Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                       இயல் வழி நாடகம்

                                                                                       - சுப. சோமசுந்தரம்

            வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம்.
            உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சியமைப்பை அளிக்கலாம். இது காண்போர் திறம் பற்றியது. எடுத்துக்காட்டாக
"அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே"
-------------ஔவையார் (குறுந்தொகை 23)
எனும் பாடலை எடுத்துக் கொள்ளலாம். இக்கட்டுரையின் இலக்கு ஓரளவு வாசிப்பு உள்ளோர் அனைவரும் என்றமையால், மேற்கோளாய்ச் சொல்லும் பாடல் அனைத்திற்கும் ஓரளவு பொருள் விளக்கம் தருவது இன்றியமையாததாகிறது. மேற்கூறிய பாடல் காட்சி :
குறிஞ்சி நிலத் தலைவி தலைவனைக் காணாத ஏக்கத்தில் மெலிதல் போன்ற உடல் மாற்றங்களுக்கு உள்ளாகிறாள். எனவே தாயும் செவிலித்தாயும் கலக்கமுற்று, குறிசொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் கூறும் அகவலோசைப் பாடலே இஃது. குறி சொல்லுபவளை 'அகவன் மகளே' என விளிக்கிறாள் தோழி. சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் (கோப்பு) போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய (நன்னெடுங் கூந்தல்) அகவன் மகள் என அவளது வெண்மையான நீண்ட கூந்தலைக் குறிப்பிட்டு, அதன் மூலமாய் வயதில் சற்று மூத்த கட்டுவிச்சியை நம் மனக்கண் முன் நிறுத்துகிறாள் தோழி. குறி சொல்லுகையில் கட்டுவிச்சி தனது நன்னெடுங்குன்றத் தலைவன் சேயோனைப் பாடும்போது, அந்நெடுங்குன்றத்தைச் சார்ந்தவனே தனது தலைவன் என்பதால் தலைவியின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியைத் தோழி கவனித்திருக்க வேண்டும். எனவே 'அவர் நன்னெடுங்குன்றம்' பற்றிக் கட்டுவிச்சி முதலில் பாடிய பாட்டை மீண்டும் பாடச் சொல்லுகிறாள் தோழி. இதில் தோழியின் நாநலம் தெற்றென விளங்கும். 'அவர்' எனக் குறித்ததால் 'எவர்?' எனும் ஐயமும், பாடலைக் கேட்கும்போது தலைவியின் முகமலர்ச்சியும் தாய்க்கும் செவிலிக்கும் தலைவியின் காதலை உணர்த்தும். தானும் தலைவியின் ஒத்த வயதினள் என்பதால் தன்னால் நேரிடையாக அவர்களுக்கு உணர்த்த முடியாத தலைவியின் காதற் பொருளை அந்த அகவன் மகளின் மூலமாக மறைமுகமாக உணர்த்த முற்படுகிறாள் தோழி. இதில் கதை மாந்தர் ஐவரும் நம் முன் நிற்க, தோழி கையசைப்போடும் (தாயிடமும் செவிலித்தாயிடமும் மறைத்த) கண்ணசைப்போடும் அகவன் மகளிடம் பேசுவது ஒரு உள்ளார்ந்த நாடகமாய் நம் மனக்கண்ணில் விரிகிறது.
            எனவே யாதொரு பாடலிலும் உள்ளார்ந்த நாடகமொன்று அமைதலின், அவற்றை வாசிப்போர்தம் கற்பனைக்கே வழிவகுக்கு முகமாக மேற்கூறிய ஒரு மேற்கோளுடன் நிறுத்திக் கொள்வதே பொருத்தமாய் அமையும். இனி நாடக மேடை போல வெளிப்படையான காட்சி அமைப்புடன் இயற்றமிழில் வந்து நிற்கும் நாடகம் (Explicit Drama) பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்பது, 'இயல் வழி நாடகம்' என நாம் கையிலெடுத்த தலைப்பிற்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி பொருந்தி அமைவதுமாம்.
            இது தொடர்பில் நாம் முதலில் எடுப்பது மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் வரும் காட்சி. தலைவனும் தலைவியும் உடன்போக்கு எனும் மேதகு ஒழுக்கம் பூண்டு சென்றுவிட்டனர். அவர்களைத் தேடிச் செல்லும் செவிலித்தாய் எதிரில் அதேபோல் உடன்போக்கு மேற்கொண்டு வரும் வேறொரு இணையைத் தூரத்தே கண்ணுற்று, தான் தேடிச்செல்லும் இணையரோ என்று முதலில் மயங்கிப் பின் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள் :
" மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே
பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று
ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே".
----- திருக்கோவையார், பாடல் 244.

உரையாடல் வருமாறு :
செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே !
எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன்.
எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக !
            மேற்கூறியவற்றில் நம் உரைநடை யார், யாரிடம் சொல்கிறார் என்ற முன்னறிவிப்பபுடன் திகழக் காணலாம். நாடக மேடையில் எந்த அறிவிப்பும் இன்றி ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்களிப்பைச் செய்யும். அவ்வாறே மேற்கூறிய பாடலில் ஒரு நாடக நிகழ்வைப் போல் முன்வைக்கப்படுகிறது. யார் யாரிடம் உரையாடுகிறார் என்பது தானே விளங்கி நிற்கிறது. அந்நாடக நிகழ்வு மணிவாசகரால் வெற்றிகரமாய் நம் கண்முன் அரங்கேற்றப்படுகிறது.
            இத்தலைவன் அத்தலைவனை மட்டுமே கண்டதும், இத்தலைவி அத்தலைவியை மட்டுமே கண்டதும் காற்றுவாக்கில் புலவன் எடுத்தியம்பும் பண்பாட்டுத் திறம். மேலும் இது அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம்.  இறைவனைத் (இங்கு சிவபெருமான்)  தலைவனாகவும் புலவன் தன்னையே தலைவியாகவும் உருவகித்து நாயகன்-நாயகி பாவத்தில் அமைந்த பாடல்.  ஆன்மாவாகிய தலைவி இறைவனாகிய தலைவனைச் சென்றடையும் குறியீடு என்பர். இக்குறிப்புகள் இங்கு நமது கருதுகோளுக்குப் புறத்தே அமைந்திடினும், இவற்றைக் குறிக்காது கடந்து செல்லுதல் அத்துணை எளிதல்ல.
            திருக்கோவையார் எட்டாம் திருமுறையில் அமைய, பதினொன்றாம் திருமுறையில் வரும் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியின் 73வது பாடல் இதே காட்சி அமைப்புடன் திகழக் காணலாம் :
"துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தோன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேயொத்த
காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே".
            திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம். "என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான்.
            அடுத்து நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி (திருவெம்பாவை பாடல் 4) :
"ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ   
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்   
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு  ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்   
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து   
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்".
            மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம்.
            திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் (திருப்பாவை பாடல் 15) :
"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்"
திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை.
            இயலில் இசை தெளிவெனச் சுட்டினோம்; இயலில் நாடகம் தெளிவாகக் காட்டினோம். ஒவ்வொன்றிலும் ஏனைய இரண்டும் விரவி நிற்கக் காண்பர் தமிழர். இகல் கொண்டோர் நிலத்தைப் பிரிக்க எண்ணுவர்; நீரைப் பிரிக்க எண்ணுவர். முத்தமிழில் எத்தமிழைப் பிரிக்க எண்ணுவர் ?

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையாரின் குறுந்தொகையில் இருந்து மாணிக்கவாசகரின் திருக்கோவையார், திருவெம்பாவை ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை வரை உங்களின் ஆய்வுகள் வியக்க வைக்கின்றன சோமசுந்தரம் அவர்களே......தமிழ்தான் எவ்வளவு பொக்கிஷத்தை தன்னுள்ளே கொண்டிருக்கின்றது .......!  🌹

இயல் மரபுக்கவிதைகளில் இசை இயல்பாக உண்டு; நாடகம், காண்போர் திறம் பொருத்து(பால்,வயது,மனநிலை), எங்கிருந்து காண்பவர் எவரையும் நோக்கும் திறம்கொண்ட மோனாலிசா ஓவியம்போல், வெவ்வேறு காட்சிப்பொருள் தந்து விரியும் "இயல்வழி நாடகம்" என்ற கருதுகோளை, ஔவையார் குறுந்தொகை, மணிவாசகர் திருக்கோவையார்-திருவெம்பாவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்ற அகப்பாடல்கள் கொண்டு காட்சிப்படுத்திய சோமசுந்தரனாரின் ரசனைத்திறம் வியக்க வைக்கிறது.

அவையும், மானுடக்காதல் தொடங்கி, தெய்வக்காதல் தொட்டுத் தொடரும் மரபாண்மை மயங்க வைக்கிறது. இவை உள்ளுறை உவமம் அன்று; "ஒன்றைக் கூறி, வேறொன்றைக் குறிப்பால் உணர்த்தும் இறைச்சி" என்னும் இலக்கண விண்ணைத் தாண்டி, மோனாலிசா ஓவிய நாடகம் போன்று, காண்போர் மனம் போல் காட்சி என்னும் புதிய கண்ணோட்டம் தந்தமை அருமையிலும் அருமை!

மரபுக்கவிதையில் காதல் கொள்ள, இப்பார்வை ஒன்றே போதுமே! பல்லாயிரம் சொல் வேண்டுமா? என்று சொல்லாமல் சொல்லும் விளக்கம் அற்புதம்!

தீந்தமிழினை பகுத்து பரிமாறியதற்க்கு நன்றி. திகட்டவில்லை தேன் சுவை. நன்றி 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.