Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரங்காட்டி அரசியல் ?  - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குரங்காட்டி அரசியல் ?  - நிலாந்தன்

spacer.png

குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை. ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா?

இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங்கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளில் ஒரு பகுதியினர் யானை வேலியை அமைத்து வருவதாகவும் ஒருமுறை அந்த வேலியில் முட்டினால் குரங்கு மீண்டும் அந்த பகுதிக்கு வரத் தயங்கும் என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர்(அதேசமயம் விவசாயப்  பாரம்பரியத்தில் வந்தவர்)சொன்னார், தங்களுடைய ஊரில் முன்பு குரங்குகளின் வாயை கட்டும் நுட்பம் தெரிந்த மாந்திரீகர்கள் இருந்ததாக. அவர்கள் மரங்களில் ஏறி எதையோ செய்வார்களாம். அதன் பின் குரங்குகள் அந்த மரங்களுக்கு வந்தாலும் காய்கறிகளில் வாய் வைப்பது இல்லை என்று அவர் சொன்னார். அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத ஒரு நம்பிக்கை. ஆனால் காட்டோரமாக விவசாயம் செய்பவர்கள் சில சமயங்களில் குரங்குத் தொல்லை தாங்க முடியாத போது வேட்டைத் துவக்கினால் குரங்குகளைக் கொல்வதும் உண்டு. கொல்லப்பட்ட குரங்கின் உடலை அப்பகுதியில் தொங்கவிடுவார்கள். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு குரங்கின் வருகையை தடுக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.

விவசாயிகள் மட்டுமல்ல காட்டுக்கு அருகே இருக்கும் கிராமவாசிகளும் வீடுகளில் பயிர்பச்சை வைக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக முறையிடுகிறார்கள். குறிப்பாக வன்னிப்பெருநிலத்திலும் யாழ்ப்பாணம் தென்னராட்சியிலும் இந்த நிலைமை உண்டு. வீட்டில் ஆசையாக ஒரு பயிர் பச்சையை வைத்தால் குரங்கு அதை பிடுங்கிச் சாப்பிட்டு விடுகிறது என்று சொல்லுகிறார்கள். மாங்காய்களை மட்டுமல்ல பயன்தரும் மரங்களின் துளிர்களையெல்லாம் குரங்குகள் சாப்பிட்டு விடுவதாகவும் வன்னியில் முறைப்பாடு உண்டு.

இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை எல்லா அதிர்ச்சிகளின் போதும் தாங்கிப் பிடித்தது விவசாயம்தான். அந்த விவசாயத்துக்கு குரங்கு ஒரு எதிரியாக மாறியிருப்பதாக விவசாயிகள் முறைப்பாடு செய்கிறார்கள். அதுதொடர்பாக புள்ளிவிபரங்களும் உண்டு. புள்ளிவிபரங்களால் இக்கட்டுரையை நிரப்பக் கூடாது என்பதனால் அதைத் தவிர்க்கிறேன்.

அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் குரங்கை ஒரு பீடை என்று அறிவிக்கும் அளவுக்கு குரங்குகள் விவசாயத்துக்கு  பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன. அண்மையில் அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருந்து குரங்குகளை நீக்கும் அளவுக்கு குரங்குகள் ஆபத்தானவைகளாக மாறிவிட்டன. எனவே பீடையாக மாறிய குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதிசெய்து டொலரைச் சம்பாதிக்க அரசாங்கம் முடிவெடுத்ததா?

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து சீனா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் சீன தனியார் நிறுவனமொன்றே இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும்  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கடந்த  செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். விவசாயத்துறை அமைச்சருக்கு சீனத் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து மிருகக்காட்சிசாலைகளுக்காக குரங்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் அவர் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரது பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் விலங்குகளை சாதாரணமாக பரிமாற்றம் செய்ய முடியாது. எம்மை விட மிகக் கடுமையான சட்ட ஏற்பாடுகள் சீனாவில் காணப்படுகின்றன. எனவே சில ஊடகங்களில் காண்பிக்கப்படுவதைப் போன்று, அரசாங்கம் விலங்குகளை தான் விரும்பியபடி இறைச்சிக்காக ஏனைய நாடுகளுக்கு வழங்கமுடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spacer.png

அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடும் அந்த சீன நிறுவனத்தின் பெயர் “ஷி செங் வூ யூ அனிமல் பிரீடிங்” என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி அந்த நிறுவனத்திடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சீனாவில் தனியார் நிறுவனங்கள் என்று அழைக்கத்தக்க சுயாதீனமான நிறுவனங்கள் உண்டா? என்ற கேள்வி இங்கு முக்கியம். மேலும் இது தொடர்பில் கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ருவிற்றரில் பிரசுரித்த தகவலின்படி குரங்கு வியாபாரத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,இலங்கைத்தீவின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்துவரும் தகவல்களை வைத்துப்  பார்த்தால் இந்தக் கதை நெருப்பில்லாமல் புகையவில்லை என்று தெரிகிறது. ஒன்றில் எதிர்ப்பு வந்தபடியால் அரசாங்கம் பின்வாங்குகிறது என்று பொருள். அல்லது அரசாங்கம் ஏதோ ஒரு குரங்கு வித்தை காட்டுகிறதா?

இதுதொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர என்னென்ன சொன்னார்?

இலங்கையிலிருந்து குரங்குகளை வாங்கச் சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து,அமெரிக்காவும் குரங்குகளைப் பெற  விண்ணப்பித்துள்ளது என்று அவர் சொன்னார். எனினும்,அமெரிக்காவிற்குத் தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றுமவர் சொன்னார். விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது,விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று எவரும் கூறவில்லை எனவும் அவர் சொன்னார்.

இலங்கையில் உள்ள குரங்கு ஒன்றை பிடிப்பதற்கு மட்டும் சுமார்,5 ஆயிரம் ரூபாய் வரை செலவிட சீன நிறுவனம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சொல்லியிருந்தார். குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய்வரையில் சீன நிறுவனம் செலவிட வேண்டியிருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும்,அதேவேளை,குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் சொல்லியிருந்தார். சீனா குரங்குகளை மிருகக்காட்சி சாலைகளில் பாதுகாப்பதற்கென்றே கேட்டுள்ளதாகவும் சொன்ன  அமைச்சர்,குரங்குகளைப்  பிடித்து, தனிமைப்படுத்தி,அவற்றுக்கு நோய்த்தொற்று உண்டா என்பதனை பரிசோதித்து,கூடுகளில் அடைத்து,சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழுச்செலவையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் இருந்து குரங்குகளை 50 ஆயிரம் ரூபா செலவளித்து சீனாவிற்கு கொண்டு சென்று, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துவதாயின் 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாய்க்கே விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிய அமைச்சர், ஒரு லட்சம்ரூபாய் கொடுத்து குரங்கை வாங்கிச் சமைப்பதற்கு சீனர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும்,இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படலாம் என்று இலங்கை சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே கூறுகிறார். இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை அழகுசாதனப் பொருட்களைச் சோதனை செய்வதற்கும் மருத்துவப் பரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். மிருகக்காட்சி சாலைகளிற்கான சர்வதேச வரைவிலக்கணங்களின்படி, சீனாவில் 18 மிருகக்காட்சி சாலைகளே உள்ளன. ஒரு மிருகக்காட்சி சாலைக்கு 5,000 குரங்குகள் என்று கணக்கிட்டாலும் சீனா தெரிவிப்பது நம்பக்கூடிய விடயமாக இல்லை என்றும்,இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

spacer.png

“குரங்குகளால்;பயிர்களின் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஆனால், கடந்த சில தசாப்தங்களாகக் குரங்குகளின் கணக்கெடுப்பு நிகழாத நிலையில் குரங்குகளை ஏற்றுமதி செய்ய முற்படுவது இதற்கான தீர்வாக அமையாது. மாறாக,பின்நோக்கிச் சுடுவது போன்று பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குரங்குகள் தமது உணவு முறையால் காட்டுவெளியெங்கும் விதைகளைத் தூவி மரங்களை இயற்கையாகவே நடவு செய்கின்றன. இதனால், காடுகளின் கட்டுமானத்தில் மையக்கல் இனங்களாகக் (key stone species) கருதப்படும் இக்குரங்குகள் அழிந்தால் காட்டுப் பரப்பளவு சுருங்கி இயற்கைச்சூழலின் சமநிலை குலையும். காபன் உறிஞ்சிகளான காடுகள் சுருங்குவதால் பாதகமான காலநிலை மாற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு விவசாயமும் வீழ்ச்சியுறும்.

செங்குரங்குகள் இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஓர் உள்நாட்டு இனம். இதனைச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. சீனாவைப் போன்றே இலங்கையும் அழிந்து வரும் காட்டுயிரிகளின் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் எதனையுமே விற்று டொலர்களாக்கும் முனைப்பில் உள்ள அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் நடைமுறைச்சாத்தியமற்ற செங்குரங்குகளின் ஏற்றுமதி குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். கூடவே,குரங்குகளினால் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் களைய ஒருங்கிணைந்த மாற்றுப் பொறிமுறையொன்றையும் விரைந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்”…என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் கூறுகிறார்.

ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் சீனாவில்,மிருகக்காட்சி சாலைகளில் பேணப்படுமென்று  கூறப்பட்டாலும், சீனாவில் குரங்கு இறைச்சி சாப்பிடும் பாரம்பரியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக குரங்கின் மூளையிலிருந்து தயாரிக்கப்படும் உணவு சீனாவில் அதிகம் விலை கூடியதாகவும் பெரும் செல்வந்தர்களால் மட்டும் நுகரப்படக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் குரங்குகள் சீனாவின் விலங்குகள் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்படுமா அல்லது சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படுமா என்ற சந்தேகத்தை ஒரு பகுதியினர் கிளப்புகிறார்கள்.

இலங்கைத்தீவு இதுவரையிலும் பணிப்பெண்களையும் வீட்டு உதவியாட்களையும் நாட்டுக்கு வெளியே அனுப்பி வருமானத்தைப் பெறுகின்றது.இப்பொழுது குரங்குகளையும் அனுப்பினால் என்ன? என்று சிந்திக்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறதா? அரசாங்கம் உண்மையாகவே குரங்குகளை அனுப்புமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்கு கீழ்படிந்த அரசாங்கம் பொதுமக்களை வருத்தும்பொழுது கொதித்து எழும் சிங்கள மக்களைத் திசைதிருப்ப  குரங்குவிற்பனை விவகாரம் சில சமயம் அரசாங்கத்திற்கு உதவுமா? அதாவது அரசாங்கம்  ஒரு குரங்காட்டியின் வேலையைச் செய்கின்றதா?

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளைத் தவிர காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது மே நாள் ஊர்வலங்களும் உட்பட எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கி அதாவது தலைநகரில் தூதரகங்களின் பார்வைக்குள் வருவதைத் தடுக்கும் உள்நோக்கமுடையது. அதாவது ஆர்பாட்டங்களையிட்டு அரசாங்கம் உசாராகக்  காணப்படுகிறது. எனவே மக்களுடைய கவனத்தைத் திட்டமிட்டுக் குழப்பவேண்டும். அதற்கு குரங்குகள் உதவுமா?

நவீன ஊடகக் கலாச்சாரம் எனப்படுவது ஒரு வகையில் வாசகர்களையும் பார்வையாளர்களையும் குரங்கு நிலையில்தான் வைத்திருக்கின்றது. திட்டமிட்டு ஒரு ட்ரெண்டை செற்  பண்ணுவதன்மூலம் ஒரு சமூகத்தின் கூட்டுக் கவனக் குவிப்பை அடிக்கடி மாத்தலாம். குரங்கு கொப்புக்கு கொப்பு தாவுவதைப் போல. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்போது,பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்ப குரங்கும் அரசாங்கத்துக்கு உதவுமா?

 

 

 

https://www.nillanthan.com/6023/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள்.

அரசியல்வாதிகளை விடவா குரங்குகள் விவசாயிகளுக்கு பெரும்நாசத்தை விளைவிக்கின்றன? உர இறக்குமதியினை தடை செய்த அரசியல்வாதிகளையும் குரங்குகளுடன் சேர்த்து சீனாவிற்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.