Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: தி.மு.க வெற்றியின் பரிமாணங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: தி.மு.க வெற்றியின் பரிமாணங்கள்!

spacer.png

ராஜன் குறை 

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து அணிகளில் கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாகக் கொண்டு களம் இறங்கிய அணிகளைக் குறித்து கடந்த நான்கு வாரங்களில் விவாதித்தோம். இந்த வாரம் இறுதியாக தி.மு.க-வின் வெற்றியைக் குறித்து சிந்திப்போம்,

மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்த கூட்டணியை எதிர்த்து தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இரண்டும் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல; பணபலம் மிக்கவை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருந்தும் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன், தனிக்கட்சியாக 133 தொகுதிகளிலும், கூட்டணியாக 159 தொகுதிகளிலும் வென்றதற்கு முக்கிய காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அயரா உழைப்பு. கிராம சபை கூட்டங்கள், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், பின்னர் தேர்தல் பிரச்சாரம் என்று மூன்று முறை தமிழகத்தைப் பம்பரமாகச் சுற்றி வந்தார். மக்கள் குறைகளைக் கேட்டார். பொறுமையாக உரையாடினார். இந்த விளம்பர யுகத்தில் யாரை வேண்டுமானாலும் பிம்பமாக்கலாம் என்றாலும், ஒரு அரசியல் தலைவர் அந்தப் பிம்பத்துக்குத் தன் தனிப்பட்ட பேச்சாலும், செயலாலும் ஒரு நம்பகமான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும். அதை அயர்வின்றி, சோர்வின்றி செய்து தமிழக தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் ஸ்டாலின் பெரும் வெற்றியடைந்தார். கருத்துக் கணிப்புகளில் உங்களுக்குப் பிடித்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்குக் கிடைத்த பதில்களில் அவர் எடப்பாடி பழனிசாமியைவிட கணிசமாக முன்னணியில் இருந்தார். அந்த வித்தியாசம் மொத்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிபலிக்கவில்லை என்று கூறலாம். தி.மு.க 37.7% வாக்குகளும், அ.இ.அ.தி.மு.க 33.29% வாக்குகளும் பெற்றன. இந்த கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் நான்கு சதவிகிதம். தி.மு.க கூட்டணி 45.39% வாக்குகளையும், அ.இ.அ.தி.மு.க கூட்டணி 39.72% வாக்குகளையும் பெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் ஏற்பதில்லை என்பதை கருத்தில்கொண்டால், அ.இ.அ.தி.மு.க தனிப்பட்ட கட்சியாக தி.மு.க-வை விட நான்கு சதவிகித வாக்குகள்தான் குறைவாக வாங்கியுள்ளது என்பது கருதத்தக்கது. இது ஸ்டாலின் தலைமைக்கு கருத்துக்கணிப்பில் கிடைத்த வரவேற்பை பிரதிபலிக்கவில்லை எனலாம். அது மட்டுமல்லாமல், பாரதீய ஜனதா கட்சியை ஏற்க மறுக்கும் தமிழக மக்கள் அதனிடம் தங்கள் கட்சியை அடகுவைத்த, மாநில நலன்களை அடகுவைத்த பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் இரட்டைத் தலைமையை ஏன் முற்றிலும் புறக்கணிக்கவில்லை என்பதும் கூட ஒரு கேள்விதான்.

அதற்கான பதில் இரண்டு முக்கியமான வெகுஜன அரசியல் கூறுகளில் இருக்கிறது. ஒன்று சமூகத்தில் வேர்மட்டத்தில் நிலவும் பகையுறவுகள் கட்சி ஆதரவாக வடிவமெடுக்கும் என்பது. மற்றொன்று தி.மு.க வெகுஜன மனநிலையில் பதிவாகும் புனித குறியீடுகளைக் கொண்டாடாமல் பகுத்தறிவு நோக்கை பயில்வது என்பது.

சமூக பகையுறவின் அரசியல் வடிவம்

ஒரு வீதியிலோ, ஒரு கிராமத்திலோ, ஒரு குடும்பத்திலோகூட ஒருவர் செல்வாக்காக இருப்பார்; முடிவுகளை எடுப்பார். அவரைக் கண்டால் பிடிக்காதவர் மற்றொருவர் இருப்பார். அவரை எதிர்த்தும் மறுத்தும் செயல்படுவார். அரசியல் என்பது அடிப்படையில் எதிரி, நண்பன் உறவுதான் என கார்ல் ஷ்மிட் என்ற ஜெர்மானிய தத்துவவாதி கூறினார். இது போல பல்வேறு சமூக அலகுகளில் எதிரிகளாக உள்ளவர்களில் ஒருவர் ஓர் அரசியல் கட்சியை ஆதரித்தால், மற்றொருவர் அதற்கு எதிரான கட்சியை ஆதரிப்பது என்பது இயல்பு. இரு துருவ மக்களாட்சி அரசியல் தேர்தல்களில் வலுப்பெறும்போது இந்த வேர்மட்ட பகையுறவுகள் கட்சி ஆதரவுகளாக வடிவம் பெறும். இந்தத் தலமட்ட பகையின் காரணமாக தன்னுடைய தனிப்பட்ட பார்வை கட்சியின் பார்வைக்கு மாறாக இருந்தாலும்கூட ஒருவர் ஒரு கட்சியில் இருப்பார் அல்லது இணைவார்.

விவசாயி ஒருவர் கூறிய அவர் கிராமத்தின் உதாரணம் என்னவென்றால் பக்தியுள்ள, தீய பழக்கங்கள் இல்லாத ஒரு சிறு நில உடமையாளர் தி.மு.க-வில் இருக்கிறார். அவருடைய மைத்துனருக்கும் அவருக்கும் குடும்பத்தில் பகை. அவர் மைத்துனர் வியாபாரி. குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவை உண்டு. அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். தன் தமக்கை கணவரை எதிர்ப்பதற்காக அவர் எம்.ஜி.ஆர் பிரிந்ததும் அ.இ.அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். அந்த ஊரைப் பொறுத்தவரை அந்த குடும்பத்தினுள் உள்ள பகை இரண்டு அரசியல் கட்சிகளின் அமைப்பாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.

பல்வேறு தொழில் முரண்பாடுகள், உள்ளூர் முரண்பாடுகள், காரணமற்ற கெளரவ பிரச்சினைகள், பகையுறவுகள் எல்லாமே அரசியல் கட்சிகளின் அமைப்பாக்கத்தில் செயல்படுகின்றன என்பது ஒரு முக்கியமான மானுடவியல் உண்மை. இது கட்சி அமைப்பாக்கத்துக்கு மட்டுமில்லாமல், வாக்களிப்பதிலும் செயல்படலாம். ஒருவரது மூத்த சகோதரன் அ.இ.அ.தி.மு.க ஆதரவாளன் என்பதால், இளையவர் தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாம். கணவர் மேல் கோபமுள்ள மனைவி அவர் ஆதரிக்கும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால் ஆட்சியை மதிப்பிடுவது, கொள்கைகள், தலைமைப் பண்பு ஆகியவற்றை கடந்து இரண்டு கட்சிகளுக்கு இடையிலான முரண் என்பது சமூக வெளியில் பல்வேறு பகையுறவுகளின் தொகுப்பாக மாறுவதும் தவிர்க்க முடியாதது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளுக்குமான spacer.pngவாக்கு வித்தியாசம் அதனால்தான் குறைவாகவே இருக்கிறது. வெற்றி தோல்விதான் பல்வேறு காரணங்களால் தீர்மானமாகுமே தவிர, இரண்டு கட்சிகளுமே ஏறக்குறைய முப்பது சதவிகித வாக்குகளைப் பெறுவது சுலபம்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுத்தறிவு அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வெகுஜன கட்சியாக எளிய மக்களை ஆதரவாளர்களாகத் திரட்டினாலும் மூன்று அம்சங்களில் அது மக்களால் பரவலாக ஏற்கப்பட்ட புனித அடையாளங்களுக்கு ஆட்படாமல் இருந்து வருவது. அவை:

பார்ப்பனீய சடங்குகள், இறைமை, புனிதக் குறியீடுகள் விலக்கம்;

ஜாதி அடையாளம் சார்ந்த சமூக ஒழுங்கு;

இந்திய தேசீய புனித குறியீடுகள், காந்தி, நேரு பிம்பங்கள்.

இவற்றை அணுகுவதில் பெரியாரிடமிருந்து தி.மு.க வேறுபட்டது. பெரியார் புனித பிம்பங்களைத் தகர்ப்பவர் (Iconoclast). தி.மு.க அப்படி நேரடியாகத் தகர்க்காமல் விலக்கி வைத்தது. பெரியார் திராவிடர் கழகத்தைத் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை; அதனால் சுதந்திரமாக எல்லா புனிதக் குறியீடுகளையும் எதிர்த்து வந்தார். தி.மு.க முதலிலிருந்தே மக்களை அணிதிரட்ட முற்பட்டதால் மக்கள் ஏற்கும் விதத்தில் பெரியாரின் கொள்கைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. மேற்சொன்ன மூன்று அம்சங்களில் இது எப்படிச் செயல்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பார்ப்பனீய சடங்குகள், இறைமை, புனித குறியீடுகள் விலக்கம்

நேரடியாக நாத்திகவாதத்தையோ, கடவுள் மறுப்பையோ தி.மு.க ஒரு கொள்கையாக முன்வைக்கவில்லை. அதற்குப் பதில் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற திருமூலர் கூற்றின் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டையும் ஆதரிக்காமல், அதே சமயம் கடவுள் மறுப்பையும் பிரச்சாரம் செய்யாத நிலையெடுத்தது. இருந்தாலும் மக்களிடையே தி.மு.க நாத்திகவாத கட்சி என்ற எண்ணம் ஆழப் பதிந்துள்ளது. இது இந்துக்கள் இடையே மட்டும் என்பதல்ல. ஐம்பதுகளில் இஸ்லாமியர்கள் கட்சியில் சேருவதை அவர்கள் உறவினர்கள் கடவுள் மறுப்பு கட்சியில் சேருவதை எதிர்த்ததாக கள ஆய்வில் கூறினர். அதே போல ஐம்பதுகளில் கடவுளை மறுக்கும் தி.மு.க-வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் சர்ச்சில் ஒரு பாதிரியார் கூறியதை ஒருவர் கள ஆய்வின்போது கூறினார். இப்படியிருக்கையில் ஏராளமான இந்து கடவுள்களில் நம்பிக்கையுள்ள எளிய மக்களில் பலர் வெளிப்படையாக யாகம், பூஜை என்று செய்யும் ஜெயலலிதா போன்ற தலைவரிடம் ஈடுபாடு கொண்டால் வியப்பதற்கில்லை.

மற்றொருபுறம் இன்றளவும் தி.மு.க தலைவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ கோயில்களுக்கு சென்றாலோ, அல்லது பிறர் விருப்பத்தைக் கருதி மதச்சின்னங்களை ஏற்றாலோ உடனே “கொள்கை”யை கைவிட்டுவிட்டதாக ஆரவாரம் செய்வார்கள். அப்படி ஒரு கடவுள் மறுப்புக்கொள்கையே தி.மு.க-வுக்குக் கிடையாதே என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த “கொள்கை” இருந்தாலும் பிரச்சினை, இல்லாவிட்டாலும் பிரச்சினை என்பதுதான் வேடிக்கை.

மேலும் மதச்சார்பின்மையை அரசியலில் கடைப்பிடிக்கும் தலைவர்கள் எந்த அளவு கோயில்களுக்குப் போகலாம், மதச் சின்னங்களை அணியலாம் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ராகுல் காந்தி கோயில்களுக்குப் போவதையும் விமர்சிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதே போல பெரியார் மண் என்றால் மக்கள் ஏன் லட்சக்கணக்கில் அத்தி வரதரைப் பார்க்க குவிகிறார்கள் என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். இது பெரியார் மண் என்பதன் அடையாளம் பெரியார் போன்ற பகுத்தறிவு சிந்தனையாளரை மக்கள் மிகுந்த மரியாதையுடன் ஏற்பதுதான். அது முற்றிலும் மூட நம்பிக்கைகளுக்கு, பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு பலியாகாமல் அவர்களைக் காப்பாற்றுகிறது. பெரியாரியம் என்பது நாத்திகவாதம் மட்டுமே அல்ல. இது போன்ற பல புரியாமைகளால் தி.மு.க ஒருபுறம் கடவுளை ஏற்காத, புனிதங்களை மறுக்கும் கட்சியாகவும். அதே சமயம் அதற்கு மாறாக சிலர் ஏற்றால் அது கொள்கை சமரசமாகவும் பேசப்படுகிறது.

நீத்தாருக்கான திதி, சடங்குகள் போன்றவற்றில் இன்னமும் பார்ப்பன சடங்குகள் மதிக்கப்படுகின்றன. காசியிலோ, ராமேஸ்வரத்திலோ இந்த நம்பிக்கையைப் பலராலும் தவிர்க்க முடிவதில்லை. அதே போல முக்கியமான கோயில்களிலும் தெய்வத்துக்கு நெருக்கமாகப் பார்ப்பனர்கள் இருப்பதால் அவர்களை விமர்சித்துப் பேசும் கட்சி புனிதத்திற்கு எதிரான கட்சியாகப் பார்க்கப்படுவதும் நிகழ்வதுதான்.

வெகுஜன மனோநிலையில் புனித குறியீடுகள் முக்கியம் என்பதால் இது ஒரு பிரச்சினை என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் அஞ்சாமல் தி.மு.க தொடர்ந்து கொள்கைத் தெளிவுடன் மத அடையாள வாதத்தை, பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தை எதிர்த்து இயங்கி வருகிறது.

ஜாதீய மனோபாவத்தை அனுமதிப்பது 

தன் அரசியலின் மையமாக தி.மு.க ஜாதி அடையாள மனோபாவத்தைக் கொள்வதில்லை. ஜாதி கடந்த திராவிட-தமிழ் இன அடையாளம் என்பதையே முதன்மைப்படுத்தி அரசியல் செய்து வந்துள்ளது. ஆனால் தி.மு.க-விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க, திமுகவில் பங்கேற்காத ஜாதீய அடையாளத்தை முக்கியமாகக் கருதும் குழுக்களை, நிலவுடமை சக்திகளை அதிகம் ஈர்த்தது. தி.மு.க-வுக்கு மாற்றாகவும், எதிராகவும் விளங்கும் தன்மையால் அ.இ.அ.தி.மு.க இத்தகைய எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதனால் பொதுவாகவே எந்த ஊரிலும் மாநில உரிமைகள், திராவிட-தமிழ் அடையாளம், பகுத்தறிவு, பார்ப்பனீய கலாச்சார மறுப்பு ஆகியவற்றை பேசும் அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்களைக் காண்பது கடினம். தி.மு.க என்றால் படிப்பறை இருக்கும்; பாரதிதாசன் மன்றம் இருக்கும். திருவள்ளுவர் மன்றம் இருக்கும். ஒரு பண்பாட்டு உணர்வும், அரசியல் உள்ளடக்கமும் தலமட்டத்திலும் தொண்டர்களிடையே இருக்கும். அ.இ.அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எந்த அரசியல் பிரச்சினை குறித்தும் கருத்துகளே கூற முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் நன்றாகப் பேசக்கூடிய அரசியல் என்பது தி.மு.க எதிர்ப்பு மட்டும்தான். இப்படி கொள்கை வலுவில்லாத கட்சியாகவே வளர்ந்த அ.இ.அ.தி.மு.க இன்று பாரதீய ஜனதாவிற்குக் காவடி தூக்குவது என்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் தி.மு.க இன்றளவும் ஜாதி வேறுபாடுகளை களைய முயல்கிறது. போராடுகிறது. அதில் பின்னடைவைச் சந்தித்தால் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க-வின் எந்த ஒரு தவற்றையும், சறுக்கலையும் கடுமையாக விமர்சிக்கும் பொதுமக்களும் சரி, சிந்தனையாளர்களும் சரி அ.இ.அ.தி.மு.க-வை விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் அ.இ.அ.தி.மு.க விமர்சனத்திற்கே அருகதையற்றது என்பார்கள்.

இந்திய தேசியப் புனிதங்கள்

ஒரு வகையில் காந்தியின் பிம்பம், காங்கிரஸ், கதராடை என்பதெல்லாம் மத ரீதியான குறியீடுகளுக்கு ஒப்பாக புனிதக் குறியீடுகளாகவே பார்க்கப்படுகின்றன. கல்கியும், கே.சுப்பிரமணியமும் “தியாக பூமி” எடுத்த காலத்திலிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் போன்ற வெகுஜன ஊடகங்களிலும் காந்தி, தேசியக் கொடி, ராணுவம், இந்திய எல்லைப் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் புனிதமானவையாகவே சித்திரிக்கப்படுகின்றன. தி.மு.க இந்த புனிதச் சின்னங்களை அவமதிப்பதில்லை என்றாலும், அது திராவிட-தமிழ்ப் பண்பாட்டின் சின்னங்களான வள்ளுவர், தமிழ்த்தாய் போன்றவற்றையே புனித குறியீடுகளாக அனுசரிக்கிறது. இதனால் தி.மு.க-வை இன்றுவரை பிரிவினைவாத சக்தி என்பதும், அதன் மாநில சுயாட்சி கோரிக்கைகளைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் ஒரு சாராருக்கு சாத்தியமாகிறது. அதன் மிக சமீபத்திய உதாரணம் “ஒன்றிய அரசு”, “ஓன்றியம்” என்ற பயன்பாடு. மத்திய அரசு என்ற வார்த்தை அரசியல் நிர்ணய சட்டத்தில் முன்மொழியப்படவில்லை; அதில் Union Government, Union என்று வரையறுத்து சொல்வதை ஒன்றியம் என்று சரியாக மொழிபெயர்த்து சொன்னால் அது தேசத்தை அவமதிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க-வின் வெற்றி என்பது வெகுஜன மனநிலையின் பிற்போக்கு அம்சங்களுக்கும், பகுத்தறிவின் உதயத்துக்கும் நடக்கும் சமரில் பகுத்தறிவின் ஆற்றல் அதிகரிப்பதையே குறிக்கிறது. இந்தப் போரில் முழு வெற்றி என்பது அரசியல் முதிர்ச்சி அதிகரிப்பதிலேயே அடங்கியிருக்கிறது. அதுவரை எதிர்ப்புரட்சி, பிற்போக்கு சக்திகள் தடைகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

 

 

https://minnambalam.com/politics/2021/07/05/49/reviewing-DMK-2021-election-victory

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.