Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வானத்தில் நட்சத்திரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கடைசி நாளன்று தோழிகளுடன் பள்ளியின் மாமரத்தடியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஸ்டீஃபன் சார் என்னைக் கூப்பிட்டு ஒரு ரோஸ் கலர் நோட்டீசை தந்து விட்டு சென்றார். அதில் இயேசுவின் வாழ்க்கை குறிப்பு எழுதப்பட்டு முடிவில் பாஸ்காவை காண வாரீர். இடம், நாள், நேரம். எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போதே தீர்மானித்துக் கொண்டேன்.

300px-gerard_van_honthorst_001.jpg?w=300

சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். அம்மா இன்னும் வரவில்லை, பள்ளியில் கடைசி நாள் என்பதால் பார்ட்டி இருக்கும். அப்பாவின் வண்டியை காணவில்லை. மெயின் ரோடுக்கு போயிருப்பார். பொருட்கள் வாங்க, நண்பர்களுடன் அளவளாவ. பாட்டி திண்ணையில் கால்நீட்டி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். தம்பி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். சைக்கிளை அலட்சியமாக சுவரோடு சரித்தேன். ஸ்டைலாக இறங்கி புத்தகப்பையை திண்ணையின் மூலையில் எறிந்தேன். ’தூது போ ரயிலே, ரயிலே, துடிக்குதொரு குயிலே, குயிலே’ சத்தமாக பாடியபடி படிகளில் குதித்து ஏறினேன்.

பாட்டி “என்னடி, ஒரே பாட்டும் டான்சும்? பரிட்சை முடிஞ்சிருச்சுன்னா? ஒங்கப்பன் வந்து ஒன்ன ஒக்காத்தி வச்சு அடுத்த போட்டிப்  பரீட்சைக்குப் படிக்க சொல்லப் போறான். அப்ப இருக்கு ஒனக்கு” என்றார்கள்.

அப்போது நாங்கள் ஆலத்தூர் எனும் கிராமத்தில் இருந்தோம். அந்த ஊர் அரசுப் பள்ளியில்தான் நான் படித்தேன். அம்மா அங்கு தொடக்க பள்ளியிலும் அப்பா நான் படித்த மேல்நிலைப் பள்ளியிலும்  வேலை பார்த்தனர்.

அந்நாட்களில்  அரசு ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும்  எட்டாம் வகுப்பு முழுஆண்டு பரீட்சையில் பள்ளியில் முதல் இரண்டு ராங்க் வருபவர்கள் அனைவருக்கும் ஒரு போட்டித் தேர்வு நடத்தி அதில் தாலுகாவில் முதன்மையாக வருபவர்களுக்கு ஒரு கல்விஉதவித் தொகை வழங்கும். அந்த தொகை வருடாவருடம் கிடைக்கும்.  அந்தத் தேர்வு மிகவும் கடுமையானதாக  இருக்கும். கேள்விகள் எல்லாம் சுற்றி வளைத்து கேட்கப் பட்டிருக்கும். அது இன்னும் 20 நாட்களில் நடக்க இருந்தது.

“போங்க பாட்டி, எனக்கு ரெஸ்டே இல்லயா? நான் இந்த பாஸ்காவ பாத்துட்டு தான் படிப்பேன்னு அப்பாட்ட சொல்லிருவேன்.”

“என்னாது அது? கொண்டா பாப்போம்”

நான் பாட்டியின் தலைக்கு மேலே நோட்டீசை ஆட்டி போக்கு காட்டினேன். வாண்டுப்பயல் கண்ணன்  வெளியிலிருந்து ஓடி வந்து அதைப்பிடிக்கத் தாவினான்.

“ஒத வாங்கப் போற, போடா” என்றவாறு பாட்டியிடம் நீட்டினேன். கண்ணாடியை போட்டுக் கொண்டு பாட்டி படித்து முடித்தார்.

“பட்டுக்கோட்டையிலேல்ல நடக்குது, ஒங்கப்பன் எங்க விடப்போறான்?”

“இல்ல பாட்டி . நான் கேக்குறேன். அப்பா நல்ல மூடில இருந்தா விடுவாங்க. இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு.”


அதற்குள் இயேசுவின்  கதையை மீண்டும் பாட்டியிடம் நானும் தம்பியும் கேட்டுக் கொண்டோம். பாட்டி எல்லா கதைகளையும் புராணத் தொனியில் சொல்வதில் வல்லவர். ஏசுவே ஒரு இந்து சாமிபோல அவரை மீறி ஆகிவிட்டார்.

christ-before-the-high-priest-gerrit-van-honthorst-1.jpg?w=813

என் பாட்டி கதைக் களஞ்சியம்.  மஹாபாரத, ராமாயணக் கதைகள், பாகவதக் கதைகள், கண்ணனின் சிறுவயது லீலைகள், குண்டலகேசி கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை கதை, விசுவாமித்திரர், வசிஷ்டர், துர்வாசர், பரசுராமர் போன்ற ரிஷிகளின் கதைகள், இந்திரன், தேவலோக கன்னிகள் ஊர்வசி, மேனகை, ரம்பை, திலோத்தமை கதைகள், பட்டிவிக்ரமாதித்தன் கதைகள்…

அகலிகை சாபம் வாங்கிய கதை, மணலில் பானை செய்து தண்ணீர் கொண்டு போக முடியாமல் கணவனிடம் சாபம் வாங்கிய பத்தினிகதை… இவ்விரு கதைகளிலும் நான் அழுது விட்டேன். தன் கணவனை தாசி வீட்டுக்கு கூடையில் வைத்து  தூக்கி சென்ற பத்தினி நளாயினி கதை அந்தக் கதைகேட்டு நான் அவளைத் திட்டினேன். கூடையோடு அந்த முனிவரை கிணற்றில் போட்டிருக்க வேண்டாமா? புத்தி கெட்டவள்.

மேலும் கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, அலிபாபா போன்ற சினிமா கதைகளையும் பழைய புராணமாக்கும் நவயுகக் கதைசொல்லி என் பாட்டி.

அம்மா பார்ட்டி முடிந்து சிரித்த முகத்துடன் வந்தாள். அவள் முந்தானையை பற்றிக் கொண்டு தம்பி ஓடினான். நானும் வேகமாக உள்ளே ஓடினேன்.  பேப்பரில் சுற்றி கைகுட்டையில் பொதிந்து கொண்டுவந்த மைசூர்பாக்கையும்  காராசேவையும்  அம்மா  எங்களுக்கு பங்கு வைத்தாள். பள்ளியில் டீ மட்டும் குடித்திருப்பாள்.

பாட்டி திண்ணையில் இருந்து “என்னா அங்க?” என்றார்கள்.

அம்மா கிசுகிசுப்பாக “மோப்பம் புடிச்சுருச்சு, கொண்டுபோயிக் குடு” என்றாள்.

பாட்டியை இப்போதைக்கு பகைத்துக்கொள்ளக் கூடாது. பாஸ்காவுக்கு அழைத்து செல்ல இருக்கும் தேவதூதர் அல்லவா?

அப்பாவின் வண்டியின் சத்தம் தெருமுனையில் கேட்டது. ஆட்டத்தை நிறுத்தி அமைதியானோம். இன்றைக்கு பாடபுத்தகத்தை விரித்து வைத்தால் அது பொருத்தமாக இராது. நான் உடனே சோவியத் இதழை எடுத்துக் கொண்டேன். தம்பி என்னருகே வந்து அமர்ந்து கொண்டான். அப்பா உள்ளே வந்து சுற்று முற்றும் பார்த்தார். தங்கக் கண்மணிகளாக நாங்கள் அவர் கண்ணுக்கு திகழ்ந்திருப்போம் என நினைக்கிறேன். உள்ளே மளிகை சாமானை வைத்துவிட்டு அம்மாவிடம் ஓரிரு சொற்களில் ஏதோ  முணுமுணுத்துவிட்டு திண்ணைக்கு வந்தார்.

“பாப்பா, இன்னக்கி பரிட்ச எப்டி  எழுதின?” துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு ஈஸிசேரில் அமர்ந்தார்.

“நல்லா எழுதினேம்பா”  என்ன மனநிலையில் இருக்கிறார் என யூகிக்க முடியவில்லை. நோட்டீசை காட்டலாமா? இப்போது வேண்டாம். தருணம் கனிந்தமைக்கான உறுதியான சான்றுகள் இல்லை.

அம்மா காபியை அப்பாவிடம் தந்துவிட்டு சென்றாள். காப்பியை அருகே ஸ்டுலில் வைத்துவிட்டு அப்பா “பாப்பா இங்க வா” என்றார்.

நான் அருகே சென்றேன். ”என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் . சொல்லு பாப்போம்” என்றார்.

நான் ஆழ்ந்து மூச்சை இழுத்து, ”செட்டியார் கடைப் பக்கோடா” என்றேன்.

“எங்க பாப்பாயி கரெக்டா கண்டுபிடிச்சுருச்சே” என்று சிரித்தார்

சரியான தருணம் . குஷியாக இருக்கும் போது மட்டுமே என்னை என் அப்பா பாப்பாயி அல்லது கழுத என்பார்.

என் தம்பி உடனே “அப்பவே வாசன வந்துச்சுப்பா.” என்றான். உடனே அவனை மடியில் ஏற்றிக் கொண்டார்.

அவனை தனியாக பிறகு கவனித்துக்கொள்வோம் என முடிவுசெய்தேன்.

“இந்தா எல்லோருக்கும் ஒரு பொட்டலம் கொடு” என்னிடம் பொதியை நீட்டினார்.  

கொடுத்துவிட்டு “அப்பா, இதப் பாருங்க” நோட்டீசை நீட்டினேன். அது என்ன என்று எனக்கே தெரியாததுபோல.

வாங்கிப் படித்துவிட்டு என்னைப் பார்த்தார். ஒரு கணம் கூட இடைவெளி விடாமல் “அப்பா, நானும் பாட்டியும் தம்பியும் பாக்கப்போட்டுமா” என்றேன்.

“அம்மா, இதுங்க ரெண்டையும் கூட்டிட்டு போய்ட்டு வந்துடுவீங்களா?”

பாட்டி ஆர்வமில்லாதது மாதிரி “அதெல்லாம் போலாம். ஆனா நைட்டு நாடகம் முடிய பன்னெண்டு மணி ஆய்டும். சரசு வீட்டுல தங்கிட்டு மறுநா தான் வருவோம்” என்று இழுத்தார்.

சரசு  அத்தை என் அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை. பட்டுக்கோட்டை காசாங்குளம் ரோட்டில் வாடகைக்கு குடி இருந்தார்.

அதெல்லாம் தேவர்கள் முடிவுசெய்யும் தருணம். அப்பா உடனே “சரி” என்றார். ”பாலுவையும் தொணக்கி கூட்டிட்டு போங்க” என்றார். பாலு சரசு அத்தையின் கடைசி தம்பி.

அப்பா ஹாலுக்குள் சென்றதும் பாய்ந்து சென்று பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டேன். தம்பியும் முதுகுப் பக்கமாக வந்து தொங்கினான். “மூச்சு முட்டுது, விடுங்க கழுதங்களா” எங்கள் பாட்டி போலியாக சலித்துக் கொண்டார் .

மறுநாள் சனிக்கிழமை வீடு சுழல் காற்றடித்ததுபோலச்  சிதறிக்கொண்டே இருந்தது. அப்பா  பிரதானமாக சில அறிவுரைகளை மட்டுமே வழங்கினார். தம்பி கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க எப்போதும் அவன் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஈ மொய்க்கிற கண்ட தின்பண்டங்களையும் வாங்கி சாப்பிடக் கூடாது. வீட்டிலிருந்து கொண்டு போகிற தின்பண்டங்களை சாப்பிட்டு, வீட்டுத் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். உட்காரும் மணல்மேல் துண்டை விரித்து அமர வேண்டும்.

அம்மா நினைத்து நினைத்து ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா சொல்வதற்கு நேர்மாறாக பாட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார் .ஒருவர் சொல்லை இன்னொருவரிடம் சொல்ல நான் அடுக்களைக்கும் திண்ணைக்குமாக பறந்து கொண்டிருந்தேன். அடுக்களையில் இருந்து அர்ஜுனன் விடும் அம்பை திண்ணையில் இருந்து பீஷ்மர் விடும் அம்பு தூள் தூளாக்கிக் கொண்டிருந்தது.

அம்மா செய்து வைத்திருந்த  முறுக்கு, சீடை , ரவா லாடு எல்லாம் பொதிந்தாயிற்று. இதற்கிடையில் பாட்டி நீட்டி முழக்கினார். “சீடை கடிக்கிற மாதிரியா ஒங்கம்மா பண்றா? இருக்குற பல்லும் போய்டும் போல இருக்கு“

என் அப்பா உடனே “அது  சீடை இல்லம்மா, சீட்டை. வல்லின ட“ என்றார்.

அம்மா கையில் கொண்டுவந்த தண்ணீர் சொம்பை நங் கென்று வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.


நான் உடனே “பாட்டி நீங்க லாடும் ,முறுக்கும் சாப்பிடுங்க“ என்று பிரச்சினையை தீர்த்து வைத்தேன்.

நான் ஒவ்வொரு பிரச்சினையையும் முற்றவிடாமல்  ஆரம்பத்திலேயே தீர்த்து வைக்கும் வெளியுறவு தூதர் மாதிரி செயல்பட்டுக் கொண்டிருந்தேன். எந்த பிரச்சினை வெடித்து சண்டை வந்தாலும் முதலில் நாடகத்திற்கு தான் வேட்டு என்பதை உணர்ந்திருந்தேன்.

மறுநாள் காலை விடிந்ததும் கிளம்புவதால் சண்டையெல்லாம் வராது. இந்த இரவை மெல்ல கடத்திவிட வேண்டும். சரி, ஆடைகள் பேக் செய்து எடுத்துக் கொள்வதை பேசினால் நேரம் போய்விடும். “அம்மா, என்ன ட்ரெஸ் போட்டுக்க  நான்? பர்த் டேக்கு எடுத்தத போட்டுக்கவா?“

முந்தைய மாதம் தான் என்  பிறந்த நாள் கடந்திருந்தது. அப்பா எனக்கு அழகான லைட் வயலட் கலர் பைஜாமா எடுத்து தந்திருந்தார். பிறந்த நாளன்று பைஜாமா அணிந்து அதற்கு மேட்சாக அம்மா வாங்கியிருந்த வளையல், மணி, ரிப்பன் சகிதம் புறப்பட்டு சென்றேன். கிளம்பும் போதே அம்மா திருஷ்டி சுத்தி “எங்கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்றாள்.

ஆனால் பள்ளியில் நேர்மாறாக  பள்ளியே  கூடி நின்று  என்னை வேடிக்கை பார்த்தது. வியந்து வியந்து பேசிக்கொண்டார்கள். சிரிப்பு வேறு. மாலை வீட்டிற்கு வந்து இனிமேல் அந்த டிரெஸ்ஸை போட மாட்டேன் என்று காலை, கையை உதைத்து புரண்டு அழுதேன். அம்மா தான் அணைத்து சமாதானப்படுத்தினாள்.

”எஞ்செல்லம் இல்ல, பர்த்டேயும் அதுவுமா அழுவக் கூடாது. ஊரா இது? சரியான பட்டிக்காடு. இவங்கள்ளாம் பைஜாமாவ எங்க கண்டாங்க. போன மாசம் பட்டுக்கோட்டையிலே  பாத்தமே, அந்த படத்துல ஒனக்கு புடிச்ச ஸ்ரீதேவி டிசைன் டிசைனா இதத் தான போட்டுட்டு வருவா . என்ன படம் அது“

“அடுத்த வாரிசு” என்று கண்ணீருடன் புன்னகைத்தேன்.

அம்மா அந்த சம்பவத்தை நினைத்து புன்னகைத்துக் கொண்டே பீரோவிலிருந்து பைஜாமாவை எடுத்து என்னிடம் தந்தாள். ”கண்ட எடத்துல வெத்தில பாக்கு துப்பி வச்சிருப்பாங்க. பாத்து ஒக்காரு. அழுக்காக்காம” என்றாள்.

தம்பி “அம்மா, நான் பறவ சட்ட போட்டுக்கவா?” என்றான் பரவசத்துடன். காப்பி கலரும், பிஸ்கட் கலரும் கலந்த அந்த சட்டையில் ஓவியங்களில் பறவைகளை போடுவது போல் வி ஷேப்பில் போட்டிருக்கும்.

“எப்ப பாரு, அதயே போட்டு மானத்த வாங்குறாம்மா”, அவன் முகம் அழத்தயாராக இருந்தது. நான் ஓரமாக அவனை தள்ளிக் கொண்டு போனேன்.” இந்த பாரு, நான் சொல்றபடி டிரெஸ் பண்ணா உனக்கு அக்கா குச்சி ஐஸ், கல்கோணா, சர்பத் எல்லாம் வாங்கித் தருவேன்.” என்று முணுமுணுத்தேன். உடனே தியாகத்துக்கு ஒத்துக் கொண்டான்.

மறுநாள் அம்மா மெல்ல “பாப்பா“ என்று எழுப்பியதும் பாய்ந்து எழுந்தேன். குளத்துக்குப் போக எல்லாம் நேரமில்லை. வீட்டிலேயே குளித்தோம். பாட்டியும் சுறுசுறுப்பாக கிளம்பினார். டிபன் சாப்பிட்டுவிட்டு மெயின் ரோட் போய் பஸ் ஏறினோம். ஜன்னலோரத்தை தம்பிக்கு விட்டுக் கொடுத்தேன்.  ரோஜாப்பூ நிறத்தில் அழகாக  உற்சாகமாக இருந்தான். என் வீட்டில் அப்பாவும் நானும் தான் மாநிறம். மற்ற எல்லாரும் நல்ல சிவப்பு. பாட்டி சின்ன வயசில் இன்னும் சிவப்பாக இருப்பார்களாம்.

பாட்டி “ஒங்கப்பன் எண்ணி காசு கொடுத்திருக்காண்டி, கஞ்சன்.  கண்ட பண்டமெல்லாம் கேக்கக் கூடாது“ என்றார்.

“பாட்டி, அம்மா எனக்கு தனியா காசு கொடுத்திருக்காங்க, இந்தாங்க” என்றேன்.  அம்மாவிடம் முதல் நாள் இரவு, “அம்மா , நெறய கட போட்டிருப்பாங்க. நான் மணி, வளையல் வாங்கிக்கட்டா” என்று கிசுகிசுத்தேன்.

“உன் டெஸ்ட் முடிஞ்சு பாட்டி வீடு போம்போது திருவாரூர் தேரோட்டத்தில் அம்மா எல்லாம் வாங்கித் தருவேன்“ என்றாள்.

பாட்டிவீடு, தேரோட்டம் என்றதுமே ஜிலீர் என்றது எனக்கு. இந்த ஏப்ரல், மே மாதங்கள்தான் எத்தனை உற்சாகமானவை. விடுமுறை, திருவிழா, தேரோட்டம், பாட்டி வீடு, சித்தி வீடுகள். ஆனாலும் கெஞ்சி கொஞ்சம் பணம் வாங்கிவிட்டேன்.

சரசு அத்தை வீட்டில் ஏக களேபரமாக இருந்தது. ரொம்ப நாள் கழித்து சென்றதால் பலத்த உபச்சாரம். மதியம் நன்றாக உறங்கினோம். மாலை நான்கு மணிக்கு கிளம்பி சென்றோம்.  பாலு மாமாவும் கூட வந்தார்.

செயின்ட் இசபெல்லா பள்ளியை ஒட்டினாற்போல் இருக்கும் பெரிய சர்ச் முன்னால் பெரிய திடல் இருந்தது. ஓரமெல்லாம் கலர் கலராக புதிதாக முளைத்த கடைகள். அப்போதே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். ஒரு பக்கம் ராட்டினம். பலவித சிறுவர் விளையாட்டுக்கள்.

“இங்கதான் எல்லா மீட்டிங், அரசியல் கூட்டமும்  நடக்கும். ஒரு வாட்டி எம்.ஜி.ஆர் கூட வந்திருக்கிறார். நைட் இந்த கிரவுண்ட் நிரம்பிடும். பக்கத்து ஊர்கள்ல இருந்து நெறய ஆட்கள் நாடகம் பாக்க வருவாங்க… அருணா, கண்ணன் கைய பத்தரமா புடிச்சுக்க” என்றார் பாலு மாமா.

நான் தலையாட்டிக் கொண்டே தம்பி கையை இறுக்கினேன். வியர்வையில் வழுக்கியது. அவனுக்கு வலித்திருக்க வேண்டும். ஆனாலும் தங்க குடம்போல் சமத்தாக இருந்தான். வீட்டில்தான் அவனைப் போட்டு மொத்துவேன். வெளியில் வந்தால் எனக்கு அவன்மேல் பாசம் பொங்கும்.

தாகமாக இருந்ததால் எல்லோரும் சர்பத் குடித்தோம். ஆரஞ்சுக் கலர் எசென்ஸ் ஊற்றி எலுமிச்சை பிழிந்து நிறைய ஐஸ்கட்டிகள் மிதக்க பெரிய கண்ணாடி கிளாஸில் தரப்பட்ட சர்பத் அவ்வளவு நன்றாக இருந்தது. குடிக்க குடிக்க தீரவில்லை. தம்பி குடிக்க திணறினான். நான் வாங்கி மிச்சத்தை வாயில் கவிழ்த்துக் கொண்டேன்.

பிறகு நான் ராட்டினத்தில் ஏறி ரவுண்ட் வந்தேன். தம்பி பயந்தான். சோன் பப்டி வாங்கி சாப்பிட்டபடியே மேடை நன்கு தெரிகிற இடமாக பார்த்து துண்டை விரித்து அமர்ந்தோம்.

இருட்டி விட்டது. எட்டு மணி ஆனபோது ஆட்கூட்டத்தால் மைதானம் நிரம்பியது.  ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம். ஏதோ திருச்சியிலிருந்து வரும் நாடகக் குழுவினர் என்று பாலு மாமா சொன்னார். எட்டு மணிக்கு ஒரு மெல்லிசைக் குழு வந்து பாடிக்கொண்டிருந்தனர். தெரியாத பாடல்கள் நடுவே ’தேவன் திருச்சபை மலர்களே!’ ஒலித்தபோது நான் பாட்டியின் கையை அழுத்தி எனக்கு புடிச்ச பாட்டு  என்றேன். பாட்டியும் ஆமோதித்தார்.


ஒன்பது மணிக்கு நாடகம் தொடங்கியது. கன்னிமேரியின் கனவில் தேவதூதன் வந்து உனக்கு ஒரு தேவமகன் பிறப்பான் என்று கூறும் காட்சியில் நாடகம் அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டது. கன்னிமேரி அழகாக இருந்தார். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், பின்னணி வசனங்கள், இசை எல்லாம் சேர்ந்து நாங்கள் இருப்பது பட்டுக்கோட்டை என்பதையே மறக்க வைத்தது. எல்லோரும் ஜெருசலேமில் இருந்தோம்.

மாட்டுக் கொட்டிலில்  குழந்தை யேசுவின் பிறப்பு, ஏரோது மன்னனின் படைவீரர்கள் இவர்களை துரத்தி வருவது, இவர்கள் மறைந்து தப்புவது, இயேசு வளர்வது, தச்சனான தந்தை ஜோசப்பிடம் இயேசு தச்சுப் பணி கற்றுக் கொள்வது, பிறகு வளர்ந்த பின் மலைப் பிரசங்கம் செய்வது, அவருக்கு சீடர்கள் சேர்வது என நாடகம் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த்து. இடையிடையே ஏற்படும் சந்தேகங்களை பாட்டியிடம் நானும் தம்பியும் தாழ்ந்த குரலில் கேட்டுக் கொண்டோம். பாட்டியின் ஞாபகத்திறனை நான் வியந்தேன். பன்னிரெண்டு சீடர்கள் பெயரையும் பாட்டி மணிமணியாக சொன்னார்கள்.

last-supper-champaigne.jpg?w=1024

தம்பியும் நானும் ஒன்றி விட்டோம். கடைசிவிருந்து நடக்கிறது. யூதாஸ் பணத்திற்காக ஆசைப்பட்டு  முத்தமிட்டு யேசுவை காட்டிக்கொடுத்து விட்டான். அதன்பிறகு நாடகம் பார்ப்பவர்களை கரைத்துவிடும் போல் இருந்தது. ஆங்காங்கே செருமல்கள், உச் கொட்டல்கள். இயேசுவாக நடித்தவர் உயரமாக, ஒல்லியாக, சிவப்பாக கழுத்துவரை வளர்க்கப் பட்ட முடியுடன் இருந்தார். அழகாக, பாவமாக தோன்றினார்.

ஏசு மேல் குற்றம் சுமத்தப் பட்டு, முள்முடி சூட்டப்பட்ட போதே ஆங்காங்கே விசும்பல்கள் எழுந்தன. எனக்கும் நெஞ்சடைத்தது. கண் கலங்கியது. தம்பி கண்ணீருடன் தேம்பிக் கொண்டிருந்தான். நான் அவனை சேர்த்து பிடித்து கொண்டேன்.


இயேசுவை சிலுவை சுமக்கவைத்து, கல்வாரிக்கு அழைத்து செல்லும் காட்சி. “தேவமைந்தன் போகிறான், சிலுவை சுமந்து போகிறான்”. யாரோ பாடினார்கள் உயிரை உருக்கும்படி. அவரை சாட்டையால் அடித்தபடியே செல்கிறார்கள். அவர் தடுமாறுகிறார். விழுந்து எழுந்து மெல்ல குனிந்து சிலுவையின் பாரத்தை சுமக்கமுடியாமல் செல்கிறார். வழியில் அவரைப் பார்த்த அன்னை மேரி மயக்கம் அடைகிறாள்.

207.jpg?w=762

அவர் போகும் வழியில் நிற்கும் மக்கள் திரளில்  யாரோ யேசுவுக்கு தண்ணீர் தருகின்றனர். அதை அவர் வாங்கி ஆவலுடன் வாயருகே கொண்டு செல்லும் போது ஒரு கொடூரப் படைவீரன் அதைத் தட்டி விடுகிறான். அந்த இடத்தில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை. என் தம்பி தாரை தாரையாக கண்ணீர் விட்டு “அக்கா அவர அடிக்கவேண்டாம்னு சொல்லு, சொல்லு” என்றான். நான் அவனை முதுகில் தடவிவிட்டுக் கொண்டே இருந்தேன். பாட்டியை பார்த்தேன். பாட்டியும் ஒன்றி கலங்கிப் போயிருந்தார். கூட்டத்தில் பலரும் அழுது கொண்டிருந்தனர். பெண்கள் பலரும் முந்தானையால் வாயை அழுத்தியபடி தேம்பிக் கொண்டிருந்தனர்.

இயேசு மயக்கமடைகிறார். அவரை அப்போதும் ஒருவன் சாட்டையால் அடிக்கிறான்.  என் தம்பி பயங்கரக் கேவலுடன் அழுதான். திடீரென்று எழுந்து நின்று “கம்னாட்டிப் பயலுவளா, ஏண்டா யேசுவப் போட்டு அடிக்கிறீங்க, அவர விடுங்கடா!“ என்று உரத்தகுரலில் ஆத்திரத்துடன் கத்தினான்.

நானும் பாட்டியும் சூழலை உணர்ந்து அவனை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டோம். அவன் திமிறி எழ முயல நான் அவனை இறுக்கி மடியோடு பிடித்துக்கொண்டேன். அவன் கொஞ்சம் அடங்கி அழத்தொடங்கியபோது மெதுவாக அவன் முதுகை தடவிக் கொண்டிருந்தேன். பாட்டி அவன் தலையை வருடினார்.  அவன் நெடுநேரம் விசும்பியபடி இருந்தான்.

பிறகு சிலுவையில் ஏற்றுவது,  மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுவது எதையும் அவன் பார்க்கவில்லை.  தூங்கிவிட்டான்.  சிலுவையில் ஏற்றி ஆணி அறையும் காட்சி மிகவும் தாங்கமுடியாததாக இருந்தது. நிறையபேர் வாய்விட்டழுதனர். நானும் சத்தமாக கதறி அழுதேன்.

ஆனால் இயேசு உயிர்த்தெழும் காட்சியில் எல்லோரும் வியப்பொலி எழுப்பினர். எனக்கு புல்லரித்தது. மிகுந்த பரவசமாக அந்த இடமே பிரகாசமாக மாறியது போல் தோன்றியது. முடிவில் இனிய கீதத்துடன் நாடகம் முடிந்தது. தம்பி தூங்கிவிட்டதால் ரிக்‌ஷா பிடித்தோம். திறந்த ரிக்‌ஷா‌. பாலு மாமா நடந்துவந்தார்.

resurrection-rembrant-1-973x1400-1.jpg?w=712


ரிக்‌ஷாவில் வரும்போது நானும் பாட்டியும் பேசிக்கொள்ளவில்லை. என் மனம் எந்த நினைவுகளுமின்றி பஞ்சு போல் இருந்தது. வானத்தைப் பார்த்தேன். நீலவானில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்கு நன்கு பரிச்சயமான மூன்று ராஜாக்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். இயேசு பிறந்தபோது அவர்கள்தான் சென்று பார்த்தவர்கள். கிறிஸ்தவக் கதைகளில் அவர்களை மூன்று தீர்க்கதரிசிகள் என்று சொல்வார்கள் என பாட்டி முன்பு சொல்லியிருக்கிறார். மூன்று சாட்சிகள் நம் கண்ணுக்கு நட்சத்திரமாக தெரிகின்றனர். இயேசு அவர்களுக்கு மேல் தேவலோகத்தில் இருப்பார். ரிக்‌ஷாவின் பலமான குலுங்கலில் தம்பி மெல்ல கண்விழித்து மலங்க மலங்க எங்களைப் பார்த்தான். பிறகு நிமிர்ந்து  வானத்தைப் பார்த்தான். மூன்று ராஜாக்களை என்னிடம் காட்டி முகம் மலர்ந்தான். அவனை அப்படியே அணைத்துக் கொண்டேன்.

main-qimg-b49bbaaeb09dc84cefe42023a69f55eb.jpg?w=396

***

https://arunmozhinangaij.wordpress.com/2021/06/18/வானத்தில்-நட்சத்திரங்கள/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரசங்கத்தை விட ஒரு நாடகமானது எப்படி மக்களின் மனதில் பதிந்து விடுகிறது.......!  😁

(நட்ஷத்திரங்கள் பற்றி ஒவ்வொருவர் தங்களின் முன்னோர்கள் சொல்லியபடி கதைகள் சொல்வார்கள், இங்கேயும் அந்த மூன்று நட்ஷத்திரங்களும் "மிருகசீரிஷம்" நட்ஷத்திரத்தின் ஒரு பகுதியாகும்).

நன்றி ஏராளன் .....! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

ஒரு பிரசங்கத்தை விட ஒரு நாடகமானது எப்படி மக்களின் மனதில் பதிந்து விடுகிறது.......!  😁

(நட்ஷத்திரங்கள் பற்றி ஒவ்வொருவர் தங்களின் முன்னோர்கள் சொல்லியபடி கதைகள் சொல்வார்கள், இங்கேயும் அந்த மூன்று நட்ஷத்திரங்களும் "மிருகசீரிஷம்" நட்ஷத்திரத்தின் ஒரு பகுதியாகும்).

நன்றி ஏராளன் .....! 

இவர் எழுத்தாளர் ஜெயமோகனின் காதல் மனைவி.

பகுதி 2 வாசித்துப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வுக்கு  மிக்க நன்றி.  சுய சரிதைக் கதை  சுவாரசியமாக இருந்தது. நல்ல எழுத்தாற்றல்  அவர்கள் வாழட்டும் வளமுடன். 

  • கருத்துக்கள உறவுகள்

நட்ஷத்திரங்கள் அழகாக மின்னுகின்றன.  இயேசுவின் பிறப்பு அப்போஸ்தலர்   அவரின் சிலுவை மரணம்  என்பதுபற்றி இவ்வ்ளவு விரிவாக  அழகாக விவரித்தையிட்டு மிக்க மகிழ்ச்சி . எழுத்தோடடம்   கதையோடு   ஒன்றித்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.