Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...?

-பரணி கிருஸ்ணரஜனி-

கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.

'யாரோ என்னைப்பற்றி உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றபடியே அவரது இணைப்பைத் துண்டித்துக்கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து அடுத்த வாரத்தில் 'சிவாஜி" திரையிடப்பட்டு தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் 'வெற்றி நடை" போடும் செய்திகள் ஊடகங்கள் வழி தெரியவந்தது.

யதார்த்த நிலைமை இவ்வாறிருக்க, திடீரென்று 'சிவாஜி" திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில குரல்கள் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கத் தொடங்கின. என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆக்கிரமித்துக்கொண்டன என்பது மட்டுமல்ல இந்தப் பலவீனமான எதிர்ப்பு பெருங்கவலையையும் அளித்தது.

அப்போதே இத்தொடர் சம்பவங்கள் பற்றியும் 'சிவாஜி" திரைப்படம் குறித்தும், அதன் அரசியல் குறித்தும் எழுதத்தான் தீர்மானித்திருந்தேன். ஆனால் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மௌனம் காத்தேன். ஏனெனில் எனது எழுத்து எந்த வகையிலும் 'சிவாஜி"யை திரையிடுபவர்களுக்கும், அதன் திரையிடலை எதிர்க்கும் தமிழ்த் தேசிய குரல்களுக்கும் மாற்று விளைவுகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன்.

ஏனெனில் நான் முதலிலேயே ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பலவீனமான எதிர்ப்பைப் பதிவு செய்வதை விடப் பேசாமல் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனெனில் இந்தப் பலவீனம் இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலவீனமாக வாசிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குரல்களை அடையாளப்படுத்தும் ஒரு திரைப்படத்தை புறக்கணிப்பதாக் கூறிக்கொண்டு வெளிப்படும் ஒரு எதிர்ப்பு தன்னளவிலேயே பலவீனங்களைக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும் ஒரு சூழலில் அதன் எதிர்ப்பு எம்மவராலேயே அபத்தமாகப்பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இங்கு நடந்திருப்பதும் அதுதான்.

வேறு ஒரு வகையில் எமது ஒற்றுமையின்மையையும் பலவீனமான தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தையும்தான் இவை அடையாளப்படுத்துகின்றன. இதையொட்டித்தான் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

எனக்கு பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது.

01. 'சிவாஜி" திரைப்படம் பூசை போடப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. அதை எதிர்ப்பது என்று முடிவு செய்திருந்தால் அப்போதே அதைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏன் யாரும் அதைச் செய்யவில்லை?

02. இந்தியாவிற்கு வெளியில் தமிழகத் திரைப்படங்களைத் திரையிடுபவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடன் தொடர்பு கொண்டு 'சிவாஜி" திரைப்படத்தை வாங்கித் திரையிட வேண்டாம் என்று கேட்கப்படவில்லை. அது ஏன்?

03. முக்கியமானது தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட பெரும்பாலான ஊடகங்கள் பல 'திடீரென்று முளைத்த" புறக்கணிப்பை பதிவு செய்ததுடன் போட்டி போட்டுக்கொண்டு 'சிவாஜி" க்கான விளம்பரத்தையும் செய்து தொலைத்தன- இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.

இவையெல்லாவற்றையும் ஒருசேர உற்று நோக்கும்போது புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திலேயே செமத்தியாக அடிவாங்கத் தொடங்குவதை அவதானிக்கலாம்.

எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

01. 'சிவாஜி" திரைப்படத்தை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

02. புறக்கணிப்புக்காக சொல்லப்படும் காரணங்கள் வலுவானவைதானா? எந்த அளவு கோலின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது?

03. இந்த அளவுகோல் மற்றைய திரைப்படங்களுக்கும் தமிழக சினிமா உலகத்திற்கும் பொருந்தாதா?

04. சரி, 'சிவாஜி" திரைப்படம் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர்களின் புறக்கணிப்பிற்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றே வைப்போம். பல தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குத் தெரிந்த இந்த 'அம்சம்" ஏன் தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம்- விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை? போதாதற்கு புறக்கணிப்பையும் பதிவு செய்து திரைப்படத்திற்கு 'ரிக்கற்"றும் விற்ற அவற்றின் அரசியலை எந்த வகமைக்குள் பொருத்திப் பார்ப்பது?

இவற்றையெல்லாம் ஒரு குடுவைக்குள் போட்டு ஒரு குலுக்குக் குலுக்கி கவிழ்த்துக் கொட்டினால் பல 'உண்மைகள்" தெரிய வரும். பிரச்சினை ரஜினிக்காந்திடமோ சங்கரிடமோ இல்லை. பிரச்சினைக்குரியவர்கள் நாம்தான். அவர்களில்லை.

இதை வேறு ஒரு வகையில் சொன்னால் தலையையும் வாலையும் விட்டுவிட்டு நடுவிலை எதையோ பிடித்து இழுத்ததற்கு ஒப்பானது இது.

தமிழ்ச் சினிமா குறித்து, அது 'கோடம்பாக்கம்" சினிமாவாவேயொழிய தமிழ்ச் சினிமா அல்ல என்பதில் தொடங்கி அதை ஈழத் தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வதென்பது வரை எனக்கு ஏகப்பட்ட வாசிப்புக்கள் இருக்கிறது. இதில் அதைப் பதிவு செய்யப் போனால் இது தொடர் கட்டுரையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. (ஏற்கனவே 'கோலங்கள்" தொலைக்காட்சி தொடர் மாதிரி எனது எல்லாக் கட்டுரைகளையும் நீட்டி முழக்குவதாக நேற்றுத்தான் ஒரு நண்பர் குற்றம் சுமத்தியிருந்தார்.) எனவே குறிப்பிட்ட சில விடயங்களை அவதானிக்க பின்வரும் முகவரியில் சென்று நான் ஏற்கனவே 'தமிழக சினிமா" குறித்து எழுதிய சில கருத்துக்களை பார்க்கவும். (hவவி:ஃஃறறற.யிpயயட-வயஅடை.உழஅஃiனெநஒ.pரி?ழிவழைnஸ்ரீஉழவெநவெரூவயளமஸ்ரீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கம் பக்கமாக விரிந்த சிவாஜி படத்தின் கருத்து மழை ஓய.... இதமான தூவாணமாக இக்கட்டுரை.. யாழில் இணைக்கப்பட்டது பொருத்தமாக இருக்கிறது.

தமிழ்த்தேசியம் பேசும் ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பை இக்கட்டுரை சுட்டுகிறது. இக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை தனியாக பிரித்து இணைக்கிறேன்.

* இரட்டைத் தன்மை நிலைப்பாட்டு ஊடகங்கள் எதுவும் வேண்டாம். இது உயிர்ப்பிரச்சினை. பலர் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் போது தயவு செய்து 'ஜனரஞ்சகம்" பேசாதீர்கள். உங்களுடைய 'ஜனரஞ்சகம்" எமது தேசியக் கருத்துருவாக்கத்தினைச் சிதைப்பதனால் தயவு செய்து அதிலிருந்து மீண்டு விடுங்கள்.

மேலே குறிப்பிட்டது போல் போல் எமது முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எமது ஊடகங்கள் வழி 'கோடம்பாக்க சினிமா" கடை விரிப்பது இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கிறது. எமது விடுதiலையைப் பின்னடையச் செய்கிறது. இது சாதாரண ஒருவருக்குத் தெரியாமலிருக்கலாம் - ஆனால் தேசியத்தை வரித்துக் கொண்ட ஊடகங்களிற்குத் தெரியாமல் இருப்பது தமிழினத்தின் அவலமா? அறியாமையா?

* நாம் யார்? விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம். எமக்கென்று சில பொதுவான நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதன் வழியே சில கருத்துருவாக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. அது என்னவென்று சாதாரண ஒரு நபருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அது என்னவென்பதை கண்டடைவதும் அதன் வழியே அக்கருத்தியலை வளர்ப்பதும் தான் ஊடகங்களின் பணி என்று சொல்லப்படுகிறது.

* உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுவதில்லை. செய்தி என்ற வடிவத்தில் தமது அரசியலைத்தான் பேசுகின்றன. தமது தேவை சார்ந்து எழுந்த கருத்துருவாக்கங்களைத்தான் முன்வைக்கின்றன.

இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக என்று பல வழிகளிலும் பிளவுபட்டிருக்கும் உலகம் தாம் சார்ந்திருக்கும் குழுமம் சார்ந்து எழுந்ததும் தமக்குத் தேவையானதென்று கருதுவதுமான கருத்தியலைத் தமது ஊடகங்கள் வழி தொடர்ந்து கட்டமைக்கின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் என்ன கருத்தியலைப் பேசுகின்றன என்று பார்த்தால் அவை அமெரிக்காவின் சண்டித்தனத்தையும் அதன் உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தையும் தொடர்ந்து தக்க வைக்கும் கருத்துருவாக்கங்களைத்தான் பேசுகின்றன - கட்டமைக்கின்றன. வெளிப்பார்வைக்கு பல தோற்றங்கள் காட்டினாலும் அதன் அடித்தளமும் அடிப்படையும் மேற்குறித்த கருத்துருவாக்கங்கள்தான்.

இப்படித்தான் இந்திய ஊடகங்கள் இந்துத்துவத்தையும் பாகிஸ்தானிய ஊடகங்கள் இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிங்கள ஊடகங்கள் பௌத்த பேரினவாதத்தையும் பிடித்துத் தொங்குகின்றன. இந்தக் கருத்துருவாக்கங்கள் சரியா தவறா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இனக்குழுமத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒரு கருத்தியல் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆகவே எமது தமிழ் ஊடகங்களும் ஒரு கருத்தியலை பேசவேண்டும் என்பது வெளிப்படை. அது என்ன? நாம் ஒரு தேசிய இனம் என்றும் எங்களுக்கென்று ஒரு பூர்வீக நிலம் இருக்கிறதுதென்றும் அதில் நாம் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் என்றும் கேட்டுப் போராடுகிறோம்.

ஆகவே எமது ஊடகங்கள் பேச வேண்டிய கருத்தியல் இதைச்சுற்றியதென்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

* 'சினிமா இல்லாமல் எந்த ஊடகத்தையும் நடத்த முடியாது. நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்". அதற்கு நான் 'மக்கள் தொலைக்காட்சி" வந்த பின்னும் இன்னும் பித்தம் தெளியவில்லையா என்றேன். அவர் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டார்.

'மக்கள் தொலைக்காட்சி" அது ஒரு ஊடகம் இல்லை. எமது ஊடகக்காரர்களுக்கு அது ஒரு பாடம். தமிழகத்திலேயே இந்தச் சாதனையை அவர்கள் நிலை நாட்டியிருக்கும்போது இங்கு நம்மால் முடியாதா? கிட்டத்தட்ட தமிழகத்தில் 'மக்கள் தொலைக்காட்சி" யின் உதயம் என்பது சூரியனை மேற்கில் உதிக்க வைத்ததற்கு ஒப்பானது.

எமது தமிழ் ஊடகங்களிடம் உள்ள பிரச்சினையே மக்களினுடைய விருப்பாக - தேர்வாக தாமே சில விடயங்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளவதுதான். இன்று 'மக்கள் தொலைக்காட்சி" மக்களுக்கு எது பிடிக்கும் என்பதையும் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் தமிழகத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

* போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்குத் தேவையானதும் அவசரமானதும் ஒரு மக்கள் தொலைக்காட்சியே - ஒரு மக்கள் வானொலியே - ஒரு மக்கள் பத்திரிகையே.....

எமது ஊடகங்களின் கடப்பாடை கடுமையான விழிப்புக்கு அழைத்துள்ளார் கட்டுரையாளர். இவரது கோரிக்கையின் நியாயத்துடன் ஒத்துப்போகும் எனது முடிவை பதிவு செய்கிறேன். ஆனால் கடைசியாக சிவாஜி படம் பார்க்க இவர் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்ட பந்தி இக்கட்டுரையின் நோக்குக்கு வலுச் சேர்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி புறக்கணிப்பு - தொடரும் விவாதங்கள்!

சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்று விடப்பட்ட அறைகூவல் வெற்றியைத் தரவில்லை. ஆனால் பரந்தளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புறக்கணிப்பிற்கான அறைகூவல் வெற்றியைக் கொடுக்காததற்கான காரணம் பற்றி பலவாறு விவாதிக்கப்படுகிறது.

பலர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். சிவாஜியைப் புறக்கணிப்பதற்கான காரணம் வலுவான முறையில் வைக்கப்படவில்லை என்ற காரணம் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

உண்மையில் இப்படிச் சொல்பவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவாஜியை புறக்கணிக்க கோரியவர்கள் ரஜனிகாந்த் தமிழர் விரோதப் போக்கை கொண்டவர் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய வாதத்தை வைத்திருந்தார்கள்.

இன விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனத்திடம் இதை விட வேறு வலுவான வாதத்தை வைக்க முடியுமா? மொழியும், பண்பாடும், நிலமும் சிதைக்கப்படுவதை எதிர்த்து ரத்தம் சிந்திப் போராடும் மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் வைக்கப்படக்கூடிய மிக வலுவான வாதம் இதை விட வேறு எதுவாக இருக்க முடியும்?

இன விடுதலைக்காக போராடுபவர்களிம் இன மான உணர்வு நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடும், தமிழர்களுக்கு விரோதமானதை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் சொல்லப்பட்ட உண்மையான காரணங்கள் அவைகள்.

"இந்தக் காரணம் போதவில்லை, இதை விட வேறு காரணங்களை கொண்டு வா" என்று சொல்பவன் தன்னை தமிழன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

ஆகவே புறக்கணிப்பிற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படாததன் காரணத்தாலேயே புறக்கணிப்பு வெற்றி அளிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. புறக்கணிப்பிற்கு மிக வலுவான காரணம் முன்வைக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

ஆயினும் புறக்கணிப்பு வெற்றி பெறாததற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கு வேறு சில பதில்களையும் சிலர் முன்வைக்கின்றார்கள். தேசிய ஊடகங்கள் இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், மாறாக சிவாஜி படத்திற்கு பாரிய விளம்பரங்களை செய்தார்கள் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

ஒரு புறம் சிவாஜி திரைப்படத்தையும் தமிழக சினிமாவையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடியபடி, மறுபக்கம் சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற செய்தியையும் வெளியிட்டு அபத்தமான முறையில் நடந்து கொண்டன என்று பிரான்ஸில் வசிக்கும் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றில் சாடியிருக்கிறார்.

தேசிய ஊடகங்கள் தன்னை மீண்டும் மீண்டும் சிவாஜியை நோக்கித் துரத்துவதால், தான் தேசியத்தைக் காப்பாற்ற சிவாஜி திரைப்படத்தைப் பார்க்கப் போகின்றேன் என்று அவர் ஒருவித எள்ளலோடு தன்னுடைய கட்டுரையை முடித்திருந்தார்.

பரணி அவர்கள் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கனவையாக இருக்கின்றன. ஆயினும் அவர் ஒரு தவறான வழிகாட்டலை தன்னுடைய கட்டுரையில் செய்து விடுகின்றார்.

பலவீனமான எதிர்ப்பை பதிவு செய்வதை விட பேசாது இருந்துவிடுவதே சிறந்தது என்று ஒரு கருத்தை பரணி அவர்கள் முன்வைக்கின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தவறான அர்த்தத்தைக் கொடுகின்ற கருத்தும் ஆகும்.

ஆரம்பத்தில் எதுவுமே பலவீனம் போன்றுதான் தோற்றமளிக்கும். ஐம்பதாயிரம் தமிழர்கள் வசிக்கின்ற ஒரு நாட்டில் ஆயிரம் பேரோ, இரண்டாயிரம் பேரோ ஊர்வலம் செல்வதும் ஒரு பலவீனம்தான். உண்மையில் இது போன்ற ஊர்வலங்கள் அந்த நாட்டு மக்களிடம் பெறுகின்ற கவனிப்பைக் காட்டிலும், சிவாஜி மீதான புறக்கணிப்புக் கோரிக்கை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கவனிப்பை பெற்றது என்று துணிந்து சொல்லலாம்.

புலம்பெயர் நாடுகளில் தேசியத்திற்காக நடக்கின்ற பலவீனமான போராட்டங்கள் தேசியத்தை பலவீனப்படுத்தாத போது, சிவாஜி புறக்கணிப்புக் கோசம் மட்டும் அதை செய்துவிடும் என்று சொல்வது சரியல்ல.

அத்துடன் "பலவீனமான போராட்டம்" என்பதை எதை வைத்து வகைப்படுத்தலாம் என்றும் எனக்குப் புரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு பீரங்கிகளோடு நின்ற சிங்களப் படைகளை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த போராட்டமும் ஒரு பலவீனமான எதிர்ப்பாகத்தான் அப்பொழுது பார்க்கப்பட்டது.

சாதிப் பேயை தமிழர்கள் மத்தியில் இருந்து விரட்டுவதற்கு ஐம்பது அறுபது வருடமாக முயற்சிகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. சாதியின் வீரியம் குறைந்திருக்கிறதே தவிர, அது இல்லாமல் போய்விடவில்லை. உண்மையை சொல்வது என்றால், தமிழர்களிடம் இருந்து ரஜனிகாந்தை விரட்டுவதை விட சாதியை விரட்டுவது கடினமானது. அப்படி இருந்தும் சாதியினை இல்லாது செய்யவும், அதன் வீரியத்தை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன.

ஆகவே ஒரு முயற்சி ஆரம்பிக்கப்படுகின்ற போது, "இது பலவீனமானது, இவைகளை விட்டுவிட்டு பேசாது வீட்டில் இருங்கள்" என்று சொல்வது பரணி போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு அழகு அல்ல. இது போன்ற எழுத்துக்கள் துணிந்து வருகின்ற ஒரு சிலரையும் சோர்வடையச் செய்து விடக்கூடும்.

அதே வேளை அவர் தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்கள் பற்றிக் கூறிய கருத்துக்கள் மிகச் சரியானவை. எள்ளி நகையாடியும், கடிந்தும் அவர் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

ஆனால் இந்தத் தேசிய ஊடகங்கள் எவை என்பதில் தெளிவான நிலை இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இணையத் தள ஊடகங்கள் பற்றி நிலவுகின்ற குழப்பம் சொல்லி மாளாது. வானொலிகளில் எந்த வானொலியை தேசிய ஊடகங்களுக்குள் அடக்கலாம் என்றும் தெரியவில்லை. ஐரோப்பாவில் இது குறித்து ஒரளவு தெளிவு இருந்தாலும், அவுஸ்ரேலியாவில் போய் கேட்டால் அங்குள்ளவர்கள் தெளிவான பதிலை தருவார்களா என்பது சந்தேகமே.

தொலைக்காட்சிகளை எடுத்துக் கொண்டால் தற்பொழுது தரிசனம் இயங்குகின்றது. ஆனால் விரைவில் ஐரோப்பாவில் இன்னும் ஒரு தொலைக்காட்சி வர இருப்பதாகவும், அதுவும் மற்றொரு தேசிய ஊடகமாக இயங்கும் என்றும் காற்றுவாக்கில் வருகின்ற செய்திகள் குழப்பத்தை தருகின்றன.

இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறை பற்றி மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். உண்மையில் சச்சிதானந்தன் அவர்கள் எழுதியதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்த குழப்படிகள் அதிகம்.

அப்பொழுது அரசியல் ஆய்வாளர் ஒருவருடன் நான் உரையாடிக்கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் பேச்சு வந்தது. "என்ன செய்வது? விடுதலைப் புலிகளுக்கு தற்போதைய நிலையில் வேறு வழி இல்லை. இவர்களை வைத்துக் கொண்டுதான் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. மிகக் கடினமான பலமான வேலைகளையும் இப்படி பலவீனமானவர்களை கொண்டு செய்ய வேண்டிய நிலை" என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

இந்தக் கூற்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்களுக்கும் பொருந்தும். இவைகளை வைத்துக் கொண்டு சிறிலங்காப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பையோ, சிவாஜி திரைப்படத்திற்கு எதிரான புறக்கணிப்பையோ வெற்றிகரமாக செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதையும் மீறிச் செய்துதான் ஆக வேண்டும்.

ரஜனிகாந்த் என்கின்ற போதையின் வீரியம் வர வர அதிகமாகின்றதே தவிர குறையவில்லை. ஒரு நடிகர் மீதான ரசிப்பு என்பதையும் தாண்டி ரஜனிகாந்த் மீதான போதை எம்மவர்க்கு பல மடங்கு ஏறி விட்டது. அந்தப் போதையின் தாக்கம் இம் முறை மிக அதிகமாகவே உணரப்பட்டது.

இந்தப் போதைக்குள் விடுதலைக்குப் போராடுகின்ற ஒரு இனம் அகப்படக்கூடாது என்கின்ற நல்ல எண்ணம் பல மட்டங்களில் உருவாகி வருவதனாலேயே இம் முறை சென்ற முறையை விட அதிகமாக புறக்கணிப்புக் கோசம் எழுந்தது. வரும் காலங்களில் இது மேலும் எழும். அதற்கு எங்கள் மத்தியிலே உள்ள சிந்தனையாளர்கள் வலுவூட்ட வேண்டும்.

ஆனால் புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களை புரிந்தவர்கள் கூட "ரஜனி" போதையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ஆகவே நிறைய வியக்கியானங்களும் வருகின்றன. உண்மையில் இந்தப் போதையில் இருந்து தமிழ் மக்களை மீட்பது மிகவும் கடினமான பணிதான். ஆனால் நடக்காது என்று பேசாது இருக்கவும் வேண்டாம், பலமானது என்று சரமசம் செய்யவும் வேண்டாம்.

தமிழினத்திற்கு எதிரான எதனுடனும் சமரசம் செய்ய மாட்டோம் என்ற எண்ணத்தை தமிழர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும், வரும் காலத்திலாவது தமிழர்கள் என்ற பேரைக் கேட்டாலே ரஜனிகாந்திற்கு சும்மா அதிருகிற மாதிரி செய்து விடலாம்.

- வி.சபேசன் (09.07.07)

- வெப்பீளம்

  • 2 months later...

************

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.