Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை

மத்திய பட்ஜெட் 2023-24

பட மூலாதாரம்,ANI

1 பிப்ரவரி 2023, 04:43 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

  • புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடிவும்.
  • எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை அடிப்படையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேட்கள், நீர்வழி விமான தடங்கள் புத்துயிரூட்டப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும்.
  • ரயில்வேக்கு மூலதன செலவாக 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும்.
  • மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
  • மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.
  • பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும்.
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.
  • 2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
  • சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு; மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து புதிய திட்டம் - இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்,
  • வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.

 

மக்களவையில் லேப்டாப் உதவியுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக முடித்ததும், பட்ஜெட் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்ஜெட் மொபைல் ஆப்பை (Budget Mobile app) செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் பட்ஜெட் உரையை முழுமையாக பெறலாம்.

 

 

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.

அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது.

பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c0x9p4p8294o

34 minutes ago, ஏராளன் said:
 
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும்.

நல்லதொரு திட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருமான வரி விலக்கு - நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

மத்திய பட்ஜெட் 2023-24

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 பிப்ரவரி 2023, 07:59 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

 

 

 

3 ஆண்டுகளுக்கு முன்பு 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதில் 6 வரம்புகள் இருந்தன. அதனை தற்போது 5 வரம்புகளாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

  • ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி
  • ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரி
  • ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி
  • ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி
சீதாராமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் ரூ.45 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 7 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் 3 லட்சம் ரூபாயில் இருந்து வரி கட்ட வேண்டும்.

உதாரணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒருவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகிதமும், 6 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் 9 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்ச ரூபாய் வரை 15 ஆயிரம் ரூபாயும், 6 லட்ச ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாய் வரை 10 சதவிகிதம் என்ற அளவில் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

இது அடுத்தடுத்த வருவாய் வரம்பில் உள்ளோருக்கும் பொருந்தும்.

புதிய நடைமுறையா? பழைய முறையைத் தொடர்வதா?

அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, வருமான வரி தாக்கலின் போது புதிய நடைமுறையா? அல்லது பழைய நடைமுறையைத் தொடர்வதா? என்பதை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால் தாமாகவே அது புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறிவிடும்.

பழைய வருமான வரி நடைமுறையைத் தொடர விரும்பினால், நீங்கள் அதனை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம்.

புதிய வருமான வரி நடைமுறையின் கீழ் ரூ.7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையை நிறைவு செய்ய ஆகும் காலம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நவீன வருமானவரி கணக்கு விண்ணப்ப படிவங்களை அறிமுகப்படுத்தவும், வருமான வரி குறைதீர் நடைமுறைகளை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cqv8d8x2y7lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மத்திய அரசின் பட்ஜெட் மிகப் பெரிய ஏமாற்றம்" - மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின்
34 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய திட்டம் எதையும் அளிக்காத இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றன.

இந்த பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றமளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

 

"2023-24-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்”, “இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு”, “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்”, “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது” போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு முழு பயன் தராது

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

 

மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

ஸ்டாலின்

 

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing (பயன் அடிப்படையிலான நிதி) என்ற ஒரு புதிய வழிமுறைப்படி செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட வேண்டும்.

 

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

 

மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

 

இந்த பட்ஜெட்டில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் பொருளாதார தேக்கநிலை, வேலையிழப்பை எதிர்கொள்ளும் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

 

"இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பு, 20 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு, தோட்டக் கலைத் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், இவை வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக்கூடாது. இந்தத் திட்டங்கள் எளிதில் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

 

புதிதாக ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகளைத் துவங்குவது போன்றவை பாராட்டத்தக்கவை.

 

மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில்வே கட்டண சலுகையை திரும்ப வழங்காதது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்வதைத் தடுக்க செயல்திட்டம் இல்லாதது, நேரடி வேலைவாய்ப்பை கொண்டுவருவதற்கான அறிவிப்பு இல்லாதது, தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஆகியவை ஏமாற்றமளிக்கின்றன" என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

 

இந்த நிதி அறிக்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது சிபிஎம். "கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட்" என இதனை விமர்சித்துள்ளது.

 

 

ஸ்டாலின்

"இந்தியா பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட மோசமான நிலையில் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டிலும் மிக மோசமாக இருப்பதை கணக்கில் கொண்டு கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை விரிவுப்படுத்தியிருக்க வேண்டும்

 

இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு மானியம் கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மதிய உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 800 கோடியும், கிராமப்புற மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் உண்மையான செலவை விட ரூ. 5,000 கோடி குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் அதை மேம்படுத்திட கூடுதலான தொகை ஒதுக்குவதற்கு பதிலாக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து மிகச் சொற்பமான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

 

சாதாரண மக்கள் பயன்படுத்தும் அடிப்படை தேவையான உணவுப் பொருள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் வரியை ரத்து செய்திட வேண்டும் எனவும், சில முக்கிய பொருட்களின் ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருந்தது.

மேலும் அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் பெரும் செல்வந்தர்களுக்கு சொத்து வரியையும் மற்றும் வாரிசு சொத்து வரியையும் விதிக்க வேண்டும் எனவும், பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அவற்றைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது மத்திய பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதற்கான அடையாளமாகும்" என சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cj5y8djn34zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பட்ஜெட்: யாருக்கு சுகம்? யாருக்கு சுமை? விரிவான ஆய்வு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா 2023-24 பட்ஜெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவருகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையின் சாதக பாதக அம்சங்கள் என்ன? ஒரு விரிவான கட்டுரை.

 

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும்போது, ஏழு துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உள்ளடங்கிய இடங்களுக்கும் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை ஆகியவைதான் அந்த ஏழு பிரிவுகள்.

 

 

முதலில் சில அடிப்படை எண்களைப் பார்க்கலாம். இந்திய பட்ஜெட்டின் இந்த ஆண்டு மதிப்பு 45,03,097.45 கோடி ரூபாய். ஆனால், வருவாய் அந்த அளவுக்கு இல்லை என்பதால், 17,86,816 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கப்படும்.

 

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2025-26க்குள் இது 4.5 சதவீதமாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

அதிகரிக்கும் கடன், குறையும் மானியங்கள்

22-23ஆம் ஆண்டிலும்கூட கிட்டத்தட்ட மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. அதில், 11,10,546 லட்சம் கோடி அளவுக்கு நடப்புக் கணக்குக்கு செலவுசெய்யப்பட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு கட்ட வேண்டிய வட்டித்தொகை மட்டுமே 10,79,971 கோடி ரூபாயாகும். இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

 

இந்த நிதி நிலை அறிக்கையைப் பொறுத்தவரை, மானியங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டிருப்பதை கவலைக்குரிய விஷயமாக நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஒதுக்கீடுகளோடு ஒப்பிட்டால், இந்த ஆண்டில் உணவுக்கான மானியம் 89,844 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, உரத்திற்கான மானியம் 50,120 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியக் குறைப்பையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மானியங்களைப் பொறுத்தவரை, ஏழைகளுக்கும் மத்திய தர வகுப்பினருக்கும் செல்லக்கூடியவை என்பதால், இவை அந்தப் பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

 

அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு கடந்த ஆண்டில் 89,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிலிருந்து 29,400 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, சுமார் 60,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட மிகக் குறைவான தொகை இதுதான்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் பிஎம் கிசான் திட்டத்திற்கு கடந்த ஆண்டில் 6,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 6,000 கோடி ரூபாய் மட்டுமே செலவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடே 6,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்று நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு (2022-23) நிதி நிலை அறிக்கையில் சில முக்கியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாகவே செலவுசெய்யப்பட்டிருப்பதை நிதி நிலை அறிக்கை ஆவணங்கள் காட்டுகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் 4,397 கோடி ரூபாயும் சுகாதாரத் துறையில் 9,255 கோடி ரூபாயும் சமூக நலத் துறையில் 5,278 கோடி ரூபாயும் குறைத்து செலவழிக்கப்பட்டுள்ளது.

 

 

வருமான வரி குறைப்பால் எவ்வளவு சுமை?

அதேபோல, மத்திய அரசு இதுவரை மிகப் பிரபலமாக முன்வைத்த திட்டங்கள் அனைத்திலும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகவே செலவழிக்கப்பட்டிருக்கின்றன. ஜல் ஜீவன் திட்டம், கல்வித் துறை, ஸ்வச் பாரத், க்ருஷ்யா நிதி யோஜனா, மிஷன் வாத்சல்யா, ராஷ்ட்ரிய க்ருஷி விகாஸ் யோஜனா போன்ற திட்டங்கள் அனைத்திருக்கும் ஒதுக்கப்பட்டதைவிட குறைவான நிதியே செலவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 3,34,339.42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் 2,70,935.60 கோடி ரூபாயே அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் முக்கியமான செலவுகளை மாநிலங்களே செய்ய வேண்டிய நிலையில், இப்படி நிதி ஒதுக்கீடு குறைவது முக்கியமான மக்கள் நலத் திட்டங்களைப் பாதிக்கும்.

புதிய வரித் திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கான வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் வெறும் .008 சதவீதம் மட்டும்தான்.

இந்தியா 2023-24 பட்ஜெட்

பட மூலாதாரம்,ANAND SRINIVASAN FACEBOOK

"இந்தச் சலுகையை அளிப்பதால் சாதாரண மக்களுக்கு என்ன பலன்? மாதம் 55ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு இது உதவப்போகிறது. பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு ஆட்களை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பதற்கு மேல் இதில் ஏதும் இல்லை" என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன். அதேபோல, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்துபவர்களுக்கான சர்-சார்ஜ் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வேறு சிலர் இதை வரவேற்கிறார்கள். இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், சம்பளம் அதே அளவு உயரவில்லை. ஆகவே மத்திய தரவர்க்கத்தைப் பொறுத்தவரை பொருட்களை வாங்க கூடுதல் செலவு செய்ததோடு, கூடுதலாக நேரடி வரியையும் செலுத்திவந்தது. தற்போது வருமான வரி வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது இவர்களுக்கு நிச்சயம் உதவும். இதனால், அந்தக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரிக்கலாம்.

பொதுத்துறை பங்குகள் எவ்வளவு விற்பனை?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பொதுத் துறை பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 51,000 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. "கடந்த ஆண்டும் இதேபோலத் திட்டமிட்டார்கள். ஆனால், நினைத்த அளவு திரட்ட முடியவில்லை. இந்த ஆண்டும் அதேதான் நடக்கும்? எந்தப் பொதுப் பங்குகளை எப்படி விற்கப் போகிறார்கள் என்பதற்கு ஏதாவது திட்டமிருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்புகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் செலவழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாத நிலையில், திறன்களைப் பெற்றோர் வெளிநாடுகளை நாடிச் செல்ல ஆரம்பிப்பார்கள் என்பதும் ஒரு கவலையாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மறைமுக வரி தொடர்ந்து அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. நேரடி வரியைப் போல் அல்லாமல் மறைமுக வரி எல்லாத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதால், அதில் செய்யப்படும் சீர்திருத்தங்களே எல்லாத் தரப்பினருக்கும் பலனளிக்கும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

https://www.bbc.com/tamil/articles/crgzm8y7xp4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பட்ஜெட்: ஏறும் கடன் ஒதுக்கீடு, குறையும் உர மானியம் - என்ன சொல்கிறார்கள் விவசாயிகள்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2023-24ம் நிதிஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் கடனுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

 

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் கடன் ரூ.18.5 லட்சம் கோடியாக இருந்தது. வேளாண்மை சார்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தாலும், இந்த பட்ஜெட் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளதாக தமிழ்நாட்டு விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

 

 

பட்ஜெட் உரையில் விவசாயம், கல்வி ஆகிய துறைகளுக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார் நிர்மலா.

விவசாயிகளுக்கான கடன் இலக்கை உயர்த்தியதன் மூலம் வேளாண்மை மற்றும் விதை சார்ந்த தொழில் நிறுவனங்களும், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் ஆகிய தொழில்களில் ஈடுபடுபவர்களும் பலனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

 

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப, இயற்கை உரங்களை வழங்கும் 10 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் நிர்மலா தெரிவித்தார்.

 

அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்பட உணவுப்பொருட்களும் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, உணவுப் பொருள் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் 'ஸ்டார்ட் அப்' திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வேளாண் துறையில் தொழில்முனைவோர் உருவாவது அதிகரிக்கும் என்றார் அவர்.

 

 

 

விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவும் திட்டம் இருப்பதாக கூறிய அவர், அதனால், எந்தெந்த காலத்தில் என்னென்ன பயிர்களை விளைவிக்கலாம், எந்த உரங்களைப் பயன்படுத்தலாம், ஊடு பயிர்களாக எதைப் போடலாம் போன்ற பல விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆலோசனை கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் சரியான உணவு தானியங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமாற்றத்திற்கான காரணங்கள்

பெ. சண்முகம்
 
படக்குறிப்பு,

பெ. சண்முகம்

 

இத்தகைய அறிவிப்புகள் இருந்தபோது, இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கூறுவது ஏன் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டது பிபிசி தமிழ்.

விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பற்றி மத்திய அரசு இந்த 2023-24பட்ஜெட்டில் அறிவிக்கும் என்றுதான் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. மாறாக மீண்டும் கடன் தருவதற்கு முக்கியத்துவம் தருவதால் வளர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட் அல்ல இது என்று வாதிடுகிறார்கள் விவசாயிகள் சங்கத்தினர்.

 

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பெ.சண்முகம், 2023-24 பட்ஜெட்டுக்கும் 2016ல் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோதி பேசிய உரைக்கும் உள்ள தொடர்பைக் கவனித்தால் ஏமாற்றத்திற்கான காரணம் புரியும் என்றார்.

 

''பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட் இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நிகழ்த்தப்படும் பட்ஜெட் என்றார். 2016ல் மோதி விவசாயிகளின் பேரணியில் பேசியபோது, 2022ல் இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலமான ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதுதான் தனது அரசின் நோக்கம் என்றார்.

அந்த நோக்கத்தை இந்த பட்ஜெட் எந்த விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை. மாறாக மீண்டும் விவசாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கும் பட்ஜெட்தான் இது,''என்கிறார் சண்முகம்.

 

விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாமல் இருப்பதுதான் இந்தியாவில் தற்போது விவசாயிகளின் அடிப்படை பிரச்னை என்று கூறிய சண்முகம், ''முதலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பதற்கு ஏற்ற விலையை அரசு கொடுக்காமல், புதிய திட்டங்களைக் கொண்டுவருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

விவசாயம் சார்ந்த 'ஸ்டார்ட் -அப்' நிறுவனங்கள் தொடங்குவதற்கு உதவுகிறோம் என்கிறார்கள், முதலில் விளைந்த பயிர்களுக்கு நல்ல விலை இருந்தால்தான் அதன் அடுத்தநிலைக்குப் போகமுடியும். பாசன மேம்பாட்டை அதிகரிக்கவோ, நதிநீர் இணைப்பு திட்டம் பற்றியோ எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை,'' என்கிறார் சண்முகம்.

விவசாயிகள் என்றாலே கடனாளிகளா?

விவசாயிகள்

 

இந்திய விவசாய குடும்பங்களின் சராசரி வருமானம் குறித்து இந்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

2019ல் வெளியான அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் விவசாயத்தை நம்பியுள்ள ஒரு குடும்பம் மாதத்திற்கு சராசரியாக ரூ.3,798ஐ மட்டுமே வருவாயாக பெருகிறது. விவசாயத்துடன், கால்நடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் குடும்பம் ரூ.10,218 ஈட்டுகிறது. இந்தியாவில் கடன் வாங்கியுள்ள விவசாய குடும்பங்களின் விகிதம் 50.2 சதவீதமாகவும், ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி கடன் தொகை ரூ 74,121 ஆகவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

 

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கடன் தருவதை அரசு உயர்த்துகிறது, ஆனால் அந்த கடனை பெறுவது யார் என்று சரிபார்ப்பதில்லை என்கிறார்.

 

''ஒவ்வொரு முறையும் விவசாயிகளுக்குக் கடன் ஒதுக்கீட்டை அதிகரிக்கிறோம் என்கிறார்கள். இந்த விவசாயக் கடனை பெறுவது உண்மையில் கஷ்டத்தில் இருக்கும் விவசாயிதானா என்று அரசாங்கம் சோதனை செய்வதில்லை. பல இடங்களில் வாங்கிய சிறுதொகையைச் செலுத்த முடியாமல் தன்னிடம் உள்ள டிராக்டர் போன்றவற்றை விற்கும் நிலையில்தான் நாடு முழுவதும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் விவசாயக் கடன் ஒதுக்கீட்டை அதிகரிக்கிறார்கள். நாங்கள் விளைவிக்கும் பயிருக்கும் சரியான விலையைக் கொடுத்தால் நாங்கள் எதற்கு தொடர்ந்து கடன் வாங்கப்போகிறோம்,''என்று கேள்வி எழுப்புகிறார் பாண்டியன். மேலும் விவசாயிகள் என்றாலே கடனாளிகள் என்ற தோற்றத்தை பட்ஜெட் ஏற்படுத்திவிட்டது என்கிறார் அவர்.

அதே போல, மத்திய அரசு அறிவித்துள்ள இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்குப் பரிந்துரைகள் தருவதற்கான மையங்கள் ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பு தேவையற்றது என்கிறார் விவசாயி இளங்கீரன்.

 

இளங்கீரன்
 
படக்குறிப்பு,

இளங்கீரன்

உர மானியம் குறைப்பு

இந்தியா முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் என்று கணக்கிட்டால், ஒரு மாவட்டத்திற்கு 10 நபர்கள் என்ற கணக்கில் கூட விவசாயிகள் பயன்பெறப்போவதில்லை என்கிறார் இளங்கீரன்.

''பெரும்பாலான விவசாயிகள் பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் உரவிலை பல மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு அடிப்படைத்தேவைகளை முன்னிறுத்தி திட்டங்கள் கொண்டுவருவதை விடுத்து, எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்காகப் பல திட்டங்கள் கொண்டுவருவதில் எந்த பயனும் இல்லை. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம்தான்,''என்கிறார் அவர்.

விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.2.25லட்சம் கோடியாக வழங்கப்பட்ட உரமானியம் இந்த முறை ரூ.1.75கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிக பணம் செலவழிக்கும் நிலை ஏற்படும் என்றும் இளங்கீரன் கூறுகிறார்.

''கடந்த இரண்டு ஆண்டுகளில் உரத்தின் விலை ஏறியுள்ளது. தற்போது உரமானியத்தை பெருமளவு குறைத்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மூட்டை டிஏபி ரூ.700ஆக இருந்தது.

தற்போது அதே ஒரு மூட்டை ரூ.1320வரை விற்கப்படுகிறது. அதேபோல யூரியா ஒரு மூட்டை ரூ.160ஆக இருந்தது, தற்போது ரூ.350ஆக உயர்ந்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் மேலும் உரத்தின் விலை அதிகரிக்கும் என்பதால், எங்களுக்கு மேலும் உற்பத்தி செலவு சுமை கூடும்,''என்கிறார் இளங்கீரன்.

https://www.bbc.com/tamil/articles/czd3w0vwv3eo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.