Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி

  • அப்துல் ரஷீத் ஷக்கூர்
  • பிபிசி செய்தியாளர், கராச்சி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன.

சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம்.

கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோத உள்ளனர். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது ஆசிய கோப்பை போட்டியில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய கோப்பை பந்தயங்கள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு போட்டி மாற்றப்பட்ட போதிலும், அதை இலங்கைதான் நடத்தவுள்ளது.

 

இது டி20 உலகக் கோப்பை ஆண்டு என்பதால், ஆசியக் கோப்பையும் டி20 வடிவில் நடத்தப்படும். ஆசிய கோப்பை போட்டிகள் டி20 வடிவத்தில் நடப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் நடந்த ஆசிய கோப்பை போட்டியும், டி20 வடிவத்தில்தான் நடந்தது.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,THARAKA BASNAYAKA/NURPHOTO VIA GETTY IMAGES

பாரம்பரிய மோதலுக்கான காத்திருப்பு

உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டில், ஆசியக் கோப்பையிலும் அதே வடிவத்தை கடைப்பிடிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

எப்போதும் போல் இந்த முறையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான போட்டி முக்கிய பங்கு வகிக்கும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன், இந்த இரு அணிகள் மோதும் சிறப்பு மிக்க போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பத்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இரு அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோதுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

எந்த ஒரு போட்டியிலும் பாகிஸ்தானும் இந்தியாவும் இருப்பது அதன் தலைவிதியை மாற்றுகிறது. ஆனால் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆசியக் கோப்பை சூழ்நிலையின் கைதியாக இருப்பதற்கும், அதற்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போனதற்கும் என்ன காரணம்?

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் தாக்கம்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் ஆசிய கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1990 ஆம் ஆண்டில், நான்காவது ஆசிய கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது. ஆனால் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது, எனவே பாகிஸ்தான் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

1993-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆசிய கோப்பை போட்டியை நடத்த முடியாமல் போனது.

2018 போட்டிகள் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்தப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மீண்டும் ஒருமுறை முன்னுக்கு வந்தன. அப்போதைய பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் அதை இந்தியாவில் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த போட்டிகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டது.

ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது என்பது இல்லை.1986-ம் ஆண்டு இலங்கை மீது கோபம் கொண்டு இரண்டாவது ஆசியக் கோப்பையை இந்தியா புறக்கணித்தது. இந்த அதிருப்திக்குக் காரணம், 1985ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் தொடர். இதில் நடுவர்களின் பல முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக அமைந்திருந்தன. மேலும் டெஸ்ட் தொடரில் தோல்விக்கு, நடுநிலைமையை கடைப்பிடிக்காத நடுவர்களே காரணம் என்று இந்தியா கூறியது.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் வலுவான நிலை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் வலுவான நிலையின் தாக்கம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் தெரியும் என்றும் இந்த அமைப்பு இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி.

பொதுவாக ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பார். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் செளரவ் கங்குலி. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா உள்ளார். இவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன்.

சில நாட்களுக்கு முன்பு ஆசியக் கோப்பையை இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு மாற்றுவது பற்றி பேசப்பட்டபோது, அதன் முறையான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிடுவதற்கு முன்பு செளரவ் கங்குலி வெளியிட்டதில் இருந்தே, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எந்த அளவுக்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அறியலாம்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விவகாரம் நடந்தது. பாகிஸ்தானுக்கு பதிலாக துபாயில் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று செளரவ் கங்குலி அறிவித்தார். அடுத்த நாளே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் எஹ்சான் மானி அதை கண்டனம் செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகளில், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகியவை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்படுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான உறுப்பினரான பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுக்கு இதுபோன்ற சுதந்திரத்தை வழங்கவில்லை.

எஹ்சான் மானியாக இருந்தாலும் சரி, ஷஹ்ரியார் கானாக இருந்தாலும் சரி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அரங்கில் பாகிஸ்தானின் பங்கு மிக முக்கியமானது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்த காலமும், கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி தாயகம் திரும்பிய காலமும், பின்னர் வரத் தயாராக இல்லாத காலமும் நினைவில் கொள்ளப்படவேண்டும்.

அந்த நேரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சார்பாக ஜக்மோகன் டால்மியா, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டோகிர் ஜியாவுக்கு ஆதரவாக இருந்தார். பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், ஆசிய அணிகளும் அவர்கள் நாடுகளில் விளையாடாது என்று நியூசிலாந்து மற்றும் பிற வெள்ளையர் நாடுகளிடம் அவர் கூறினார்.

இந்தியாவை யார்தான் பகைத்துக்கொள்ளமுடியும். எனவே நியூசிலாந்து அணி ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரை விளையாட பாகிஸ்தானுக்கு வந்தது.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசிய கோப்பையை வென்ற அணிகள்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 14 ஆசியகோப்பை போட்டிகளிலும் கலந்து கொண்டு ஐந்து முறை போட்டிகளை வென்றுள்ள ஒரே அணி இலங்கை.

பாகிஸ்தான் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. 2000 வது ஆண்டு டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பையை பாகிஸ்தான் முதல்முறையாக வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கையை 39 ரன்கள் வித்தியாசத்தில் அது வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்ததற்காக கேப்டன் மொயின் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2012ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

பரபரப்பான இறுதிப்போட்டியில் இரண்டு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை தோற்கடித்தது.அஜீஸ் சீமா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேசம் மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தாலும் தனது முதல் வெற்றிக்காக அது காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-62655464

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை இந்திய கிரிக்கெட் அணி குறித்து எழும் கேள்விகள்

  • சந்திரசேகர் லூத்ரா
  • மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
14 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இந்திய கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பல நாடுகளுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவது மட்டுமின்றி, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.

ஆசிய கோப்பை 2022, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும். இந்தப்போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி ஒரு இடைவேளைக்குப் பிறகும்,கேஎல் ராகுல் காயத்திற்குப் பிறகும் திரும்பியுள்ளனர்.

மறுபுறம், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பெற முயற்சித்து வருகின்றனர்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஆசிய கோப்பை அணியில் இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சாளர் தீபக் செஹர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் ஆகியோர் தேவைப்பட்டால் அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் ஆகியோருக்கு பதிலாக விளையாடுவதற்காக ஸ்டாண்ட் பை வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கோலி விளையாடவில்லை.

தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்த வருகை குறித்தே அதிக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கோலி திரும்புவது குறித்த விவாதம்

தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே உடற்தகுதி உச்சத்தில் உள்ள வீரர்களில் கோலியும் ஒருவர். ஆனால் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்குப் பிறகு இந்தியா 22 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 17 போட்டிகளில் கோலிஅணியில் சேர்க்கப்படவில்லை.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது சராசரி 20.25 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்ட்ரைக் ரேட்டும் முன்பை ஒப்பிடும்போது 128 ஆகக் குறைந்துள்ளது. இதையும் மீறி தேர்வுக்குழுவினர் கோலி மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உடற்தகுதி மட்டுமின்றி கோலியின் சாதனைகளும் அபாரமானவை. இதுவரை விளையாடியுள்ள 99 டி20 போட்டிகளில், கோலி சராசரியாக 50.12 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில், கோலியின் சராசரி 76.81 ஆக உள்ளது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க கோலி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். கடைசியாக 2019 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் சதம் அடித்தார். அவர் 2022 ஜூலை 17 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக விளையாடினார்.

இதற்குப் பிறகு, அவர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் எட்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் ஆகஸ்ட் 18 முதல் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று ஒருநாள் பந்தயங்களிலும் அவர் பங்கேற்கவில்லை.

கோலி நீண்ட நாட்களாக சதம் அடிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவரது திறன் அவரைவிட்டுச்செல்லவில்லை. டி20 போட்டிகளில் சில அரைசதங்களை அவர் அடித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் வரும் நாட்களில் கோலி பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என தேர்வாளர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதும் உண்மைதான்.

ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்களும் சர்வதேச கிரிக்கெட்டில் இதே போன்ற நிலையைக்கடந்து தற்போது பெரிய இன்னிங்ஸை விளையாடி வருகின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், கோலிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்காவது கிடைக்குமா?

சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் பற்றிய கேள்வி

 

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், கோலிக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தனர்.

இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், கோலிக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தனர். 2015 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆனால் தேர்வாளர்கள் ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளனர். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் இந்த தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவரது சமூக ஊடக கணக்குகளில் ரசிகர்களின் கருத்துகளில் பிரதிபலிக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த இந்த இளம் கிரிக்கெட் வீரரின் ஃபார்மைப் பார்க்கும்போது அவர் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே தோன்றியது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு ஸ்டாண்ட் பை வீரர் இடம்கூடக் கிடைக்கவில்லை. மற்ற இரண்டு வழக்கமான டி20 வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியவில்லை.

2021 டி20 உலகக் கோப்பையின் போது ரிசர்வ் ஓப்பனராக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் இந்தமுறை அணியில் சேர்க்கப்படவில்லை.

ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய தொடருக்குப் பிறகு அவர் அணியில் தொடர்ந்தார். ஆனால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் 19 டி20 போட்டிகளில் 30.16 சராசரியிலும், 131.15 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 543 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் பந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை காரணமாக 24 வயது இளம் இஷான் கிஷனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

உலககோப்பை டி20

இப்படிப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் தற்போது ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியுடன் இந்தியா விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கு முன், அணியின் தற்போதைய நிலையைப் பார்ப்பது முக்கியம். 15 வீரர்களில் குறைந்தது 12 வீரர்கள் உலக டி20 அணியில் சேர்க்கப்படலாம். ஆனால் நிச்சயமாக இரண்டு மூன்று இடங்களுக்கு இறுதி தேர்வு மீதமுள்ளது.

அணியில் இடம்பிடிக்கக்கூடிய 12 வீரர்களில் ரோஹித் ஷர்மா, கே.எல் ராகுல் மற்றும் சூர்ய குமார் யாதவ் அடங்குவர். முக்கிய பேட்ஸ்மேன்களான இந்த மூவரும் ஆசிய கோப்பையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். ரோஹித்தும், ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பை வகிக்கின்றனர். அதேசமயம் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் பொறுப்பு சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலிக்கு உள்ளது. இதுதவிர ரிஷப் பந்த் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்தின் பேட்டிங்கைப் பார்த்தால் அணியில் அவரது இடம் உறுதியானது என்றே தோன்றுகிறது.ஆனால், தினேஷ் கார்த்திக்கின் எதிர்காலம் பற்றி அணியின் தேர்வாளர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். சமீப காலங்களில் கடைசி ஓவர்களில் புயல் போல பேட்டிங் செய்ததால் கார்த்திக் பலனடைந்திருக்கலாம். ஆனால் நீண்ட கால திட்டத்தில் அவர் எங்கு பொருந்துகிறார் என்பது முக்கிய கேள்வி. தற்போது இதற்கு யாரிடமும் பதில் இல்லை. .

ஆல்ரவுண்டர்களாக ஹார்திக் பாண்டியா மற்றும் ரவீந்தர ஜடேஜா முதல் தேர்வாக உளனர். இரண்டு வீரர்களும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபாரமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹார்திக் பாண்டியா இங்கிலாந்தில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.

இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நிலையில், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய் மற்றும் யுஜ்வேந்திர செஹல் ஆகியோர் மீது இந்திய ஸ்கோரைப் பாதுகாப்பதற்கும் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பு இருக்கும்.

இருப்பினும் இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாததன் தாக்கத்தை உணரக்கூடும். கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி டி20 அணியில் இடம்பெறவில்லை. ஆனால் ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் பட்டத்தை வெல்வதில் ஷமி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஆசியக் கோப்பை அணியில் இல்லையென்றாலும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவரைப் புறக்கணிப்பது கடினம் என்பதால், டி20 உலக கோப்பை அணியில் முகமது ஷமி இடம்பெறக்கூடும்.

ஆசிய கோப்பை

15வது ஆசிய கோப்பையில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதுவரை இந்த போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், இம்முறை டி20 வடிவில் நடத்தப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகளுக்கு இது உதவும் என்று நம்பப்படுகிறது.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் தவிர, தகுதிச் சுற்று மூலம் வரும்அணி ஏ பிரிவில் இடம் பெறும். பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் குழுநிலையில் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும் மற்றும் இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும். ஆனால் போட்டியின் மிகப்பெரிய பந்தயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆகஸ்ட் 28 அன்று நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-62658450

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல போட்டியை கொடுக்க தயாராக உள்ளோம்

நல்ல போட்டியை கொடுக்க தயாராக உள்ளோம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு நாளை ஆரம்பமாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நாளை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

15 நாட்களில் 13 போட்டிகளுக்குப் பிறகு, அடுத்த ஓராண்டுக்கு ஆசிய சாம்பியன் பட்டம் வெல்லும் அணி தேர்வு செய்யப்படும்.

அதற்காக ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 6 அணிகள் மோதவுள்ளதுடன், அந்த 6 அணிகளும் முதற்கட்ட சுற்றில் ஏ, பி என இரு குழுக்களாகப் போட்டியிடும்.

இதில் 4 அணிகள் ஆரம்ப சுற்று முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன.

சூப்பர் 4 போட்டிச் சுற்றும் லீக் முறையின் கீழ் நடைபெறவுள்ளதுடன், அந்தச் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் இரு அணிகளும் ஆசியக் கிண்ணத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவதில் எங்களுக்கு பெரிய நன்மை இருக்கின்றது.

நாங்கள் நன்றாக தயாராகி வருகிறோம். இலங்கைக்கு வருவதற்கு முன், பல பயிற்சிப் போட்டிகளை நடத்தி வந்துள்ளோம்.

எனவே எங்கள் போட்டியை எதிர்கொண்டு நல்ல வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று நினைக்கிறேன்.

எனவே, ஆப்கானிஸ்தானுடன் நல்ல போட்டியை கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்

  • பராக் ஃபாட்டக்
  • பிபிசி மராத்தி
53 நிமிடங்களுக்கு முன்னர்
 

கெளதம் கம்பீருக்கும், ஷாஹித் அஃப்ரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது

பட மூலாதாரம்,MANAN VATSYAYANA

 

படக்குறிப்பு,

கெளதம் கம்பீருக்கும், ஷாஹித் அஃப்ரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது

இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போதெல்லாம் பார்வையாளர்களின் உணர்வுகள் மட்டும் பொங்குவதில்லை. இரு நாட்டு கிரிக்கெட் பிரியர்களின் உணர்வுகளுடன் கூடவே இரு அணி வீரர்களின் உணர்வுகளும் சிலநேரங்களில் கட்டுக்கடங்காமல் போகின்றன.

போட்டியில் தோல்வியடையக் கூடாது என்ற மன அழுத்தத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் மென்மையை காட்ட விரும்புவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீரர்களிடையே வாக்குவாதங்கள் கடந்தகாலங்களில் ஏற்பட்டுள்ளன. அத்தகைய ஐந்து நிகழ்வுகளைப் இப்போது பார்ப்போம்.

1. அமீர் சோஹைலுக்கும் வெங்கடேஷ் பிரசாத்துக்கும் இடையே மோதல்

பாகிஸ்தான் வீரர் அமீர் சோஹைலுக்கும் இந்திய பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கும் இடையே 1996 உலகக் கோப்பையின் போது இந்த மோதல் ஏற்பட்டது. முதலில் மட்டை வீசிய இந்தியா 287 ரன்கள் எடுத்தது.

 

அமீர் சோஹைல்

பட மூலாதாரம்,GRAHAM CHADWICK

 

படக்குறிப்பு,

அமீர் சோஹைல்

பதிலுக்கு மட்டைவீசிய பாகிஸ்தானின் அமீர் சோஹைல் மற்றும் சயீத் அன்வர் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 84 ரன்களை எடுத்தனர்.

 

சோஹைல் நல்ல ஃபார்மில் இருந்தார். சோஹைல் 51 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தார். பந்து கோட்டை தாண்டியபோது, வெங்கடேஷ் பிரசாத்தை நோக்கி மட்டையை நீட்டிய சோஹைல், மட்டையால் பந்தை காட்டினார்.

சோஹைல் ஒருவேளை தனது ஆக்ரோஷமான பேட்டிங் பாணியின் செய்தியை அவருக்கு கொடுக்க முயன்றிருக்கலாம்.ஆனால் இது வெங்கடேஷ் பிரசாத்தின் மனதை காயப்படுத்தியது. ஆனால், அடுத்த பந்திலேயே பிரசாத் பழிவாங்கினார். சோஹைல் தனது பந்தை மிட்-விக்கெட்டில் ஆட முயன்றார். அவரை ஏமாற்றிய பந்து ஆஃப் ஸ்டம்பை சரித்தது.

 

வெங்கடேஷ் பிரசாத்

பட மூலாதாரம்,HAMISH BLAIR

 

படக்குறிப்பு,

வெங்கடேஷ் பிரசாத்

சோஹைலை ஆட்டமிழக்கச் செய்த பிரசாத் அவருக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டினார். இரு வீரர்களுக்கும் இடையேயான இந்த மோதல் குறித்து பல ஆண்டுகளாக விவாதம் தொடர்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் இந்த மோதலை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

2. ஷாஹித் அஃப்ரீதி மற்றும் கம்ரான் அக்மலுடன் கௌதம் கம்பீர் மோதிய போது

கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு வீரராக அறியப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் 2007-ம் ஆண்டு கான்பூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரீதியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.

கம்பீர் ரன் எடுக்க ஓடியபோது, அஃப்ரீதி மீது மோதினார். ரன்னை முடிக்க விடாமல் அஃப்ரீதி வேண்டுமென்றே தடுக்கிறார் என்று கம்பீர் நம்பினார். இந்த குற்றச்சாட்டுகளை அஃப்ரீதி மறுத்தார். பின்னர் இரண்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் இரு வீரர்களையும் சமாதானம் செய்தார்.

 

கெளதம் கம்பீருக்கும், ஷாஹித் அஃப்ரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது

பட மூலாதாரம்,MANAN VATSYAYANA

 

படக்குறிப்பு,

கெளதம் கம்பீருக்கும், ஷாஹித் அஃப்ரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது

இதன் பின்னர், 2010ஆம் ஆண்டு இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்ற ஆசியகோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மலுடன் கம்பீர் சண்டையிட்டார். சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் கெளதம் கம்பீரின் விக்கெட்டுக்கு பின்னால் கேட்ச் பிடித்ததாக காம்ரான் அக்மல் நடுவரிடம் முறையிட்டார். அதை நடுவர் பில்லி பௌடன் ஏற்கவில்லை.

இதைத்தொடர்ந்து வந்த ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கம்பீருக்கும், அக்மலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த மகேந்திர சிங் தோனி தலையிட்டு விவகாரத்தை சுமூகமாக தீர்த்துவைத்தார்.

3. ஹர்பஜன் சிங் மற்றும் ஷோயிப் அக்தருக்கு இடையிலான தகராறு

 

ஹர்பஜன் சிங் மற்றும் ஷோயிப் அக்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஹர்பஜன் சிங் மற்றும் ஷோயிப் அக்தர்

இலங்கையின் தம்புல்லாவில் 2010 ஆசிய கோப்பை போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் ஷோயிப் அக்தர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 268 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி நான்கு ஓவர்களில் இந்திய அணி 36 ரன்கள் எடுத்தாகவேண்டும்.

47வது ஓவரில் பந்துவீச ஷோயிப் அக்தர் வந்தார். அவரது இரண்டாவது பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸர் அடித்தார். இந்த சிக்ஸருக்குப் பிறகு இரண்டு வீரர்களும் பரஸ்பரம் கத்துவதை பார்க்கமுடிந்தது.

இதையடுத்து முகமது அமீரின் பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ஹர்பஜன் சிங்.

இந்த சிக்ஸருக்குப் பிறகு, ஷோயிப் அக்தரைப் பார்த்தவாறு ஹர்பஜன் சிங் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார். டிரஸ்ஸிங் அறைக்கு செல்லும்படி ஷோயிப்அக்தர் ஹர்பஜனிடம் கூறினார். இந்த வாக்குவாதத்தை யூடியூப்பிலும் பார்க்கலாம்.

4. ஷோயிப் அக்தரிடம் ஷேவாக் 'அப்பா, அப்பாதான்' (பாப் பாப் ஹோதா ஹை') என்று சொன்னாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்திர ஷேவாக். அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷோயிப் அக்தருடன் தனக்கு ஏற்பட்ட தகராறின் கதையைச் சொன்னார்.

ஷோயிப் அக்தர் 150 கிமீ வேகத்தில் பந்துவீசி, வீரேந்திர ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஜோடியை பிரிக்க விரும்பினார்.

தான் 200 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், ஹூக் ஷாட்களை அடிக்குமாறு சொல்லியபடி அக்தர், மீண்டும் மீண்டும் பவுன்சர்களை வீசினார் என்றும் ஷேவாக் குறிப்பிட்டார். ஷோயிப் ஷேவாகைத் தூண்டிவிட விரும்பினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஷேவாக் அவரிடம், 'மறுமுனையில் உங்கள் அப்பா பேட்டிங் செய்கிறார். தைரியம் இருந்தால் அவரிடம் சொல்லுங்கள். அவர் அடித்துக்காண்பிப்பார்," என்றார்.

அடுத்த ஓவரில் டெண்டுல்கருக்கு ஷோயிப் பவுன்சரை வீச, புல் ஷாட் மூலம் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தார். சச்சினின் சிக்ஸருக்குப் பிறகு, நான் ஷோயிப்பிடம், "மகன் மகன்தான். அப்பா அப்பாதான்" என்று சொன்னேன் என்று ஷேவாக் தெரிவித்தார்.

ஷேவாக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஷோயிப் அக்தர் அப்படியொரு சம்பவத்தை மறுத்துள்ளார். 'ஷேவாக் ஒரு வேடிக்கையான கதையைச் சொன்னார். ஷேவாக் உண்மையில் அப்படி என்னிடம் சொல்லியிருந்தால், நான் அவரை களத்திலேயே அடித்திருப்பேன்," என்றார் அக்தர்.

ஷோயிப் அக்தர் உண்மையைச் சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக ஷேவாக் மூன்று சதம் அடித்தபோது, சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த இன்னிங்ஸில் எந்த சிக்ஸரும் அடிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக ஷேவாக் 254 ரன்கள் எடுத்தபோதுதான், டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 2007 இல், ஷேவாக் மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். ஆனால் அப்போது ஷோயிப் பாகிஸ்தான் அணியில் இல்லை.

5. கிரண் மோரேயின் முறையீட்டை தொடர்ந்து குதிக்கத் தொடங்கிய ஜாவேத் மியான்தத்

 

கிரண் மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகள் காரணமாக குதிக்கத்தொடங்கிய ஜாவேத் மியான்தத்

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA ARCHIVES

 

படக்குறிப்பு,

கிரண் மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகள் காரணமாக குதிக்கத்தொடங்கிய ஜாவேத் மியான்தத்

இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் சர்ச்சைகளில் ஜாவேத் மியான்தாத்-கிரண் மோரே சர்ச்சையும் ஒன்று.

1992 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும், கபில் தேவ் 26 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.

பதிலுக்கு மட்டை வீசிய பாகிஸ்தான் அணி 17 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அமீர் சோஹைலும், ஜாவேத் மியான்தாத்தும் அணியின் ஸ்கோரை நிலைநிறுத்தினர். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் என்று இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

மியான்தாத் சச்சின் டெண்டுல்கரின் பந்தை விளையாட முயன்றபோது, விக்கெட் கீப்பர் மோரே கேட்ச்சிற்கு அப்பீல் செய்தார். அதே ஓவரில் மியான்தாத் ரன் எடுக்க ஓடியபோது, மோரே விக்கெட்டை வீழ்த்தி ரன்அவுட்க்கு முறையிட்டார். பின்னர் மியான்தாத் கிரீஸுக்கு உள்ளே வந்தார். இதற்குப் பிறகு, மோரேயின் தொடர்ச்சியான முறையீடுகளை கிண்டல் செய்யும்விதமாக விக்கெட்டில் குதிக்கத் தொடங்கினார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த போட்டியின் வெற்றியை விட மியான்தாத் மற்றும் மோரே இடையேயான சர்ச்சையே அதிகம் விவாதிக்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/sport-62702051

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.