Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னீரை வாழி அனிச்சமே ! - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                       நன்னீரை வாழி அனிச்சமே !

                                                                                                                        --- சுப. சோமசுந்தரம்

            நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின் வாடி" எனச்  சாற்றும் பாலைக்கலியைப்  பாடிப் பார்த்தவன். அஃதாவது தனது நிழலில் நின்று பொய்யுரைத்த ஒருவனது இதயம் படபடக்க, அவனது உடலியல் மாற்றத்தின் விளைவாக மரம் வாடி நின்ற கதை அது. ஒருவன் பொய்யுரைத்ததை உலகிற்குப் பறைசாற்றிய பொய் காண் கருவியாய் (Lie detector) மரம் நின்ற அறிவியல் அது. இங்ஙனம் இயற்கையுடன் மனிதன் சங்க காலத்தில் கொண்ட மேதகு உறவினை சங்கமருவிய காலத்தும் கொண்டு செல்லும் வேட்கையும் சான்றாண்மையும் படைத்தவன் நம் தலைவன்.
        
          தற்காலத்தில் காதலின் நுட்பம் அறிந்த தலைவனொருவன் ஒரு நாள் முழுதும் தானே தலைவிக்காக சமையல் செய்வதாகவோ அல்லது இன்னபிற குற்றேவல்கள் செய்வதாகவோ உறுதி ஏற்பதில்லையா ? அதுபோல நமது அக்காலத் தலைவன் தானே மலர்கள் கொய்து மாலையாக்கித்  தலைவிக்குச் சூட ஆவலுற்றான். அவன் வாழ்ந்த இடச்சூழல், அப்பருவச் சூழல் இவற்றின் தாக்கத்தினால் சோலை எங்கும் அனிச்சத்தின் ஆட்சி மலர்ந்திருந்தது. பூவினத்தில் மென்மையானது எனப் பார் போற்றும் அனிச்சத்தின் ஆட்சி வன்முறை ஏதுமற்ற மென்முறை ஆட்சி. மலர் கொய்யவே செடியினை அணைந்து நின்றவன் மலரினின்றும் விலகி நின்றான். மோப்பக் குழையும் அனிச்சம் என்பதினால் மூச்சுக்காற்றும் தீதாம் எனும் அச்சம். அகலாது அணுகாது தீக்காய்வார் போல் பூக்காய்ந்தான் போலும். நற்றிணை மாந்தர் மரஞ்செடி கொடிகளுடன் உறவாடியதைப் போல் மலரிடம் உரையாடினான், " அனிச்சமே ! உன் மென்மையுடன் மேன்மையாய் நீ வாழ்க ! எனினும் உன்னை விட மென்மையானவள் நான் வீழும், வாழும் என் தலைவி" என அவன் அவளின் நலம் புனைந்துரைத்தான். வேறு மானிடரிடம் சென்று இவ்வாறு உரைப்பதுதானே தற்பெருமையாகவும் முதிர்ச்சியின்மையாகவும் அமையும் ? தன் மனதிடம் உரைப்பது போல் மலரிடம் உரைப்பது கலைநயம் அன்றி வேறென்ன !

"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்"

      ----(குறள் 1111; களவியல்; அதிகாரம்: நலம் புனைந்துரைத்தல்)

          மலர் கொண்டவன் மாலை கட்டினான். அக்கலை அவளிடமே அவன் கற்றது. கட்டும்போது கவனமாக ஒவ்வொரு மலராகக் காம்பினைக் களைந்தான். அவன்தன் மனத்திரையில் பழங்காட்சியொன்று விரிந்தது. அனிச்சமலரை மட்டுமே தாங்கும் வல்லமை பெற்ற மெல்லிடையாள் அவள். எனவே ஒரு முறை அனிச்சத்தைச் சூட முனைந்த அவளிடம் சொன்னான், "காம்பினைக் களையாமல் சூடிக் கொண்டாயானால், நல்ல பறை ஒலியாது; சாப்பறைதான் (இழவுக் கொட்டுதான்) ஒலிக்கும்". அதாவது மலரின் எடை தாங்கும் அவளின் இடை, மலர்க்காலின் எடை தாங்காது முறிந்திடுமாம்; அப்புறம் இழவுதானாம். "அந்தப் பாறாங்கல்ல நீ தூக்ககுனே, அப்புறம் எழவுதாம்லே !" என்று இக்காலத்தில் கூட நண்பனிடம் சொல்வதில்லையா ? அப்போதும் அதே சொல் வழக்கு !
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை"

    ---(குறள் 1115)
(நுசுப்பு - இங்கு இடைவருத்தத்தைக் குறித்தது)

           பெருந்தடாகக் கரையின் அமைந்த பொழில் அது ஆதலின், ஆங்கு மணலானது அனிச்சத்தினும் மென்மையாய் அமைந்ததோ, என்னவோமேலும் தடாகத்தின்கண் நீந்தும் அன்னப் பறவைகளின் மென்மையான இறகுகள் அம்மணற் பரப்பில் விரவிக்  கிடந்தன; கூடவே அனிச்சத்தின் இதழ்கள் வேறு. மாலையுடன் தலைவியின் வரவுக்காகக் காத்திருந்த தலைவன் மணற்பரப்பில் பரவியிருந்த அனிச்ச இதழ்களையும் அன்னத்தின் இறகுகளையும் இயன்றவரை நீக்கி அச்சோலையை மேலும் செம்மைப்படுத்தினான்அனிச்சமும் அன்னத்தின் தூவியும் கூட தலைவிதன் மென்மையான பாதங்களை வருத்துமாம், உதிர்ந்த நெருஞ்சிப் பழம் நம் பாதங்களை உறுத்துவது போல.
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்"

                 ----(குறள் 1120)

           அன்றிலிருந்து இன்று வரை நிலவும் ஆணாதிக்க சமூகத்தில் தலைவிதானே தலைவனின் வழிமேல் விழி வைத்து நிற்பாள் ? அன்றே அதில் மாற்றத்தை நிகழ்த்திய நம் தலைவன் தன்னேரில்லாத் தலைவனே ! அந்தி மாலையில் அவன் கோர்த்த மாலைக்காகவே வந்தது போல் தலைவியும் வந்தாள். மாலை சூடினான் மனம் கவர்ந்த மன்னன் அவன். பொய்கைக் கரைக்கு அவனையணைந்து சென்று அமர்ந்தாள் பதுமை அவள். அவளிடம் படுபாவி (!)  என்னென்ன பிதற்றினானோ, அக்கற்பனை உலகில் கூட அவை நம் காதில் விழவில்லை. விளைவு மட்டும் கண்கூடாய்த் தெரிந்தது. அவன் நெஞ்சமதில் பாவையவள் தஞ்சமானாள். நம் மனத்திரைக்குத் தணிக்கை எதுவும் இல்லை. அம்பலத்தில் சொல்ல தணிக்கை உண்டே ! எனவே அக்காட்சிக்கு இவ்விடத்தில் நிறைவுத் திரை போடும் கையறு நிலை நமக்கு.

            நூறாண்டு பல கழிந்து தலைவனின் வழிவந்த ஒருவன்
"அனிச்சம் பூவழகி
-----------------------------------
------------------------------------

கிறங்க வைக்கும் பேரழகி"

என்று வெள்ளித்திரையில் பாடியபோது ஏற்பட்ட நம் எண்ண அலைகளின் பதிவே மேற்கூறியதாம்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலப் பாடல்களிலும் சமகாலப் பாடல்களிலும் உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருப்பதைப் இங்கு காண முடிகின்றது.......பாராட்டுக்கள் சுப. சோமசுந்தரம்........!   🌹

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.