Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்” ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன.

22-9-2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை?

ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் 2 மாதத்திற்கு பின் இங்கிலாந்து மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு மாற்றம்.

மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவை பரிசோதிக்காமல் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என இங்கிலாந்து மருத்துவர் முடிவு செய்துள்ளார்

சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

https://athavannews.com/2022/1305589

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையின் முக்கிய தகவல்கள்; சசிகலாவை விசாரிக்க பரிந்துரை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜெயலலிதா மரணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3-3:50க்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுவதாக நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மயங்கி விழுந்த ஜெயலலிதா

ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக மறைந்த முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர். சிறிதும் தாமதிக்காமல், மயங்கி விழுந்த முதல்வரை உடனடியாக ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதித்தனர். முதல்கட்ட நோயறிதலுக்கு பின் அவர் ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

'கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ அறுவை சிகிச்சை'

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் மூலம் அறியப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது.

 

அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

பட மூலாதாரம்,TNDIPR

 

படக்குறிப்பு,

அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

வி.கே. சசிகலாவை விசாரிக்க பரிந்துரை

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-63296216

  • கருத்துக்கள உறவுகள்

'ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோவை தவிர்க்க தந்திரம் செய்த மருத்துவர்' - ஆறுமுகசாமி அறிக்கை

3 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஜெயலலிதா மரணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தமது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்பன உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

'சுயநினைவுடன் ஒப்புதல் அளித்த ஜெயலலிதா'

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா, 25.11.2016 அன்று மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது அவருடன் விவாதித்து முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு மறைந்த முதல்வர் ஒப்புதல் அளித்தார்.

மறைந்த முதல்வரின் இதயத்தில் வளர்ந்த வெஜிடேஷன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது மேற்சொன்ன அமெரிக்க மருத்துவரின் கருத்தாக இருந்தது. (பக்கம் 551, 552 - 47.16 )

 
 

அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

பட மூலாதாரம்,TNDIPR

 

படக்குறிப்பு,

ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சென்ற ஆகஸ்டு மாத இறுதியில் முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

'புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர்...'

மேற்சொன்னவை 25.11. 2016 அன்று டாக்டர் பாபு ஆபிரகாமால் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருந்தது. புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர் அவருக்கு இதே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்ட உடனேயே அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். இரண்டு மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து வந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு மாற்றப்பட்டது.

'ஆனால் அன்று மருத்துவ ரீதியாக மறைந்த முதல்வரை பரிசோதிக்காத இங்கிலாந்து மருத்துவர் எழுத்துபூர்வமாக அல்லாமல் நேரடியாக வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது' என்பது குறிப்பிடத்தக்கது. அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு ஆபிரகாம் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளார். இம்முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவும் பெற்றிருந்தார். நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம். இது அமெரிக்க மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். (பக்கம் 552, 553 - 47.17 )

'தந்திரம் செய்த டாக்டர் பாபு ஆபிரகாம்'

அன்றே நடைமுறையை செய்ய ஒப்புக்கொண்ட டாக்டர் சமீன் சர்மாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்மாற்றம் பின்னிட்டு யோசனையாக வந்துள்ளது. டாக்டர் சமீன் ஷர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து மறைந்த முதல்வரும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம் ஏன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது. எனவே ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றவருக்கு உதவ டாக்டர் பாபு ஆபிரகாம் தீவிர மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பிலே அறுவை சிகிச்சை தள்ளிப் போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆலோசனை வழங்கினார் என்று ஆணையம் முடிவு செய்கிறது. (பக்கம் 553 - 47.18)

ஜெயலலிதா இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது?

 

ஜெயலலிதா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரைக் கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்னல என்பதை அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும். (பக்கம் 537 - 46.71)

வேறு தேதியில் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு

மறைந்த முதல்வரின் மருமகன், தீபக்கின் சாட்சியத்தின்படி, மனறந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். நோயுற்ற மறைந்த முதல்வரை அருகிலிருந்து கவனித்துக்சகாண்ட மற்றும் அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்கனளயும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 04.12.2016 அன்று மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை தீபக் அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும். (பக்கம் 538 - 46.73)

ஜெயலலிதா ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை (பக்கம் 557 - 47.27. ஒ)

இரண்டு நுரையீரல்களிலிருந்தும் (ஒரு நாளைக்கு சுமார் 1000 மிலி) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டாவது, மருத்துவமனையில் ஆதரவாக நெருங்கிய உறவினர் இல்லாத மனறந்த முதல்வர் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 558 - 47.27.ஓ)

டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனைத்துச் செல்லத் தயாரென்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 - 47.27.ஓள)(பக்கம் 558 - 47.27. ஃ)

டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கியபின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 - 47.27. அ.அ)

சசிகலா தவிர யார் மீது விசாரணைக்கு பரிந்துரை?

 

சசிகலா

பட மூலாதாரம்,AIADMK OFFICIAL TWITTER

 

படக்குறிப்பு,

சசிகலா

47.28. இந்த அனனத்து கருத்துகளிலிருந்தும், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர்.ஜே. இராதா கிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.

47.29. டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் பம்பாய், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமோகன் ராவை பொறுத்தவரை செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பம் விடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை தவிர ஆணையம் அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை. நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும். குறிப்பாக இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (பக்கம் 559 - 47.30)

'அப்போலோ பிரதாப் ரெட்டி வெளியிட்ட பொய்யான அறிக்கை'

அதேபோல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார். இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும் மறைந்த முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது. (பக்கம் 559, 560 - 47.31)

https://www.bbc.com/tamil/india-63297741

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says '18-10-2022 ஜனியர் சிகிச்சையை தடுக்க திறமையாக செயல்பட்டிருக்கிறார் சசிகலா! சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம், "ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தள்ளிப்போடலாம்" என்று இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்ததாக தந்திரம் செய்திருக்கிறார். தவிர்க்க முடியாத அனுமானம் என்னவெனில் ஜெயலலிதாவுக்கு சரியான நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க, சசிகலாவால் திறமையாக உத்தி கையாளப்பட்டிருக்கிறது! ஜனியா ஆறுமுகசாமி ஆணையம்! foi /juniorvikatan www.vikatan.com /vikatan'

 

May be an image of 3 people and text that says 'BREAKING NEWS RVEILLANCE SUN /NEWS 2 ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில்... 1 டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் கடைசி மூச்சுவரை ஏன் அது நடக்கவில்லை! எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்போல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை! சசிகலா, கே.எஸ்.சிவகுமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரை! 5 சசிகலா வெளியேற்றப்பட்டு 2012 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவர் இடையே சுமுக உறவு இல்லை! சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர எந்த முடிவுக்கும் வர இயலாது; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்! Dfo SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 18 OCT 2022'

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா, அப்படி முடிவு செய்தால் நேரடியாக நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? நடவடிக்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?

"விசாரணை ஆணையத்தின் அறிக்கையை நீதிமன்ற உத்தரவுபோல எடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

"வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது" என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் தவிர, "டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் மும்பை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றும் ஆணையம் குறிப்பிடுகிறது.

 

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமா?

ஆனால், "உண்மை கண்டறிவதற்காக அமைக்கப்படும் ஒரு அமைப்பின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளலாம், அல்லது ஏற்க மறுக்கலாம். அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை." என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"ஜல்லிக்கட்டு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் அறிக்கை அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவிலேயே சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது." என்று அவர் குறிப்பிட்டார்.

 

கற்பகவிநாயகம்

பட மூலாதாரம்,KARPAGAVINAYAGAM

 

படக்குறிப்பு,

முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம்

ஆயினும், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முடிவுகள் வெறும் பரிந்துரைகள் மாத்திரமே. அது எந்த வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கட்டுப்படுத்தாது." என்கிறார் அவர்.

விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யலாமா?

"அதில் எந்தத் தவறும் இல்லை" என்கிறார் தமிழ்மணி.

அதே நேரத்தில், விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும் ஆணையமே அவர்களை விசாரித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, "விசாரணை ஆணையத்துக்கு சில அதிகார எல்லைகள் இருக்கின்றன. மேலும் உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்ததன் காரணமாக, நிதி விரயம் என்ற கெட்டபெயர் ஆணையத்துக்கு வரத் தொடங்கியது. அதனால் விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்துக்கு ஏற்பட்டிருந்தது. அதனால்தான் விசாரணையை அரசிடம் ஆணையம் ஒப்படைத்திருக்கிறது" என்கிறார் தமிழ்மணி.

அடுத்து என்ன நடக்கும்?

அரசின் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பது சட்ட நிபுணர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

"குற்றம் செய்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய அரசு உத்தரவிட முடியும்" என்கிறார் தமிழ்மணி.

"முதலமைச்சரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்புடைய துறைகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். அனேகமாக சிபிசிஐடிக்கு விசாரணை நடத்த உத்தரவிடலாம். அவர்கள் வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலட்சியம், நோக்கம் ஆகியவை குறித்த தகவல்களை அவர்கள் திரட்டுவார்கள். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். தேவைப்பட்டால் கைதுகூட செய்யலாம்" என்கிறார் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

 

அரிபரந்தாமன்

பட மூலாதாரம்,ARIPARANTHAMAN

 

படக்குறிப்பு,

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

ஆணைய அறிக்கையை அரசு கிடப்பில் போட வாய்ப்பிருக்கிறதா?

விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் பெரும்பாலும் 'தோல்வியாகவே' முடிந்திருப்பதாக நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். "விவகாரத்தின் சூட்டைத் தணிப்பதற்காகவே விசாரணை ஆணையங்கள் வழக்கமாக அமைக்கப்படுகின்றன. மிகவும் அரிதாகவே அவை பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன" என்கிறார் அவர்.

1980-களில் திருச்செந்தூர் கோயில் அதிகாரி கொலை வழக்கில் நீதிபதி பால் ஆணைய அறிக்கை போன்ற மிகச்சில விசாரணை அறிக்கைகள் மீதுதான் அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்று அரிபரந்தாமன் குறிப்பிட்டார். 1980-களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, பால் ஆணைய அறிக்கையின் நகலை வெளியிட்டதன் காரணமாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் "அரசு கிடப்பில் போட முடிவெடுத்திருந்தால் அதை சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்" என்கிறார் கற்பக விநாயகம். தற்போது அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் அரசு தயக்கம் காட்டினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்கள்.

அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியுமா?

ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை எதிர்த்து அதில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தை நாடலாமா என்று கேட்டபோது, "அவை வெறும் பரிந்துரைகள்தான்; உத்தரவு அல்ல என்பதால் யாரும் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள்" என்கிறார் அரிபரந்தாமன்.

ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் பட்சத்தில் நீதிமன்றங்கள் அதை ஏற்பதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

சசிகலா வழக்கறிஞரின் விளக்கம்

விசாரணை அறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாக ஆணையத்தில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகிறார்.

 

ராஜா செந்தூர் பாண்டியன்

 

படக்குறிப்பு,

என். ராஜா செந்தூர் பாண்டியன், வழக்கறிஞர்

"அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யார் மீது குற்றம் என்பது குறித்து முடிவு செய்யக்கூடாது. சிகிச்சையில் குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதை மீறி ஆறுமுகசாமி ஆணையம் செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே கடைசிவரை விசாரிக்கப்படவே இல்லை என்பதும் சந்தேகத்துக்கு உரியது," என்று கூறுகிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.

https://www.bbc.com/tamil/india-63304100

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இறப்புக்கும் முந்தைய 28 மணி நேரத்துக்கும் இடையே நடந்தது என்ன?

45 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆறுமுகசாமி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

மேலும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மருத்துவமனையின் என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 4.12.2016 அன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மறைந்த முதல்வரின் சிகிச்சை அறையில் சலசலப்பு நிலவியதாகக் கூறினார். செவிலியர் மகேஸ்வரி, தான் பிற்பகல் 2 மணியளவில் பணிக்கு வந்ததாகக் கூறினார். அவரிடம் ஜெயலலிதா தொலைக்காட்சியை அணைக்க சொன்னதாகவும், சிறிது நேரம் கழித்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். (பக்கம் - 532, 46.63)

4.12.2016 அன்று, நளினி என்ற தொழில்நுட்ப ஊழியர், பிற்பகல் 3.50 மணிக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு ECHO ஸ்கேன் எடுத்தார். ஆனால், எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என அவர் சாட்சியம் அளித்தார். அவர் அறைக்குள் சென்ற நேரத்தை வைத்து பிற்பகல் 3.50 மணியளவில் என அவர் உறுதிப்படுத்தினார். இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனரான காமேஷ் என்பவரின் சாட்சியத்துடன் நளினியின் சாட்சியத்தை இணைத்து, அவர் மதிவாணன், பஞ்சாபகேசன் மற்றும் அருண், மூன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனர்கள் மற்றும் டாக்டர் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு இதய மசாஜ் செய்தார்.

 

சிபிஆர் மாற்றாகச் செய்யப்படலாம், எனவே அவர்கள் பயிற்சி பெறாத நபர்களின் உதவியைப் பெற்றனர். பின்னர் 'ஸ்டெர்னோடமி' செய்யப்பட்டது. டாக்டர் டி. சுந்தர் மற்றும் டாக்டர் டி. என். ராமகிருஷ்ணனின் சான்றுகளின்படி, உடல் அசைக்கப்படாமல், 15 நிமிடங்களுக்கு ஸ்டெர்னோடமி செய்யப்பட்டது. சி.பி. ஆர் செய்யும்போது ஸ்டெர்னோடமி செய்ய முடியாது என்று சொன்னார்கள். ஆனால், டாக்டர் மதன் குமார், சி.பி.ஆர் மற்றும் ஸ்டெர்னோடமியை ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறினார். (பக்கம் - 532, 533 - 46.64)

எக்கோ டெக்னீஷியனின் கூற்றுப்படி, 4.12.2016 அன்று, மாலை 3.50 மணிக்கே 'மாரடைப்பு' என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும். மேலும் (1) இதயம் செயல்படுகிறதா (2) Pericardial உள்ளதா மற்றும் வால்வுகளிலிருந்து கசிவு ஏதும் இல்லை போன்ற மூன்று பொருண்மைகளைக் கவனித்தார் அப்போது அங்கிருந்த Duty Doctor டாக்டர் ரமாதேவி இருப்பதாக விபிசி மானிட்டரில் அவரால் கவனிக்கப்பட்டதாகவும் இதயத்தின் VF மாறியது, இதயம் மட்டும் அதிர்ந்தது, ரத்த ஓட்டம் இல்லை என்று கூறினார். (பக்கம் 533 - 46.65)

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், சி.பி.ஆர் உடன் ஒரே நேரத்தில் ஸ்டெர்னோடமி மேற்கொள்ளப்பட்டது மற்றும் அது சம்பந்தமாக, உடல்நிலை மோசமடைந்துக்கொண்டிருந்த மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிக்க மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். ஸ்டெர்னோடமி செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, டாக்டர் ராம தேவி கூறியது போல் மறைந்த முதல்வருக்கு ரத்தப்போக்கு அல்லது ரத்த ஓட்டம் எதுவும் இல்லை. இதுவே அவர் அப்போது உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது. (பக்கம் - 533 - 46. 66)

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன், டாக்டர் ஆர். ஜெயந்தி, நாள்தோறும் சுமார் 12000 பேர் தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தனது சாட்சியில் கூறினார். சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி பற்றி அவரிடம் கேட்டபோது, உடலில் ரத்த ஓட்டம் இருந்தால் ஸ்டெர்னோடமியின் போது, தோல் வெட்டப்பட்டால், ரத்தம் வர வேண்டும் என்றும் சி.பி.ஆர் செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் என்றும் கூறினார் ( பக்கம் - 534 - 46. 67)

இந்த விவகாரத்தில் டாக்டர். மினல் எம் வோராவின் மற்றொரு சாட்சியமும் உள்ளது. 04. 12. 2016 அன்று நள்ளிரவு 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தில் சில நிமிடங்களுக்கு ரிதம் கண்டதாகவும், மறைந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்ட பிறகு அவரின் கண் இமைகள் திறைந்து மூடியதாகவும், அவர் சுவாசித்ததாகவும் பின்னிட்டு 05. 12. 2016 அன்று காலை 9. 45 மணிக்கு அது பதிவு செய்யப்பட்டது எனவும் அவரின் முதன்மை விசாரணையில் தெரிவித்தார் (கோப்பு எண். 5, பக்கம் எண் 224).

அவரது குறுக்கு விசாரணையில் (பக்கம் எண். 10) , அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு தானாக ரிதம் இருந்ததாகக் கூறினார். (05.12. 2016 அன்று அதிகாலை 4.45 மணிக்கு கோப்பில் எழுதப்பட்டது). டாக்டர் ஏ.எல். அருள் செல்வன் மீண்டும் அழைக்கப்பட்ட போது, எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முன்னிலையில், 4.12. 2016 இரவு மற்றும் 5. 12. 2016 அதிகாலையில் அவரது இடது pupillary response காணப்பட்டதாக அவரது சாட்சியத்தில் கூறினார்.

டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் தனது சாட்சியத்தில் 05. 12. 2016 அன்று அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு மறைந்த முதல்வரின் இதயம் செயல்பட்டதை குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் மறைந்த முதல்வரின் வாயில் ஸ்ட்ரா வைத்து, GAG -ஐ கண்டனர் அதுவும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. எம்பாமிங் செய்வதற்கு 10-15 மணி நேரத்திற்கு முன்பே மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் சுதா சேஷய்யனின் சாட்சியத்துடன் ஒப்பிடும் போது, மேற்கண்ட கூற்றை ஏற்க முடியாது. (பக்கம் - 534, 535 - 46. 68)

 

ஆறுமுகசாமி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்தார்"

மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷய்யன், இரவு 11.30 மணியளவில் எம்பாமிங் தொடங்கியபோது, மறைந்த முதல்வர் எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என கண்டறிந்தார். மேலும் மறைந்த முதல்வர் ECMO இல் இருந்தபோது மரணத்தை அறிவிக்க, அப்போலோ மருத்துவமனை 5.12 2016 அன்று AIIMS குழுவை வரவழைத்தது. அப்போதுதான் முதல்முறையாக தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எய்ம்ஸ் மருத்துவர்கள் 5. 12. 2-16 அன்று மாலை 5.00 மணியளில் வந்து, நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு (normothermia) கொண்டு வருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து பரிசோதித்து, இதய செயல்பாடு எதுவும் காணப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். எனவே மறைந்த முதல்வரை ECMO- இலிருந்து நீக்க அறிவுறுத்தினர். மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எண்ணமில்லாத போது ஏன் அவரை சாதாரண உடல் வெப்பநிலைக்கு அவர்கள் கொண்டுவந்தனர் (normothermia) என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. இதிலிருந்து நளினியின் சாட்சியத்தின்படி, மாலை 3. 50 மணிக்கு மறைந்த முதல்வரின் மரணம் உறுதி செய்யப்பட்டது என்பதும், சிபி ஆர், ஸ்டெர்னோடமி மற்றும் AIIMS மருத்துவர்கள் குழுவை அழைத்தது முற்றிலும் நேரத்தை போக்குவது மற்றும் வீணானது என்பதையும் மிகவும் தெளிவாகிறது AIIMS மருத்துவரரான டாக்டர் வி. தேவ கெளரவ் பக்கம் எண். 2இல், சிபிஆர் செய்து 45 நிமிடங்களுக்குப் பிறகும், இதயம் செயல்படவில்லை என்றால், அவர்கள் அந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பார்கள் என்று கூறினார். அவருடைய இதயம் மீண்டும் செயல்படாது என்றும் அதை செயல்படுத்த முடியாது என்றும் நன்கு அறிந்த அவர்கள், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை நீட்டித்தனர். ( பக்கம் - 535, 536 - 46. 69)

மேற்கூறிய சான்றுகளிலிருந்து சுயநலம் கருதி மறைந்த முதல்வருக்கு மூளைச் சாவு ஏற்படாதது போல் தங்களைத் திருப்திப்படுத்துவதற்காக அப்போலோ மருத்துவமனை கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், 28. 9.2016 முதல் அவர் இறக்கும் வரை, ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சாதாரண ஆஞ்சியோகிறாம் செய்ய யாரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆணையம் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது. அதற்கான காரணமும் கோப்புகளில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக யாரிடமும் எந்த அறிக்கையும் இல்லை. ( பக்கம் - 536, 537 - 46.70).

 

Presentational grey line

 

Presentational grey line

மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05. 12. 16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரை கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 04.12.16 அன்று பிற்பகல் 3.50 மணிக்கு மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்கள் தெளிவான சாட்சியங்களும் சாட்சியங்கள் ஆகும் ( பக்கம் - 537, 46.71).

எக்கோ கார்டியோகிராம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் அறிதல் நடைமுறைகளால்கூட மறைந்த முதல்வர் பயன் பெற தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது மறைந்த முதல்வருக்கு தாமதமாக சிபிஆர் செய்யப்பட்டது சாட்சியங்களின் சாட்சியத்தின் படி மாலை 4:20 மணிக்கு சிபிஆர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட்டபோது மருத்துவமனையின் கருவி சுத்தம் செய்பவர்கள் மூன்று பேரால் சிபிஆர் செய்யப்பட்டது இயக்கத்தக்க வகையில் மறைந்த முதல்வரின் முதலில் மின் முறை மற்றும் ரத்த ஓட்டம் நிறுவப்பட்டல பிறகு அவரின் அந்த மாறமுடியாத நிலையில், அவரின் உடலில் சிபிஆர் செயல்முறை தொடங்கப்பட்டது ( பக்கம் - 537, 538 46.72).

செல்வி மகேஸ்வரி, செவிலியர், 04. 12. 2016 அன்று மதியம் பணிக்கு வந்ததாக அவரது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதல்வர் 04. 12. 2016 அன்று காலை உணவு எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் அவர் பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸை/ (cornflakes) எடுத்துக் கொண்டார். பகல் நேர முறைப்பணியில் இருந்தவர்கள் மறைந்த முதல்வர், மதியம் 1 மணியளவில் வாந்தி எடுத்ததாகக் கூறினர். அவர் பணிக்கு வந்தவுடன், உணவு உண்ண விரும்புகிறீர்களா எனக் கேட்க, அவர் காத்திருக்கும்படி சைகை செய்தார். பின்னர் தயாராக வைக்கப்பட்ட உணவை உண்ண மறுத்ததுடன், T.V பார்த்துக் கொண்டிருந்ததை அணைக்குமாறு கூறினார். சிறிது நேரத்திற்குப் பின்னர், அவர் சுவாசிப்பதற்கு சிரமமாக இருப்பதாக சைகை மூலம் அவரிடம் தெரிவித்தார் (பக்கம் 430, 431 - 40.9)

பிரேமா அந்தோணி, Incharge Nurse, 04.12. 2016 - அன்று அவர் இரண்டு முறை மறைந்த முதல்வரின் அறைக்குச் சென்றதாகக் கூறினார். அவரது கூற்றுப்படி, மறைந்த முதல்வர் காலை உணவை உட்கொண்டார். ஆனால், அவருக்கு அது தெரியாது. மேலும் மாலை 3.30 மணியளவில், அவர் கதவு வழியாக அவரைப் பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை; CCU மருத்துவரும், தலைமை மருத்துவரும் அங்கேயே இருந்தனர். (பக்கம் 431 - 40.10)

 

ஆறுமுகசாமி அறிக்கை - ஜெயலலிதா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரேமா அந்தோணி, பக்கம் எண் 2, கீழிருந்து 8 வது வரியில், கூறியதாவது:-

"04. 12. 2016- அன்று காலை வழக்கம் போல சிற்றுண்டி சாப்பிட்டார். அன்று மதியம் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை அன்று பாக்கியம் 3: 30 மணி சுமாருக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றார்கள். CCU மருத்துவரும், chief டாக்டரும் அங்கிருந்தார். நானும் கதவுக்கு வெளியிலிருந்து பார்த்தேன். முதலில் இரண்டு மருத்துவர்கள் வந்தார்கள். நான் கண்ணாடி அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன். உள்ளே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்." (பக்கம் 431, 432 - 40.11)

முதலில், இரண்டு மருத்துவர்கள் உள்ளே வந்தனர்; அதன் பிறகு, பல மருத்துவர்கள் வந்தனர்; உள்ளே நடந்தது என்னவென்று அவருக்குத் தெரியவில்னல. மறைந்த முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அவர்கள் கூறினர். பின்னர் மாரடைப்பு ஏன் ஏற்பட்டது, என்ன நடந்தது என்பனத அவரால் விவரிக்க முடியவில்லை. இதய செயலிழப்பிற்குப் பின்னர், மனறந்த முதல்வருக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாது. மேலும் அவருக்கு மனறந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும், எப்போது வெளியே எடுக்கப்பட்டார் என்பது பற்றியும் அவருக்குத் தெரியாது. (பக்கம் 432 - 40.12)

'அழுகை சத்தம் கேட்டது'

பூங்குன்றன், 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், மறைந்த முதல்வரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தப்போது, ஒரு மருத்துவர் உள்ளே சென்று வெளியே வந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஜெயலலிதாவின் அலறல் சத்தம் கேட்டது. அதன் பிறகு, பல மருத்துவர்கள் உள்ளே சென்று, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார். வீர பெருமாள், கூடுதல் டிஜிபி, 4.12.2016 அன்று மாலை 4.30 மணியளவில், அழுகை சத்தம் கேட்டு, மறைந்த முதல்வரின் அறைக்குள் சென்றார். அப்போது, அழுது கொண்டிருந்த ஜெயலலிதாவை, செவிலியர்கள் வெளியே அழைத்து வருவதைப் பார்த்துள்ளார். (பக்கம் 432 - 40.13)

எம். நளினி, 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் அவருடைய மாரடைப்பிற்குப் பிறகு, அவர் மறைந்த முதல்வருக்கு ECHO எடுத்தார் என்று கூறினார். அவர் ECHO எடுத்த போது, இதயம் செயல்படுவது நின்று விட்டதாகவும், மறைந்த முதல்வருக்கு மசாஜ் அளிக்கப்பட்டிருந்த ECHO தொடர்பான கோப்பு -கோப்பு எண்.23. தான் எடுத்த ECHO 04.12.2016 அன்றைய கோப்பில் இல்லை என்றும், அந்த ECHO-வை ஆராய்ந்தால், இதயத்தின் இறுதி அசைவுகள் தெரியும் என்றும் அவர் கூறினார்.

மறைந்த முதல்வருக்கு 04.12.2016-அன்று எடுக்கப்பட்ட ECHO வழக்கமானது அல்ல. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது. பொதுவாக, ECHO எடுத்தால், அந்த நேரம் கருவியிலும், அறிக்கையிலும் காட்டப்படும். அதை அவர்கள் குறிப்பிடுவார்கள். அவரால் குறிப்பிடப்பட்டிருந்த நேரம் மாலை 3.50 ஆகும். அந்த நேரத்தில் தான் அவர் அங்கு சென்றிருந்தார். எந்த நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தின் செயல்பாடு நின்றது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடைசியாக அவரால் எடுக்கப்பட்ட ECHO பதிவு செய்யப்படவில்லை; ஏனெனில் அது மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும். மேலும், அவர் வெளியே அனுப்பப்பட்டார். தான் ECHO எடுத்ததைப் பற்றி ECHO தற்காலிக படிவத்தில் பதிவு செய்தார். பொதுவாக, ECHO எடுக்கும் நேரத்தை மருத்துவமனையே குறிப்பிடும். அப்போது டாக்டர். P.C. ஜெயின்தான் இதயநோய் நிபுணராக இருந்தார் என்பதும் அவருக்கு நினனவில் இல்லை என்றும் கூறியுள்ளார். (பக்கம் 433, 434 - 40.14.)

https://www.bbc.com/tamil/india-63299684

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா

PrakashOct 19, 2022 08:26AM
FotoJet-45-4.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை ஆறுமுகசாமி அறிக்கை மூலம் அரசியலாக்கி விட்டனர் என சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று (அக்டோபர் 18) சட்டசபையில் வெளியிடப்பட்டது. அதில் ’ஜெயலலிதா – சசிகலா இடையே சுமுக உறவு இல்லாததால், தனது சுயலாபத்துக்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க விடாமல் சசிகலா தடுத்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, விசாரணை ஆணைய அறிக்கையை அரசியலாக்கி விட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா நேற்று (அக்டோபர் 18) வெளியிட்டிருந்த அறிக்கையில், ”என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். 

அதற்கு அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையையும் அரசியலாக்கி விட்டார்கள்.

jayalaitha death arumugasamy commission report

தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மாவின் மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அம்மா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தன. உச்ச நீதிமன்றம்கூட இந்த விவகாரத்தில் 30-11 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது.

அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன அம்மாவும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன, அதன் உள்நோக்கம் என்ன, இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். 

jayalaitha death arumugasamy commission report

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்தவிதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவக் குழுவினரேதான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பதுதான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோமருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்து இருந்தோம். 

இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மாவை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று அம்மாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். 

ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/jayalaitha-death-arumugasamy-commission-report-sasikala-statement/

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் ; எந்த விசாரணைக்கும் தயார் - சசிகலா

By T. SARANYA

19 OCT, 2022 | 02:48 PM
image

விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, என் மீது பழிபோட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம் குறித்து வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிதில்லை. என்றைக்கு நான் அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். 

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள்.

கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள், குறிப்பாக திமுகவினர், நம் அம்மா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது, இதற்கு நம் கட்சியினரே பலிக்கடா ஆனார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று. 

என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கியது தான் மிகவும் கொடுமையானது. அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

அம்மாவின் மரணம் பற்றி எத்தனை முறை விசாரித்தாலும், அதன் உண்மை என்றைக்கும் மாறாது. அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் தான், துரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். 

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விததையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30.11.2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. 

அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது.

ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்தஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

என்னையும் அம்மாவையும் எப்படியாவது பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே அம்மாவும், நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம்.

இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன். 2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது. 

இறந்துபோன அம்மா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். 

எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்போலோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. 

உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்திருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம்.

வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று அம்மா அவர்களுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். 

எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நாள் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள், அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனி யாரும் ஆதரிக்கமாட்டார்கள். 

பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்'' என குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி ; தினத்தந்தி

https://www.virakesari.lk/article/137998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.