வீதியோரம் . மலர் . .......... 12. தேரர்களின் ஆசிகள் பெற்ற பின்பு அவர்கள் வெளியே வந்து திருமணத்துக்காக தயார் செய்திருந்த தனியான மண்டபத்துக்குள் செல்கின்றனர். வெளியே ஒரு இளைஞர் கூட்டம் மேளதாள வாத்தியங்கள் முழங்க அவர்களது கலாசார ஆடைகள் அணிந்து அவர்களுக்கே உரித்தான நடனங்கள் மற்றும் குத்துக்கரணம் அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றனர். உள்ளே கால் வைக்கும் போதே சில சடங்குகள் செய்து அழைத்துப் போகின்றனர். அங்கு மேடையில் வெள்ளை விரிப்புகளின் மேல் பூக்கள், வெற்றிலை,தேங்காய்,கொடுவாகத்தி மற்றும் ஒரு சாடியில் தென்னம்பாளை எல்லாம் வைத்து பித்தளை லோட்டா செம்பும் இருக்கின்றது. ஒரு வெள்ளித்தட்டின் மேல் இருக்கும் வெள்ளைப் பீங்கான் மேல் இருவரும் புறங்கையால் ஒருவர் கை மீது ஒருவர் வைத்திருக்க ஒரு பெரியவர் வந்து அந்த லோட்டாவில் இருந்த நீரை இவர்களின் கைகளின்மேல் வார்க்கின்றார். பின் இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அதன்பின் எல்லோருக்கும் பந்திவைத்து சாப்பாடு பரிமாறப்படுகின்றது. எல்லாம் முடிந்தபின் அதே மேளதாள வாத்திய வரவேற்புகளுடன் அவர்களுடைய “வீதியோரக்கடைக்கு”அழைத்து வரப்படுகின்றார்கள்.அப்பொழுது அந்த சோடனைகள், அலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பிரமித்துக் கொண்டே மணமக்கள் இருவரும் வருகிறார்கள். எல்லாம் ஒரு காரணகாரியத்துடன்தான் நடக்கின்றன போலும். இன்று காலை கண்முழிக்கும் போது கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைக்கவேயில்லை. எதோ பிக்குமாரின் ஆசியுடன் மாலைமாற்றிவிட்டு கடைக்கு வந்து சிறிய கொண்டாட்டம் செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று நடந்ததோ எந்த ஜென்மத்திலும் மறக்கமுடியாத பெரிய நிகழ்ச்சி. இவற்றின் பெரும் பங்கு பிள்ளைகள் யுகேந்திரனையும் சுஜிதாவையும் சேரும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவ்வளவுநாட்கள் பட்ட துன்பம் எல்லாவற்றையும் இந்நிகழ்ச்சி மறக்கடித்து விட்டது. இந்த நாளுக்காகத்தானோ இவ்வளவுநாளும் அத்துணை துன்பப் பட்டிருந்தோம் என்று மேகலை கண்ணீர் மல்க விநோத்திடம் சொல்கின்றாள். இருவரும் அங்கு வந்த பிள்ளைகளை அனைத்து உச்சி முகந்து முத்தமிடுகின்றனர். நள்ளிரவுவரை நடந்த கொண்டாட்டம் நிறைவடைகிறது. பின்பு அவர்கள் கடைக்குள் சென்று அந்த இருபெண்களுக்கும் அந்த வாலிபனுக்கும் நன்றி கூறிவிட்டு வீட்டுக்குள் செல்கின்றனர். சில மாதங்கள் வழமைபோல் போயின. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து ஓய்ந்து விட்டிருந்தது. இன்றுதான் வானம் கொஞ்சம் வெளிச்சிருக்கு. அன்று பின்னிரவு நேரம் ஜீப்புகளும் ட்ரக்குகளும் புழுதிபறக்க வேகமாய் வந்து கடைக்கு முன்னால் நிக்கின்றன.திபு திபுவென போலீசார் இறங்கி வீதிகளை மறித்து நிக்கின்றனர். சிலர் கடைக்குள்ளும் வேறு சிலர் வேகமாய் ஓடி அங்கு நெடுநாளாய் நிக்கின்ற லொறிக்குள் ஏறி உள்ளே செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்த பெண்களையும் அவர்களுடன் இருந்த ஆண்களையும் அவர்கள் இருந்த அதே கோலங்களுடன் அரைகுறை ஆடைகளுடன் இழுத்துவந்து வீதியோரத்தில் முட்டிகால் போட்டு இருத்திவிட்டு சிலர் அவர்களுக்கு காவல் இருக்கின்றார்கள்.இரு போலீசார் லாரியின் முன்பக்கத்தில் ஏறி அதனுள் இருந்து சாராயப் போத்தல்கள், சிகரெட்டுகள்,சுருட்டுக்கட்டுகள்,போதை வஸ்துக்கள், பொட்டலங்கள் பணக்கட்டுகள் என்று அள்ளிக் கொண்டு வந்து அங்கே துணியொன்று விரித்து அதில் போடுகிறார்கள்.அங்குதான் அந்தப் பையன் தனது சாமான்களை வைத்திருப்பதும் தங்கிறதுமாய் இருந்தவன்.இப்போது அவனையும் அங்கு காணவில்லை. ஒருவேளை காட்டுக்குள் ஓடியிருக்கலாம். அங்கிருந்து கிளம்பிய வாகனங்களையும் நன்றாக சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுகின்றனர்.கடைக்குள் போனவர்களும் வெளியே வந்து அங்கு தப்பாக எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். அப்போதுதான் விநோதன் கவனிக்கிறான் அவர்களில் சிலர் பலநாட்களாக கடைக்கு வந்து சகாயமாக சாப்பிட்டு எல்லோருடனும் பழகி அளவுலாவி சென்றிருக்கின்றனர்.அவர்கள் ரகசியப்பொலிஸ் என்று இப்பதான் அவனுக்கு புரிந்தது. நல்லகாலம் நாங்கள் ஒரு தப்பான காரியமும் செய்யவில்லை என்று ஆறுதல் பெருமூச்சு விடுகிறான். கணநேரமாகிவிட்ட படியால் அவர்களில் ஒரு பெண் அதிகாரி கடைக்கு வந்து மணிமேகலையிடம் அங்கு பிடித்து வைத்திருப்பவர்களுக்கு தேநீரும் சிற்றூண்டியும் குடுக்கச் சொல்கிறாள். மேகலையும் யுகேந்திரனும் அவற்றை அங்கு எடுத்து செல்கிறார்கள்.அப்போது நடுவில் இருக்கும் அந்தப் பெண்களில் ஒருத்தி ரகசிமாய் மேகலையிடம் அந்தப்பையனை கவனமாய் பார்த்துக்கொள்.அவன் மிகவும் நல்லவன்.அவன் பிழைப்புக்காக அவற்றை விற்கிறான். ஆனால் அவன் அவை எதையும் பாவிப்பதில்லை. எங்களிடம் கூட ஒரு சகோதரனாகத்தான் பழகி வருகிறான். அவன் குடும்பம் மிவும் எளிமையானது.உன்னால் முடிந்தால் அவனை ஏதாவது ஒரு வேளையில் சேர்த்து விடு என்று துணியால் வாயை மூடிக்கொண்டு சொல்கிறாள்.மேகலையும் அது எனக்கும் தெரியும். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு அவனைக் காணவில்லை எங்கு போனானோ வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று கேட்கிறாள். அதுக்கு அவள் அது தேவையில்லை, குற்றத்தை ஒப்புக்கொண்டால் எதாவது தண்டப்பணம் கட்டிவிட்டு போகச்சொல்வார்கள் அவ்வளவுதான். — அப்படியென்றால் உனக்கு திருந்தி வாழுற எண்ணமே இல்லையா....... — சின்ன சிரிப்பு சிரித்தவள், இனி திருந்தி என்ன செய்வது, இது உடம்புக்கும் தேவையாய் இருக்கு அவ்வளவு பழகி விட்டது கூடவே என்னை நம்பி இருக்கிற மூன்று சீவன்களுடைய பசியையும் போக்குது என்கிறாள். யுகேந்திரன் பேணி தட்டுகள் எல்லாம் எடுத்துக் கொண்டு வர இருவரும் கடைக்கு வருகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்கின்றன. ஒரு ட்ரக் அந்த பழுதடைந்த லொறியையும் கட்டி இழுத்துக் கொண்டு போகிறது.அதன் பின் அந்தப் பெண் அதிகாரி கடைக்கு வந்து சிற்றூண்டிக்கான பணத்தை செலுத்திவிட்டுப் போகிறாள்.................! மலர் . ......... 🫵 12.
By
suvy · 2 hours ago 2 hr
Archived
This topic is now archived and is closed to further replies.