Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டியல் சாதி மாணவரை சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் - படுகாயம் அடைந்த மாணவர் சொல்வது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாதிக்கப்பட்ட மாணவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT
    புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்ளிக்கு சென்றதால், அவர் வீடு புகுந்து அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு சிறார்களை சிறார் நீதி வாரியத்தில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட மாணவர் வேறு பள்ளியில் சேர விரும்பினால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வீடு புகுந்து வெட்டிய சக வகுப்பு மாணவர்கள்

பாதிக்கப்பட்ட மாணவன்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் பிரபு(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் பிரபு(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு, அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் பிரபுவின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த பிரபுவின் தங்கை, அதைத் தடுக்க முயன்றுள்ளார். இருவரின் கூச்சல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ஆதிக்க சாதி மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் இருந்த இருவரையும், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்த பிறகு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பள்ளியிலேயே தொடங்கிய சாதிய வன்கொடுமை

போராடும் மக்கள்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

போலீசார் வரத் தாமதம் ஆனதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை மாதம் இறுதியில் இருந்து பிரபு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலும், பிறகு காட்டிலும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

“நான் இதைப் பார்த்து, அவனை பள்ளிக்கூடம் போகச் சொல்லி சத்தம் போட்டேன். அவன், முதலில் எதுவும் சொல்லவில்லை. ரொம்ப அழுத்திக் கேட்ட பிறகு அழுதுகொண்டே, தன்னை தினமும் பள்ளியில் ஆதிக்க சாதி மாணவர்கள் இழிவாகப் பேசுவதாகவும், தான் கொண்டுபோகும் பொருட்களை பிடுங்கிக் கொள்வதாகவும் கூறினான்.

உங்க அம்மா எங்க வீடுகள்ல வேலை செஞ்சுதானே உன்னை படிக்க வைக்கிறா, அப்போ நீ எங்களுக்கு வேலை செஞ்சா என்ன ஆகிடும்’ என்றெல்லாம் ஆதிக்க சாதி மாணவர்கள் கேட்டதாகக் கூறினான்," என்று கூறுகிறார் அம்பேத்கர் தொடக்கப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக உள்ள பிரபுவின் தாய்.

அதைக் கேட்டுத் தானும் செய்வதறியாது விட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். பின்னர் மகன் படிக்கும் பள்ளியில் இருந்தே பள்ளிக்கு வராதது குறித்துக் கேட்டு அழைத்துள்ளனர்.

"ஆகஸ்ட் 9 ஆம் தேதி நானும் என் மகனை அழைத்துக்கொண்டு, பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமையாசிரியரிடம் நடந்ததையெல்லாம் கூறினோம். அவர்களும் அந்த மாணவர்களை அழைத்து எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கி வைத்துவிட்டு, அனுப்பிவிட்டனர்,” என நடந்தது குறித்து பிபிசியிடம் பிரபுவின் தாய் விவரித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்ததை விவரித்த அவர், அன்று மாலையே பிரபுவை ஆதிக்க சாதி மாணவர்கள் மிரட்டியதாகக் கூறினார்.

அந்த கடிதம் எழுதி வாங்கியதில்தான் அவர்களுக்கு ஏதோ பிரச்னைபோல. எங்களைப் பற்றியே நீ புகார் கொடுக்கிறாயா, உன்னை என்ன செய்கிறோம் பார் என அன்றைக்கு மாலையே மிரட்டியுள்ளனர்.

ஆனால், நாங்களும் இப்படி வீட்டிற்கு வந்து வெட்டும் அளவுக்குப் பெரிய பிரச்னை ஆகும் என்று நினைக்கவில்லை,” என்றார் பிரபுவின் அம்மா.

 

பாதிக்கப்பட்ட மாணவர் என்ன சொல்கிறார்?

அரிவாள் வெட்டுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்

பட மூலாதாரம்,HANDOUT

வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் பிபிசியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது, தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், தனது பணத்தையும் ஆதிக்க சாதி மாணவர்கள் பிடுங்கிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

“நான் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். காசில்லாமல் நான் இருக்கும்போது, கடைக்கு அனுப்பி, மிட்டாய், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரச் சொல்வார்கள்.

தேர்வின்போது அவர்கள் என்னைப் பார்த்து எழுதுவதற்காக விடைத்தாளை காண்பிக்கச் சொல்வார்கள். நான் ஆசிரியர்களுக்குப் பயந்து காண்பிக்காவிட்டால், வெளியே வந்து என்னை அடிப்பார்கள்,” என்கிறார் பிரபு.

அவர்களின் துன்புறுத்தல் எல்லை மீறிச் சென்றதால்தான் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் கூறினார். மேலும், “இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் நான் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தேன். நான் எதற்கு பயந்தேனோ அது இப்போது நடந்துவிட்டது,” என்று கூறினார்.

 

பள்ளிகளில் தொடரும் தீண்டாமை

பள்ளியில் தீண்டாமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நாங்குநேரியில் உள்ள பெருத்தெருவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி குடும்பத்தினருக்கும் இதே நிலைதான் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய்மணி

நாங்குநேரியில் படித்தால், அங்குள்ள ஆதிக்க சாதியினரின் இடையூறு இருக்கும் என்றுதான் பக்கத்து ஊருக்கு தன் குழந்தைகளைப் படிக்க அனுப்பியதாகச் சொல்கிறார் பிரபுவின் தாய்.

நாங்குநேரியில் உள்ள பள்ளியிலேயே 12ஆம் வகுப்பு வரை உள்ளது. ஆனால், இங்கு இருந்தால், நாங்கள் இன்னார்தான், இந்தத் தெருவில் இருந்துதான் வருகிறோம் என்று தெரிந்துகொண்டு, எங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவர். அதனால்தான் நான் பக்கத்து ஊருக்கு என் குழந்தைகளைப் படிக்க அனுப்பினேன்,” என்றார்.

இதற்கு முன் ஒரு முறையேனும் சொந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் தன் குழந்தையைச் சேர்த்துள்ளாரா எனக் கேட்டபோது, “அதெல்லாம் முன்னாடி இங்க இருக்கின்ற பள்ளியில்தான் சேர்த்தேன். நாங்கள் யார், எந்த தெரு உள்ளிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு என் குழந்தைகளை துன்புறுத்தினர் என்பது அங்கு சேர்த்த பிறகுதானே தெரிந்தது. என் மகள் இந்தப் பள்ளிக்கே செல்ல மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

அதற்குப் பிறகுதான் வள்ளியூரில் இருக்கும் பள்ளியில் சேர்த்தேன். இப்போது, இந்த ஊர் ஆதிக்க சாதிப் பசங்க அங்கேயும் சென்றுவிட்டதால்தான், இப்போது இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அதையே உறுதிப்படுத்துகிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் தளவாய்மணி.

இவர்களுக்கு மட்டும் இல்லை. இந்த நாங்குநேரில் உள்ள பெருத்தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பட்டியல் சாதி குடும்பத்தினருக்கும் இதே நிலைதான்.

நாங்கள் இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கிறோம். ஆதிக்க சாதியினர் தொடர்ந்து எங்களை துன்புறுத்துவதாலும், எங்கள் குழந்தைகளை பள்ளியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்குவதாலும், நாங்கள் அருகில் உள்ள வள்ளியூர், களக்காடு, காரங்காடு, இளங்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம். ஆனால், இப்போது அங்கும் படிக்க முடியாத சூழலை ஆதிக்க சாதியினர் உருவாக்கி வருகின்றனர்,” என்றார்.

 

ஆதிக்க சாதியினர் வன்முறையை கையில் எடுப்பது ஏன்?

சாதிய படிநிலைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சாதிய படிநிலைகளாகக் கருத்தப்படுபவை அனைத்தும் தகர்க்கப்படுவதால், ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆதிக்க சாதியினர் வன்முறையை கையிலேடுப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் பாரதி தம்பி

பள்ளிகளில் சாதிப் பிரச்னை குறித்து பிபிசியிடம் பேசிய கற்க கசடற நூல் ஆசிரியரும் எழுத்தாளருமான பாரதி தம்பி, அன்றாடம் நடக்கும் சாதிப் பிரச்னைகளை இயல்பாகக் கடந்து செல்வதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்.

அன்றாடம் நடக்கும் சாதியக் கொடுமைகளையும், தீண்டாமைகளையும் நாம் இயல்பான ஒன்றாகக் கருதி, அதை இயல்பாக்கி, கடந்து செல்வதாலேயே, இதுபோன்ற பெரிய அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

மாறாக, பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான காரணங்களாக இருக்கும் அந்தத் தருணங்களிலேயே சரி செய்யவேண்டும். அப்போது, இதுபோன்ற சம்பவம் நடத்திருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளில் சாதி என்பதைவிட, மக்கள் வாழும் ஊர் தெருக்களில் சாதி இருக்கின்றது. அங்கிருந்து வரும் மக்கள்தான் பள்ளியிலும் இருக்கிறார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக சமூக மாற்றம் நடந்தால் மட்டுமே பள்ளிகளிலும் சாதியை ஒழிக்க முடியும்,” என்றார்.

மேலும், அவர், “மனிதர்கள் இரட்டை நிலைப்பாட்டுடனே வாழ்கின்றனர். அந்த இரட்டை நிலைப்பாடு ஆரம்பிக்கும் இடம் பள்ளிக்கூடம்தான். பள்ளியில் ஓர் ஆதிக்க சாதி மாணவரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவரும் ஒன்றாகப் பழக முடிகிறது, நண்பனாகப் பார்க்க முடிகிறது.

அவர்கள் இருவரும் பள்ளியை விட்டு வெளியே சென்று, அவர்களின் கிராமத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் அதே நண்பர்களாக இருக்க முடிவதில்லை. இந்த இரட்டை நிலைப்பாடுதான், அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்கிறது,” என்றார்.

பட்டியல் சாதியினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்துப் பேசிய பாரதி தம்பி கிராமங்களில் தற்போது சாதிய படிநிலைகளாக கருத்தப்படும் அனைத்தும் தகர்க்கப்படுவதால், ஆதிக்க சாதியினர் வன்முறையை கையிலேடுப்பதாகக் கூறினார்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், அவருக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுகிறார். அனைத்து வகையிலும் பட்டியல் சாதியினர் ஆதிக்க சாதியினருக்கு இணையாக வரும்போது, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஆதிக்க சாதியினர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் வன்முறை,” என்றார்.

 

ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

மாணவர் வீட்டு வாசல்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

பட்டியல் சாதி மாணவரைத் தாக்கிய ஆறு சிறார்களைப் பிடித்து சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் தரப்பில் பேச பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, யாரும் பேச முன்வரவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் ஆறு பேரை சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசுவிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட மாணவர், மாற்றுப் பள்ளியில் சேர விரும்பினால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் உள்ள இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தக்கோரி, தலைமை ஆசிரியர்களுடன் நடக்கும் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/clm17y9dgedo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்” - நாங்குநேரி சாதிய தாக்குதல் குறித்து இயக்குநர் ப.ரஞ்சித் ட்வீட்!

13 AUG, 2023 | 11:16 AM
image
 

அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து இயக்குநர் ப.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் ப.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!” என்று ப.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/162246

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்குநேரி: சாதி கொடுமையால் ஊர்களை காலி செய்யும் பட்டியல் சாதியினர் - மாணவருக்கு என்ன நடந்தது?

நாங்குநேரி சாதிய கொடுமை
 
படக்குறிப்பு,

தாக்கப்பட்ட மாணவரின் வீடு.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சு.மகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 12 ஆகஸ்ட் 2023
    புதுப்பிக்கப்பட்டது 12 ஆகஸ்ட் 2023

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவர் ஜாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரையும் அவரது தங்கையையும் வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் 6 சிறார்களை போலீசார் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முழு விபரம் தெரிந்து கொள்ள பி.பி.சி., நியூஸ் தமிழ் வெட்டப்பட்ட பட்டியல் சாதி சிறுவர் படித்த பள்ளி அமைந்துள்ள வள்ளியூர் மற்றும் அவரது வீடு அமைந்துள்ள நாங்குநேரி பெருந்தெரு ஆகிய இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரங்களை இங்கே பார்ப்போம்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வள்ளியூர். சிறிய வியாபார நகரமான வள்ளியூரில் உள்ள மிகப் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் தான் வெட்டுப்பட்ட பட்டியல் சாதி மாணவரும், அவரை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிக்க சாதி மாணவர்களும் படித்து வருகின்றனர்.

சராசரியாக படிக்கும் அமைதியான மாணவர்

8ம் வகுப்பு வரை சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த பட்டியல் சாதி மாணவரான பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9ம் வகுப்பில் வள்ளியூர் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவரது தங்கை 6 ஆம் வகுப்பு முதல் இப்பள்ளியில் தான் படித்து வருகிறார்.

அமைதியான குண நலனுள்ள பிரபு சராசரியாக படிப்பார், என்கிறார் பிரபுவுக்கு பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்.

பிரபுவை வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர்களில் இரண்டு பேர் அவர் பயிலும் அதே பன்னிரண்டாம் வகுப்பிலும் மற்றொரு மாணவர் பதினொன்றாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

பிரபு குறித்து பி.பி.சி., நியூஸ் தமிழிடம் பேசிய பள்ளி தலைமை ஆசிரியை, ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் பிரபு பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து அவரது வகுப்பாசிரியர் அவரது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜாதி சான்றிதழ் எடுக்க சென்றுவிட்டதால் அவர் பள்ளிக்கு வரவில்லை என்று அவரது அம்மா முதலில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அடுத்த நாட்களும் அவர் பள்ளிக்கு வராததால் மீண்டும் வகுப்பாசிரியர் அவரது அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டுள்ளார். அதற்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சென்றுவிட்டதாகவும் வேறு பல காரணங்களையும் கூறி சமாளித்துள்ளார்.

பள்ளிக்கு வரும் வழியில் ஆதிக்க சாதி மாணவர்களால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பிரபு அவரது அம்மாவிடம் முதலில் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று அம்மா கேட்டதற்கு, தனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளார். இதனால் தான் அவரது அம்மா எங்களிடம் ஒன்றுமில்லா காரணங்களை கூறி சமாளித்து வந்துள்ளார்.

 
நாங்குநேரி சாதிய கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதிய கொடுமையால் படிப்பை கைவிட முடிவு செய்த மாணவர்

இதற்கிடையே குடும்ப வறுமையை போக்க சென்னைக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாவிடம் தெரிவித்துள்ளார் பிரபு.

இதையடுத்து பிரபு வெட்டப்படுவதற்கு முந்தைய நாள் 8 ஆம் தேதி சென்னைக்கு செல்ல ரயில் நிலையம் சென்று பயணச் சீட்டும் எடுத்துள்ளார்.

அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் வைத்து பிரபுவை பார்த்த அவரது சித்தியின் மகன், படிப்பதற்கு பயந்து தான் பிரபு சென்னை செல்ல முயல்வதாக எண்ணி அவரை சமாதானபடுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது கூட ஆதிக்க சாதி மாணவர்களால் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவர் யாரிடமும் வாய்திறக்கவில்லை.

தொடர்ந்து பிரபுவின் சித்தி சுமதி, அவரிடம் ஏன் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறுமாறு கண்டிப்பாக கேட்ட பிறகு தான் அவர் நடந்தவற்றை கூறியுள்ளார்.

உடனே அவரது அம்மா தொலைபேசி மூலம் எங்களிடம் அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து விவரித்தார். இதையடுத்து பிரபுவையும் அவரது அம்மாவையும் அடுத்த நாள் பள்ளிக்கு வர கூறினோம். ஆகஸ்ட் 9ம் தேதி இருவரும் பள்ளிக்கு வந்தனர்.

அவருக்கு என்ன என்ன கொடுமைகள் நடந்ததோ அது குறித்து எழுதி தர கேட்டேன். அவர் எழுதி தந்ததை படித்து பார்த்து திகைத்தே விட்டோம், என்றார் தலைமை ஆசிரியை.

"ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளையும் சுமக்க நிர்பந்தம்"

பிரபு அவரது ஊரிலிருந்து அரசு பேருந்தில் வள்ளியூர் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வருவது வழக்கம். அவர் வரும் போது ஊரிலிருந்து ஆதிக்க சாதி மாணவர்களும் உடன் பேருந்தில் வருவார்களாம். அவர்களுக்கும் சேர்த்து இவர் தான் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்களாம்.

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரும் வரை ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளை பிரபுவிடம் கொடுத்து சுமக்க சொல்லிவிடுவார்களாம். அவர் தான் அதையும் சுமந்து கொண்டு பள்ளிக்கு நடந்து வந்துள்ளார்.

பள்ளிக்கு வரும் வழியில் அவரிடம் ஏவல் பணிகளை செய்ய சொல்வது, வீட்டுப்பாடங்களை எழுத சொல்வது என அவரை ஆதிக்க சாதி மாணவர்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.

பிரபுவின் அம்மாவை ஏளனமாக பேசுவதுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் அந்த மாணவர்கள். அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அவர் யாரிடமாவது கூறினால் அவரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ள்ளார்.

பிரபு எழுதி தந்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அவரை வகுப்புக்கு செல்ல கூறினேன். அன்று அந்த ஆதிக்க சாதி மாணவர்களின் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா எனபதால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

அடுத்த நாள் அவர்கள் பள்ளிக்கு வந்ததும் அவர்களது பெற்றோரை வரவழைத்து விஷயத்தை கூறலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குள் அந்த ஆதிக்க ஜாதி மாணவர்களுக்கு தகவல் சென்றுள்ளது. அன்று மாலையே பிரபுவை அழைத்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அன்று இரவே அவர்கள் பிரபுவை வெட்டியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றார் தலைமை ஆசிரியை.

 
நாங்குநேரி சாதிய கொடுமை

பள்ளி வளாகத்திலேயே சாதிய பிரச்சனைகள்

எங்கள் பள்ளியில் பல ஜாதி மாணவர்கள் படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளி காலை வழிபாட்டின் போது போதனைகளை வழங்குகிறோம், வெளியில் இருந்து ஆற்றுப்படுத்துபவர்களை (counsellor) வரவழைத்தும், காவல்துறையினர் மூலமும் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் (Counselling) வழங்குகிறோம். விளையாட்டு மைதானங்களிலும் மாணவர்களை பின்தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

ஆன போதும், தங்கள் ஜாதி தான் உயர்வானது என்று பள்ளி கழிப்பறைகளில் எழுதி வைப்பது, பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்கும் போது விசில் அடிப்பது, வகுப்பறையில் உள்ள பென்ச் டெஸ்குகளில் ஜாதி பெயரை எழுதி வைப்பது என மாணவர்களால் தொடர்ந்து பள்ளியில் ஜாதி ரீதியிலான பிரச்சனைதான்.

சில நேரங்களில் காவல்துறையினரை பள்ளிக்கு வரவழைத்து சில பிரச்சனைகளில் மாணவர்களை எச்சரிக்கை செய்ய சொல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது, என்றார் மேல் வகுப்புகளுக்கு பாடம் கற்றுகொடுக்கும் அந்த பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர்.

பிரபுவை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீது பள்ளியில் ஏற்கனவே பல புகார்கள் உண்டு. அவர்களுக்கு டி.சி., (மாற்று சான்றிதழ்) வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிவிடலாம் என ஆசிரியர்களிடமிருந்து பல முறை கோரிக்கை எழுந்தது.

கல்வியாண்டு முடிய இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது. எப்படியாவது சமாளித்து விட்டால் படிப்பை முடித்து வெளியே சென்றுவிடுவார்கள் என்று தான் நாங்களும் பொறுமையாக இருந்தோம். ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது, என்றார் மற்றோரு ஆசிரியர்.

நாங்குநேரி சாதிய கொடுமை

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

போலீசார் வரத் தாமதம் ஆனதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழுவப்படாத ரத்த கறை

வெட்டப்பட்ட போது வீடு முழுவதும் வழிந்த பட்டியல் சாதி மாணவர் பிரபு மற்றும் அவரது தங்கையின் ரத்தம் இன்னும் கழுவப்படாமல் அவர்கள் வீட்டு முற்றம் மற்றும் வீட்டின் உள் அறைகளில் அப்படியே உறைந்து கிடக்கிறது.

அரசியல் கட்சி தலைவர்களும், சாதிய அமைப்பு நிர்வாகிகளும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட அந்த இரு அறை கொண்ட பிரபுவின் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

நாங்குநேரி பெருந்தெருவின் நுழைவு பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து காவல்துறையினர் ஊருக்குள் நுழைபவர்களையும் வெளியே செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊருக்குள்ளேயே புகுந்து இப்படி வெட்டிட்டானுகளே என்று பெண்கள் ஒருவித மிரட்சியுடன் அங்கங்கே கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

பி.பி.சி., நியுஸ் தமிழ் சார்பாக கள நிலவரம் அறிய நாம் நாங்குநேரி பெருந்தெருவுக்கு சென்ற போது அங்கே கண்ட காட்சிகள் தான் இவை.

சுமார் 200 வீடுகள் உள்ள பெருந்தெருவில் வசிக்கும் பட்டியல் சாதியின மக்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு செல்பவர்களாக தான் உள்ளனர்.

சம்பவதன்று இரவு சுமார் 10.30 -11 மணி இருக்கும். ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றுவிட்டனர். பிரபுவின் வீட்டிலிருந்து திடீரென கேட்ட அழுகுரலை கேட்டு தான் நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். பிரபுவையும் அவரது தங்கையையும் வெட்டி விட்டு அவர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர், என்றார் பிரபுவின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரை பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான துரை பாண்டியனுக்கு வெட்டுகாயமடைந்த பிரபு ஒருவிதத்தில் பேரன் முறை.

எங்கள் ஊரில் சங்கர ரெட்டியார் அரசு மேல் நிலை பள்ளி உள்ளது. ஆனால் அங்கு எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்களை அந்த பள்ளியில் சேர்ப்பதில்லை, என்கிறார் நாங்குநேரி பெருந்தெரு ஊர்தலைவர் அன்பழகன்.

அங்கு படிக்கும் ஆதிக்க சாதி மாணவர்களால் தொடர்ந்து எங்கள் பிள்ளைகள் வன்கொடுமைகளை சந்தித்து வந்தனர். எங்கள் பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவதும் இல்லை. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பிள்ளைகளை அருகில் உள்ள களக்காடு மற்றும் வள்ளியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகிறோம் என்றார் அவர்.

 
நாங்குநேரி சாதிய கொடுமை

ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

முத்துநாயகன் குளம், மறவகுறிச்சி காலனி, தென்னிமலை காலனி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் பட்டியல் சாதி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தனர். இவை அனைத்தும் எங்கள் ஊரின் அருகில் இருந்த கிராமங்கள்.

கடந்த 20 முப்பது வருடங்களில் ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகளால் இன்று இந்த ஊர்கள் காலியாகிவிட்டது. அங்கு வசித்த பட்டியல் சாதி மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

தற்போது நாங்குநேரி நெடுந்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களையும் காலி செய்ய வைக்க வேண்டும் என அவர்கள் எண்ணுகிறார்களோ என்னவோ, என்கிறார் துரை பாண்டியன்.

இங்க படிச்சா தான் எங்க பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லைனு களக்காடு, வள்ளியூர்னு கொண்டு சேர்த்தோம். இப்ப அங்கேயும் பிரச்சனைகள் வர ஆரம்பிச்சாச்சு. பிரபு வெட்டப்பட்ட பிறகு எங்க பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லவே பயப்படுகின்றனர், என்றார் அன்பழகன்.

இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஊரில் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும், காவல் துறை கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஊர் மக்கள் வைக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cy9qx7ev4qxo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதீய கட்சிகளையும்,சாதி சம்பந்தமாக திரைப்படம் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்.
இவைகள் தான்  சாதீயங்களை தினசரி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சாதீய கட்சிகளையும்,சாதி சம்பந்தமாக திரைப்படம் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்.
இவைகள் தான்  சாதீயங்களை தினசரி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆம்

இவற்றை ஊதிப்பெருப்பிப்பது தற்போது இவர்கள் தான். இதில் ரஞ்சித்திற்கும் பங்குண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.