Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும்

ஜூன் 10, 2022
 
spacer.png
காணாமல் போண கணவரின் துயரத்தில் துவண்டு விழாமல் முன்னோக்கி செல்லும் வீர மங்கை செல்வம் மேரி நிர்மலா

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் இக்கால கட்டத்தில் சுயதொழில் பொருளாதாரத்தில் ஈடுபாடுடைய முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் செல்வம் மேரி நிர்மலா, சுயதொழிலில் ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டவர். முன்பள்ளி, இசை மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் கற்கை துறைகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்தவர். அதேவேளை முன்பள்ளிப் பாடசாலை பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக காவேரி கலாமன்றத்தின் ஊடாக உன்னத சேவையாற்றி வருபவர். இக்கால சூழலைக் கருத்திற் கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் செல்வம் மேரி நிர்மலா.

நீங்கள் முன்பள்ளி பாடசாலைகளின் மேம்பாட்டுக்காக பங்காற்றி வரும் ஒருவர். இத்துறையில் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?

க. பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் படித்து விட்டு பரீட்சைப் பெறுபேற்றினை எதிர்பார்த்திருக்கும் சில மாத கால இடைவெளிக்குள் மறையாசிரியர்கள் பிள்ளைகளுக்கு பாடங்கள் கற்பிப்பார்கள். இதைப் பார்த்து மன அடித்தளத்தில் சந்தோசமாக இருக்கும். இதைக் கண்டு சின்னக் குழந்தைகளோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

கூடுதலாக சின்னஞ் சிறார்களுடைய பாடல்களையும் கதைகளையும் விரும்பிப் படிப்பேன். கள்ளம் கபடமற்ற செல்லக் குழந்தைகளோடு இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. க. பொ த உயர்தரப் பரீட்சை பெறுபேறு வரைக்கும் முதன் முதலில் முன்பள்ளிப் பாடசாலை ஒன்றுக்கு பாடம் கற்பிக்கச் சென்றேன். அங்கு எல்லோரையும் விட எல்லாத் துறையிலும் பணியாற்ற என்னிடம் ஆளுமை இருந்தது. இதனை பெண் இறை அடிகளார்கள் அறிந்து கொண்டார்கள். முன்பள்ளிப் பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டாக இருந்தாலும் சரி கலை, கலாசார விழாக்களாக இருந்தாலும் சரி கூடுதலாக முன்னுக்கு வந்து காலம் நேரம் என்று பார்க்காமல் வேலை செய்வேன்.

நான் வீட்டில் இருந்த போதிலும், நாளைக்குச் சென்று எதைச்செய்வேன் என்று யோசிப்பேன். ஒரு பிள்ளையொன்று பின்னோக்கி இருந்தால் அந்தப் பிள்ளையை எப்படி முன்னோக்கி கொண்டு வருவது? அந்தப் பிள்ளையை எந்த விளையாட்டில் ஈடுபடச் செய்யலாம். அவ்வாறான சிந்தனையோடுதான் நான் வேலை செய்தேன். இவ்வாறு பணிகள் செய்து 28 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

உங்கள் இசைத் துறை பங்களிப்புக்கள் தொடர்பாக கூற முடியுமா?

பிரத்தியேகமாக நான் இசைத் துறையிலும் கல்வி கற்று ‘ஏ’ (A) தரத்தில் சித்தியடைந்துள்ளேன். எங்களது முகாம் பகுதியில் இசைத் துறைக்கான ஆசிரியைகள் யாருமே இல்லை. பகுதி நேரமாக பாடசாலையிலும் இசைப் பாடத்தை போதித்து வந்தேன். க. பொ. த. சாதாரண தர மாணர்களுக்கான இசைப் பாடத்தையும் நானே கற்பித்தேன். அவர்கள் தமிழ் திறன் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள், சான்றுகள் பெற்றுள்ளார்கள். இந்த இசைத் துறையில் ஒரு பட்டதாரி செயற்படுவதை விட கடவுள் எனக்கு சிறந்த திறனையும் ஆளுமையையும் தந்துள்ளார். சிறந்த குரல் வளத்தையும் தந்துள்ளார். நான் நன்றாகப்பாடுவேன். இது என்னிடம் இருந்து வரவில்லை. ஆண்டவனின் இயற்கையில் இருந்து வந்தது. இந்த இரண்டும் ஒருங்கே அமைந்தமையால் இந்த இசைத் துறையில் பிரகாசித்துக் கொண்டு தொழில் புரிந்து வருகின்றேன்.

க. பொ.த உயர்தரப் பரீட்சையில் இசைப் பாடம் தான் எடுத்தேன். சின்ன வயதில் இருந்து எனக்கு கலையில் விருப்பம். பிள்ளைகளுடைய மறைத்தின விழா, தமிழ் மொழி தின விழா அல்லது வேறு ஏதாவது விழா இடம்பெற்றால் என்னுடைய நிகழ்வொன்று நிச்சயமாக அரங்கேறும். நான் ஒரு சின்ன ஆள்தான். நான் சின்னப் பிள்ளைகளை வைத்து ஏதாவது ஒரு அரங்கேற்றத்தைச் செய்து விடுவேன்.

எனக்கு பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்தது. அக்கால கட்டத்தில் நிலவிய நாட்டின் யுத்தகால சூழ்நிலையின் காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் போயிற்று. பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தது. குடும்ப உதவிகள் இல்லை. மேற்கொண்டு படிக்க வசதியில்லை. தொண்டர் ஆசிரியையாக பாடசாலையில் கற்பித்து வந்ததை சிறிய காலம் இடைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

spacer.png
 

நீங்கள் முன்பள்ளிப் பாடசாலைத் துறையில் எத்தகைய பணிகள் ஆற்றினீர்கள்?

முன்பள்ளிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கல்வி போதித்தாலும் முன் பள்ளிப் பாடசாலைகளுக்கெல்லாம் ஒரு இணைப்பதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளேன். வறுமையின் காரணமாக நெருக்கடி நிலைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட பிள்ளைகள். அனாதைப் பிள்ளைகள், கற்றலுக்கான சூழல் வசதிகள் இல்லாத பிள்ளைகளை தெரிவு செய்து அவர்கள் பற்றிய ஒரு முழுமையான தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். அவர்களுக்கான சிறுவர் விளையாட்டுக் கழகம் அமைத்து தேவையான விளையாட்டு உபகரணங்கள், கற்றல் உபகரணங்கள், சீருடைகள், பாதணிகள் உள்ளிட்ட அனைத்து வகையிலான உதவிகளையும் காவேரி கலா மன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுத்து வந்தேன். அவை மட்டுமல்ல பிள்ளைகளுடைய தாய்மார்களுக்கிடையே ஒரு குழுவை அமைத்து கோழி வளர்ப்பு. அதன் மூலம் எப்படி இலாபம் ஈட்டலாம்.சிறு உற்பத்திகளை உருவாக்கினால் நாம் நிச்சயமாக முன்னுக்கு வரலாம் என்று அவர்களை விழிப்புணர்வூட்டி, ஆற்றுப்படுத்தல் வேலைகளை மறைமுகமாக செய்வேன்.

சிறுபிள்ளைகள் குடும்பச் சூழலில் படிக்க முடியாத நிலையில் நிறைய நெருக்கடியோடு வருவார்கள். அவர்களுக்கு கற்றலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குகிறேன். பேக், காலணிகள், சீருடைகள் போன்றவைகள் பெற்றுக் கொடுப்பேன்.

நான் எந்த தொண்டு நிறுவனத்திலும் சம்பளத்திற்கு வேலை செய்வதில்லை. ஒரு மனிதாபிமான அடிப்படையில் பொதுப் பணிகள் புரிந்து வருகின்றேன். அருள் பணி பெனி அடிகளாரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் காவேரி கலாமன்றம் என்னும் அமைப்பினுடைய ஒரு முக்கிய பிரதிநிதி. அதன் மூலமாக நிறைய முன்பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் மாலை நேர சிறுவர் கழக மாணவர்களுக்கும் உடல், உள ஆரோக்கியத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை தவிர சகல முன்பள்ளி பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல்கள் உபகரணங்கள் கொடுத்து வருகின்றேன். சிலவேளையில் தனிப்பட்ட நபர்கள் ஊடாகவும் உதவிகள் செய்து வருகின்றேன்.

அதே போன்று காவேரி கலாமன்றத்தின் அனுசரணையுடன் என்னுடைய வழிகாட்டலின் கீழ் இயங்கும் மகளிர்க் குழுக்களுக்கிடையே சுயதொழிலை ஏற்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றேன். எங்கள் மத்தியில் 15 பெண் குழுக்கள் இருக்கின்றன. காவேரி கலாமன்றத்தின் உதவியோடு சுயதொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. ஒரு குழுவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை நிதி உதவியினை வழங்கினார்கள். அந்த வகையில் சின்னப் பிள்ளைகள் விரும்பி உண்ணக் கூடியதும் இப்பிரதேசத்தில் இல்லாத இனிப்பு பண்டமாகவுள்ள நைஸ் உற்பத்திகளை திறன்பட செய்து அதிக இலாபம் ஈட்டி வருகின்றோம். உள்ளுரில் இதற்கு அதிக மவுசு இருக்கிறது.

உங்களது சுயதொழில் துறையில் சவால்கள் பற்றி

இதனை ஒரு பெரியளவிலான முறையில் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அனுமதி வழங்குகிறார்களில்லை. இதற்கு தனியானதொரு கட்டடம் வேண்டும். இதற்கு நல்ல வருமானம் இருக்கிறது. இவ்வாறான தடையும் இருக்கிறது. மா அரைக்கின்ற இயந்திரமும் வைத்திருக்கின்றோமம். அரசி மாவை அரைத்து அதனைப் பொதி செய்து கடைகளுக்கும் வீடுகளுக்கும் விற்பனை செய்து வருகின்றோம். அவை மாத்திரமல்ல பச்சை அரிசியை கொண்டு வந்தால் அதனை அரைத்து வறுத்துக் கொடுக்கின்றோம்.

spacer.png

உங்களது உற்பத்திப் பொருட்கள் பற்றி,..

விசேடமாக நாங்கள் போசாக்கு மாவுப் பொதிகளை உற்பத்தி செய்கின்றோம். தாய் சேய் சுகாதார மருத்துவப் பிரிவினர் இதனை வாங்கி போசாக்கு குன்றிய பிள்ளைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றார்கள். அதில் எல்லாவகையிலான விட்டமின்களும் இருக்கின்றன. அத்தோடு முருங்கையிலைப் பவுடர், வல்லாரை, குறிஞ்சா, அகத்தி,பெசன் புரூட் இலை, பாவற்காய் முதலியவைகளை அரைத்து பொதி செய்து விற்பனை செய்து வருகின்றோம். வல்லாரை இலைகளை நன்றாக கழுவி அதனை வெயிலில் காய வைத்து பொதி செய்து விற்பனை செய்கின்றோம்.

இந்த உற்பத்திப் பொருட்களை வெளியிடங்களுக்கும் விற்பனை செய்து வந்தோம். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக விநியோகம் செய்வது கடினமாக இருக்கிறது. இந்த உற்பத்திப் பொருட்களை உள்ளூரில் வீட்டுக்கு வீடு விநியோகம் செய்கின்றோம்

இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னர் இந்த அரைத்த மாவு ஒரு கிலோ மாவு 110 ரூபாவுக்கு விற்பனை செய்தோம். தற்போது அரிசி 240 ரூபாவுக்கு மேல் செல்லுகின்றது. அதனால் இதனை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது எவ்வாறு வியாபாரம் செய்வது என்று தெரியாது. வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நிறுனத்திற்கு பொறுப்புக் கொடுத்துள்ளோம். அவர்கள் அதற்கு உதவி செய்கிறார்கள்.

மூலிகைகளை காய வைத்து அதனை தேவைக்கு ஏற்றாப் போல அரைத்து பொதி செய்து விற்பனை செய்கின்றோம். கறிவேப்பிலையை மிக இலகுவான முறையில் அரைத்து அதனைப் பொதி செய்து விற்பனை செய்வோம். எமது குழுவில் 15-–20 வயதுக்கிடைப்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இக்குழுவிலுள்ள பெண்கள் அனைவரும் பெண் தலைமையை கொண்ட குடும்பத்தவர்கள் ஆவர்.

ஒரு நாளைக்கு 3000 வடைகள் சுட வேண்டும். அதற்கு மூன்று தாய்மார்கள் பணி புரிய வேண்டும். இதில் வரும் இலாபத்தைப் பிரித்தெடுத்து ஐந்தில் ஒரு பகுதியை சேமிப்புச் செய்வோம். அப்படியே பிரித்து அந்த தாய்மார்களுக்கு கொடுப்போம். ஒரு தாய்க்கு தலா ரூபா 2000, 3000 வருமானம் கிடைக்கும். தொடர்ந்து வேலை செய்தால் அதை விடக் கூடுதலாக கிடைக்கும். சராசரி இந்த குழுமத்திலுள்ளவர்கள் தலா 1000 ரூபா பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. சில வேளை கேள்விகளைப் பொறுத்து கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஒரு நிரந்தரக் கட்டடம் கிடைத்தால் பெரியளவில் உற்பத்திகள் செய்ய முடியும். வெளி இடங்களுக்கு விநியோகம் செய்து அதிக இலாபம் ஈட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கு நிரந்தரக் கட்டடம் மிகுந்த தேவைப்பாடாக இருக்கிறது. தற்போது எனது இல்லத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இது வீட்டில் வைத்துச் செய்வதால் பொதுச் சுகாதார பரிசோதர்களின் தொல்லை அதிகம். இவை இரண்டு வருடங்களாகச் நடைபெறுகின்றன.

2013 களில் நாங்கள் ஆரம்ப காலத்தில் கல் உரலில் இடிப்போம். சிலதை மர உரலில் இடிப்போம். இதனால் தாய்மார்களின் கைகள் எல்லாம் காய்ச்சிப் போய் விடும். ஆரம்பத்தில் சரியாக கஷ்டப்பட்டோம். இலாபமும் பெரியளவில் கிடைக்காது. கிரைண்டர் மூலம் அரைத்துச் செய்வதில் எனக்கு பெரிய இலாபம் இல்லை. என்னுடைய குழுமத்திலுள்ள தாய்மார்கள் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றேன்.ஒரு மனத் திருப்திகரமான சந்தோசம் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்ட அருள் பணி பெனி அடிகளார் அவர்களுக்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

உங்கள் குடும்பம் பற்றி கூற முடியுமா?

என் கணவர் காணாமற் போன ஒருவர். இதுவரையிலும் என்ன நடந்தது என்ற வேதனையில் இருக்கின்றோம். இவர் படையினரிடம் உயிரோடு ஒப்படைக்கப்பட்டவர். இப்போது இல்லை என்று தான் சொல்லுகிறார்கள்.

நான் அளம்பில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் க. பொ. த சாதாரண தரம் வரையில் படித்தேன் க. பொ. த உயர்தரம் மடு தேவாலயத்தில் கற்றேன். பின்னர் அங்கேயே வேலை செய்தேன். முருங்கன் நலன்புரி நிலையத்தில் ஒன்பது வருடம் வேலை செய்தேன். அங்கு இடம்யெர்ந்த மக்கள் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்களுக்கு சேவைகள் செய்தேன். கழிமோட்டை என்ற இடத்திலும் வேலை செய்தேன். ஐந்து ஆறு கிலோ மீட்டர் சைக்கிளில் போவேன். அங்கு முன்பள்ளிப் பாடசாலை இருந்தது. இக்கால கட்டத்தில் தான் திருமணம் செய்து கொண்டேன். போராட்டச் சூழலில் கணவரும் இருந்தவர். அக்கால கட்டத்தில் புதுமாத்தளன் என்ற இடத்திற்கு வந்து பாடசாலைப் பிள்ளைகளுக்குப் படிப்பித்துக் கொண்டு இருந்தேன்.

spacer.png

நீங்கள் சமூகப் பணியிலும் சுய தொழிலிலும் ஈடுபடுவதற்கான துண்டுதல் எப்படி வந்தது.?

மீள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த பிறகுதான் என்னை விட பாதிக்கப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான்சேவை செய்ய வேண்டும். எல்லோரும் துவண்டு போனால் தம் சமூகம் விழுந்து விடும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. எனக்கு ஒரு துன்பம் வரும் போது நான் யோசிப்பது என்னைப் போலதான் மற்றவர்களும் துன்பப்படுவார்கள். இவற்றை பார்க்கும் போது என்னுடைய தாக்கம் மிகக் குறைவானதாக இருப்பது தெரிகிறது.

சுயமாகச் செயற்பட்டு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தில அருள் பணி பெனி அடிகளார் எங்களோடு இணைந்து முன்பள்ளிப் பாடசாலையை மேம்படுத்துவதில் எண்ணற்ற உதவிகள் புரிந்துள்ளார். அவர் கலாமன்றத்தின் மூலமாக 56 முன் பள்ளிப் பாடசாலைகளுக்கு உதவி செய்து வந்தார். முன்பள்ளி ஆசிரியைகளுக்கு 5,200 ரூபா சம்பளம் வழங்கி வந்தார். குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதிகளில் மட்டும் 56 முன்பள்ளிப் பாடசாலைகள் செய்தார்.

இவை தவிர யாழ்ப்பாணம், மன்னார் மடு, மட்டக்களப்பு, அம்பாறை என்று அவர் ஒன்பது வலயங்களுக்கு உதவி செய்து வந்தவர். கொரோனா காரணமாக சிலதை இடை நிறுத்தி விட்டார். முன்பள்ளிப் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட சேவைப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சத்துணவு, சீருடை, உபகரணங்கள் வழங்குதல், சிறுவர் விளையட்டு உபகரணங்கள், ஆசிரியைகளுக்கு அன்பளிப்புகள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியைகளுக்கு வழிகாட்டல்கள் வழங்குதல். நன்றாக வேலை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்து அன்பளிப்பு பாராட்டுக்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இத்தகைய நல்லுள்ளம் கொண்ட சமூகப் பணியாளர்களுடன் இணைந்து சேவையாற்றக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே ஒரு முழு நேர சமூகப் பணியாளராகவும் சுயதொழில் நிலையத்திற்கான முகாமையாளராகவும் தன்னை அர்ப்பணித்து செயற்பட வாய்ப்பு வழங்கியமை என்று குறிப்பிடலாம்.

நீங்கள் இறுதியாக கூறுவது என்ன?

இந்த பொருளாதார நெருக்கடியான கால கட்டத்திலும் துவண்டு விழாமல் குடும்ப பொருளாதார வாழ்வை மேலும் திறன்பட முன்னெடுத்து செல்வோம். எனவே இந்த நெருக்கடியான கால கட்டத்தில் காவேரி கலா மன்றத்தினர் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நல்லாதரவையும் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

நேர்காணல் : இக்பால் அலி

 

https://chakkaram.com/2022/06/10/இலங்கை-பொருளாதார-நெருக்-2/

 

 

 

 


 

 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி செல்வம் மேரி நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.