'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம் பட மூலாதாரம்,Handout via Reuters படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் 29 ஜனவரி 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின. "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது. மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,Vahid Online படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்) இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது. "இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார். "போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார். மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார். டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, "இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார். "எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார். "செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார். பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன. மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன. டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது. "அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார். குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,Maxar Techn படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது. இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின. இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது. அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார். கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o
By
ஏராளன் · 44 minutes ago 44 min
Archived
This topic is now archived and is closed to further replies.