Jump to content

ONE WAY – ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ONE WAY – ஷோபாசக்தி

 
ONE WAY – ஷோபாசக்தி

அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி, அப்பாவின் மரணச் செய்தியை எனக்குச் சொல்லிற்று.

என்னுடைய அப்பா கொஞ்சம் கோணல் புத்திக்காரர். அப்பாவித்தனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள என்னுடைய அம்மா, ஒரு கிறுக்குத் தீவிரவாதியிடம் சிக்கிக்கொண்ட பணயக் கைதியைப் போலத்தான் அப்பாவிடம் சிக்கியிருந்தார். ஆனால், நான் அப்பாவை இலேசாக முறைத்தாலோ, வார்த்தையைச் சிதற விட்டாலோ அப்பாவுக்கு ஏவம் கேட்டு அம்மா என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவார். தன்னுடைய கணவர் ஓர் அருமையான புத்திசாலி, சுத்த வீரர் என்றெல்லாம் சொல்லி அம்மா என்னை எச்சரிப்பார். 

அவர்களுக்குக் கல்யாணமான புதிதில், அம்மாவை ‘அன்பே வா’  திரைப்படம் பார்ப்பதற்காக அப்பா அழைத்துப் போயிருக்கிறார். இடைவேளையின் போது, திரையரங்கில் இருந்த ஒரு வாலிபன் அம்மாவைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். அவன் தன்னுடன் பள்ளிக்கூடத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை – அம்மா அவ்வளவுதான் படித்திருக்கிறார் –  ஒன்றாகக் கற்றவன் என்பதால் அம்மாவும் பதிலுக்குப் புன்னகைத்திருக்கிறார். இதைக் கவனித்த அப்பா உடனேயே அம்மாவைத் திரையரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்று, நடுவீதியில் வைத்து அம்மாவின் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு “யாரடி அவன்?” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு முடிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், எண்பத்தொரு வயதில் அப்பா இறந்துபோவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கூட, அம்மாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு “யாரடி அவன் உன்னைத் தியேட்டரில் பார்த்து இளித்தவன்?” என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து அய்ம்பது வருடங்களாக தோன்றும் போதெல்லாம் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார்.

கோணல் புத்தியிருந்தாலும் அப்பா காரியக்காரர் என்பதில் மறுப்பில்லை. புகையிலைத் தரகு வியாபாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமாக அலைந்து திரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைத் தூக்கி நிறுத்தினார். அவர் தரகு வியாபாரத்தில் சில மோசடிகளையும் செய்வார் எனப் பேச்சுண்டு. சில வழக்குகள் எங்களது வீடு தேடியே வந்துள்ளன. ஊருக்கு நடுவில் ஒரு பென்னம் பெரிய வெறுங் காணியை வாங்கி, அதைத் தென்னஞ்சோலையாக்கி, ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். முதலில் பிறந்தது நான்குமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகக் கட்டுச்செட்டாகப் பணத்தைச்  சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் முயற்சியோடு, எனது நான்கு அக்காமாருக்கும் அம்மாவின் அழகும் இயற்கையாகவே கிடைத்திருந்ததால், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அக்காக்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனர். முதலாவது அக்காவான திலகா பிரான்ஸுக்குப் போனதும், அவரது ஏற்பாட்டில் இரண்டாவது அக்காவான ரோகிணிக்கு மாப்பிள்ளை அமைந்தது. அக்காவை வழியனுப்பும்  கொண்டாட்டத்தில் வீடே  திளைத்திருந்தபோது தான், நான் சொல்லாமற்கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிப்போய், கொண்டாட்ட வீட்டை இழவு வீடு போல மாற்றிவிட்டேன். என்னுடைய அந்தச் செயலை அப்பா ஒருபோதும் மன்னிக்கவேயில்லை.

கடைசி அக்காவான வேணி கல்யாணத்திற்காகப் பிரான்ஸுக்குக் கிளம்பியபோது, நான் சிறையில் இருந்தேன். வேணி அக்கா விமானம் ஏறுவதற்கு முன்பாக, அம்மாவோடு மகசீன் சிறைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டே போனார். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் நான் சிறையிலிருந்து  வெளியே வந்துவிடுவேன் என்று நானே நம்பவில்லை. எனக்கு எப்படியும் முப்பது வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அதுதான் அப்பா கோணல் புத்திக்காரரென்று சொன்னேனே… அவர் ஒரு தடவை கூட என்னைச் சிறையில் வந்து பார்க்கவில்லை. அம்மா தான் ஊரிலிருந்து யாராவது ஓர் உறவினரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு, அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார்.

அம்மா தன்னை வருத்திப் பிடித்த விரதங்களாலோ, கோயில் கோயிலாக வைத்த நேர்த்தியாலோ என்னவோ நான் சிறையிலிருந்து ஏழு வருடங்களிலேயே விடுதலையாகிவிட்டேன். வெளியே வந்ததும், பிரான்ஸிலிருந்த நான்கு அக்காமார்களும் ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு, பயண முகவர் மூலம் என்னைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்கள். நான் இங்கே வந்ததும், அவர்கள் ஒரே குரலில் எனக்கு ஒன்றைச் சொன்னார்கள்:

“தம்பி! நாங்கள் உன்னுடைய வழக்குக்காக ஏழு வருடங்களாகப் பணம் செலவு செய்திருக்கிறோம். உன்னை இப்போது வெளிநாட்டுக்கும் அழைத்துவிட்டோம். அந்தப் பணத்தையெல்லாம் நாங்கள் உன்னிடம் திருப்பிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இனி அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு.”

நான் இயக்கமும் போராட்டமும் கசந்து போய்த்தான், என்னுடைய இருபத்தேழாவது வயதில் பிரான்ஸுக்கு வந்தேன். நான் சிறையிலிருந்த காலத்தில் இயக்கம் என்னை முழுமையாகக் கைவிட்டிருந்தது. என்னுடைய குடும்பமே என்னைக் காப்பாற்றிச் சிறையிலிருந்து மீட்டது. என்னுடைய மிகுதிக் காலத்தைக் குடும்பத்தின் நன்மைக்காகச் செலவழிப்பது என்ற எண்ணத்தோடு, நான் கடுமையாக உழைத்தேன். 

நான் பிரான்ஸுக்கு வந்து அய்ந்து வருடங்களான போது, பயண முகவர் மூலம் அம்மாவையும் அப்பாவையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளுமளவிற்கு என்னிடம் பணம் சேர்ந்திருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அழைப்பதில் என்னுடைய அக்காமார்களும் ஆர்வமாகயிருந்தார்கள். ஆனால், கோணல் புத்திக்காரரான என்னுடைய அப்பா வெளிநாட்டுக்கு வர மறுத்துவிட்டார். “என்னால் உங்களைப் போல அகதியாக மானம் கெட்டு வாழ முடியாது. வேண்டுமானால் அம்மாவைக்  கூப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்பாவைத் தனியே விட்டுவிட்டு அம்மா வரமாட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர்களை அழைப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான், என்னுடைய மச்சாள் முறையான செவ்வந்தியை இலங்கையிலிருந்து பயண முகவர் மூலம் பிரான்ஸுக்கு வரவழைத்துத் திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் செய்த ஒரேயொரு புத்திசாலித்தனமான செயல் அதுதான். கல்யாணங்களின் போது ‘இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒருவரையொருவர் பிரியோம்’ எனச் சாட்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், செவ்வந்தி மச்சாள் அந்த உறுதிமொழியை இப்போதுவரை தீவிரமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்.

அப்பா இறந்த போது, தூரத்து உறவினர் தான் அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. கொள்ளியிட உரித்துள்ள நானும், அக்காக்களும் பிரான்ஸில் அகதி நிலையில் வசிப்பதால் எங்களிடம் இலங்கைக் கடவுச்சீட்டுக் கிடையாது. எங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியிருக்கும் அகதிகளுக்கான கடவுச்சீட்டில் <இலங்கைக்குப் பயணம் செய்ய  அனுமதியில்லை> என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றும் அப்பா பிள்ளைகுட்டி இல்லாதவரைப் போல அநாதையாக இறந்துவிட்டார். அம்மாவுக்கு இப்போது எண்பது வயதாகிவிட்டது. முதுமையின் கனியாகிய நோய்கள் அவரில் பூரணமாகப் படர்ந்திருந்தன. அப்பாவுக்கு ஏற்பட்ட கதிதான் அம்மாவுக்கும் ஏற்படும் என்ற பதற்றத்திலேயே நான் இரவுகளில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன். 

ஆனால், பகலிலும் எனக்கொரு கெட்ட சேதி வந்தது. சமையலறைப் பானைக்குள் மறைந்திருந்த பாம்பு  அம்மாவைத் தீண்டியதால், அவர் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று பெரியக்கா எனக்கு அலைபேசியில் சொன்னதும், நான் உடனேயே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன். அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து என்னிடம் பேசிய முதல் விஷயமே, தன்னை உடனடியாகப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தது.

அப்பா தவறிப் போன சில நாட்களிலேயே, பிள்ளைகள் நாங்களும் இதுபற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அம்மா அவராகவே வாய்விட்டுக் கேட்டுவிட்டார். அந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சொன்னால் உங்களாலேயே சரிவரப் புரிந்துகொள்ள முடியாத போது, படிப்பறிவற்ற, உலகமறியாத என்னுடைய அம்மா எப்படிப் புரிந்துகொள்வார் சொல்லுங்கள்!

அகதிகளான நாங்கள் ‘ஸ்பொன்ஸர்’ செய்து அம்மாவை அழைக்க முடியாது. பயண முகவர் மூலம் அம்மாவைச் சட்டவிரோதமான வழிகளில் தான் பிரான்ஸுக்கு வரழைக்க முடியும். அதைத் தவிர வேறெந்த வழியும் எங்கள் முன் கிடையவே கிடையாது. ஆனால், இந்த வயதில் அம்மாவை எப்படி ஒரு சட்டவிரோதப் பயணத்திற்குள் நாங்கள் தள்ளிவிட முடியும். அந்தப் பயணத்தில் பல பனிப்பாலைகளையும் குளிராறுகளையும் கால்நடையாகவே கடக்க வேண்டியிருக்கும் அல்லது ஏதாவது ஒரு திருட்டுக் கடவுச்சீட்டிலோ, போலி விசாவிலோ அம்மா ஆகாய மார்க்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். வழியில் ஏதாவது ஒரு விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் சிறையில் போட்டுவிடுவார்கள். பெரியக்காவின் கணவர் ஒரு யோசனையைச் சொன்னார். ஒருமுறை சுற்றுலா விசாவுக்கு முயற்சித்துப் பார்க்கலாம். கிடைத்துவிட்டால், அம்மா பிரான்ஸுக்கு வந்ததும் இங்கே அகதியாகப் பதிவு செய்துவிடலாம்.

அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதுமாக என்னிடமே கொடுக்கப்பட்டிருந்ததால், நான்தான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அம்மா ஒரளவு உடல்நலம் தேறியதும், அவருக்குத் தெரிந்த ஒருவரின் உதவியோடு கொழும்புக்குச் சென்று, பிரஞ்சுத் தூதரகத்தில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தார். நேர்முக விசாரணையில் தூதரக அதிகாரி ஒரேயொரு கேள்விதான் கேட்டாராம்:

“நீங்கள் முதியவராக இருக்கிறீர்கள். உங்களை அலையவைக்க நான் விரும்பவில்லை. உங்களுக்கு மூன்று மாதங்கள் விசா வழங்கிவிடலாம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்ததும் நீங்கள் மறுபடியும் இலங்கைக்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

நான் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தேன். எனவே நேர்முக விசாரணைக்கு முன்பாகவே, நான் அம்மாவை இது விஷயமாக எச்சரித்திருந்தேன். எனவே அம்மா தூதரக அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக “ஊரில் நிலமும் வீடும் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு நான் பிரான்ஸிலேயே தங்கிவிடமாட்டேன்” என்றிருக்கிறார். 

அதற்கு அந்த அதிகாரி “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான நிலங்களும், வீடுகளும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் அய்ரோப்பாவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட்டுத் திரும்பி வரவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, அம்மாவின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். 

அந்த நிராகரிப்பு எனக்கு அம்மா மீதுதான் கோபத்தைக் கிளப்பிவிட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே, நான் அழைத்தபோது அம்மாவும் அப்பாவும் கிளம்பி இங்கே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சட்டவிரோதப் பயண முகவர் மூலம் பயணம் செய்யுமளவுக்கு அப்போது அம்மாவுக்குத் தெம்பிருந்தது. இங்கே வரும் வழிகளும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. நிறையச் சனங்கள் பயண முகவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்த போலி விசாக்களோடு கொழும்பில் விமானம் ஏறி, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி அகதித் தஞ்சம் கேட்டார்கள். அது இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பெரிய கெடுபிடிகளில்லாமல் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போதோ அங்கே போரும் முடிந்துவிட்டது. அம்மாவும் பழுத்து முதுமையடைந்து நோயாளியாகிவிட்டார். ஒருநாளைக்குப் பன்னிரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். பிரான்ஸின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் இன்னும் எத்தனை வருடம்தான் அவர் சீவித்துவிடுவார்? வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரத்தைக் கொண்டுவந்து நட்டால் கூட அது இந்தக் காலநிலையில் செத்துவிடுகிறதே. இலங்கையின் வெயிலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் அம்மாவுக்கு அதிக ஆயுளைக் கொடுக்கக்கூடும். இயலாமையால் என்னுள் எழுந்த தாழ்வுணர்ச்சியை விரட்டுவதற்காக, நான் இப்படிக் காரணங்களை வலிந்து தேடிக் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால், பிரான்ஸுக்கு வந்தே தீருவது என்பதில் அம்மா மிக உறுதியாகயிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணங்களில் ஏதொன்றையும் என்னால் மறுத்துப் பேசிவிடவே முடியாது.

“கவனமாகக் கேள் தம்பி! இந்த ஊர் காடாகி வருடங்களாகிவிட்டன. பாம்பும், பூரானும், விசர் நாய்களும்தான் இங்கே நாட்டாமை. ஊரில் பத்து வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றன. யுத்தத்தின் போது, இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரவேயில்லை. எங்களுடைய வீட்டைச் சுற்றி அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு யாருமேயில்லை. மின்சாரம் இரவில் வராமல் பகலில் மட்டுமே எப்போதாவது வருகிறது. இந்த வீட்டில் நோயாளிக் கிழவியான நான் எப்படித் தனித்திருக்க முடியும்? கிழக்குத் தெருவில் என்னைப் போலவே தனியாக வசித்துவந்த கிழவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். செய்தது கொள்ளையர்களா? ஆவா குறூப்பா? ஆர்மியா? நேவியா? என்று யாருக்குமே தெரியாது. கிழக்குத் தெருவுக்கும் மேற்குத் தெருவுக்கும் பெரிய தூரமா என்ன? எப்போது வேண்டுமானாலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” 

“அம்மா…நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு சொந்தக்காரர்கள் யாருடைய வீட்டிலாவது போய் இருக்கலாமே?”

“யார் வீட்டுக்குப் போவது? உன்னுடைய அப்பா எல்லோருடனும் பகையைத் தேடி வைத்துவிட்டுத்தானே போயிருக்கிறார். ஆனால் ஒன்று… அவராகச் சண்டையை ஒருபோதும் தொடக்கியதில்லை. சரி… இப்போது நான் போய் யாராவது சொந்தக்காரர்களோடு இருந்தாலும், அவர்கள் என்னை நன்றாக வைத்துப் பார்ப்பார்களா? என்னிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். தம்பி! இது நீயிருந்த இலங்கையில்லை. எல்லோருமே வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

“இப்போது இங்கே வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அம்மா. சட்டங்களை இறுக்கிவிட்டார்கள்… உங்களுக்கும் வயதாகிவிட்டது.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்ற மாதம்தானே செல்லையாவின் பெண்சாதியைப் பிள்ளைகள் கனடாவுக்குக் கூப்பிட்டார்கள். அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு. மனுசி சக்கர நாற்காலியில்தான் உலாவியது. எனக்கு இன்னும் இரண்டு கால்களிலும் தெம்புள்ளது. நான்தான் தனியாகக் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறேன், வளவில் தேங்காய் பொறுக்கி வைக்கிறேன், மழை வெள்ளம் வீட்டுக்குள் ஏறும்போது, நான்தான் தனியாகவே சிரட்டையால் அள்ளி அள்ளித் தண்ணீரை வெளியேற்றுகிறேன். பஸ் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து பெரியாஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு என்னால் இப்படித் தனியாக இருக்க முடியும் தம்பி? எனக்குப் பதினைந்து பேரப் பிள்ளைகள்! ஒருவரது முகத்தைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் நான் செத்துப்போனால், என்னுடைய உடம்பு தான் வேகுமா? எனக்குக் கொள்ளி வைக்க நீ தான் வருவாயா?”

அக்காமார்கள் முழுவதுமாக அம்மாவின் பக்கமே நின்றார்கள்:

“தம்பி! அம்மா இதுவரை எங்களிடம் பணம் அனுப்பு என்று ஒரு ஈரோ கூடக் கேட்டதில்லையே. நாங்களாக அனுப்பும் பணத்தைக்கூட அவர் தாராளமாகச் செலவு செய்து அனுபவிக்காமல், சிக்கனமாகச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார். அவருடைய கடைசிக்கால விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தம்பி… உன்னிடம் பணம் போதாமலிருக்கிறது என்றால் நாங்களும் தருகிறோம். அம்மா வந்ததும் நீ தான் அவரை வைத்துப் பராமரிக்க நேரிடும் என்று தயங்காதே. நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் இருக்க, மருமகளின் பொறுப்பில் அவரை விட்டுவிட மாட்டோம்.” 

அம்மாவை வரவழைப்பதற்கு நான்தான் ஏதோ முட்டுக்கட்டை போடுகிறேன் என்பது போலவே அக்காமார்கள் பேசியது எனக்கு இன்னும் கோபத்தைக் கூட்டியது. அந்த ஆத்திரத்தில் அன்றைக்கே ஒரு பயண முகவரைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் இயற்கை உணவு அங்காடியில் வேலை செய்யும் கைலாசநாதன் உதவிக்கு வந்தார். அவரது நண்பரொருவர் கொழும்பில் பயண முகவராகயிருக்கிறார் என்று சொல்லித் தொலைபேசியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஏஜெண்ட் கேட்ட தொகை மிக அதிகம் என்றாலும், நான் ஒப்புக்கொண்டேன். விமானப் பயணம்தான். ஏஜெண்டுக்கு முதலில் பாதிப் பணத்தைச் செலுத்துவதென்றும், அம்மா பிரான்ஸ் வந்து இறங்கியதும் மீதிப் பணத்தைக் கொடுப்பதென்றும் பேசிக்கொண்டோம். அக்காமார்களிடம் செப்புச் சல்லி வாங்கவும் நான் விரும்பவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் வழித்துத் துடைத்துப் பாதித் தொகையை ஏஜெண்டுக்குச் செலுத்தினேன். மீதித் தொகையைக் கட்டுவதற்கு செவ்வந்தியின் நகைகள் இருக்கின்றன.

பணம் கிடைத்ததும், ஒரே வாரத்தில், அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் அங்கிருந்து அம்மாவைப் பாரிஸுக்கு அனுப்ப ஓர் இந்தியக் கடவுச்சீட்டைத் தயார் செய்தான். டெல்லியிலிருந்து  பிரான்ஸுக்கு வரும் முதியவர்களால் நிரம்பப்பெற்ற சுற்றாலாக் குழுவுக்கு நடுவில் அம்மாவைத் தந்திரமாகக் கலந்துவிட்டான். இந்தத் தந்திரத்தை மிகப் பழமையானதும் எளிமையானதுமான மறு தந்திரத்தால் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உடைத்துவிட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் ஒன்று…இரண்டு…மூன்று எனப் பத்துவரை விரல்விட்டு எண்ணிக் காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணிக் காட்டியிருக்கிறார். இந்தியர்கள் இப்படி எண்ணும் போது, எங்களைப் போல விரல்களை ஒவ்வொன்றாக மடக்காமல், விரல்களை ஒவ்வொன்றாக விரித்தே எண்ணுவார்களாம். எனவே அம்மா இந்தியரல்ல என்பதை அதிகாரிகள் சுளுவாகக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அம்மாவை டெல்லியிலுள்ள குடிவரவுச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலை ஏஜெண்ட் தயக்கத்தோடு தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, நான் படு தூஷணத்தால் அவனைத் திட்டித் தீர்த்தேன். எண்பது வயது மூதாட்டியொருவர் மொழி தெரியாத நாட்டில்,  சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு என்னைவிட அதிக ஆத்திரம் ஏற்படுகிறதா இல்லையா! அம்மா சிறையிலிருக்கும் செய்தியை நான் அக்காமார்களிடம் மறைத்துவிட்டேன். அவர்களால் இந்தச் செய்தியைத் தாங்கவே முடியாது. அவர்களது துக்கமெல்லாம், நான்தான் பயண ஏற்பாட்டில் கவனமின்றித் தவறிழைத்துவிட்டேன் என்பது போல என்மீதே கோபமாகத் திரும்பும். 

என்னுடைய மொத்தக் கோபமும் அந்த முட்டாள் ஏஜெண்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கைலாசநாதன் மீது திரும்பியது. அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், என்னிடம் தும்பு பறக்க ஏச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இனிமையான குணமுள்ள அந்த மனிதர் என்னுடைய கவலையையும் கோபத்தையும் புரிந்துகொண்டு, முட்டாள் ஏஜெண்டைப் பாடாகப் படுத்தி, அம்மாவை அய்ந்தே நாட்களில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டார். அம்மா சிறையிலிருந்து வெளியே வந்து, தொலைபேசி வழியாக என்னிடம் பேசும் போது, நான் உண்மையிலேயே குழறி அழுதுவிட்டேன். முட்டாள் ஏஜெண்ட் மறுபடியும் ஒரு முயற்சியை மும்பை விமான நிலையம் வழியாக எடுப்பதாகச் சொன்னான். “ஒரு மயிரும் வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்” என்றேன். அப்படியானால் தனக்குக் கொடுத்த பாதிப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றான். “வேண்டாம்… அது எனக்கு வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் சென்றால் போதும்” எனச் சொல்லிவிட்டேன். 

அடுத்த வாரம், அம்மா இலங்கையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்:

“தம்பி! இந்தியா வழியாக வருவது கொஞ்சம் கஷ்டம் போலல்லவா இருக்கிறது… இப்போது உக்ரேன் வழியாகத் தான் சனங்கள் பிரான்ஸுக்கு வருவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்…”

“அம்மா… அங்கே கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்கிறது” என்றேன்.

“அது பரவாயில்லைத் தம்பி… நான் பார்க்காத சண்டையா! நீ வீணாகப் பயப்படாதே! நாளைக்கே சாகப்போகிற கிழவியான என்னை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார் அம்மா.

அம்மா ஒவ்வொரு நாளுமே எங்கள் எல்லோரையும் வாட்ஸப்பில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னால் ஒரு நிமிடம் கூட இலங்கையில் இருக்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “காசு பணம் இருந்து என்ன பலன்? சாப்பாட்டுச் சாமான்கள் எதுவும் கிடைப்பதில்லையே! சனங்கள் இங்கே பஞ்சத்தில் சாகப் போகிறார்கள். சீனாக்காரன் கொடுக்கும் அரிசிப் பசையையும், குப்பையில் விளையும் கீரையையும் சாப்பிட்டே இங்கே வாழ வேண்டியிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட பின்பும் நிம்மதியாக ஒருபிடி சோறு தின்பதற்குப் பிள்ளைகளான எங்களுக்கு எப்படி மனம் வரும்!

எனக்கு அங்காடியில் வேலை ஓடவேயில்லை. அம்மாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிராசையால் ஏங்கியே என்னுடைய அம்மா அநாதையாகச் செத்துவிடுவாரா என்றெல்லாம் யோசித்து எனது தலை கொதித்துக்கொண்டிருந்தது. நான் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதை யூதரான முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். என்னைக் கூப்பிட்டு, ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி, அம்மையார் கேட்டிருக்கும் இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று, அவரது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். நான் பட்டியலிலுள்ள பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிவாறே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே போவதென்றாலே என்னிடம் ஓர் உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். இப்போது உற்சாகம் ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குச் சற்று ஆறுதலாகவேயிருந்தது.

நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த யூதரின் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்த போது, என்னுடைய முதல் வேலையே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குப் பொருட்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. அவரது வீடு அதிக தூரத்திலில்லை. நான் வேலைக்கு வந்து இறங்கும் ட்ராம் தரிப்பிடத்திற்கு, எதிரேயிருந்த சிறிய காணித் துண்டிலேயே அவரது பழமை வாய்ந்த வீடு இருந்தது.

பிரஞ்சு – கோர்ஸிகா பெற்றோருக்குப் பிறந்த ஒலிம்ப் அம்மையாருக்குக் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவின் வயதுதான் இருக்கும். அம்மாவைப் போலவே இவரும் தனிமையிலேயே வசிக்கிறார். சராசரி உயரம் உள்ளவர் என்றாலும், அவரது முதுகில் பெரிதாகக் கூன் விழுந்திருப்பதால், சிறிது குள்ளமாகத் தோற்றமளிப்பார். முகத்தில் இலேசாகத் தாடி மீசை அரும்பியிருக்கும். உச்சந்தலையில் சிறிதளவு வழுக்கையுமுண்டு. ஒலிம்ப் அம்மையார் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உளவியலில் பட்டப் படிப்புப் படித்தவராம். அவரது வீடு முழுவதும் கருப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்கள் எல்லா இடங்களிலுமே அடுக்கப்பட்டிருக்கும்.

நான் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்ற முதல் நாளிலேயே, அம்மையார் தன்னுடைய சாம்பல் நிறச் சிறிய கண்கள் ஒளிர என்னைப் பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசினார்.

“அழகிய இளைய மனிதனே! நீ ஸ்ரீலங்கனா?”

“ஆம்… அம்மா” என்றேன்.

அதன் பின்பு, நான் அங்கே பொருட்களை விநியோகிக்கப் போய்வரும் போதெல்லாம் ஒலிம்ப் அம்மையார் என்னிடம் சிறுகச் சிறுகச் சொல்லியது இவைதான்:

“அதுதான் மகனே! அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களே ஆகியிருந்தன. பிரான்ஸ் நாசிப் படையிடமிருந்து விடுதலை பெற்றுச் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போதும் எங்களது குடும்பம் இந்த வீட்டில்தான் வசித்தது. என்னுடைய அப்பா போரில் இறந்துபோயிருந்தார். அம்மா முரடனான ஒரு கிரேக்கனைச் சிநேகிதம் செய்துகொண்டார். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது.

எங்கிருந்து வந்ததெனத் தெரியாத ஓர் இலங்கைக் குடும்பம் இந்த ஊரில் குடியேறியது. அந்தக் குடும்பம் சிங்களக் குடும்பமா? தமிழ்க் குடும்பமா? அல்லது கலப்புக் குடும்பமா? என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயதையொத்த ஒரு பையன் இருந்தான். அவன் எங்களுடைய பாடசாலையில்தான் தான் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஞ்சு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால், போர்த்துக்கேய மொழியை ஓரளவு பேசுவான். நானும் அதை ஓரளவு புரிந்துகொள்வேன். அவனுடைய பெயர் தோமஸ். 

நான் சீக்கிரமே வெட்க சுபாவமுள்ள அந்தக் கறுப்பு அழகனிடம் காதல் வயப்பட்டேன். அப்போது இந்த ஊர் ஒரு சிறு கிராமம். காடு பூத்துக் கிடக்கும். இப்போது போல் அல்லாமல் அப்போது நதியில் ஏராளமாக நீர் வரும். புல்வெளிகளில் குதிரைகள் நிதானமாக மேய்ந்துகொண்டிருக்கும். நானும் தோமஸும் காடுகளுக்குள்ளும் நதியிலும் விளையாடித் திரிந்தோம். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லட்டுமா? தோமஸுக்கு முத்தமிடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. நான்தான் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்.

எங்களுடைய உறவு அம்மாவுக்குத் தெரிய வந்தபோது, அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது காதலனான கிரேக்கன் என்னை முரட்டுத்தனமாக அடித்தான். அப்போதும் நான் தோமஸைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த இலங்கைக் குடும்பமே இந்த ஊரிலிருந்து திடீரெனக் காணாமற் போய்விட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் செல்வேன் என்ற முட்டாளத்தனமான எண்ணமொன்று இந்தக் கிழவியின் மனதிற்குள் ஒளிந்து கிடப்பதை நான் உன்னிடம் மறைக்கத் தேவையில்லைத்தானே மகனே!”

ஒலிம்ப் அம்மையாரின் வீடடில் இலங்கை சம்பந்தமான நூல்கள், படங்கள், சிலைகள், முகமூடிகள், வரைபடங்கள் எல்லாமே இருந்தன. இலங்கையைக் குறித்துப் புத்தகங்கள் வழியாக அவர் ஏராளமாகப் படித்திருந்தார். என்னிடம் பேசுவதால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை அவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், நான் வேலைக்குத் திரும்பாமல் ஒலிம்ப் அம்மையாரது வீட்டில் மெனக்கெடுவது என்னுடைய முதலாளிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. 

நான் ஒலிம்ப் அம்மையாரை ஒருநாள் எனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வகைவகையான இலங்கை உணவுகளைப் பரிமாறினேன். காரத்தால் அவருக்குக் கண்களில் நீர் கசிந்த போதும், தட்டில் வைத்த எதையும் மீதம் வைக்காமல் இரசித்துச் சாப்பிட்டு முடித்தார். அது பிரஞ்சுக்காரர்களின் வழக்கம்.

“அம்மா… நான் ஒருநாள் உங்களை நிச்சயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வேன்” என்று நான் ஒலிம்ப் அம்மையாரிடம் அடிக்கடி சொல்வேன். அவர் சிறு குழந்தையைப் போலப் புன்னகைப்பார். எனக்கே இலங்கைக்குப் போக வழியில்லை என்பது ஒலிம்ப் அம்மையாருக்குத் தெரியாது. 

நான் தள்ளுவண்டியோடு ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அவர் கேட்ட முதல் கேள்வி “ஸ்ரீலங்காவில் உன்னுடைய அம்மா நலமாகயிருக்கிறாரா? கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி விட்டார்களாமே. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அடிதடி என்று பத்திரிகையில் படித்தேன். உன்னுடைய கிராமத்தில் பிரச்சினை ஏதும் இல்லையல்லவா?”

நான் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்கிறேன்! ஒலிம்ப் அம்மையார் ‘பிரச்சினை’ என்று சொன்ன அந்த விநாடியில்தான் என்னுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் திடீரெனப் பளிச்சிட்டு ஓடியது. அதை ஒலிம்ப் அம்மையாரிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் கடுமையான மனப் போராட்டம் எனக்குள் நடந்துகொண்டிருந்த போதே, என்னுடைய பரிதாபத்திற்குரிய நாவு பேசிற்று:

“அம்மா உங்களால் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?”

“சொல்லு மகனே! நிச்சயம் செய்வேன்!”

“இப்போது இலங்கையில் நிலைமை அவ்வளவு சரியில்லை. பஞ்சம் பரவிக்கொண்டு வருகிறது. மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடு. நோயாளியான என்னுடைய அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்து, கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன் அம்மா…”

“ஆம்… அதை நீ நிச்சயம் செய்தாக வேண்டும் மகனே. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”

“நீங்கள் ஒரு ஸ்பொன்ஸர் கடிதம் கொடுத்தால், என்னுடைய அம்மாவுக்கு விசா வழங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்…”

“அவ்வளவு தானா! உன்னுடைய அம்மா பிரான்ஸுக்கு வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்! அவரைப் பயணத்திற்குத் தயாராகச் சொல். நான் இப்போதே நகரசபை அலுவலகத்திற்குப் போய்த் தேவையான படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஸ்பொன்ஸருக்கான பத்திரத்தைப் பெற்று வந்துவிடுகிறேன். நீ வேலை முடிந்ததும் மாலையில் என்னை வந்து பார்!”

நன்றியுணர்வால் எனக்குப் பேச்சு எழவில்லை. என்னுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்புடன் எழுந்துவந்து ஒலிம்ப் அம்மையார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டார்.

நான் வேலையில் இருந்த போது, அங்காடிக்குத் தொலைபேசியில் அழைத்த ஒலிம்ப் அம்மையார் என்னுடைய அம்மாவின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை என்னிடம் கேட்டார். அப்போது ஒலிம்ப் அம்மையார் நகரசபை அலுவலகத்தில் இருந்தார்.

ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் குத்திமுறிய, நான் மாலையின் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை அவரது படிப்பு மேசையின் முன்னே உட்காரவைத்துவிட்டு, அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்து அய்ந்து பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். 

“கேள் மகனே! முதலாவது பத்திரம் உன்னுடையை அம்மாவை நான் விருந்தினர் விசாவில் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்க வைப்பதற்கான நகரசபையின் ஒப்புதல் பத்திரம். இரண்டாவது என்னுடைய வங்கிக் கணக்கு விபரம். மூன்றாவது என்னுடைய பிரஞ்சுத் தேசிய அடையாள அட்டையின் பிரதி. நான்காவது உன்னுடைய அம்மாவை என்னுடைய விருந்தினராக வருமாறு கேட்டு நான் அவருக்கு அனுப்பும் கடிதம். அய்ந்தாவது பத்திரம் உண்மையிலேயே அவசியமற்றது… ஆனால், அதுவே மிக முக்கியமானது என்று நகரசபையில் சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குள் விருந்தினர் பிரான்ஸிலிருந்து வெளியேறாவிட்டால், உள்துறை அமைச்சு என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒப்புதல் தெரிவிக்கும் பத்திரம். இவற்றை எடுத்துக்கொண்டு போய் உன்னுடைய அம்மா கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்தால், நிச்சயமாக விசா கொடுத்துவிடுவார்கள். உன்னுடைய அம்மாவைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நானே அவரிடம் வருவேன்!” 

ஒலிம்ப் அம்மையார் என்னிடம் கொடுத்த ஒவ்வெரு பத்திரத்தின் அடியிலும் நடுங்கும் கையால் ஒலிம்ப் அம்மையார் இட்ட கையெழுத்து இருந்தது.

கிறுக்கலான கையெழுத்து என்றாலும், பிரஞ்சுக் கையெழுத்துக்கு ஒரு மதிப்பிருக்கத்தான் செய்கிறது இல்லையா! கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள்ளேயே, அம்மாவுக்கு மூன்று மாதங்களுக்கான விருந்தினர் விசாவைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் என்னுடைய அக்காமார்கள் பூரித்துப்போய், என்னை அலைபேசி வழியே கொஞ்சித் தள்ளிவிட்டார்கள். அதன் பின்பு, அம்மாவை என்னுடைய வீட்டில் நான்தான் வைத்துக்கொள்வேன், நான்தான் வைத்துக்கொள்வேன் என்று அவர்களிடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது. எப்போதும் போலவே இந்தப் போட்டியிலும் தன்னுடைய விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் என்னுடைய மூன்றாவது அக்காவான மலரே வெற்றிபெற்றார்.

அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய உள்ளம் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பிரான்ஸுக்கு வரும் அம்மா நிச்சயமாக மூன்று மாதங்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். தன்னுடைய அய்ந்து பிள்ளைகளையும், பதினைந்து பேரக் குழந்தைகளையும் விட்டு, மறுபடியும் அவர் தனிமையை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், நான் அம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை. அது பிரான்ஸுக்கு வரும் அவரது மகிழ்ச்சியில் நிச்சயமாகவே மண்ணையள்ளி எறிந்துவிடும். பிரான்ஸுக்கு வந்ததும், அதைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தேற்றித் திருப்பி அனுப்பிவிடலாம் என்றே நினைத்தேன். இன்னொன்றும் நடக்கக் கூடும். சீக்கிரமே வரவிருக்கும் கடுங்குளிர் காலத்தாலும், இங்குள்ள அடைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், சமைத்த உணவைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரம் வரை உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் அம்மாவே சலிப்புற்று இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பலாம். இருபது வருடங்களாக இங்கேயிருக்கும் எனக்கே இலங்கைக்கு எப்போது போகலாம் என மனம் தவித்துக்கொண்டிருக்கிறதே! அம்மா அவ்வாறாக விருப்பப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் எல்லாமே மகிழ்ச்சியாக முடிந்துவிடும். பேரக் குழந்தைகளைப் பார்த்த திருப்தியில் ஊர்ச் சுடலையிலேயே அவர் நிம்மதியாக நீறாவார். 

அம்மா பிரான்ஸுக்கு வந்த மூன்றாவது நாளே, நான் ஒலிம்ப் அம்மையாரை அழைத்துக்கொண்டு, மலர் அக்காவின் வீட்டுக்குச் சென்றேன். ஒரு ‘மிமோஸா’ பூங்கொத்தோடு வந்த ஒலிம்ப் அம்மையார் அங்கிருந்து கிளம்பும்வரை, என்னுடைய அம்மாவின் கையைப் பற்றிப் பிடித்தபடியே இருந்தார். அப்போது, என்னுடைய நான்கு அக்காக்களுமே அங்கிருந்தனர். அவர்கள் ஆரவாரமாக ஒலிம்ப் அம்மையாரை  வரவேற்றாலும், அம்மையார் இந்த நேரத்தில் ஒரு வேண்டப்படாத விருந்தாளி என்பதைப் போலவே தங்களுக்குள் சாடை பேசிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொருநாள் அம்மா என்னிடம் சொன்னார்:

“தம்பி! ஊரில் காணியையும் வீட்டையும் கவனித்துப் பார்க்க ஆட்களில்லை. யாராவது அயலவர்கள் கள்ள உறுதி முடித்துக் காணியையும் வீட்டையும் கைப்பற்ற முன்பாக நாங்கள் வீட்டை விற்றுவிட வேண்டும். அதொன்றும் பெரிய பணம் இல்லைத் தான். கைவிடப்பட்டுக் காடாகியிருக்கும் அந்த ஊரில் ஒரு பரப்புக் காணி ஓர் இலட்சத்திற்குக் கூட விலை போகாது. காணியையும் வீட்டையும் ஒரு பாதிரிமார் சபை விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை விற்று முடிப்பதற்கான வேலையை நாங்கள் சீக்கிரமே செய்ய வேண்டும்.”

“அம்மா… அது நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. எங்களது குடும்பத்திற்கு இலங்கையில் இருக்கும் ஒரே அடையாளம் அந்தக் காணிதான். அது அதுபாட்டிற்கு இருந்துவிட்டுப் போகட்டுமே…”

“இருந்து? நாங்கள் யாருமே அங்கே திரும்பிப் போகப் போவதில்லை. கள்ளர் அனுபவிக்கவா அந்தக் காணியை உன்னுடைய அப்பா தேடி வைத்தார்? விற்கிற வேலையைப் பார் தம்பி.”

அம்மாவுக்குப் பிரான்ஸ் இவ்வளவு பிடித்துப் போகும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. பனியையும் குளிரையும் ஒரு குழந்தையைப் போலல்லவா அவர் அனுபவிக்கிறார். ஒருநாள், நான் மலர் அக்காவின் வீட்டுக்குப்  போயிருந்தபோது, அம்மா தரைக் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்து பேத்தியிடம் பிரஞ்சு மொழிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். 

“அம்மா! தரையில் உட்காராதீர்கள்…குளிர் ஏறிவிடப் போகிறது” என்றேன்.

“சீச்சி… குளிர்தான் என்னுடைய நோய்க்கு நல்ல மருந்தென்று நினைக்கிறேன். இங்கே வந்ததிலிருந்து எனக்குக் காய்ச்சல், தடிமன் கூட வந்ததில்லையே… வாழப் போகும் நாட்டின் பாஷையில் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே தம்பி. அதுதான் கொஞ்சம் பிரஞ்ச் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். உன்னுடைய அப்பாவுக்குச் சிங்களம் தெரிந்திருந்ததால் தானே கொழும்பு வரைக்கும் போய்க் கெட்டித்தனமாக வியாபாரம் செய்தார்” என்றார் அம்மா.

அம்மா பிரான்ஸுக்கு வந்து இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. மலர் அக்காவின் வீட்டில் அம்மா தங்கியிருந்தாலும், மற்றைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அம்மா எப்போதுமே ரவுண்ட்ஸில் இருந்தார். நடுவில் அம்மாவை அழைத்துக்கொண்டு பெரியக்கா குடும்பம் லூட்ஸ் மாதா கோயிலுக்கும் சென்று வந்தது. பாரிஸையும் அதன் புறநகரங்களையும் அம்மா சுற்றியடித்து, எல்லாச் சைவக் கோயில்களுக்கும் போய்விட்டு வந்துவிட்டார். பேரப் பிள்ளைகளோடு நதிக்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வந்து “ச்சா… என்னவொரு சோக்கான நாடு! ஒரு பூச்சியிருக்கா பூரானிருக்கா பாம்பிருக்கா?” என்று வியந்துகொண்டிருந்தார். நடுநடுவே, ஊரிலிருக்கும் காணியையும் வீட்டையும் விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியவாறேயிருந்தார்.

அம்மாவின் விசா முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நான் பெரியக்காவைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்:

“பெரியக்கா… நீங்கள்தான் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா முப்பதாம் திகதி இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.”

“தம்பி… என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?  படாத பாடுபட்டு அம்மாவை இங்கே கூப்பிட்டுவிட்டு, திருப்பி அனுப்புவதா? அந்த மனுசி இலங்கைக்குப் போய் என்ன செய்யும்? அம்மா உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள்தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இனி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே அம்மாவுக்குத் தேவையானவற்றைச் செய்கிறேன். விசா முடிந்த அடுத்த நாளே, அம்மாவைக் கூட்டிப்போய் பொலிஸில் அகதியாகப் பதிவு செய்து விடுகிறேன்.”

“அக்கா…நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அப்படிச் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகாவிட்டால் ஸ்பொன்ஸர் செய்து வரவழைத்த ஒலிம்ப் அம்மையார் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.”

“நல்ல ஒலிம்பும் பிளிம்பும்! அந்தக் கிழவி ஏதாவது பணம் கேட்டால் கொடுத்துவிடலாம். ஆனால், அம்மாவைத் திருப்பி அனுப்ப முடியாது.”

“இங்கே பெரியக்கா.. இது ஒலிம்ப் அம்மையார் பணத்திற்காகச் செய்த காரியமில்லை. எங்கள் மீதுள்ள அன்பால் செய்தது. நம்பிக்கையால் செய்தது. அவருக்கு எங்களது அம்மாவை விட வயது அதிகம். இந்த வயதில் அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்க முடியுமா? ஒருவேளை அவர் சிறைக்குக் கூடச் செல்ல வேண்டியிருக்கலாம்…”

“பேய்க்கதை கதைக்காதே தம்பி. இங்கே எவ்வளவு சனங்கள் ஸ்பொன்ஸரில் வந்துவிட்டு இங்கேயே அகதித் தஞ்சம் கேட்டுத் தங்கிவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை நடந்ததா? நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது.”

“இல்லை பெரியக்கா… என்னால் ஒலிம்ப் அம்மையாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகத்தான் வேண்டும்!”

நான் மூன்றாவது அக்காவான மலரைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்குள் பெரியக்கா மலர் அக்காவை அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். மலர் அக்கா தன்னுடைய இயல்புப்படியே எடுத்ததும் என்மீது சீறி விழுந்தார்:

“ஆமோ! அப்படியோ!! என்னுடைய அம்மாவை நீ எப்படித் திருப்பி அனுப்புகிறாய் என்று நானும் பார்க்கிறேன். இப்போதே அம்மாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கிழித்து அடுப்பில் போட்டுவிடுகிறேன்” என்று மலரக்கா ராங்கி காட்டினார்.

“அது முடியாது மலரக்கா… அம்மாவின் பாஸ்போர்ட் என்னிடம்தான் இருக்கிறது.”

“உன்னுடைய இயக்கத்துக் குறுக்கு மூளையைக் காட்டிவிட்டாய் தம்பி. உனக்கு அம்மாவை விட அந்த வெள்ளைக்காரக் கிழவி முக்கியமாகப் போய்விட்டாள் தானே! அம்மாவிடம் மட்டும் ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று தயவுசெய்து சொல்லிவிடாதே! ஏங்கி இப்போதே செத்துவிடுவார். பழியைச் சுமக்காதே!”

ஆனாலும், நான் கடைசியில் பழியைச் சுமக்கவே நேரிட்டது. ஒரு வாரமாகவே ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து எங்களது அங்காடிக்கு அழைப்பு ஏதும் வரவேயில்லை. ஒருமுறை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கவும் எனக்கு மனம் ஏவவில்லை. அம்மாவின் விசா பிரச்சினை என்னைக் கடுமையாகக் குழப்பிக்கொண்டேயிருந்தது. மாலையில் வேலை முடிந்து செல்லும் போது, ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைக் கவனித்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்டிருந்தது. கதவின் இடுக்குகளில் விளம்பரப் பத்திரிகைகள் குப்பையாகச் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நான் இந்த ட்ராம் தரிப்பிடத்திலிருந்து ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைப் பார்க்கிறேன். இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன்? என்னையறியாமலேயே ஏதோவொரு கள்ள எண்ணம் என்னுடைய உள்ளத்தில் புகுந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதும், வாயில் ஊத்தை எச்சில் ஊறி வந்தது. அதை வீதியில் உமிழ்ந்தேன். வீதியைக் கடந்து சென்று, ஒலிம்ப் அம்மையாரின் பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த இத்தாலியரிடம் எனக்கு ஓரளவு பழக்கமுண்டு. அவருக்கும் நான் தான் பொருட்களை எடுத்து வருபவன். 

ஒலிம்ப் அம்மையார் மூச்சுத் திணறல் பிரச்சினையால் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று இத்தாலியர் சொன்னார். நான் ட்ராம் தரிப்பிடத்திற்குத் திரும்பவும் சென்று, எனது வீட்டுக்குச் செல்வதற்கான ட்ராம் வண்டிக்காகக் காத்திருக்கலானேன். என்னுடைய சின்ன மூளைக்குள் கட்டெறும்புகளைப் போல ஆயிரம் எண்ணங்கள் புற்றெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்தன.

வீட்டுக்குச் செல்லும் வழியில், மத்திய மருத்துமனைத் தரிப்பிடத்தில் ட்ராம் நின்றபோது, என்னுடைய கால்கள் என்னை அறியாமலேயே ட்ராம் வண்டியிலிருந்து கீழே இறங்கின. ஏதோ ஒரு கிலோ போதை மருந்தைத் தின்றவனைப் போலத்தான் நான் நடந்து சென்றேன். மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்ணுக்கு முன்னால் நான் தளர்ந்து போய் நின்றிருந்தபோது, நான் ஆஸ்பத்திரியில் சேர வந்த நோயாளி என்று கூட அந்தப் பெண் நினைத்திருக்கக் கூடும். அவளிடம் ஒலிம்ப் அம்மையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றேன். லிஃப்டில் கூட ஏறாமல், மாடிப் படிகளில் நடந்தே ஏறிச் சென்றேன். ஒலிம்ப் அம்மையாரின் கண்களைச் சந்திக்கும் தருணத்தை நான் கூடியவரை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.

படுக்கையில் கிடந்த ஒலிம்ப் அம்மையாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மூடியிட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுக்கொண்டிந்தது. முழங்கால்கள் வரையிருந்த நீல ஆடைக்குள் ஒரு பொம்மை போல ஒலிம்ப் அம்மையார் அசைவற்றுக் கிடந்தார். நான் அங்கிருந்த தலைமைத் தாதியிடம் விசாரித்த போது “இந்த அம்மையாரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது… இவரது உடல் நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று அவள் இயந்திரம் போல என்னிடம் சொன்னாள். அதுவரை அலைவுற்றுக்கொண்டிருந்த என்னுடைய ஆன்மா மெதுவே தணிவதை உணர்ந்தேன். என்னுடைய நாவில் ஊத்தை எச்சில் கொத்தாகச் சுரந்தது. அதை வாய்க்குள் அடக்கியபடியேதான் நான் வீடுவரை வந்தேன்.

நான் வீட்டுப் படியில் கால் வைக்க முன்பே, என்னுடைய கடைசி அக்கா வேணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் வாய்க்குள் எச்சிலை வைத்துக்கொண்டே பேசினேன்.

“என்னடா தம்பி… நீ உண்மையில் அம்மாவைத் திருப்பி அனுப்பத்தான் போகிறாயா?” என்று வேணி அக்கா கேட்டார்.

“எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றேன். நான் சொன்னது வேணி அக்காவுக்குப் புரிந்ததோ தெரியாது. 

அடுத்து வந்த நான்கு நாட்களும், நான் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று ஒலிம்ப் அம்மையாரின் படுக்கையைக் கவனித்தேன். அவர் கண்களை மூடி அசைவற்றுக் கட்டையாகக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கே செல்வதால், அந்தத் தாதி எனக்குப் பழக்கமாகிவிட்டாள். என்னைத் தவிர வேறு யாருமே ஒலிம்ப் அம்மையாரைப் பார்க்க வருவதில்லை என்று அந்தத் தாதி சொன்னபோது, நான் என்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டேன்.

என்னுடைய அம்மா இலங்கைக்குத் திரும்பிப் போகவேயில்லை.

*

 

https://vanemmagazine.com/one-way-ஷோபாசக்தி/

 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சட்டத்தின் பிரகாரம் ஒரு கணவன் ஊரில் இருந்து மனைவி பிள்ளைகளை கூப்பிடலாம் / மனைவி இங்கிருந்தால் கணவன் பிள்ளைகளை கூப்பிடமுடியும்.......ஆனால் பெற்றோர்களை கூப்பிட முடியாது.....!

உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறார் .....நன்றாகப் போகிறது கதை.......நன்றி கிருபன்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரூரமும் கயமையும் துரோகமும் எம்மை விட்டு அதிக தூரத்தில் இருப்பதில்லை. எமக்குள்ளேயே தூங்குவது மாதிரி நடித்துக்கொண்டு எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும். 

கதையின் ஓட்டத்தில் என் மனதில் எமது சமூகத்தின் நிர்வாணம் சகிக்கமுடியாமல் என் மனதில் தோன்றுவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. ஊத்தை எச்சிலை துப்பவும் இடமில்லை, நானே மென்று விழுங்கினேன். நானும் தமிழன் தானே.

இணைப்புக்கு நன்றி @கிருபன்

Edited by முதல்வன்
  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சின்ன கரெக்சன் நான் ஒருபோதும் பிள்ளையானுக்கு வாக்களிக்கவில்லை, கருணாவுக்கு வாக்களித்தேன் ஆனால் கருணா  வெல்லவில்லை, வென்றவர்களே வெத்து வேட்டு எனும் போது வெல்லாத கருணாவை நான் கேள்வி கேட்க முடியாது. கிழக்கில் கூத்தமைப்பு விட்ட  பிழை மகாபிழை, அது எப்படி தமிழர்களிடம் இருந்து மகாண சபையை சாணக்கியத்தனமாக புடுங்கினோம் பார்த்தீர்களா என்று முஸ்லிம்களை அடுத்தடுத்த தேர்தலில் கொக்கரிக்க வைத்த பிழை
    • ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு… இனிய அகவை தின வாழ்த்துக்கள்.. சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇 விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏
    • இல்லை உங்கள் எடுகோளே பிழை. 1. நீங்கள் ஏதோ கூட்டமைப்பு கிழக்கில் மொக்குத்தனம் பண்ணியமைக்கு அவர்கள் யாழ்பாணத்தவர் என்பதுதான் காரணம் என்பது போலவும். கிழக்கை மட்டும் அவர்கள் கைவிட்டது போலவும் கதை சொல்கிறீர்கள். இது ஒரு பொய்யாய கதையாடல். False narrative 2. கிழக்கில் என்ன பிழை விட்டதோ அதைத்தான் வடக்கிலும் கூட்டமைப்பு விட்டது.  இதில் பிரதேச வஞ்சிப்பு இல்லை. எங்கும் அவர்களுக்கு சுயநலனே பிரதானம். கூட்டமைப்பு மட்டும் அல்ல, சைக்கிள், விக்கி, சங்கு எல்லா கோமாளிகளும்தான். 3. கிழக்கில் கருணா பிள்ளையான் போல வடக்கில் டக்லஸ், கேபி. 4. எவராவது வந்து என்னிடம் எனக்கு வடக்கில் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டது ஆகவே நான் டக்லசை ஆதரிக்க போகிறேன் என்றாலும் என் பதில் மேலே உங்களுக்கு சொன்னதுதான். 5. தேசிய கொள்கையை வரித்து கொண்ட எவரும், விலகி இருக்கலாம், புதியதாக அருச்சுனாவோ, கிருஸ்ணாவோ எவரையும் கொண்டு வர முயற்சிக்கலாம், அருண் தம்பிமுத்து, அங்கயனோடு கூடப்போகலாம், ஆனால் டக்லஸ், கருணா, பிள்ளையான்….இல்லை. அது அடிப்படை கொள்கை விளக்க கோளாறு என்பதைதான் காட்டுகிறது. 6. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழ அரசியல் வேறு. சீமானை நான் ஏன் எதிர்கிறேன் என்பதற்கு யாழ் முழுவதும் நான் கூறிய விளக்கம் உள்ளது. 7. இதில் சோகம் என்னவெண்டால் யாழில் எல்லாரையும் புரொக்சி,  தேசிக்காயென. நக்கலாக என கூறி விட்டு, கடைசியில் நீங்களே பிள்ளையான், கருணா ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்றதும். இப்போ அது சும்மா டிரை பண்ணி பார்த்தோம் என கதை விடுகிறீர்கள். பிள்ளையானும், கருணாவும் முஸ்லிம்களை, சிங்களவரை எதிர்த்து கல்முனை, மேய்ச்சல் தரை எதிலும் ஒரு சிறு தீர்வையாவது பெற்று தருவார்கள் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைத்தோர் - ஒன்றில் தெரிந்தே பொய் கூறினர். அல்லது அடி முட்டாள்.
    • செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும்.  🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில்  Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள்.  ☹️
    • அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம்.  அண்ணை கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு பக்கோடா  சாப்பிட்டதால் சொருகப்பட்ட நேந்திர பழத்தின் கனதி கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.