Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே?

  • அக்னி கோஷ்
  • பிபிசி ஃபியூச்சர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பழங்குடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1961 மற்றும் 1971 க்கு இடையில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து சுமார் 1500 மொழிகள் மறைந்துவிட்டன. முற்றிலுமாகக் காணாமல் போவதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவர் முடிவு செய்தார்.

அது 2010. இந்தியாவின் மொழிகள் பற்றிய விரிவான தரவு இல்லாதது பற்றி கணேஷ் என் தேவி கவலைப்பட்டார். "1961 [இந்திய] மக்கள் தொகை கணக்கெடுப்பு 1,652 தாய் மொழிகளை அங்கீகரித்தது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 109 மொழிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டது. எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது,"என்று தேவி கூறுகிறார்.

எனவே, என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க தேவி முடிவு செய்தார்.

உலக அளவில் மொழி பன்முகத்தன்மை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்வார்த்மோர் கல்லூரியின் மொழியியலாளர் டேவிட் ஹாரிசன், இந்தியாவை "மொழி ஹாட்ஸ்பாட்" என்று குறிப்பிடுகிறார். உயர் மொழி பன்முகத்தன்மை, மொழி காணாமல்போகும் ஆபத்து மற்றும் குறைந்த அளவிலான ஆவணப்படுத்தல் இங்கு இருப்பதாக, ஹாரிசன் கூறுகிறார்.

குஜராத்தில் உள்ள பரோடாவின் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ள தேவிக்கு மொழிகள் மீது எப்போதுமே ஆர்வம் உண்டு. பரோடாவில் உள்ள பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம், தேஜ்கட்டில் உள்ள ஆதிவாசி அகாடமி, டிஎன்டி உரிமைகள் நடவடிக்கை குழு உள்ளிட்ட பல அமைப்புகளை, மொழிகளின் ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பிற்காக அவர் நிறுவினார்.

தனது பணியின் ஒரு பகுதியாக, அவர் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று அவர்களை ஆய்வு செய்தார். இந்த பழங்குடியினருக்கு அவர்களின் சொந்த மொழிகள் இருப்பதை அவர் கவனிக்கத் தொடங்கினார். இது பெரும்பாலும் அதிகாரப்பூர்வ அரசு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுவதில்லை.

"மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கொண்ட சமூகங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்கள் அல்லது நாடோடி சமூகங்கள் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் மறைந்துவிடுகின்றன என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது" என்று தேவி கூறுகிறார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியையும் ஆவணப்படுத்த நீண்ட, கடினமான செயல்முறை தேவைப்படும் என்று தேவி உணர்ந்தார். எனவே அவர் உதவ முன்வந்தார். அவர் 2010 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பை (PLSI) தொடங்கினார், இதற்காக அவர் நாடு முழுவதிலுமிருந்து 3,000 தன்னார்வலர்களைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்த தன்னார்வலர்களில் பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. தங்கள் தாய் மொழியுடன் நெருக்கமான உறவுப்பிணைப்பைக் கொண்ட எழுத்தாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை மொழியியலாளர்கள் அல்லாதவர்கள் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், தேவி மற்றும் அவரது குழு , நாடு முழுவதும் 780 மொழிகளையும் 68 எழுத்து வடிவங்களையும் பதிவு செய்தது. ஏறக்குறைய 100 மொழிகளை ஆவணப்படுத்த முடியவில்லை என்று தேவி கூறுகிறார். பல பிராந்தியங்கள் தொலைதூரத்தில் இருப்பது அல்லது மோதல்களே இதற்கான காரணம் என்கிறார் அவர். எனவே இந்தியாவில் உள்ள மொழிகளின் உண்மையான எண்ணிக்கை தொடர்ந்து நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு முதல், பிஎல்எஸ்ஐ, 68 தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இதில் தேவி கண்ட ஒவ்வொரு மொழியின் விரிவான சுயவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 27 தொகுதிகள், 2025ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்படும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடி சமூகங்களைக் கொண்ட ஒடிசா மாநிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மொழியியல் தங்கச் சுரங்கம் என்று தேவி எப்போதுமே கருதினார். ஆனால் இந்த தொலைதூரப்பகுதிகளில் இருக்கும் மொழிகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியியலாளரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

டாங்ஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டாங்ஸா பழங்குடி சமூகத்தில் சுமார் 40 துணை பழங்குடியின சமூகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்த பேச்சுவழக்கை கொண்டுள்ளது

இந்த நேரத்தில் ஒடிஷாவில் மாவட்ட ஆட்சியரிடம் பணிபுரிந்த ஒரு டாக்ஸி டிரைவரை தேவி கண்டார். மாவட்ட ஆட்சியர் கிராமங்களுக்கு பயணம் செய்யும்போதெல்லாம், டிரைவர் காரில் உட்கார்ந்திருப்பதை விட கிராம மக்களுடன் பேசுவதை விரும்பினார்.

"சில ஆண்டுகளில் அவர் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் அவர் அந்த நான்கு மொழிகளுக்கான இலக்கணத்தை உருவாக்கி, நாட்டுப்புற பாடல்களையும் கதைகளையும் சேகரித்தார்," என்கிறார் தேவி. "இது அவருக்கு முனைவர் பட்டம் கொடுக்க தகுதியான பணி. ஒருவேளை இரண்டு முனைவர் பட்டங்களைக்கூட அவருக்கு கொடுக்கலாம்."என்று தேவி குறிப்பிடுகிறார்.

ராஜஸ்தானின் ஒரு மொழியிலிருந்து முழு காவியத்தையும் ஆவணப்படுத்திய குஜராத்தின் ஒரு பள்ளி ஆசிரியர் உட்பட பலரை தேவி கண்டார். காவியத்தை ஆவணப்படுத்த அவருக்கு 20 ஆண்டுகள் ஆனது. இந்த முழு திட்டத்தையும் தனது சொந்த பணத்தின் மூலம் அவர் செய்தார்.

"இதன் மூலம் நான் கண்டறிந்தது என்னவென்றால், மக்கள் மொழிகளைக் கற்பதும், நேசிப்பதும், பணத்தின் காரணங்களுக்காக அல்ல" என்று தேவி குறிப்பிடுகிறார்.

"ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே மொழிகளை நேசிக்கிறார்கள் என்றும் தங்கள் பணியை ஆதரிக்க மானியங்கள் மற்றும் நிதிகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும்தான் நான் முன்பு நினைத்திருந்தேன்," என தேவி விளக்குகிறார்.

"மொழி நிபுணர்கள் பலரை குறிப்பாக முறையான கல்வி இல்லாத மக்களிடையே இவர்களை கண்டுபிடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்கிறார் அவர். மொழியியல் ஆய்வுக்கு, இது போன்ற மக்களின் அறிவு விலைமதிப்பற்றது என்று நிரூபணமானது.

பாமர மக்களுக்கு மொழிகள் மீது அன்பு இருந்தபோதிலும், காலப்போக்கில் 220 மொழிகள் காணாமல் போய்விட்டதாக தேவி மதிப்பிடுகிறார். வடகிழக்கு மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள தொலைதூர சமூகங்கள் பேசும் மொழிகள், காணாமல் போகக்கூடிய பெரும் ஆபத்தில் இருப்பதாக மொழியியலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கனடாவின் சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் இண்டியன் ஸ்டடீஸின் வருகைப் பேராசிரியரான அன்விதா அபி, 2003 ஆம் ஆண்டில், வேனிஷிங் வாய்சஸ் ஆஃப் தி கிரேட் அண்டமானீஸ் (வோகா) என்கிற ஆவணத் திட்டத்தை மேற்கொண்டார்.

அந்தமான் பழங்குடியினர் பற்றிய அபியின் ஆய்வு இந்தியாவில் ஆறாவது மொழி குடும்பத்தை அடையாளம் காண வழிவகுத்தது. அதுதான் அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களால் பேசப்படும் தி கிரேட் அண்டமானீஸ். இதன் முக்கிய மொழிகளான சாரே, போ, கோரா மற்றும் ஜெரு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

2010 இல், போவா சீனியர் அந்தமான் தீவுகளில் காலமானார். கற்காலத்திற்கு முந்தைய காலங்களில் இருந்தே பேசப்படும் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான 'போ' மொழியை, சரளமாகப் பேசும் கடைசி நபர் அவர்தான். "போவா சீனியர் இறந்தார் மற்றும் போ மொழி அழிந்துவிட்டது. பிறகு சாரே மற்றும் கோரா மொழிகளின் கடைசி பேச்சாளர்களும் இறந்துவிட்டனர்" என்று அபி கூறுகிறார்.

"உண்மையைச் சொல்வதானால், ஒரு உதவியற்ற உணர்வு நம்மை, குறிப்பாக மொழியியலாளர்களை ஆட்கொள்கிறது. ஏனென்றால் நாங்கள் இந்த மொழிகளை ஊக்குவிக்க முயன்று வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். உதவி கேட்டு அரசியல்வாதிகளுக்கு பல கடிதங்களை எழுதியதாகவும், ஆனால் அதை யாரும் செவிமடுக்கவில்லை என்று உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

2013 ஆம் ஆண்டில் அபி, பத்மஸ்ரீ விருதை வென்றார். பல்வேறு துறைகளில் பொதுமக்களின் பங்களிப்புக்காக இந்திய அரசால் வழங்கப்படும் விருது இது. அந்தமானிய மொழிகளின் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தலில் அவரது பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அந்தமான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அந்தமான் தீவுகளில் வசிக்கும் பாரம்பரிய பழங்குடியினரால் பேசப்படும் தி கிரேட் அண்டமானீஸ் மொழிகளின் தொகுதி, அழிவின் விளிம்பில் உள்ளது

தங்களின் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு, சில நேரங்களில் சமூகங்களின் மீதே சுமத்தப்படுகிறது. அத்தகைய ஒரு முயற்சியை, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாங்லுங் மொசாங் என்ற விவசாயி சமீபத்தில் மேற்கொண்டார்.

மொசாங், டாங்ஸா மொழியை பேசுகிறார். இது சீன-திபெத்திய மொழி. அதாவது வடகிழக்கு இந்தியாவில் டாங்ஸா மக்களால் இந்த மொழிகளின் திரள் பேசப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் டாங்ஸா பழங்குடி, 40 துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணைப் பிரிவிற்கும் அதன் சொந்த பேச்சுவழக்கு உள்ளது. டாங்ஸா சமூகத்தின் மக்கள் தொகை சுமார் ஒரு லட்சம் மட்டுமே. எனவே பல்வேறு கிளைமொழிகள் கொண்ட இந்த மொழிக் குடும்பம், அழியும் ஆபத்து அதிகமாகிறது.

"நான் சமூகத்தில் உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு முன்பு தெரியாத ஏராளமான சொற்களையும் ,வாக்கியங்களையும் கண்டுபிடித்தேன்," என்கிறார் மொசாங். "நான் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி இந்த வார்த்தைகளை எழுத விரும்பினேன் ஆனால் சொற்றொடர் இலக்கண வேறுபாடுகளால் அது கடினமாக இருந்தது," என்கிறார் அவர்.

டாங்ஸா சமூகத்தின் அனைத்து பழங்குடியினரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான எழுத்துவடிவத்தை 1990 இல், லக்ஹூம் மொசாங் (வாங்லுங்கிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை) கண்டுபிடித்துள்ளார் என்பதை வாங்லுங் கண்டறிந்தார். லக்ஹும் மொசாங் 2020 இல் இறந்த பிறகு டாங்ஸா மொழியைப் பாதுகாக்கும் பணியை வாங்லுங் மொசாங் ஏற்றுக்கொண்டார்.

பொதுவான டாங்ஸா எழுத்துக்களில் 48 உயிரெழுத்துக்களும், 31 மெய் எழுத்துக்களும் உள்ளன. எழுத்துவடிவம் நான்கு வெவ்வேறு ஒலிவடிவங்களைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு ஒலிவடிவத்திற்கும் அதற்கான ஒரு தனி அர்த்தம் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொசாங் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில், பொதுவான டாங்ஸா மொழியை கற்பிக்க இரண்டு வாரங்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தினார். இது மொழியைப் பாதுகாப்பதற்கான மொசாங்கின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டும்தான்.

"பொதுவான டாங்ஸா எழுத்துவடிவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் 2019 ல் ஒரு ஸ்கிரிப்ட் மேம்பாட்டுக் குழுவை உருவாக்கியுள்ளோம். ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தில் பொதுவான டாங்ஸா ஸ்கிரிப்டை அறிமுகப்படுத்தும் யோசனையுடன் அந்த குழு மாநில அரசை அணுகியது. அவர்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது மிகவும் திருப்தியாக இருந்தது" என்கிறார் மொசாங்.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று, டாங்ஸா ஸ்கிரிப்ட் புத்தகத்தை வெளியிட்டார். அது விரைவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். இப்போது டாங்ஸா எழுத்து முறை, Microsoft Word ஆல் எழுத்துரு பாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், பல இந்திய மொழிகள் இன்னும் ஆபத்தில் உள்ளன.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாநிலத்திலிருந்து அல்லது சமூகத்திலிருந்து, சம்பாதிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லும்போதும், குழந்தைகளுக்கு தாய்மொழி கற்பிக்கப்படாதபோதும் தங்கள் மொழிகளை இழக்கிறார்கள் என்று மொசாங் கூறுகிறார். குழந்தைகள் பள்ளியில் மாநில மொழிகளைக் கற்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை இது வழங்கும் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள், தாய்மொழியை ஒதுக்கிவிட்டு இந்த மொழிகளை ஊக்குவிக்கிறார்கள்.

"மக்கள் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அழகின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. நாம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும் மற்றும் பழங்குடி மொழிகளை நம் மக்களுக்கு கற்பிக்க பட்டறைகளை நடத்த வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை நாம் சொந்தமாக செய்ய முடியாது. நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க, நிதி உதவி மற்றும் அரசின் ஆதரவு தேவை ," என்கிறார் மொசாங்.

ஒடிஷா

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

ஒடிஷா மாநிலத்தில் அழியக்கூடிய அபாயத்தில் உள்ள பல மொழிகள் உள்ளன. அவற்றில் இரண்டு, மொழியியலாளர்களால் கடந்த சில ஆண்டுகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டது

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அழியும் ஆபத்தில் இருக்கும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தலுக்கான திட்டத்தை (SPPEL) 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. எதிர்காலத்தில் அழியும் ஆபத்து இருக்கும் மொழிகள் மற்றும் தற்போது அழிந்துவரும் மொழிகளை ஆவணப்படுத்துவதே இதன் நோக்கம்.

சிக்கிம் பல்கலைக்கழகத்தில் 2016 இல் நிறுவப்பட்ட , அழியும் ஆபத்தில் இருக்கும் மொழிகளுக்கான மையம், இது போன்ற மொழிகளை ஆவணப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை எடுத்துள்ளது.

மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துவதன் மூலம் சிக்கிம், வங்க தேசத்தின் வடமேற்கு பகுதி மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை உள்ளடக்கிய பிராந்தியத்தில், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளை பேணிக்காப்பதை இந்த மையம் ஊக்குவிக்கிறது.

சிக்கிம் - டார்ஜிலிங் - இமயமலை பகுதிகளில் அழியும் விளிம்பில் உள்ள மொழிகள் காப்பகம் (சித்தேலா) என்பது சிக்கிம் பல்கலைக்கழகத்தின், அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளுக்கான மையம் மற்றும் பல்கலைக்கழக மைய நூலகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பிராந்திய காப்பகமாகும்.

சிக்கிம், கிழக்கு இமயமலைப் பகுதியின் மற்ற பகுதிகளைப் போலவே, பல இன கிராமங்கள் மற்றும் பல இன - மொழி அடையாளங்களைக் கொண்ட மக்களால் ஆனது. மாநிலத்தின் மேலாதிக்க கலாச்சாரம் நேபாளி அல்லது கோர்காலி அவர்களுக்கிடையே பொதுவான பண்டிகைகள் மற்றும் உணவு வகைகள் உள்ளன. பொதுவாக அனைவரும் பேசும் மொழி நேபாளி. அதே நேரம் இந்தி மற்றும் ஆங்கில மொழியின் பரவலில் நவீன பள்ளிகள் மற்றும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2017 ஆம் ஆண்டில், சிதேலாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக ராய் - ரோக்டங் சமூகத்தை கண்டுபிடித்தனர். அவர்களுடைய பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் அவர்களுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார். ரோக்டங் என்பது ராய் சமூகத்தில் உள்ள பந்தவா குலத்தின் பச்சா பிரிவுகளில் ஒன்றாகும். ரோக்டங் குலம் பெரும்பாலும் கிழக்கு சிக்கிமில் அமைந்துள்ளது. பந்தவாவை சாராத ஒரு தனி மொழியை தாங்கள் பயன்படுத்துவதாக, சமூகத்தின் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இப்பகுதியின் மொழியியல் வரலாற்றில் இந்த மொழி பற்றி முன்னர் குறிப்பிடப்படவில்லை.

அப்போதிலிருந்து வெறும் 200 பேர் மட்டுமே கொண்ட இந்த சமூகம் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

ராய் ரோக்டங் சமூகத்தின் மொழியை ஆவணப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்த சிதேலாவின் மொழியியலாளர் ஹிமா கிடியென், பெரும்பாலான ரோக்டங் சமூக உறுப்பினர்கள் ராய் குழுக்களின் உறுப்பினர்களாக எப்படி அடையாளம் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். சிலர் நேபாளி என்று தங்களை கூறிக்கொள்கின்றனர். ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே தங்களை ரோக்டங் யுபாச்சாவின் ஒரு பகுதியாக அல்லது யாகுவாக அடையாளம் காண தேர்வு செய்கிறார்கள்.

"ராய் - ரோக்டங் மொழி பேசக்கூடிய 20 பேரை மட்டுமே நாங்கள் கண்டோம்," என்கிறார் கிடியென். பள்ளியில் ஒரு மொழி கற்பிக்கப்படாவிட்டால், அந்த மொழியைப் பயன்படுத்த எந்த வழியும் இல்லை. எனவே மக்கள், பெரும்பான்மையினரின் மொழியை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் ஒருங்கிணைய முயல்கின்றனர். அதன் காரணமாக மக்கள் மற்ற மொழிகளுக்கு மாறத் தொடங்கியதால் ராய் - ரோக்டங் மொழி பாதிக்கப்பட்டது.

டாங்ஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லக்ஹூம் மொசாங் 1990 இல் டாங்ஸா பழங்குடியினர் தங்கள் மொழிகளைப் பதிவு செய்ய பயன்படுத்தக்கூடிய ஒரு எழுத்துவடிவத்தை கண்டுபிடித்தார்

"பள்ளிகள் மற்றும் பிற தளங்களைப்போலவே ஊடகங்களும், மாநிலத்தில் பெரும்பான்மையினர் பேசும் பிற மொழிகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கின்றன. மேலும் மக்கள் வீட்டிலும் அந்த மொழிகளைப் பேசத் தொடங்கினர். அப்போதுதான் மொழி அழிந்து போகிறது, ஏனென்றால் மக்கள் பேச்சுவழக்கு மொழியை மறந்துவிடுகிறார்கள். அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து வருவதில்லை,"என்கிறார் கிடியென்.

சிக்கிமில், பல்வேறு இன-மொழியியல் குழுக்கள் "நேபாளி" என்ற ஒன்றிணைந்த கலாச்சார அடையாளமாக ஒருங்கிணைக்கப்படும் காரணமாக சிறிய மொழிகள் மறக்கப்படுகின்றன.

"மொழிகள் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு செல்வதற்கு ஒரு பெரிய காரணம், ஒரு சமூகம் தங்கள் சொந்த அடையாளம் மற்றும் மொழியின் மீது கொண்டுள்ள பெருமையே ஆகும். எனவே ஒரு மொழி, வெளி உலகில் ஒரு சமூகத்திற்குப் பயனற்றதாக மாறும் போது, அதிகம் அறியப்படாத மொழியின் பேச்சாளராக அவர்கள் தங்களை அடையாளம் காண விரும்பவில்லை," என்று கிடியென் குறிப்பிடுகிறார்.

இது வேலை செய்ய வேண்டிய அவசியம் போன்ற சமூக காரணிகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. "ஒரு சிறிய மொழிக் குழுவின் பேச்சாளர் தங்கள் சொந்த மொழியை மட்டுமே பேசினால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை," என்கிறார் கிடியென்.

பெரியவர்கள் தங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகளுடன் பேசும்போது மட்டுமே ரோக்டங் மொழியை பயன்படுத்துவது, ராய் - ரோக்டங் சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. வீட்டின் குழந்தைகள் ரோக்டங் மொழியை பேசுவதில்லை. பெரும்பாலும் அவர்களிடம் நேபாளி மொழி பேசப்படுகிறது. "வீடு மற்றும் சமய இடங்கள் தவிர, ரோக்டங் இன்று வேறு எந்த இடத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை," என்கிறார் கிடியென்.

ஆனால் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டதாக கிடியென் என்னிடம் கூறினார். ரோக்டங் மொழியைப் பேசுபவர்கள் வாரந்தோறும் ஒன்றாகக்கூடி மொழிக்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பதை 2020 ஜனவரியில் தங்களின் களப்பயணத்தின் போது, கவனித்ததாக அவர் குறிப்பிட்டார். பெரும்பாலும் தாத்தா பாட்டிகளான பழைய தலைமுறையினர், பெரும்பாலும் பெற்றோரான இளைய தலைமுறையினருக்கு மொழியைக் கற்றுக்கொடுக்க முயல்கின்றனர். இந்த ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றை பேசும்போது பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

"மொழியை ஆவணப்படுத்தும் எங்கள் பணியின் மூலம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்கிறார் கிடியென்.

https://www.bbc.com/tamil/india-58948039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.