Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்.. அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

மேற்கு வங்க தேர்தலில் தனது கட்சிக்கு எதிராக பாஜக மேற்கொண்ட அத்தனை அரசியல் வியூகங்களையும் அடித்து நொறுக்கி, மூன்றாவது முறையாக தனது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மம்தா பானர்ஜி தான் மாபெரும் அரசியல் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மாநிலத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 211 ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் 2019
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 தொகுதிகளிலும் திரிணாமுல் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மம்தா பானர்ஜி
 
மம்தா பானர்ஜி

பாஜக வகுத்த வியூகம்!

இந்த வெற்றி தந்த உற்சாகத்தினால்தான், 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜகவை ஆட்சியில் அமர்த்தி விட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜகவைச் சேர்ந்த
பல உயர்மட்ட தலைவர்கள் பல மாதங்களாகவே அடிக்கடி மேற்குவங்கத்துக்கு விசிட் அடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட மோடி அமைச்சரவையே மேற்கு வங்கத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதோ எனச் சொல்லும் வகையில், அந்த
மாநிலத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களை எப்படி பாஜகவும் சிவசேனாவும் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் உத்தியாக
பயன்படுத்தியதோ, அதே உத்தியை மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை மற்றும் தசரா கொண்டாட்டங்களையும் பயன்படுத்தியது பாஜக. கூடவே வங்கத்தின் பெருமை மிகு தலைவர்களையும் இந்து அடையாளங்களுக்குள் வளைத்துப் போட முயன்றது. இது தவிர வேறு பல இந்துத்வா அஸ்திரங்களையும் அக்கட்சி பயன்படுத்தியது.

 

பாஜக தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இந்த முயற்சியினால், கணிசமான மக்களிடையே இந்துத்துவா உந்தல்களை ஏற்படுத்தியதில், அக்கட்சிக்கான செல்வாக்கு ஓரளவுக்கு அதிகரித்தது. போதாததற்கு, மம்தா கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் வளைத்துப் போட்டு, மம்தாவுக்கு உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் கச்சிதமாக மேற்கொண்டது பாஜக. இதன் உச்சமாகத்தான், மம்தாவின் வலது கரமாக இருந்த நந்திகிராமின் முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரியை பாஜக வளைத்துப் போட்டது.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில், டாடா மோட்டார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2007 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒரே இரவில் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது.

மம்தா
 
மம்தா

மம்தா மேற்கொண்ட இந்த போராட்டம்தான் 2011 ஆம் ஆண்டில் அவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, அடித்தளம் அமைத்தது. அந்த போராட்டத்தில் மம்தாவுக்கு வலிமையான தூணாக இருந்த சுபேந்து அதிகாரிதான், தற்போது நந்திகிராமில் போட்டியிட்ட மம்தாவுக்கு எதிராக பாஜக சார்பில் களத்தில் நிறுத்தப்பட்டார். மம்தாவும் பாஜகவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவைத் தனது கட்சிக்குள் வளைத்துப் போட்டார்.

 

அனுதாபத்தை அள்ளிய மம்தா!

நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. கட்டுப்போட்ட காலுடன் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தை நாடகம் என பாஜக விமர்சித்தாலும், தேர்தலில் அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்னொருபுறம் தனது முதல் நந்திகிராம் சுற்றுப்பயணத்தின் போது, தன்னை பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்றும் மண்ணின் மகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டது கூட பாஜகவின் இந்துத்துவா ஆயுதத்திற்கான மம்தாவின் பதிலடியாகவே பார்க்கப்பட்டது. பாஜகவை விட தன்னை அதிகமாக இந்து என்று காட்டிக்கொள்ள அவர் பேரணி மேடையிலேயே சண்டி வந்தனம் கூட நிகழ்த்திக் காட்டினார். அதே சமயம், வாக்குகளைப் பெறுவதற்காக மம்தா இந்த அளவுக்கு இறங்கி வர வேண்டுமா என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்..  அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!
 

நம்பிக்கை கொடுத்த சிறுபான்மை வாக்காளர்கள்

இந்த சூழலில், பாஜகவின் சவாலை தடுக்க 30% சிறுபான்மை வாக்காளர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பினார் மம்தா. பாஜக குறிப்பிட்ட இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்தும் அரசியலை மேற்கொண்டாலும், தனது கட்சிக்கு சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளும், இந்துக்களிடையே தனக்கு ஆதரவாக உள்ள கணிசமான வாக்குகளும் இந்த தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் என அவர் நம்பினார்.

அதே சமயம் பாஜகவும் சும்மா இல்லை. தேர்தல் நிர்வாகத்திற்காக கட்சி பல அடுக்கு நிறுவன கட்டமைப்பை அமைத்தது. மக்களவைத் தேர்தலின்போது கட்சி
அமைப்பை வழி நடத்திய பிரமுகர்களே இந்த தேர்தலிலும் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் கிராமங்கள் அளவில் ஊடுருவி, பாஜவுக்கான ஆதரவு தளத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றின.

இன்னொருபுறம் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமல் போனது, மம்தா மற்றும் பாஜக ஆகிய இரண்டு தரப்புக்குமே வசதியாகப் போனது. பாஜக, மம்தா கட்சியை வீழ்த்துவதிலும், மம்தா பாஜகவை வீழ்த்துவதிலுமே முழு கவனத்தைச் செலுத்தினர்.

 

வாழ்வா சாவா போராட்டம்..

இத்தகைய சூழலில்தான் பாஜக கொடுத்த கடுமையான நெருக்கடிகள் அனைத்தையும் தனி ஒருவராக எதிர்கொண்டு சமாளித்தார் மம்தா பானர்ஜி. இந்தத் தேர்தலைப்
பொறுத்தவரை மம்தாவுக்கும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கிட்டத்தட்ட வாழ்வா சாவா போராட்டமாகவே இருந்தது. இன்னொரு புறம் தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் எதற்கு 8 கட்டத் தேர்தல், ஓரிரு கட்டங்களாக நடத்தாலாமே என்ற அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. கொரோனா பரவல் அதிகரிப்பதால், கடைசி மூன்று கட்டத் தேர்தலை, ஒரே கட்டமாக நடத்துங்கள் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பாஜக தலைவர்களின் பிரசாரத்துக்கு வசதியாகவே தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்துகொள்வதாக மம்தா குற்றம் சாட்டினார். இன்னொருபுறம் மம்தா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரசாரத்துக்குத் தடை விதித்து அவர் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், பாஜகவிடம் மிக மென்மையான போக்குடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தவிர நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது நடந்த தேர்தல் வன்முறைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை, வாக்களிக்க விடாமல் அச்சமூட்டுவதற்காகத்தான் என்றும் மம்தா குற்றம் சாட்டி இருந்தார்.

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் பெருமை அனைத்தும், பாஜகவையும் அதன் பரிவாரங்களையும் ஒற்றை மனுஷியாக எதிர்கொண்டு வீழ்த்திய மம்தாவையே சாரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்.. அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி! | Mamata Banerjee's Trinamool congress marching towards victory in west Bengal election - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

10 % வாக்கு வித்தியாசம்.. மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பக்கம் வீசாத காற்று!

spacer.png

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்களைப் பெற்று, மூன்றாம் முறையாக ஆட்சியை அமைக்கிறார், மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்துவிட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும். மாநிலத்தின் முழுமையான தேர்தல் முடிவு முறைப்படி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இன்று காலை 7.25 மணியளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வத் தகவலின்படி, அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி 209 இடங்களில் வெற்றிபெற்றும் 4 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.

 

அடுத்ததாக, பா.ஜ.க. 76 தொகுதிகளை வென்றும் ஒரு இடத்தில் முன்னிலையிலும் இருக்கிறது. ஓர் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். ராஷ்ட்ரிய மதச்சார்பற்ற மஞ்லிஸ் கட்சி ஓர் இடத்தை வென்றுள்ளது.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 18 இடங்களைக் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது. அதாவது, 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான இடங்கள் 77 தான். 2019 தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்கு அளவு 40.3 %. இந்த முறை அதில் 2 சதவீதத்துக்குமேல் குறைந்திருக்கிறது.

திரிணமூல் கட்சியோ கடந்த முறை பெற்றது, 43.3 % வாக்குகள். இந்த முறை 47.94 % வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்குசதவீத வித்தியாசம் இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த மக்களவைத் தேர்தலில் இது 3 சதவீதமாக இருந்தது, இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கைவிடக் கூடுதலாகியுள்ளது.

மாநில அளவில் திரிணமூல் கட்சிக்கு பெருவெற்றி கிடைத்துள்ளபோதும், அக்கட்சியின் தலைவர் மம்தா தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

முதல் நான்கு சுற்றுகள்வரை, 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி மம்தாவைவிட முன்னிலையில் இருந்தார். அதற்கடுத்து மம்தாவுக்கும் அவருக்கும் இடையிலான வாக்குவித்தியாசம் குறையத் தொடங்கியது.

படிப்படியாகக் குறைந்துவந்த வாக்கு அளவு வித்தியாசமானது, 16ஆவது சுற்றில் பரபரப்பை உண்டாக்கியது. வெறும் 6 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று, சுவேந்துவை நெருங்கினார், மம்தா. தகவலறிந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் பச்சை வண்ணப் பொடியை அப்பிக்கொண்டு ஆரவாரக் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மம்தா முன்னிலை என நிலைமை மாறி, 1,201 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றதாக ஏ.என்.ஐ. செய்திநிறுவனம் முதல் செய்தியை வெளியிட்டது. அனைத்து ஊடகங்களும் உடனுக்குடன் நேரலையாக வெளியிட்டன.

ஆனால், தேர்தல் ஆணையமோ இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றது.

அதன் பிறகு, 1, 736 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்தது.

வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துவிட்டதாகக் கூறி, மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என திரிணமூல் கட்சி கூறியது. தேர்தல் ஆணையமோ அதை வன்மையாக மறுத்ததுடன் தங்கள்பக்கம் தவறு இல்லை என திட்டவட்டமாகக் கூறியது.

 

கடைசியாக, சுவேந்து அதிகாரி 1, 956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்மிதா பாண்டேவும் இதை உறுதிப்படுத்தினார்.

இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போகப்போவதாக மம்தா கூறியுள்ளார். கொரோனா தாக்கி திரிணமூல் கட்சியின் வேட்பாளர் கஜல் சின்கா இறந்துபோனதால், அவர் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற கர்தாகா தொகுதியில் மறுதேர்தல் நடைபெறவுள்ளது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா மாநகராட்சிக்கு உள்பட்ட இந்தத் தொகுதியில், மம்தா போட்டியிடுவார்.

https://minnambalam.com/politics/2021/05/03/26/west-bengal-poll-result-10percent-difference-in-counting

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப் பின்னணி; முக்கிய அம்சங்கள் என்ன?

mamata-banerjee  
 

புதுடெல்லி

மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரம் காட்டிய பாஜகவை தோல்வியுறச் செய்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பாணர்ஜி. இவர் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்ததன் பின்னணியில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இம்மாநிலத்தின் கடந்த தேர்தலுக்கு வெகு முன்பாகவே பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கத் தீவிரம் காட்டி வந்தது. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தனது நேரடி கண்காணிப்பை இங்கு செலுத்தி வந்தார்.

 
 
 

எந்த மாநிலங்களிலும் இல்லாதவகையில் முதன்முறையாக பிரதமர் நரேந்தர மோடி அதிகமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது கட்சியின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கியத் தலைவர்களும் இங்கு களம் இறக்கப்பட்டனர்.

இதனால், அங்கு மீண்டும் மம்தாவிற்கு முதல்வராகும் வாய்ப்பு கேள்வி குறி எனப் பேசப்பட்டது. திரிணமூல் காங்கிரஸில் இதை ஒரே தலைவராகவும், தனிப் பெண்ணாகவும் நின்று சமாளித்திருக்கிறார் மம்தா.

இதன் பின்னணியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது தெரிந்துள்ளது. தம் பிரச்சாரங்களில் மம்தா மீது அளவிற்கு அதிகமான கடும் விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்தனர்.

‘தீதி(அக்கா)’ என்றழைக்கப்படும் மம்தாவை பிரதமர் நரேந்தர மோடியும் தன் மேடைகளில், தீதி...ஓ...தீதி...’ என ராகத்துடன் குறிப்பிட்டு கிண்டலடித்தார். துவக்கத்திலேயே தன் காலில் ஏற்பட்ட முறிவால் மாவு கட்டு போட்டுக் கொண்டு, சக்கர நாற்காலியில் சமாளித்தார் மம்தா.

இதற்கு பாஜகவினர் அவர் நந்திகிராமில் ஸ்கூட்டியில் சென்றபோது சறுக்கி விழுந்திருப்பார் என விமர்சித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்ட இதுபோன்ற விமர்சனங்களால் பொதுமக்களிடம் மம்தா மீது பரிதாபம் கிளம்பியது.

இது, மம்தாவை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி செய்த பிரச்சாரத்தில் அதிகரித்தது. குறிப்பாக இது பெண் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதை அதிரிக்க மம்தா, பாஜகவை விட அதிகமாக ஐம்பது பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தார். இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுக்கு உள்ள வலிமையை பாஜக மேற்கு வங்கத்திலும் தகர்க்க முயன்றது.

வங்காளி-இந்திக்கு இடையிலான போட்டி

இதற்கு பதிலடியாக மம்தா, தனது கட்சி மண்ணின் மைந்தர்களது எனவும், பாஜக வெளிமாநிலத்தை சேர்ந்ததாகவும் பிரச்சாரம் செய்தார். இது, முதன்முறையாக, பெங்காலி மற்றும் இந்திக்கு இடையிலான மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜகவால் ஆபத்து எனும் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதில் வெற்றிபெற மம்தா, ‘மேற்கு வங்கத்திற்கு அதன் மகளது ஆட்சியே தேவை’ எனும் கோஷத்தை முன் வைத்தார். இது, மேற்கு வங்கத்தில் அதிகரித்துவரும் இந்தி பேசும் மக்கள் மற்றும் வங்காளிகளுக்கு இடையிலான போட்டியாகவும் உருவெடுத்தது.

இந்த விவகாரத்தில், பாஜக தன் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாததும் மம்தாவிற்கு சாதகமானது. தனது துவக்கம் முதல் இந்துக்களை ஒருங்கிணைக்கச் செய்து வரும் நடவடிக்கையை பாஜக இங்கும் தொடர்ந்தது.

மம்தாவை மீண்டும் ஆதரித்த முஸ்லிம்கள்

இந்துக்கள் எனும் பெயரில், மேற்கு வங்கத்தின் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கவும் பாஜக முயன்றது. தேர்தலுக்கு இடையே இதன் எல்லையிலுள்ள வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கச் சென்றிருந்தார் பிரதமர் மோடி.

அங்கு பிரதமர் மோடி, மத்துவா சமூகத்தின் கோயிலுக்குச் சென்றது சர்ச்சையானது. இதன்மூலம், மேற்கு வங்க மாநிலத்திலும் அதிகம் இருந்த மத்துவா சமூகத்தினரை முழுவதுமாக பாஜகவால் கவர முடியாமல் போனது.

இந்துத்துவா பிரச்சாரம் மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் முப்பது சதவிகித முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. இவர்கள் ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றில் அதிருப்தியுடன் உள்ளனர்.

இதனால், அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்களும் அதிக அளவில் மம்தாவிற்கு வாக்குகளை அளித்தது வெற்றிக்கானக் காரணமானது. மம்தாவின் வாக்குகளை பிரிக்க புதிதாக உருவான இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸை தொடர்ந்து சுமார் 34 வருடங்கள் ஆட்சி புரிந்த இடதுசாரிகளை அதன் வாக்காளர்கள் பொருட்டாக எண்ணவில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், ஐஎஸ்எப் இணைந்தது பலன் தரவில்லை.

மத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை

தொடக்கம் முதலாகவே இது, திரிணமூல் மற்றும் பாஜகவிற்கு இடையிலான இருமுனைப்போட்டியாகவே இருந்தது. மேலும், மத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மேற்கு வங்க தேர்தலின் துவக்கம் முதல் மத்திய அரசுக்கு ஆதரவாகவே பார்க்கப்பட்டது.

உதாரணமாக, முதன்முறையாக அதிக அளவிலான எட்டு கட்ட தேர்தலும், மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு படைகளின் துப்பாக்கி சூட்டில் 5 உயிர்கள் பலியும் கூறப்பட்டது.

இந்தமுறை தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் அதிக அளவிலான மாநில அதிகாரிகள் பணி மாற்றலுக்கு உள்ளாகினர். கடைசி மூன்று கட்ட வாக்குப்பதிவை ஒன்றிணைக்க மம்தா கூறியதை தேர்தல் ஆணையம் ஏற்காததும் மத்திய அரசிற்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது.

இதுபோன்ற விவகாரங்களுடன் மத்திய அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கைகளையும் பாஜகவிற்கு எதிராக முன்வைத்தார் மம்தா. இதனால், மக்களவை தேர்தலுக்கு இணையாகப் பேசப்பட்ட மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா மூன்றாவது முறையாக வென்று ’ஹாட்ரிக்’ அடித்து விட்டார்.

 

https://www.hindutamil.in/news/india/666535-mamata-banerjee-5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.