Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவியை செவ்வாய் அறிவிக்கிறது சர்வதேச நாணய நிதியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவியை செவ்வாய் அறிவிக்கிறது சர்வதேச நாணய நிதியம்

Published By: T. SARANYA

18 MAR, 2023 | 04:47 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கடன் மறுசீரமைப்புக்கான எழுத்து மூல உத்தரவாதத்தை அனைத்து தரப்புகளும் வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான  உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் வழங்க உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு  மார்ச்  மாதம் நடுப்பகுதியில்  தீர்மானித்தது. அதன் பின் நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும்  வறுமை  அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை இலங்கை எதிர்க்கொண்டது.

நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து  சர்வதேச நாணய நிதியம் 2021 முதல் தொடர்ந்து எச்சரித்திருந்தது. இந்நிலையில் நெருக்கடியிலிருந்து மீள 2022 நடுப்பகுதியில் இருந்து சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக  பேச்சுவார்த்தைகள்   முன்னெடுக்கப்பட்டதுடன் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இடைக்கிடையே இலங்கைக்கு விஜயம் செய்து,  கொடுப்பனவு நிலுவை நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து ஆழமாக கலந்துரையாடினர்.

இதன் பிரகாரம் 2022 ஆண்டு செப்டம்பர் மாதம்  முதலாம் திகதியில் சர்வதேச நணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது. நாடு கடன் நிலைத்தன்மையை அடையும் வரை இந்த ஒப்பந்தத்தை சர்வதேச நணய நிதியம் பணிப்பாளர் சபைக்கு  சமர்ப்பிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. 

எனவே, கடனை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. கடந்த  ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இந்தியா உறுதிமொழியை வழங்கி இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கியது. அதனை தொடர்ந்து சீனாவும் வழங்கியது. மேலும் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்க  பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டது.

அதன் பின்னர், மார்ச் 2 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன்; இலங்கைக்கான கடன் உதவித் திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்துடனான  பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டியமை கட்டாயமாகும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிரகாரமே மின்சார விலையை மறுசீரமைத்தல், பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தை  உறுதி செய்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துதல், பொது அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல், சமூக பாதுகாப்பு  கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க பணியாற்றுதல் மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல். பெற்றோலிய  மற்றும் மின்சாரத் துறைகளில் போட்டித்தன்மையை  விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களை  அரசாங்கம் உள்நாட்டில் பல எதிர்ப்புகளையும் தாண்டி முன்னெடுத்திருந்தது.

இவ்வாறு கடின உழைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவி திட்டம் குறித்த உத்தியேதகப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/150853

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான 2ஆம் கட்ட ஒப்பந்தம் இவ்வாரம் கைச்சாத்திடப்படும்

24 SEP, 2023 | 10:09 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய குழுவினர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையிலான மீளாய்வு தொடர்பிலான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் முழுவதும் இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமையுடன் இந்த இருதரப்பு கலந்துரையாடல்கள் நிறைவடையவுள்ளன.

அரச வருமானங்களை அதிகரிப்பது குறித்து இருதரப்பும் கூடிய கவனம் செலுத்தியிருந்த நிலையில், மக்கள் மீது மேலும் பொருளாதார சுமைகளை சுமத்தாது அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க நாணய நிதியத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இந்த மீளாய்வு கூட்டம் இடம்பெறுகிறது. 

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மூத்த தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ப்ரூயர், துணை தலைமை நிர்வாக அதிகாரி கத்யா ஸ்விரிட்சென்கா உள்ளிட்ட நிதியத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளதன் காரணமாகவும், குறிப்பாக பணவீக்கம் ஓரிலக்கம் வரை வீழ்ச்சியடைந்துள்ளமையாலும் வெற்றிகரமாக இந்த மீளாய்வை எதிர்கொண்டு, இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையில் இலங்கையின் மீளாய்வுகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சாதகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி நான்கு தவணைகளாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. 

இதன் முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த மார்ச் மாதத்தில் கிடைக்கப் பெற்றிருந்தது. ஆனால், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏனைய கடன்  வழங்குநர்களுடனான பொறிமுறை ஒன்றின் கீழ் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதில் சீனா இன்னும் இறுதி தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் ஏற்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டது.

கடன் மறுசீரமைப்புகள் குறித்து பேசாமல், கடன் முகாமைத்துவம் என்ற அடிப்படையிலேயே சீனா பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கிறது. குறிப்பாக அதே போன்று பாரிஸ் கிளப் ஊடான நடவடிக்கைளில் வெறும் கண்காணிப்பாளராக மாத்திரமே சீனா பங்கேற்றுள்ளது. 

இலங்கையின் பிரதான கடன் வழங்குநரான சீனாவுக்கு 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை வழங்க வேண்டியுள்ளது. ஏனைய கடன் வழங்குநர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/165295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

ranil-5.jpg

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அண்மையில், நாட்டை வந்தடைந்தனர். அவர்கள், நாட்டில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக இந்த சந்திப்பு அமையவுள்ளது. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை, பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/274522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் வெற்றி ; இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானம் - மஹிந்தானந்த

Published By: VISHNU

26 SEP, 2023 | 08:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையில் செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

இதன் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் தீர்க்கமான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். அந்த பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் புதன்கிழமை (27) ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் பணவீக்கம், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அரச வருமானம் ஆகிய 3 பிரதான விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

கடந்த வருடம் 95 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம் மறை 5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் 70 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

20 மில்லியன் டொலராகக் காணப்பட்ட அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் அரச வருமானம் தொடர்பிலேயே சர்வதே நாணய நிதியம் அதிக அவதானம் செலுத்துகின்றது. 

அரச வருமானத்தில் 90 சதவீதம் வரி அறவீட்டின் ஊடாகவே கிடைக்கப் பெறுகின்றது. எனவே இதனை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் வலியுறுத்தலாகவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது - சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் - சர்வதேச நாணய நிதிய அதிகாரி

Published By: RAJEEBAN

27 SEP, 2023 | 06:01 PM
image
 

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம்  தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தவணைக்கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான கால அட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின்  அதிகாரியொருவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கான இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் கொள்கைகள் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டினை எட்டவேண்டும். அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும், அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒருவிடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது. அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165596

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரியை மேலும் அதிகரிக்க முடியாது: அரசாங்கம் IMF இற்கு தெரிவிப்பு

கோரியபடி இந்த நேரத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிக்க முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டின் இறுதிக்குள் வரி வருவாயை ஓரளவு அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமாயின் வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இத்தருணத்தில் மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை தாமதமாகி வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தாதது பிரச்சினையல்ல. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டின் இறுதிக்குள் இலங்கை குறிப்பிட்ட இலக்கிற்கு வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. அந்த வரி வருவாயை பூர்த்தி செய்ய தற்போதுள்ள வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இலக்குகளை நாங்கள் IMF-க்கு தெரிவித்தோம், அரசாங்கம் மேலும் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தக்கூடிய நிலையில் இல்லை. வரி வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை IMF வலியுறுத்துகிறது,” எனவும் தெரிவித்துள்ளார்.

வரி வருவாயை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட கலந்துரையாடல்களை கோருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/275441

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

imf.jpg

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் வசதியின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, இரண்டாம் தவணைக் கொடுப்பனவாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அண்மையில், இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கடன் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வினை மேற்கொண்டனர். இதற்கமைய, கடன் வசதிக்கான திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த இரண்டாம் தவணை கடன் கொடுப்பனவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இரண்டாம் தவணைக் கொடுப்பனவு விடுவிக்கப்படுவது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய இலங்கை தூதுக்குழுவின் பிரதானி Peter Breuer தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் வழங்குநர்களுடனான இணக்கப்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கியுள்ள கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த கொடுப்பனவு விடுவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, உறுதியான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறைந்த அளவிலான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றையே சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இன்று முன்னெடுத்த நிகழ்நிலை ஊடக சந்திப்பை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 15 வீதமாகக் காணப்படுமென சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டில் பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதத்தை விட அதிகமாக, அரசாங்க வருமானம் காணப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறைக்கான இடைவௌி குறைக்கப்படும் பட்சத்தில், எஞ்சியுள்ள இடைவௌியை நிரப்ப விரும்பும் கடன் வழங்குநர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/277920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் கட்ட ஐ.எம்.எஃப். உதவி இலங்கைக்கு என்ன நன்மையை கொடுக்கும்?

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கைக்கு இரண்டாம் கட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆளணிமட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் அண்மையில் எட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பின்னடைவுகளை சந்தித்திருந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஆரம்பித்தது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் எட்டியிருந்தது.

முதலாம் கட்ட நிதி வசதி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் எட்டியுள்ளது.

டாலர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்து பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்திய போதிலும், ஆளணி மட்ட இணக்கப்பாட்டை எட்டவில்லை.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்ட 48 மாத கடன் தவணை நிதிவசதியின் இரண்டாம் கட்ட நிதி வசதிகளை வழங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி வழங்கியிருந்தது.

இலங்கைக்கு இரண்டாம் கட்ட உதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பொருளாதார பிரச்னைகளின் காரணமாக அதிகரிக்கும் விலைவாசியைக் குறைக்கக் கோரில் பொதுமக்கள் நடத்திய போராட்டம்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை

மைக்ரோ பொருளாதார கொள்கை தற்போது பலனை தர ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்டையே, பொருளாதாரம் தற்காலிக ஸ்திரதன்மைக்கான அறிகுறிகளை காண்பிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவது, நிர்வாக பலவீனங்கள் மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வது பொருளாதாரத்தை நிலையான மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்வதற்கு முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

எதிர்வரும் காலத்தில் தம்மால் குறிப்பிட்ட அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் இலங்கை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல வேலைகளை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஜுன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 1.5 பில்லியன் டாலர் கையிருப்பு இலங்கையிடம் காணப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இணக்கம் எட்டப்பட்டுள்ள இரண்டாம் கட்ட விரிவாக்கப்பட்ட கடன் வசதி இலங்கைக்கு எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் என்பது தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தியிடம் வினவியது.

 
இலங்கைக்கு இரண்டாம் கட்ட உதவி
படக்குறிப்பு,

கடன் சுமையிலிருந்து மீள வருவதற்கான தொகையாக தற்போது வழங்கப்படும் உதவியை எடுத்துக்கொள்ள முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கூறுகிறார்.

''இந்த பணத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு அமையவே இலங்கை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்ப கட்டத்தில் வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை நிதி தேவைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த தடவை வழங்கப்பட்டுள்ள தொகையை செலவிட வேண்டிய விதம் நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்." என அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஊடாக, இலங்கை கடன் சுமையிலிருந்து மீள முடியுமா என அவரிடம் வினவினோம்.

''கடன் சுமையிலிருந்து மீள வருவதற்கான தொகையாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையின் கடன் சுமார் 84 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. அதிலும், தற்போது வழங்கப்பட்டுள்ள 330 மில்லியன் டொலர் போதுமானதாக இல்லை. சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் கடன் தீர்வு பொறிமுறைகளை அங்கீகரிப்பதற்கான ஒன்றாக பார்க்க முடியும். இலங்கை அரசாங்கம் இந்த தொகையை எதற்காக பயன்படுத்த போகின்றது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்," என அவர் பதிலளித்தார்.

இதனூடாக ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தொடர்பிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி விளக்கமளித்தார்.

''இலங்கை தொடர்பாக சர்வதேச நிதி சந்தையில் ஏற்பட்டிருக்கின்ற அந்த தொய்வு நிலை ஓரளவுக்கு அகன்று, மீண்டும் கடன் பெறும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கும். எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் போது பணம் என்ற அந்த வழிக்கு அப்பால், இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக, மேலும் கடன் வாங்குவதற்கான அங்கீகாரமாக இதனை பார்க்க முடியும்." என அவர் கூறினார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன், மீள செலுத்துவதற்கான காலம் குறித்த இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

''இதனை அடைய வேண்டும் என்றால், இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அது சம்பந்தமாக இலங்கை தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான உள்நாட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைக்கு உகந்ததாகவே சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை பார்க்க முடியும். இரண்டாம் கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் போது அது சர்வதேச கடன் வழங்குநர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அநேகமாக சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவாக இருக்கும். " என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cp06r304m75o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.