாழ்த்தும் சடங்குகளிலிருந்து விலகியிருப்போம்.

குறிப்புகள்:

  1. Cow belt or Buffalo nation

https://www.thehindubusinessline.com/opinion/columns/harish-damodaran/cow-belt-or-buffalo-nation/article22985221.ece

  1. Why buffaloes have no sympathisers?

https://english.mathrubhumi.com/news/columns/faunaforum/why-buffaloes-have-no-sympathisers–1.10407

  1. The Buffalo Sacrifice

https://www.harappa.com/blog/buffalo-sacrifice

  1. செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழ்

https://scholar.harvard.edu/files/vagheesh/files/piis0092867419309675.pdf?fbclid=IwAR34emConzwwcdVoDwv_fp4o3y3v9i51GlS_itxnKUXv62Tyii-uxwYWMFU

  1. தமிழ் வீரநிலைக் கவிதை – க.கைலாசபதி {Pages 14-15}
  1. சங்க இலக்கியத்தில் விலங்கியல்

https://groups.google.com/forum/#!topic/mintamil/7MzVRXBWzdo

  1. ஒரே ஒரு எருமையால் 5 மில்லியன் ரூபா ஆண்டு வருமானம்.

https://www.indiatimes.com/news/india/1-500-kg-super-buffalo-yuvraj-is-worth-rs-9-25-crore-and-he-makes-rs-50-lakh-a-year-selling-semen-272372.html

  1. ஆர். பாலகிருஸ்ணன் சொற்பொழிவு


 

http://inioru.com/politics-behind-navarathri-celebration/

 

Edited by கிருபன்
படங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எருமையின் அருமையை மறவாது இன்றும் போற்றும் நகர் ஈழத்தில் உள்ளது. அந்த நகர்தான் மட்டுநகர். நூறு எருமைகள் உடையவரை அங்கு போடியார் என்ற பட்டமளித்துச் சிறப்புச் செய்வார்கள். மட்டக்களப்புத் தயிரின்றி (எருமைத்தயிர்) யாழ்ப்பாணக் கொண்டாட்ட வைபவங்களில் பந்தி வைப்பது மிகக் குறைவு.  

அழகிய மங்கைகளும் விரும்பும் எருமைச் சவாரி.

 

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஆய்வு. இரண்டு கருத்துக்கள் அல்லது குறைபாடுகள்:

1. எருமைப் பாலுக்கும் பசுப்பாலுக்கும் இருக்கும் பாரிய வேறுபாடு அதன் கொழுப்பு வீதம் (இது எருமைப்பாலில் அதிகம்). அதிக கொழுப்பு எருமைப்பாலைப் போசணை மிக்கதாக ஆக்காது. இன்று கொழுப்புக் குறைந்த பசுப்பாலை நாம் அன்றாடம் பாவிப்பது எமது உடல் நலம் சார்ந்த ஒரு தெரிவு. ஆனால், அதிக கொழுப்புள்ள எருமைப் பால் தயிர் தயாரிப்பிற்கு பசுப்பாலை விட அதிகம் பொருத்தமானது. பசுப்பால் பிரபலமாக வர இன்னொரு காரணம், மாட்டை, எருமை மாட்டை விட இலகுவாக பண்ணைகளில் வளர்க்கலாம் (domestication). எருமை மாட்டின் குணம் இந்த பண்ணை வளர்ப்பு முறைக்கு உகந்தது அல்ல. எருமையின் பிரபலமின்மைக்கு ஆரிய சதி காரணமாக இருக்கும் என்பதை எனக்கு நம்ப முடியவில்லை. 

2. சிந்துவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடர்களுக்குரியது என்பதை அந்த "செல்" விஞ்ஞானக் கட்டுரை நிறுவவில்லை (குறைந்த பட்சம் விஞ்ஞான ரீதியில் அப்படியான முடிவு எட்டப் படவில்லை!). மேற்கு ஈரானிய மக்கள் (ஆரியர்?) பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேறொரு விவசாயக் குழுவாகப் பிரிந்து, அந்தக் குழுவில் இருந்து சிந்து வெளி விவசாயிகள் வந்தனர் என்றே "செல்" கட்டுரை முடிவு சொல்கிறது. இதன் படி தென்னிந்திய வாழ் மக்களும் சரி "ஆரியர்" எனப்படும் வட இந்தியரும் சரி fertile crescent என்ற மத்திய கிழக்குபகுதியில் இருந்து 10,000 BCE முன்பே கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் வழித்தோன்றல்களே! இது அதிசயமான கண்டு பிடிப்பும் அல்ல!    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.