Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

 

Black-Tiger-Mejor-Sengathirvanan-1024x57

காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.

வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான்.

அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது.

பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…… அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை.

வந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது படிக்க முடியவில்லை.

“இவ்வளவு நாட்களும் ஏன் மோனை வரேல்லை”

அம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள். எல்லோருடனும் சிரித்துப் பழகுவான். அவனுள் எரியும் நெருப்பு வெளியில் தெரியாது. கண்களுக்குத் தெரிவது சிரிப்பு. உள்ளே கனன்றுகொண்டிருப்பது நெருப்பு. அவனை எரிமலையாக்கும் முதற்பொதி கலவரங்களினால் விழுந்தது…

“காலம் கெட்டுக்கிடக்கின்ற நேரத்தில எங்கை மோனை திரியிற… அவங்கள் மனிசரின்ர உயிரை எடுக்கிறதெண்டே றோட்டுவழிய நிக்கிறாங்கள்.” அம்மா பெற்ற வயிற்றில் நெருப்புப்பற்ற பதறுவாள். அப்போதெல்லாம் அவளின் கைகள் அவனின் தலையிலோ கன்னத்திலோ உலாவிக் கொண்டிருக்கும்.

அவன் அவளின் பாசத்தைப் புரிந்து கொண்டாலும் கரைந்துபோக மாட்டான். கைகளை விலக்கி விட்டுக் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்பான். பின் வீராவேசமாக வசனம் பேசுவான். “அவங்களைப் போலத்தான் நாங்களும். ஏன் பயந்து சாகிறியள்.” அவன் சொல்லிக்கொண்டே தனது சைக்கிள் பாருக்குள் மறைத்து வைத்திருந்த பழைய சைக்கிள் செயினை எடுத்துக் காட்டினான். “ஆரும் அடிக்க வந்தாங்களென்டால், இனி அடிப்பன்” அவனின் கண்கள் கோபத்தாற் சிவந்தன.

அம்மா முன்னரிலும் பார்க்க கூடுதலாகப் பதறினாள். “என்ன இழவடா இது…… நான் என்ன செய்ய……” அம்மா அழுதாள். அவளின் அழுகைக்கு காரணம் இருந்தது. அது 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இனவாத நெருப்பில் ஆவேசமாக எரிந்து கொண்டிருந்த நாட்கள். வீதிகளில், வீடுகளில் எங்கு என்ற வேறுபாடு இல்லாது கொலை நடந்துகொண்டிருந்த நேரம். தெருவெல்லாம் பிணங்கள். சொந்தத் தெருக்களிலேயே உலாவ முடியாத வேதனை. அதுவும் இவர்கள் திருகோணமலையில் சிவபுரியில் சிங்கள ஊர்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள். கொழும்பிலும் வேறிடங்களிலும் கலவரம் நடப்பதை இலங்கை வானொலி அறிவித்துக் கொண்டிருந்தன. இவர்களிற்கு அடுத்த வீடு, எதிர்வீடு தெருவெல்லாம் காடையர்கள் பெரிதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

இவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு வேலைக்கு வரும் சிங்களக் கிழவியை வீட்டில் விட்டு விட்டுப் பற்றைக்குள் மறைந்தனர். அப்பாவும், மரத்தில் ஏறுமளவுக்கு வளர்ந்த அண்ணாக்களும் மரத்தில் ஏறி ஒளிந்திருந்தனர். அப்பா பதட்டத்தில் விழப்பார்த்து கைகால் எல்லாம் உரஞ்சலோடு மீண்டும் கொப்புக்களை கெட்டியாய் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டார். எல்லோரும் ஊரில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவின் இறுகிய அணைப்பில் நின்று சினமும் வெறுப்பும் கண்களில் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான், கடைக்குட்டி. வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. எங்கும் தீ பரவி புகை மூடியிருந்தது. ஊரவர்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்தனர். காடைகள், அவர்களை அடித்து வீழ்த்துவதும் வெட்டுவதுமாக தாண்டவம் ஆடின. இவர்களின் வீட்டை நோக்கி வேகமாய் ஓடிவந்தன. முற்றத்தில் நின்று சிங்களத்தில் கத்தின. வேலைக்கு வந்த சிங்களக்கிழவி வீட்டிற்குள் இருந்தபடியே சிங்களத்தில் ஏதோ கத்தினாள். அதுகள் போயிவிட்டன. ஊரே வெறிச்சோடிப்போனது. அது நடந்ததிலிருந்து அணுகுண்டு விழுந்த நகரம் போல அந்த இடம் ஆளரவமற்றுப் போனது.

இரவில் தனியே யாரும் உலாவித்திரிய அஞ்சும் நாட்களில் அவளின் ஆசைமகன் திரிவதை எப்படிப் பார்த்திருப்பாள். அவனுக்கு இப்பதானே பதினாறு வயது. அம்மா கெஞ்சலான குரலில் மன்றாடினாள்இ அவன் கேட்கவே இல்லை. வீட்டை விட்டு வெளியே போவான். இனக்கலவரத்தால் ஊரில் கொதிப்புற்றுப்போயிருந்த இளைஞர்களோடு சேர்ந்து ஆங்காங்கே அவனும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பெரியவர்கள் செய்யம் ஒவ்வொன்றிலும் ஒருவித துடிப்போடு அவனும் ஓடித்திரிந்து ஈடுபட்டான்.

அவன் இயக்கத்தோடு சேர்ந்து கொள்ள முடியாமல் அவனது வயதும் இருந்தது. ஏற்கனவே அவனது அண்ணன் ஒருவன் போராளியாக இருந்தான். இவர்களின் நடவடிக்கைகளை எப்படியோ சிறிலங்கா இராணுவமும் பொலிசும் அறிந்திருக்க வேண்டும். வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. துடியாட்டமான கடைக்குட்டி ஒவ்வொருமுறையும் தப்பிவிடுவான். அவனது அண்ணன் ஒருவனைக் கைதுசெய்து கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். அண்ணா சிறைக்குப் போனதும் வீட்டில் சோகம் சூழத்தொடங்கியது. அம்மா பொலிவிழந்து போனாள். இவன் கொஞ்ச நாள் வீட்டிலேயே நின்றான். அம்மாவிற்குத் தெரியும்படி எங்கேயும் போவதில்லை என முடிவெடுத்தான். பிள்ளை இனிப் போக மாட்டான் என்று அம்மா நினைத்து இருப்பாள். ஆனால் அவன் இரகசியமாய்ப் போய் வந்து கொண்டிருந்தான்.

பாடசாலையில் சுற்றுலா போக ஆயத்தமாகினால் அங்கே முண்டியடித்துக் கொண்டு ஓடித்திரியும் துடியாட்டமான சிறுவன், பாடசாலையில் திருத்த வேலை, பாடசாலை வளவில் தோட்டம் வைப்பது அங்கும் அதே ஆள். வகுப்பில் அவன் ஓர் எடுத்துக்காட்டு. எங்கேயும் சின்னப்பிரச்சினை வந்துவிட்டதென்றால் அதை தீர்த்து வைப்பதில் அவனும் ஓர் ஆள். ஒழுக்கக்கேடாக யாரும் நடந்துவிட்டாள் உடனே தண்டனை கொடுக்கப்படும். அங்கேயும் தண்டனை வழங்குபவனாக நிற்பான். பாடசாலை முழுவதும் அவன் பெயர் பரவியிருந்தது. பள்ளியில் வகுப்பாசிரியரிடம் நல்ல மதிப்பைப் பெறுவதே பெரும்பாடு, அப்படியிருக்க அவன் அதிபரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவனாக இருந்தான்.

வீட்டின் வறுமை இடையிடையே வயிற்றைக் கடிக்கும். நாட்டின் நிலைமையும் குழப்பமாக இருந்தது. இந்திய இராணுவக் காலம் அது. தேடுதல் வேட்டைக்குள் அகப்படாது முயலோட்டம் ஓடித்திரிந்த நாட்கள். இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் நாளேடொன்றில் தலைவரின் படத்தைக் கண்டவுடன் உடனே தன் எண்ணத்தில் வந்ததின்படி செய்து விட்டான்.

படத்தை அளவாக வெட்டித் தடித்த மட்டை ஒன்றில் ஒட்டினான். கீழே தலைவர் வே.பிரபாகரன் என்று தன் கைப்பட எழுதி ஊர் கூடும் இடம் ஒன்றில் எல்லோரும் காணும்படியாக ஒட்டினான். அப்போது அவன் எந்த பின்விளைவைப் பற்றியும் கவலைப்படவில்லை. எதையும் எதிர்கொள்வது என்ற துணிவோடு இருந்தான். இரகசியப் பொலிசார் நோட்டமிட்டபடியே திரியும் அந்த இடங்களில் அவன் ஒட்டிய படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்லோருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் யார் இதைச் செய்திருப்பார். அவர்களோடு சேர்ந்து அவனும் ஆச்சரியப்படுவதாய்ப் பாவனை செய்தான். இந்த அதிர்வலை அடங்க முன் யமாலியாவில் தேசத் துரோகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வரும்போது படகு விபத்தில் வீரச்சாவடைந்திருந்த மாவீரர்களின் படங்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தையும் எடுத்து வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் பசை கிண்டிக்கொண்டு போய் கோட்டை முகப்பில் ஒட்டி விட்டான். அது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவனின் செயல் ஒவ்வொன்றிலும் தீவிரம் கூடக்கூட சொந்த ஊரில் வாழ்வதற்கே முடியாமல் போனது. நாளுக்குநாள் அவனுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்தில் அண்ணன் ஒருவருடன் யாழ்ப்பாணம் வந்து அவருடனே வாழ்ந்து கொண்டிருந்தவன், காலத்தின் தேவையறிந்து தன்னைப் போராட்டித்தில் இணைத்துக் கொண்டான்.

பகைவனின் குகைக்குள்ளேயே கூடுகட்டி அவனையே வேவு பார்க்கும் வேவுப்பணிதான் அவனுக்கு வழங்கப்பட்டது. அராலி, ஊர்காவற்துறை இன்னும் அந்தக் கரையோரத்து இராணுவ முகாம்கள் எல்லாவற்றிற்குள்ளேயும் நிற்கும் பற்றைகள் பேசுமானால் மட்டுமே அவனைப்பற்றி முழுமையாக அறியலாம். எவ்வளவோ கடினங்களும் துயரங்களும் அந்தப் பற்றைகளோடும், மரங்களோடும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது.

ஆட்கள் இல்லாத சூனியப் பிரதேசத்துக் கட்டடங்களும் தண்ணீரில் நனைந்து கொண்டேயிருக்கும் கரையோரத்துப் பற்றைகளுந்தான் அவனின் தங்கிடங்கள். பல நாட்களாய் அங்கேயிருந்து ஊர்காவற்துறை முகாம் வேவிற்காக அலைந்து கொண்டிருந்தான்.

ஒருநாள், தன் அணியோடு வேவிற்காக உள்ளுக்கு வந்தவன் இடையில் இராணுவத்தை சந்தித்துக் கொள்ளவேண்டியிருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் சண்டையிட்டார்கள். முன்னனி அரணைத் தாண்டிவெளியே போகவே முடியாது என்று புரிந்துகொண்டான்.

அவர்களோடு வந்தவர்களில் ஒருவன் காலில் சூடுபட்டு விழுந்து விட்டான். முன்னனி நிலைகளை இராணுவம் பலமாகவும் விழிப்பாகவும் இனி வைத்திருக்கும் என்று புரிந்தமையால் காயப்பட்டவனையும் தோளில் சுமந்து கொண்டு இராணுவப்பகுதிக்குள்ளேயே சென்றார்கள். இடையிடையே இராணுவகாவலரண்கள் மற்ற இடங்கள் எல்லாம் பற்றைகள். அவர்களது நடைத்தூரம் அதிகமாக அதிகமாக நா வரண்டு போனது. ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லை. பசிவாட்டம் தாங்க இயலாது. உடல் சோர்ந்துவிட்டது. காயப்பட்டவனின் புண்ணுக்குச் சுற்றிய சீலைத்துணியை துளைத்துவிடும் முயற்சியில் இளையான்களும் கொசுக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.

“சீ…. இதுகளே காட்டிக்கொடுக்கும் போல” மடியில் வைத்திருந்தவன் கொசுக்களை விரட்டிக் கொண்டிருந்தான். காயப்பட்டவன் வேதனையோடு முனகிக் கொண்டு கிடந்தான். இந்த வேளையில் எல்லோரும் சோர்ந்த பின்னும் செங்கதிர்வாணன் இன்னுமொருவனை அழைத்துக் கொண்டு தண்ணீர் தேடினான். இப்போது அவர்கள் இயலாமையினால் அழுதால் கூட கண்ணீர் வராது. அவ்வளவுக்கு உடலில் நீர்த் தன்மையில்லை. தண்ணீர் தேடி அலைந்தவர்களின் கண்ணில் கிணறு ஒன்று தென்பட்டது அது ஆழக்கிணறு. யாரும் பாவிப்பதில்லையென்பதால் கிணற்றில் வாளிகூட இல்லை.

அவன் கிணற்றில் இறங்கித் தண்ணீர் எடுப்பது என்ற முடிவோடு உடற் தளர்வைப் பொருட்படுத்தாது கிணற்றினுள் இறங்கினான். ஒவ்வொரு படியும் குறையக்குறைய நெஞ்செல்லாம் புதுப்பரவசமோடியது. தண்ணீர்…… தொடும் தூரத்தில் கையால் அள்ளி முதலில் உதடுகளை நனைப்போம் என்று முயன்றான். சீ… சரியான உப்புத்தண்ணி. ஏமாற்றம். இயலாமை என்றாலும் சோர்ந்து விடாது மீண்டும் மேலேறிவந்து தண்ணீர் தேடி அலைந்தான். தனக்கு இல்லாவிட்டாலும் தன் காயப்பட்ட தோழனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் கொடுத்துவிட வேண்டுமே எனத் துடித்தான்.

அவனுக்கு இது பெரும் கஸ்ரமாகவோ சுமையாகவோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட வேளையிலெல்லாம் அவனின் மனதில் வந்துபோபவை அவன் நேரில் கண்ட மக்களின் அவலமும் தன் தேசத்தை மீட்கத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் அவலங்களுமே அதிகரிக்குமே என்ற எண்ணங்கள் தான்.

அவன் முயற்சிகளை கைவிடாது நடந்தான். அவனது கண்ணில் ஒரு வீடு தென்பட்டது. அவர்களை அழைத்து தண்ணீர் கேட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவிரும்பவில்லை. அவர்கள் முற்றத்தில் ஏதோ சுவையாகக் கதைத்துக்கொண்டிருக்க பின்புறம் வந்து குடத்துத் தண்ணீரை அவன் கொண்டுவந்த கலன்களில் நிரப்பிக் கொண்டு தோழர்களை நோக்கி விரைந்தான். இடையில் ஓரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய்நெய்யும் எடுத்துக்கொண்டுபோய் காயப்பட்ட போராளிக்கு கை மருத்துவம் செய்து விட்டு உதவி அணி வரும் வரை காத்திருந்தான்.

உதவி அணி வந்து சேர முடியாது அல்லற்பட்டது. இவர்களும் வெளியில் செல்ல மீண்டும் மீண்டும் முயன்றனர். முடியவில்லை. உதவியணி ஒருவாறு இவர்களை வந்தடைந்தது. இரவுபகல் அலைந்தமையால் எத்தனை நாட்கள் எங்கே அலைந்து திரிந்தார்கள் என்று சரியாகத் தெரியாது. உதவியணியில் வந்தவர்களிலும் சிலர் காயமடைந்தார்கள். அவர்களையும் தூக்கிக்கொண்டு சேற்றுக்குள்ளால் நடந்து வெளியேறி வந்து சேர்ந்தார்கள். ஆனால் பெறப்பட்ட தகவல்கள் நெஞ்சின் ஆழத்திற் கவனமாக இருந்தன.

Black-Tiger-Mejor-Sengkathirvanan-819x10

‘நொடி மாஸ்ரர்’ அவனை அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். பயிற்சி முடித்து கிடைக்கும் தேநீர் இடைவேளையிலோ ஓய்வான வேளைகளிலோ அவன் நிற்கும் இடத்தைச் சிரிப்பூட்டிக் கொண்டிருப்பான். ஏதாவது நொடி சொல்லி மற்றவர்களை மடக்கிவிடுவான்.

அவனின் அகன்ற உடம்பும் நடக்கும் போதும் நிற்கும் போதும் பின்புறம் வளையும் கால்களும் குத்திநிற்கும் மீசையும் எடுப்பில்லாத சாதாரண தோற்றமும் நினைவுக்கு வரும் ஒவ்வொரு கணமும் அவன் கேட்டு விடை காணமுடியாது போன புதிர்களே நினைவுக்கு வரும்.

‘நொடி மாஸ்ரர்’ அது அவனுக்கு ஏற்றதாய்த்தான் இருந்தது. அவன் உண்மையில் ஆசிரியன் தான். அராலித்துறைச்சண்டைக்கு செல்லும் அணிகளில் ஒன்றிற்கு இவனே வழிகாட்டி. இவன் வழிகாட்டி அழைத்துச் சென்ற அணிக்கு இவன்தான் பயிற்சி கொடுத்தான். அதன் பின் வெடிமருந்து பற்றிப்பிடித்தான். புதிதாய் வேவு அணியில் இணைபவர்களுக்கு அவனே வெடிமருந்துப் பாடமும் கற்பித்தான். வெடிமருந்து சம்பந்தமான பயிற்சிகளும் கொடுத்தான்.

மெதுவாகவும் பொருள் விளங்கும் படியும் கற்பிக்கும் திறமையால் அவன் கற்பிப்பதைப் போராளிகள் விரும்பினர். வேவு பணியில் நின்று வெடிமருந்து பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையில் எதிரி வைத்த பொறி வெடிகளையும் வெடிக்காமல் போன எறிகணைகளையும் செயலிழக்கச் செய்யும் பணி கொடுக்கப்பட்டது.

வெடிமருந்துக் கல்வி முழுமையாக நிறைவுறாத போதும் அவன் தனது முயற்சியால் ஒவ்வொரு வெடிப்பொருளையும் செயலிழக்கச் செய்யும் முறையை அறிந்து வேகமாகச் செயற்பட்டான். அவன் இயக்கத்தில் இணைய முன்பே யாழ்ப்பாணத்திற் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப அறிவு பெரிதும் பயன்பட்டது.

அவன் சூரியக்கதிர் சண்டையில் அணி ஒன்றிற்கு பொறுப்பாக நின்ற போது கரும்புலி அணிக்குச் செல்வதற்கான அனுமதி வந்தது. அவன் வேவில் நிற்கும் போதே தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தான். பதில் வந்தபோது குள்ளிக் குதித்தான்.

மனசை வலிக்கவைக்கும் எத்தனை நிகழ்வு. வளர்த்த நாய் சாப்பிடாது விட்டால் தானும் சாப்பிடாமலே பசியிருக்கும் அவனது நேசம் எல்லோர் மீதும் எல்லாவற்றின் மீதும் வியாபித்திருந்தது. மனதுக்குள் எழுகின்ற வலிகள் எல்லாம் வலிமையாகியிருந்தன. இலக்கிற்காக காத்திருப்பது, பயிற்சி எடுப்பது, நகருவது, சண்டை ஆரம்பிக்கலாம் என்ற கடைசிக் கணங்களில் சந்தோசப்படும் வேளை ஏதாவதொரு காரணம் இலக்கை அழிக்கமுடியாமைக்கு வழிவகுக்கும். வாடிய முகம், தளர்ந்த நடை, மறுபடி தளம் திரும்புவான். மறுபடியும் மறுபடியும்…… அவனின் காத்திருப்பு, பயிற்சி எடுப்பு, எல்லாம் தொடரும்.

மூன்று வருடங்களாக கழிந்த ஒவ்வொரு கணத்திலும் அவனது காத்திருப்பும் சேர்ந்தே கழிந்திருந்தது. சோர்வில்லாது எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி எல்லாக் காரியங்களிலும் ஈடுபடும் செங்கதிர்வாணனின் பாதங்கள் கடைசியாக மணலாற்றுக் காட்டுக்குள் இரத்தம் கசியக் கசிய நடந்தன.

அந்தப் பாதங்கள் பல இடங்களில் பதிந்திருக்கின்றன. அநேகமாக சண்டைகளிற்கு முன் வேவுப் பணிக்காக எதிரியின் மையப் பிரதேசம் வரையும் சுவடு பதிந்திருக்கிறது.

கரும்புலியாக வெடி சுமந்தும் ஏராளமான களங்கள். சிலவற்றை இப்போதுகூட வெளிக்காட்ட முடியாது.

‘எங்கேனும் ஒழிந்திருப்பான்’ அவளின் மனம் அங்கலாய்த்தது. சற்றுத் தள்ளி விளக்கை உயர்த்தினாள். வாகனத்திலிருந்து வித்துடற் பேழை இறங்குவது தெரிந்தது. அவளால் நம்ப முடியவில்லை. இனி நம்பித்தான் ஆக வேண்டும். மணலாற்றில் கரும்புலித்தாக்குதல் ஒன்றின் இறுதி வேவிற்காக சென்ற போது அவன் வீரச்சாவடைந்தான்.

‘ஆட்டி உடைக்க வேணும்’ என்று இரவுபகலாய் விழித்திருந்த அந்த வழிகள் 29.10.1999 அன்று உறங்கி விட்டன. ‘குட்டான் மாமா குட்டான் மாமா’ என்று சிறுமிகள் குரலெடுத்து அழுவது மனங்களை உருக்கியது.

நாளை…… இந்தச் சின்னமனங்களுக்கு வளமான எதிர்காலமும் நிலையான தேசமும் வேண்டித் தானே குட்டான்மாமா போலப் பலபேர் போகிறார்கள். சிறுமிகளுக்கு இப்போது புரியாவிட்டாலும் காலம் ஒருநாள் உணர்த்தும்.

நினைவுப்பகிர்வு: துளசிச்செல்வன்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 2004).

 

https://thesakkatru.com/black-tiger-mejor-sengathirvanan/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரும்புலி வீரனுக்கு வீரவணக்கம் 

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.