Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன்

spacer.png
 
 

நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்றாடங் காய்ச்சிகளின் வயிற்றிலடிப்பது என்பது. மூன்றாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறும் விமர்சனங்கள். இவை மூன்றையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக இது போன்ற போராட்டங்களால் பயன் இல்லை என்பது. இந்த ஒரு நாள் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது உண்மை. தமிழ் மக்கள் இதைவிடப் பெரிய போராட்டத்தை நடாத்திய மக்கள். இதுபோன்ற ஒருநாள் கடையடைப்புக்கள் கொழும்பின் கவனத்தையோ உலகத்தின் கவனத்தையோ தொடர்ச்சியாக ஈர்த்து வைத்திருக்கப் போதுமானவை அல்ல. எனினும்,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டதுக்கு எதிராகவும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது. வடக்கு கிழக்கு இணைந்து ஒப்பீட்டளவில் ஒரு பெரிய திரளாக தமிழ் மக்கள் தமது எதிர்பைக் காட்டியிருக்கிறார்கள். ஒன்றையும் செய்யாமலிருந்து வெறுவாய் சப்புவதைவிட  இது பரவாயில்லை.

அதேசமயம், கடந்த ஆண்டு தென்னிலங்கையில் தோன்றிய தன்னெழுச்சிப் போராட்டங்களோடு ஒப்பிடுகையில் இதுபோன்ற கடையடைப்புகள் படைப்புத்திறன் குறைந்தவை, யாந்திரீகமானவை. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் தென்னிலங்கையிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பதைப் போன்று இது அரசியல்வாதிகளின் இயலாமையைக் காட்டுகிறது. ஒரு புதிய மக்கள் போராட்ட வடிவத்தைக் குறித்துச் சரியான விளக்கமோ, விசுவாசமான தேடலோ, தீர்க்கதரிசனம் மிக்க வழிவரைபடங்களோ இல்லாத வெற்றிடத்தில்தான் இது போன்ற யாந்திரீகமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே கடையடைப்பு ஒரு விதத்தில் தமிழ் அரசியலின் இயலாமையை காட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இரண்டாவது இப்போராட்டத்தால் அன்றாடங் காய்ச்சிகள் பாதிக்கப்பட்டார்கள் என்பது. அது உண்மை. அரசியல்வாதிகள் அனேகமாக அன்றாடங் காய்ச்சிகள் இல்லை. அன்றன்று உழைப்பவர்கள் இதுபோன்ற போராட்டங்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு மக்கள் கூட்டம் தன் அரசியல் இலக்குகளை அடைவதற்காகச் செய்யக்கூடிய தியாகங்களுக்குள் அந்த ஒரு நாள் உழைப்பும் அடங்கும். தமிழ் மக்கள் இதைவிடப் பெரிய தியாகங்களைச் செய்த மக்கள். ஒரு நாள் உழைப்பைக் காட்டி இதுபோன்ற போராட்டங்களை கொச்சைப்படுத்த முடியாது.

மூன்றாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைக்கும் விமர்சனங்கள். அவை வழமையான வாய்ப்பாட்டு விமர்சனங்கள்தான். போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஏழு கட்சிகளுக்கும் அதற்குத் தகுதி இல்லை, அவர்கள் விசுவாசமாகப் போராடவில்லை என்ற பொருள்பட முன்னணி குற்றம் சாட்டியிருக்கிறது.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் உத்தேச பயங்கரவாத ஏதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ்மக்கள் போராட வேண்டும். அது அரசுக்கு எதிரான போராட்டம். அப்போராட்டத்தை எதிர்ப்பது அதன் தர்க்கபூர்வ  விளைவாக யாருக்குச் சேவகஞ் செய்யும்?.

20230425_Vavuniya_Hartal-1-scaled.jpg
20230425_Mannar_Hartal-2-scaled.jpg

 

அந்த ஏழு கட்சிகளுக்கும் போராடும் தகமை இல்லையென்றால் அல்லது அவை விசுவாசமாகப் போராடவில்லையென்றால், விசுவாசமான ஒரு போராட்டத்தை துணிச்சலான ஒரு போராட்டத்தை ஏன் முன்னணி ஒழுங்கு செய்யக்கூடாது ?

முன்னணி தன்னை ஏனைய கட்சிகளைவிடத் தூய கட்சியாகவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அதிகம் விசுவாசமான கட்சியாகவும் காட்டிக் கொள்கிறது. அதைவிட முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசாகவும் அது தன்னைக் காட்டிக்கொள்கிறது. அந்த அடிப்படையில் அந்த இயக்கத்தின் நினைவு நாட்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்று திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. அண்மையில் அன்னை பூபதியின் நினைவு மண்டபத்திலும் முன்னணிக்கும் கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்புகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

அது ஒர் அருவருப்பான முரண்பாடு. அன்னை பூபதியை நினைவு கூர்வதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு அங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களும் மதத் தலைவர்களும் அன்னையின் குடும்பத்தவர்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முன்னணி அப்பொதுக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இது திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் ஏற்பட்ட முரண்பாட்டை நினைவுபடுத்துகின்றது. புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தனக்குத்தான் அதிகம் உரித்தும் தகுதியும் உண்டு என்று முன்னணி கருதுகின்றது. அதன்மூலம் புலிகள் இயக்கத்தின் விசுவாசமான தொடர்ச்சியாகவும் அக்கட்சி தன்னை காட்டிக்கொள்ள விளைகின்றது. ஆனால் அதை அவர்கள் தமது செயற்பாட்டில் நிரூபிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியலைத் தொடர்வது என்பது, அதுவும் மிதவாத அரசியலில் அதைத் தொடர்வது என்பது சாராம்சத்தில் அந்த இயக்கத்தைப்போல அர்ப்பணிப்புகளுக்கு தயாராக இருப்பதுதான். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றதா?

பொலிசாரோடும்  படைகளோடும் நெத்திக்கு நேரே மோதுவதும், துணிச்சலாகக் கதைப்பதும், தள்ளுமுள்ளுப்படுவதும், சில மணித்தியாலங்கள் சிறையில் இருப்பதும், சாகசச் செயல்களே. அவற்றைத் தியாகம் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் கடந்துவந்த செயற்கரிய தியாகங்களோடு ஒப்பிடுகையில் இவையெல்லாம் தியாகங்களா? திலீபனையும் பூபதியையும் படங்களாக வாகனங்களில் காவித் திரிவது மட்டும் போதாது. அதைவிட ஆழமாக திலீபனைப்போல பூபதியைப்போல உண்ணாவிரதம் இருப்பதற்கு எத்தனை பேர் தயார்?

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த ஏழு கட்சிகள் மட்டுமல்ல, கடையடைப்பைப் பரிகசித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கடந்த 13 ஆண்டுகளாக கொழும்பின் கவனத்தையும் உலகத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் போராடத் தவறியிருக்கிறது. அரசியலில் மற்றவர்களை விமர்சிப்பதால் ஒரு கட்சி தூய்மையானது ஆகிவிடாது. மாறாக மற்றவர்கள் செய்யத் தவறியதைத் தான் செய்ய வேண்டும். மற்றவர்களைத் துரோகிகளாக்குவதால் ஒருவர் தியாகிவிட முடியாது மாறாக தான் செய்யும் தியாகங்களால்தான் ஒருவர் தியாகியாக முடியும்.

20230425_Vavuniya_Hartal-2-1-1024x576.jp

 

தமது மக்கள் மத்தியில் மட்டுமல்ல,அனைத்துலக அரங்கிலும் தமிழ் அரசியலின் அந்தஸ்தை உயர்த்தும் விதத்தில் தமிழ்க்கட்சிகள் உழைத்திருக்கின்றனவா? கடந்த 13ஆண்டுகளில் தமிழ்க்கட்சிகள் அனைத்துலக அளவில் சம்பாதித்த புதிய நட்புகள் எத்தனை? உள்ளூரில் சக தமிழ்க் கட்சிகளோடு தந்திரோாபாயக் கூட்டுக்களைக்கூட வைத்துக் கொள்ளமுடியாத கட்சிகள், எப்படி வெளியரங்கில் உலக சமூகத்தோடு கூட்டுக்களை வைத்துக் கொள்வது?

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் அந்தஸ்தை மதிப்பிடுவதற்கு ஆகப்பிந்திய ஒர் உதாரணத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு வெளிக்கிட்ட 303 தமிழர்கள் சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பி விட்டார்கள். அவர்கள் விருப்பத்தோடு நாடு திரும்பவில்லை. இந்த நாட்டில் இருக்கப் பிடிக்காமல்தான் புலம்பெயர முயற்சித்தார்கள். அவ்வாறு திரும்ப விரும்பாதவர்கள் ஐநாவுக்கு மீண்டும் மீண்டும் மேன்முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

அவ்வாறு மேன்முறையீடு செய்த சிலர் நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சிலருடைய பரிந்துரைக் கடிதங்களையும் சமர்ப்பித்ததாக அறியமுடிகிறது. ஆனால் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழ் புலம்பெயரிகளை,ஐநா,ஐ.ஓ.எம் போன்றன சட்டவிரோதக் குடியேறிகளாகத்தான் பார்க்கின்றன. அவர்களை அரசியற் காரணங்களுக்காக குடி பெயரை முற்பட்டவர்கள் என்று பார்க்கவில்லை என்று தெரிகிறது. அதனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய கடிதங்களை மேற்சொன்ன அனைத்துலக நிறுவனங்கள்  பொருட்படுத்தவில்லை. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் படிப்படியாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

புலம்பெயரிகளின் விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை உலகப்பொது அமைப்புக்கள் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. அதாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு உலகப் பொது அமைப்புகள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான். அப்படியென்றால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஐநா போன்ற கட்டமைப்புகளின் மீதும்  உலகின் வெளியுறவு கட்டமைப்புகளின் மீதும் எவ்வாறான செல்வாக்கைச் செலுத்த முடியும்?

இதுதொடர்பாக தமிழ்க் கட்சிகளிடம் ஏதாவது வழிவரைபடங்கள் உண்டா? அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு தமிழர்களை அரவணைக்க வேண்டிய தேவை உலகில் எந்த ஒரு அரசுக்காவது உண்டா? அரசுகள் எது பலமோ,எது தேவையோ அதைத்தான் நாடிவரும். எங்கே நீதி இருக்கிறது என்று பார்த்து நாடி வருவதற்கு பூமியொன்றும் தேவ ராஜ்ஜியம் அல்ல. தமிழ் மக்கள் தமது பேர பலத்தை அதிகப்படுத்த வேண்டும்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை பெரும்பாலான தூதரகங்களும் ஐநாவும் ஆர்வத்தோடு கவனித்தன. ஏன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களையும் வெளிநாட்டு தூதரகங்கள் ஆர்வத்தோடு கவனித்தன. ஆர்வத்தோடு கையாண்டன என்று கூடச் சொல்லலாம். தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறப்போவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் முதலில் தொடர்ச்சியான போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் வெற்றி பெற்ற எல்லா மக்கள் போராட்டங்களும் ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. குடிமக்கள் சமூகங்களோடு இணைந்த பல கட்சிப் போராட்டங்கள்தான். எனவே போராடத் தெரியாத அல்லது போராட முடியாத கட்சிகள் கடையடைப்புக்கு அழைப்புவிடுகின்றன. அதேசமயம் அப்போராட்டம் பிழை என்று கூறும் கட்சியும் கடந்த 13 ஆண்டுகளாக சின்னப் பிள்ளைகளுக்கு கண்ணாடியில் நிலவை காட்டும் அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

 

https://www.nillanthan.com/6047/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.