Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உங்கள் முகப் புத்தக இணைப்பினூடாக வாசித்தேன், இங்கேயும் அவ்வெழுத்துப் பொக்கிசத்தைப் பகிரலாமே?

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைந்து வரும் ஏனம்
            -----சுப.சோமசுந்தரம்
           
         முதலில் ஏனம் என்பது பன்றியைக் குறிக்கும் சொல் என்ற விளக்கம் தந்து ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தேவைப்படும் ஒன்று. சமீபத்தில் வெளிவந்த 'மாமன்னன்' திரைப்படம் பலவகையில் பரபரப்பானது; சாதனையும் படைத்தது. படத்தில் குறிக்கப்பட்ட விலங்கான பன்றி ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடு என்றே கொள்ளலாம். படத்தில் நன்கு படித்தவர்களாக வரும் நாயகனும் நாயகியும் பன்றியைப் பேணுவது புதுமை காரணமாக வியப்பை ஏற்படுத்தினாலும், சமூக மாற்றத்துக்கான வித்து என்ற வகையில் மகிழ்வைத் தருவது. படத்தின் நாயகன் சமூக அளவில் பன்றி வளர்த்துப் பழகியவன்தான். நாயகி அவ்வாறு இல்லாத போதும் யாதொரு மனத்தடையும் இல்லாமல் அவள் பன்றியைக் கொஞ்சுவது, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாயகனிடம் காதல் கொள்வதில் அவளுக்கு யாதொரு மனத்தடையும் இல்லாததன் குறியீடு. மாறிவரும் சமூக அமைப்பிற்குக் கட்டியம் கூறுவது அல்லது மாற வேண்டிய சமூகத்திற்கான அறைகூவலாய் ஒலிப்பது.

         இந்த சாதி பேதங்கள் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததற்கான குறிப்பு எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை. சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக அடுக்கலாம். சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் இவையெல்லாம் தமிழ் மன்னர்களை மூளைச்சலவை செய்து சமூகத்தில் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 'வர்ணத்திற்கு ஒரு நீதி' சட்டம் நடைமுறைப் பட்டதை சோழர்காலக் (குறிப்பாக இராசராச சோழன் காலத்தவை) கல்வெட்டுகள் குறிக்கின்றன. வேதாந்தத்திற்கு எதிர்வினையாகத் தோன்றியவையே பௌத்தம், சமணம், சைவ சித்தாந்தம் முதலியவை என்பதே பெரும்பான்மையான சான்றோர்தம் கருத்து. இவற்றில் சைவ சமயத்தார் சிலர் இத்தோற்றுவாய் பற்றிய புரிதலின்றி வேதாகமத்தில் உள்ள சாத்திர சம்பிரதாயங்களுக்கு அடிமையாகி சனாதன வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிப்பது சமய அரசியலின் அவலம். இருப்பினும் அக்காலத்தே சைவ சமயக் குரவர் பலர் சமூகத்தில் புகுத்தப்பட்ட வருணாசிரமத்திற்கு எதிரான கலகக் குரல் எழுப்பியது வரலாற்றுச் சிறப்பு.
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?"
           (நாவுக்கரசர் தேவாரம்; திருக்குறுந்தொகை; பாடல் 1674)
என்று சனாதனவாதிகளை வினவுகிறார் திருநாவுக்கரசர்.
"சாதி குலம் பிறப்பு என்னும்
சுழிப் பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை....."
               (திருவாசகம்; கண்ட பத்து பாடல் 5)
என்று "சாதி குலம் பிறப்பென்னும் சுழலில் சிக்கித் தடுமாறிய ஆதரவில்லா நாய்" என்று அடக்கத்துடன் தம்மையே தாழ்த்திக் கொள்கிறார் மாணிக்கவாசகர்.

            'மாமன்னன்' திரைப்படத்தில் பன்றி சாதியக் கொடுமையின் குறியீடானதைப் போல், 'சாத்திரம் பல பேசும் சழக்கர்'களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது சாதிய வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதின் குறியீடாகக் கொள்ளலாம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் பண்பாட்டு வெளிப்பாடு. நாவுக்கரசர் தேவாரத்தின் திருவையாறு பதிகத்தில் முதற்பாடலில் சிவ-சக்தியைப் பாடிக்கொண்டே சிவனடியார்களுடன் திருவையாறு அடைகின்றார். அடைந்தவுடன் அவர் முதலில் காண்பது பிடியுடன் (பெண் யானையுடன்) களிறு (ஆண் யானை) இணையாய் எதிர்வரும் காட்சி. அந்த இணைப்பில் அவர் அம்மையப்பனைக் காண்கிறார்.

             அப்பாடலிலும் தொடர்ந்து அப்பதிகத்தில் வரும் ஏனைய பாடல்களிலும் 'கண்டறியாதன கண்டேன்' என்று திருநாவுக்கரசர் நிறைவாகக் குறிப்பது தத்துவார்த்தமான ஒன்றாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான செய்தியைத் தருவதாய் அமைகிறது. இங்கு நமது கருதுகோளுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பினும், அப்பாடலைக் கையிலெடுத்த படியால் எனக்கு அவ்வரி அளித்த செய்தியைப் பதிவு செய்துவிட்டுக் கடந்து செல்வது இதனை வாசிப்போர் சிலருக்குப் பயனுள்ளதாய் அமையலாம். இப்பூவுலகின் இயக்கத்தில் இயற்கையின் ஒரு தலையாய நோக்கமாவது இனப்பெருக்கம். பெருகிய இனம் தனக்கென அமைத்துக் கொண்ட சமூக வாழ்வில் இனப்பெருக்கம் எனும் இயற்கையின் நோக்கத்தை அம்மையப்பன் எனும் வடிவிலேயே நிறைவேற்றிக் கொள்கிறது. எனவே நாவுக்கரசர் அம்மையப்பன் வடிவை ஒவ்வொரு
உயிரினத்திடமும் காண்கிறார். சமணம் போன்று சில சமயங்களில் இல்லற வாழ்விலிருந்து பயணித்துத் துறவறத்தில் வாழ்வு நிறைவுறக் காணலாம். சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் துறவற நிலையிலிருந்து மாறாமல் நின்று, அறம் சார்ந்த இல்லற மேன்மையைக் குறிக்க எண்ணினாரோ என்னவோ ! பறவையினமும் விலங்கினமும் தத்தம் இணையோடு எதிர்வந்து அவருக்கு இப்பொருள் உணர்த்துதலையே 'கண்டறியாதன கண்டேன்' எனக் கூறுவதாய்க் கொள்ளலாம்.

           திருவையாறு பதிகத்தின் முதற்பாடலில் யானையைக் கண்டவர் அடுத்து வரும் பாடல்களில் பேடையொடு சேவலையும், குயிலையும், மயிலையும், அன்றிலையும், நாரையையும், பைங்கிளியையும், பன்றியையும், ஏறையும் காண்கிறார். முன்னர் குறிப்பிட்டதைப் போல் பன்றியை நாவுக்கரசர் வேறுபாடற்ற மனநிலையில் அணுகுவதை 'மாமன்னன்' திரைப்படப் பின்னணியில் குறிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாதலால், திருவையாறு பதிகத்தின் திறப்புக் களமான யானை வரும் பாடலையும் ஏழாவது பாடலான ஏனம் (பன்றி) வரும் பாடலையும் ரசித்துப் பார்ப்போமே !
"மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்து ஏந்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதன கண்டேன்"
         (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1)
பொருள் விளக்கம் :
மாதர்பிறை - அழகிய பிறையினை; 
கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை;
மலையான் மகளொடும் பாடி -  மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி;
போதொடு - மலர்களோடு; 
நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி;
புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்; 
யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது -  திருவையாறு அடைகின்றபோது;
காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு;
களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்; 
கண்டேன் அவர் திருப்பாதம் -  அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; 
கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டறியாத பொருள் விளக்கம் கண்டேன்.

         இனி இக்கட்டுரைக்கான மெய்ப்பொருள் ஏந்தி இசைந்து வரும் ஏனம் பற்றிய பாடல் :
"கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் 
அடியினை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது 
இடிகுர லன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் 
கண்டறி யாதன கண்டேன்"
          (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 7)
பொருள் விளக்கம் :
கடிமதிக் கண்ணியினானை -  யாவரும் விரும்பும் சிறப்புடைய பிறையினைத் தலையில் அணியாகச் சூடியவனை;
காரிகையாளோடும் பாடி -  அழகுடைய உமையாளோடு துதித்துப் பாடி; 
வடிவோடு வண்ணம் இரண்டும் - இரண்டும் ஒன்றான வடிவோடு விளங்கும் அம்மையப்பனை; 
வாய் வேண்டுவன சொல்லி வாழ்வேன் - விரும்பியவாறெல்லாம் வாயினால் வாழ்த்திப் பாடி வாழ்வேன்; 
அடியினை ஆர்க்கும் கழலான் - தனது திருவடியால் காக்கும் பாதம் உடையோனின்; 
ஐயாறு அடைகின்ற போது - திருவையாறு அடைகின்ற போது; இடிகுரல் அன்னதோர் ஏனம் - உரத்த குரலெழுப்பும் பன்றி;
இசைந்து வருவன கண்டேன் -
துணையுடன் வருவது கண்டேன்;
கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; 
கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டு அறியாத பொருள் விளக்கம் கண்டேன்.

          சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சாடியோர் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்ற சைவ சமயக் குரவர். சாதியத்தைச் சாடிய 'மாமன்னன்' திரைப்படம்  சாதியக் குறியீடாகப் பன்றியைத் தெளிவாகக்  கையிலெடுத்தது. சாதியச் சழக்கர்களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை அம்மையப்பனாகக்
கையாண்டது தற்செயல் நிகழ்வோ என்னவோ !

                            இது தொடர்பில் எனது பதிவு இத்துடன் முற்றுப்பெற்ற நிலையில் என்னுயிர்த் தோழர் பேரா.ந.கிருஷ்ணன் அவர்கள் மாணிக்கவாசகரும் திருவாசகம் திருவார்த்தை பதிகம் ஆறாவது பாடலில், சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலை பாராட்டியதைச் சுட்டினார். சைவ சமயத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்திற்கான மேலும் ஒரு சான்றினை எடுத்தளித்த பேரா.கிருஷ்ணனின் சான்றாண்மை - குறிப்பாக, சைவ இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் அவருக்கான ஆழ்ந்த புலமை -  நமக்கான பேறு. அத்துடன் பாடலையும் உரையையும் எனக்கு அனுப்பித் தந்தார். மேலும், அதனை எனது இப்பதிவிலேயே இணைப்பது வாசிப்போருக்கு நலம் பயக்கும் எனக் குறிப்பிட்டார். எனவே அவர் சார்பாக நான் மணிவாசகரின் பாடலையும் அவ்வுரையினை எனது பாணியிலும் இத்துடன் இணைக்கிறேன் :

"வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ
ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறி வாரெம்பி ரானாவாரே"

பொருள் விளக்கம் :
திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய; 
செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய; 
எந்தை - என் தந்தையாகிய;
பெருந்துறை ஆதி -  திருப்பெருந்துறை முதல்வன்;
ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்; 
தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல; 
எம்பிரான் தான் வேடுவனாய் -  என் பிரானாகிய சிவன் தான் வேடனாக; 
கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர; 
இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்; 
ஏவுண்ட பன்றிக்கு - (அம்பு அல்லது வேல்)ஏவப்பட்டதால் இறந்த பன்றிக்கு; 
இரங்கி - கருணை மேலிட; ஈசன் அன்று - இறைவன் (சிவனார்) அன்று; 
கேவலம் - தானே; 
கேழலாய் - பன்றியாய் ஆகி;
பால் கொடுத்த கிடப்பு அறிவார் - (இறந்த பன்றியின் குட்டிகளுக்கு) பால் கொடுத்த திருவுளத்தை உணர்ந்தவர்கள்; 
எம் பிரான் ஆவாரே -  (அவர்களும் வணங்குவதற்குரிய) எம் தலைவர் ஆவாரே.
               இறுதியில் அத்தகைய அடியார்க்கும் தாம் அடியார் என்ற மணிவாசகர்தம் கூற்று உணர்ந்து நோக்கத்தக்கது.
               பன்றிக்குத் தாயும் ஆனார் பெருந்துறை இறைவன். எனவேதான் மாதொருபாகனான தம் சிவபெருமானை, "தாயாய் முலையைத் தருவானே" என திருவாசகம் ஆனந்தமாலை பதிகம் ஐந்தாம் பாடலில் குறிப்பிட்டு அவனருள் வேண்டி நிற்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்திலும் கதாநாயகனின் தாய், தாயை இழந்த பன்றிக் குட்டிக்குப் புட்டிப் பால் தந்து பேணுவதான காட்சியமைப்பு மேற்குறிப்பிட்ட திருவாசகக் காட்சியைக் கண் முன் நிறுத்துகிறது. திரையில் வரும் அத்தாய் உமை என்றால், படத்தில் தோன்றும் மாமன்னன் அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலாய்க் கொள்ளலாமே ! சமூக நீதியை இறைவழிக் காணும் ரசிகன் இப்படித்தான் சிந்திப்பானோ, என்னவோ !
            
           இந்த ஒப்பீடு ரசனைக்குரியதாகவே தோன்றுகிறது. வைணவத்தில் திருமாலின் வராக அவதாரத்தை இந்த சமூகப் பார்வையில் திருப்புவது மிகைப்படுத்துதல் ஆகிவிடுமோ ! சரி விடுங்கள், வேறு ஒரு சூழலில் அந்தப் பன்றியை ஆட்கொள்வோம்; அப்பன்றியினால் ஆட்கொள்ளப் படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை 👍 சுப.சோமசுந்தரம் அவர்களே.
நீங்கள் கணிதப் பேராசிரியராக இருந்து கொண்டு, 
தமிழிலும் சிறப்பான ஆளுமை உங்களிடம் உள்ளதை எண்ணி வியந்தேன்.  🙂

  • கருத்துக்கள உறவுகள்

திரு. சுப.சோமசுந்தரம் வர்களே! ஒரு சிறு காளாக்காயைப் போடும் அளவிற்குக் கூட இல்லாத என் அறிவுச் சிறு பையில், பெரும் பலாப்பழத்தையே நீங்கள் போடத்தந்தால் நான் என்செய்வேன்.??😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

திரு. சுப.சோமசுந்தரம் வர்களே! ஒரு சிறு காளாக்காயைப் போடும் அளவிற்குக் கூட இல்லாத என் அறிவுச் சிறு பையில், பெரும் பலாப்பழத்தையே நீங்கள் போடத்தந்தால் நான் என்செய்வேன்.??😩

தங்களுடைய பின்னூட்டம் 'அமரருள் உய்க்கும் அடக்கம்'. ஏதோ சம்பிரதாயத்துக்காக நான் இதனைச் சொல்லவில்லை. உங்கள் மொழி நடையை வைத்தே சொல்கிறேன். நன்றி.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

வைணவத்தில் திருமாலின் வராக அவதாரத்தை இந்த சமூகப் பார்வையில் திருப்புவது மிகைப்படுத்துதல் ஆகிவிடுமோ ! சரி விடுங்கள், வேறு ஒரு சூழலில் அந்தப் பன்றியை ஆட்கொள்வோம்; அப்பன்றியினால் ஆட்கொள்ளப் படுவோம்.

யேர்மனியில், பன்றி சேமிப்பின் ஒரு அடையாளம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியில், பன்றி சேமிப்பின் ஒரு அடையாளம்

pif-pig.gif  images?q=tbn:ANd9GcTJ21sDXWsvQZCb6CjtPuc

wurstteller.png

ஜேர்மன்காரரின்  காலை, மதியம், மாலை நேர   உணவு நேரத்தில்... 
பன்றி இறைச்சி முக்கிய இடத்தை பிடிக்கும்.  🙂

முரண்நகை என்னவென்றால்... கோவம் வந்தாலும், 
பன்றியையும், நாயையும்  சேர்த்து Schweinehund  என்று  திட்டுவார்கள். 😂
ஆனால், அவர்கள் மிக விரும்பும் விலங்குகளில்.. பன்றியும், நாயும் முதல் இடத்தில் இருக்கும்.  🤣

பிற் குறிப்பு: திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே... 
தங்களுக்கு இந்தப் படங்களைப் பார்க்க சங்கடமாக இருந்தால்... 
தயவு செய்து சொல்லுங்கள், உடனே நீக்கி விடுகின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தங்களுடைய பின்னூட்டம் 'அமரருள் உய்க்கும் அடக்கம்'. ஏதோ சம்பிரதாயத்துக்காக நான் இதனைச் சொல்லவில்லை. உங்கள் மொழி நடையை வைத்தே சொல்கிறேன். நன்றி.

மோதிரக் கையால் குட்டுவாங்கும் பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. அந்த ஒருசிலரில் நானும் ஒருவன்.😁🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தங்களுக்கு இந்தப் படங்களைப் பார்க்க சங்கடமாக இருந்தால்... 
தயவு செய்து சொல்லுங்கள், உடனே நீக்கி விடுகின்றேன். 🙂

மக்கள் உண்ணும் உணவைப் பார்க்க ஏன் சங்கடமாக இருக்க வேண்டும், நண்பரே ! (நம் உணவுப் பழக்கம் வேறாக இருந்தாலும் கூட). மேலும் கலை நயத்துடன் (with ambience) உணவு படைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுப.சோமசுந்தரம் said:

முதலில் ஏனம் என்பது பன்றியைக் குறிக்கும் சொல் என்ற விளக்கம் தந்து ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தேவைப்படும் ஒன்று.

❤️............

ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் இவர்கள் போன்றோரால் ஏனம் ஒதுக்கத்தக்க வேண்டிய ஒன்றில்லை என்ற விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் 'சேத்துமான்', 'பன்னி குட்டி' என்னும் வேறு இரண்டு படங்களிலும் பன்றிகள் நடுவில் நின்றன. சேத்துமானில் பன்றியையே வீட்டிலேயே சமைக்க விடாத ஒரு பகுதியினரைக் காட்டி இருப்பார்கள். படத்தின் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியானது.

பன்னி குட்டியில் பன்றிகளைப் பற்றியும்,  வேறு பல மூடநம்பிக்கைகளையும் காட்டி இருந்தனர்.

பன்றி மட்டும் இல்லை, வாத்து மற்றும் செம்மறியாடு போன்றவையும் ஒரு ஒப்பீட்டளவில் கீழாகவே பார்க்கப்படுகின்றன. அவைகளுக்கும் ஒரு காலம் வரும்............👍.      

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.