Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை                  வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து
 
படக்குறிப்பு,

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது.

11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது நீதித்துறையில் சாதனையாக கருதப்பட வேண்டும் என சாடியுள்ளார்.

ஒருபுறம் அமலாக்கத்துறை செம்மண் குவாரி வழக்கை கையில் எடுத்திருக்கும் நிலையில், முடிந்ததாக நினைத்த சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பது அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இது போன்று தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமான செயல் அல்ல என்பதால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை                  வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூருக்கு கடைசி நேரத்தில் வழக்கை மாற்றியது ஏன் என நீதிபதி கேள்வி.

20 ஆண்டுகளாக நடந்த வழக்கு

1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் 2002ம் ஆண்டு போடப்பட்டதாகும்.

இந்த வழக்கின் விசாரணை முதலில் விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. பின் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜூன் 28ம் தேதி அவரையும் அவரது மனைவியையும் விடுவித்திருந்தது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை அவரது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இதனை தாமாக முன்வந்து நேற்று (ஆகஸ்ட் 10)விசாரித்தார்.

 
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை                  வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து
 
படக்குறிப்பு,

228 பக்க தீர்ப்பை வேலூர் நீதிபதி எப்படி நான்கு நாட்களில் எழுதினார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி.

வழக்கை கடைசி நேரத்தில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? - நீதிபதி கேள்வி

அப்போது இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில், மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நீதிபதியின் உத்தரவில், விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு விசாரணை முடியும் தருவாயில் வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை பெரும்பங்கு முடித்து, முடியும் தருவாயில் இருந்த போது வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28ம் தேதி , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதன் பின் ஜூன் 30 ம் தேதி பதவி விலகியுள்ளார். வேலூர் நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது இந்த நீதிமன்றத்தின் சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் 109 பிரிவின் கீழ் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மாமியார் பி சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 228 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, 318 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறது, இப்படி செய்வதற்கு நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நான்கு நாட்களில் எப்படி 228 பக்கத் தீர்ப்பு தயாரானது? - நீதிபதி காட்டம்

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு எப்படி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவுடன் வேகமாக நகர ஆரம்பித்தது என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கேள்வி எழுப்பியுள்ளது.

ஜூன் 2023-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் (பொன்முடியின்) நட்சத்திரங்கள் அவருக்கு சாதகமாக கட்சிதமாக அமைந்தன, அதுவும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் ஆசியுடன். ஜூன் 23ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நான்கு நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட இது போன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். இரண்டு நாட்கள் கழித்து நீதிபதி நிம்மதியாக பணி ஓய்வு பெற்றுவிட்டார்.” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடிக்கு நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் அமலாக்கத்துறையால் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது இதிலிருந்து மாறுபட்ட வழக்காகும். 2006-2011ம் ஆண்டுகளில் கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரிகளுக்கு அனுமதி அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்தான வழக்கையே அமலாக்கத்துறை கையில் எடுத்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c8v03e4v37vo

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்கா மக்கா.. 

ம். ம்ம்ம்... 

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

அடதங்க முடிக்கு வந்த சோதனை.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

கீழ் நீதிமன்றங்கள் முடித்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 26 ஆகஸ்ட் 2023

சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து மேலும் இரண்டு அமைச்சர்களை விடுவித்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பாக விடுவித்த வழக்கை எடுத்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளையும் மறு விசாரணை செய்யவுள்ளது.

இப்படி தீர்ப்பு வழங்கப்பட்ட முடிந்துபோன வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்று அல்ல என நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் இந்த வழக்குகளை மறு விசாரணை செய்வதாக நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வழக்குகளில் வழக்கு தொடுத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், தற்போது மறுவிசாரணைக்கு இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துள்ளது.

 

அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

கீழ் நீதிமன்றங்கள் முடித்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம்,THANGAM THENNARASU FB

அமைச்சர்கள் மூவரும் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நியாயமாக இல்லை எனவும், கீழமை நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை விடுவித்தன என்றும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் தனது உத்தரவுகளில் விமர்சித்துள்ளார்.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராக இருந்தார்.

அவர்மீது, 2006ஆம் ஆண்டு மே15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 74.58 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் 2012ம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. பத்து ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

கீழ் நீதிமன்றங்கள் முடித்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம்,KKSSR RAMACHANDRAN

அதேபோன்று, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், 2006ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரை சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து குவித்ததாக அமைச்சர், அவரது மனைவி, மற்றும் ஒரு நண்பர் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

பல்வேறு நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 
கீழ் நீதிமன்றங்கள் முடித்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

இதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கும் சொத்து குவிப்பு வழக்கே.

கடந்த 1996-2001ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது, வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2002ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இருபது ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சரை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த மூன்று வழக்குகளுமே திமுக ஆட்சி நடைபெற்றபோது சொத்து குவித்ததாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள். அதே போன்று இந்த மூன்று வழக்குகளுமே மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முடித்து வைக்கப்பட்டவை.

 

ஆட்சி மாற்றத்துக்குப் பின் முடிக்கப்பட்ட வழக்குகள்

ஆட்சி மாற்றம் 2021ஆம் நடந்த பிறகு வழக்கு தொடுத்த மாநில அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் தற்போது விளையாட்டில் ஒரே அணியில் விளையாடுபவர்களாக மாறிவிட்டார்கள், எனவே விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் ஆனந்த் வெங்கடேஷ்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் ஒரு விளையாட்டில் ஒரே அணியிலிருந்து விளையாடுபவர்களாகி விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதை உணர்ந்த போட்டி நடுவர், அதாவது சிறப்பு நீதிமன்றம் தன்னையே ஆட்டத்தில் தோற்கடித்துக் கொள்வதுதான் உகந்த வழி என்று முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. எனவே, இது, ஆட்சி அதிகாரத்தின் காரணமாக சீர்குலைக்கப்பட்ட மற்றொரு கிரிமினல் விசாரணையின் உதாரணம்,” என்று தனது உத்தரவில் கடுமையாக சாடியுள்ளார்.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய காரணங்களை நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் விளக்குகிறார்.

இரண்டு வழக்குகளிலும் திட்டமிடப்பட்ட ஒரே மாதிரியான அணுகுமுறைகள் வெளிப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையை, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு மாற்றத்துக்கு, “சில மாதங்கள் கழித்து, அரசு தாராள மனதுடன் முன்வந்து, “மேலும் விசாரணை” செய்தது. இந்த “மேலும் விசாரணை”யின் விளைவாக அவர்கள் விடுவிப்பதற்கு தகுந்த இறுதி அறிக்கையை அளித்தது.

ஏற்கெனவே அளித்திருந்த விசாரணை அறிக்கையிலிருந்து மாறுபட்ட விசாரணை இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டதாகவும் இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் விசாரணை அறிக்கைகள் முரணாக இருந்தாலும், சமீபத்தில் சமர்ப்பிக்க அறிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தாகவும் தெரிவிக்கிறார்.

 

ஏன் திமுக அமைச்சர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ள சட்டரீதியான குளறுபடிகளை யாரும் மறுக்கவில்லை என்றாலும், ஏன் திமுக அமைச்சர்களின் வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன, என கேள்வி எழுப்பப்படுகின்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில், நீதிபதிக்கு இவற்றை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ். பாரதி, ஏன் திமுக அமைச்சர்கள் குறி வைக்கப்படுகின்றனர் எனக் கேட்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விசாரணைக்கு வழக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, அவற்றில் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்பது விதி.

அதிமுக அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏன் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை,” எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி மீது தான் போட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு தன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதையும் சுட்டிக்காட்டினார் ஆர்.எஸ். பாரதி.

முரண்பட்ட அறிக்கைகளைக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

டென்மார்க் அரசில் ஏதோ ஒன்று அழுகியுள்ளது என ஷேக்ஸ்பியர் கூறுவார், அதுபோல, ஆவணங்களை ஆராய்ந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று மிகவும் அழுகியுள்ளது,” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எழுதிய தீர்ப்பை, எழுதிய நீதிபதி உட்பட யாருமே புரிந்துகொள்ள முடியாத படி இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

அமைச்சர் தங்கம் தென்னரசு சம்பந்தப்பட்ட வழக்கில், 2016ஆம் ஆண்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று எந்த விசாரணை அதிகாரி கூறினாரோ, அதே அதிகாரி தற்போது, அவர் மீது குற்றம் இல்லை என்று கூறுவதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக் காட்டினார்.

நிறைய ஆவணங்களைத் திரட்டி உச்சநீதிமன்ற முடிவுகளை எல்லாம் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படக் கூடாது எனக் கூறிய அதே அதிகாரி 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திடீரென, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சரான பிறகு, ‘மேலும் விசாரணை’ நடத்தி மாறுபட்ட அறிக்கையை அளித்துள்ளார்” என்று கூறுகிறார்.

ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தாலாட்டுக்கு நடனமாட ஆரம்பித்தால், பாரபட்சமற்ற விசாரணை என்பது நாடகமாகிவிடும்,” என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதே போன்று அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கையும் தாமாக முன் வந்து எடுத்திருக்கும் நீதிபதி என் ஆன்ந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த கீழ் நீதிமன்ற நீதிபதியை கடுமையாக சாடியிருந்தார்.

முடியும் தருவாயில் இருந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை எனத் தனது உத்தரவில் தெரிவிக்கிறார்.

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28ஆம் தேதி 228 பக்கத் தீர்ப்பு வழங்கினார்.

இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள்கூட இதுபோன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். அடுத்த இரண்டு நாட்களில் நீதிபதி நிம்மதியாக ஓய்வு பெற்றுவிட்டார்,” என்று சாடியிருந்தார்.

நீதிபதி முன்முடிவுடன் இருக்கலாமா?

கீழ் நீதிமன்றங்கள் முடித்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம்,ADV VIJAYAKUMAR

இப்படி வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்கும் நீதிபதி எப்படி இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார்.

பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த வழக்குகளில் இப்படி கருத்துகளை வெளிப்படுத்துவது, அவர் முன்முடிவுடன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. விசாரணைக்கு முன்பே, முன்முடிவுடன் இருப்பவர் எப்படி வழக்கை விசாரிக்க முடியும்,” என்கிறார் அவர்.

இதுபோன்று நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து முடிந்தபோன வழக்குகளை மறு விசாரிணை செய்ய சட்டத்தில் இடம் இருந்தாலும், இது வழக்கமான ஒன்று அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், நீதிபதியின் நோக்கத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிலரது வழக்குகளை மட்டும் விசாரிக்கிறார் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்,” என்கிறார் அவர்.

 

"ஆட்சிக்கு அதிகாரத்துக்கு சாதகமாகவே அரசு இயந்திரங்கள் செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும்."

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ன் நோக்கத்தை கேள்வி கேட்ட அதே செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவர் மீது தான் தொடுத்த வழக்கு குறித்து பேசிய ஆர் எஸ் பாரதி, “எடப்பாடி மீது போடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது.

மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கை வாபஸ் வாங்குவதாகத் தெரிவித்து விட்டேன்,” என்றார்.

லஞ்ச வழக்குகள் எதை எடுத்தாலும் இதுபோன்ற பல சிக்கல்கள் இருக்கலாம், என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். எல்லாவற்றையும் மறு விசாரணை செய்துகொண்டே இருக்குமா உயர்நீதிமன்றம் என்று கேட்கிறார் அவர்.

மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் பல இருக்கும் போது, அதைவிட்டு இந்த வழக்குகளை எதற்காக எடுத்து விசாரிக்க வேண்டும்?

கீழமை நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் வழக்குகள் பட்டியலில் இடம் பெறுவதுகூட கடினமாக உள்ளது. ஆனால் இந்த வழக்குகள் உடனடியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்றும் கூறும் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c9rwkl39d73o

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்முடி மீண்டும் அமைச்சர் பதவியைப் பெறுவாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

பொன்முடி- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பட மூலாதாரம்,PONMUDI

19 நிமிடங்களுக்கு முன்னர்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதனால் காலியாக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதிக்கு அவர் மீண்டும் எம்.எல்.ஏவாக பதிவியேற்பாரா?

இழந்த அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவாரா பொன்முடி?

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

பொன்முடி- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த வருடம் டிசம்பர் 21 அன்று வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்தத் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் அவர் இழக்க நேர்ந்தது.

பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ஆம் தேதி திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், சிறையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைவதற்கு இருவருக்கும் விலக்கு அளித்தது. மேலும், அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இருவரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில், பொன்முடிக்கு தீர்ப்பையும், அவரின் மனைவிக்கு தண்டனையையும் நீதிபதிகள் நிறுத்திவைத்தனர். அதுமட்டுமல்லாமல், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவதற்கான சட்ட ரீதியான தடை நீங்கியிருக்கிறது.

 

பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏவாக முடியுமா?

பொன்முடி- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பட மூலாதாரம்,PONMUDI

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் தன்னுடைய எம்.பி பதவியை இழந்தார். அவரது தொகுதியான கேரளாவின் வயநாடு, நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இல்லம் காலி செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி தற்போது எம்பியாக தொடர்கிறார்.

அதேபோல, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடியும் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா, திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்ற சட்டப்பேரவைச் செயலரின் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கேட்டபோது, 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், எம்.எல்.ஏ பதவியை கோரி சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.

"தனது எம்.எல்.ஏ பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம் அல்லது நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி மீட்கலாம். ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது," என்று சட்டப்பேரவை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

பொன்முடி சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்

பொன்முடி- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உச்சநீதிமன்றத்தில் நடந்து என்ன என்பது குறித்து நம்மிடம் பேசிய திமுக வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், "கீழமை நீதிமன்றம் பொன்முடி வழக்கை விசாரித்து அவர் மீது தவறு இல்லை என்று சொல்லி விடுதலை செய்திருந்தது. இருப்பினும், இது குறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். அவர் சார்பாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

"அதில் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டுத் தீர்ப்புகளில் இரண்டு கருத்துகள் இருக்குமானால், விடுதலையை உறுதி செய்ய வேண்டுமே தவிர, வேறு ஒரு பார்வை இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மட்டும் விடுதலையை மாற்றி தண்டனை தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம். மேலும், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் கருத்துகள் பொன்முடிக்கு ஆதரவாக இருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.

"மேல்முறையீட்டு மனுவில் பொன்முடிக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால் இந்த தகுதி நீக்கத்தால் அவர் பெற்ற இழப்புகளை யாராலும் சரி செய்ய முடியாது என்ற கருத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை என்பதை முடிவு செய்ய மேல்முறையீட்டு மனு இருக்கிறது. அதில் முடிவெடுக்க 2 ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், பொன்முடி தீர்ப்பில் இரு கருத்துகளுக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது," என்றார்.

மேலும் திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திருக்கோவிலூர் இடைத்தேர்தல் நடக்காது. பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக தொடர்வார்," என்று கூறினார்.

 

பொன்முடிக்கு சாதகமான தீர்ப்பு

பொன்முடி- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பட மூலாதாரம்,PRIYAN

படக்குறிப்பு,

மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்

"இந்த தீர்ப்பினால் திமுக கட்சிக்கு கிடைக்கும் பலன்களை விட பொன்முடி என்ற தனிமனிதருக்கு தான் அதிக பலன்கள்," என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

"ஏனென்றால் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தி.மு.க.வை பெரிதாக விமர்சிக்கவில்லை. போதைப் பொருள் புழக்கம், சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள், செந்தில் பாலாஜி வழக்கு என அ.தி.மு.க.வு.க்கும் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வை விமர்சிக்க பல காரணங்கள் உள்ளன. பொன்முடி வழக்கு பற்றி அவர்கள் பெரிதாக பேசவில்லை. எனவே இந்த தீர்ப்பின் மூலமாக பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன," என்கிறார் அவர்.

"ஆனால் திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என அறிவித்துவிட்டதால், மீண்டும் சபாநாயகர் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும். ராகுல் காந்தி விஷயத்தில் மக்களவை சபாநாயகர் இது போல கடிதம் அனுப்பியதால் அவரது பதவி மீண்டும் கிடைத்தது. பொன்முடிக்கு அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்குமா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும்," என்கிறார் பத்திரிக்கையாளர் பிரியன்.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மாலன், "தண்டனை நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது, அது ரத்து செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அவர் மீண்டும் பெறுவார் பதவியைப் ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து முடித்து தீர்ப்பளித்தால் தான் மற்ற விஷயங்கள் தெரியவரும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க.வுக்கு இது ஒரு சாதகமான தீர்ப்பு தான்," என்றார்.

 

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2006-2011 காலத்தில், தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ பதவியை இழந்தார் பொன்முடி. அவரது தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/crgvnw0yy4ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.