Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செய்திகள் 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடவடிக்கையை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானி அறிவிப்பு அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை - அரசாங்க தகவல் திணைக்களம்

By DIGITAL DESK 5

30 JAN, 2023 | 10:08 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கு இதுவரை அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடனான வர்த்தமானி அறிவிப்பு,  அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/146980

  • Replies 76
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 20 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்

By VISHNU

30 JAN, 2023 | 04:23 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. அதனையடுத்து மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் , அராசங்கம் அதற்கு தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியே இதற்கான காரணம் என்றும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. தேர்தலுக்கான தினம் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் , அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை. 

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளமை , ஏனைய உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே தற்போது தபால் மூல வாக்களிப்பிற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147043

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தமானி ஓரிரு நாட்களில் அச்சிடப்படும் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா

By VISHNU

30 JAN, 2023 | 05:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடனான வர்த்தமானி அறிவிப்பு, அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும். 

அதன் பிரகாரம் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அச்சிடப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.

https://www.virakesari.lk/article/147028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 09 இல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வர்த்தமானி வெளியாகியது!

By DIGITAL DESK 5

01 FEB, 2023 | 12:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது.

24 தேர்தல் நிர்வாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 38(1) இ உபபிரிவின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 07 மணிமுதல் மாலை 04 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெறும். அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் 339 உள்ளூராட்சிமன்றளில் போட்டியிடவுள்ளனர்.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எல்பிடிய பிரதேச சபை

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றது.இருப்பினும் காலி மாவட்டம் எல்பிடிய அதிகார சபைக்கான தேர்தல் அப்போது இடம்பெறவில்லை.2019.10.10 ஆம் திகதி எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது.

2022.03.20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கமைய ஏனைய உள்ளூராட்சிமன்றங்களை காட்டிலும் எல்பிடிய பிரதேச சபையின் பதவிகாலம் மேலதிகமாக நீடிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபையை தவிர்த்து ஏனைய உள்ளூராட்சிமன்றங்களுக்கான வாக்கெடுப்பை கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 2022.12.29 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

 கல்முனை மாநகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கப்பட்டது.கல்முனை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/147160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் சார்ள்ஸும் ஒப்பமிட்டுள்ளார்

By DIGITAL DESK 5

01 FEB, 2023 | 10:56 AM
image

தேர்தல்கள்  ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து பி.எஸ்.எம் சார்ள்ஸ்  விலகவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில்  திருமதி சார்ள்ஸ்  கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில்  சார்ள்ஸ் கையொப்பமிட்டதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/147152

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு இல்லை - தேர்தல் ஆணைக்குழு

By T. SARANYA

01 FEB, 2023 | 06:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருகிறோம். அத்துடன் உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கே இருக்கிறது.

அதனால் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டிருக்கிறோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு திருப்தியடைய முடியாமல் இருக்கிறது.

அதேபோன்று தேர்தலை நடத்துவதற்காக அரச அமைப்புகளில் இருந்து கிடைக்கப்பெறும் ஆதரவு போதுமானதாக இல்லாமல் இருப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதமாகவும் செயற்பாடுடையதாகவும் இருக்கவேண்டும்.

அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியும் என்பது தொடர்பாகவும் தெரிவித்திருக்கிறேன்.

அத்துடன் யார் என்ன சொன்னாலும் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டின் பிரகாரமே ஆணைக்குழு செயற்படுகிறது.  நிதிச் செயலாளர் பாராளுமன்ற நிதிக்குழுவுக்கு வந்த சந்தர்ப்பத்தில், நிதி பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டிருந்தபோதும் தேர்தலுக்கு நிதி வழங்க முடியாது என தெரிவிக்கவில்லை. 

மேலும், உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. அது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்  அமைச்சருக்கே இருக்கிறது. அதனால் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/147185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ? ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம்

By VISHNU

02 FEB, 2023 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்ற தேர்தல் செலவுகளுக்கு , வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். எனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை செலவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுப்பணம் செலுத்தப்படுவதற்கான காரணம் தேர்தலில் அநாவசியமான நபர்களின் பிரவேசம் காணப்படக் கூடாது என்பதற்காகவேயாகும்.

இது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

கட்டுப்பணம் இதுவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட கட்டுப்பணம் திறைசேறிக்கு அனுப்பி வைக்கப்படும். எஞ்சிய பணம் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கும் , சுயாதீன குழுக்களுக்கும் திருப்பி செலுத்தப்படும்.

எனவே இம்முறை செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். ஆணைக்குழுவின் தரவிற்கமைய சுமார் 80 000 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும். 

அது தேர்தலை சுதந்திரமாகவும் , நியாயமானதாகவும் நடத்துவதில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும். அரசியலமைப்பின் 21ஆவது உறுப்புரையின் 30(4) க்கு அமைய இந்த ஆணைக்குழு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒன்றாகும்.

அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததன் பின்னர் பதவி விலக வேண்டும். இவ்வாறான நிலையில் முறையற்ற வகையில் அரசாங்கப் பணம் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். அத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/147266

 

  • இணையவன் changed the title to உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செய்திகள் 2023
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் செலவு செய்த நிதி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் - சமன் ஸ்ரீ ரத்நாயக்க

By VISHNU

02 FEB, 2023 | 03:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவால் பெருக்கி வரும் தொகையில் 60 சதவீதத்தையும் செலவிட வேண்டும்.

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்கு செலவு செய்த நிதி தொடர்பான தகவல்களை தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பொய்யான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் தேர்தலில் வெற்றிப் பெற்றவரின் அரசியல் பதவி இரத்து செய்யப்படும்,தோல்வியடைந்தவர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1974 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் வழிமுறை காணப்பட்டது.தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வேட்பாளர் தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு செலவு செய்யலாம் என்ற நிலை காணப்பட்டது.விருப்பு வாக்கு முறைமை தேர்தல் செலவுகளையும்,அரசியல் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

விருப்பு வாக்கு முறைமையினை கொண்டு ஒரு வேட்பாளர் அதிக நிதியை தேர்தலுக்காக செலவு செய்கிறார்,இதனால் முறையற்ற அரசியல் நிர்வாக கட்டமைப்பு தோற்றம் பெறும்.தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சகல தரப்பினரும் வலியுறுத்தினர்.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் தொடர்பாக சட்ட வரைபு 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை இருமுறை அனுமதி வழங்கியது, இருப்பினும் பல்வேறு காரணிகளினால் நிறைவேற்றப்படவில்லை. 

அரசியல் நிலைமை குறித்து நாட்டு மக்கள் முழுமையாக கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் குறுகிய காலத்திற்குள் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் உருவாக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தேர்தல் செலவுகள் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என்ற திருத்தம் சட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

இதற்கமைய கடந்த மாதம் 24 ஆம்  25 தேர்தல் நிர்வாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடந்த மாதம் 24 திகதி 339 சுயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.அன்றைய தினம்அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் தலைமையகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 300 ரூபா செலவு செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஒரு வேட்பாளர் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா செலவு செய்ய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்,இந்த தீர்மானத்தை ஆணைக்குழு பரிசீலனை செய்து அந்த தொகையை 20 ரூபாவாக நிர்ணயித்தது.

இதற்கமைய ஒரு சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா செலவு செய்ய வேண்டும், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி, வரும் தொகையில் 60 சதவீதத்தை அந்த தேர்தல் தொகுதிக்காக செலவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தேர்தலுக்கு செலவான நிதி மற்றும் அந்த நிதியை திரட்டிக் கொண்ட விதம் தொடர்பான தெளிவான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.குறித்த தகவல்களை இலங்கை பிரஜைகள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

வேட்பாளர் ஒருவருக்கு அவரது அனுசரனையாளர்கள் செலவு செய்யும் நிதி தொடர்பில் குறித்த வேட்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்.

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஒருவரின் அரசியல் பதவி பறிக்கப்படும்.அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் செலவு தொடர்பில் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் அவர் மூன்று வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும்.

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவு செய்யும் நிதி,பிரசார நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கணக்காய்வு தரப்பினர் ஊடாக பரிசீலனை செய்யப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/147263

  • கருத்துக்கள உறவுகள்

”பிரிந்து போட்டியிட்டாலும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்போம்” -  மாவை சேனாதிராஜா

உள்ளூரட்சி தேர்தலின் பின்னர் வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு  ஆட்சியினை அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்து   உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை சிபார்சு செய்திருக்கின்றார்கள்.

அதாவது இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற அந்த முறையில் ஒரு புதிய அணுகல் முறையினை நாங்கள் பரீட்சித்து பார்க்க வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுடைய கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழு அந்த சிபாரிசை செய்திருந்தது. அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலிலே போட்டியிடுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகளால் வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம்.

எல்லாரும் ஒன்றாக எங்களுடைய வடகிழக்கில் உள்ள சபைகளில் மாநகர சபை நகர சபை என்றாலும் பிரதேச சபையாக இருந்தாலும் ஒரு பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்குவோம் என கலந்து பேசினோம்.

அந்த தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். தமிழரசு கட்சி தன்னுடைய செயற்குழுவில் சிபார்சு செய்தது.

நாங்கள் ஒவ்வொருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளாமல் தேர்தலில் பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு நாங்கள் ஆட்சியினை அமைப்போம்.அந்த காரணங்களுக்காக எங்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகள் ஏற்படாமல் பிளவுகள் ஏற்படாமல் ஒற்றுமையாக நாங்கள் மீண்டும் கூடி வட கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஒரு அணுகல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளை விமர்சித்தல் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள்.இன்று காலையிலும் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

சுமந்திரன் அவர்களின் அறிக்கை, தவராசாவின் அறிக்கையின் அடிப்படையிலும் மிகவும் அதிருப்தி அடைந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கட்சி பிரதிநிதிகள் என்னிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த மாதம் 11, 12ல் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் பிரசார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றேன்.

எனவே எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை நான் எடுக்க உள்ளேன். நான் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களுக்குரிய நடவடிக்கை எடுப்பேன்.

மத்திய செயற்குழுவில் கட்சியிலே பொருத்தமற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரித்து விடும். பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலத்திலும் நாங்கள் அந்த விடயங்களை அவதானிக்காமல் விட்டால் அவர்கள் இனத்தை பிளவுபடுத்துவதற்கும் அரசியல் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளை குழப்புவதற்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதித்ததாக இருக்கும்.

எங்களுடைய மக்களுடைய ஒற்றுமை ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இவ்வாறான சக்திகளுக்கு நாங்கள் கட்சியில் இருந்தால் என்ன  வெளியில் இருந்தால் என்ன அவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருந்தால் ஒழுங்கு விதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

 

http://www.samakalam.com/பிரிந்து-போட்டியிட்டால/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

22 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு

By VISHNU

03 FEB, 2023 | 12:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு சுமார் எட்டு இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாகவும்,உத்தியோகப்பூர்வ வாக்காளர் அடையாள அட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

339 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.இம்முறை அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 339 சுயேட்சை குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள்.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை,அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை ஆகிய தேர்தல் தொகுதிகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளுர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்தும் பணிகளை 24 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147342

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம் – பசில்

basil-rajapaksa.jpg

மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார்.

எனவே அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/237550

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2023 at 17:20, கிருபன் said:

மத்திய செயற்குழுவில் கட்சியிலே பொருத்தமற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரித்து விடும். பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலத்திலும் நாங்கள் அந்த விடயங்களை அவதானிக்காமல் விட்டால் அவர்கள் இனத்தை பிளவுபடுத்துவதற்கும் அரசியல் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளை குழப்புவதற்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதித்ததாக இருக்கும்.

சுடலை ஞானம். கொஞ்சம் விபரம் புரியத்தொடங்குது இந்த வசனமும் தேர்தலை முன்னிறுத்தியே. தேர்தல் முடிய பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி தலைகீழாய்த்தொங்கும்!

On 30/1/2023 at 16:50, ஏராளன் said:

அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது

 

On 30/1/2023 at 16:50, ஏராளன் said:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

நாட்டில இருந்த கடதாசியெல்லாம் போலி நாணயம் அச்சடிச்சு தள்ளியாச்சு, இதுகளுக்கு எங்கிருந்து வந்தது கடதாசி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ நாணயக்கார

By VISHNU

06 FEB, 2023 | 02:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

திட்டமிட்ட வகையில் உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாது.

தேர்தலுக்கு அரசாங்கம் முழுமையாக தயார் இல்லை என்பதால் தேர்தல் பிற்போடப்படும். சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்து சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

முதலாவது பிரசார கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி சிலாபம்,பொல்காவெல ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும் திட்டமிட்ட வகையில் மார்ச் 09 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்துஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுகிறார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கி தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூட்டணி விவகாரத்தில் ஈடுபாடுடன் செயற்படுவதில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரை தவிர ஏனைய உறுப்பினர் கூட்டணியில் இணக்கமாக செயற்படுகிறார்கள். இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.

தாம் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது என்றார்.

https://www.virakesari.lk/article/147527

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதமாகும் - செஹான் சேமசிங்க

By VISHNU

06 FEB, 2023 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல் ,நலன்புரி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் பல விடயங்களில் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துள்ளது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் தான் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.குறுகிய காலத்திற்குள் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

வரி அதிகரிப்பினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நடுத்தர மக்களுக்கு இயலுமான அளவு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை உள்ளிட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி கொள்கைகளை இயலுமான அளவு மட்டுப்படுத்த பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடு;க்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் செலுத்த முடியாது என்பதை அரசியல் தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல், நலன்புரி சேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு ஆகிய முக்கிய பணிகள் தாமதமாகும்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கம் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கம் என்ற ரீதியில் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்றார்.

https://www.virakesari.lk/article/147549

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம்

By DIGITAL DESK 5

09 FEB, 2023 | 04:26 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற தன்மையிலேயே காணப்படுகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள போதிலும், வேட்பாளர்கள் மந்தமாகவே காணப்படுகின்றனர்.

தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மைதான் இதற்கான காரணமாகும் என்று இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் என்ற முறையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளீர்கள்.

எவ்வாறாயினும் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அரச அச்சகம் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

போதிய பணம் கிடைக்கவில்லை எனக் கூறி உரிய பணத்தை விடுவிக்குமாறு திறைசேரியையும் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.  

தற்போதைய நிலைவரத்தை ஆராய்ந்து, திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமாகும். பணம் இருக்கும் போது பணம் இல்லை என்று நிதி அமைச்சின் செயலாளரோ அல்லது வேறு எந்த செயலாளரோ அறிவிக்க முடியாது.

ஆனால், நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் திறைசேரியில் பணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறெனில் தேர்தலுக்காக கோரப்படும் பணம் கிடைக்கப் பெறுமா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான சூழலில்அரச அதிகாரிகளும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இதனை நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு பொருத்தமான சூழலாக நாம் கருதவில்லை.

எனவே தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே இடத்தில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்து நிதி தொடர்பில் உடன்பாட்டை எட்டுவது பொறுத்தமானதாகும். அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

https://www.virakesari.lk/article/147800

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஆணையை உறுதி செய்ய வேண்டும்: சுமந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உணர்த்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற இலங்கை தமிரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தெற்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் கடந்த காலத்தில் வழங்கிய தமிழரசு கட்சியின் வெற்றிக்கான ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். (a)

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மக்கள்-ஆணையை-உறுதி-செய்ய-வேண்டும்-சுமந்திரன்/175-312306

 

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலும் வேண்டாம் ; படகும் வேண்டாம் ; வீடு ஒன்றே போதும் : சாணக்கியன் !

By kugen
 
IMG_20230206_153534.jpg

(வி.ரி. சகாதேவராஜா)

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கப்பலை ஒருவர் வாடகைக்கு எடுத்து வந்தார் .இம்முறை அதனை மட்டக்களப்பில் ஒருவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஆனால் ஆம்ப்பாறையில் இம் முறை கப்பலுக்கு பதிலாக படகு வந்திருக்கிறது. கப்பலும் வேண்டாம்; படகும் வேண்டாம். வீடு ஒன்றே போதுமானது.

இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.. 

தமிழரசுக் கட்சி ஒன்றுதான் தமிழருக்கான ஒரே கட்சி. தமிழருக்கான அரசு. கடந்த 75 வருட காலமாக வீட்டு சின்னத்தில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்து அவர்களுக்காக தேசியத்திற்காக வாழ்ந்து வருகின்ற ஒரே ஒரு கட்சி தமிழரசுக் கட்சி .

கட்சியின் வர்ணத்துடனான இந்த சால்வைத்துண்டை எமது கட்சி ஒன்று தான் தொடர்ந்து அணிந்து வந்துள்ளது. ஏனைய பல கட்சிகளுக்கு அது தூக்குகயிறாக மாறியிருக்கிறது.

கடந்த தேர்தலுக்கு கப்பலிலே வந்தவர்கள் அத் தேர்தல் முடிந்தவுடன் மாயமாகி மறைந்தார்கள். இன்று வரை காணவில்லை.

அதேபோல் இன்று மட்டக்களப்பில் பாரிய சூழ்ச்சி நடக்கின்றது. மண் மாமியாக்களுக்கும் அமைச்சருக்கும் இடையே இரவுசந்திப்புகள் நடக்கின்றன. பகலில் வேறு வேஷம். மக்களே ஏமாந்து விட வேண்டாம். அவர்களால் ஒரு சபையை கூட வெல்ல முடியாது. வடக்கு கிழக்கில் தமிழரசு ஒன்றே அரசமைக்கும். என்றார்.

 

http://www.battinews.com/2023/02/blog-post_829.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 5

14 FEB, 2023 | 05:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான பணிகளுக்கு அரசாங்கம் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக இடையூறு விளைவிக்கிறது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளை தவிர ஏனைய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும்,அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள், பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (14) காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் வாரம்  தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இவ்வார காலத்திற்குள் நிறைவுப் பெறவேண்டும், இருப்பினும் நிதி நெருக்கடியால் அச்சிடல் பணிகளை அரச அச்சகத் திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது.

திறைச்சேரி நிதி வழங்குவதை உரிய நேரத்திற்கு வழங்குவதை தாமதப்படுத்தினால் ஆணைக்குழுவினால் எவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சி செயலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளது.

 வழங்கிய வாக்குறுதிக்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவது நீதிமன்ற அறிவுறத்தலை புறக்கணிப்பதாக கருதப்படும்.

ஆகவே தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தை நாடுவது சிறந்த தீரவாக அமையும் என அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார ஆகியோர் அமைதியாக இருந்ததாக அறிய முடிகிறது.

தபால் மூல வாக்கெடுப்புக்கு கூட இந்த அரசாங்கம் தயார் இல்லை.அரசாங்கத்தின் அழுத்தத்தினால் அரச அச்சகத் திணைக்களம் அச்சிடல் பணிகளை இடைநிறுத்தியுள்ளது.திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நிதி நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுவதை தவிர மாற்று வழியேதும் தற்போது இல்லை,ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாட வேண்டும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எவ்வழியிலாவது பிற்போடும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு தான் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும்,ஆனால் அரச அச்சகத் திணைக்களம் நிதி ஒதுக்காத காரணத்தினால் அச்சக பணிகளை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது, தேர்தல் பணிகளுக்கு அரச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை அரச அச்சகத் திணைக்களம் மறந்து விட்டு செயற்படுகின்றமை கவலைக்குரியது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த யோசனைகளை பரிசீலனை செய்து வெகுவிரைவில் ஒரு தீர்மானத்தை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/148188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் - நிமல் புஞ்சிஹேவா

Published By: T. SARANYA

15 FEB, 2023 | 10:41 AM
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தபால் மூல வாக்குச் சீட்டை அச்சடிக்கத் தேவையான நிதி கிடைக்காததால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/148236

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள்!

நிதி பிரச்சினைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்க்க வேண்டும் – ஆளும் கட்சி

தேர்தலை முன்னெடுப்பதற்கு உறுதிமொழி வழங்கிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு, தற்போது சட்டமா அதிபர் கூட ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நிதி பிரச்சினைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1324098

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைக்க திராணியற்றவர்களாக உள்ளனர் - சிறீதரன்

Published By: Nanthini

16 Feb, 2023 | 11:09 AM
image

சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு பிரதேச சபைக்காக தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டாரம் 1 மற்றும் 2இல் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், 

0__1_.jpg

கடந்த காலத்தில் நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் பல கட்ட பேச்சுக்கள் நடைபெற்றன. 

அவை அனைத்தும் தமிழர்கள் கொண்டிருந்த ஆயுத பலத்தை மையமாகக்கொண்டே நடைபெற்றுள்ளது. 

அந்த காலப்பகுதியில் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருந்தோம். அப்போது எல்லோரும் எங்களை திரும்பிப் பார்த்தனர்.

நெடுந்தீவு பகுதி தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. இப்போதும் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் காணப்பட்டனர். 

அத்தோடு, கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கடையர்கள் பெரும் அநியாயங்களை செய்தனர். 

நாங்கள் இந்த பிரதேசங்களில் காலடி கூட வைக்க முடியாத பகுதியாக இருந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக வந்தபோது தம்பட்டி பகுதியில் வைத்து இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2011ஆம் ஆண்டில் ரணில் நெடுந்தீவுக்கு வந்தபோது இரு சக்கர வண்டியிலேயே பயணித்தார். ஆனால், இன்று அவர் ஜனாதிபதியாக வந்துள்ளார். 

தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்புகள், அச்சுறுத்தல்கள், கொலைகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. 

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்கக்கூடிய திராணியற்றவர்கள். குறிப்பாக, சஜித் பிரேமதாஸ 'வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கின்றேன்' என்று கூற முடியுமா? இல்லை ஜே.வி.பியின் அனுரகுமார திசாநாயக்கவினால் கூற முடியுமா? 

வடக்கு, கிழக்கை பிரித்ததே ஜே.வி.பி தான்.  அதனால், வடக்கு, கிழக்குக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியுமா? 

இன வாதத்தை காட்டிக்கொண்டிருக்கும் இவர்களை போன்ற சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை வழங்க முன்வருவார்களா? 

ஏன் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற நெடுந்தீவு பிரதேசத்தில் அவர்களது கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதாவது தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து, அவர்களுடைய பலத்தை இல்லாமல் செய்வதற்கு இவ்வாறு தேர்தலில் களம் இறக்கப்பட்டிருக்கின்றனர் என்றார்.

நேற்று நெடுந்தீவுக்கான பயணத்தை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல்களில் நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.-

 

 

https://www.virakesari.lk/article/148322

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் : மஹிந்த தேசப்பிரிய

Published By: T. SARANYA

16 FEB, 2023 | 03:08 PM
image

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (15) மாலை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாய்களாகும். அதற்கான முற்பணம் மாத்திரமே தேர்தலுக்கு முன்னர் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றது. 150 மில்லியன் ரூபாய் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். 10 பில்லியன் அல்லது  8 பில்லியனே தேர்தலுக்கு முழுமையாக செலவாகும். அவை ஒரே தடவையில் கோரப்படாது.

தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை அல்லது 3 பில்லியனே தேவைப்படும். அந்த தொகையை படிப்படியாக செலுத்த முடியும். தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும். அப்படியெனில் 3 பில்லியன் கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு இல்லாது விட்டால் சட்ட திட்டத்திற்கு அமைய குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரிடும்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஊடாக முற்பணத்தை மேலதிகமாக பெற முடியும். காசு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுவதால் மின்கட்டணச் செலவும் குறைவு. 

அரச உத்தியோகத்தர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை எடுத்துவருமாறு கோரி செலவை மட்டுப்படுத்த முடியும். ஆகவே, எல்லோருடைய ஆதரவுடனும் இந்த தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்தார்.  

https://www.virakesari.lk/article/148353

  • கருத்துக்கள உறவுகள்

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு

Published By: T. Saranya

17 Feb, 2023 | 12:16 PM
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குச் சீட்டுக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுக்களை உரிய திகதிகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

85.jpg

  •  

 

 

https://www.virakesari.lk/article/148433

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடத்தப்பட வேண்டும் ; ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் - வேலு குமார்

Published By: VISHNU

17 FEB, 2023 | 01:41 PM
image

"தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்." தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், 

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அதிகார மோதலை ஏற்படுத்தி இருக்கின்றது. 

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தாலும், அதன் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

குறைந்த பட்சம் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் நடைபெறுமா? இல்லையா? என்பதை கூட அறிவிக்க முடியாத நிலையே தென்படுகின்றது.

தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போல நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.

இன்று தேர்தலை முன்னெடுக்க போதிய பணம் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. அதே போன்று நடைபெறவுள்ள தேர்தலில் எண்ணாயிரத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 

அவர்களுக்கான கொடுப்பனவை செய்வது மிகப்பெரிய செலவை நாட்டுக்கு ஏற்படுத்துகின்றது. அத்தகையதொரு செலவினம் தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதிலும் யதார்த்தபூர்வமான உண்மை உள்ளது. 

அவ்வாறாயின் இப்போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கு காலத்திற்கு பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும். அதனை விட்டு தேர்தலை அறிவித்து, நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலை ஒன்றை ஏற்படுத்தி, மக்களிடையில் சுமுகமற்ற நிலை தோன்றுவதற்கு வழிவகுப்பது பொருத்தமானதல்ல.

இன்றைய சூழ்நிலையில் கிடைத்திருக்க கூடிய கால அவகாசத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மீண்டும் விகிதாசார முறை தேர்தலுக்கு செல்ல முடியும். அதன் போது உடனடியான எல்லை நிர்ணய பிரச்சினை எழாது. 

உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை மிக இலகுவாக செய்ய முடியும். பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினர் இம்முறைமைக்கு ஆதரவாகவும் உள்ளனர். 

எனினும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை நிலைநிறுத்திக் கொள்ளும், வறட்டுத்தனமான கௌரவ பிரச்சினையே இதற்கு தடையாக உள்ளது. 

இப்போதாவது இவர்கள் திருந்தி, நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரயோசனமான ஒன்றை செய்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது இத் தேர்தல் நடத்தப்பட்டாலும், மேலும் பல ஆண்டுகளுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்வதாகவே அமையும். 

https://www.virakesari.lk/article/148438

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடி – தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல் - நிதியமைச்சு தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிப்பு

Published By: RAJEEBAN

17 FEB, 2023 | 05:10 PM
image

உள்ளுராட்சி  தேர்தலிற்கு நிதிவழங்குவது தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என நிதியமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பேச்சுவார்த்தைகளிற்காக அழைக்கப்பட்டவேளை நிதிச்செயலாளரும் ஏனைய உயர் அதிகாரிகளும் இதனை தெரிவித்தனர் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/148465

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.