Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சா எண்ணெய் உற்பத்தியை சொல்லி வைத்து குறைக்கும் சௌதி அரேபியா, ரஷ்யா - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கச்சா எண்ணெய்  உற்பத்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின்

4 மணி நேரங்களுக்கு முன்னர்

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் பிளசின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சௌதி அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி எஸ்பிஏ செய்தி வெளியிட்டுள்ளது.

சௌதி அரசின் இந்த முடிவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் பேரல்கள் என்ற அளவுக்கு குறைக்க முடிவெடுத்துள்ளது.

 

ரஷ்யா மற்றும் சௌதி அரேபியாவின் இந்த முடிவால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரிக்க கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கச்சா எண்ணெய்  உற்பத்தி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணி

புதின் உடன் பேசிய சௌதி இளவரசர்

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும் சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் அதிரடி முடிவை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 76.60 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

சௌதி அரேபியாவுக்கு அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், உலக அளவில் ரஷ்யா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ளன.

ஓராண்டுக்கும் மேலாக இந்த தடை நீடித்து வரும் நிலையிலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 9.5 மில்லியன் பேரல்களாக குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

 

இந்த நிலையில் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஜூன் 27 ஆம் தேதி, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சௌதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இவ்விரு தலைவர்களின் இந்தப் பேச்சுவார்த்தையின் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என்ற முடிவை இருநாடுகளும் எடுத்துள்ளன.

ஓராண்டுக்கு முன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 113 டாலராக இருந்து வந்தது. அந்த நிலையில் சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எண்ணெய் வள நாடுகள் போதுமான அளவு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்தது போன்ற காரணங்களால் இதன் விலை குறைய தொடங்கியது. இத்தகைய சூழலில் தான் எண்ணெய் விலையை ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபரிடம் சௌதி இளவரசர் கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், “ஓபெக் பிளஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எண்ணெய் வள நாடுகள் கடந்த மாதம் தங்களின் உற்பத்தியில் 90 சதவீதம் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்துள்ளன. ஆனால் ரஷ்யா தனது உற்பத்தியில் 50 சதவீதம் எண்ணெய்யை மட்டுமே ஏற்றுமதி செய்தது” என்று அந்நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி நிறுவனமான நோஸ்நேபிட்டின் தலைவர் இகோர் சேஷின் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய்  உற்பத்தி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சௌதி , ரஷ்யாவின் முடிவுக்கு பிறகும் எண்ணெய் விலை உயராதது ஏன்?

கச்சா எண்ணெய் விலைக்கு மேற்கத்திய நாடுகள் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 55.28 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 87.25 டாலர்களுக்கு விற்பனையானது என்று ரஷ்ய நிதி அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் சௌதியின் முடிவு செப்டம்பர் மாதமும் தொடரக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கச்சா எண்ணெயின் விலையை உயர்த்தும் நோக்கத்துடன் சௌதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், இதற்கான அடிப்படை காரணங்கள் போதுமானதாக இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் முதலீட்டு வங்கிகள் கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளது என்றே மதிப்பிட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 93.50 டாலர்களாக இருக்கும் என்று ஹெச்.எஸ்.பி.சி வங்கி முன்பு கணித்திருந்தது. ஆனால், அதுவே தற்போது 80 டாலர்களாக இருக்கும் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.

சௌதி , ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை உயர்த்த விரும்புவது ஏன்?

இருப்பினும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு என்ற சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் முடிவால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச எண்ணெய் சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து தொழில் துறையை சௌதி தன் கையில் வைத்திருந்தாலும், அதற்கான எரிபொருள் தேவையில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய அவசியம் அதற்கு உள்ளது. அத்துடன் பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு தேவையான நிதியை, கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் மூலம் பெற சௌதி அரேபிய அரசு விரும்புகிறது.

மறுபுறம், யுக்ரேன் மீதான போரின் விளைவாக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்து வந்த வருவாய், கடந்த மே மாதம் 1.4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, கச்சா எண்ணெய்யின் விலையேற்றத்தின் மூலம் இந்த வருவாயை அதிகரிக்க ரஷ்யாவும் விரும்புகிறது

கச்சா எண்ணெய்  உற்பத்தி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

சீன நாட்டின் கரன்சியான யுவான்

சீன கரன்சி மதிப்பில் ரஷ்யாவுக்கு பணம் செலுத்தும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடைக்கெல்லாம் அசராத ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது.

சௌதி அரேபியாவிடம் இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 86 டாலர்களுக்கு வாங்கி வரும் நிலையில், அதையே ரஷ்யாவிடம் இருந்து 68 டாலர்களுக்கு இந்தியா பெற்று வருகிறது. யுக்ரேன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துவரும் கச்சா எண்ணெய்யின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இருப்பினும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான தொகையை ஆரம்பத்தில் ரஷ்ய நாட்டு கரன்சியில் இந்தியா கொடுத்தது. ஆனால் அதன் மூலம் பொருளாதார ரீதியாக தமக்கு எந்த பலனும் இல்லை என்று ரஷ்யா கருதியது.

அத்துடன் எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை இந்தியாவிடம் இருந்து டாலர்களில் பெறவும் ரஷ்யா விரும்பவில்லை. இதன் காரணமாக, கச்சா எண்ணெய்க்கான பணத்தை எந்த கரன்சி மதிப்பில் செலுத்துவது என்பதில் இரு நாடுகளும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை சீன நாட்டு கரன்சியான யுவானில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு வழங்கி வருவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி, ராய்ட்டர்ஸ் நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

 

அதில், கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கான தொகையை சீன கரன்சியின் மதிப்பில் செலுத்தும் இந்தியாவின் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐஓசி உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நயரா எனர்ஜி, ஹெச்.பி.சி.எல் -மிட்டல் எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரஷ்யாவுக்கு யுவானில் செலுத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுதொடர்பாக கருத்து கேட்க ஐஓசி, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனங்களின் நிர்வாக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்தியாவும் டாலர் மதிப்பில் பணத்தை செலுத்தி தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், டாலர் மற்றும் யூரோ கரன்சிகளில் வர்த்தகம் மேற்கொள்ள ரஷ்யாவுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் நிதி அமைப்பில் சீனாவின் கரன்சியான யுவான் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கச்சா எண்ணெய்  உற்பத்தி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

எண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்

ரஷ்யாவின் முடிவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ?

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதன் அளவு கடந்த மாதம் (ஜூன்) உச்சத்தை தொட்டது. ஆனால் இதுவே இந்த மாதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் இந்தியாவில் எரிபொருட்களின் தேவை கணிசமாக குறைவது வழக்கம். இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் சில அலகுகளை (யூனிட்) பராமரிப்பு பணிகளுக்காக மூடுவதும் வழக்கம். இதன் விளைவாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டுமின்றி, அதை சுத்திகரிக்கவும் இந்தியா, ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் வரும் என்கிறார் கச்சா எண்ணெய் வர்த்தக நிபுணரான விக்டர் கட்டோனா.

அதாவது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் ரஷ்யாவின் முடிவால், அந்த நாட்டிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன், பருவமழை காலத்தில் அதன் சுத்திகரிப்பு ஆலைகளையும் நாட வேண்டிய நிலை உள்ளதால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு கூடுதல் பாதிப்பு என்கிறார் அவர்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் ஒரு நாளைக்கு 40.78 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 20.17 லட்சம் பேரல்கள் எண்ணெய் ஒரு நாளைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 45 சதவீதம். இது மே மாத கச்சா எண்ணெய் வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது அதிகம்.

பல மடங்கு உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி

கடந்த 2021 -22 ஆம் நிதியாண்டில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அந்த வர்த்தகத்தின் அளவு 20 சதவீதத்தை தாண்டும் அளவுக்கு, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா பாரம்பரியமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த செளதி அரேபியா, இராக் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளும் விதத்தில் ரஷ்யா -இந்தியா இடையேயான எண்ணெய் வர்த்தகம் குறுகிய காலத்தில் அதிரடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா -ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் 44 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், இதில் எண்ணெய் வர்த்தகம் தான் பெரும்பங்கு வகிக்கிறது.

அதேநேரம் ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான காலகட்டத்தில், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 34.79 பில்லியன் டாலர்களாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51qnllrlveo

  • கருத்துக்கள உறவுகள்

பிறிக்ஸ்  பொதுவான ஒரு பணத்தை உருவாக்க முயல்கிறது. இதன் மூலம் தங்களுக்குள்  பண பரிவர்த்தனையை இலகுவாக்கலாம் என நினைக்கிறார்கள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணெய்: சௌதி அரேபியா, ரஷ்யாவின் இந்தக் கூட்டு முடிவு இந்தியாவை எப்படி பாதிக்கும்?

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,REUTERS

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சௌதி அரேபியாவும் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு 2023-ஆம் ஆண்டின் மீதமுள்ள மூன்று மாதங்களுக்கானது. இரு நாடுகளின் இந்தக் கூட்டு அறிவிப்பு, உலகம் முழுவதும் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஓராண்டில், முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 75 முதல் 85 அமெரிக்க டாலர்கள் வரை இருந்தது.

சௌதி அரேபியா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எணெய் உற்பத்தியை அறிவித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் சமீபத்திய இந்த முடிவிற்குப் பிறகு, 10 மாதங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது.

 

உற்பத்திக் குறைப்பு அறிவிப்பை முதலில் வெளியிட்ட சௌதி அரேபியா

இந்த ஆண்டு கோடையின் துவக்கத்தில், முதலில் சௌதி அரேபியாதான் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சௌதி அரேபியா ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வருகிறது.

கடந்த செவ்வாயன்று, சௌதியும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்திக் குறைப்பை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தபோது, நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இந்த இரு நாடுகளின் இந்த முடிவு, தேவை மற்றும் விநியோகத்தின் மீதான தமது பிடியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக எண்ணெய் விலை அதிகரிக்கும்.

ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா இணைந்து எடுத்த இந்த முடிவு, பெரும் ஏற்றுமதியாளர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 1% குறையும். இருப்பினும், ரஷ்யாவின் உற்பத்திக் குறைப்பைப் பற்றி அறிவது கடினம்.

யுக்ரேன் போர் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் எண்ணெய் விற்பனை செய்வதில் ரஷ்யா சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்கா உள்ளிட்டப் பிற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எரிசக்தி புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நாடுகள் அதிகரித்த எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் சவால்களை சமாளித்துக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யா-சௌதியின் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையால் மற்ற நாடுகளின் இந்த முயற்சிகளுக்கும் பாதிப்புக்குள்ளாகும்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சௌதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே எண்ணெய் விலை தொடர்பாக ஒரு மோதல் ஏற்பட்டது

ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே இருந்த பதற்றம்

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சௌதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே எண்ணெய் விலை தொடர்பாக ஒரு மோதல் ஏற்பட்டது.

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையின் வீழ்ச்சியைச் சமாளிக்கும் வகையில் ரஷ்யா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புகிறது. ஆனால் உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா தயாராக இல்லை.

ரஷ்யாவின் அணுகுமுறையால் எரிச்சலடைந்த சௌதி அரேபியா உற்பத்தியை அதிகரித்து, சலுகை விலையில் எண்ணெய் விற்க முடிவு செய்திருந்தது. உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொறு காரணமாக அனைத்து வணிகங்களும் ஸ்தம்பித்த நிலையில் சௌதி அரேபியா இந்த முடிவை எடுத்தது.

விலை வீழ்ச்சிக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன. சௌதி தனது கரன்சியான ரூபிளின் வீழ்ச்சிக்கு ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி சௌதி அரேபியா மீது குற்றம் சாட்டியது.

மறுபுறம், சௌதி அரேபியாவும் பதிலடி கொடுக்க முடிவு செய்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி, சௌதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ ஒவ்வொரு நாளும் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் என்று கூறியது.

இது ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை விட 26% அதிக உற்பத்தியாகும். ரஷ்யாவுடனான விலைப் போரில் தங்கள் முன்னிலையை நிரூபிப்போம் என்று சௌதி அரேபியா நினைத்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில், எண்ணெய் உலகில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் தாக்கம் மிகவும் பரந்த அளவில் உள்ளது.

 

முதலாவதாக, அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியாளராக இருந்த அமெரிக்கா, இப்போது உலகின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

இரண்டாவது, எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா இடையேயான ஒத்துழைப்பு. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.

அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவும் இரண்டாவது இடத்திற்குப் போட்டியிடுகின்றன. ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சமீப காலமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) சௌதி அரேபியா அதிகபட்ச ஆதிக்கம் செலுத்துகிறது. 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோவிட்-19 காரணமாக எண்ணெய் தேவையில் பெரும் சரிவு ஏற்படவே, சௌதி அரேபியா OPEC மூலம், எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்மொழிந்தது.

ரஷ்யா OPEC-இல் உறுப்பினராக இல்லை. மேலும் சௌதி அரேபியாவின் முன்மொழிவுடன் உடன்பட மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிலும் எண்ணெய் விலைப் போர் வெடித்தது.

ரைஸ் பல்கலக்கழகத்தின் பேக்கர் நிறுவனத்தின் எரிசக்தி நிபுணர் ஜிம் கிரெய்ன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "எண்ணெயின் விலை எப்போதும் உச்சத்திலேயே இருக்காது என்பது அரபுத் தலைவர்களுக்குத் தெரியும். இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின்-சல்மான் ' Vision 2030' என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்,” என்று கூறியிருந்தார்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது

சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்கலாம்

எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

The New York Times இதழில் வந்த ஒரு செய்தியின்படி, சௌதி அரேபியா அதன் முக்கிய வருமான ஆதாரமான வலுவான எண்ணெய்ச் சந்தைக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த இலக்கை அடைய, வளரும் பொருளாதாரங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் எடுக்க சௌதி அரேபியா தயாராக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘எனர்ஜி ஆஸ்பெக்ட்ஸ்’ ஆராய்ச்சி நிறுவனத்தின் புவிசார் அரசியல் ஆய்வின் தலைவராக இருக்கும் ரிச்சர்ட் ப்ரோன்ஸ், ‘தி நியூயார்க் டைம்’ஸிடம் கூறியிருந்ததன் படி, சந்தையை இறுக்கமாக வைத்திருப்பது தனது கடமையாக சௌதி அரேபியா கருதுகிறது.

சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் மிகவும் ஆக்ரோஷமான கொள்கைகளுடையவர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அப்துல் அசீஸின் அறிக்கைகளை சந்தை புறக்கணித்து வருகிறது. அப்துல் அசீஸ் பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் ஆவார்.

கடந்த சில வாரங்களாக, எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை அதிகரித்து, உலகப் பொருளாதாரத்தை கவலையடையச் செய்துள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

சௌதி போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய சந்தை

நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைச் சந்திக்கும் சீனா

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெயின் விலை 20% உயர்ந்துள்ளது. சீனா பொருளாதார ரீதியாகச் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது.

சௌதி போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய சந்தை.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழின்படி, அதிகரித்த எண்ணெய் விலை ரஷ்யாவிற்குச் சாதகமாக கருதப்படுகிறது. ஆனால் இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அடியாக இருக்கலாம்.

கச்சா எண்ணெயை பேரல் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பது சௌதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், அமெரிக்காவின் கவனம் தற்போது சௌதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதிலேயே உள்ளது.

இதற்கிடையில், சௌதி அரேபியா ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் என்று சௌதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி கடந்த ஆண்டை விட 20 லட்சம் பீப்பாய்கள் குறைவாகும்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக இந்தியா மற்றும் சீனா மூலம் ஐரோப்பா எண்ணெய் வாங்குவதாக ‘The Center for Research on Energy and Clean Air’ தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் மீதான மேற்கத்தியத் தடைகளும்

ரஷ்ய-யுக்ரேன் போர் துவங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. அப்போதிருந்து, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து விலகிக் கொண்டன.

யுக்ரேன் போர் துவங்கிய பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது 1,350% அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக இந்தியா மற்றும் சீனா மூலம் ஐரோப்பா எண்ணெய் வாங்குவதாக ‘The Center for Research on Energy and Clean Air’ தெரிவித்துள்ளது.

எரிசக்திப் புலனாய்வு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் துவக்கத்தில் ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியில் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்தது. ஆகஸ்டில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைப்பதாக அறிவித்தது.

இந்தக் குறைப்பு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பீப்பாய்கள் என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்துள்ளது.

எரிசக்திப் புலனாய்வு, ரஷ்ய அதிகாரிகள் தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் மாதம், ரஷ்யா சராசரியாக சுமார் 4.3 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை முன்னர் சோவியத் யூனியனில் இடம்பெறாத நாடுகளுக்கு வழங்கியது. இந்த எண்ணிக்கை ஜூலையை விட அதிகமாக இருந்தது.

ஆகஸ்டில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முதல் ஏழு மாதங்களில் இருந்ததை விட ஒரு நாளைக்கு சுமார் 3,40,000 பீப்பாய்கள் குறைவாக இருந்ததாக எரிசக்திப் புலனாய்வு மதிப்பிட்டுள்ளது.

இந்த முடிவு ரஷ்யாவின் கவனம் எண்ணெயை சேமிப்பதை விட அதற்கு அதிக விலையைப் பெறுவதில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பார்வையில் இந்த முடிவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கச்சா எண்ணெய் உற்பத்தியில், சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது

எண்ணெய்ச் சந்தையில் சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் இடம்

உலகிலேயே அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு சௌதி அரேபியா. ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

எண்ணெய் உற்பத்தியில், சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது.

அல் ஜசீராவின் ஒரு செய்தி அறிக்கையின்படி, ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 97 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

சௌதி அரேபியாவின் எண்ணெயை வாங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது.

2021-ஆம் ஆண்டில், சீனா மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.

ரஷ்யாவிலிருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதி கடந்த ஓராண்டில் சுமார் 40 மில்லியன் டன்னிலிருந்து 57.7 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

அதே சமயம், கடந்த ஓராண்டில், ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது, 30 லட்சம் டன்னில் இருந்து, 5.59 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா

இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு மொத்தம் 40 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது .இதில் ரஷ்யாவின் பங்கு சுமார் 45% இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக இருந்தது.

2021-2022ல் ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது வெறும் 2% ஆக இருந்தது, தற்போது 20%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய எண்ணெய் விநியோகஸ்தர்களான சௌதி அரேபியா மற்றும் ஈராக்கை ரஷ்யா பின்னுக்குத் தள்ளியிருக்கிறாது.

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 44 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இதில் பெரும் பகுதி எண்ணெய் இறக்குமதியாகும்.

ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைவு. ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 34 பில்லியன் அமெர்க்க டாலர்கள் ஆகும்.

ரஷ்யா யுக்ரென் மீது போர் தொடுத்த போது, மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அமெரிக்காவும் எதிர்பார்த்தது.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் இதைப் பற்றி கேட்டபோது, "இந்தியா எண்ணெயை வாங்குவது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால் ஐரோப்பா ஒரு மதிய வேளையில் வாங்கும் எண்ணெயைக் கூட இந்தியா ஒரு மாதத்தில் வாங்குவதில்லை," என்று கூறினார்.

ஜெய்சங்கரின் இந்த கருத்து அப்போது விவாதப் பொருளானது.

https://www.bbc.com/tamil/articles/cw56g7xppgko

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

எனினும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது. எண்ணெய் விலையில் மாற்றம்!”

https://thinakkural.lk/article/274213

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.