Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும்

ஜெயமோகன்

jeyamohanJanuary 6, 2023
  • WhatsApp-Image-2022-11-24-at-4.03.40-PM-

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது.

ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது.

இலக்கிய சூழலில் சோர்வூட்டும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்பவர்கள் நான்கு வகையானவர்கள். இந்நால்வரும் என்றும் இருப்பவர்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்கள் இவர்கள் குரலெழுப்ப வழியமைக்கின்றன. எண்ணிக்கைபலத்தால் இவர்கள் ஒரு சக்தியாக ஆகியிருக்கிறார்கள். என்றுமில்லாத அளவு இன்று இவர்களின் குரலால் இலக்கியவாதிகளும் வாசகர்களும் சூழப்பட்டிருக்கிறார்கள்.

அ.  பெரிதாக ஏதும் எழுதாமல் அப்படியே ஓய்ந்துபோன சற்று மூத்த எழுத்தாளர்கள். இலக்கியம் என்பது தீவிரத்தால், அர்ப்பணிப்பால் அடையப்படுவது. அத்துடன் இயல்பான கற்பனையும் அறிவாற்றலும் இருக்கவேண்டும். இவர்களுக்கு இரண்டுமிருக்காது. கொஞ்சம் ஏதோ எழுதிப்பார்த்திருப்பார்கள். திசைதிரும்பி அங்கே இங்கே அலைந்திருப்பார்கள்.

மீண்டு வந்து அமர்வதற்கான திண்ணை என்பது முகநூல். அங்கே மீண்டும் எதையாவது எழுதுவார்கள். ஆனால் கலை கைவிட்டுப்போய்விட்டதென அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே வம்புகளில் ஈடுபடுவார்கள். கசப்புகளையும் அவநம்பிக்கைகளையும் பொழிந்தபடியே இருப்பார்கள். இவர்களின் எதிர்மறை மனநிலை முழுக்க இலக்கியத்தின் வெற்றிகள்மேலும் புதிய எழுச்சிகள் மேலும்தான் இருக்கும்.

ஆ. இலக்கியத்தில் கவனம் பெறாது போன சிறு எழுத்தாளர்கள்.இவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள், செயல்படுவார்கள். ஆனால் இலக்கியம் கைவராது. இலக்கியம் என்றல்ல எந்தக்கலையும் அப்படித்தான். அது முயலும் அனைவருக்கும் அமையவேண்டுமென்பதில்லை. பல காரணங்கள். இயல்பான கற்பனைத்திறன்குறைவு, அறிவுநுண்மையின் போதாமை, வாசிப்பின்மை என. பலசமயம் வாழ்க்கைச்சூழலால்கூட ஒருவர் முழுமையாக வெளிப்பட முடியாமலாகும்.அவர்களுக்கு சூழல்மேல் கசப்பும் அவநம்பிக்கையும் இருக்கும்.

இ. அரசியலாளர்கள். இலக்கியச்சூழலில் அதிகமாகக் கேட்கும் குரல்களில் ஒன்று இத்தரப்பு. இவர்கள் இயல்பிலேயே இலக்கியத்துக்கான மொழிநுண்ணுணர்வும், வாழ்க்கைசார்ந்த பார்வையும் இல்லாதவர்கள். இளமையிலேயே ஓர் அரசியல்சார்பு உருவாகிவிடும். சுயமான சிந்தனை இல்லாத காரணத்தால் அந்த அரசியல் சார்ந்தே சிந்தனையை முன்னெடுத்து இறுக்கமான நிலைபாடாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழ்ச்சூழலில் அரசியலென்பதே குழுமனப்பான்மை, தலைமைவழிபாடுதான். பெரும்பாலும் அதன் உள்ளுறை சாதியும் மதமும் தனிப்பட்ட நன்மைகளும்தான்.

ஆனால் இவர்களால் பெருந்திரளாக கூட முடியும். கூட்டாக கூச்சலிடமுடியும். அத்துடன் அந்த அரசியலால் இவர்களுக்கு ஓர் அபாரமான தன்னம்பிக்கை உருவாகிவந்திருக்கும். உலகுக்கே வழிகாட்ட, திருத்த, இடித்துரைக்க, கடிந்துகொள்ள, நையாண்டிசெய்ய தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என நம்புவார்கள். அதை எவராலும் உடைக்க முடியாது. அதை இவர்களில் உருவாக்குவது வழியாகத்தான் அந்த அரசியல்தரப்பின் அடித்தளமே அமைகிறது.

இவர்களுக்கு இலக்கியத்துடன் தொடர்பே இல்லை. இலக்கியம் மொழிவழியாக அந்த ஆசிரியன் செய்யும் பயணம், கண்டடைதல் ஆகியவற்றாலானது. இவர்கள் பயணத்திற்கு முன்னரே கண்டடைதலை நடத்தியவர்கள். ஆனால் இவர்கள் இன்றைய சமூக ஊடகச் சூழலால் இலக்கியத்தை நேருக்குநேர் சந்திக்க நேர்கிறது. இவர்களுக்கு இலக்கியம் கண்ணெதிரே தீவிரமாக நிகழ்வது ஒருவகை நிம்மதியின்மையை அளிக்கிறது.

இவர்கள் அறிந்தது அரசியல் மட்டுமே. ஆகவே இவர்கள் பார்வையில் எல்லாமே அரசியல்தான். இலக்கியத்தை ஒருவகை அரசியல் என்று புரிந்துகொள்கிறார்கள். இலக்கியம் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே அது பூடகமான அரசியல் சதி என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இடைவிடாது இலக்கியம் மீது மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கியத்தை திரிக்கிறார்கள். தங்கள் விரும்பியதை கண்டடைந்து அதையே அந்த இலக்கியம் சொல்வதாக ஆணையிட்டுச் சொல்கிறார்கள். இலக்கியவாதிகளை முத்திரையடிக்கிறார்கள். அணிதிரள்கிறார்கள், திரட்டமுயல்கிறார்கள்.

ஈ. இலக்கியப் பாமரர்கள். இவர்களுக்கு வாசிக்கும் வழக்கமெல்லாம் இருப்பல்லை. மிகமிகக்குறைவாகவே எந்த அறிவுசெயல்பாடு பற்றியும் தெரியும். ஆனால் சமூக ஊடகத்தால் இலக்கியத்தை வெறுமே வம்புச்செய்திகளாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் நால்வரும் உருவாக்கும் சில பொதுவான அசட்டுக் கருத்துக்கள் உண்டு. ஓர் இலக்கியவாசகன் இக்கருத்துக்களில் எவற்றையேனும் எவரேனும் சொன்னால் அக்கணமே அவரை அலட்சியம்செய்து விலகிவிடவேண்டும். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த உறவுமில்லை. அவருக்கும் அறிவியக்கத்தில் இடமே இல்லை. அவை இவை.

அ. வாசகர்களை விட எழுத்தாளர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லாரும் எழுதறாங்க. வாசகர்கள் எங்கே?

தமிழில் எழுதுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுக்க அப்படித்தான். தொழில்நுட்பம் அதற்குக் காரணம். ஆனால் அதேபோல வாசிப்பும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் எட்டு நகர்களில் பெரும் புத்தகக் கண்காட்சிகள் நடக்குமென முப்பதாண்டுகளுக்கு முன்பு எவர் நினைத்திருக்க முடியும்? பல்லாயிரம் வாசகர்கள் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முகநூலில் வம்புக்கு வந்து நிற்பவர்கள் அல்ல. மௌனப்பெரும்பான்மை. ஆனால் அவர்களே இலக்கியத்தை தீர்மானிக்கிறார்கள்.

ஆம், இந்த எண்ணிக்கை போதாது. நம் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் வாசிப்பு இன்னும் பத்துமடங்கு ஆகவேண்டும். ஆனால் இன்று வாசிப்பவர்களே லட்சக்கணக்கானவர்கள். அவரவருக்குரியதை வாசிக்கிறார்கள். ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பொருளியல், தொழில்நுட்பம், வாழ்க்கைவரலாறு, அரசியல், புனைகதை. அவர்களில் ஒரு சிறுபகுதியே புனைகதை வாசகர். ஆனாலும் இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் இலக்கிய நூல்கள் வெளிவந்து விற்கப்படுகின்றன. அவற்றில் ஏற்கப்படுவன மீண்டும் அச்சாகி வெளிவருகின்றன.

அந்த போட்டிதான் உயிரின் இயல்பு. மலர்கள் அப்படித்தான் பூத்துக்குலுங்குகின்றன, கனியாகின்றவை சிலவே. விந்துத்துளியில் உயிரணுக்களில் கருவாகின்றது ஒன்றே. ஆகவே நூல்கள் பெருகட்டும். அந்தப் பெருக்கம் வளர்ச்சிதான். அதைக்கண்டு ஏளனம் செய்பவன், ஒவ்வாமை கொள்பவன் அறிவியக்க ஆர்வம் கொண்டவனே அல்ல.

ஆ. ஒரு ரெண்டு புக் எழுதினவன்லாம் பெரிய ஆள் மாதிரி புத்தகக் கண்காட்சியிலே அலையறான்.

உள்ளூர் முனிசிப்பல் கவுன்சிலர் விடைத்து திரிவதை கண்டு ஒரு முனகலை வெளிப்படுத்தும் தெம்பில்லாமல் பம்முகிற, உயரதிகாரியிடம் இளிக்கிற பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள்தான் இப்படிச் சொல்கின்றன. ஒரே ஒரு நூல் எழுதியவனும் சரி, நாளை எழுதவிருக்கிறேன் என நம்புபவனும் சரி, வாசகனும் சரி நிமிர்வுகொள்ளட்டும். அதற்கான இடம்தான் புத்தகக் கண்காட்சி.

ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தாலே நீங்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் லட்சத்திலொருவர் என நினைவுகூருங்கள். அதன்பொருட்டே நீங்கள் பெருமிதம் அடையலாம். வேறெந்த நிமிர்வைவிடவும் அது உயர்வானது. அறிவியக்கத்துடன் தொடர்பில் இருக்கிறேன் என்னும் திமிர் உங்களிடம் இருக்கட்டும். புனிதமான உணர்வு அது.

ஆம், நான் வாசகன், நான் எழுத்தாளன் என இங்கு தின்று கழிந்து புணர்ந்து சாகும் இப்பெருந்திரள் நோக்கிச் சொல்லுங்கள். நீங்கள் எங்களை அறியமாட்டீர்கள், ஆனால் உங்களுக்காகவும் நாங்கள் சிந்திக்கிறோம் என்று சொல்லுங்கள். அந்த திமிரை உணரமுடியாதவன் ஒருவகை அற்பன், அவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை.

இ. எழுத்தாளர்களை வாசியுங்க, ஆனா தனிப்பட்ட முறையிலே நெருக்கம் வைச்சுக்காதீங்க. அவங்கள்லாம் நல்லவங்க இல்லை

இதைச்சொல்லும் அற்பன் தன்னை ஏதோ ஒருவகை புனிதன் என நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனுக்கு அரசியல்வாதியை கும்பிட, அதிகாரியை பணிய கூச்சமில்லை. எழுத்தாளனிடம் மட்டும் ஒவ்வாமையாம். எழுத்தாளனும் மனிதனே. அவனுக்கும் கொந்தளிப்புகள் இருக்கும். அவனுக்கும் தன்முனைப்பு இருக்கும். ஆனால் எந்த நல்ல வாசகனும் இந்த உலகில் எழுத்தாளனையே தனக்கு அணுக்கமானவனாக கருதுவான். அவனுடன் பேச, அவனுடன் அணுக்கம் கொள்ளவே துடிப்பான். நான் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். எந்த எழுத்தாளரையும் தேடிச்சென்று பழகுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை.

நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்ட மாமனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்களே. எஞ்சியோர் மானுடசேவைப் பணியாளர்கள். சிந்திப்பவனிடம் மட்டுமே எனக்குப் பேசுவதற்கு இருக்கிறது. என்னுடைய எளிமையான சபைநாகரீகம், ஒழுக்கம் ஆகியவற்றை எழுத்தாளர்களிடம் நான் போடுவதில்லை. எழுத்தாளர் என்னை மதிக்கிறாரா கும்பிடுகிறாரா என்று நான் கவனிப்பதில்லை. எழுத்தாளனிடம் திகழும் ஒன்று உண்டு. சிலரிடம் சுதந்திரம், சிலரிடம் பித்து, சிலரிடம் சிரிப்பு, சிலரிடம் திமிறல், சிலரிடம் கனிவு, சிலரிடம் கனவு…

ஏதோ ஒன்று அவனை எழுத்தாளனாக்குகிறது. அவனை பெருந்திரளில் ஒருவனாக, சாமானியனாக அல்லாமலாக்குகிறது. அதுதான் எனக்கு முக்கியம். அவர் என்னைப்போல் சலவைச்சட்டைபோட்டு உபச்சராமொழிகள் பேசி நான் மதிக்கும் ‘பெரியமனிதர்’ ஆக இருக்கவேண்டும் என்பதில்லை. குடித்துவிட்டு என்மேல் வாந்தி எடுத்த ஜான் ஆபிரகாம் நான் கண்ட மாமனிதர்களில் ஒருவர்தான்.

ஈ. ஆன்லைன்ல புக் வாங்கலாமே, எதுக்கு புத்தகக் கண்காட்சி?

ஆன்லைனில் புத்தகம் வாங்குபவர்கள் எவரும் இதைச் சொல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் மெய்யாகவே புத்தகக் காதலர்கள். இதைசொல்பவர்கள் புத்தக ஒவ்வாமை கொண்டவர்கள். வாசகர்களுக்கு புத்தகங்களை காண்பதே கொண்டாட்டம்தான். ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைவதென்பது தமிழ்ச்சமூகத்தின் மூளையை கண்கூடாக பார்ப்பதுபோல. நம் அறிவியக்கத்தையே ஒரே பார்வையில் பார்ப்பதுபோல.

உ. புத்தகங்கள்லாம் விலை அதிகம், மலிவா வித்தா நல்லது.

புத்தகங்களை மெய்யாக வாங்கும் எவரும் சொல்வதல்ல இது. இன்று ஒரு நல்ல சாப்பாட்டுக்கு எளிதாக ஐநூறு ரூபாய் ஆகிறது. வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஆயிரம். ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஒரு நூல் வாழ்நாள் முழுக்க நம்முடன் இருப்பது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்தகத்தின் விலை குறைத்து வைக்கப்பட்டால் அது கூடுதலாக விற்பதில்லை. அழகான நூல் விலை கூடுதலென்றாலும் அதுதான் விற்கும். அதுதான் புத்தகக் காதலர்களின் உலகம். வெளியே இருப்பவர்களுக்கு அது புரியாது

ஊ. தமிழ்லே தரமான நல்ல நூல்களே இல்லை. அதனாலே வாங்குறதில்லை…

சரி, ஆங்கிலத்தில் அண்மையில் என்னென்ன வாங்கி வாசித்தீர்கள் என்று இப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். பெப்பேப்பே என்று ஏதோ சொல்லி சமாளித்தார். (பொதுவாக புத்தகம் பக்கம் தலைவைத்துப் படுக்காத கூட்டம் சொல்லும் பதில்தான். காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்கள். ஆம், முழுத்தொகுப்புகள்!) ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் தமிழில் இல்லைதான். தமிழில் துறைசார் நூல்கள் பல தரமற்றவையும்தான். ஆனால் ஒருவர் அடிப்படை அறிவுத்தேடல் கொண்டவர் என்றால் தமிழில் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டிய அளவுக்கு நூல்கள் உள்ளன. தமிழ் வாழ்க்கையை தமிழிலக்கியம் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாடு சார்ந்த மகத்தான நூல்கள் ஏராளமாக உள்ளன. சைவம், வேதாந்தம் சார்ந்து தமிழில் ஏராளமான மூலநூல்கள் உள்ளன. முக்கியமான நூல்களின் மொழியாக்கங்கள் உள்ளன.

ஊ. புத்தகம் படிச்சா அறிவாளியா? அதனலே என்ன லாபம்?

அதை புத்தகம் படிக்காதவரிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. புத்தகம் படிப்பவனுக்கு அதற்கான விடை தெரியும்

ஆகவே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுங்கள். திளையுங்கள்

 

https://www.jeyamohan.in/178126/

 

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2023 at 09:06, கிருபன் said:

புத்தகம் படிச்சா அறிவாளியா? அதனலே என்ன லாபம்?

அதை புத்தகம் படிக்காதவரிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. புத்தகம் படிப்பவனுக்கு அதற்கான விடை தெரியும்

உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.