Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொப்பிகல கொண்டாட்டங்களால் குழம்பிப் போன தமிழ் அரசியல்வாதிகள் -(அஜாதசத்ரு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகல கொண்டாட்டங்களால் குழம்பிப் போன தமிழ் அரசியல்வாதிகள் -(அஜாதசத்ரு)

[22 - July - 2007]

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தொப்பிகலயை அரச படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான நிகழ்வை `கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்தி ஒரு தேசிய விழாவாக கொண்டாடி உளமகிழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் `கிழக்கின் உதயம்' விழா' மிகப் பிரமாண்டமான தேசிய விழாவாக அதாவது சுதந்திர தின வைபவம் போன்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பீரங்கி வேட்டுகள் என்பவற்றுக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தொப்பிகல வெற்றி தொடர்பான விசேட உரையொன்றையாற்றியதுடன் முப்படைத் தளபதிகளினாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தொப்பிகல வெற்றியின் `கிழக்கின் உதயம்' தேசிய நிகழ்வை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டு கொண்டாடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள அதேநேரம், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு தென்னிலங்கையில் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றிக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி ஆகிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் `கிழக்கின் உதயம்' விழாவை பகிஷ்கரித்திருந்தன.

இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுமே பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

அதேநேரம், இந்த நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் என்ற வகையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல், மலையக மக்கள் முன்னணியின் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் அண்மைக் காலமாக அதிருப்தியுற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வீ. புத்திரசிகாமணி ஆகிய மூவருமே தொப்பிகல வெற்றியைக் கொண்டாடிய தமிழர் பிரதிநிதிகளாவர்.

ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நிகழ்வுக்கு முதல்நாளே நுவரெலியாவுக்குச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்தார்.

அதேநேரம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலான ஏனைய பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எம்.எஸ். செல்லச்சாமி, எஸ். ஜெகதீஸ்வரன், எம். சச்சிதானந்தன் உட்பட ஏனைய பிரதிநிதிகள் நாட்டில் இருந்த போதிலும் இந்நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டுள்ளனர். அதிருப்தியாளரான புத்திரசிகாமணி மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

`கிழக்கின் உதயம்' விழா இராணுவத்தினரை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வாகும். ஆனால், கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே எமது ஆதங்கம். அதேநேரம், இதெல்லாவற்றையும் விட நாட்டின் முக்கிய பிரச்சினையான இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு நாட்டில் சமாதானம் உருவாக்கப்பட்டு வடக்கு, கிழக்கிலுள்ள மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எமது ஒரே குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இந்நிகழ்வு தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாடு சென்றுள்ளமையால் இந்நிகழ்வில் பங்கேற்காத போதிலும் தொப்பிகல மீட்பை வரவேற்றுள்ளதுடன் இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான நிகழ்வு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளதால் இந்நிகழ்வில் கலந்து கொள்வதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

`கிழக்கின் உதயம்' வெற்றிக் களிப்பு நிகழ்வானது இனங்களுக்கிடையே கசப்புணர்வுகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கே வழிவகுக்கும். எனவே, இதனை தவிர்த்திருக்க வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணி ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும் அக்கட்சியின் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கின் உதயம் நிகழ்வில் கலந்து கொண்ட போதிலும், போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு துன்பப்படும் எமது தமிழ்ச் சகோதரர்களுக்கு விமோசனம் கிடைக்கும் போதே சந்தோஷமடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கதோர் விடயமாகும்.

ஆனால், இதெல்லாவற்றிற்குமப்பால் `கிழக்கின் உதயம்' நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கியுள்ளார்.

தொப்பிகல படை நடவடிக்கையில் பங்கேற்ற ஒரு இராணுவ வீரருக்கு இல்லாத வெற்றிக் களிப்புடன் செயற்பட்ட அமைச்சர் அதாவுல்லா, கிழக்கின் உதயம் வெற்றிக்கு ஜனாதிபதிக்கு நான் பொன்னாடை போர்த்தினால் தமிழர்களுக்கு ஏன் வலிக்கிறது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை- இந்திய உடன்படிக்கையூடாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து கிழக்கை தனியாக பிரிக்க வேண்டுமென்ற அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆரம்பம் முதலே தீவிரமாக செயற்பட்டு வருபவர் அமைச்சர் அதாவுல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் செயற்பாடுகள் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கடந்த காலங்களில் இடம்பெற்ற இன ரீதியான மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளதாகவே தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பல தடவைகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணம் சட்டத்தைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தனித்தனியாக பிரிக்கப்பட்ட போது மிகவும் சந்தோஷமடைந்தவர்களில் தானும் ஒருவர் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் அமைச்சர் அதாவுல்லா, பூர்வீக காலமாக தொடரும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்தை இல்லாதொழிப்பதன் மூலம் கிழக்கை ஆக்கிரமித்து வரும் சிங்களப் பேரினவாதப் போக்கை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றார்?

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமாகவிருந்த திருகோணமலை மாவட்டம் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அரச நிர்வாக நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் சிங்களக் கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் என்பவற்றால் தமிழர்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் முஸ்லிம்களையும் இல்லாதொழிக்கவே செய்யப் போகின்றது என்பதை தற்போது நேரடியாகவே உணரக் கூடியதாகவுள்ளது.

இதெல்லாவற்றுக்குமப்பால் அண்மைக் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளையும் அபகரிக்கும் திட்டங்கள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொத்துவில், பாணம போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் அரச உயர்மட்டத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை விட தீகவாபி புனித பூமி திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் மீட்கப்படாத நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் சிக்குண்டு கிடக்கிறது. இதற்கெல்லாம் அமைச்சர் அதாவுல்லா என்ன பதில் சொல்லப் போகிறார்?

சுயநல அரசியலுக்காக தமிழ், முஸ்லிம் மக்களின் நீண்டகால உறவை சீரழிக்கும் நடவடிக்கைகளை எல்லா அரசியல்வாதிகளும் தவிர்த்துக் கொள்வதன் மூலமே எமது சொந்த மண்ணை சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் அபகரிக்கப்போகும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

`கிழக்கின் உதயம்' வெற்றிப் பிரகடனம் ஊடாக கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அங்குள்ள அகதி முகாம்களில் வசிக்கும் மக்களும், இடம்பெயர்ந்து மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் அச்சம், வறுமை போன்ற பாரிய இன்னல்களை எதிர்கொண்டவர்களாகவே இன்னமும் உள்ளனர்.

இடம்பெயர்ந்து படுவான்கரைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் உள்ளக இடப்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். அச்சம் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையே மீண்டும் தோன்றியுள்ளது.

போர் நடவடிக்கைகள் காரணமாக இருப்பிடம், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் உரிய நிவாரண வசதிகள் எதுவுமின்றி உணவுக்காக கையேந்த வேண்டிய நிலைக்கு பாதிக்கப்பட்ட கிழக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொண்டாடப்பட்ட `கிழக்கின் உதயம்' வெற்றி விழா படையினரை உற்சாகப்படுத்தவும் தென்னிலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடியான அரசியல் நிலைவரங்களை திசை திருப்பவும் நாளுக்குநாள் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்ற சீற்றத்திலிருந்து சிங்கள மக்களின் மனங்களை மாற்றவும் உத்தியாக கொள்ளப்பட்டாலும் கிழக்கில் போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை துயரங்கள் நிறைந்த இருளுக்குள்ளேயே இன்னமும் சிக்குண்டு கிடக்கிறது.

நன்றி - தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குழம்பிப்போனார்களோ என்று யோசித்தேன்.. இது பதவிக்கு அலையும் கூட்டம்தானே. சிலவேளை அடுத்த தேர்தல் வரும்போது எந்தமுகத்துடன் வாக்குவேட்டைக்குச் செல்வது என்று குழம்பியிருக்கலாம். அல்லது வன்னிப் பகுதிக்கு இனிமேல் பயணம் மேற்கொள்வதா இல்லையா என்று நினைத்துக் குழம்பியிருக்கலாம்.

கறுப்பி.

தலையங்கத்தை பின்வருமாறு மாற்றினால்நன்றாக இருக்கும்.

"தொப்பிகல கொண்டாட்டங்களால் குழம்பிப் போன அரச தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் -(அஜாதசத்ரு)"

இல்லாவிடில் இது பிழையான அர்த்தத்தை தரும். :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?

*வெற்றிக் கொண்டாட்டங்கள் சில நாட்கள் நீடிக்கலாம்.... அதற்கு பின்னர்??

-ஆறுமுகன்-

தொப்பிகலவின் வீழ்ச்சியை அரசு கொண்டாடி மகிழும் நாட்கள் இவை. உலக சரித்திரத்தில் சில சரித்திர புகழ் பெற்ற தோல்விகளை அந்த நகரத்தின் பெயரால் குறிப்பிடுவார்கள். அரசு தனது வெற்றிக் கொண்டாட்டத்திற்கென அரசியல் மட்டத்தில் செய்திருக்கும் ஏற்பாடுகளிலும் ஊடகங்களின் தலைப்பு செய்திகளிலும் ஏனைய செய்திகளிலும் பரபரப்பாக வெளியான யுத்தகள தகவல்களினாலும் தொப்பிகல என்பது இலங்கை தீவின் முக்கிய கேந்தி நகரங்களில் ஒன்றாகவோ அல்லது பொருமாதார மையங்களில் ஒன்றாகவோ இருக்கூடும் என்ற தோற்றப்பாட்டை இப்பிரதேசத்தைப் பற்றி அறியாதவர்களின் மனதில் தேற்றுவிக்க இடமுண்டு.

ஜாதிக ஹெல உறுமய கண்டி நகரில் பாற்சோரும் பலகாரமும் வழங்கி கொண்டாடியது. இது இலங்கையில் உள்ள `அரசியல் கட்சி'களில் ஒன்றாக கருதப்படுவது யாவரும் அறிந்ததே. ஏறத்தாழ அதே விதமாக தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.டி.பி. கட்சியும் தன் பங்குக்கு அரச வெற்றிக்கு புகழாரம் சூட்டியுள்ளது. கடந்த 30 வருடக் காலத்தில் புலிகள் கண்ட மா பெரும் தோல்வி என்ற டக்ளஸ் தேவானந்தாவின் அறிக்கை தென்னிலங்கையில் பரிமாறப்படும் `கவுன் கிரிப்பத்திற்கு' மேலும் சுவையூட்டும் என்பதில் சந்தேகமில்லை. புலிப் பாசிசவாதத்திலிருந்து கிழக்கு மாகாண மக்கள் விடுக்கப்பட்டார்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட தவறவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நிலை இனி எப்படி அமையப்போகிறது என்பதுதான் இனிமேல் கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது. அரசின் ஆசைப்படியே இராணுவரீதியில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியாயிற்று. அடுத்தது என்ன? வெற்றி கொண்டாட்டங்களும், பரபரப்புகளும் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். அதற்கு பின்னரும் அந்த ஊர்களின் பெயர்கள் அரசியலாளர்களினதும். அரச தொலைக்காட்சிகளினதும் ஞாபகங்களில் நிலைத்திருக்குமா? மாவிலாறு, வாகரை போன்ற இடங்கள் இலங்கையில் இருக்கின்றன என்ற விஷயத்தை தென்பகுதி மக்கள் மட்டுமன்றி பெரும்பாலான அரசியலாளர்களும் யுத்தத்தின் மூலம் தான் அறிந்து கொண்டார்கள்.

அரசியல் நிகழ்வுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இப்போது கிழக்கு வானில் நம்பிக்கை நட்சத்திரம் தென்படுகிறதா? நல்ல சகுனங்கள் தென்படுகின்றனவா? வெல்லப்பட்ட பிரதேசத்தில், கிழக்கின் மக்களின் பிரதிநிதிகளாக அரசு யாரை முன்னிறுத்த போகிறது? தனது கொள்கைக்கு ஒத்து நிற்காத எந்த கட்சியையோ தனிநபரையோ அரசு முன்னிறுத்தமாட்டாது என்பதில் ஒளிவுமறைவு இல்லை.தமிழ்த் தேசியக் கூட்டணி புலிகளின் பேச்சாளர் கூட்டணி என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஏற்கனவே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பகிரங்கமாக பலியெடுத்துவிட்டு மௌனமாயிருப்பது தற்போதைய அரசியல் கலாசாரம். ஏஞ்சியிருப்பவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள் என்று சென்னால் அது மிகையாகாது.

அப்படியெனில் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தலைவர்களாவதற்கு யார் முன்வர உள்ளனர்? இவர்கள் அரசிற்கு பிடித்தவர்களாக இருக்கவேண்டும். அரசின் உள்நின்று இயக்கும் சக்திகளுக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டும். உள்நின்று இயக்கும் சக்திக்கு பிடிக்காமல் போனால் உடல்களாக தெருவோரத்திலோ பற்றைகளுக்குள்ளோ காணப்படவேண்டடியிருக்கும் என்பதே இன்றைய நிலைமையாகும்.

கிழக்கு சகுனங்கள் எப்படி இருக்கின்றன? தொப்பிகல வீழ்ச்சிக்கு முதலே சகுனப்பிழைகள் கிழக்கில் தோற்றிவிட்டன.அரசினால் ஆசீர்வதிக்கப்பட்ட பழைய புலிகளான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (T.M.V.P.) கருணா அணியினர்) பிரிவினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) கிழக்கு பிரிவினருக்குமிடையில் பெரும் மோதலும், உயிரிழப்புகளும், தொடர் முறுகல் நிலையும் தோன்றியுள்ளன. கிழக்கு மக்களை இவர்களா பிரதிநிதித்துவப்படுத்தபோகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.