Jump to content

முள்முருக்கை - நெற்கொழுதாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

முள்முருக்கை: நெற்கொழுதாசன்

Netkoplustory.jpg?resize=1020%2C721&ssl=

நீண்டு கிடந்த தெருவில் நாய் தன்பாட்டில் படுத்துக்கிடந்தது. கண் எட்டும் தொலைவு மட்டும் வேறு எந்த உயிரினங்களையும் காணமுடியவில்லை. பாலை வெய்யில். தொலைவில், தெருவின்மேல்   நிரலைகள் தோன்றியது.  புளுதி உறைந்த ஓரங்களில் அனல்காற்று மெல்ல மண் துணிக்கைகளை அங்குமிங்குமாக உருட்டிக்  கொண்டிருந்தது.  தெருவில் ஊற்றியிருந்த  தார் நைந்து செருப்பை உள்வாங்கியது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். மறைவுகளிலிருந்து  யாரோ  கூர்ந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன்.  என்னையறியாமல் மனம்  கூனிக்கொண்டது.  திரும்பிப்போ என்று ஒரு குரலும், இல்லை உன் பாட்டில் நீ போ. அன்றும் இப்படித்தான்.  சிறு அசைவுகூட எழவில்லையே. எதற்காக நீ தயங்குகிறாயென்று, ஒரு குரலும் எதிரெதிராக  ஒலித்துக் கொண்டிருந்தது.  நடந்தேன். அன்றையைபோல் அல்லாமல் நிமிர்ந்தே நடந்தேன்.

எல்லாம் மாறி இருந்தது.  வேலிகளைக் காணவில்லை. திரும்பும் இடங்கள் எங்கும் மதில்கள். மதில்மேல் ஆணிகளும், உடைத்த போத்தல்களின் பிசுங்கான்களும் நிறைந்திருந்தன. மதிலில் காகமோ, புலுனிக்குருவியோ, அணில்பிள்ளையோ   இருக்கமுடியாது. முன்பெல்லாம் யாராவது முகவரி கேட்டு வந்தால், மதில்வீடென்றோ, ஓட்டுவீடென்றோதான்  அடையாளம்  சொல்வோம். அப்போது  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுதான் மதில்கள் இருந்தன. அவ்வளவு எண்ணிக்கையில் தான் ஓட்டு வீடுகளும் இருந்திருக்கும். முடக்கன் கந்தன் கடையடி முல்லையில்தானே கம்பு முறித்து அடித்தார்கள்.  நாடியை தடவிப் பார்த்தேன். தழும்பு இருந்தது.

அவர்கள் என்னை எளியவேசை என்று அழைத்தார்கள். ஊருக்குள் கால் வைச்சால் அடித்துமுறிப்பதாக கத்தினார்கள். அவர்களில் ஒருவன் என் பின்னாலிருந்து கிளுவைக் கதியாலால் அடித்தான்.  தொடையொன்றில் கிளுவை முள் கீறியது. இன்னும் எரிவதுபோல இருக்கவே தொடையை  புறங்கையால் தடவிக்கொண்டேன். அவன் முகம் நன்றாக நினைவிருந்தது. அதற்கு சிலநாள்களுக்கு பேச்சோடு உதவி தேவை என்றால் கேளுங்க என்று  குழைந்து பேசியிருந்தான்.  பசுவின் சாணத்தை மணந்து திமிறும் நாம்பன் மாட்டின் முறுகலை அவனில் கண்டேன். அந்தக்கணத்தில் அவன் மீது எழுந்த அச்சம் இன்னும் இருக்கிறது. அந்த அச்சம் இப்போது இரக்கமாக மாறிவிட்டது. அங்கு வாழ்ந்த நாள்களில், இரவுக்கு கண் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பேன். இரக்கம் இருக்கிறதா என்றால் இல்லை என்பேன். 

எதற்காக இந்தத் தெருவில் நடந்தே போகவேண்டும் என விரும்பினேன். தெரியவில்லை. நடக்க நடக்க ஒரு நிறைவு. சேர்த்துவைத்திருந்த வன்மத்தில் ஒரு மாற்றம். நான் இன்னும் ஏறக்குறைய ஒருமைல் தூரம் போகவேண்டும். போய்ச்சேர்வதற்குள் நான் புது மனிசியாகிவிடுவேனோ என்ற அய்யம் எனக்குள் எழுந்தது. அவர்கள் அன்று ஏன் அப்படிச்செய்தார்கள்.

சேரன்தோட்டம் விவசாயக் கிராமம். நூறு குடும்பங்கள் அளவில் குடியிருந்தார்கள். அரசாங்கத்தின் எல்லைப் பகுப்புகளைத் தாண்டி, கிராமத்தவர்கள்  தமக்குள்ளாகவே தமது ஊரின் எல்லையை வகுத்துவைத்திருந்தார்கள். வடக்கு தெற்காக இரண்டு வாசிகசாலைகளும், கிழக்குப்பக்கம் ஒரு பிள்ளையார் கோயிலும், மேற்குப்பக்கம் வயலும் குளமுமாக எல்லையை தம் மனதுள்ளேயே வரைந்துகொண்டிருந்தனர்.  கல்யாணமோ கருமாதியோ எதுவென்றாலும் தமக்குள்ளேயே முடித்துக் கொள்வார்கள். வருடத்தின் எல்லா நாள்களும் தோட்டத்தில் வேலை செய்வார்கள். மாரிகாலத்தில் வயலில் நெல் விதைப்பார்கள்.  எல்லா ஊர்களைப்போல இங்கு இருந்த இளைஞர்களும் தங்கள் ஊரை மதிப்பாக வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

கிராமம் முடிந்து வயல் தொடங்குமிடத்தில் என் வீடு. அதை வீடு என்று யாரும் சொல்லமாட்டார்கள். எனக்கு அது வீடாயிருந்தது. படுக்கவும், சமைக்கவும், ஒரு றங்குப்பெட்டி வைக்கவும் போதுமான ஒரு அடைக்கப்பட்ட  நீள்சதுரநிலம். மண்ணைக் குழைத்து நிலமட்டத்திலிருந்து  ஒரு அடி அளவில் உயர்த்தி திண்ணைபோல செய்திருந்தேன். அதுதான் படுக்கை. அதிலிருந்து இரண்டடி தள்ளி, வடகிழக்கு மூலையில், வெட்டி எடுக்கப்பட்ட மண்ணெண்ணை பரலின் அடிப்பாகத்தின்மேல்  மூன்று கற்களை வைத்து அடுப்பாக செய்திருந்தேன். அடுப்புக்கு எதிர் மூலையில் சாமிப்படம். அடுப்பு எரியும் வெளிச்சம் சாமிப்படத்தில் படவேண்டும் என்று ஆச்சி சொல்லுவார். அந்த நிலம் இப்போது எப்படி  இருக்கும். அவர்கள் தூக்கி எறிந்த ரங்குப்பெட்டி மண்ணேறி மக்கிப் போயிருக்கும். இதேமாதிரித்தான்  பிரான்ஸில் நிலம் வாங்கி வீடு கட்டியபோதும் அடுப்பு எரிக்கும் வெளிச்சம் சாமியறையில் படும்படியாக  பார்த்து  வீட்டைக்கட்டினேன். படுக்கையையும் கூட.

நாயுருவி,எருக்கு, தூதுவளை  என அந்தத்  திடலெங்கும் செடிகள் நிறைந்து கிடந்தது. அந்தத்  திடலை எனக்கு தந்தவர் அம்மாவுடன் வேலைசெய்த மனோன்மணி அம்மா.  சாகுந்தறுவாயில் அம்மா, மனோன்மணி அம்மாவின் முகவரியை தந்திருந்தார்.  எறிகணை வீச்சால் ஏற்பட்ட காயமும், அதன் காரணமாக ஏற்பட்ட அதிக ரத்தப்போக்குமே மரணத்துக்கு காரணம் என மருத்துவ அறிக்கை வந்திருந்தது. நான் அந்த அறிக்கையுடன் மட்டும்தான் மனோன்மணி அம்மாவிடம் வந்திருந்தேன். மனோன்மணி அம்மா சாகும்வரை சாப்பாட்டுக்கு சிரமப்படவிடவில்லை. அவர் இறந்தபின் தோட்டங்களில்  கூலி வேலை.

அற்புதராசன் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தான். அரச வேலை செய்யுமளவுக்கு படித்திருந்தவன். ஆனாலும் தோட்டம்தான் செய்தான். அவர்களுக்கு நிறையவே நிலங்கள் இருந்தன. வயலும் மேட்டுநிலங்களுமாக வருடத்தில் எல்லா நாள்களும் வேலை இருந்தது. அவனுடைய தோட்டத்திற்கும்  கூலி வேலைக்கு போயிருக்கிறேன். நான் குடியிருந்த திடல் காணியை ஒட்டி அவர்களது பனங்காணி ஒன்றும் உள்ளது. அதில் கள் இறக்குபவர் பனைக்கூலியாக ஒரு போத்தல் கள்ளை முருங்கைமரமொன்றில் கொழுவி வைப்பார். அந்த கள்ளை எடுப்பதற்காக ஆரம்பத்தில்  வந்து சென்றவன்தான் அற்புதராசன்.

நாளடைவில் என் வீட்டுக்கும்  வந்துபோகத் தொடங்கினான்.  பின்னர் தோட்டத்தில் வேலை செய்த கூலியை வீட்டுக்கு  கொண்டுவந்து தரத் தொடங்கினான். கள்ளை வீட்டின் முகப்பிலிருந்து குடிக்கவும் செய்தான். எல்லாமும் மாறத்தொடங்கியது.  முதலில் நாயுருவிப்பற்றைகள் மறைந்தன. பதிலாக முள்முருக்கைவேலி அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. வேலி வளையமாக என்னைச் சுற்றி அடைத்துக்கொண்டது. வாசல் எனப் பாவித்த இடத்தில் கதவு ஒன்றும் வந்து சேர்ந்தது. கதவு புரிந்துகொள்ள இயலாததாக இருந்தது. உள்வளமாக  மட்டுமே அந்தக் கதவு திறக்க அனுமதித்தது.

குடிசைக்குள் அடுப்பைத் தவிர மற்றதெல்லாம் சிறிய மற்றங்கள் அடைந்தன. நண்டு அற்புதராசனுக்கு  பிடித்த உணவாகயிருந்தது. கள்ளும் சுட்ட நண்டும் அலாதியான சுவை என்பான்.வெள்ளிக்கிழமைகளில் கூட  நண்டு சுட்டுக் கொடுத்திருக்கிறேன். ஒருநாள் கத்தியின் பின்பக்கத்தால் நண்டின் ஓடுகளைத்  தட்டியிருந்தேன். ஓடு நொருங்கி சதைக்குள் கிடக்கிறது என்றான்.  கடித்து உடைத்துக்கொடுத்தேன். சுட்ட நண்டின் வாசமும் சுவையும் முற்றத்தில் ஒட்டிக்கிடந்தது . கடலில் நண்டு என்றால் நிலத்தில் உடும்பு.

நான் புத்தகங்களை வாசிப்பது தெரிந்ததும், ரமணிச்சந்திரனின்  புத்தகங்களையும், ஒரு ரேடியோவையும்  வாங்கிக்  கொடுத்தான்.  உறவுகளற்ற  எனக்கு அற்புதராசனின் வருகை சந்தோசத்தை ஏற்படுத்தியது. மனமெங்கும் நிறைந்திருந்த ஏக்கம் வடியத்தொடங்கியது.   மனோன்மணி அம்மா இருந்திருந்தால் நான் அந்த ஏக்கத்திற்கு ஆளாகி இருந்திருக்கமாட்டேன்.

அவன் என்னை திருமணம் செய்யமாட்டான் என்று உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.ஆனால் அதை அந்த இரவில் வெளிப்படையாக உடைத்துச் சொன்னபோது அழத் தோன்றியது. உதடுகளுக்குள் அழுகையை மடக்கிக்கொண்டேன். உள்மடங்கிய உதடுகளை விரல்களால் நிமிண்டி உறிஞ்சினான். அன்றையின் பின்  அற்புதராசனை வெறுத்தேன். அதிலிருந்து சரியாக இருபது வருடங்கள் கழித்து பிரான்சில் அவனைக்    கண்டேன். நான் அளைந்த அந்த உடல் அப்போதும் அருவருப்பாக தான் இருந்தது. ஆம். அவன் என்னை ஏமாற்றியவன். 

அவர்கள் ஐந்து பேர் இருந்தார்கள். மூவர் புதியவர்கள். தடிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மீசையே அரும்பாத  ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான்.அவர்களில் மிகவும் சிறியவனாக இருந்த அவன் என் ரேடியோவை எடுத்து தன் வயிற்றுக்குள் செருகியதைப் பார்த்தேன். தம்பி அது ஒன்றுதான் என் பொழுதுபோக்கு. அதை வைத்துவிடு என்றபோது எட்டி என் வயிற்றில் உதைத்தான். அவன்தான் முதன் முதலாக என்னை அடித்தான். அவன் உதைத்த வேகத்தில் என் அடிவயிற்றில் சிறுநீர் துளிர்த்தது. கதவைத்தள்ளி வெளியில் வந்து கத்தினேன். யாரும் வரவில்லை. இருளின் போர்வைக்குள் என் நிர்வாணம். திசைகள் கண்களாயிருந்தன. 

வெளியில் இருந்து பார்த்தபோது கைவிளக்கு விழுந்த இடத்திலிருந்து நெருப்பு எழுந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் அவர்களின் முகம் தெரிந்தது. ஊரின் எல்லையைக் கடக்கும்வரை அடித்தார்கள். இனிமேல் ஊருக்குள் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் பையை எறிந்தார்கள்.  அன்று மேகமற்ற வானத்தில்  முழு நிலவு.  ஈரமற்ற  நிலத்தில் நான்.

இது முடக்கன் கந்தன் கடையடிதான். எனக்குதான் அடையாளம்  தெரியவில்லை. என்னையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கடைவாசலில் இருவர் நிற்கிறார்கள்.   பக்கத்தில் பொண்ணு ஆச்சியின் அப்பத்தட்டி இருக்கிறதா என்று பார்த்தேன். அப்பத்தட்டி இருந்ததிற்கான குறிப்புகளே இல்லை. கடைக்குள் பார்த்தேன். கடை வாசலில் நின்றவர்கள் விலகி வழி விட்டார்கள். என் தோற்றத்திற்காக என புரிந்துகொண்டேன்.  கடையை அண்டி நின்ற முல்லை மரம் அடிபெருத்துக் கிடந்தது. நல்ல நிழல் மரம். முன்பெல்லாம் எந்தநேரமும் யாராவது ஒருவர் இருவர் அதில் இருப்பார்கள். இப்போது அதன் பக்கம் யாரும் போனதற்கான அடையாளம் இல்லை. கடைவாசலில் நின்றவர்களுக்கு எதோ தோன்றியிருக்கவேண்டும். அவர்களை கவனியாதது போல நடக்கத்தொடங்கினேன். இரண்டு அடி வைத்ததும் கடையை திரும்பிப் பார்த்தேன்.

கிராமத்துக்குள் யார் வந்தாலும் முடக்கன் கந்தனின் கடையைத்தாண்டி தான் வரவேண்டும்.  வருபவர்கள் கடையைக் கண்டதும் இறங்கி விசாரிப்பார்கள்.  அந்த நேரத்தில் நிற்பவர்களைப்  பொறுத்தே  பதிலும் அமையும். ஊருக்குள் கல்யாணம் பேசுபவர்கள் தம் தரகரிடம் முடக்கன் கந்தன் கடையில் விசாரிக்க வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்புவார்கள்.

இரண்டுகடைகள் ஒரு கட்டடத்தில். பக்கத்தில் சரித்து இறக்கிய அஸ்பெஸ்ரர் சீற் கொட்டில். அதற்குள்தான் அப்பக்காரக்கிழவி பொண்ணு ஆச்சி அப்பமும் தோசையும்  சுட்டு விற்பார். இரண்டு  கடைகளில் ஒன்று பலசரக்கு சாமான்கள் விற்கும் கடை. மற்றது தோட்டமருந்து, பசளைகள் விற்கும் கடை. இரண்டு கடைகளையும் முடக்கன்கந்தன் தான் நடத்தினார்.  முடக்கன் என்ற சொல்லுக்கு அர்த்தம் எந்தவொரு அகராதியிலும் இருக்காது. கந்தனுக்கு இடதுபக்கம்  இடுப்பு  வளைவு.   வலது பக்கம் கால்  வளைவு. ஆள் நிமிர்ந்து தான் நிற்பார். நிற்கும்போது வளைவு தெரியாது. நடந்தாலோ இருந்தாலோ வளைவு தெரியும். ரோடுகளில் இருக்கும் முடக்குப்போல கந்தன் உடம்பில் வளைவு இருப்பதால் அவரை முடக்கன் கந்தன் என்று கூப்பிடுவார்கள்.

முடக்கன் கந்தனின் கடையில் கொப்பிக்கணக்கு வைத்துதான் நான் சாமான் வேண்டுவது. காசு கிடைக்கும்போது மொத்தமாக கொடுத்து கடனை அடைத்துக்கொள்வேன். எல்லோரும் கந்தன் கள்ளக்கணக்கு எழுதுவதாக சொல்வார்கள். ஆனால் எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னைப் பொறுத்தவரை கந்தன் நேர்மையாளன்.  அவர்கள் எனக்கு அடித்தபோது கந்தன் மட்டும்தான் “தம்பியவை அடிக்காதையுங்கோ செத்துக்கித்துப் போவாள்” என்று கூறியவர். அப்படி கூறியதற்கே கந்தனின் கடையை உடைத்துவிடப்போவதாக எச்சரிக்கை  செய்தார்கள் அவர்கள்.  பொண்ணு ஆச்சிகூட “வந்தாள் வரத்தாளால”  ஊரின் மனமே போச்சு என்றுதான் சொன்னார்.

அது சமாதான காலம்.  புலிகள், இராணுவம்,மற்றும்  ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்தார்கள். சட்டப்படி புலிகளின் நீதித்துறை ஒரு விசாரணையை செய்வதாயின் பளையில் அமைந்திருக்கும் அவர்களின் காவல்துறைக்கு வரும்படி அழைப்புக்கடிதம்   கொடுப்பார்கள். கடிதம் கிடைத்தால் போயேயாகவேண்டும். இராணுவம் மற்றும் ஈபிடிபி  நேரடியாக வீட்டுக்கு வந்து தமக்கு ஏற்றவகையில் பிரசனைகளை தீர்த்துவிட்டு போவார்கள். எனக்கு அடித்தவர்களில் மூவர் புதியவர்கள் என்று சொன்னேனல்லவா. அவர்கள் தங்களை கலாசாரக்குழு என்று சொன்னார்கள். சமாதானகாலத்தில் இப்படி ஆயிரம் குழுக்கள் இருந்தன. புலிகளிடமும்,இராணுவத்திடமும்,ஈபிடிபியிடமும். இவர்களைத் தாண்டி இன்னொரு குழுவும் இருந்தது. அது எல்லோருக்கும் எடுபிடி செய்யும் குழு. அந்த சந்தர்ப்பத்தில் யார் பலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எடுபிடியாக மாறி விடுவார்கள்.  இவர்கள் எந்த குழு என்று  எனக்கு தெரிந்தே இருந்தது. 

இந்த வீதியால்தான் இழுத்துவந்தார்கள். கழுத்துக்குக் கீழே இறங்கியிருந்த ஆடையை இழுத்து கழுத்தையும்  மூடினேன். அவர்களில் இளையவன் அதை பார்த்துவிட்டான். வேசைக்கு என்னடி வெக்கம் என்று கேட்டான்.  திருப்பவும் சட்டையை இழுத்துக் கிழித்தான். கிழிக்கும் சாக்கில் மார்பை பிடித்து இழுத்தான். வலித்தது.  அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பதை உணர்ந்தேன். கலாசாரக்குழு என்ற அவர்களைப் பார்த்து சிரித்தேன். எனக்காக பேசுவார்கள்  எவருமில்லை.  அநாதை என்றால் அடிவளவு நாயும் நக்கிப் பார்க்கும். 

கொழும்பிலிருந்து விமானம் ஏறும்போது, இனிமேல் இந்த மண்ணுக்கு வருவதேயில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். விமானம் உயர உயர நிலத்தின் மீதான பாசம் பெருகியது. தனி முகில்போல எடையில்லாமல் அது அப்படியே என்னுள் உறைந்துபோயிற்று. மனதில் ஒரு பெரும் பாரத்துடன்தான் பிரான்சில் இறங்கினேன். அந்தப்பாரத்துடன் செத்துவிடவே விரும்பினேன்.  ஆனால் அவனை பிரான்ஸில் கண்டபோது எல்லாம் சிதைந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த உணர்வை ஏமாற்றம் என்று தனியே சொல்லிவிடமுடியாது

முதலில் அவனது மனைவி தான் அறிமுகமானார். பாரிஸின் புறநகர் வைத்தியசாலையில் சந்தித்தேன். அறிமுகமற்ற தமிழர்கள் சந்தித்தால் அறிமுகமாகிப் பேசுவது வழமையானது. யார் என்று தெரியாமலேயே பேசினோம். மகன் வரும்வரை  பேசிக்கொண்டிருந்தோம். அந்த நட்பு தொலைபேசி வழியாகவும் நெருக்கமாயிற்று. அவர்களை வீட்டுக்கு அழைத்திருந்தேன். அவர்கள்  காரிலிருந்து  இறங்கிய நொடிப் பொழுதிலேயே நான் அழியத் தொடங்கினேன். ஆம், இறங்கியது அற்புதராசன்.

அற்புதராசனது பார்வையிலிருந்தது என்னவென கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவுணர்வு என்று சொல்லிவிட முடியாது. முதலில் தன்  எண்ணங்களை உறுதிப்படுத்தும் பார்வைதான் இருந்தது. பின் தன்  மனைவியின் கண்களில்  தேடினான்.   அது ஒன்றைத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.  தன்னைக் கட்டுப்படுத்த   முயன்றதை கண்கள் காட்டிக்கொடுத்தன. இயலாமையால் தவித்தான். ஆனால் என்  எண்ணமெல்லாம் அவனைக்கடந்து மீசை அரும்பாத அந்த சிறுவனைத் தான் தேடியது. உணவு மேசையில் அமர்ந்து பேசத்தொடங்கினோம்.

இனி வேறுவழியில்லை. அற்புதராசன் தன்னைக் கட்டுப்படுத்த முயல்வதை குலைக்க  வேண்டும். நான், என்னை அவனுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.  மனம் உந்தியது. வாருங்கள்  வீட்டைப் பார்ப்போம் என்று அழைத்தேன். ஒவ்வொரு  அறையாக காட்டினேன். எப்போதுமே நான் ரசித்திருக்காத வீட்டின் செழிப்பான பகுதிகளையெல்லாம் காட்டினேன். மீன் தொட்டிக்குள் இருந்த  சங்குநுணியில் தங்கம் பூசியிருந்ததை காட்டினேன். என் அறையை திறந்துவிட்டேன். நிலமட்டத்திலிருந்து ஒரு அடிவரை உயர்ந்து திண்ணையும் அதன்மேல் இருந்த மெத்தையும் அவன் கண்களுக்கு படும்படி விலகி நின்றேன். என் கீழ்க்கழுத்தில் இருந்த மச்சத்தை பார்க்குபடியாக திரும்பி, அவன் மனைவியுடன் பேசலானேன். பின் அவனைப் சிதைக்கும்  இறுதி ஆயுதத்தையும்   எடுத்தேன்.  இது எங்கள் குடும்ப  ஆல்பம்  என்று அவர்களின் கையில் கொடுத்தேன். உள்ளே திருப்பி இவர்தான் என் கணவர் என்று அறிமுகம் செய்தேன்.

முழுமையாக சிதைந்து உட்கார்ந்திருந்த அற்புதராசனைப் பார்க்க மகிழ்வுக்கும் துயரத்துக்கு இடையில் எதோ ஒன்று வடிந்துபோனது. நிச்சயம் அவன் நினைவுகளில் ஊரில் இருந்த  பனைத்திடலும், பனைக்கூலியாக கள் வாங்கிய அந்த நிகழ்வுகளும் வந்திருக்கும். வரவேற்பறையில் மாலை போடப்பட்டிருந்த புகைப்படத்தைக் காட்டி “அவர்தான்” என்றேன். அல்பத்தையும் சுவரிலிருந்து படத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதன்பின் பேசியதெல்லாம் அவன் மனைவி மட்டும்தான். தன்னை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதாக நினைப்பவனின் வீழ்ச்சி முன்னேயே நிகழ்கின்ற அந்தக் கணம் துயர் மிக்கது. குரூரமிருகம் ஆனந்தமடைந்து வெளியேறியது. நான் ஏன் அப்படிச் செய்தேன். தெரியவில்லை. மறந்ததாய் எண்ணியிருந்தவைகள் ஒவ்வொன்றாக தோன்றின. அவர்கள் ஐவருக்கும் ஆறாவதாக அவனுக்குமாக சேர்த்து மகனை முத்தமிட்டேன். உதடுகள் உள்மடிய அழுகையை விழுங்கிக் கொண்டேன். .

மன்னிப்பின் மகத்துவம் எந்த வரிகளுக்குள்ளும் அடங்கிவிடுவதில்லை. அது முழுவதும் உணர்ச்சிகளால் சேர்மானம் கொள்வது. அன்பு  சகமனிதனை நேசிக்கவைக்கும்  சக்தியை விதைத்துக் கொண்டே இருக்கும். ஒரு உதைக்கப்பட்ட பந்துபோல் மேல்  எழுந்து கொண்டேயிருக்கும். சகமனிதன்  மீதான கரிசனையும்  நேசிப்பும்தான்  வாழ்வின் அர்த்தம் எனப் புரிந்தது. மனதற்குள் புது எழுச்சி. வாழ்ந்த ஊருக்குப் போகவேண்டும். தானாகவே தோன்றியது. தீர்மானித்த அடுத்தநாள் பயணச்சீட்டை  பதிவு செய்துவிட்டேன்.

இவ்வளவு வேகமாக இங்கு வந்தடைவேன் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. எல்லாம்  எதோ ஒரு ஒழுங்கில்  நடந்துமுடிந்துவிட்டது. இன்னும்  இரண்டு எட்டில் மனோன்மணி அம்மா வீடு.

மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்த முகம். மீசை முளைத்து விட்டது. கூடவே ஓரிரண்டு  நரைமுடிகள். எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.  எதேட்சையாக பார்ப்பதுபோல அவனது காலைப் பார்த்தேன். அறனை சருகுக்குள் நுழைவதுபோல காலை சரத்துக்குள்  மறைத்துக் கொண்டான். நீங்கள் வரவிருப்பதாக அண்ணா  சொன்னார். அவன் குரல்  கண்ணாடியில் விழுந்த நீர்த்துளிபோல  சிதறியது.தோளிலிருந்த  பையிலிருந்து  எடுத்தேன். “இது உமக்காக” என்றபடி அவனின் கைகளில் கொடுத்தேன். ஊருக்கு போவதென தீர்மானித்த அன்றே பாரிஸில் வாங்கியது தயங்கியபடி  பெற்றுக்கொண்டான்.

உங்களிடம் ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றான். அவனது  கண்களைப் பார்த்தேன்.  வேண்டாம் என்றேன்.  நான் இருந்த வீட்டைப்  பார்க்க போகவேண்டும் என்றேன். அங்கே ஒன்றுமில்லை.  சரி வாருங்கள் போகலாம்.  என்றபடி  எழுந்தான்.”இல்லை நான் தனியாகப் போகவேண்டும்” என்றேன். மனோன்மணி அம்மாவின் வீட்டிலிருந்து சிலநூறு அடி தூரத்திலிருந்தது நான் வாழ்ந்த  இடம்.

இருபது வருடங்களை அந்த சிலநூறு அடிகளில் நடந்து கழிக்கத்  தொடங்கினேன். பெரும் சுமையொன்றை சுமப்பவர் யாராவது சுமையை பகிர்ந்து கொள்ள வருவார்களா என்று ஏக்கத்துடன் தேடுவார்களே அந்த  நிலையிலிருந்தேன். ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போதும் நான் நிலத்தில் நிற்பதை  உறுதிப்படுத்திக் கொண்டேன். நான் வாழ்ந்த திடலில் ஒற்றை முள்முருக்கை மரம்தான் நின்றது.

கதவு இருந்த இடத்தில்போய்  நின்றேன். கதவு இருந்தால் எப்படி  திறந்துகொண்டு உள்ளே செல்வேனோ அதேபோல, மதத்து நின்ற முள்முருக்கையின் கீழ்நின்று சுற்றிலும்  பார்த்தேன்.  அது வேலி இருந்த இடம். அது அடுப்பு இருந்த இடம். அதில் உடுப்புகளை கழுவி காயப்போடுவது என ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தேன். அருகில் இருந்த  பெரியகல்லில் உட்கார்ந்தேன். நிலமெங்கும் முள்முருக்கை விதைகளும் சிகப்பு பூக்களும் உதிர்ந்து கிடந்தன. 

எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்று தெரியாது. என்னையுணராமல்  முள்முருக்கை விதை ஒன்றை எடுத்து கல்லில் தேய்ந்து கையில் சுட்டுப் பார்த்தேன். சிலிர்த்து அடங்கியது. கையில் வைத்திருந்த தொலைபேசியில் என்னை நானே புகைப்படம் எடுத்தேன். படத்தை கூர்ந்து பார்த்தேன்.  நிலமெங்கும் சிகப்பு பூக்கள், மஞ்சள் இலைகள்  மத்தியில் நான். என் முகத்தை சூம் செய்து பார்த்தேன்.  எழுந்தேன்.  இல்லாத   கதவை வெளிவளமாக  தள்ளி வெளியேறுவதுபோல பாவனை  செய்து கொண்டு வெளியேறினேன். இனி இருபது வருடங்களை நடந்து திரும்ப வேண்டும். 

 

நெற்கொழுதாசன் 

 

பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.

https://akazhonline.com/?p=3073

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க்கையின் அடிமடடத்துக்கு  சென்ற பெண்  வாழ்ந்து காட்டிய வீரம். அழகான வர்ணனை பகிர்வுக்கும்  எழுத்தாளருக்கும் நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனசைக் கிளறும் சிறப்பான கதை நெற்கொழுதாசன்......!  👍

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையோடு கதையாக இப்ப ஊரில் முள் முருங்கை அழிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, சுவைப்பிரியன் said:

கதையோடு கதையாக இப்ப ஊரில் முள் முருங்கை அழிந்து விட்டது.

முள்முருக்கை இலை, குழை ஆட்டுக்குட்டிகளுக்கு பிடித்த ஒன்று! நிறைய மசுக்குட்டிகளுக்கும் இருக்கும். எப்படி அழிந்துபோயிற்று?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூடி குந்தியிருந்து முருக்கம் இலையில்  குழையல் சோறு சாப்பிட்டது ஒரு காலம்.....!  👌

image.jpeg.a9cfac26daaf1da03001d675cac43166.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

முள்முருக்கை இலை, குழை ஆட்டுக்குட்டிகளுக்கு பிடித்த ஒன்று! நிறைய மசுக்குட்டிகளுக்கும் இருக்கும். எப்படி அழிந்துபோயிற்று?

அது தான் எனக்கும் ஆச்சரியம்.அங்குள்ளவர்களை கேட்டால் தானாக அழிந்தது என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.