Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது!

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு!    வவுனியா கரும்பும் கசக்கிறது!

– கருணகரன் –

“கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும்.

அந்தக் கதை இதுதான்.

வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது  2018  இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார். அந்த வருகையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. சில உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. அப்படிப் பேசப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்தக் கரும்பு ஆலை விடயமும்.

சுமார் 500 மில்லியன் டொலரில் மிகப் பெரிய கரும்பு ஆலையை நிறுவுதற்கென  தாய்லாந்து நிறுவனத்தின் பேரில் தாய்லாந்துப் பிரதமர் கேட்ட திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேனா, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.  எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனைச் சந்தித்த பிரயுத் சான்ஓசாவிடம் வடக்கில் முதலீடு செய்வதைப்போல கிழக்கிலும் தாய்லாந்து முதலீடுகளைச்செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார் சம்மந்தன். பின்னர் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக் கூட நடந்தது. அதிலும் இந்த விடயத்தைச் சம்மந்தன் பேசினார்.

இதற்குப் பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்தனர். அன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டபடியால் இது விவாதப் பொருளாகவில்லை.

அதற்குப் பிறகு அன்றைய அமைச்சரவையில் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார்,  மைத்திரிபால சிறிசேன. அதனால் எல்லாமே தடைப்பட்டன. அதற்குப் பிறகு உருவான அமைச்சரவையில் மீண்டும் இந்தத்திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டது. காரணம், அன்று உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 இன் தாக்கம்.

அது நீங்க, இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தார். அவர் இந்தத் திட்டத்துக்கான அனுமதிக்கு மீண்டும் சில மாற்றங்களைச் செய்து  அமைச்சரவை  அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தார். அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கிடையில் கோத்தபாய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.

இப்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காணும் வகையில் என்னென்ன திட்டங்கள் கிடப்பில் உள்ளன? என்னென்ன திட்டங்கள் தேக்கத்தில் உள்ளன. என்று ஆராய்திருக்கிறார். அப்படியான சூழலில் அடையாளம் கண்டு, மீண்டும் மேசைக்கு வந்ததே இந்தத் திட்டம்.

இதனை ஆராய்ந்த ஜனாதிபதி, பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்த நிலையில் இருந்த இந்தத் திட்டத்தை சில மெருகுபடுத்தலுடன் மீண்டும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.

அப்பொழுதுதான் இது விவகாரமாக மாறியது.

விவகாரமாகிய கதை

முன்னர் சம்மதித்த தமிழ்த் தரப்புகள் இப்பொழுது இரண்டு, மூன்றாக உடைந்து விட்டன. முன்னரைப்போல ஆட்சியிலும் தமிழ்த்தரப்புகள் பங்கேற்கவில்லை. தவிர, இந்தத் திட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மட்டும்தான் நேரடியாக ஆதரவைத் தெரிவித்துள்ளது. புளொட் வழமையைப் போல நிலைமையைப் பார்த்து முடிவெடுப்போம் என்று மதிலின் மேலே குந்தியிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்னும் வாயைத் திறக்கவே இல்லை. புதிய கூட்டமைப்பில் பங்காளிகள் அல்லவா!

பதிலாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அணிக்கு தமிழரசுக் கட்சி எதிராக நிற்பதாகும்.

“எந்த வகையிலும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது சிங்களக் குடியேற்றத்தை வவுனியா வடக்கில் கொண்டு வந்து சேர்த்து விடும். கரும்புச்செய்கைக்கான நீர் விநியோகம் என்ற பேரில் மகாவலிகங்கையை நெடுங்கேணிக்குக்கொண்டு வருவார்கள். நீரோடு சேர்ந்து சிங்கள பௌத்தக் குடியேற்றம் என்ற நெருப்பும் வரும்”  என்று சொல்கிறார் சுமந்திரன்.

“சுமந்திரன் இப்படிக் காட்டமாகச் சொல்வதற்குக் காரணம், உண்மையில் சிங்களக் குடியேற்றம் வந்து விடும் என்பதோ, மகாவலிகங்கை நெடுங்கேணிகுள் நுழைந்து விடும் என்பதோ அல்ல. ரெலோ இந்தத் திட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் ஏற்றிருப்பதேயாகும். மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ரெலோ காட்டிய அக்கறையும் அதைச் செயற்படுத்தி முடித்ததுமாகும். அத்துடன் இந்தத் திட்டத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரெலோவின் இன்றைய ஆலோசகர் சுரேன் குருசாமி இதில் பிரதான செல்வாக்கைச் செலுத்துகிறார். இவரே கூட்டமைப்பிலிருந்து ஏனைய மூன்று கட்சிகளையும் பிரித்தெடுத்து, புதிய அணியில் சேர்ப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புவதாகும்” என்று ரெலோவின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சுரேன் குருசாமியிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த அத்தனை பேரும் ஆதரித்தனர். சம்மந்தன் பொதுவெளியிலேயே இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட நடத்தியிருக்கிறார். (இதோ அதற்கான ஆதாரங்கள் என்று அந்தச் செய்த வந்திருந்த பத்திரிகை நறுக்குகளைக் காண்பிக்கிறார்). அப்படியெல்லாம் செய்து விட்டு, இப்பொழுதுது ரெலோதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு தேவையில்லாப் பிரச்சினை என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அரசியல் லாபங்கருதியதுமாகும்” என்றார்.

மேலும் அவர் சொன்னார், “இது எமது பிரதேசத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும். பலரும் கருதுவதைப் போல இது சீன அரசாங்கத்தின் முதலீடல்ல. அல்லது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானதும் அல்ல. இது தாய்வானின் முதலீடு. இதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் பலருக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். கரும்பு ஆலையை மட்டுமே குறித்த நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ளும். ஏனைய நிலமும் அவற்றில் பயிரிடும் உரிமையும் விவசாயிகளுக்கானது. சிலர் சொல்வதைப்போல இந்தத் திட்டத்தினால் சிங்களக் குடியேற்றம் வந்து விடும். நீர்த்தேவைக்காக மகாவலி கங்கையை வவுனியாவுக்குத் திருப்பி, அதன் வழியே சிங்களவர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதெல்லாம் ஏற்கக் கூடிய காரணங்களில்லை. சிங்களவர்களின் பிரசன்னத்துக்கான வழிகள் பல உண்டு. அதைத் தடுப்பது வேறு. இது வேறு. தவிர, இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வது பிரதேச மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளே. ஆகவே அதனை நாம் (தமிழ்ப்பிரதிநிதிகளே) செய்யப் போகிறோம். அப்படியிருக்கும்போது எப்படி சிங்களக் குடியேற்றத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும்? இந்தப் பயனாளிகள் தெரிவில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகள், பிரதேச ரீதியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் முன்னணி விவசாயிகள், புதிய செய்கையாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதேவேளை ஏற்கனவே நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தத்  திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இதில் திருத்தங்களுக்கு இடமுண்டு. அதற்குள் ஏன் இந்த அவசரமும் அநாவசியமான கதைகளும்? நாம் அரசியல் விடுதலையுடன் எமது மக்களின், எமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம்” என்று.

“கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுமே. அந்த நீரை செய்கை மேற்கொள்ளப்படக் கூடிய இடங்கள் என்று கூறப்படும் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற இடங்களில் பெற முடியுமா?” என்று கேட்டபோது, “இது தொடர்பான கள ஆய்வொன்று 2016, 2017 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாப் பிரதேசத்தில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியில் பெருமளவு பகுதி வீணடிக்கப்படுகிறது. அதை உரிய முறையில் சேமித்தால் பல திட்டங்களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இதற்கான கட்டுமானங்கள், வடிகாலமைப்புகளைச் செய்தால் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். பொருளாதார வளத்தையும் பெருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது” என்கிறார் சுரேன் குருசாமி.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சூழலியலாளருமான பொ. ஐங்கரநேசன், இது தொடர்பாக வேறு விளக்கத்தை அளிக்கிறார். “இந்தத் திட்டத்தை நாம் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் திட்டத்தை வவுனியாவில் திணிக்க முற்படுகின்ற அரசாங்கம், 1960 களிலிருந்து  கந்தளாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்புச் செய்கையையும் சர்க்கரை உற்பத்தியையும் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அங்கேயே மீளவும் அதை ஆரம்பிக்கலாமே. அதற்குரிய அத்தனை வசதிகளும் ஏற்பாடுகளும் அங்கேயே உண்டு. இரண்டாவது, இந்தத் திட்டத்தினால் நீர்ப்பிரச்சினையும் சூழலியல் கேடும் ஏற்படும். உலக அளவில் நீர்ப்பிரச்சினையையும் சூழலியல் பாதுகாப்பையும் பற்றிச் சிந்திக்கின்ற நாடுகள், தமது முதலீடுகளை இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் வருவாயைத் தாம் பெற்றுக் கொள்வதோடு, தமது இயற்கை வளத்தையும் சூழலையும் பேணிக் கொள்கின்றன. மாறாக எமது வளத்தைச் சுரண்டி, எமது சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. மூன்றாவது, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக எமக்குப் பொருத்தமான வேறு திட்டங்களைக் கொண்டு வர முடியும். உதாரணமாக ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளங்களை முந்திய மாதிரி முழுமையான அளவில் இயங்க வைக்கலாம். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்து, வெளிநாடுகளுக்கான கடல் உணவு ஏற்றுமதியை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரிப் பலவற்றைச் செய்யலாம். அப்படிச் செய்யாமல் இதைத் திணிக்க முற்படுவது ஏன்?” என்று கேட்கிறார்.

இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனும் எதிர்க்கிறார்.

இது பற்றி விவசாயத்துறை மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறைசார்ந்த அறிஞர்களிடம் கேட்டபோது, “இது அரசியல் விவகாரமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாம் நிதானமாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். எந்தப் பொருளாதாரத் திட்டத்திலும் சாதக பாதக அம்சங்கள் இருக்கும். அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் உள்ளன. எங்களுடைய விவசாயிகளில் பலரும் சோம்பல் பயிற்செய்கையிலேயே அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அவர்கள் நெல் விவசாயத்தை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், செய்கை பண்ணப்படும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படுவதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. திரும்பத்திரும்ப இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாமும் மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அக்கறைப்படும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். விவசாயிகள் அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் உழுந்து, பயறு, கௌபி, கடலை, பருப்பு வகை, பருத்தி, மஞ்சள், மிளகு, பழங்கள் எனப் பலவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைக்குறித்து எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் வந்தால் அதை உடனடியாக எதிர்க்க முயற்சிப்பார்கள். இப்படித்தான் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவுக்கு வந்தபோதும் எதிர்த்தார்கள். ஒரே தரப்புக்குள்ளேயே முரண்பட்டு மாங்குளத்தில் கட்டவேண்டும் என்று ஒரு தரப்பும் ஓமந்தையில் கட்ட வேணும் என்று இன்னொரு தரப்பும் சண்டையிட்டன. இந்த மாதிரியான விடயங்களில் கலந்தாய்வை மேற்கொள்ளக் கூடியவாறு துறைசார் நிபுணத்துவக்  குழு எதுவும் நம்மிடமில்லை. அப்படி ஒரு குழு இருந்தாலும் அதற்கொரு அரசியற் சாயத்தைப் பூசி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. ஏனென்றால், முதலீட்டாளர்களுக்கு சிரமங்கள் அதிகம் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முதலீட்டாளர் படுகின்ற சிரமத்தைப் பார்க்கின்ற ஏனைய முதலீட்டாளர்கள் இந்தப் பக்கமாகத் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். இதை எம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாடும் நம்முடைய மக்களும் இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எல்லாம் குறைவடையப் போகிறது. சனத்தொகை குறைந்தால் நமக்கான நிதி ஒதுக்கீடுகளும் வள ஒதுக்கீடுகளும் குறைவடையும். அதைத் தடுப்பதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்” என்கின்றனர்.

இந்த நியாயத்தை நாம் மறுக்க முடியாது.

முதலில் இந்தத் திட்டத்தை அரசியல் பகைமை, அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டம் வடக்கில் கைவிடப்பட்டால், அதை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அங்கே தயாராக உள்ளனர். விகாரைகள் கட்டப்படுவதை எதிர்க்கலாம். அதில் நியாயமுண்டு. இப்படியான தொழில்வாண்மைக்கான முயற்சிகளைத் தடுக்க முடியுமா? என்று அபிவிருத்திக் கண்ணோட்டமுடைய சிலர் கேட்கின்றனர்.

அவர்களுடைய நியாயம் என்னவென்றால், “கரும்பு உற்பத்தியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, கியூபா என உலகில் 120 நாடுகள் மேற்கொள்கின்றன. முன்னணி வகித்த பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்புச் செய்கையும் அதன் பயன்பாடும் இருந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் 03 வீதமான நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 4.5 கோடி விவசாயிகள் கரும்புச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகம் 50 வீதமான உற்பத்தியைச் செய்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியா முழுவதும் 500 க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 41 ஆலைகள் தமிழகத்தில் மட்டும் உண்டு. ஆலைகளை விட கரும்பு ஆராய்ச்சி மையங்கள், உற்பத்திப் பிரிவுகள் எனப் பலவும் செயற்படுகின்றன. கரும்பு தின்னக் கைக்கூலி எதற்கு என்று தமிழில் பழமொழி கூட உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் கரும்புக்கு முக்கியமான இடமுண்டு. பொங்கல், பண்டிகைகளில் கரும்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்தளவுக்குத் தமிழோடும் தமிழர் வாழ்வோடும் கரும்பு பின்னிப் பிணைந்திருக்கிறது. அப்படியான கரும்பு கசக்கிறது என்கிறார்கள்” இந்தப் புத்திஜீவிகள்.

உலகில் 80 வீதத்துக்கு மேலான சீனி மற்றும் சர்க்கரையை கரும்பிலிருந்தே உற்பத்தி செய்கிறார்கள். மீதியையே பீற்றூட்டிலிருந்து எடுக்கிறார்கள். கியூபாவின் பொருளாதாரத்தில் பாதியை கரும்பே நிறைவு செய்கிறது. உலகப் பெரும் புரட்சியாளர்கள் ஃபிடல் காஸ்ரோவும் சேகுவேராவும் கரும்பு வெட்டும் தொழிலைச் செய்திருக்கிறார்கள். அதையே தமது அடையாளமாகவும் கொண்டிருந்தனர். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கோ கரும்பு கசக்கிறது!

கரும்புச்செய்கையை மேற்கொள்வதாயின் அதற்கான நிலம், நீர் போன்றன உண்டா என்று வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. பின்னர் அமைச்சரவை, ஜனாதிபதி ஆகிய தரப்புகள் தொடர்பு கொண்டு பேச்சுகளை நடத்தின. இதன்போது தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களமும் தேவையான காணிகளை வழங்க முடியும் என வனப் பிரவினரும் காணி அமைச்சும் சொல்லியுள்ளன. ஆனால், திட்டத்தை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அறிகிறோம்” என்று சொல்லப்பட்டது.

கரும்பு கசக்குமா? இனிக்குமா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே. அப்படித்தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ரெலோவும் சொல்கிறது.

 

 

https://arangamnews.com/?p=9814

  • கருத்துக்கள உறவுகள்

Lஇப்பொழுது டெலோ செய்யும் விஷயங்களைப் பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். வழமை போல தமிழரசுக் கட்சி தனது ஸ்தானம் போய்விடும் என்று பயப்படுவது தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சீனி தொழிற்சாலை : பின்னணியில் உள்ள உண்மைகள் மிகவும் கசப்பானவை - பொ. ஐங்கரநேசன் 

Published By: NANTHINI

07 JUL, 2023 | 03:47 PM
image
 

வவுனியாவில் கரும்புத் தோட்டம் மற்றும் சீனி தொழிற்சாலையை அமைக்கும் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் தரப்பினர், இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கென வாராது வந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய் சிலாகித்து வருகின்றனர்.

ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனி தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பொ. ஐங்கரநேசன், வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கென கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்காகவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பினர், இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய் சிலாகித்து வருகின்றனர். ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனி தொழிற்சாலை, இனிப்பு தடவிய விஷம். 

அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும்போது திட்டத்தின் பொருத்தப்பாட்டை அறிந்துகொள்ள நீர் அடிச்சுவடு என்ற நீர்த் தேவையே சூழலியல் குறிகாட்டியாக முதலில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

கரும்பினதும் சீனியினதும் நீர் அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோ கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 லீற்றர் தண்ணீரும் ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 லீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிராகும். இவற்றின் அடிப்படையில் பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.

நீர்ச் சமநிலையை குழப்பி அத்தியாவசிய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈற்றில் அந்த மண்ணை பாலையாக்கிவிடும்.

கரும்பு, மிக அதிகளவில் இரசாயன உரங்களையும், பீடை கொல்லி, களைக்கொல்லி நஞ்சுகளையும் வேண்டி நிற்கும் ஒரு பயிராகும். தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களால் குளிப்பாட்டப்படும் மண்ணில் நுண்ணங்கிகள் அழிந்து தொடர்ந்து பயிரிட முடியாதவாறு மண் மலடாகிவிடும். 

கந்தளாய் சீனி தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதற்கு, கரும்பில் இருந்து இனிமேலும் அதிக விளைச்சலை பெறமுடியாதவாறு நிலம் தரம் இழந்துபோனதும் ஒரு காரணம். 

விவசாய இரசாயனங்கள் நீரோடு கலந்து குடிநீரையும் மாசடையச் செய்கிறது. வவுனியா ஏற்கனவே சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகமாக உள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய இரசாயனங்கள் கலந்த குடிநீரை அருந்தியதால் ஏராளமானோர் சிறுநீரகங்கள் செயலிழந்து அவதிப்படுகின்றனர். 

இந்நிலையில், கரும்புச் செய்கை வவுனியாவின் நிலத்தினதும் மக்களினதும் ஆரோக்கியத்துக்கு பெருங்கேடாகவே முடியும்.

கரும்புச் செய்கைக்கும் சீனி தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு, வவுனியாவின் மொத்த பரப்பில் ஆறு விழுக்காடுகளுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தை காடுகளை அழித்தே பெறமுடியும். 

மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாக கைவிடப்பட்ட மேய்ச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததை காரணம் காட்டி, காடுகள் என எல்லைகளை வரையறுத்த வனவிலங்கு திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது. 

காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ளதை கருத்திற்கொள்ளாமல், காடுகளை அழித்து சீனி தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும். 

இது தமிழ் மக்களின் பூர்விக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும். சீனி தொழிற்சாலை சிங்கள குடியேற்றத்துக்கும் வித்திடும் என்ற சந்தேகமும் உள்ளது. 

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தை மேம்படுத்தல் என்று சொல்லப்பட்டபோதும் அதன் உள்ளார்ந்த நோக்கம் சிங்கள குடியேற்றமாகும். அதுவும், குடியேற்றப்படும் இடத்தின் இன விகிதாசாரப்படி இல்லாமல், இலங்கையின் இன விகிதாசாரத்தின்படியே குடியேற்றங்களை மேற்கொள்வது மகாவலி அதிகார சபையின் எழுதப்படாத அதிகாரம். 

மகாவலியுடன் இணைக்கப்பட்ட கந்தளாய் குளத்தை மையப்படுத்தி நிகழ்ந்த பயிர்ச்செய்கையே தமிழ் நிலமான கந்தளாயை இன்று முற்றுமுழுதாக சிங்களவர்களின் நிலமாக்கியது. 

வவுனியாவிலும் 'கரும்புக்கு நீர் பாய்ச்சுகிறோம்' என்று சொல்லி வவுனியாவின் குளங்களோடு மகாவலியை தொடுத்து நிலங்களை மகாவலி அதிகார சபை தன்வசமாக்கலாம். மகாவலியில் நீர்வரத்து இருக்கிறதோ, இல்லையோ... இதனூடாக சிங்கள குடியேற்றம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்விதத்திலும் பொருந்தாத சீனி தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ் தேசிய பற்றாளர்களினதோ செயலாக இருக்காது. 

நீண்ட நெடிய வலி மிகுந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் நம்முடையது. இப்போராட்டம் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்காக மண்ணின் வளங்களை காப்பாற்றி, அவர்களிடம் கையளிப்பதையும் உள்ளடக்கியதே ஆகும். மண் மீட்கப் புறப்பட்ட நாம் அம்மண் பாலையாவதற்கோ மலடாவதற்கோ எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/159443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.