Jump to content

தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா

அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டது. ஒரு எல்லைக்குட்பட்ட நம்மால், ஒரு எல்லைக்குள்தான் சிந்திக்கவும் செயலாற்றவும் முடியும். இதற்குள் நம்மை நாமே வல்லுனர்களென்று கருதிக் கொள்வதெல்லாம் நமது தனிப்பட்ட ஆர்வங்கள் சார்ந்தது.

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு என்ன நடைபெறப் போகின்றது? இதற்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? தாயுமானவர் கூறுவது போன்று, நாமொன்றும் அறியோம் பராபரமேயென்று கூறிவிட்டு, அமைதியடைந்துவிடவும் முடியாது. பதிலளிக்கவும் வேண்டும் ஆனால் அந்த பதிலில் நிதானமும் தெளிவுமிருக்க வேண்டும். இதுவரையில் என்ன நடந்தது என்பதில் தெளிவிருக்கும் போதுதான், இனிமேல் நடைபெறப் போகும் – அல்லது, நடைபெறலாமென்று நாம் எதிர்பாக்கும் விடயங்களின் சாத்தியப்பாட்டை ஆராய முடியும்? ஒரு விடயத்தை சிலரும், சிலவேளைகளில் பலரும் கூறுவதை காணமுடிகின்றது.

அதாவது, இந்தியாவை கையாண்டிருக்கலாம், அமெரிக்காவை கையாண்டிருக்கலாம், அதற்கான வாய்ப்பு இப்போதுமுண்டு, ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அதனை சரியாக புரிந்துகொண்டு கையாள முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களிடம் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கினால், அவர்களால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் இது பேசுவது போன்று, கட்டுரையெழுதுவது போன்று, இலகுவான விடயங்கள் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்ற சிலர் ஆற்றல்லற்றவர்கள் அல்லர். குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கின்ற சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஆற்றலுண்டு. அவர்களுக்கு இந்த விடயத்தில் நீண்ட அனுபமுண்டு. அதே போன்று, தமிழரசு கட்சியில் சுமந்திரனும் ஆற்றலுள்ளவர்தான். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விடயங்களை அறிந்தவர்தான். அதனை மறுதலிக்க முடியாது. ஆனால் இவர்களால் என்ன செய்யமுடியும்? தேர்தல் அரசியலுக்காக சில விடயங்களை கூறவேண்டிய நிர்பந்தத்திலிருந்தாலும், இவர்கள் கூறிவரும் விடயங்கள் எதனையும், அடைய முடியாதென்பதை அவர்களும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசியல் கட்சியென்பதால் தங்களால் முடியாதென்றும் மக்களிடம் கூறமுடியாது. ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் நிலைமை திரிசங்கு நிலைதான்.

இன்றைய தமிழ் தேசிய அரசியலை ஆழமாக நோக்கினால், ஒரு விடயத்தை காணலாம். அதாவது, இன்று தமிழ் தேசியமென்பது சில நம்பிக்கைகளினால் மட்டுமே அசைகின்றது. முதல் நம்பிக்கை, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டும். இரண்டாவது, நம்பிக்கை, இந்தியாவிற்கு ஒரு தேவையேற்படும், அப்போது வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கித்தான் வரவேண்டும் ஏனெனில், இலங்கைக்குள் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை கையாள முடியாமல் இந்தியா தடுமாறுகின்றது.

மூன்றாவது நம்பிக்கை, புலம்பெயர் சமூகம் பற்றியது. புலம்பெயர் சமூகம் பலமாக இருக்கின்றது, மேற்குலக நாடுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆற்றலோடிருக்கின்றது. அவர்களின் அழுத்தங்களால் ஏதோவொரு வகையில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். நான்காவது, சீன – அமெரிக்க உலகளாவிய போட்டியின் காரணமாக, இலங்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த பின்புலத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஈழத் தமிழர்கள் இருப்பதால், அமெரிக்காவின் நகர்வுகளுக்கு தமிழர்கள் தேவைப்படுவார்கள், இது தமிழர்களுக்கு சாதகமானது. மொத்தத்தின் இவற்றின் வாயிலாக ஈழத் தமிழர்களுக்கு விமோசனமுண்டு.

யுத்தமில்லாத கடந்த 13 வருடகால தமிழ் தேசிய அரசியலானது இவ்வாறான நம்பிக்கைகளின் வழியாகத்தான், நகர்ந்திருக்கின்றது.

spacer.png

இவைகள் அனைத்துமே சிலரிடமும், பலரிடமும் உள்ள எதிர்பார்ப்புக்கள் மட்டுமே. முதலாவது நம்பிக்கையை நோக்குவோம், சர்வதேச அழுத்தங்களின் வழியாக தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் கிடைக்கும். இதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எதிர்பார்க்கலாம், எங்களுடைய அறிவின் எல்லைக்குட்பட்டு, அனுமானிக்கலாம். முதலில் சர்வதேச அழுத்தங்கள் என்பதால் நாம் எதை விளங்கிக் கொள்கின்றோம்? இது தொடர்பில் முன்னைய பத்திகளிலும் சில விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். முதலில் சர்வதேச அழுத்தமென்பது, மேற்குலக அழுத்தம் மட்டுமே. அதாவது, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அத்துடன் ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களாகும். மனித உரிமையின் மீதான கரிசனையே, இந்த அழுத்தங்களின் அடிப்படையாகும். ஒரு வேளை நாம் மனித உரிமை தொடர்பில் பேசாவிட்டாலும் கூட, அவர்கள் பேசுவார்கள். ஏனெனில் அது அவர்களின் வெளிவிவகார அணுகுமுறையாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மேற்படி நாடுகள் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. இந்த நாடுகளின் அழுத்தங்கள் நேரடியாகவும், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச அழுத்தமென்பது, இதுதான். இதுதான் கடந்த 13 வருடங்களாக இடம்பெற்றுவரும் அழுத்தங்கள்.

இந்த அழுத்தங்களை தீவிரப்படுத்துங்கள் – என்னும் பெயரில்தான், ஆண்டுகள் தோறும், தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக குழுக்களும், புலம்பெயர் குழுக்களும் கடிதங்களை அனுப்பியிருந்தன, பயணங்களையும் மேற்கொண்டிருந்தன. எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்தனவா? இல்லை. ஏன் அவ்வாறு நடைபெறவில்லையென்பதற்கு நம்மில் சிலரிடமுள்ள இலகுவான பதில், அரசியல்வாதிகள் இதனை சரியாக கையாளவில்லை. அவர்களுக்கு விடயங்கள் விளங்கவில்லை. இதிலுள்ள அடிப்படையான விடயம் அரசியல்வாதிகளால் இந்த விடயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் எதனையும் செய்ய முடியாது. கடிதங்களை அனுப்பலாம், தேர்தல் அரசியலுக்காக, தங்களுடைய கடிதங்களிலுள்ள விடயங்களைத்தான் ஆணையாளர் உள்வாங்கியிருக்கின்றார் – என்று அறிக்கை வெளியிடலாம். இந்த அறிக்கைகள் தேர்தல் அரசியல் தொடர்பானது. அதே போன்று, இன்னொரு கட்சி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரன் தடுக்கின்றார், என்று அறிக்கை வெளியிடலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரனால் எவ்வாறு தடுக்க முடியும்? நிச்சயம் முடியாது. இவ்வாறான கதைகளெல்லாம் தேர்தலில் ஒருவரை தோற்கடிப்பதற்கு மற்றைய கட்சி கூறும் கதைகள். ஆனால் அறிவுள்ள ஒரு தரப்பு இவ்வாறான கதைகளை ஆராயமல் உச்சரிக்கக் கூடாது.

இரண்டாவது இந்தியா தொடர்பானது. இந்தியா தொடர்பில் தெளிவான பார்வை, தமிழ் சூழலில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இங்கும் பிரச்சினை இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புக்கள்தான். இதில் அரசியல்வாதிகளிடம் பிரச்சினையில்லை. ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரிடம்தான் பிரச்சினையுண்டு. ஒரு தரப்பினர், இந்தியாவை ஈழத் தமிழர்களின் வேலையாள் போன்று நோக்குகின்றனர். தாங்கள் விரும்பும் ஒன்றை இந்தியா செய்ய வேண்டும். இரண்டாவது, தரப்பினர், இந்தியாவென்னும் ஒரு பிராந்திய சக்தியின் தேசிய பாதுகாப்பே, ஈழத் தமிழர்களில்தான் தங்கியிருக்கின்றது – என்றவாறு புனை கதைகளை எழுத முற்படுகின்றனர். இரண்டுமே அடிப்படையிலேயே தவறானது.

இந்தியா, நாம் விரும்புவதையெல்லாம் செய்யாது என்பதை நாம் முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவின் கொள்கை, அன்றிலிருந்து இன்றுவரையில், ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது, இலங்கை ஒரு நட்புநாடு. அந்த நட்புநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதில் தலையீடு செய்யும் கடப்பாடு இந்தியாவிற்குண்டு. அன்றைய சூழலில் இந்திராகாந்தி கூறியது ஒன்றுதான் – அதாவது, ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியாவானது, அருகிலுள்ள இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனால் அதற்காக சிங்களவர்களின் குரல்வளையை நசிக்க வேண்டுமென்று, தமிழர்கள் எதிர்பார்த்தால், அதனை இந்தியா ஒரு போதும் செய்யாது. ஏனெனில் இந்திராகாந்தி, அதன் பின்னர், அவரது புதல்வர் ராஜீவ்காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குரல்வளையை பிடிக்கும் சிறிய அணுகுமுறையிருந்தது உண்மைதான். ஒரு புறம் ஈழ ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்த இந்தியா, பின்னர் அதனையே ஒரு காரணமாகக் கொண்டு இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்தியாவின் அன்றைய அணுகுமுறை இராணுவரீதியானது. ஆனாலும் இந்தியா ஈழத் தமிழர்களின் பெயரில் தலையீட்டை முன்னெடுத்த போதிலும் கூட, அதன் மூலம் இந்தியாவிற்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இறுதியில் விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்தோடு, இந்தியா வெளியேறியது.

மூன்றாவது நம்பிக்கை புலம்பெயர் சமூகம் தொடர்பானது. தாயக தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக புலம்பெயர் சமூகம் வளர்சியடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். அதனை மறுதலிக்க முடியாது ஆனால் இது தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. புலம்பெயர் சமூகம் தலையீடு செய்வதால்தான் மேற்குலம், இலங்கை விடயத்தில் சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக கருதுவது தவறானது. அண்மையில் கனடிய வெளிவிவகார விடயங்களில் நிபுனத்துவம் வாய்ந்த பேராசிரியர் கிம் நொஷலை, எனது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கான நேர்காணல் செய்திருந்தேன். இதன்போது அவர் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் அடிப்படையானது. மேலும் கனடாவின் அணுகுமுறை தனியானது அல்ல, அதன் நேச நாடுகளின் அணுகுமுறையின் அங்கமாகும். ஒருவேளை, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கூட, கனடாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. மேலும் கனடாவில் இடம்பெறும் புலம்பெயர் செயற்பாடுகளை உள்நாட்டு விவகாரமாக நோக்க வேண்டும். உதாரணமாக இனப்படுகொலை வாரத்தை அனுமதிப்பது. இவைகள் உள்ளுர் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளேயன்றி, கனடாவின் வெளிவிவகார கொள்கையில் தாக்கம் செலுத்தும் விடயங்களல்ல.

எனவே விடயங்களை நோக்கினால், இவ்வாறான எதிர்பார்புக்களும், அந்த எதிர்பார்ப்புக்கள் மீதான எதிர்வு கூறல்களும் முற்றிலும் சரியானதல்ல. இவற்றுக்கான வாய்ப்புக்கள் என்பது, பெரும்பாலும் அதிஸ்டத்தை நம்புவது போன்றது. ஒரு இனத்தின் அரசியல் போக்கை இவ்வாறு அணுகுவது சரியானதா? கடந்த காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள் எவையுமே இவ்வாறான விடயங்கள் மீது நம்பிக்கை வைப்பதை சந்தேகத்துடன் நோக்குமாறுதான் வற்புறுத்துகின்றது. முதலில் நாம் ஏதாவதொரு வகையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஏதாவதொரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது. அவ்வாறில்லாவிட்டால், நமது நிலைமையானது, பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை என்பதாகிவிடும். கடந்த 13 வருடங்களாக, நமது காலம், பல்லக்கு பேச்சுக்களில்தான் கழிந்திருக்கின்றது. இது சுகமானது ஆனால் மக்களுக்கு பயனற்றது.

 


 

http://www.samakalam.com/தமிழரின்-அரசியலை-வழிநடத்/

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தியா பற்றிய கட்டுரையாளரின் கருத்து பிழையானது.

இந்தியா இலங்கையை நன்றாக இருக்க விடாது. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.