Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு!

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

உற்பத்தி

பிரீமியம் ஸ்டோரி

பூலோகத்தின் ‘கற்பகத்தரு’ என அழைக்கப்படுகிறது பனை. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கிடைப்பதுதான் கருப்பட்டி (பனை வெல்லம்). தமிழகத்தின் சில பகுதிகளில் பனைவெல்ல உற்பத்தி நடந்தாலும் ‘உடன்குடி’தான் கருப்பட்டிக்குச் சிறப்புப் பெற்ற ஊர். மருத்துவ குணமிக்கப் பாரம் பர்யமான முறையில் கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ளது ராமலிங்கத்தின் பனந்தோட்டம். பனங்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்தோம். தித்திப்பான கருப்பட்டிக் காபியைப் பருகக் கொடுத்தபடியே பேச ஆரம்பித்தார். ‘‘பனையேற்றம்தான் எங்க பூர்வீகத் தொழில். அஞ்சாம் கிளாஸ் வரைக்கும்தான் படிச்சேன். பிறகு, எங்கப்பாக்கூடவே இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். 13 வயசுல பனையேறி கலசம்கட்டி பதநீ இறக்க ஆரம்பிச்சுட்டேன். தொழில் இல்லாத மாசங்கள்ல வயக்காட்டு வேலைக்கும் போவேன். இதுவரைக்கும் பத்தாயிரம் பனை மரங்களுக்கும் மேல ஏறி இறங்கிருப்பேன்’’ என்றவர், கருப்பட்டி உற்பத்தி தகவலுக்குள் புகுந்தார்.

‘‘திருச்செந்தூர்ல இருந்து உடன்குடி வரைக்கும் இருக்க எல்லா ஊர்லயும் கருப்பட்டி தயாரிக்குறாங்க. மார்ச் மாசத்துல இருந்து ஆகஸ்ட் வரைக்கும்தான் சீஸன். 20 வருஷத்துக்கு முன்னெல்லாம் திருச்செந்தூர் சுத்து வட்டாரத்துல 3 லட்சம் பனைமரங்க இருந்துச்சு. ஆனா, இப்போ ஒரு லட்சம் மரங்ககூட இல்ல. 10,000 பேர் இந்தத் தொழில்ல இருந்தாங்க. இப்ப 1,000 பேர்கூட இல்ல.

ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் வரைக்கும் தான் பதநீர் கிடைக்கும். அப்பதான் கருப்பட்டி, கல்கண்டு உற்பத்தி அதிகமா நடக்கும். மத்த ஆறு மாசம் வேற ஏதாவது வேலையைத் தேடிப் போகணும். தைப்பொங்கல் அன்னிக்குக் காலையில, பனந்தோட்டத்துல, நல்ல பனையாப் பார்த்து அந்த மரத்துக்கு மாலை போட்டுத் தேங்காய்ப் பழம் உடைச்சு பத்தி, சூடம் காமிச்சு கும்பிடுவோம். அந்தப் பனை மரத்தில ஏறி பாளையை இடுக்கிவிட்டு லேசா சீவி விடுவோம். இதுக்குபேரு ‘பனைக்கு நாள் செய்யுறது’ன்னு சொல்வாங்க. சீஸனுக்கு முன்னால நல்ல நாள்ல இப்படிச் செஞ்சா அந்த வருஷம் பனைமரங்கள்ல பதநீர் வத்தாம கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. இந்தப் பகுதிகள்ல இன்னமும் இந்த நாள் செய்யுற முறை வழக்கத்துல இருக்கு.

பனங்கருப்பட்டி
 
பனங்கருப்பட்டி

சீஸன் காலத்துல தினமும் காலையில பாளையோட நுனியை சீவிவிட்டு, உள்பக்கம் சுண்ணாம்பு தடவுன கலசத்தை (சிறிய பானை) கட்டி, பாளையோட நுனியைக் கலசத்துக்குள்ள கவுத்து வெச்சு கட்டித் தொங்க விடுவோம். பாளையில இருந்து பிசுபிசுப்பா சொட்டுச் சொட்டா பானைக்குள்ள வடியும். இதுதான் ‘பதநீர்’. ஒரு நாளுக்கு ரெண்டு நேரமும் பாளையச் சீவணும். இல்லாட்டா, பாளை காய்ஞ்சு உறைஞ்சு பதநீ வடியுறது நின்னுரும். முதல் நாள் காலையில கட்டுற கலசத்தை அடுத்த நாள் காலையில இறக்கிடுவோம்” என்றவர் கருப்பட்டி, கற்கண்டு உற்பத்தி செய்யும் முறை குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

மெழுகுப் பதத்தில் கருப்பட்டி!

“பனைமரத்துல இருந்து இறக்குறப் பதநீயை வடிகட்டித் தாச்சுல (இரும்பினாலான வட்ட வடிவக் கொப்பரை) ஊத்தி காய்ச்சணும். 2 மணி நேரத்துல கூழ் மாதிரி மாறிடும். அதைத்தான் ‘கூப்பனி’ன்னு சொல்றோம். கூப்பனிக்குள்ள அகப்பையை முக்கி எடுத்துப் பார்த்தா, ஒரு துளி மட்டும் வழியும். இதைக் கம்பிப்பதம்னு சொல்வோம். அந்த நேரத்துல 50 கிராம் ஆமணக்கு விதையை இடிச்சுத் தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைச்சு ஊத்தணும். இதை ஊத்துனாத்தான் கருப் பட்டிக்கான பதம் வரும். அது மட்டுமில்லாம, கூப்பனிப் பொங்கி வெளியேறாது.

அடுத்த அரை மணி நேரத்துல கூப்பனி வத்தி, மூணுல ஒரு பங்காகக் குறையும். அந்த நேரத்துல அகப்பையைத் திரும்பவும் முக்கி எடுத்து, ஒரு துளியை விரலால உருட்டிப் பார்த்தா, மெழுகுப் பதத்துல இருக்கும். இதுதான் கருப்பட்டிக்கான பதம். இதை வேறொரு பாத்திரத்துல மாத்தி, வடலி மட்டையால நாலஞ்சு தடவை கிளறினாலே கெட்டிப் பட்டுடும். இதுக்கிடையில, பதநீயைக் காய்ச்சுறதுக்கு முன்னாலயே, அரையடி உயரத்துல மணலைப் பரப்பணும். அதுமேல ஈரத்துணியை விரிச்சு, அதுல தண்ணில ஊற வைச்ச ஒற்றைக்கண் துளையிடப்பட்ட சிரட்டைகளை (தேங்காய்களின் மூன்று கண்களில் ஏதாவது ஒரு கண்ணில் துளை யிட்டிருக்க வேண்டும்) வரிசையாக அடுக்கி வைக்கணும். சிரட்டைக்குள்ள கருப்பட்டிப் பாகுவை ஊத்தணும். அரைமணி நேரத்துக்குள்ள கருப்பட்டி கெட்டிப்பட்டுடும். பிறகு, ஒவ்வொரு சிரட்டையை எடுத்துத் துளையிடப்பட்ட கண்ணுக்குள் குச்சியால குத்தினாலே கருப்பட்டி தனியாக வந்துடும். இதைப் பெட்டிகள்ல சேகரிச்சு வெச்சுக்குவோம்.

பனங்கற்கண்டு
 
பனங்கற்கண்டு

மாவுப் பதத்தில் கற்கண்டு!

பனங்கல்கண்டும் இந்த முறையிலதான் காய்ச்சுவோம். ஆனா, மெழுகுப் பதத்துக்குப் பதிலா மாவு மாதிரி வழுக்கிப் போற பதம்தான் கல்கண்டுக்கான பதம். இதில், கூடுதல் பதம், குறைஞ்ச பதம்னு ரெண்டு பதம் இருக்கு. பதம் கூடினா, (கூப்பனியின் அளவு குறைவாக இருக்கும்) கல்கண்டு சின்ன சைஸா இருக்கும். பதம் குறைஞ்சா, (கூப்பனியின் அளவு அதிகமாக) கல்கண்டு பருமனா இருக்கும். இதுல பதம்தான் ரொம்ப முக்கியம். சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கல்கண்டு உற்பத்திக்கான அறையைத் தயார் செய்யணும். பனையோலையில கூடம் மாதிரி அமைக்கணும். அதுக்குள்ள பெரிய மண் பானைகளை, ஒரு அடி இடைவெளியில மண்ணுக்குள்ள புதைச்சு வைக்கணும். பானையின் கழுத்துப்பகுதி மட்டும்தான் வெளியே தெரியணும். பானைக்குள்ள ‘சீலாப்பிக் கொரண்டு’ (காய்ந்த சிவனார் வேம்புச்செடி) வெச்சு கூப்பனியை ஊத்தி ஓலைப் பெட்டியால் மூடிடணும்.

பானைக்குள்ள வெச்சிருக்குற கொரண்டுல கூப்பனி ஒட்டி கல்கண்டாகும். இந்தப் பானையை 40 நாள்கள் வரை அப்படியே வெச்சிருக்கணும். 41-வது நாள் பெட்டியைத் திறந்து, இரும்புக் கம்பியால குத்தி, கொரண்டுவை வெளியே எடுத்துத் தட்டினா கல்கண்டு உதிரும். பானைக்குள்ள ஊத்துன கூப்பனி முழுசுமே கல்கண்டாக மாறாது. கால் பானை அளவு கூப்பனி மிச்சம் இருக்கும். அந்தக் கூப்பனியை வெளியில எடுத்து வெயில்ல காய வெச்சா கெட்டியாயிடும். அதைத் தட்டித் தூளாக்கி புகையிலைக்கு இனிப்புச் சேர்க்க பயன்படுத்துறாங்க” என்றவர் கொஞ்சம் கற்கண்டு கொடுத்து சுவைத்துப் பார்க்கச் சொன்னார்.

ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் வரைக்கும்தான் பதநீர் கிடைக்கும். அப்பதான் கருப்பட்டி, கல்கண்டு உற்பத்தி அதிகமா நடக்கும்.

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய ராமலிங்கம், “என் தோட்டத்துல 200 பனைமரங்க இருக்கு. இது எல்லாமே பலன் தரக்கூடிய மரங்கதான். ஆனா, பனையேத்தத்துக்கு ஆளுங்க கிடைக்காததுனால 75 பனைகள்ல மட்டும்தான் பதநீ இறக்கி கருப்பட்டி, கல்கண்டு காய்ச்சுறேன். போன வருஷம் 500 கிலோ கருப்பட்டி, 750 கிலோ கல்கண்டு கிடைச்சுது. ஒரு கிலோ கருப்பட்டி 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரையிலும், கல்கண்டு ஒரு கிலோ 450 முதல் 550 ரூபாய் வரையிலும் விற்பனையாகுது. 500 கிலோ கருப்பட்டி விற்பனை மூலமா 1,25,000 ரூபாய், 750 கிலோ கல்கண்டு விற்பனை மூலமா 3,37,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல பனையேறிகளோட கூலி, பதநீர் காய்ச்சுற செலவே மூணுல ஒரு பங்கு போயிடும்.

அந்த வகையில கருப்பட்டி மூலம் 42,000 ரூபாயும், கல்கண்டு மூலமா 1,12,500 ரூபாயும் லாபமாக் கிடைச்சுது. வருமானத்துக்காகவும், லாபத்துக்காகவும் மட்டும் நான் இதைச் செய்யல. பல தலைமுறையா செய்ற பனைத்தொழிலை விட்டுடக் கூடாதுன்னு செஞ்சுக்கிட்டிருக்கேன். எனக்கு வயசும் எழுபதை நெருங்குது. பிள்ளைகளும் வெளியூர்கள்ல இருக்குறதுனால, இந்தத் தொழில்ல ரொம்ப மெனக்கெடுறதில்ல. எந்தக் கலப்படமும் இல்லாம காய்ச்சுறதுனால என் தோட்டத்துக்கே வந்து வியாபாரிங்க வாங்கிட்டுப் போயிடுறாங்க. வேலையாள் பத்தாக்குறையாலதான் இந்தத் தொழில் நலிவடைஞ்சுக்கிட்டே போகுது. இளவட்டங்க ஒண்ணா சேர்ந்து பனந்தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து பதநீ காய்ச்சுனா கருப்பட்டி, கல்கண்டுல நல்ல வருமானமும் கிடைக்கும். பலருக்கு ஜோலியும் கிடைக்கும். பனைத் தொழிலும் உயிர் பெறும்” என்றபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, ராமலிங்கம், செல்போன்: 97501 18486

பனங்கற்கண்டு தயாரிப்பு
 
பனங்கற்கண்டு தயாரிப்பு

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா?

ரிஜினல் கருப்பட்டியை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது பற்றிப் பேசிய தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார், ‘‘கருப்பட்டித் துண்டைக் கடித்து மென்றால், அதன் சுவை கரிப்புத்தன்மையுடன்கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால் அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. கருப்பட்டி வாசனையுடனோ, வாசனை இல்லாமலோ சீனிக்குரிய இனிப்புச்சுவை மட்டும் தெரிந்தால் அது போலி. கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் உட்பகுதி கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். பளபளப்பாக இருந்தால் அது போலி. தேங்காயைத் தட்டிப்பார்ப்பதுபோல, கருப்பட்டியின் பின்புறம் தட்டிப்பார்க்கும்போது சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்ன கருப்பட்டித் துண்டைப் போட்டால் முழுவதும் கரைய குறைந்தது ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆகும். போலி 30 நிமிடங்களிலேயே பாதிக் கரைந்துவிடும். அதேபோல, பனங்கல்கண்டை வாயில போட்டு பல்லால் கடிக்கும்போது இரும்பு துண்டு மாதிரி உறுதியா இருந்தால்தான் அது ஒரிஜினல். கடலை மிட்டாய் மாதிரி ஒரே கடில ரெண்டு துண்டானால், அது சீனிப்பாகு கல்கண்டுன்னு கண்டு பிடிக்கலாம்” என்றார்.

உடல் பளபளப்புக்குக் கருப்பட்டி!

ருப்பட்டி, பனங்கற்கண்டின் மருத்துவக் குணம் குறித்துத் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். ‘‘கருப்பட்டி ரத்தத்தைச் சுத்திகரித்து உடலைச் சுறுசுறுப்பாக்குவதுடன், மேனி பளபளக்கவும் வைக்கிறது. பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு, கர்ப்பப்பை வலுப் பெறவும் கருப்பட்டிக்களி, உளுந்தங்கஞ்சி செய்து கொடுப்பார்கள். காபியில் சீனிக்குப் பதிலாகக் கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். கருப்பட்டியைவிடக் கல்கண்டில் குளுக்கோஸின் அடர்த்தி அதிகம். வறட்டு இருமல், சளி, தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைகளுக்குப் பசும்பாலைக் காய்ச்சி அதனுடன் மிளகு, பனங்கல்கண்டை ஒன்றிரண்டாக நுனுக்கி காய்ச்சிப் பருகி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கல்கண்டுப் பொடியை வாயில்போட்டுத் தண்ணீர் குடித்தாலே குளுக்கோஸ் சத்து உடலுக்கு உடனே கிடைத்துவிடும்” என்றார்.

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்
 
பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

அதிகரிக்கும் கலப்படக் கருப்பட்டி!

ருப்பட்டி உற்பத்தியாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவருமான ரவியிடம் பேசினோம். “சீஸன்லதான் கருப்பட்டி, கல்கண்டு தயாரிக்க முடியும். ஆனா, சீனிக்கருப்பட்டி வருஷம் முழுவதும் தயாரிக்குறாங்க. சர்க்கரை ஆலைக் கழிவுகள், மொலாசஸ் கலந்து கருப்பட்டி வாசனைக்காகக் கழிவு கொஞ்சம் கூப்பனி, (கல்கண்டு பானையில் அடியில் தேங்கியிருக்கும் கழிவுப் பதநீர்) சீனி கலந்து சீனிக்கருப்பட்டி தயாரிக்குறாங்க. இந்தக் கருப்பட்டியைத் தொடர்ந்து சாப்பிடுறதால பல நோய்கள் உண்டாகுது.

30 லிட்டர் பதநீரைச் காய்ச்சினா 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். ஆனா, ஒரு லிட்டர் கூப்பனியில 200 கிலோ சீனியைக் கலந்து 180 கிலோ வரை சீனிக்கருப்பட்டி கிடைக்கும். எங்களை விட அவங்களுக்கு உற்பத்திச் செலவு 80 சதவிகிதம் குறையும். அதனால கொள்ளை லாபம் பார்க்குறாங்க. இதனால, எங்களுக்கு விலை கிடைக்காமப் போகுது. விவசாயிகள்கிட்ட நெல், தேங்காய் கொள்முதல் செய்றது மாதிரி கருப்பட்டியையும் கொள்முதல் செய்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்றார்.

லேபிளில் கருப்பட்டி! பார்சலுக்குள் சீனிக்கருப்பட்டி!

லப்படக் கருப்பட்டிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளருமான குணசீலனிடம் பேசினோம். “உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் 30 ஆலைகள் மட்டுமே கருப்பட்டி தயாரிப்புக்கான உரிமம் பெற்றுள்ளன. 150-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெறாமலே கருப்பட்டி தயாரித்து வருகின்றன. கருப்பட்டி தயாரிப்பதற்கான லைசென்ஸை வாங்கி, சீனிக்கருப்பட்டியை ஒரிஜினல் கருப்பட்டி என லேபிள் ஒட்டி விற்பனை செய்யுறாங்க. போன வருஷம் 5 ஆலைகளில் மட்டும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 40 டன் கலப்படக் கருப்பட்டியை பறிமுதல் செய்தனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 5 ஆலைகளில் மட்டும் 40 டன் கலப்படக் கருப்பட்டி என்றால், மொத்தமுள்ள ஆலை களில் சோதனையிட்டால் எத்தனை டன் பறிமுதல் செய்யப்படலாம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்” என்றார்.

 

https://www.vikatan.com/news/agriculture/how-to-make-palm-jaggery

  • கருத்துக்கள உறவுகள்

பனை ஒரு கற்பகதரு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.