Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்திக் அகமது கொல்லப்பட்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக் அகமது கொல்லப்பட்டது எப்படி?

 

image_54bd00407f.jpg

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை தொடர்பாக பொலிஸ் பொறுப்பின் கீழ்  இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல். அதோடு இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.

சனிக்கிழமை (ஏப்ரல் 15) பின்னிரவு நேரத்தில் பொலிஸ் பொறுப்பின் கீழ் இருந்த  அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்து வரப்பட்டனர். இருவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்குள் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

அந்த சமயத்தில் அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களை போல மைக், கெமரா என கூட்டத்தோடு கூட்டமாக சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேர் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டுள்ளனர். திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு குழுமியிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அத்திக் அகமதுவை மிக அருகில் (பாயிண்ட் பிளாங்க்) குறிவைத்து சுட்டு வீழ்த்தியது தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க அத்திக் அகமதுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் உடன் இருந்த சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 36 ரவுண்டுகள் அவர்கள் மீது சுடப்பட்டுள்ளது.

பொலிஸார் என்ன செய்தனர்?

இந்த கொலை அம்மாநில காவல் துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலத்த பொலிஸ் பாதுகாப்பு இருந்தும் அத்திக் மற்றும் அஷ்ரப் கொலை செய்யப்பட்டது எப்படி? துப்பாக்கி ஏந்திய பொலிஸார் கொலையாளிகளுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை? குற்றவாளிகளான அத்திக் மற்றும் அஷ்ரப்பை பல்வேறு தருணங்களில் செய்தியாளர்கள் நெருங்க அனுமதித்தது ஏன்? என காவல் துறையை நோக்கி பல்வேறு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

பலமுறை செய்தியாளர்கள் நெருங்குவதை கவனித்த கொலையாளிகள், தாங்களும் செய்தியாளர்களை போல மைக், கேமராவும் கையுமாக வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அப்படி சென்றால்தான் கொலை செய்யப்பட்ட சகோதரர்களை நெருங்க முடியும் என அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

மூன்று பேர் சரண்: அத்திக் மற்றும் அஷ்ரப்பை கொலை செய்த பிறகு நொடி பொழுதில் கொலையாளிகள் மூவரும் காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி என தெரியவந்துள்ளது.

காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் இருவரையும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அவர்கள் மூவரும் முழக்கமிட்டதாகவும் தகவல். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. அத்திக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பொலிஸார் கொடி அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அத்திக் அகமது: 60 வயதான அத்திக் அகமது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004 வரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை எம்பியாகவும் (2004 முதல் 2009) பதவி வகித்துள்ளார். அவர் மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அத்திக் - ஷாயிஸ்தா பிரவீன் தம்பதியருக்கு அலி, உமர் அகமது, ஆசாத், அஹ்ஸான் மற்றும் அபான் என ஐந்து மகன்கள். இதில் அவரது மகன் ஆசாத் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். உமர் மற்றும் அலி ஆகியோர் சிறையில் உள்ளனர். அஹ்ஸான் மற்றும் அபான் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளனர். அத்திக் அகமதுவின் மனைவியும் தலைமறைவாக உள்ளார்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை: கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட்டோர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பெப்ரவரி 28-ம் திகதி அவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த சூழலில் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பினை வழங்கினார். இதன்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை அத்திக் தரப்பில் 6 பேர் பலி: உமேஷ் பால் கொலைக்கு பிறகு அத்திக் தரப்பில் இதுவரை 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, அத்திக்கின் மகன் ஆசாத் அகமது, உதவியாளர்கள் அர்பாஸ், விஜய் சவுத்ரி என்கிற உஸ்மான் மற்றும் குலாம் ஹாசன் என ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/அததக-அகமத-கலலபபடடத-எபபட/175-315860

  • கருத்துக்கள உறவுகள்

'டான்' கனவுக்காக நடந்த கொலையா? - கேமரா முன் அதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி

அதிக் கொலை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

16 ஏப்ரல் 2023, 14:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

அருண் மௌரியா, லவ்லேஷ் திவாரி, சன்னி.

இந்த மூன்று பெயர்கள்தான் சனிக்கிழமை இரவில் இருந்து நாளேடுகள் முதல் தொலைக்காட்சி சேனல்கள் வரை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன.

சனிக்கிழமை இரவு மூன்று இளைஞர்கள் செய்தியாளர்கள் போல மாறுவேடமிட்டு வந்தனர் என்று உத்தர பிரதேச காவல்துறை கூறியது.

இரவு 10.30 மணியளவில், பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு பிராந்திய மருத்துவமனைக்கு வெளியே போலீஸ் ஜீப் நின்றது. அதிக் மற்றும் அஷ்ரஃப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

 

முதலில் அஷ்ரஃப் ஜீப்பில் இருந்து இறக்கி விடப்பட்டார். பிறகு ஒரு காவலரின் உதவியுடன் அதிக் அகமது வெளியே கொண்டு வரப்பட்டார்.

ஜீப்பில் இருந்து இறங்கிய பத்து வினாடிகளுக்குள் அதிக் அஷ்ரஃப் இருவரும் செய்தியாளர்களால் சூழப்பட்டனர். இந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தாக்குதல் நடத்தியவர்களும் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

மருத்துவமனையின் பிரதான வாயிலின் உள்ளே 10-15 அடிகள் சென்றவுடன் ஊடகவியலாளர்கள் அதிக், அஷ்ரஃப் இருவரிடமும் அருகில் வந்து பேச முற்பட்டனர்.

இருவரும் மீடியாவுடன் பேசத் தொடங்கியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. திடீரென்று ஊடகவியலாளர்களின் கூட்டத்திலிருந்து ஒருவர் தனது கேமராவையும் வேறொருவர் தனது மைக்கையும் விட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்தனர்.

அவர்கள் அதிக்-அஷ்ரஃப்பை குறிவைத்து அதிநவீன செமி ஆட்டோமாட்டிக் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். அப்போது திடீரென மூன்றாவதாக ஒருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூட்டில் அதிக் மற்றும் அஷ்ரஃப் உயிரிழந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் போலீஸ் தரப்பில் காவலர் மான் சிங்கின் வலது கையில் துப்பாக்கி குண்டு பட்டு காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாகச் செயல்பட்டு ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய மூவரையும் பிடித்தனர். தாக்குதல் நடத்தியவர்களின் கூட்டாளி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவருக்கும் காயமேற்பட்டது.

இந்த வழக்கில் ஐபிசியின் 302, 307 பிரிவுகள், ஆயுதச் சட்டம் 1959இன் பிரிவுகள் 3, 7, 25, மற்றும் 27,1932ஆம் ஆண்டின் குற்றவியல் (திருத்தம்) சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்த விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி பின்னர் போலீசில் சரணடைவதைப் பார்க்க முடிகிறது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? இது திட்டமிட்ட சதியா? மேலும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இதற்கு முன் சிறை சென்றுள்ளார்களா?

அதிக் அகமது கொலை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

லவ்லேஷ் திவாரி யார்?

அதிக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான லவ்லேஷ், உத்தர பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள கேவ்தாரா கிராசிங்கில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் யக்ய குமார் திவாரி.

லவ்லேஷூக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிரயாக்ராஜ் ஸ்வரூப் ராணி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு சகோதரர்களில் லவ்லேஷ் மூன்றாமவர் என்று குடும்பத்தினர் கூறினர்.

அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லவ்லேஷின் தந்தை, 'அவருக்கும் வீட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றார்.

தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்த பிறகுதான் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்துகொண்டதாக அவர் கூறினார். நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை லவ்லேஷ் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுச் செல்வது வழக்கம். அவருக்கும் வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட லவ்லேஷ் திவாரியின் தந்தை யக்க திவாரி

பட மூலாதாரம்,UGC

 
படக்குறிப்பு,

குற்றம் சாட்டப்பட்ட லவ்லேஷ் திவாரியின் தந்தை யக்க திவாரி

அவர் ஏற்கெனவே சிறைக்கு சென்றுள்ளார் என்று லவ்லேஷின் தந்தை தெரிவித்தார். "ஒரு பெண்ணை சாலையில் அறைந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கு தொடர்பாக லவ்லேஷ் சிறை சென்றார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் என்ன வேலை செய்கிறார் என்பது குறித்து குடும்பத்தினரிடம் சொல்லமாட்டார் என்று லவ்லேஷின் இளைய சகோதரர் கூறினார்.

”லவ்லேஷ், சங்கட் மோசன் பகவானின் பக்தர். அவனுடைய தலைவிதியில் இப்படி ஏன் எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை,” என்று லவ்லேஷின் தாயார் தெரிவித்தார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சன்னி சிங் என்ற மோஹித்

அதிக் கொலை வழக்கில், சன்னி சிங் என்ற 23 வயது இளைஞரையும் போலீசார் சம்பவ இடத்திலிருந்து கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் உள்ள குராராவில் வசிப்பவர் சன்னி. சன்னியின் தந்தை ஜகத் சிங் இறந்துவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சன்னியின் மூத்த சகோதரர் பிண்டு சிங், 'அவர் ஹமிர்பூரில் பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளாக வசிக்கவில்லை' என்று கூறினார்.

தாங்கள் மூன்று சகோதரர்கள் என்றும் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் பிண்டு கூறினார்.

"சன்னி சட்டவிரோத வேலைகளைச் செய்து வந்தார். அதனால் குடும்பம் அவருடனான உறவை முறித்துக் கொண்டது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சன்னி சிங்கின் மூத்த சகோதரர் பிண்டு

பட மூலாதாரம்,UGC

அருண் குமார் மௌரியா

18 வயதான அருண் குமார் மௌரியா உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள காதர்வாடியில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் தீபக் குமார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரது சித்தி லட்சுமி தேவி, 'அவர் பல நாட்களாக வீட்டிற்கு வரவில்லை' என்றார்.

கொலைக்கான சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது?

கொலையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், "அதிக் மற்றும் அஷ்ரஃப் கும்பலை ஒழிப்பதன் மூலம் எங்கள் பெயரை மாநிலத்தில் தெரியப்படுத்த விரும்பினோம். எதிர்காலத்தில் எங்களுக்கு இது பயனளிக்கும்," என்று கூறியதாக எப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

"காவல்துறையினர் சுற்றி வளைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியவில்லை. காவல்துறை எடுத்த துரித நடவடிக்கையால் நாங்கள் பிடிபட்டோம்."

"அதிக் மற்றும் அஷ்ரஃப், போலீஸ் காவலில் இருப்பது பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்ததில் இருந்து, நாங்கள் ஊடகவியலாளர்களாக மாறுவேடமிட்டு உள்ளூர் ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் இருந்து இந்த இருவரையும் கொல்ல முயன்றோம்," என்றும் அவர் தெரிவித்தனர்.

அதிக் அகமது கொலை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

சிறையில் மூவருக்கும் நட்பு ஏற்பட்டது

தாக்குதல் நடத்திய மூன்று பேரும் சூழ்ச்சித்திறன் கொண்ட குற்றவாளிகள். இவர்கள் மூவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான வழக்குகளில் சிறை சென்றுள்ளனர் என்று ஹிந்தி நாளிதழான 'ஹிந்துஸ்தான்' தெரிவிக்கிறது.

அவர்கள் சிறையில் நண்பர்களானதாக செய்தித்தாள் கூறுகிறது. மூவரும் அதிக், அஷ்ரஃப்பை கொன்று, டான்களாக மாற விரும்பினர்.

ஒரு சிறிய குற்றத்திற்காக சிறை செல்வது தங்களுக்குப் புகழைக் கொடுக்கவில்லை என்று மூவரும் நம்பியதாகவும், அதனால் அவர்கள் ஏதாவது பெரிய காரியத்தைச் செய்ய நினைத்தார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தித்தாள் கூறியது.

அதிக் மற்றும் அஷ்ரஃப் அகமது, போலீஸ் காவலுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதை மூவரும் அறிந்தனர். பெரிய பெயர் சம்பாதிப்பதற்காக மூவரும் கொலை செய்ய திட்டம் தீட்டினர் என்றும் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

மூன்று பேரும் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், தாக்குதலுக்கு முன் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நிலைமைகளை மதிப்பிட்டதாகவும் அது மேலும் கூறுகிறது. இதற்குப் பிறகு சனிக்கிழமையன்று, மூன்று பேரும் ஊடகவியலாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர்.

அதிக் அகமது கொலை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

அதிக் அகமதின் குற்ற வரலாறு

அதிக் அகமதின் குற்ற வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

1979ஆம் ஆண்டு, முதல்முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அதிக் அகமது மைனர் என்று செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

பிகாரிலும் அதிக் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நான்கு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 1992ஆம் ஆண்டில், அலகாபாத் காவல்துறை தெரிவித்தது.

1996 முதல் அதிக் அகமது மீது 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பிரயாக்ராஜின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

12 வழக்குகளில், அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப்பின் வழக்கறிஞர்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

அதிக் அகமது, பகுஜன் சமாஜ் கட்சியின் MLA ராஜு பால் கொலையில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் இருக்கிறது.

பிப்ரவரி 24 அன்று நடந்த உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

ராஜு பால் கொலை வழக்கில் உமேஷ் பால் ஆரம்ப சாட்சியாக இருந்தார். ஆனால் பின்னர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவரை சாட்சியாக வைக்கவில்லை.

மார்ச் 28ஆம் தேதி பிரயாக்ராஜில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏ நீதிமன்றம், 2006இல் உமேஷ் பாலை கடத்திய வழக்கில் அதிக் அகமது குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

https://www.bbc.com/tamil/articles/cj57lgljp49o

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அத்திக் அகமது... இப்படித்தான்  கொல்லப்பட்டார்.

விலங்குடன் வந்தவரை, சுட்டுக் கொன்று விட்டு... 
வெடி கொளுத்தி,  ஜிந்தாபாத் சொல்கிறார்கள். 😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களை முடித்துவிடப் போகிறார்கள்" - நேரலை கேமராக்களுக்கு முன் அதிக் அகமது, அஷ்ரஃப் கொலை செய்யப்பட்டபோது நடந்தது என்ன?

atiq

பட மூலாதாரம்,NURPHOTO

3 மணி நேரங்களுக்கு முன்னர்

"இரண்டு வாரங்களுக்குள் உங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மீண்டும் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று உங்களை முடித்துவிடப்போவதாக இன்று அலகாபாத்தில் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒரு மூத்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்."

அதிக் அகமதுவுடன் கொல்லப்பட்ட அவரது சகோதரர் அஷ்ரஃப், மார்ச் 29 ஆம் தேதி போலீஸ் காருக்குள் இருந்து எட்டிப்பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.

சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 15 ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அதிக் மற்றும் அஷ்ரஃப் கொல்லப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் போல வந்த மூன்று தாக்குதலாளிகளும், நேரலை கேமராக்களுக்கு முன்னால் அதிக் மற்றும் அஷ்ரஃப்பை கொன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்த கொலை பற்றி விசாரிக்க உத்தரபிரதேச அரசு 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச காவல்துறை சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழு மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்தும்.

குஜராத்தின் சாபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அகமது, விசாரணைக்காக பிரயாக்ராஜ் அழைத்து வரப்பட்டபோது, அவர் ’வாகனம் கவிழ்க்கப்படும்’ என்று ஊடகங்களில் ஊகங்கள் வெளியாயின.

மீடியா மொழியில் ' வாகனம் கவிழ்தல்' என்றால் போலீஸ் என்கவுண்டரில் மரணம்.

2020 ஜூலையில் கான்பூரில் பிக்ரு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டபோது என்கவுண்டர் என்று கூறப்படும் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

வாகனம் கவிழ்ந்தபோது விகாஸ் துபே ஓட முயன்றதாகவும், பின்னர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த என்கவுண்டர் குறித்து கேள்விகள் எழுந்தன. உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விகாஸ் துபே மற்றும் அவரது 5 கூட்டாளிகளின் என்கவுண்டரில் உத்தரபிரதேச காவல்துறை எந்த தவறும் செய்யவில்லை என்று விசாரணை கமிஷன் கண்டறிந்தது.

இறுதிச்சடங்கு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உறவினர்கள்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

இறுதிச்சடங்கு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உறவினர்கள்

போலீஸ் காவல்

மார்ச் 16 அன்று உமேஷ் பால் கொலை வழக்கின் விசாரணைக்காக அதிக் அகமது முதன்முறையாக சாபர்மதி சிறையில் இருந்து பிரயாக்ராஜுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

செய்தியாளர்களும் அவர் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு, ஏப்ரல் 11 ஆம் தேதி சாபர்மதி சிறையில் இருந்து அதிக் அகமது மீண்டும் பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டார். இம்முறை அவரை போலீஸ் காவலில் விட்டுத்தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஏப்ரல் 15 அன்று அதிக் அகமது கொலை செய்யப்பட்டபோது, அவர் போலீஸ் காவலில் இருந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட இருந்தார்.

போலீஸ் காவலில் இருந்த அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் கொலை செய்யப்பட்டதை அடுத்து பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கேள்விகளை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, அதிக் அகமதின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சி ஒருவரிடமும் பிபிசி பேசியது.

இருவரும் இந்த சம்பவத்தை மிக அருகில் இருந்து பார்த்தனர். இருவரும் காவல்துறையின் இருப்பு மற்றும் அவர்களின் பதில் நடவடிக்கை தொடர்பான பல விஷயங்களை கூறினர்.

எஃப்ஐஆர் என்ன சொல்கிறது?

தாங்கள் இருவரும் மிகவும் பதற்றமாக இருப்பதாக அதிக் மற்றும் அஷ்ரப் கூறியதாக இருவரின் கொலையின் எஃப்ஐஆரில் எழுதப்பட்டுள்ளது. அதிக் கொல்லப்பட்ட அதே நாளன்று மதியம், அதிக்கின் மகன் ஆசாத் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் உடல் நிலையும் மோசமடைந்ததைக் கருத்தில் கொண்டு இரவு 10.19 மணிக்கு, குமங்கஞ்ச் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ. ராகேஷ் குமார் மெளரியா, 18 போலீசாருடன், பொலேரோ வாகனம் மற்றும் ஜீப்பில் கொல்வின் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

இரவு 10.35 மணியளவில் போலீசார் இரண்டு வாகனங்களில் கொல்வின் மருத்துவமனைக்கு அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்ததாக எஃப்ஐஆரில் எழுதப்பட்டுள்ளது.

இருவரும் ஒரே கைவிலங்கால் கட்டப்பட்டிருந்தனர். காரில் இருந்து இறங்கி 10 முதல் 15 அடிகள் நடந்து சென்றதும் அதிக் மற்றும் அஷ்ரஃப் இருவரும் செய்தியாளர்களால் சூழப்பட்டனர். அவர்களுடன் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதிக் மற்றும் அஷ்ரஃப் பேசுவதற்காக அங்கே நின்றதாகவும், பின்னர் முன்னோக்கி செல்லுமாறு கூறி அவர்களை தாங்கள் தள்ளியதாகவும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் உடனடியாக துப்பாக்கி சூடு தொடங்கியது. அதிக் மற்றும் அஷ்ரஃப் தரையில் விழுந்தனர். அதன் பிறகு தாக்குதல் நடத்திய 3 பேரும் சரணடைந்தனர்.

அதிக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா
 
படக்குறிப்பு,

அதிக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா

அதிக்கின் வழக்கறிஞர் காவல்துறை மீது எழுப்பிய கேள்விகள்

அதிக் அகமதின் வழக்கறிஞர் விஜய் மிஷ்ரா அவருடைய நிழல்போல எப்போதும் இருப்பார். சாபர்மதியிலிருந்து அதிக் அகமது வாகனத்தில் புறப்பட்டபோது, அவர் தனது காரில் அந்த வாகன அணியை வழி முழுவதும் பின்தொடர்ந்தார்.

”அஷ்ரஃப்பின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரது பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது” என்று அவர் கூறுகிறார்.

உச்ச நீதிமன்றமும் அதிக் அகமதுவின் பாதுகாப்பு தொடர்பான மனுவை விசாரித்தது. ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

“உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மனுதாக்கல் மற்றும் விசாரணையைக் கோருவதற்கு முன்பே அதிக் கொல்லப்பட்டார்” என்று விஜய் மிஷ்ரா கூறுகிறார்.

அஷ்ரஃப் ஆஜராக வரும்போதெல்லாம் அவருடைய பாதுகாப்பைக்கருதி எப்போதும் வீடியோகிராஃபி இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

atiq

பட மூலாதாரம்,ANI

மூடிய வாகனத்திற்கு பதிலாக திறந்த போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ஏன்?

ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு, 17 காவலர்களின் பாதுகாப்புடன் திறந்த போலீஸ் ஜீப்பில் அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப், காவல் நிலையத்திலிருந்து கொல்வின் மருத்துவக் கல்லூரிக்கு கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜீப்பில் இருந்து இறங்கிய அதிக் மற்றும் அஷ்ரஃப் சில அடிகள் மட்டுமே நடப்பதற்குள் செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

ஊடகவியலாளர்கள் போல் வந்த மூன்று ஆயுதமேந்திய ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சகோதரர்கள் இருவரையும் கொன்றபோது அதிக்கின் பதில்கூட முழுமை அடைந்திருக்கவில்லை.

”அதிக் மற்றும் அஷ்ரஃப் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அங்கு போலீஸ் வீடியோ கேமரா இல்லை. 6 முதல் 7 போலீஸார் மட்டுமே இருந்தனர்," என்று கொலைச் சம்பவம் குறித்து விஜய் மிஷ்ரா தெரிவித்தார். விஜய் மிஷ்ரா கொலையை நேரில் பார்த்தவர்.

"நிறைய ஊடகவியலாளர்கள் அங்கு இருந்தனர். போலீஸ்காரர்கள் மிகவும் பின்னால் நடந்து கொண்டிருந்தார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குறைவான எண்ணிக்கையில் போலீஸார் இருப்பது பற்றி தும்மங்கஞ்ச் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ ராகேஷ் குமார் மௌரியாவிடமும் தான் கூறியதாக விஜய் மிஷ்ரா கூறுகிறார்.

”இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று தும்மங்கஞ்ச் காவல் நிலைய எஸ்.எச்.ஓ.விடம் கூட சொன்னேன். இருபுறமும் தடுப்பு வேலி போடுமாறு கூறினேன். காவல் நிலைய போலீஸார் மட்டுமே இருந்தனர். இந்த விஷயத்தில் அவர்களுக்கு சம்மந்தமே இல்லை. நீங்கள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் சொன்னேன். நீங்கள் கவலையில்லாமல் இருங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம் என்று அவர் சொன்னார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் என்னிடம் உறுதியளித்தார்,” என்று விஜய் மிஷ்ரா குறிப்பிட்டார்.

"சம்பவத்தின் போது SHO மெளரியாவும் அங்கு இருந்தார். நானும் அங்கு இருந்தேன். அந்த நேரத்தில் மிகக் குறைவான போலீசார் மட்டுமே உள்ளனர் நான் அவரிடம் சொன்னேன். அதிக போலீசார் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்."

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் அதிக் அகமது, திறந்த போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது ஏன் என்றும்,அவரை ஊடகங்கள் நெருங்க எப்படி அனுமதிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மாநிலத்தின் பொறுப்பு

அதிக் அகமது தனது பாதுகாப்புக்காக பலமுறை கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் பலமுறை கூறி வந்தார்.

இருந்த போதிலும் அதிக் மருத்துவமனைக்குச் செல்லும் செய்தி ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி என்றும். செய்தியாளர்கள் அவர் அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

"போலீஸ் காவலின் பொருள் என்னவென்றால், அவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். கஸ்டடி விதிகளின்படி, எந்த வகையிலும் நம்பிக்கை மீறல் இருக்கக்கூடாது. ஆனால் அது நடந்துள்ளது. போலீஸால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை."என்று உத்தரப்பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் விக்ரம் சிங் கூறினார்.

"அலகாபாத்தில் அதிக் மற்றும் அவரது சகோதரர் கொல்லப்பட்டது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய கவனக்குறைவை காட்டுகிறது. அவர்கள் போலீஸ் காவலில் இருந்தனர். இது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை உயிருடன் வைத்திருக்க வெண்டியது மாநில அரசின் பொறுப்பு,” என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விபூதி நாராயண் ராய் குறிப்பிட்டார்.

" முழுமையான சோதனை செய்யாமல் யாரையும் அவரை நெருங்க அனுமதித்திருக்கக்கூடாது. ஆனால் மக்கள் அவரை நெருங்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு வகையான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்கள் போல் வந்து சில நொடிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். குவிக்கப்பட்டிருந்த போலீசார் வெறும் பார்வையாளர்களாக மாறினர்." என்று விக்ரம் சிங் கூறுகிறார்.

அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது கொலையை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி ஷெரீப் அகமது.

அதீக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலையை நேரில் பார்த்த சாட்சி ஷெரீப் அகமது
 
படக்குறிப்பு,

அதீக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலையை நேரில் பார்த்த சாட்சி ஷெரீப் அகமது

நேரில் கண்ட சாட்சி என்ன சொல்கிறது?

கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக மருத்துவமனை வாசலை ஒட்டிய கழிவறைக்கு அருகே தான் வசித்து வருவதாக ஷெரீப் அகமது கூறுகிறார்.

”வெள்ளியன்று அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இதுதான் பாதுகாப்பு ஏற்பாடா என்று நான் நினைத்தேன்!" என்றார் அவர்.

கொலை நடந்த ஒரு நாளுக்கு முன் (வெள்ளிக்கிழமை) இரவு, அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வந்தபோது, வாகனம் வெளியில் நின்றதாக ஷெரீப் அகமது கூறுகிறார்.

”வெள்ளியன்று சாவகாசமாக உள்ளே சென்றார்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு சௌகரியமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை வந்தபோது அலட்சியத்தைக் கண்டதாக அகமது கூறுகிறார். சுமார் 10 போலீசாரை மட்டுமே தான் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

”20 அல்ல, 10 பேர் மட்டுமே இருந்தார்கள்.”என்றார் அவர்.

கொல்வின் மருத்துவமனைக்கு ஒரு குற்றவாளியை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, வாயிலுக்கு வெளிலேயே வாகனம் நிறுத்தப்படுமா?

”இல்லை சார், குற்றவாளியும் வருவார். நிர்வாக அதிகாரிகளும் வருவார்கள். முழு வாகன அணியையும் உள்ளே கொண்டு செல்வார்கள்," என்று ஷெரீப் அகமது பதிலளித்தார்.

வெளியே கதவை சுட்டிக்காட்டி, "ஏன் அங்கே நிறுத்தினார்கள். நான் இதுவரை அப்படி எதையும் பார்த்ததில்லை" என்று அவர் சொன்னார் .

உள்ளே திரும்புவதற்கு போதுமான இடம் இருப்பதால் கார் உள்ளே கொண்டுவரப்படும் என்று அகமது கூறுகிறார்.

இவ்வளவு வசதிகள் உள்ளன. நீங்களும் அரசை சேர்ந்தவர்கள். பிறகு ஏன் உங்கள் வாகனத்தை உள்ளே கொண்டு வரவில்லை? அவர் ஒரு டான், மாஃபியா என்றால், இவ்வளவு பெரிய ரெளடியின் வாகனத்தை ஏன் உள்ளே கொண்டு வரவில்லை?”

ஊடகங்களை தூரத்தில் வைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று ஷெரீப் அகமது கூறுகிறார். "மீடியாக்காரர்கள் அனைவரும் வாய்க்கு அருகே மைக்கை திணித்தனர்,” என்கிறார் அவர்.

"ஒருமுறை கசாரி மசாரி விவகாரத்தில் அதிக பாதுகாப்பு படைகள் கொண்டுவரப்பட்டன. தங்களுடன் பிஏசியை அழைத்து வந்தனர்., சிறையில் இருந்து கொண்டு வரும்போது அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப்படைகள் இருந்தன.

ஆனால் இதில் ஏன் அப்படி செய்யப்படவில்லை,” என்று அகமது கேள்வி எழுப்பினார்.

போலீசார் ஷெரீப் அகமதுவிடம் பேசுகிறார்களா? அவர் இந்த சம்பவத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர் என்பதால் அவரது வாக்குமூலம் பெறப்பட்டதா?

இல்லை என்கிறார் அவர்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது காவல்துறையினரின் எதிர்வினை என்ன? தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் எப்படி கைது செய்தனர்?

”எல்லோரும் ஓடிவிட்டார்கள். இரண்டு போலீசார் வீட்டுக் காவலர்கள் போல நின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களை கீழே வீசிய பின் கோஷங்கள் எழுப்பினர். ஆயுதங்களை வீசிய பின் காவலர்கள் அவர்களைப் பிடித்தனர்,” என்று ஷெரீப் அகமது கூறினார்.

அத்திக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
 
படக்குறிப்பு,

அத்திக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

அதிக் மற்றும் அஷ்ரஃப், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"மருத்துவ பரிசோதனை செய்வது என்பது நீதிமன்றத்தின் வழக்கமான உத்தரவு. குறிப்பாக காவலில் இருக்கும்போது தாக்கப்படலாம் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அச்சம் தெரிவிக்கும் போது இது அவசியமாகிறது. அதிக்கின் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. ஆனால் இந்த பரிசோதனையை மருத்துவரை அழைத்து காவல் நிலையத்திலேயே செய்திருக்கலாம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சாதாரண பரிசோதனையை காவல்நிலையத்திலேயே செய்திருக்கலாம், வேறு ஏதாவது சிக்கலாக இருந்திருக்கலாம், அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறைவான பாதுகாப்புடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது மிகப்பெரிய கவனக்குறைவு,” என்று விபூதி நாராயண் ராய் கூறினார்.

"இது வழக்கமான பரிசோதனைதான், போலீஸ் ஸ்டேஷனிலும் செய்திருக்கலாம். உடல்நிலை சரியில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கோரும்போதுதான் இது செய்யப்படுகிறது. அப்படி எந்த கோரிக்கையும் அவர் வைக்கவில்லை. வழக்கமான பரிசோதனை என்ற பெயரில் தான் அங்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து விஜய் மிஷ்ரா கூறினார்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஏன் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்கள், அவர்கள் ஏன் புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணியவில்லை?

அதிக் மற்றும் அஷ்ரஃப் மீது துப்பாக்கிச்சூடு நடந்தபோது காவல் துறையினர், தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுவதை பார்க்க முடிந்தது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தோட்டாக்களை சுட்டனர், ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து துப்பாக்கியால் சுடப்படவில்லை.

பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸார் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டைக் கூட அணியவில்லை. முன்னதாக சாபர்மதி சிறையில் இருந்து அதிக் அழைத்து வரப்படும் போதெல்லாம், அவரது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் குண்டு துளைக்கமுடியாத ஜாக்கெட்டை அணிந்திருந்தனர்.

எனவே தற்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளார்.

" இது நடக்கும் என்று காவல்துறை எதிர்பார்க்கவில்லை. போலீசார் இரண்டு பாதுகாப்பு வட்டங்களை உருவாக்கியிருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டவுடன் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும். அதை போலீசார் செய்யவில்லை. காவல்துறை எதுவும் செய்யவில்லை என்பது இங்கே தெரிகிறது. ஐந்து விநாடிகளில் கேம் ஓவர்." என்று விக்ரம் சிங் கூறுகிறார்.

தாக்குதல்காரர்கள் காவல்துறை மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை?

மூன்று தாக்குதல்காரர்களும் அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோரை மட்டுமே குறிவைத்தனர்.

பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த எந்த போலீஸ்காரர் மீதும் தோட்டாக்களை சுடவில்லை.

இவ்வாறான நிலையில் போலீசார் தங்களை எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது அவர்களுக்கு முன்னரே தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொலையை செய்த உடனேயே ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, மத முழக்கங்களை எழுப்பிய அந்த நபர்களுக்கு, அதிக் மருத்துவமனைக்கு செல்வது குறித்த தகவல் எப்படி கிடைத்தது?

காரில் இருந்து அதிக் மற்றும் அஷ்ரஃப் இறங்கியவுடன், செய்தியாளர்கள் போல் வந்த தாக்குதல் நடத்தியவர்கள் அவர்கள் அருகே சென்று அவர்களைக் கொன்றனர்.

அதிக் அங்கு வரப்போவது குறித்து அவர்களுக்கு ஏற்கனவே தகவல் இருந்தது.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை மருத்துவமனை நிர்வாகத்திற்கே இந்தத்தகவல் தெரியாத நிலையில், அவர்களுக்கு எப்படி இவ்வளவு துல்லியமான தகவல் கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

"தேவையில்லாத ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரிகையாளர்கள் போல் வந்து காவல்துறையின் அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்." என்றார் விக்ரம் சிங்.

தாக்குதல் நடத்துபவரை பின்னால் இருந்து பிடிக்க முயற்சிக்கும் போலீஸ்காரர்.

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

தாக்குதல் நடத்துபவரை பின்னால் இருந்து பிடிக்க முயற்சிக்கும் போலீஸ்காரர்.

மூன்று தாக்குதல்காரர்களும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்கள்?

தாக்குதல் நடத்திய மூவரும் உத்திரபிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் இவர்கள் மூவரும் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள், இவர்களுக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

"பிடிபட்டுள்ள மூன்று பேரும் சங்கிலியின் மிகச் சிறிய கண்ணிகள். அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நபர் இருக்க வேண்டும். அதிக்கிடம் பல முக்கிய தகவல்கள் இருக்கும். அதிக்கின் வாயைமூடவும் இது செய்யப்பட்டிருக்கலாம். கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது முக்கியம். இந்த மூவரிடமிருந்து எல்லா தகவல்களையும் போலீசார் சேகரிக்க வேண்டும், அப்போதுதான் அதிக் போன்றவர்களுக்காக நிதி வசூலிப்பவர்களை பிடிக்கமுடியும்,” என்று விபூதி நாராயண் ராய் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தது?

தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை எளிதில் கிடைக்காதவை. நான்கு கைத்துப்பாக்கிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று தாக்குதலாளிகளும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு குற்ற வரலாறு உள்ளது ஆனால் இதுவரை கிடைத்த தகவலின்படி அவர்களுக்கு இதுவரை எந்த பெரிய கும்பலுடனும் தொடர்பு இல்லை.

இவ்வாறான நிலையில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடிய ஆயுதங்கள் கிடைத்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆயுதங்களின் வேர் வரை எட்ட வேண்டிய அழுத்தமும் காவல்துறைக்கு உள்ளது.

மூன்று தாக்குதல்காரர்களும் பயிற்சி பெற்றவர்கள் போல துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் தாக்கிய துல்லியம், இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

"காவல்துறையின் முன் பல பெரிய கேள்விகள் உள்ளன. முழுமையான மற்றும் நேர்மையான விசாரணையின் மூலம் மட்டுமே இதற்கு பதில் கிடைக்கும்.. இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது, எனவே நியாயமான மற்றும் முழுமையான விசாரணையை நடத்த வேண்டியது ஒரு காவல்துறைக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல, சவாலும் கூட,” என்று இது குறித்து விபூதி நாராயண் ராய் தெரிவித்தார்.

தாக்குதல்காரரை பிடிக்கும் போலீஸ்கார்.

பட மூலாதாரம்,ANI

அதிக் அகமதின் குற்ற வரலாறு

• அதிக் அகமதின் குற்ற வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

•, 1979 ஆம் ஆண்டு முதல் முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அதிக் அகமது மைனர் என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

• பிகாரிலும் அதிக் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நான்கு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 1992 ஆம் ஆண்டில், அலகாபாத் காவல்துறை தெரிவித்தது.

• 1996 முதல் அதிக் அகமது மீது 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பிரயாக்ராஜின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்..

• 12 வழக்குகளில், அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப்பின் வழக்கறிஞர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பு கூறுகிறது.

• அதிக் அகமது, பகுஜன் சமாஜ் கட்சியின் MLA ராஜு பால் கொலையில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டவர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் இருந்தது.

• பிப்ரவரி 24 அன்று நடந்த உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்.

• ராஜு பால் கொலை வழக்கில் உமேஷ் பால் ஆரம்ப சாட்சியாக இருந்தார். ஆனால் பின்னர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவரை சாட்சியாக வைக்கவில்லை.

• மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏ நீதிமன்றம், 2006 இல் உமேஷ் பாலை கடத்திய வழக்கில் அதிக் அகமது குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

https://www.bbc.com/tamil/articles/czrvjy9102xo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.