Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

 
spacer.png

ராஜன் குறை 

சென்ற வாரம் தி.மு.க அரசு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடியது குறித்து விவாதங்கள் நிகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை தி.மு.க கைப்பற்ற நினைக்கிறது என்றெல்லாம் சிலர் கூறினார்கள். அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் சிலர் அரசின் அறிக்கையை கண்டித்தனர். இந்த விவாதங்களில் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து 1972ஆம் ஆண்டு பிரிந்து கலைஞரின் தலைமையை எதிர்த்து அரசியல் செய்தது பேசப்பட்ட அளவு, எம்.ஜி.ஆர் தி.மு.க-வின் அங்கமாக வளர்ச்சியடைந்தவர் என்பது பேசப்படவில்லை.

பாமர மக்களும் சரி, அறிவுலகினரும் சரி... மக்களுக்கு எம்.ஜி.ஆர் மீது இருந்த ஈர்ப்பினை மர்மமானதாக, விளக்கமுடியாததாக கூறுவது ஒரு பழக்கமாக மாறி விட்டது. முறையாக ஆய்வுபூர்வமாக சிந்தித்தால் அவரது புகழுக்கு அவர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அடித்தட்டு மக்களின் அரசியல் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டதும், அவர் திரைப்படக் கதைகள், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றுக்கு அந்த இயக்கம் கூடுதலான ஒரு பொருளை வழங்கியதும் முக்கிய காரணம் என்பதைக் காணலாம். அவர் தார்மீக-சாகச திரைக் கதாநாயகனாக மட்டும் அல்லாது அரசியல் மாற்றத்தையும், ஜனநாயகப் புரட்சி என்னும் அதிகார பரவலையும் சுட்டிக்காட்டும் கதையாடல் பிம்பமாக (Narrativized Image) விளங்கினார். இது அவர் படங்களுக்குக் கூடுதலான ஒரு கவர்ச்சியை வழங்கியது. உதாரணமாக “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று அவர் மலைக்கள்ளன் (1954) படத்தில் பாடினால் அது காங்கிரஸ் ஆட்சியைச் சுட்டிக்காட்டுவதாக நினைக்கப்பட்டது. மலைக்கள்ளன் வசனகர்த்தா கலைஞர். தி.மு.க-வின் அரசியல் கதையாடலின் உருவகமாக எம்.ஜி.ஆர் திரைக்கதையாடல்கள் பார்க்கப்பட்டன. ராஜா ராணி படங்களில் அவர் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராடி இறுதியில் அவர் மன்னராகாமல் மக்களாட்சியை மலரச் செய்வார். சமூகப் படங்களில் பெருந்தனவந்தர்கள், சமூக விரோதிகள், சுயநலக்காரர்களின் சதியிலிருந்து நல்லோரை விடுவிப்பவராக இருப்பார். வண்ணப் படங்களில் தி.மு.க-வின் கறுப்பு, சிவப்பு வண்ணத்தைப் பொருத்தமாகப் பயன்படுத்துவார். அவர் திரைப்படங்கள் எல்லாவிதமான கேளிக்கை அம்சங்களையும் கொண்ட வெகுஜன படங்களாக இருந்தாலும், அவரும் வசீகரமான ஒரு திரைப் பிரசன்னத்தை கொண்டிருந்தாலும் அவருக்கு கிடைத்த தனிப்பெரும் மக்கள் ஆதரவு என்பதற்கு காரணம் சமூக மாற்றம் குறித்த வரலாற்று கதையாடலுடன் தன் திரைக்கதையாடலையும் நாயக பிம்பத்தையும் இணைத்ததுதான்.

தி.மு.க எம்.ஜி.ஆரால் பலனடையவில்லை என்று கூற முடியாது. அதன் வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களில் அவருக்கும் பங்கிருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் வளர்ச்சியில் தி.மு.க-வின் பங்கைவிட அது குறைவுதான். உதாரணமாக எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958) தமிழகம் முழுவதும் பெரிய வெற்றி பெற்றது. தி.மு.க மதுரையில் பெரிய விழா எடுத்துக் கொண்டாடியது. ஆனால் அதைத்தொடர்ந்த 1962 தேர்தலில் தி.மு.க மதுரையில் வெல்லவில்லை. தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் ஓடின. ஆனால், தி.மு.க வெற்றி பெறுவது சவாலாகத்தான் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால் அரசியல் கதையாடலிலிருந்து திரைக்கதையாடலுக்கு வலுசேர்ப்பது சுலபம். ஆனால் திரைக்கதையாடலிலிருந்து நடைமுறை அரசியலுக்கு வலுசேர்ப்பது கடினம். இல்லாவிட்டால் எல்லா நடிகர்களும் முதல்வராகி விடுவார்களே.

கடுமையான களப்பணியும், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பல தலைவர்களின் பேச்சாற்றலும், தலைமைப் பண்புகளும், அமைப்பாக்கமும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் அந்தக் கட்சியின் கொள்கையாளர்களின் அளப்பரிய தியாகமும், ஈகையும்தான் தி.மு.க ஆட்சிக்கு வர முக்கிய காரணங்கள் என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல. பார்ப்பனீய ஜாதி ஆதிக்க எதிர்ப்பும், சுயாட்சி கோரிக்கையும், தமிழுணர்வும் உருவாக்கிய வரலாற்று ஆற்றலாக தி.மு.க விளங்கியது என்பது முக்கியமானது. அந்த வரலாற்று ஆற்றலிலிருந்து தன் கதாநாயக பிம்பத்துக்கு வலு சேர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். திரை கதாநாயகர்கள் திரைப்படக் கதையாடலில் தாங்கள் சார்ந்து நிற்கும் தார்மீகம், தங்களது சாகசம் ஆகியவற்றுக்கு அரசியல் வரலாற்றுடன் தொடர்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்தி பலனடைவது என்பது இயல்பானது.

உதாரணமாக சமீப காலங்களில் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுடன் தனக்கு ஏற்பட்ட முரணை மறைபொருளாகப் பேசுவதும், தான் அரசியலுக்கு வரலாம் என சூசகமாகச் சொல்வதும் தன் திரைப்படங்களின் வெற்றிக்கும், தனது நாயக பிம்பத்தின் வலுவுக்கும் உதவும் என்பதை கண்டு கொண்டு பயன்படுத்தியதை பார்த்தோம். “எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா, வரவேண்டிய நேரத்தில் வருவேன்” என்று ஒரு வசனம் பேசினால் அது அவர் அரசியலுக்கு வருவதை குறிப்பதாக நினைத்து ரசிகர்கள் ஆரவாரிப்பார்கள். ஆணவமிக்க ஒரு பெண்ணிடம் அவர் பேசும் வசனங்கள் ஜெயலலிதாவைக் குறிப்பதாக நினைத்து கரவொலி எழுப்புவார்கள். ரஜனிகாந்த்தே இதெல்லாம் சும்மா சுவாரஸ்யத்துக்காக செய்தது என்று குசேலன் படத்தில் சொன்னார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனால் பழையபடி நான் வருவேன், போவேன் என்று துவங்கிவிட்டார். இனிமேல் அவர் ஓர் அரசியல் தலைவராகப் போவதில்லை என்று உறுதியான பிறகு அவர் ஒரு வயதான நட்சத்திரமாக மட்டும் நீடிக்க வேண்டிய நிலை உள்ளது. எம்.ஜி.ஆர் இப்படி ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் தனிக் கட்சி தொடங்கி தலைவராக வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நிகழ்ந்த தி.மு.க-வின் தனிப்பெரும் தலைவர் அண்ணாவின் அகால மரணம்.

spacer.png

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி 

எம்.ஜி.ஆர் மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்று நினைத்திருந்தால் காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்திருக்கலாம். அவரை தி.மு.க-விலிருந்து விலக தூண்டிய இந்திரா காங்கிரஸ், வலது கம்யூனிஸ்டு கட்சிகள் நிச்சயம் அதை வரவேற்றிருக்கும். ஆனால் எம்.ஜி.ஆருக்குத் தன்னுடைய ஆதரவு தளத்தை தி.மு.க அரசியலிலிருந்து பிரிக்க முடியாது என்பது தெரிந்திருந்தது. அதுவும் 1971 தேர்தலில் தி.மு.க கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற்று பெரும் வளர்ச்சி கண்டிருந்தது. அவ்வளவு பெரிய வாக்கு வங்கியினை தானும் பிரித்துக்கொள்ள வேண்டும் என நினைத்தார். அதனால் மக்களின் மனதில் பெரியதொரு இடத்தை பெற்றிருந்தவரான அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்க முடிவு செய்தார். தன் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆனால், அண்ணாவின் வழிவந்த கழகம், கலைஞரின் தலைமையை ஏற்காத தி.மு.க என்பதை தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு பேச்சிலும் அண்ணா நாமம் வாழ்க என்று முடித்தார். தி.மு.க கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பதித்து அதுதான் தன் கட்சி என்றார்.

தன் திரைப்படங்களில் அண்ணாவின் வாரிசு என்பதை நிறுவ பெரும் முயற்சி மேற்கொண்டார். பல்லாண்டு வாழ்க (1975) என்ற திரைப்படத்தில் முரட்டு கைதிகளை சீர்திருத்தி உழைப்பாளிகளாக, பண்பாளர்களாக மாற்றும் பணியில் ஈடுபடும் சிறைக்காவலராக நடித்தார். சாந்தா ராமின் தோ ஆன்கேன் பாரா ஹாத் (1957) என்ற இந்தி படத்தின் தழுவல் அந்தப் படம். அதில் குற்றவாளிகள் ஒருமுறை தப்பி ஓடுவார்கள். அவர்கள் ஒரு முச்சந்தியில் அண்ணா சிலையைக் காண்பார்கள். சிலையின் கண்களிலிருந்து வரும் ஒளி அவர்களுக்கு எம்.ஜி.ஆர் கண்களை நினைவுபடுத்தும். மனம் மாறி திரும்பி வந்து விடுவார்கள். “ஒன்றே குலமென்று பாடுவோம்; ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என அண்ணா கையாண்ட திருமூலர் வரியினை அந்தப் படத்தின் பாடலாக மாற்றினார். “இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்; அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்” என்று அந்தப் பாடலில் ஒரு வரி வரும். தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என அறிவித்தார். அண்ணா அவரை ஒருமுறை இதயக்கனி என்று குறிப்பிட்டார் என்பதற்காக இதயக்கனி என்றொரு படம் எடுத்தார். இப்படி எல்லாவிதங்களிலும் தன்னுடைய கட்சியும் தி.மு.க-தான், அதன் பிரிவுதான், தான் அண்ணாவின் கொள்கைகளுக்கு வாரிசு என்று அவர் கூறியதால் தி.மு.க-வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் அவர் கட்சியில் இணைந்தார்கள். தி.மு.க-வில் இணைய முடியாமல் இருந்த பல ஜாதியவாத சக்திகளுக்கும் அண்ணா தி.மு.க புகலிடமாக மாறியது. இது விரிவான ஆய்வுக்குரியது.

இத்தனைக்கும் பிறகும் கலைஞரின் தலைமையில் தி.மு.க தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்தது. வெறும் பெயரில் இல்லாமல் அனுதினமும் தன் அரசியலில் பெரியாரின், அண்ணாவின் லட்சியங்களின் தொடர்ச்சியை சாதித்துக் காட்டினார் கலைஞர். அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களிடம் திராவிட இயக்க கொள்கைகளை விதைத்தார். இந்திய அரசியல் சதுரங்கத்தில் சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை வெட்டுப்படாத காய்களாக முன் நகர்த்தினார்.

spacer.png

அண்ணா தி.மு.க எப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமானது? 

எம்.ஜி.ஆரின் அகால மரணம் 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிறகு, அண்ணா தி.மு.க உள்கட்சி குழப்பங்கள் தீர்ந்து ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்ட போதும், ராஜீவ் காந்தி படுகொலையினால் பெருங்காற்றில் கோபுரத்தின் மீது ஒட்டிய சருகாக ஆட்சியில் அமர்ந்தபோதும்கூட அதில் தி.மு.க-வில் பயின்ற, வளர்ந்த தலைவர்கள் கணிசமானவர்கள் இருந்தார்கள். நாவலர், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் எனப் பலர் அமைச்சரவையில் இடம் பெற்றார்கள். இந்தி எதிர்ப்பு போராட்ட வீரர் காளிமுத்து சபாநாயகராக இருந்தார். ஆனால் 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா படுதோல்வி அடைந்து, அதன் பின் அகில இந்திய அரசியலின் முரண்களைப் பயன்படுத்தி மீண்டும் 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அது முற்றிலும் புதிய கட்சியாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். கட்சிக்குள் “எம்.ஜி.ஆர் காலத்தவர்” என்ற ஒரு அரியவகை பிரிவு ஒன்று தோன்றியது; ஓரங்கட்டப்பட்டது. சின்னம்மா சசிகலா கைகாட்டியவர்களே முக்கியத்துவம் பெற்றார்கள். அப்போது முக்கியத்துவம் பெற்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம். உள்ளபடி யோசித்தால் தினகரன் 2018இல் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2001ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். தி.மு.க வரலாற்றிலிருந்து கிளை பிரிந்து எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா தி.மு.க இருபதாம் நூற்றாண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. இருபத்தோராம் நூற்றாண்டில் அந்தக் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான். கட்சியின் பெயரிலும், கொடியிலும் இன்றும் இருக்கும் அண்ணாவுக்கு எந்த ஒரு பொருளும் கிடையாது. அப்படி ஒரு பொருள் இருந்தால் அந்தக் கட்சி ”ஆரிய மாயை” பாரதீய ஜனதா கட்சியிடம் சேவகம் செய்துகொண்டு நிற்காது. எந்த கொள்கைகளுக்கு எதிராக திராவிட இயக்கம் தோன்றியதோ அந்த கொள்கைகளுக்கே விலைபோகும் சுய நலக் கூட்டமாக மாறியிருக்காது.

இதையெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிக்கொள்ள ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். அறிஞர் அண்ணாவின் எழுத்துகளையெல்லாம் ஒன்று திரட்டி 110 தொகுதிகளாக வடிவமைத்துள்ளார் புலவர் செந்தலை கவுதமன். தமிழ்மண் பதிப்பகம் அதன் முதல் பகுதியை வெளியிட்டது. அதன் வெளியீட்டு விழாவில் அன்று ஆட்சியிலிருந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிய அண்ணா தி.மு.க ஆட்சியாளர்கள் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராகிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அ.இ.அ.தி.மு.க அரசும் அதைப்பற்றி பொருட்படுத்தவில்லை. ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி அழைக்காவிட்டால் வருந்தியிருப்பார்களோ, என்னவோ. அண்ணாவின் எழுத்துகளை யார் வெளியிட்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால் திராவிட இயக்கத்துடன் அவர்களுக்கிருந்த தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. மலைப்பாம்பின் சுருக்குப் பிடியை போல தங்களைப் பிடித்து நொறுக்கும் பாரதீய ஜனதா கட்சியின் பிடியிலிருந்து வெளிவராமல் அவர்கள் எப்படி அண்ணாவுக்கு சொந்தம் கொண்டாட முடியும். ஏன் அண்ணாவின் பெயரால் அரசியல் செய்த எம்.ஜி.ஆரைகூட ஒரு திரைப்பிம்பமாக பார்க்க முடியுமே தவிர, ஓர் அரசியல் தலைவராக அவர்களால் பேச முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அம்மா, சின்னம்மாதான்.

இந்த நிலையில் தி.மு.க அரசு எம்.ஜி.ஆர் பிறந்த நாளை கொண்டாடுவதும், அறிக்கை வெளியிடுவதும் அந்தக் கட்சி சாத்தியமாக்கும் திராவிட இயக்க வரலாற்று தொடர்ச்சியின் விளைவுதான் என்பதை அங்கீகரிக்கத்தான் வேண்டும். எம்.ஜி.ஆர் என்ற கனி விதையாகி மரமாக வளர்ந்த கட்சி பட்டுப்போய்விட்டது. அதன் வேர்களில் ஆரிய விஷம் புகுந்துவிட்டது. இனி எம்,ஜி.ஆரின் வரலாற்று தொடர்ச்சியும் தி.மு.க-தான்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

 

https://minnambalam.com/politics/2022/01/24/6/MGR-a-fruit-formed-from-the-DMK-tree

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்ற வித்தில் முளைத்ததே தி மு க. 

அதொன்னும் கருணாநிதி சொத்தில்லையே. அண்ணா தான் தி மு க வை தொடங்கினதே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.