Jump to content

மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி

mohideen.jpg?resize=725%2C1024&ssl=1

 

”சும்மா சாப்பிடுங்க”

பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான்.

வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டையும் அவரே வாங்கித் தந்துவிடுவார். ஆக எனக்கான மதியச் சாப்பாட்டுக்கு அந்த ஐம்பது ரூபாய். அதிகம்தான். ஒரு சைவப் பார்சல் இருபத்தைந்து ரூபாய். முட்டை, மீன், பீஃப் சாப்பாடு முப்பது ரூபாய்தான். எந்தக் கடையிலும் வவுனியாவின் சாப்பாட்டுப் பார்சல்கள் மூன்று பேருக்குப் போதுமானதாக இருக்கும். அது என்னவோ அப்போது அப்படித்தான். ஐம்பது ரூபாய்க்கு அருமையான சிக்கன் பிரியாணி கிடைக்கும்.

ஒரு நாளைக்கு இருபது ரூபாய் சேமிக்க முடியும். மாத முடிவில் ஒரு டி ஷேர்ட் வாங்கலாம். அப்படித்தான் வாங்க வேண்டும் என்றில்லை. பஸார் வீதி, ஹொரவப்பொத்தான சந்திப்பின் அருகே இருந்த சஹானாஸில் எப்போது வேண்டுமானாலும் போய் வாங்கிக் கொள்ளலாம். பிறகு அப்பா பணம் கொடுத்துவிடுவார். இலவசமாக அட்வைசும் கிடைக்கும். ஒருமுறை முதலாளி, ”அப்பா கேட்டதெல்லாம் வாங்கித்தாறார். ஒழுங்கா படிக்கோணும் என்ன. இந்தா இவரு நல்லாத்தான் படிச்சுட்டிருந்தாரு. பயோ படிச்சாரு. இடையில ஒரு குட்டியப்பாத்துட்டாரு. அவ்ளோதான்” தன் தம்பியை அறிமுகப்படுத்தினார். குட்டியப் பார்த்த அந்த அண்ணனும் பெருமையாகச் சிரித்தபடி ஆமோதித்தார்.

காலைச்சாப்பாட்டுக்கு இடியப்பம் சாப்பிட வேண்டுமானால் பிரின்ஸ்ஸுக்குப் போகவேண்டும். நல்ல ஜுஸுடன் ரோல்ஸ் சாப்பிட ஏசியன் கூல்பார். இந்தப்பக்கம் மன்னார் வீதியில் நெக்ரா கூல்பார். கரப்பன் காட்டுச்சந்தியில் இருந்த கடையில் இரவு பாலப்பம் நல்லாயிருக்கும். இப்படியாகச் சில புள்ளிவிவரங்கள் என்னிடமிருந்தன. சோறு சாப்பிட கடை செட்டாகவில்லை. அந்த வெய்யிலுக்கு சாப்பிட மனமுமில்லை. எத்தனை கடைகளில் விதவிதமாகச் சாப்பிட்டாலும் தினசரி சாப்பிடுவதற்கென்றே ஒரு கடையைத் தேர்ந்துகொள்வது ஏனெனப் புரியவில்லை. அடிப்படையில் வீடு போல ஒன்றை மனம் எதிர்பார்த்துதான் காரணமாக இருக்கவேண்டும். அப்படியாகச் சில கடைகளை முயன்று இறுதியில் மொஹிதீன் ஹோட்டலை கண்டடைந்திருந்தேன்.

குருமன்காட்டு காளிகோயில் சந்திக்கு அருகில் ஒரு மில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புறத்தில் ஏற்கனவே இரண்டு அசைவக் கடைகள் இருந்தாலும் மொஹிதீன் பலரையும் ஈர்த்தது. புதுப் பளபளப்புடன் சுத்தமாக இருந்தது. இருந்து சாப்பிடப் போதுமான இடவசதியிருந்தது. வழக்கமான சாப்பிடும் பகுதியைத் தவிர உள்கட்டு இருந்தது. அது குடும்பத்துடன் வருபவர்களுக்காக என்று உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஹோட்டலில் வேலை செய்பவர்களும் இடநெருக்கடியான சமயத்தில் வாடிக்கையாளரும் பயன்படுத்தும் பகுதி அது.

அம்பிளிஃபயர் செட் உதவியுடன், ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்’ என உன்னி கிருஷ்ணன் உருகிக்கொண்டிருந்த அந்த மாலை நேரத்தில், ரஹீம் பாய்தான் முதன்முதல் வந்து ‘’வாங்க தம்பி என்ன சாப்பிடுறீங்க?’’ என்றார். முதலாளி நானாவின் தம்பி. முதலாளிக்கு என்ன பெயர் என்பது தெரியாது. அந்தக் கடையிலுள்ள எல்லோருக்கும் போலவே எனக்கும் நானா தான். அஜித் ஸ்டைலில் ஒற்றை ஒற்றை முடியாக மீசை வைத்துக்கொண்டிருந்த காந்தன் அண்ணையும், ரஹீம் பாயும், மாமாவும்தான் பிரதான பரிமாரகர்கள். அதுவும் மாமா அவ்வப்போதுதான் களத்தில் நிற்பார். கூட்டம் அதிகமானால் நானா களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுற்றுவார். சற்று ஏறிய முன் நெற்றி, அடத்தியான  குறுந்தாடி, ஒடிசலாக உயரமாக இருப்பார். கணீர்க் குரல். அதிகம் பேசமாட்டார். சிரிப்பதும் குறைவுதான். ஆனால் சிரிக்கும் சினேகபுர்வமான கண்கள். எப்போதும் முக மலர்ச்சியுடன் பளிச்சென்றிருப்பார்.

ரஹீம் பாய்தான், காந்தன் அண்ணை, மாமா மூன்றுபேரும் எப்போதும் பேச்சும் கிண்டலும் சிரிப்புமாயிருப்பார்கள். நடுத்தர வயதான மாமா என்று அழைக்கப்பட்ட அன்வர் பாய்தான் அங்கே டீ மாஸ்டர். இப்போது நினைத்தால் ஒரு ஆச்சரியம், அது எப்படி நான் பார்த்த எல்லா முஸ்லீம் ஹோட்டல்களிலும் மாமாதான் டீ போடுகிறார். அன்வர் மாமாவைப் பக்கவாட்டில் பார்க்கும்போது தும்பிக்கை இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் பிள்ளையார் மாதிரியே தோன்றுவார். சற்றே குள்ளம். அவர் அணிந்திருக்கும் சாரத்தைக் காற்சட்டை போலவே மாட்டிக் கொள்வாரோ என நினைக்கும் அளவுக்குப் பிடித்துக்கட்ட அவசியமில்லாத சுற்றளவுடன் இருந்தார். நடக்கும்போது ஆடி அசைந்து தேர் வருவது போலிருந்தாலும் வேலையில் வேகமானவர். மேசை அருகே வந்து ஓங்கி வைப்பதுபோலப் பாவனை செய்து, ”ஸ்ட்ரோங் டீ” என்று சொல்லி கண்கள் கீற்றாக இடுங்க குழந்தைத்தனமாகச் சிரிப்பார். தேயிலைச் சாயம் கூட்டி தயாரிக்கும் ஸ்ட்ரோங் டீயை அன்வர் மாமாதான் எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தார்.

கோழி இறைச்சி சேர்த்த ரோல், கிழங்குரொட்டி சூடாகக் கிடைக்கும். அப்போதுதான் புதிதாக அறிமுகமான முட்டை ரோல் என்ற புதிய ஐட்டமும் கிடைத்தது. ரோலைவிடப் பெரியதாக இருக்கும். உள்ளே கறியுடன் ஒரு முழுமுட்டை இரண்டு பாதியாக வெட்டிவைக்கப்பட்டிருக்கும். பின்னாளில் அதன்பெயர் மிதிவெடியானது. யுத்தபூமியான யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ அந்தப் பெயர் சூட்டப் பட்டிருக்கவேண்டும். குடிக்கப் பெப்ஸிதான். மாமா பரிமாறினால், ”பெப்ஸி எதுக்கு தம்பி நான் உங்களுக்கு ஸ்பெஷல் டீ போட்டுத்தாறேன்” என்பார். 

என்னிடம் இப்போதும் ஒரு பழக்கமிருக்கிறது. சாப்பாட்டுகடையில் போய் உட்கார்ந்த உடனே என் வொலட்டைத் திறந்து பணம் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்வது. இருக்கிறதென்பது தெரிந்தும் அவ்வப்போது மறதியாகவோ அல்லது ஞாபகமாகவோ செய்துகொள்வதுண்டு. இந்தப் பழக்கமும் மொஹிதீன் ஹோட்டல்தான் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு மதியம் பள்ளிவிட்டு வந்து சாப்பிட்டு முடிந்ததும் வொலட்டை எடுக்கும்போதுதான் கவனித்தேன். இல்லை. பெரிய தவறு செய்துவிட்டவன்போல என்முகம் மாறியிருக்கவேண்டும். இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொள்வேன் என நினைக்கவேயில்லை. என்ன செய்வது? படங்களில் தோசைக்கு அரைக்கவிடும் காட்சிகள் நினைவுக்கு வர, இங்கே வடை சுடுவதில்லையே என்ற யோசனைவேறு வந்தது.

ரஹீம் பாய்தான் அருகில் வந்தார். “காச காணேல்ல. போய் எடுத்துக்கொண்டு வாறன்” என்றவன் என்ன சொல்கிறேனென்று அறியாமலே, “இது இங்க இருக்கட்டும்”. விவசாயப் பாடப் பரீட்சைக்காகச் செய்த ஒப்படை அது. பெரிய ரெஜிஃபோம் தகட்டில் சின்னப் போத்தல்களில் தாவர விதைகளைச் சேகரித்து லேபிள் ஒட்டி அழகாக உருவாக்கியது. அவர் அதனைக் கண்டுகொள்ளாமலே சிரித்துக்கொண்டு, “அதுக்கென்ன பிரச்சினயில்ல. இதைக் கொண்டு போங்க” என்றார்.

என் உள்ளத்தின் அவசரம் வெளியே தெரிந்திருக்கவேண்டும். எஸ்பிபி வேறு அவசரமாக ‘பாரதிக்கு கண்ணம்மா’ பாடிக்கொண்டிருந்தார். கல்லாவைக் கடக்கும்போது எதையும் கவனிக்காதவர் போலிருந்த நானா, “இப்ப ஒண்டும் அவசரமில்ல. நீங்கள் பிறகு ஆறுதலா வாங்க ” என்றார். நானா முதல்தடவையாகப் பேசினார்.

அன்று மாலை. நான் ஒன்றும் இதற்காக வரவில்லை என்பதுபோல பெப்ஸி குடித்துவிட்டுப் பணத்தைக் கொடுத்தேன். “நான் சொன்னந்தானே ஆறுதலா வரச்சொல்லி” என்றார் நானா. பின்பு, “உங்களிட்ட காசில்லாட்டிக்கும் யோசிக்காம வந்து இங்க சாப்பிடலாம்” என்றார் புன்னகையுடன். நான் அவர்களுக்கு நன்கு பரிச்சயமானவனாக மாறிப்போனேன்.

அப்போதுதான் பெப்ஸி படி புதிதாக வந்திருந்தது. இருநூற்றைம்பது மில்லி லீற்றர். விலை பத்துரூபாய். அது சோடா மீதான என் ஆசை தணிந்திருந்த காலம்தான். சின்னவயதில் எப்போதோ குடித்த சோடாவின் நினைவோடுதான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம். யாராவது கொழும்பு சென்று திரும்பினால் மறக்காமல் சந்திரிக்கா பை ஒன்று வாங்கி வருவார்கள். பெரிய சைசில் சாக்குத் துணியில் பெட்டி வடிவத்தில் தைத்த பையின் மேல் பகுதியில் காதுக்குப் பதிலாக இரண்டு மரத்தடிகளை நுழைத்துப் பிடியாகக் கொண்ட பை. நல்ல பாரம் கொள்ளும். சந்திரிக்காவின் சமாதானப் பேச்சுக் காலத்தில் கொழும்பு போக்குவரத்து அதிகமான காலத்தில் அறிமுகமானதால் சந்திரிக்கா பை என யாழ் மக்கள் பெயர் வைத்திருந்தார்கள். அந்தப் பைக்குள் அப்பிள் பழங்களோடு இரண்டு ஒன்றரை லீட்டர் பிளாஸ்ட்டிக் சோடாப் போத்தல்கள். மெரிண்டாவும் பெப்ஸியும். பெரிதாக நாற்பத்து மூன்று ரூபாய் விலையும் அச்சிடப்பட்டிருக்கும். ஒரு பயணிக்கு இது மிக அவசியமானது. இல்லாவிட்டால் கொழும்பிலிருந்துதான் வருகிறார் என்று நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். கொக்ககோலா தயாரிப்புகள் எல்லாம் ஒரு லீற்றர் முப்பது ரூபாய்க்கு கண்ணாடிப் போத்தலில் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் யாழ்ப்பாணம் வருவதில்லை. முதன்முறையாகத் தாண்டிக்குளம் செக் பொயிண்டில் ஆமிக்காரனையும் பார்த்துக்கொண்டு கடந்துவந்து செய்த முதற்காரியம் சோடா குடித்ததுதான். சில வருடத் தாகம் அது. அநேகமாக எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. வீதியோரம் ஃபான்ராவும், யானைச் சோடாவும் ஏராளமாக விற்றுத் தீர்ந்தன.

என்னதான் வவுனியா வந்த இருவருடங்களில் என் சோடா தாகம் தணிந்து போனாலும் பெப்ஸி படியைக் கண்டதும் மீண்டும் ஆர்வமாய்ப் பருகத்  தொடங்கியிருந்தேன். அதுமட்டும் மிகுந்த சுவையாய் இருந்ததாய் ஒரு பிரமை. இப்போது குடிக்கும் பெப்ஸியை விடவும் இனிப்பு மிகுந்த சுவை. ஒருகட்டத்தில் பெப்ஸி வெறியனாகவே மாறிப்போனேன். பள்ளி விடுமுறை நாட்கள். வவுனியாவின் கோடை வெயிலுக்கு பெப்ஸி அருமருந்தாய் இருந்தது. ஐம்பது ரூபாய் மதியக் கோட்டாவில் சாப்பிடாமல் இடைவெளி விட்டு ஐந்து பெப்ஸி குடித்து விடுவதுதான் உகந்த உணவு முறை என நம்புவதுபோல மாறியிருந்தேன்.

இடையிடையே அடித்துப் பெய்யும் மழை. வவுனியாவின் மழை பேய்மழையாக இருக்கும். சைக்கிளில் பெரிய குடையைப் பிடித்துக்கொண்டு பயணித்தாலும் பக்கவாட்டில் சாரலடித்துத் தெப்பலாக முழுவதும் நனைத்துவிடும். குடையைச் சுருக்கி வைத்துக்கொண்டு நனைந்துகொண்டே சைக்கிளில் செல்வது மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். நனைந்து சொட்டச் சொட்ட மெல்லிய வெப்பம் தகிக்கும் உடம்போடு நேராக ஃபிரிட்ஜைத் திறந்து பெப்ஸி ஒன்றை எடுத்துத் திறந்து வாய்வைத்துக் குடிக்கும்போது சிலீரென்று பானம் தொண்டையிலிறங்கும் அந்தக் கணத்தில் ஒரு சாகசக் காரனைப்போல உணர்ந்துகொள்வேன். மழையில் பெப்ஸி என்பது, சினிமா ஹீரோயின்களுக்கு மழையில் ஐஸ்கிறீம் குடிக்கப் பிடிக்கும் என்ற தகவலை அறியும் முன்னரே பரிச்சயமாயிருந்தது. இந்த மழைச் சாகசத்தை நிகழ்த்தும்போதெல்லாம் நானா என்னைக் கவனித்துக் கொண்டிருப்பார். வேலைசெய்யும் அண்ணன்களுக்கும் தெரிந்திருந்தது. கொஞ்சம் பெருமையாகவுமிருந்தது.

மௌனமாய்ப் கவனித்துக்கொண்டிருக்கும் நானா ஒருநாள் கேட்டார், ”தம்பி சோறு சாப்பிடுறேல்லையோ?”. எதுவும் பதில் சொல்லாமல் சிரித்து வைத்தேன். இரண்டாம் முறை கேட்டபோது, ”வெக்கைதானே பசிக்கேல்ல”. கல்லாவில் பணம் கொடுக்கும்போது நானா ”தம்பி சாப்பிடாம பெப்ஸி கண்டபடி குடிக்காதீங்க . அல்சர் வந்திடும். நானும் உப்பிடித்தான் குடிச்சு இப்ப அல்சர் இருக்கு” என்றார் மெதுவான குரலில். தலையசைத்தேன்.

ஹோட்டலில் நண்பர்களோடு போய் அமர்ந்து சாப்பிட்டதுண்டு. சிற்றுண்டிகள் பிரச்சினையில்லை. தனியாகச் சோறு சாப்பிட்ட அனுபவம் இல்லை. சற்றுத் தயக்கமாக ஒவ்வாமையைக் கொடுத்தது. பின்பொரு முறை கடையில் ஆட்கள் இருக்கவில்லை. நான் பெப்ஸி குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து நானா டென்ஷனாகி இருக்க வேண்டும், உள்ளே பார்த்து உரத்த குரலில்,”இங்க யாரும் இவருக்கு இனி பெப்ஸி குடுக்கவேணாம்” என்றார். நாங்கள் குடுக்கிறேல்ல.அவராத்தான் எடுத்துக் குடிக்கிறார்” காந்தன் அண்ணை. நானா என்னை அமைதியாகப் பார்த்தார். ”இனி சோடா வேணாம். சாப்பிடுங்க”

முதல்நாள் மதியம் நான் சோறு சாப்பிடுவதை பார்த்து, அடுத்தநாளே என்னை உள்கட்டுக்கு வந்தமர்ந்து சாப்பிடச் சொன்னார்கள். வெளியில் நான் இருந்து சாப்பிடக் கூச்சப்படுகிறேன் என்று சொன்னார் ரஹீம்பாய். உண்மையில் உள்ளே நான் மட்டும் அமர்ந்து சாப்பிடுவது நன்றாகத்தான் இருந்தது. நானா உள்ளே வந்து பார்த்து, “அப்பா வந்து சொன்னவர் பெடியன வடிவாக் கவனிக்கச் சொல்லி. வடிவாச் சாப்பிடுங்க” என்றார். நானா இதைச் சிரித்துக்கொண்டே அடிக்கடி சொல்வார். அப்பா அப்படியெல்லாம் அதிகம் பேசக்கூடியவரல்லவே. சொல்லியிருக்க வாய்ப்பில்லையே என்று நினைத்துக்கொள்வேன். “தம்பிய வடிவாக் கவனியுங்கோ” மற்றவர்களிடமும் சொல்வார்.

“சும்மா சாப்பிடுங்க” முட்டை சாப்பாட்டோடு இருந்த என்தட்டில் என்று ஒரு மீன் துண்டை வைத்துவிட்டுச் சென்றார் ரஹீம்பாய். இந்த சும்மா சாப்பிடுங்கவின் தொனியை என்னால் சரியாகக் கொண்டுவர முடியவில்லை. பல பொருளோடு இருந்தது. கூச்சப்படாமல், போனாப் போகுது, காசு தரவேண்டாம், இது நான் என்கணக்கில் தருகிறேன், பயப்பட வேண்டாம், யோசிக்கவேண்டாம் இதெல்லாமே கலந்தது போன்ற தொனி. அதற்குக் காசு எடுப்பதாக இல்லை. அங்கே டிப்ஸ் வைக்கும் பழக்கம் அப்போதிருக்கவில்லை. நான் சங்கடமாக உணர்ந்தேன். ரஹீம்பாய் மட்டுமல்ல, மாமா, காந்தன் அண்ணையும்கூட அப்படித்தான் நடந்துகொள்வார்கள். மூவருமே ஒரே தொனியில் ‘சும்மா சாப்பிடுங்க’ என்பார்கள். எனக்கு இது மிகுந்த தர்மசங்கடத்தைக் கொடுத்தது. பெரிய தவறு செய்துகொண்டிருக்கிறேன் என நம்பினேன். என்ன இருந்தாலும் நானாவுக்குத் தெரியாமல்தான் இப்படிச் செய்கிறார்கள். இரு திருட்டுத்தனம் இல்லையா? நான் உள்ளே சென்று சாப்பிடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. நானாவும் உள்ளே போகச் சொல்வார்.

அநேகமாக நான் சாப்பிடும் நேரத்தில்தான் மாமாவும் ஆளுக்குச் சம்பந்தமேயில்லாமல் சிறிய தட்டொன்றுடன் சாப்பிட உட்காருவார். அவருக்குப் பரிமாற வருபவரிடம் தம்பிக்கும் பார்த்து பரிமாறச் சொல்வார். ஒருமுறை நானும் மாமாவும் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் நானா வந்து பார்த்தார். உள்ளதிலேயே பெரியதாகப் பார்த்துப் பொறுக்கியதுபோல ஒரு பொரித்த கொழிக்காலொன்றை என் தட்டில் வைத்துச் சென்றார். மாமா என்னை கண்களாலேயே எப்படி என்பதுபோலப் பார்த்து புன்னகையுடன் ஒரு ச்சு கொட்டித் தலையசைத்தார். வெளியில் வந்து கல்லாவில் பணம்கொடுக்கும்போது, ”ஒரு கோழிக்கால்.. ” என்று நான் தொடங்கும்போதே, ”ஆ அதெல்லாம் சரி” என்று தலையசைத்து ”ஒழுங்கா சாப்பிடுங்க.. நேற்று வரல்லப்போல?” என்று பேச்சை மாற்றிவிட்டார். 

சுடச்சுடப் பரோட்டாவைப் பிய்த்துத் துண்டுகளாக்கி, சூடான பாலாணம் என்கிற மீன் சொதியை ஊற்றி பாதி ஊறிய துண்டுகளை எடுத்துச் சாப்பிட மாமா கற்றுக்கொடுத்தார். அதுபோல ஒரு சுவை வேறெங்கும் கிடைத்ததில்லை. நான் ஒழுங்காக மதியம் சாப்பிட்டு, அதுவும் அவர்களது விசேட கவனிப்பில் ஒட்டியிருந்த கன்னத்தில், உடலில் சற்றுச் சதை போட்டிருந்தது. நானா ஒருமுறை மகிழ்ச்சியாக, ”பாத்தீங்களா தம்பி பெப்ஸியை விட்டதில இப்ப கொஞ்சம் தெளிஞ்சிட்டார்” 

பின்பு நானாவும் பலமுறை என்னுடன் அமர்ந்து சாப்பிட்டதுண்டு. ஆச்சரியகரமாக அங்கே பீஃப் சமைப்பதில்லை. நானாவிடம் கேட்டபோது ‘’அது என்னமோ நாங்க முந்திலயிருந்தே கடைல பீஃப் ஆக்கிறதில்லை’’ என்றார். அந்த முறை முதலில் நோன்பு திறக்கும்போது காலையில் வரச்சொல்லி நோன்புக் கஞ்சி முதன்முறையாக அருந்தினேன். பெருநாள் பிரியாணியை ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டோம்.

ஒருமுறை நான் சாப்பிடும்போது எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் நானா. இடையில் அவசரமாக எழுந்துபோய் அப்போது சமைத்து முடித்திருந்த ஆட்டிறைச்சிப் பொரியலை ஒரு கிண்ணத்தில் கொண்டுவந்து தட்டில் வைத்தார். எனைப்பற்றிக் கேட்டார். அப்போது அந்தக் கணத்தில் பொரியலின் சுவையா, கொழுப்புப் பொரிந்த வாசனையா எதுவெனத் தெரியாத ஏதோ ஒன்று உள்ளே ஓர் இழையை அறுத்து இறுக்கம் தளர்த்த நான் என் இடது புஜத்தில் முகம் துடைக்க, நானா ”அந்த ஃ பானைப் போடுங்க தம்பிக்கு வேர்க்குது” என்று உரத்துச் சொல்லியவாறு எழுந்து போனார்.

நண்பன் மௌனமாயிருந்தான். பிறகு நீ வவுனியா போகவில்லையா? என்றேன்.

திரும்ப வவுனியா போக ஆறு வருஷமாகிவிட்டது. அந்த இடத்தில் ஹோட்டல் இருக்கவில்லை. யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு முதல் நாள் மாலை. ஹொட்டலுக்குச் சென்று எல்லோரிடமும் விடைபெற்றேன். மாமா வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். நானா, “நல்லபடியா போயிற்று வாங்க. கண்டபடி வெளில சும்மா திரியாம கவனமா இருங்க. ஒழுங்கா படிங்க, சாப்பிடுங்க. நாங்களும் ஒருக்கா வரோணும்”

திடீரென்று அப்போதுதான் தோன்றியது “நீங்க யாழ்ப்பாணமா?”

“ஓம் நாங்களும் யாழ்ப்பாணம்தான்” சிரித்தார்.

இவ்வளவு நாளாய்க் கேட்கத் தோன்றவில்லையே. யாழ் டவுனாக இருக்கலாம். அல்லது நாவாந்துறை, கொட்டடியாக இருக்குமோ. நான் கேள்விப்பட்ட இடங்கள் யோசித்து, “ஆ எங்க?”

“நாங்கள் கோண்டாவில்ல இருந்தம்”

மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. நானாவும் அமைதியானார். சில நொடிகளில் நானா புன்னகையுடன் சொன்னார்.

”பாப்பம் வர முடிஞ்சா சந்திப்பம். இன்ஷா அல்லாஹ்!”

 

உமாஜி 

 

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

 

https://akazhonline.com/?p=3686

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.