Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் இருந்து குஜராத்துக்கு 1,000 முதலைகள் பயணம் - வாழ்விட பற்றாக்குறையை பூர்த்தி செய்யுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இருந்து குஜராத்துக்கு 1,000 முதலைகள் பயணம் - வாழ்விட பற்றாக்குறையை பூர்த்தி செய்யுமா?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 1976ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் முதலை பண்ணை, இடநெருக்கடி மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, சுமார் 1,000 முதலைகளை சென்னையில் இருந்து குஜராத்தில் உள்ள ஒரு தனியார் விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் அழிந்து வரும் மூன்று வகையான முதலைகளை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட மெட்ராஸ் முதலை வங்கி அறக்கட்டளை (Madras Crocodile Bank Trust), தற்போது உபரி முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், முதலைகளை தனியார் பூங்காவுக்குக் கொடுப்பது பற்றியும் இந்தியாவில் அழியும் உயிரினங்களை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட பல திட்டங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மெட்ராஸ் முதலை பண்ணை கொண்டிருந்த நோக்கத்தைப் போலவே, இந்தியாவில் புலி, சிங்கம், யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் தருவதற்காக தனித்தனியாகப் பாதுகாப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அதோடு, 1950களில் இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டும் காடுகளில் உருவாக்க, தற்போது தென் ஆப்ரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.

அழியும் தருவாயில் உள்ள காட்டுயிர்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக அவை எண்ணிக்கையில் பெருகும்போது, இந்தியாவில் அவற்றில் வாழ்விடங்களுக்கான தேவை இருப்பதாகவும், உபரி விலங்குகளை இடப்பெயர்வு செய்வது மட்டுமே தீர்வாகுமா என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

 

முதலைகள்

பட மூலாதாரம்,MCBT

சென்னை முதலை பண்ணையில் என்ன பிரச்னை?

சென்னை முதலை பண்ணை ஆரம்பத்தில் சதுப்புநில முதலை, உப்புநீர் முதலை, கரியால் உள்ளிட்ட மூன்று முதலை இனங்களை பாதுகாப்பதற்குக் களத்தில் இறங்கியது. முதலைகளைப் பாதுகாத்து அதன் மரபணுக் களஞ்சியத்தை பராமரிப்பது, அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கி முன்னர் எங்கே அந்த முதலையின் வாழிடங்கள் இருந்தனவோ அங்கு மீண்டும் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது. 1976ல் தொடங்கி 1990 வரை இந்தியாவின் பல மாநிலங்களில் முதலைகளை இந்த பண்ணை கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

முதலை பண்ணையின் காப்பாளர் நிகில் விட்டேகர் பேசுகையில், ''இந்தியாவின் பல்வேறு இடங்களில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. பல இடங்களில் அணைகள் கட்டப்பட்டன. முதலைகள் விடப்பட்ட இடங்களில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்ததால், காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் காரணமாக இழப்புகளும் ஏற்பட்டன. அதனால், 1994ல் இந்திய அரசாங்கம் முதலைகளைப் பெருக்கி நீர்நிலைகளில் விடும் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டது. அதனால், எங்களிடம் இருந்த முதலைகளை நாங்களே பராமரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்,'' என்கிறார்.

ஆரம்பத்தில் 13 சதுப்பு நில முதலைகள், இரண்டு உப்பு நீர் முதலைகள் மற்றும் 22 கரியால் முதலைகள்தான் இந்த பண்ணையில் இருந்தன. அவை பல்கிப் பெருகின. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட முதலைகளை இந்தியாவில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களுக்கு இந்த பண்ணை அனுப்பியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள பூங்காக்களுக்கும் அனுப்பியுள்ளது.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,MCBT

இருந்தபோதும் முதலைகளின் இனப்பெருக்கம் அதிகரித்த காரணத்தால் முதலை முட்டைகளை உடைத்து, குஞ்சு பொரிப்பதைத் தடுக்கும் நிலைக்கு ஆளானதாகக் கூறுகிறார் நிகில். ''ஒரு கட்டத்தில், முட்டைகளை உடைத்தால்தான் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. அரசின் வழிகாட்டுதலுடன் அதை 1994ல் இருந்து செய்து வருகிறோம். இருப்பினும் இனப்பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், எண்ணிக்கை அதிகரித்தது,'' என்கிறார்.

தற்போது, எட்டரை ஏக்கர் பரப்பளவில் செயல்படும் முதலை பண்ணையில் சுமார் 700 சதுப்புநில முதலைகள், 41 உப்புநீர் முதலைகள், 48 கரியால் முதலைகள் உள்ளதாகக் கூறுகிறார்.

''எங்கள் அறக்கட்டளை முதலை பண்ணை என்று அறியப்பட்டாலும், பலவிதமான நிலவாழ் ஆமை, நீர்வாழ் ஆமைகள் மற்றும் ஆற்றுநீரில் மட்டுமே வாழும் ஆமை வகைகள், பாம்புகள், பல்லிகள் உள்ளிட்ட பிற ஊர்வனவற்றையும் கொண்டுள்ளது. நாங்கள் ஊர்வனங்களுக்கான காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்படுகிறோம்.

அதனால், அதிகரிக்கும் முதலைகளை அவற்றுக்குத் தேவையான இடவசதியுடன் கூடிய பூங்காவில் சேர்க்க முயன்றோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற குஜராத்தில் கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பமுடிவு செய்தோம்,'' என்கிறார்.

நாம் நேரில் பார்வையிட்ட சமயத்தில், சிறிய அடைப்பில் பல முதலைகள் குறுகி இருந்ததை பார்த்தோம். அவற்றுக்கு விசாலமான இடம் தேவை என்பதை அறியமுடிந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலைகள்

1980 முதல் தற்போதுவரை, மெட்ராஸ் முதலை பண்ணையில் இருந்து வங்கதேசம், இலங்கை, இஸ்ரேல், சிங்கப்பூர், செக் குடியரசு, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதலைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்தியாவில் பதிமூன்று இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவில் ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், காட்டுயிர் சரணாலயங்களில், இனப்பெருக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்ட விலங்குகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் நிகில் தெரிவிக்கிறார்.

ரிலையன்ஸ் ஆதரவு பூங்காவின் பதில் என்ன?

சென்னையில் இருந்து குஜராத்துக்கு கொண்டு செல்லப்படும் முதலைகளுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன என விவரங்கள் கேட்டு அனுப்பட்ட ஈமெயிலுக்கு இதுவரை எந்த பதிலும் கிரீன்ஸ் பூங்கா சொல்லவில்லை. மேலும் பலமுறை தொலைபேசி வாயிலாகவும் பேசியபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அந்த பூங்கா தனது ஆண்டு அறிக்கை 2020-2021ல், இந்தியாவில் வளர்ப்பு உயிரினங்களைப் பராமரிப்பது தொடர்பான தொடர்ச்சியான சிக்கல்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் மெட்ராஸ் முதலை பண்ணையில் உள்ள முதலைகளும் அவற்றில் ஒன்று என்றும் கூறியுள்ளது.

''1994 முதல் மெட்ராஸ் முதலை பண்ணையில் 1,500க்கும் மேற்பட்ட சதுப்புநில முதலைகள் நெரிசலான அடைப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முதலைகளை கவனித்துக் கொள்வதற்கு நிதி ரீதியாகவும் மெட்ராஸ் முதலை பண்ணை சிரமப்பட்டு வருகிறது.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,MCBT

கிரீன்ஸ் பூங்காவின் உதவிக்கான மெட்ராஸ் முதலை பண்ணையின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மெட்ராஸ் முதலை பண்ணையில் இருந்து 1,000 முதலைகளைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன. அங்கிருந்து வரும் விலங்குகளுக்குப் போதுமான இடம், உணவு மற்றும் பராமரிப்பு வழங்கப்படும்,'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை சோதனை முறையில் சுமார் 300 முதலைகள் மெட்ராஸ் முதலை பண்ணையில் இருந்து கிரீன்ஸ் பூங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

1,000 முதலைகள் எவ்வாறு பயணிக்கின்றன?

மெட்ராஸ் முதலை பண்ணை அலுவலர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு முதலையின் அளவுக்கும் ஏற்ப மரப்பெட்டிகள் தயார் செய்யப்பட்டு, அதில் புற்களைக் கொண்டு மெதுமெதுப்பான அடித்தளம் அமைக்கப்படும். முதலை அசைவதற்கு ஏற்றவாறு இடம் நிறைந்த பெட்டியில் வைக்கப்பட்டு பூட்டப்படும். வளர்ப்பு நிலையில் உள்ள முதலை என்பதால், ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அவை உணவு எடுத்துக் கொள்கின்றன. உணவுக்குப் பின்னர் அவை அனுப்பி வைக்கப்படும் என்கிறார்கள்.

மயக்க மருந்துகள் எதுவும் தேவையில்லை என்றும் முதலைகள் நிலத்திலும் நீரிலும் வாழும் என்பதால் அவை எந்த சிக்கலுமின்றிப் பயணிக்கும் என்கிறார்கள்.

இந்த பயணத்தின்போது, பாரத் பென்ஸ் வகை பேருந்தில் அதன் பயணம் முழுவதும் 26 டிகிரி வெப்பநிலை இருக்குமாறு ஏற்பாடு செய்யப்படும், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பயணம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தற்போது வரை பயணத்தை வெற்றிகரமாக முடித்த 300 முதலைகளும் நலமாக இருப்பதால், மீதமுள்ள 700 முதலைகள் அடுத்த கட்டமாக அனுப்பப்படும் என்றும் அலுவலர்கள் கூறுகின்றனர்.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,MCBT

ரிலையன்ஸ் ஆதரவு பூங்காவுக்கு செல்வதில் என்ன சர்ச்சை?

சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஏ.விஸ்வநாதன், முதலைகளின் இடமாற்றத்தை எதிர்த்து ஆகஸ்ட் 2022ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, முதலைகள் எங்கு இடம் பெயர்ந்தாலும் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தனியார் ஆதரவு பூங்காவுக்கு அளிப்பதற்குப் பதிலாக அரசு பூங்காக்களுக்குத் தருவதுதான் சரியாக இருக்கும் என்று வாதிட்டார்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சாமி, ''இடமாற்றம் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகாது. மெட்ராஸ் முதலைப் பண்ணை என்பது புராதனமான ஒரு பண்ணை. உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனம். ஆனால் அவர்களால் அணுகமுடியாத, தீர்வை எட்டாத ஒரு விஷயத்தில் ஒரு தனியார் ஆதரவுப் பூங்கா எப்படி தீர்வு காணமுடியும். மேலும், தனியார் ஆதரவு பெற்றுள்ள பூங்காவில் வியாபார ரீதியாக முதலைகளின் தோல் மற்றும் இறைச்சியை விற்க மாட்டார்கள் என்பதற்கு யார் உறுதியளிப்பார்கள்,'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் உயர் நீதிமன்றம் விஸ்வநாதனின் மனுவை ரத்து செய்து, முதலைகளை மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முதலைகளின் நல்வாழ்வு குறித்து நிபுணர்கள் திருப்தி அடைந்த பிறகு, அதில் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் கூறியது. அதனால், கூடுதல் விவரங்களைச் சேகரித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறுகிறார் சாமி.

கிரீன்ஸ் பூங்கா ஒரு தனியார் நிறுவனம் என்பதால், முதலைகளைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்கக் கூடாது. அது ஒரு காட்டுயிர் உயிரியல் பூங்காவாகத் தொடங்கப்பட்டாலும், அந்த வளாகத்தில் காட்டுயிர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமும் செயல்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது. உயிரியல் பூங்காவிற்குள் மீட்பு மையத்தை ஏன் இணைக்க வேண்டும்?'' என்கிறார் சாமி.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,MCBT

இடமாற்றம் ஏன் எதிர்க்கப்படுகிறது?

நீலகிரி காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் என்பது 1877ல் பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு. அதன் கெளரவ செயலாளராகச் செயல்படுபவர் எஸ்.ஜெயச்சந்திரன். இடமாற்றம் எந்த உயிரினத்திற்கும் தீர்வாக இருக்காது என்று வாதிடுகிறார் ஜெயச்சந்திரன்.

''பல ஆண்டுகளாக பல உயிரினங்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் காட்டுப் பகுதி தொடர்ந்து குறைந்து வருகிறது. முதலையாக இருந்தாலும், யானையாக இருந்தாலும், சிறுத்தைகளாக இருந்தாலும், அனைத்து உயிரினங்களும் அழிந்து போவதற்கான முதல் காரணம் வாழ்விட இழப்புதான். இதுதான் இந்தியாவில் உள்ள உண்மையான பிரச்னை.

புலிகள் பாதுகாப்புத் திட்டம், யானைகள் வழித்தடத்திற்கான திட்டம் என புதிய திட்டங்கள் வருவது நல்லதுதான். சரணாலயங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் காட்டுயிர்களுக்குச் சொந்தமான நிலத்தில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளோம். அவர்களின் உணவை நாம் எடுத்துக்கொண்டு, பலவிதமான ஆய்வுகள் நடத்தி, அந்த காட்டுயிர்களுக்கு பாதுகாப்பு திட்டங்கள் கொண்டு வருவதில் என்ன பயன்?

நாம் நமது வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு காட்டுயிர்களை இடமாற்றம் செய்கிறோம். 1970களில் தொடங்கிய மெட்ராஸ் முதலைப் பண்ணை திட்டத்தில் நாம் சந்தித்துள்ள இடர்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற வளர்ப்பிடங்கள் வைப்பதற்கு முன் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி யோசிக்க வேண்டும்,'' என்கிறார் ஜெயச்சந்திரன்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இடமாற்றத்தின் வடிவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார், "இடமாற்றம் என்பது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. சிறிது காலத்திற்குப் பிறகு புதிய இடத்திலும் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அங்கும் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பிரச்னையைக் கையாளுவதற்குப் பதிலாக, பல்வேறு இடங்களில் பிரச்னைகளைப் பெருக்குவதை நாம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

எடுத்துக்காட்டாக, 1973ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், அழிவின் விளிம்பிலிருந்த புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்கினார். இப்போது, இந்தியா முழுவதும் சுமார் 4,000 முதல் 5,000 புலிகள் உள்ளன. சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற உயிரினங்களைப் பாதுகாக்க தனித்தனி திட்டங்கள் உள்ளன. இப்போது ஆப்ரிக்காவிலிருந்து மத்திய பிரதேசத்தில் சிவிங்கி புலிகளைப் புகுத்தியுள்ளார்கள்.

பல்வேறு உயிரினங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை, ஆனால் நமது காடுகளின் திறனைப் பார்க்கும்போது, காட்டுயிர்களின் பெருக்கத்திற்கு இணையாக பல ஆண்டுகளாக அது வேகமாக அதிகரிக்கவில்லை. முதலைகளின் விஷயத்திலும், ஆறுகள், பிற நீர்வழிகள் மற்றும் காடுகளை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால், இப்போது முதலைகள் சென்னையில் இருந்து குஜராத்திற்கு இடம் பெயரும் தேவை ஏற்பட்டிருக்காது,'' என்றார் ஜெயச்சந்திரன்.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?

நீலகிரியில் உள்ள தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியின் காட்டுயிர் உயிரியல் துறை உதவிப் பேராசிரியரும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முதலைகள் குறித்த ஆராய்ச்சியாளருமான பி.கண்ணன் கூறுகையில், வளர்ப்பிடங்களில் உள்ள உயிரினங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார்.

''முதலைகளுக்கு கருத்தடை முறைகள் எதுவும் இல்லை. வளர்ப்பிடங்களில் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது கடினம்தான். இயற்கை வெளியில் முதலை முட்டையை பிற விலங்குகள் உட்கொள்ளும் அல்லது முட்டை சேதமாகும். ஆனால் வளர்ப்பிடத்தில் முட்டைகள் பாதுகாப்பாக இருப்பதால், அவை குஞ்சு பொறிப்பதற்கு 100 சதவீத சாத்தியம் உள்ளது,'' என்கிறார்.

மேலும், ஆண், பெண் முதலைகளை தனித்தனி அடைப்புகளில் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்கிறார். ''முதலைகளை பிரித்து வைத்திருந்தால், ஒரு கட்டத்தில் அவை தங்களுக்குள் சண்டையிடலாம். ஒன்று மற்றொன்றை கொல்லக்கூடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அவை பிரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்படலாம். ஆனால் ஆண்டு முழுவதும் சாத்தியமில்லை.

 

சென்னை முதலை பண்ணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வளர்ப்பிடங்களில் உணவு கிடைப்பது எளிது, இரையைத் தேட வேண்டாம். அவை அடைப்புப் பகுதிகளில் சுற்றி நகர்வதோடு சரி. அதனால் இனப்பெருக்க காலத்தில் முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளை நாமாக அழிக்கவில்லை என்றால், அனைத்து முட்டைகளும் குஞ்சு பொரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் எல்லா முட்டைகளையும் ஒவ்வொரு முறையும் நாம் முழுமையாக அழித்துவிடுவோம் என்று சொல்லமுடியாது. அதனால், எண்ணிக்கை குறுகிய காலத்தில் அதிகரித்துவிடுகிறது,'' என்கிறார் கண்ணன்.

இந்தியாவில் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பான வழி இடமாற்றம்தான் என்கிறார் கண்ணன்.

''ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, அவற்றை வேட்டையாடுவதை அனுமதிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் மிகவும் கடுமையானது. கொலை மற்றும் வேட்டையாடுதல் கடுமையான குற்றம். அதனால் இந்தியாவில் வேட்டையாடுவதை ஒரு வாய்ப்பாக வைக்க முடியாது. அதனால், உயிரினங்களின் இடத்தை அவர்களுக்கு மீட்டளிப்பதுதான் ஒரேவழி.''

https://www.bbc.com/tamil/india-63268000

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

சென்னையில் இருந்து குஜராத்துக்கு 1,000 முதலைகள் பயணம் -

யார் வழியனுப்பி வைத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

யார் வழியனுப்பி வைத்தது?

உதய நிதி...அடுத்த  முதல்வருக்கு டிரெயினிங்காம்😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.