Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய நகரப் படையெடுப்புடன் சுல்தான்கள் ஆட்சி முடிந்தது! மத ரீதியாக மீண்ட தமிழ்நாடு....
நன்றி புரட்சி.

  • Replies 63
  • Views 5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – நாயக்கர் உட்பகை போர்கள் - #ஆரல்வாய்மொழி

thamizhnattu-porkalangal-ch25.jpg

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல ஆளுநர்கள் தமிழகத்தின் நிர்வாகத்தைக் கவனித்து செம்மைப் படுத்தினர். அவர்களில் ஒருவரான விருப்பண்ண உடையாரின் ஆட்சியில் அவர் இலங்கை வரை படையெடுத்துச் சென்று இடையில் உள்ள பகுதிகளை எல்லாம் விஜயநகரத்தோடு சேர்த்துக்கொண்டார்.

ஒருவழியாக சுல்தான்களின் ஆட்சி அளித்த சீரழிவிலிருந்து தமிழகம் மீளத் தொடங்கியபோது, விஜயநகரத்தை ஆட்சி செய்த சங்கம வம்சம் பலவீனமடையத் தொடங்கியது. அதனால் வெளியிலிருந்து படையெடுப்புகள், உள்நாட்டில் கலகங்கள் ஆகிய பிரச்சனைகள் தமிழகத்தில் தலை தூக்கின. கலிங்க நாட்டிலிருந்தும் பாமினி சுல்தான்களிடமிருந்தும் படைகள் புகுந்து வட தமிழகத்தைச் சூறையாடின. மதுரையை ஆண்ட வாணாதிரையர்கள் கலகம் செய்தனர்.

சந்திரகிரியின் மகாமண்டலேஸ்வரராக இருந்த சாளுவ நரசிம்மர் இந்தக் கலகங்கங்களை எல்லாம் திறம்பட அடக்கினார். ஒரு கட்டத்தில் அவரே விஜயநகரத்தின் அரசராக முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரால் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியவில்லை. அவருக்குத் துணை செய்த துளுவ நரச நாயக்கரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் இறைவனடி சேர்ந்தார்.

நரச நாயக்கர் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பின் முதல் ஆண்டுகளில் தமிழகத்தை நோக்கி ஒரு திக்விஜயம் நடத்தினார். திருச்சியில் தன்னாட்சிப் பிரகடனம் செய்த கோனேரி ராஜனையும், மதுரையில் புரட்சி செய்த வாணாதிரையர்களின் அரசன் புவனேகவீரனையும் தென்காசிப் பாண்டியனான மானாபூஷணனையும் வென்று விஜயநகரத்தின் ஆட்சியை மீண்டும் இங்கே நிலைநிறுத்தினார் நரசநாயக்கர்.

அவருடைய மகனான கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மீண்டும் உன்னத நிலையை எட்டியது. அமைதியான ஆட்சி தமிழகமெங்கும் நிலவியது. அக்காலகட்டத்தில் காஞ்சிபுரத்தின் தேவகன்மியாக (சிவாச்சாரியராக) தழுவக் குழைந்தான் பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு செல்லப்பா என்ற மகன் இருந்தார். அவர் வீரமும் திறனும் மிக்கவர். நாளடைவில் அவருக்கும் கிருஷ்ணதேவராயரின் ஒன்றுவிட்ட சகோதரனான அச்சுதராயருக்கும் நட்பு மலர்ந்தது. வீரமிக்கவராக இருந்த செல்லப்பா, விரைவில் விஜயநகரத்தின் அரசுப் பதவிகளை ஏற்று முன்னேறினார்.

‘அகஸ்திய கோத்திரத்து போதாயன சூத்ரத்து யஜுஸாகாத்யாபகரான தழுவக்குழைந்தான் பட்டர் புத்திரன் உபைய பிரதானியான வீரநரசிம்ஹராய நாயக்கர்’

என்று செங்கற்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் சிவாலயக் கோபுரக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சாளுவ செல்லப்ப நாயக்கர் என்று இவர் அழைக்கப்பட்டார். சோழ மண்டலத்தின் ஆளுநராக, நாயக்கராக இவர் நியமிக்கப்பட்டார். நாயக்கத்தானத்தின் படி இவருக்கு ஒரு சிறு படை வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணதேவராயரின் மகன் சிறுவயதிலேயே விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதால், தன் தம்பியான அச்சுதராயருக்குப் பட்டம் கட்டிவிட்டு மறைந்தார் கிருஷ்ணதேவராயர். ஆனால் கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான ‘அலிய’ ராமராயர் இதை ஆதரிக்கவில்லை. கிருஷ்ணதேவராயரின் இன்னொரு சகோதரரான ரங்கதேவராயரின் மகனும் சிறுவனுமான சதாசிவராயருக்கு முடிசூட்ட அவர் முயன்றார்.

அப்போது தன் படையோடு விரைந்து விஜயநகரம் சென்ற செல்லப்பச் சாளுவ நாயக்கர், அச்சுதராயரின் மைத்துனர்களான சல்லக ராஜு சகோதரர்களுடன் சேர்ந்து ராமராயரின் கலகத்தை அடக்கி அச்சுதராயருக்கு முடிசூட்டு விழா நடைபெற உறுதுணையாக நின்றார்.

அச்சுதராயர் ஆட்சிப்பொறுப்பேற்றதும் சில நாள் தலைநகரிலேயே அவருக்குப் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார் செல்லப்பா. ஆனால் அச்சுதராயர் தனது மைத்துனர்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை. ஆகவே இருவர் நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. மனம் கொதித்த செல்லப்பா, சோழ நாடு திரும்பினார். அங்கே தனக்கே ஆட்சி என்று உரிமைப் பிரகடனத்தையும் செய்தார் அவர்.

அதே காலகட்டத்தில், பரமக்குடியின் நாயக்கராக இருந்த தும்பிச்சி நாயக்கரும் விஜயநகரப் பேரரசை எதிர்த்துக் கலகம் செய்தார். அப்போது திருவாங்கூரை உதயமார்த்தாண்டவர்மன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். இரண்டாம் தேவராயரின் காலத்திலேயே திருவாங்கூர் விஜயநகரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால் விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்டமாட்டேன் என்று கூறிப் போர்க்கொடி உயர்த்திய உதயமார்த்தாண்டவர்மன், தென்காசிப் பாண்டியநாடு மீது படையெடுத்து அந்த அரசுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், மன்னார் கோயில், களக்காடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினான். அப்போது தென்காசியை ஆண்டுகொண்டிருந்த ஜடில திரிபுவன ஸ்ரீவல்லபதேவப் பாண்டியர், இதை எதிர்த்து விஜயநகரத்தின் அரசரான அச்சுதராயரிடம் முறையிட்டார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்வாறு தோன்றிய பிரச்சனைகளைக் கண்ட அச்சுதராயர், தனது மைத்துனனான சின்னத் திருமலையின் தலைமையில் ஒரு படையைத் திரட்டினார். அந்தப் படையோடு தானும் புறப்பட்டு தமிழகம் நோக்கி வந்தார். வரும் வழியில் திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய தலங்களை தரிசித்துக்கொண்டு செல்லப்பச் சாளுவ நாயக்கர் ஆட்சி செய்த சோழநாடு நோக்கிச் சென்றார்.

விஜயநகரத்திலிருந்து பெரும்படை ஒன்று வருவதைக் கண்ட செல்லப்பா, தன்னுடைய படையால் அதை எதிர்த்து நிற்க இயலாது என்ற காரணத்தால் அங்கிருந்து தப்பி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே தும்பிச்சி நாயக்கரின் படையோடு அவர் சேர்ந்துகொண்டார்.

எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருவரங்கம் வரை வந்த அச்சுதராயர் அங்கே சில நாட்கள் தங்கினார். அக்காலத்தில் பல திருப்பணிகளைத் திருவரங்கம் கோயிலுக்கு அவர் செய்திருக்கிறார். அதன்பின், தென் தமிழகம் நோக்கி அவரது படை புறப்பட்டது. இந்தப் படையெடுப்பில் விஜயநகரப் படைக்கே வெற்றி கிட்ட வேண்டும் என்று அரங்கனை வேண்டிக்கொண்டு அனந்தாழ்வான் பிள்ளை என்பவர் பெருமாளுக்குப் பல காணிக்கைகளை வழங்கினார். அது விவரங்களைப் பின்வரும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அச்சுதராயரைத் திருவரங்கத்திலேயே தங்குமாறு சின்னத் திருமலை வேண்டிக்கொண்டதன் காரணமாக, அவர் அங்கேயே தங்கியிருந்தார். மதுரையில் இந்தப் படைகளோடு அப்போது மதுரை நாயக்கராக இருந்த விஸ்வநாத நாயக்கர் சேர்ந்துகொண்டார். திருமலையின் தலைமையில் படை வருவதைக் கண்ட இரு நாயக்கர்களும் திருவாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டனிடம் படை உதவி கேட்கவே, இந்த மூவரின் படைகளும் 1532ம் ஆண்டுஇல் ஆரால்வாய் மொழிக் கணவாய்ப் பகுதியில் விஜயநகரப் படைகளை எதிர்த்துப் போர் செய்தன.

a.jpg

வரலாற்றில் தாமிரபரணிப் போர் என்று இது குறிக்கப்பட்டாலும் இந்தப் போர் நிகழ்ந்தது ஆரல்வாய்மொழிக் கணவாயில்தான். மூன்று அரசர்களின் படைகளும் சின்னத் திருமலையின் தலைமையில் வந்த விஜயநகரப் படைகளை எதிர்த்துக் கடுமையாகப் போர் செய்தபோதிலும், வெற்றி விஜயநகரப் படைகளுக்கே கிடைத்தது.

போரில் தோற்ற உதயமார்த்தாண்ட வர்மன், முன்புபோல் விஜயநகர அரசுக்குத் திறை செலுத்துவதாக ஒப்புக்கொண்டான். செல்லப்ப நாயக்கரும், தும்பிச்சி நாயக்கரும் விஜயநகரப் படைகளிடம் சரணடைந்து பேரரசுக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொண்டனர். அவர்களை அச்சுதராயர் மன்னித்து அவர்கள் ஆண்ட பகுதியைத் திருப்பி அளித்தார்.

தன்னுடைய ஆட்சிப் பகுதிகளை மீட்டு தனக்கு அளித்ததற்கு ஈடாக, ஸ்ரீவல்லபப் பாண்டியன் தன் மகளை அச்சுதராயருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன்பின் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு அச்சுதராயர் மீண்டும் திருவரங்கம் திரும்பினார். இந்தத் தகவல்களை அச்சுதராய அப்யுதயம் என்ற நூல் விரிவாகக் கூறுகிறது.

செல்லப்ப நாயக்கரை மன்னித்தாலும், சோழநாட்டுப் பகுதியில் தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்ற காரணத்தால் சில நாட்கள் கழித்து தன்னுடைய சகலையான செவ்வப்ப நாயக்கரை தஞ்சை நாயக்கராக அச்சுதராயர் நியமித்தார். அவரோடு தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி தொடங்கியது.

(தொடரும்)

krishnan-96x96.jpg

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-25/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – நாயக்கர் உட்பகை போர்கள் தொடர்கிறது # தோப்பூர்

thamizhnattu-porkalangal-ch26.jpg

 

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின் தலையீடு காரணமாக நிர்வாகம் பாதிக்கப்பட்டு அவரது ஆட்சியின் பிற்பகுதி கொடுங்கோல் ஆட்சி என்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். பல பிரச்சனைகளுக்கு நடுவே விஜயநகரைக் கொண்டு சென்றுவிட்டு அச்சுதராயர் மறைந்ததால், அங்கே பெரும் குழப்பம் நிலவியது.

அதைப் பயன்படுத்திக்கொண்டு பல தகிடுதத்தங்கள் செய்த கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான அலிய ராமராயர், முன்னர் திட்டமிட்டபடி சிறு வயதினரான சதாசிவராயரை அரியணையில் அமர்த்தி பெயரளவுக்கு அரசராக்கிவிட்டு தானே ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்க ஆரம்பித்தார். பல சூழ்ச்சிகள் செய்து பாமினி சுல்தான்களுக்கு இடையில் பகையைத் தூண்டிவிட்டார். அதன்மூலம் விஜயநகருக்கு அவர்களால் பிரச்சனை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்ட தமிழகத்தின் முக்கியமான நாயக்கர்களான மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய நாயக்கர்கள் மெல்ல மெல்ல விஜயநகர அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஏற்றார்போல தலைக்கோட்டைப் போர் வந்தது. ராமராயரின் சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பாமினி சுல்தான்கள் ஒன்று கூடி விஜயநகரத்திற்கு எதிராகப் படை திரட்டினர்.

அவர்களை எதிர்க்க எல்லா நாயக்கர்களிடமும் உதவி கோரினார் ராமராயர். அதை ஏற்று தமிழக நாயக்கர்களும் தங்களுடைய படையை அனுப்பி வைத்தனர். ஆனாலும் தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் படை சூழ்ச்சியினாலும் துரோகத்தினாலும் படுதோல்வி அடைந்தது. போரில் ராமராயர் கொல்லப்பட்டார். விஜயநகரம் பாமினி சுல்தான்களால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.

அங்கிருந்து தப்பியோடிய ராமராயரின் சகோதரரான திருமலை ராயர், பெனுகொண்டாவை விஜயநகர அரசின் தலைநகராக்கி ஆரவீடு வம்ச ஆட்சியைத் தொடங்கி வைத்தார். விஜயநகரத்தின் பிடியிலிருந்து விடுபட நினைத்த தமிழகத்தின் நாயக்கர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. விஜயநகரத்திற்குக் கப்பம் கட்டி வந்த போதிலும் தங்களுடைய அதிகார வரம்பை அவர்கள் உயர்த்திக்கொண்டனர். அவர்களை திருமலை ராயரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவருக்குப் பிறகு முதலாம் ஸ்ரீரங்கர், வேங்கடபதி தேவராயர் என்று அடுத்தடுத்து அரசர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். இதில் வேங்கடபதி ராயர் சுல்தான்களை வென்று ஓரளவுக்கு அரசின் நிலைமையைச் சீர்திருத்தினார். ஆனால் அவருக்கு உள்நாட்டில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. செஞ்சி நாயக்கருக்குக் கீழ் இருந்த வேலூரின் நாயக்கரான லிங்கம நாயக்கர் அரசை எதிர்த்துக் கலகம் செய்தார். எப்படியாவது தன்னாட்சி பெற்றுவிடவேண்டும் என்ற ஆவலில் இருந்த மதுரை, செஞ்சி, தஞ்சை நாயக்கர்கள் அவரோடு இணைந்து போர்க்கொடி உயர்த்தினர்.

இந்தக் கூட்டுப்படையை எதிர்க்க தனக்கு விசுவாசமான தளபதியும் பெரும் வீரனுமான யச்சம நாயக்கரை, வேங்கடபதி ராயர் ஒரு படையோடு அனுப்பினார். இரு தரப்பும் உத்தரமேரூரில் மோதிக்கொண்டன.

பாமினி சுல்தான்களை எதிர்த்துப் போரிட்டு வென்ற யச்சமனின் திறமைக்கும் வீரத்திற்கும் ஈடுகொடுக்க மற்ற நாயக்கர்களால் முடியவில்லை. போரில் தோல்வியடைந்த லிங்கம நாயக்கர் தப்பி ஓடிவிட்டார். மற்ற நாயக்கர்கள் தலைதப்பினால் போதும் என்று தங்களது இருப்பிடம் திரும்பினர். இந்த வெற்றியினால் மகிழ்ச்சியடைந்த வேங்கடர், தமிழக நாயக்கர்களை நன்கு கண்காணிக்கவேண்டும் என்ற காரணத்தால் தனது தலைநகரை வேலூருக்கு மாற்றி அங்கிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

வேங்கடருக்கு நேரடி வாரிசு இல்லை. ஆனால் அவரது மனைவியான பாயம்மா என்பவர், தான் கருவுற்றதுபோல நடித்து அரண்மனைப் பெண்மணிக்குப் பிறந்த ஒரு குழந்தையை தன் குழந்தை என்று அனைவரையும் நம்பச் செய்தார். இது வேங்கடருக்குத் தெரிந்தாலும், தன் மனைவி மீது இருந்த மோகத்தால் அதை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது அவருக்கு ஞானம் உதித்தது. தனது அண்ணன் மகனான ஸ்ரீரங்கருக்கு அடுத்தபடியாகப் பட்டம் சூட்டி, அவரையே தனது வாரிசாக அறிவித்துவிட்டு மறைந்தார். இரண்டாம் ஸ்ரீரங்கர் இப்படி ஆட்சிக்கு வந்தார்.

அரசு கைவிட்டுப் போனதை பாயம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரனான ஜக்கராயன் என்பவனை உதவிக்கு அழைத்தார். ஒரு படையோடு வேலூருக்கு வந்த ஜக்கராயன் ஸ்ரீரங்கரையும் அவர் மனைவியையும் மூன்று மகன்களையும் சிறையில் அடைத்து பாயம்மாவின் ‘மகனை’ அரசின் வாரிசாக அறிவித்தான். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட யச்சமன், வேலூர் அரண்மனையில் இருந்த தனது விசுவாசியான சலவைத் தொழிலாளி ஒருவரின் மூலம் ஸ்ரீரங்கரின் குடும்பத்தைத் தப்புவிக்க முயன்றார்.

ஆனால், ஸ்ரீரங்கரின் மூன்றாவது மகனான ராமனை மட்டுமே அந்தச் சலவைத் தொழிலாளியால் தப்புவிக்க முடிந்தது. செய்தியறிந்த ஜக்கராயன், ஸ்ரீரங்கரின் வாரிசு ஒருவன் தப்பிவிட்டதைக் கண்டு ஆத்திரமடைந்தான். சிறைக்குள் சென்று ஸ்ரீரங்கரையும் அவர் குடும்பத்தினரையும் அங்கேயே கொன்றுவிட்டான் அவன்.

யச்சமன், ஸ்ரீரங்கரின் மகனான ராமனையே முறையான வாரிசு என்று அறிவித்து ஒரு படையோடு வேலூர் நோக்கி வந்தார். யச்சமரின் வீரத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்த ஜக்கராயன் வேலூரை விட்டு ஓட்டமெடுத்தான். முன்புபோல தமிழக நாயக்கர்களின் கூட்டணி ஒன்றையும் அமைக்க முயன்றான்.

மதுரை நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கரும் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கரும் அவனோடு சேரச் சம்மதித்தனர். ஆனால் தஞ்சை நாயக்கரான ரகுநாத நாயக்கர் அதற்கு மறுத்து யச்சமருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

JF53qkF.md.png

கல்லணைக்கு அருகில் இருந்த தோப்பூர் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதின. யானைகளும் குதிரைகளும் கொண்ட இரு படைகளும் சமபலத்தோடு இருந்தன. பெருவீரரான ரகுநாத நாயக்கர் யச்சமனின் பக்கம் இருந்தது அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது. ரகுநாத நாயக்கர் ஜக்கராயனோடு வாட்போர் செய்து அவன் தலையை வெட்டி வீழ்த்தினார்.

யச்சமன் மதுரை நாயக்கரை போர்க்களத்திலிருந்து துரத்தினார். முத்துவீரப்பர் திருச்சிக் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டார். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் புவனகிரிக்குத் தப்பிச் சென்றார். அவரை அங்கே சென்று தோற்கடித்தார் ரகுநாத நாயக்கர். இப்படியாகத் தோப்பூர்ப் போரில் உண்மையான விஜயநகர வாரிசான ராமன் வெற்றியடைந்தார்.

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ஜக்கராயனின் தம்பி யதிராஜன், மீண்டும் அரியணையைக் கைப்பற்ற விரும்பி அவ்வப்போது விஜயநகரப் படைகளோடு மோதிக்கொண்டிருந்தான். 1619ஆம் ஆண்டு போலி வாரிசு இறந்ததும், இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. ராமதேவன் என்ற பெயரில் ஆட்சி செய்த ராமனோடு யதிராஜன் சமாதானம் செய்துகொண்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான்.

(தொடரும்)

krishnan-96x96.jpg

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-26/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நாயக்கர் ஆட்சி தொடர்கிறது.
நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – நாயக்கர் உட்பகை போர்கள் தொடர்கிறது # விரிஞ்சிபுரம்

thirumala.jpg

                                                   திருமலை நாயக்கர் அரண்மனை - மதுரை

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார்.

வீரமும் திறமையும் ராஜதந்திரமும் ஒருங்கே பெற்றவர் திருமலை நாயக்கர். ஆகவே ஆட்சிக்கு வந்தது முதல் அவருக்கும் விஜயநகர அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்டுவதை முதலில் நிறுத்தினார் திருமலை மன்னர். அதைக் கண்ட தஞ்சை நாயக்கரும் திறை செலுத்த மறுக்கவே, வேங்கடர் இருவருக்கும் எதிராகப் போர் தொடுத்தார்.

1637ம் ஆண்டு நடந்த இந்தப் போரில் இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கவில்லை. முடிவில் நாயக்க மன்னர்களோடு சமாதானம் செய்துகொண்ட வேங்கடர், கப்பம் கட்டும் உரிமையையும் விட்டுக்கொடுத்துவிட்டு வேலூர் திரும்பினார்.

இதற்கிடையில் வேங்கடரின் சகோதரரின் மகனும் அவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் கிளம்பிய பல பிரச்சனைகளின் போது அவருக்குத் துணைபுரிந்தவனும் ஆன ஸ்ரீரங்கன் என்பவன், வேங்கடருக்கு எதிராகத் திரும்பினான். பீஜப்பூரின் சுல்தானை வேங்கடருக்கு எதிராகப் படையெடுக்குமாறு அவன் தூண்டிவிட்டான்.

பீஜப்பூர் படைகள் 1638ம் ஆண்டு விஜயநகர அரசின் மீது படையெடுத்தன. அவர்களுக்குப் பணம் கொடுத்து அந்தப் படையெடுப்பைச் சமாளித்தார் வேங்கடர். ஆனால் 1641ம் ஆண்டு ஸ்ரீரங்கனின் தூண்டுதலால் மீண்டும் பீஜப்பூர் படைகள் தமிழகம் நோக்கி வந்தன. அவர்களோடு ஸ்ரீரங்கன் சேர்ந்துகொண்டான்.

இந்த எதிர்ப்பைச் சமாளிக்க நாயக்கர்களின் உதவியை வேண்டினார் வேங்கடர். அதை ஏற்று தன்னுடைய தளபதியான ராமப்பையரின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் அனுப்பி வைத்தார். அவரோடு இக்கேரி வேங்கட கிருஷ்ணய்யர் என்பவரும் சேர்ந்துகொண்டார். விஜயநகரப் படைகளோடு இணைந்து இந்தப் படை பீஜப்பூர் சேனைகளை எதிர்த்துப் பெங்களூர் அருகே போரிட்டது. போரில் விஜயநகரப் படைகளுக்கே வெற்றி கிடைத்தது.

இருப்பினும் விதி விடவில்லை. இம்முறை கோல்கொண்டாவின் சுல்தான் வேலூரை நோக்கிப் படையுடன் வந்தான். தொடர்ந்து தொல்லைகள் வந்துகொண்டே இருப்பதால் மனம் உடைந்த வேங்கடர், திருப்பதி அருகே உள்ள நாராயணபுரக் காட்டில் சென்று புகுந்துகொண்டார். அங்கேயே தன்னுடைய உயிரையும் விட்டார்.

அடுத்த வாரிசான ஸ்ரீரங்கன், மூன்றாம் ஸ்ரீரங்கர் என்ற பெயரோடு விஜயநகர அரியணையில் ஏறினார். பீஜப்பூர் சுல்தானின் உதவியைப் பெற்று கோல்கொண்டா சுல்தானின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினார் ஸ்ரீரங்கர். ஆனால் ஒரு கட்டத்தில் இரு சுல்தான்களும் ஒன்று சேர்ந்து கொண்டதால் அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பெரும் பணத்தைக் கொடுத்துதான் அவரால் தப்பிக்க முடிந்தது.

இம்முறை நாயக்கர்கள் அவர் உதவிக்கு வரவில்லை. வேங்கடருக்கு ஸ்ரீரங்கர் செய்த துரோகச்செயலால் திருமலை நாயக்கரும் மற்றவர்களும் அவரை வெறுத்தனர். மதுரை அரசு தனக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததைக் கண்ட ஸ்ரீரங்கர் திருமலை நாயக்கர் மீது படையெடுத்தார். இதைத் தடுக்க தஞ்சை, செஞ்சி நாயக்கர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை திருமலை நாயக்கர் செய்துகொண்டார். மூவர் கூட்டுப் படையோடு ஸ்ரீரங்கரை எதிர்க்க அவர் திட்டமிட்டார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை தஞ்சை நாயக்கர், ஸ்ரீரங்கரிடம் வெளியிட்டுத் துரோகம் செய்துவிட்டார்.

நிலைமை எல்லை மீறிப்போனதைக் கண்ட திருமலை நாயக்கர், பீஜப்பூர் சுல்தானுக்குப் பணம் கொடுத்து அவனை வேலூரை நோக்கிப் படையுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட பீஜப்பூர் சுல்தான், படை ஒன்றை வேலூர் நோக்கி அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீரங்கர், மதுரைப் படையெடுப்பைக் கைவிட்டு வேலூர் திரும்பவேண்டியதாயிற்று. பீஜப்பூர் படைகளுக்கு எதிராகப் போர் செய்து அவர்களைத் துரத்தினார் ஸ்ரீரங்கர்.

vellore.jpg

                                                             வேலூர் கோட்டை - பழைய ஒவியம்

ஆனால் சில காலம் கழித்து கோல்கொண்டாவின் சுல்தான் படையெடுத்து வந்து வேலூரைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால், ஆட்சியை இழந்த ஸ்ரீரங்கர், மீண்டும் நாயக்கர்களிடம் உதவி கேட்டார். இதோ, அதோ என்று நாட்களைக் கடத்திய திருமலை நாயக்கர் போன்ற நாயக்கர்கள் முடிவில் கை விரித்துவிட்டனர். அதனால் மைசூரில் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரங்கர்.

அதன்பின் கோல்கொண்டாவின் சுல்தான் செஞ்சியின் மீது படையெடுத்தான. தனது நண்பருக்கே ஆபத்து வருவதைக் கண்ட திருமலை நாயக்கர் பீஜப்பூரின் சுல்தானுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்து அவனிடமிருந்து 17,000 குதிரை வீரர்களைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய படையோடு செஞ்சியை நோக்கிச் சென்றார். திருமலை நாயக்கரின் படை வருவதற்குள் செஞ்சிக் கோட்டையை கோல்கொண்டாவின் படை முற்றுகை இட்டது. செஞ்சி நாயக்கரின் படையுடன் தன்னுடைய படையை இணைத்தார் திருமலை நாயக்கர்.

இதற்கிடையே பீஜப்பூர் சுல்தானும் கோல்கொண்டாவின் சுல்தானும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டனர். அதனால் பீஜப்பூரின் சுல்தான் தானும் ஒரு படையோடு வந்து ஏற்கெனவே திருமலை மன்னரின் படையில் இருந்த தன்னுடைய வீரர்களையும் சேர்த்துக்கொண்டான். அவனிடம் செஞ்சிப் படையெடுப்பை ஒப்படைத்துவிட்டு கோல்கொண்டா சுல்தான் நாடு திரும்பினான். திருமலை மன்னர் பீஜப்பூரின் படைகளைத் தடுத்து நிறுத்தச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. செஞ்சிக்கோட்டையைப் பீஜப்பூர் படைகள் சூறையாடின. திருமலை நாயக்கர் வேறு வழியில்லாமல் மதுரை திரும்பினார்.

அடுத்ததாக மதுரையைநோக்கி பீஜப்பூர் படைகள் திரும்பின. கடுமையான போருக்குப் பின் பீஜப்பூர் படைகளைச் சமாளித்து அனுப்பினார் திருமலை நாயக்கர். இதற்காக அவர் பெரும் பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது. பீஜப்பூரின் படைகள் செஞ்சிக்குத் திரும்பிச் சென்றன.

இந்த நேரத்தில், நாட்டை மீட்பதற்காக செல்வத்தைத் திரட்ட ஆரம்பித்திருந்தார் ஸ்ரீரங்கர். இக்கேரி நாயக்கரான சிவப்ப நாயக்கரும், மைசூரின் அரசரும் அவருக்கு உதவி செய்தார்கள். மக்களும் தங்களிடமிருந்த பொன், பொருள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தனர். திருப்பதி கோயில் பணமும் இந்தச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டது. இப்படிக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வேலூரை நோக்கி வந்தார் ஸ்ரீரங்கர்.

v1.jpg

பொயு 1646ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, விஜயநகரப் படைகளுக்கும் பீஜப்பூர் படைகளுக்கும் இடையே வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரத்தில் பெரும் போர் ஒன்று நடந்தது. ஆட்சியை எப்படியாவது மீட்டுவிடவேண்டும், விஜயநகரத்தின் மாட்சியை முன்புபோல் கொண்டுவரவேண்டும் என்ற முனைப்பில் போர் புரிந்தார் ஸ்ரீரங்கர்.

போரில் ஆரம்பத்தில் அவருக்கு உதவி செய்ய மறுத்த திருமலை நாயக்கர், ஒரு கட்டத்தில் அவருக்கு உதவியாக தன்னுடைய படையை அனுப்பி வைத்தார். ஆனால் அதற்குள் விஜயநகரப் படைகளின் தரப்பில் சேதம் அதிகரித்தது. திருமலை மன்னரின் உதவியும் பயனளிக்க முடியாமல், ஸ்ரீரங்கர் தோல்வியைத் தழுவினார். வேலூரையும்  மீட்க முடியாமல் விஜயநகர அரசையும் மீட்க முடியாமல் மைசூரில் தஞ்சம் புகுந்தார். அத்தோடு தென்னாட்டில் மிகுந்த செல்வாக்கோடு அரசு செலுத்திய விஜயநகரப் பேரரசின் காலம் முடிவுக்கு வந்தது.

(தொடரும்)

krishnan-96x96.jpg

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-27/

 

  • கருத்துக்கள உறவுகள்

1646ம் ஆண்டோடு விஜயநகர ஆட்சியும் முடிவடைய தமிழ்நாடு என்னவானது? காத்திருப்போம்.
நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                           தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர் # திண்டுக்கல்

மூக்குகளை அறுத்த கொடூரம்கள்

my.jpg

                                மைசூர் அரண்மனை - போர் வீரர்கள் (பழைய படம்)

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன் ஏதாவது ஒரு சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலூர் விஜயநகர அரசர்களுக்கு மைசூரின் அரசர்கள் ஆதரவளித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு தனியரசாகிவிட்ட மைசூர், தன்னுடைய ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய நினைத்தது கூட இந்தப் பகைக்கான காரணமாக இருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் மதுரை அரசோடு போரை ஆரம்பித்து வைத்தது மைசூர்தான். பொயு 1633ம் ஆண்டு மைசூரின் அரசரான சாமராஜ உடையார், ஹரிசூரநந்தி ராஜா என்ற தளபதியின் கீழ் ஒரு படையை மதுரையை நோக்கி அனுப்பி வைத்தார். தமிழகத்தில் புகுந்த மைசூர்ப் படை, வடமேற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டு திண்டுக்கல் வரை முன்னேறியது.

திருமலை நாயக்கரின் தளபதியாக இருந்தவர் தளவாய் ராமப்பையர். அந்தணர் குலத்தைச் சேர்ந்த இவர் பெரு வீரரும், ராஜதந்திரியும் ஆவார். பெரும் சிவபக்தரும்கூட. அவருடைய தலைமையில் மதுரையின் படை திண்டுக்கல்லை நோக்கிச் சென்றது. அங்கே முகாமிட்டிருந்த மைசூர்ப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. திண்டுக்கல் பாளையக்காரரான அரங்கண்ண நாயக்கர், ராமப்பையருக்கு தனது வீரர்களைக் கொடுத்து உதவினார்.

மதுரையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மைசூர்ப்படை திணறிச் சிதறி ஓடியது. ஓடிய படைகளை மதுரை வீரர்கள் துரத்திச் சென்றனர். மைசூர் வரை சென்ற ஹரிசூரநந்தியின் படை, அந்தக் கோட்டைக்குள் புகுந்து கதவுகளைச் சாத்திக்கொண்டது. ராமப்பையர் மைசூர்க்கோட்டையை முற்றுகை இட்டார். உள்ளே இருந்து வெளிவந்து போர் செய்ய மைசூர்ப் படைகளும் துணியவில்லை. இதனால் இந்த முற்றுகை சிறிது காலம் நீடித்தது.

எப்போதும், எந்த அரசிலும் ‘போட்டுக்கொடுப்பதற்கு’ என்றே சிலர் இருப்பார்கள். அதே போல சிலர் திருமலை நாயக்கரிடமும் சிலர் இருந்தனர். அவர்கள் திருமலை நாயக்கரிடம் சென்று ராமப்பையரைப் பற்றிக் கோள் மூட்டத் தொடங்கினர். மைசூர்ப் போருக்குப் பிறகு ராமப்பையர், திருமலை நாயக்கரைக் கொன்று தானே அரசராகப் போவதாகவும் அதனால்தான் கருநாடாவின் பல பகுதிகளைப் பிடிப்பதில் அவர் முனைப்புக் காட்டுவதாகவும் அவர்கள் திருமலை மன்னரிடம் சொன்னார்கள்.

இதை நம்பாவிட்டால், உடனே தகுந்த ஆட்களை அனுப்பி ராமப்பையரை உடனே அழைத்து வரும்படியும் அப்படி அவர் வராவிட்டால் தாங்கள் சொன்னதுதான் சரி என்றும் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட திருமலைநாயக்கர் குழப்பமடைந்தார். எதற்கும் இதைச் சோதித்துப் பார்ப்போம் என்ற நினைப்பில், இருவரை மைசூருக்கு அனுப்பி ராமப்பையரை அழைத்துவரச் சொன்னார்.

ஆனால் வெற்றி அடையும் தருணத்தில் இருந்த ராமப்பையர் மதுரை வர மறுத்துவிட்டார். ஆனால் சென்றவர்கள் சும்மா இல்லாமல், ராமப்பையரின் கைகளைக் கட்டி இழுக்க முயன்றனர். அதனால் ஆத்திரமடைந்த ராமப்பையர், அவர்களுடைய கைகளை வெட்டி விட்டார். கைகளை இழந்த இருவரும் திருமலை நாயக்கரிடம் சென்று முறையிட்டனர்.

அதற்கு மேல் தாமதிப்பது ஆகாது என்ற காரணத்தால், மதுரைப் படைகளுக்கு மைசூர்க் கோட்டையைத் தாக்க ஆணையிட்டார் ராமப்பையர். கோட்டைக் கதவுகள் உடைக்கப்பட்டு மதுரைப் படைகள் மைசூருக்குள் புகுந்தன. அங்கே இரு தரப்பிற்கும் மூண்ட போரில் மதுரைப் படைகள் பெருவெற்றி அடைந்தன. வெற்றியுடன் மதுரை திரும்பிய ராமப்பையர், திருமலை நாயக்கரிடம் அரச கட்டளையை மீறிய தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். உண்மையை உணர்ந்துகொண்ட திருமலை நாயக்கர் மகிழ்ந்து அவரை அன்புடன் வரவேற்றார். இந்தப் போரில் மதுரைக்கு உதவி செய்த அரங்கண்ண நாயக்கரின் கப்பப் பணத்தையும் அவர் தள்ளுபடி செய்தார்.

அதன்பின் பல ஆண்டுகள் உருண்டோடின. திருமலை நாயக்கருக்கும் வயது ஏறியது. ராமப்பையரும் இறந்துபட்டார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மைசூர் அரசரான நரச ராஜா, மதுரை மீது படையெடுத்து முன்பு ஏற்பட்ட தோல்விக்குப் பழி வாங்க விரும்பினார். ஆகவே மைசூரின் படைகள் இரண்டாவது முறையாக 1656ம் ஆண்டு தமிழகத்தை நோக்கி வந்தன.

இம்முறை கொடூரமான ஒரு போர் முறையை மைசூர்ப் படைகள் கையாண்டன. போர் வீரர்களோடு மட்டும் சண்டையிடாமல், வழியில் உள்ள ஊர்களை எல்லாம் சூறையாடியும் எரியூட்டியும் பல துன்பங்களை அப்பாவிப் பொதுமக்களுக்கு விளைவித்தன. போதாக்குறைக்கு வழியில் பட்ட ஆண், பெண், சிறுவர்கள் என்று எல்லாரையும் பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து எறிந்தனர் மைசூரின் படை வீரர்கள். அதோடு மட்டுமல்லாமல், அப்படி வெட்டபட்ட மூக்குகளை ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு மூட்டையில் கட்டி அனுப்பி வைத்தனர்.

nose.jpg

இப்படி எதிரிகளின் மூக்கை அறுக்கும் வழக்கம் மைசூரின் வீரர்களுக்கு இருந்திருக்கிறது என்பது 1679ம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டைத் தீர்மானம் ஒன்றிலிருந்து உறுதியாகிறது. ‘எதிரிகளைக் கொல்லாமல் அவர்களுடைய மூக்கையும் உதட்டையும் அறுப்பது மைசூர் வீரர்களின் வழக்கம். அதற்காக அவர்கள் ஓர் இரும்புக் கருவியை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு திறமையாக மூக்கையும் உதட்டையும் அவர்கள் அரிந்துவிடுகிறார்கள். மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மைசூரின் அரசர் அவர்களுக்குப் பரிசளிக்கிறார். இப்படிச் செய்தவதால் பகைவர்கள் உடனடியாக இறக்காவிட்டாலும் நொந்து நொந்து சில நாட்களின் இறப்பார்கள்’ என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

தமிழகம் அதற்கு முன்பு கண்டிராத வகையில் இப்படிக் கோரமான போர் செய்து மைசூரின் படை முன்னேறியபோது, 75 வயதான திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டு பலவீனமான நிலையில் படுக்கையில் கிடந்தார். இந்தச் செய்திகளைக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். ஆனால், நேரில் சென்று போர் செய்யக்கூடிய வலிமை அவருக்கு இல்லை.

மைசூர்ப் படைகளை எதிர்க்க வலிமையான படையும் படைத்தலைவனும் கூட அவரிடம் இல்லை. ஆகவே, ஒரு காலத்தில் தனக்கு எதிரியாக இருந்த ராமநாதபுரம் அரசருக்குத் தூது அனுப்பினார்.

அப்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தில் ரகுநாத சேதுபதி ஆட்சி செய்துகொண்டிருந்தார். திருமலை நாயக்கர் அனுப்பிய செய்தியைக் கேட்ட சேதுபதி, நிலைமையை கவனித்து சிறிதும் தயக்கமில்லாமல் 25,000 வீரர்களைத் திரட்டிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

rgu.jpg

                                                                        ரகுநாத சேதுபதி

அதோடு திருமலை நாயக்கரிடம் இருந்த படையும் சேர்ந்துகொண்டது. இதற்கிடையில் திண்டுக்கல்லை அடைந்த மைசூர்ப்படை, தங்களுக்கு உதவிப்படை ஒன்றை எதிர்பார்த்து அங்கேயே காத்திருந்தார்கள். தன்னுடைய தம்பியான குமாரமுத்து நாயக்கரை சேதுபதியுடன் சேர்ந்து திண்டுக்கல்லுக்குச் சென்று எதிரிப் படைகளை அழிக்குமாறு திருமலை நாயக்கர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்க மதுரைப் படை திண்டுக்கல்லை நோக்கி முன்னேறியது. அவர்களோடு மீண்டும் அரங்கண்ண நாயக்கர் சேர்ந்து கொண்டார். திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர்ப் படைகளோடு மதுரைப் படையினர் மோதினர். கடுமையாக நடந்த இந்தப் போரில் மதுரையின் படையில் இருந்த வீரர்களின் திறமையால், நாயக்கரின் படைகளுக்கே வெற்றி கிடைத்தது.

dind.jpg

போரில் தோல்வியடைந்து மைசூர்ப் படை பின்வாங்கத் தொடங்கியபோது, அவர்களுக்குத் தேவையான உதவிப்படை ஒன்று மைசூரிலிருந்து அங்கே வந்து சேர்ந்தது. இதனால் ஊக்கமடைந்த மைசூரின் வீரர்கள் மதுரையின் படைவீரர்களைத் திரும்பத் தாக்கத் தொடங்கினார். ஆனால் தீரத்துடன் போரிட்ட மதுரையின் படையினர் மைசூர்ப் படை வீரர்களைக் கொன்றுக் குவித்தனர். இருப்பினும் மதுரையின் பக்கமும் நேர்ந்த சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று மைசூரை நோக்கி நரசராஜாவின் படை தப்பியோடியது.

வெற்றியுடன் ரகுநாத சேதுபதி மதுரை திரும்பினாலும், குமாரமுத்துவும் அரங்கண்ண நாயக்கரும் மைசூர்ப் படைகளைத் துரத்திச் சென்றனர். வழியிலுள்ள கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு நஞ்சன்கூடு வரை சென்றனர். பழிக்குப் பழியாக வழியில் அகப்பட்டவர்களின் மூக்குகளை எல்லாம் அவர்கள் வெட்டி எறிந்தனர். மைசூர் மன்னனையும் சிறைப்பிடித்து அவனுடைய மூக்கையும் அரிந்ததாகச் சொல்வதுண்டு.

ரகுநாத சேதுபதிக்குப் பல பரிசுகளை அளித்துக் கௌரவித்தார் திருமலை நாயக்கர். அவருக்கு ‘திருமலை சேதுபதி’, ‘ராணி சொல் காத்தார்’ போன்ற பட்டங்களையும் அளித்தார். தங்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த சிங்கமுகப் பல்லக்கையும் திருப்புவனம், திருச்சுழி, பள்ளி மடம் ஆகிய ஊர்களையும் சேதுபதிக்கு அளித்தார்.

ஆனால் மைசூரிலிருந்து வெற்றியுடன் திரும்பி வந்த குமாரமுத்துவையும் அரங்கண்ண நாயக்கரையும் வரவேற்க அவர் உயிருடன் இல்லை. திருமலை மன்னரின் ஆட்சியில் நடந்த மிக முக்கியமான போராகக் கருதப்படுவது இந்த மூக்கறு போர்.

(தொடரும்)

krishnan-96x96.jpg

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-28/

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மூக்கறுத்து பரிசு பெற்ற வீரர்கள்!
பகிர்விற்கு நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

thanj.jpg

தஞ்சை அரண்மனை (பழைய படம்)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின் அவரது மகனான சொக்கநாத நாயக்கர் இளம் வயதிலேயே அரசரானார்.

‘இளம் கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக துணிச்சலும், அதே சமயம் அவசர புத்தி கொண்டவராகவும் இருந்தார் சொக்கநாதர். அவருக்குத் துணையாக திருமலை நாயக்கரின் இன்னொரு மகனான லிங்கம நாயக்கர் தளபதியாகப் பொறுப்பேற்றார். மன்னர் இளையவராக இருந்ததால் அதிகாரத்தைப் பெரும்பாலும் ராயசமும் பிரதானியும் கவனித்துக்-கொண்டனர்.

இந்நிலையில் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சகோயி என்பவரோடு மோத லிங்கமன் தீர்மானித்தார். அதன்படி சொக்கநாத நாயக்கருக்குக் கூடத் தெரிவிக்காமல், ஒரு படையைத் தானே நடத்திச் சென்று செஞ்சியை முற்றுகையிட்டார். அப்போது தஞ்சையை ஆட்சி செய்துகொண்டிருந்தவரும் விஜயநகர அரசுக்கு ஆதரவளித்தவரும் ஆன விஜயராகவ நாயக்கர் இப்போது தன் நிலைமையை மாற்றிக்கொண்டு பீஜப்பூர் சுல்தான் தரப்பில் சேர்ந்துகொண்டார்.

லிங்கமனின் மனதை மாற்றி இந்த முற்றுகையைக் கைவிடச் செய்தார். அது போதாதென்று, அவருக்குப் பதவி ஆசையைத் தூண்டி சொக்கநாத நாயக்கரை ஆட்சியிலிருந்து அகற்றுமாறு சொன்னார். லிங்கமன் ராயசத்தையும் பிரதானியையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு சொக்கநாதரை வீட்டுக் காவலில் வைத்தார்.

இந்தச் சதியை அறிந்துகொண்ட சொக்கநாதர், காவலில் இருந்து தப்பி தனக்கு ஆதரவானவர்களை ஒன்று திரட்டி ராயசத்தையும் பிரதானியையும் சிறையில் அடைத்தார். லிங்கமனைச் சிறைப்-பிடிக்க வரும்போது அவன் தப்பிச் சென்று, சகோயியை மதுரையை நோக்கிப் படையெடுக்கும்படி தூண்டினான். அவர்களோடு தஞ்சை விஜயராகவ நாயக்கரும் சேர்ந்து கொண்டார்.

இரண்டு தரப்புப் படைகளும் திருச்சிக்கு அருகில் சண்டையிட்டன. மதுரையின் படைபலம் அதிகமாக இருந்தாலும், அந்தப் படையில் துரோகிகளும் அதிகமாக இருந்தனர். அதனால் போரில் வெற்றிமுகமாக இருந்த மதுரைப் படை பின்வாங்க நேரிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட லிங்கமன் சொக்கநாத நாயக்கரைச் சிறைப்பிடிக்க வந்தான்.

ஆனால் விழித்துக்கொண்ட சொக்கநாதர், தன் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி வீரப்போர் செய்தார். அதன்காரணமாக பீஜப்பூர் படைகளும் தஞ்சைப் படைகளும் பின்வாங்கின. தஞ்சைக்குப் பின்வாங்கிச் சென்ற விஜயராகவ நாயக்கரின் படைகளை சொக்கநாதரின் படைகள் துரத்திச் சென்று தோற்கடித்தன. வேறு வழியில்லாமல் விஜயராகவ நாயக்கர் மதுரைப் படைகளிடம் சரணடைந்தார். இந்தப் போர் 1661-62ல் நடந்திருக்கவேண்டும்.

அதன்பின் தன் தலைநகரை திருச்சிக்கு மாற்றிக்கொண்ட சொக்கநாத நாயக்கர் அங்கிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார். பொயு 1663ம் ஆண்டு பீஜப்பூர் படைகள் வானமியான் என்பவனின் தலைமையில் மீண்டும் திருச்சி நோக்கி வந்தன. ஏற்கனவே சொக்கநாத நாயக்கரின் மீது வெறுப்பில் இருந்த விஜயராகவ நாயக்கர், மீண்டும் தன் படைகளை பீஜப்பூர் படைகளோடு இணைத்து சொக்கநாதரை எதிர்த்தார்.

இந்தப் பெரும்படை திருச்சிக் கோட்டையை முற்றுகை இட்டது. கோட்டைக்குள் இருந்து நாயக்கரின் படைகள் குண்டுகளை வீசி கோட்டையைப் பாதுகாத்தன. முற்றுகை நீடித்துக்கொண்டே போவதைக் கண்ட வானமியான், சுற்றிலுமுள்ள கிராமங்களைச் சூறையாடத் தொடங்கினான். ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்-பட்டனர். குடிமக்களுக்கு நேர்ந்த இந்தத் துன்பங்களைக் கண்ட சொக்கநாத நாயக்கர், பெரும் பொருளைக் கொடுத்து வானமியானைத் திரும்பிப் போகச் செய்தார்.

ஆனால் இந்தப் போரில் எதிரிகளுக்குத் துணை செய்த விஜயராகவ நாயக்கரை சொக்கநாதர் மன்னிக்கவில்லை. ஒரு படையுடன் தஞ்சை நோக்கிச் சென்று வல்லம் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். இம்முறை முதலில் தோல்வியைத் தழுவிய தஞ்சைப் படைகள், கடுமையாகச் சண்டையிட்டு தங்களின் பகுதிகளைப் பாதுகாத்தன. ஒரு கட்டத்தில் வல்லம் கோட்டையும் மீட்கப்பட்டது. சொக்கநாதர் போரைக் கைவிட்டுவிட்டு திருச்சி திரும்பினார்.

தொடர்ந்து தஞ்சை நாயக்கரால் தனக்குத் தொல்லை வருவதைக் கண்ட சொக்கநாத நாயக்கர், விஜயராகவருக்கு மண வயதில் பெண் ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். இவரும் இளைஞர் தானே, ஆகவே அவளைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் தஞ்சை நாயக்கரின் நட்பைப் பெறத் தீர்மானித்தார். அந்தப் பெண்ணுக்கும் சொக்கநாதருக்கும் காதல் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி கூறுகிறது.

எப்படியோ, பெண் கேட்டு விஜயராகவ நாயக்கருக்குத் தூது அனுப்பினார் மதுரையின் நாயக்கரான சொக்கநாதர். ஆனால் விஜயராகவருக்கோ ஏற்கனவே சொக்கநாதர் மேல் வெறுப்பு. தவிர, தஞ்சை நாயக்கர்கள் அச்சுதராயரின் உறவினரான செவ்வப்ப நாயக்கரின் வம்சத்தில் வந்தவர்கள் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மதுரை நாயக்கர்களோ கிருஷ்ணதேவராயரிடம் ஊழியம் செய்து அடைப்பமாக இருந்த விஸ்வநாத நாயக்கரின் வம்சம். ஆகவே சொக்கநாதருக்கு தன் மகளைக் கொடுப்பது கௌரவக் குறைவு என்று நினைத்த விஜயராகவ நாயக்கர் அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்தச் செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த சொக்கநாத நாயக்கர், 1673ம் ஆண்டு தஞ்சையை நோக்கிப் படை ஒன்றை அனுப்பினார். தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர், பேஷ்கார் சின்னத் தம்பி முதலியார் ஆகியோர் இந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றனர்.

thanj2.jpg

முதலில் வல்லம் கோட்டையைப் பிடித்துக்கொண்டனர் சொக்கநாதரின் படை வீரர்கள். பூஜை செய்துகொண்டிருந்த விஜயராகவருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே பெரும்படை ஒன்றை அவசரமாகத் திரட்டிக்கொண்டு வல்லம் நோக்கி வந்தார் விஜயராகவர்.

சொக்கநாதரின் படைகளும் விஜயராகவரின் படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. போரில் மதுரைப் படைகளே வெற்றி அடைந்தன. அப்போது வேங்கட கிருஷ்ணப்பர், விஜயராகவரிடம் ‘பெண்ணைக் கொடுத்துவிடுங்கள், போரை நிறுத்திவிடுகிறோம்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து தஞ்சைக்குப் பின்வாங்கினார் விஜயராகவர்.

ஆகவே மதுரைப் படை தஞ்சைக்குள் நுழைந்து கோட்டையை முற்றுகையிட்டது. மீண்டும் ஒருமுறை விஜயராகவருக்குத் தூது அனுப்பப் பட்டது. மகளை சொக்கநாதருக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படியும், அப்படிச் செய்வதாக ஒப்புக்கொண்டால் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்புவதாகவும் வேங்கட கிருஷ்ணப்பர் தெரிவித்தார். ஆனால் விஜயராகவர் அசைய மறுத்தார்.

ஒரு பிரச்சனையில் சிறையில் அடைக்கப்பட்ட தன் மகனான மன்னார் தாசனை விடுதலை செய்தார். அரண்மனை முழுவதும் வெடி பொருட்களை நிரப்பிவிட்டு, தன் படைகளோடு போர்க்களம் புகுந்தார் விஜயராகவ நாயக்கர். தன் முயற்சியில் மனம் தளராத வேங்கட கிருஷ்ணப்பர், விஜயராகவரிடம் பெண்ணைக் கொடுக்குமாறு போர்க்களத்திலேயே கோரினார். ஆனால் அதற்கு இசையாத விஜயராகவர், கடுமையாகப் போர் செய்தார்.

ஆனால் வலிமையான மதுரைப் படைகளை அவரால் நீண்ட நேரம் எதிர்த்து நிற்க முடியவில்லை. வீரன் ஒருவனின் வாளால் அவர் வெட்டப்பட்டு உயிரிழக்கும் தருவாயில், தஞ்சை அரண்மனையில் பொருத்தியிருந்த வெடிகளைக் கொளுத்துமாறு கட்டளையிட்டார். அதன்படி அரண்மனை முழுவதும் வெடி வைத்து கொளுத்தப்பட்டு அதில் அவரது மகள் உட்பட குடும்பத்தினர் எல்லோரும் எரிந்துபோனார்கள்.

இந்தச் செய்திகளைப் பற்றி விரிவாக தஞ்சாவூரி ஆந்திர ராஜுல சரித்திரமு என்ற நூலும் மெக்கின்ஸி சுவடிகளும் எடுத்துரைக்-கின்றன.

கௌரவத்திற்காக குடும்பத்தையே அழிக்கத் துணிந்த விஜயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்க வம்சம் அழிந்தது. தன்னுடைய சிற்றன்னையின் மகனான அழகிரி நாயக்கனை தஞ்சையின் பிரதிநிதியாக சொக்கநாத நாயக்கர் நியமித்தார். தஞ்சை மதுரையோடு இதன்மூலம் இணைக்கப்பட்டது. அது தொடர்ந்ததா?

(தொடரும்)

krishnan-96x96.jpg

 

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-29/

டிஸ்கி : 

வரலாற்று நிகழ்வுகள் :

ரென்மார்க்காரர்கள் தமிழ்நாட்டில் நுழைந்த நிகழ்வு .. 1620 

tn.jpg

ரெனிஷ் கோட்டை பழைய ஒவியம் 

டேனியக் கோட்டை (Fort Dansborg உள்ளூரில் Danish Fort) என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் (விஜயராகவ நாயக்கரின் தந்தை)  டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது.

தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கர் (1600–1634) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்த போதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய படம்

Das_Fort_Dansborg_in_Tranquebar.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
தகவல் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவத்திற்காக குடும்பத்தையே அழித்துவிட்டாரே!
நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி : 

வரலாற்று நிகழ்வுகள் :

ரென்மார்க்காரர்கள் தமிழ்நாட்டில் நுழைந்த நிகழ்வு .. 1620 

tn.jpg

ரெனிஷ் கோட்டை பழைய ஒவியம் 

டேனியக் கோட்டை (Fort Dansborg உள்ளூரில் Danish Fort) என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் (விஜயராகவ நாயக்கரின் தந்தை)  டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது.

தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கர் (1600–1634) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்த போதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய படம்

Das_Fort_Dansborg_in_Tranquebar.jpg

 

 

23 minutes ago, ஏராளன் said:

கௌரவத்திற்காக குடும்பத்தையே அழித்துவிட்டாரே!
நன்றி புரட்சி.

வரலாற்று தகவல்கள் டிஸ்கியாக சேர்ப்பு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி - # திருவதிகை

thamizhnattu-porkalangal-ch29.jpg

                                                               செஞ்சி கோட்டை

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும் தொடர்ந்த போர்களால் நேர்ந்த அழிவுகளைச் சரிசெய்தும் திறமையாக ஆண்ட அழகிரிக்கு நாளடைவில் சுதந்தரமாக தஞ்சையை ஆளவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.

அதற்கு விஜயராகவ நாயக்கரின் ஆட்சியின் போது அதிகாரியாக இருந்தவரும், அழகிரியின் நிர்வாகத்தின் போது அவருக்குத் தளவாயாகச் செயல்பட்டவருமான வெங்கண்ணா என்பவர் தூபம் போட்டார். அழகிரி சுய ஆட்சி செய்ய ஆரம்பித்தால் அதன் காரணமாகத் தன்னுடைய அதிகாரமும் செல்வாக்கும் உயர்வு அடையும் என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம்.

ஆனால் அழகிரிக்கு வெளிப்படையாகத் தன் அண்ணனை எதிர்க்க பயம். ஆகவே செலுத்த வேண்டிய கப்பத் தொகைகளை ஒழுங்காகச் செலுத்தாமலும் கணக்குக் கேட்டதற்குத் தகுந்த மறுமொழி அளிக்காமலும் காலம் கடத்தி வந்தார் அழகிரி. இதனால் சொக்கநாத நாயக்கர் எரிச்சலடைந்தாலும், தம்பியுடன் போர் செய்ய வேண்டாம் என்று அவருடைய அதிகாரிகள் சொன்ன ஆலோசனையைக் கேட்டுப் பொறுமையாக இருந்தார்.

இப்படிக் கிடைக்கவேண்டிய அதிகாரம் கைவிட்டுப் போய்க்கொண்டிருப்பதால் வெறுப்படைந்த வெங்கண்ணாவிற்கு ஒரு வலுவான பிடி கிடைத்தது. விஜயராகவ நாயக்கரின் பேரனும், மன்னார் தாசனின் மகனுமான ஒரு சிறுவன் நாகப்பட்டினத்தில் ஒரு வணிகரிடம் வளர்ந்து வருகிறான் என்ற செய்தி அவரிடம் சொல்லப்பட்டது. அதனால் மகிழ்ந்த அவர் நாகப்பட்டனம் சென்று அங்கேயே சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்தச் சிறுவனுக்கு செங்கமல தாஸ் என்று பெயர்.

செங்கமல தாஸுக்கு தகுந்த வயது வந்ததும், அவனை பீஜப்பூரின் சுல்தானிடம் கூட்டிச்சென்றார் வெங்கண்ணா. தஞ்சையின் உண்மையான வாரிசு அவனே என்றும், மதுரை நாயக்கர்கள் அநியாயமாக தஞ்சாவூரைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள் என்றும் பீஜப்பூர் சுல்தானான அடில்ஷாவிடம் தெரிவித்தார் அவர்.

இதைக் கேட்ட பீஜப்பூர் சுல்தான், தஞ்சையை செங்கமலதாஸுக்கு அளிப்பதாக உறுதியளித்தான். செஞ்சியில் பீஜப்பூரின் பிரதிநிதியாக இருந்த மராட்டியரான ஏகோயியிடம் அதற்குத் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டான் அடில்ஷா. இந்த ஏகோயி வேறு யாருமல்ல, பீஜப்பூர் சுல்தானிடம் பணி செய்துகொண்டிருந்த ஷாஜி என்பவரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர். ஷாஜியின் முதல் மனைவியின் மகன்தான் புகழ்பெற்ற சிவாஜி.

ஏகோயியின் தலைமையில் பீஜப்பூர் படைகள் தஞ்சை நோக்கிப் புறப்பட்டன. அதைக் கண்டு அஞ்சிய அழகிரி தன் அண்ணனான சொக்கநாதரிடம் முறையிட்டார். தன்னைக் காப்பாற்றி தஞ்சையை மீட்டுத்தருமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் தம்பி செய்த அடாத செயல்களால் வருத்தமடைந்திருந்த சொக்கநாத நாயக்கர், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். பொயு 1676ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற போரில் பீஜப்பூர் படைகள் வெற்றி பெற்று தஞ்சை நகருக்குள் நுழைந்தன. போரில் தோற்ற அழகிரி அரியலூர்க் காட்டுக்குள் ஓடி மறைந்தார்.

தஞ்சை அரசராக செங்கமலதாஸுக்கு முடிசூட்டினார் ஏகோயி. அதற்கு ஈடாக அவருக்கு கும்பகோணம், மன்னார் குடி, பாபநாசம் ஆகிய ஊர்களிலிருந்து வரி வசூலித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. ஆகவே முடிசூட்டு விழாவிற்குப் பிறகு கும்பகோணம் சென்ற ஏகோயி அங்கே தங்கியிருந்தார்.

ஆனால் செங்கமலதாஸின் ஆட்சியின் ஆரம்பத்திலேயே பிரச்சனை ஏற்பட்டது. தன்னைப் பட்டத்திற்குக் கொண்டுவந்த வெங்கண்ணாவைப் புறக்கணித்துவிட்டு தன்னை வளர்த்த வணிகருக்கு அதிக அதிகாரத்தைத் தந்தான் செங்கமலதாஸ். இதனால் ஆத்திரமடைந்த வெங்கண்ணா கும்பகோணத்திற்குச் சென்று ஏகோயியை தஞ்சை அரசுப் பொறுப்பை ஏற்குமாறு தூண்டிவிட்டான்.

முதலில் தயங்கிய ஏகோயி, தன்னுடைய அரசனான அடில்ஷா இறந்துபட்டான் என்ற செய்தி வந்தவுடன், தயக்கமெல்லாம் நீங்கி தஞ்சை நோக்கிப் படையெடுத்தார். ஏகோயியின் வலிமையை ஏற்கெனவே உணர்ந்திருந்த செங்கமலதாஸ், தஞ்சையை விட்டு ஓடிவிட்டான். துளி ரத்தம் சிந்தாமல், தஞ்சையை அலுங்காமல் கைப்பற்றிய ஏகோயி, தஞ்சை மராத்திய வம்சத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அப்பகுதிக்கு நல்லாட்சியைத் தர ஆரம்பித்தார். ஆனால் இரண்டு அரசர்களுக்குத் துரோகம் செய்த வெங்கண்ணாவை ஏகோயி நம்பவில்லை. வெங்கண்ணாவைச் சிறைப்படுத்த முயன்றார். இதைத் தெரிந்துகொண்ட வெங்கண்ணா அங்கிருந்து ஓடி மறைந்தே போனான்.

இந்த சமயத்தில் சிவாஜி மன்னர் தன்னை ஒரு பெரும் சக்தியாக தக்காணத்தில் அடையாளப்படுத்தியிருந்தார். பெரு வீரரும் அன்னை பவானியின் பக்தருமான சிவாஜி அச்சமயம் மராட்டியத்தை ஆட்சி செய்து வந்தார். பீஜப்பூரின் பகுதிகளாக தென்னாட்டில் வளமுடன் இருந்த தஞ்சை, செஞ்சி, வேலூர் ஆகிய இடங்களை தன்னுடைய ஆட்சியின் கீழ் சேர்த்துக்கொள்ள அவர் முடிவெடுத்தார்.

பீஜப்பூரில் சுல்தானான அடில்ஷா இறந்தவுடன், ஏகோயி செய்ததைப் போலவே பீஜப்பூரின் மற்ற ஆளுநர்களும் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்தனர். செஞ்சிக்குத் தெற்கே இருந்த பகுதிகளில் ஆப்கானியனான ஷெர்கான் லோடி ஆட்சி செய்துகொண்டிருந்தான். வாலிகொண்டபுரம் அவனுடைய தலைநகராக இருந்தது. புதுச்சேரியில் வியாபாரத்திற்காகக் கால்பதித்திருந்த பிரஞ்சுக்காரருடன் சேர்ந்து கொண்டு பறங்கிப்பேட்டை முதலிய ஊர்களைக் கைப்பற்றிய ஷெர்கான் செஞ்சியை நோக்கி முன்னேறினான்.

1676ம் ஆண்டு செப்டம்பரில் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அங்கிருந்த பீஜப்பூர் ஆளுநரான நாசிர் முகமது முதலில் தப்பி ஓடினான். அதன்பின் பறங்கிப்பேட்டை முதலிய பகுதிகளை ஷெர்கானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடன் சமாதானம் செய்து-கொண்டு, செஞ்சியின் ஆளுநராக மீண்டும் பொறுப்பேற்றான்.

தமிழகத்தின் வடபகுதிகளில் ஏற்பட்ட இந்தக் குழப்பமான நிலையிலும் ஏகோயி ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதைக் கண்ட அவரது அமைச்சரான ரகுநாத நாராயண ஹனுமந்த் பந்த் வெறுப்படைந்தார். அவர் ஷாஜியின் காலத்திலிருந்தே பணியாற்றி வருபவர். ஷாஜியின் நெருங்கிய நண்பர். சுல்தான்களை வளரவிடுவது ஆபத்து என்பதையும் உணர்ந்தவர். ஏகோயியை நம்பிப் பயன் இல்லை என்பதை உணர்ந்த அவர், காசி யாத்திரை செல்வதாகக் கூறி பதவியைத் துறந்து, குடும்பத்துடன் நேராக சிவாஜியிடம் போய்ச்சேர்ந்தார். நடந்ததைக் கூறி சிவாஜியை தமிழகத்திற்குப் படையெடுத்துவரக் கோரினார் மந்த்.

sivaji.jpg

                     வீர சிவாஜி

அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்திற்குக் காத்துக்கொண்டிருந்த சிவாஜி, 1677ம் ஆண்டு தன்னுடைய படையுடன் புறப்பட்டார். ஸ்ரீசைலம் முதலிய இடங்களில் சுவாமி தரிசனம் செய்து கொண்டு நந்தியால், திருப்பதி, காளஹஸ்தி வழியாகச் சென்னை வந்தார். அங்கே சில நாட்கள் தங்கியிருந்த அவர், தன்னுடைய படையின் 5000 குதிரை வீரர்கள் அடங்கிய ஒரு பகுதியை செஞ்சிக்கு அனுப்பி வைத்தார்.

அந்தப் படையின் தலைவன், செஞ்சிக் கோட்டை ஆளுநராக இருந்த நாசிர் முகமதுவைக் கண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு செஞ்சிக்கோட்டையை விட்டுவிடுமாறு சொன்னான். கிடைத்தவரைக்கும் லாபம் என்று கருதிய நாசிர் முகமது பணத்தைப் பெற்றுக்கொண்டு செஞ்சிக்கோட்டையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அதன்பின் அங்கே ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட சிவாஜி, செஞ்சியில் இருந்த பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாகப் பல கட்டடங்களைக் கட்டினார்.

அதன்பின் வேலூரை நோக்கித் தன் படையைச் செலுத்திய சிவாஜி அவ்வூர்க் கோட்டையை முற்றுகை இட்டார். அங்கே பீஜப்பூரின் ஆளுநராக இருந்தவன் அப்துல்லா கான் என்பவன். அபிசீனியாவைச் சேர்ந்தவன். மிகவும் வலிமையான அரண்களையும் அகழிகளையும் கொண்டது வேலூர்க்கோட்டை. அதற்குள் தன்னை அடைத்துக்கொண்டு சிவாஜியின் மராட்டியப் படைகளை எதிர்த்து நின்றான் அப்துல்லா கான்.

சிவாஜியின் பீரங்கிகள் கோட்டையை நோக்கி பலமுறை முழங்கின. ஆனாலும் வேலூர்க் கோட்டைத் தலைவன் அசைந்து கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து தன் படைத்தலைவன் ஒருவனிடம் முற்றுகைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவாஜி தெற்கு நோக்கிச் சென்றார். (அதற்குப் பல மாதங்கள் கழித்து, சிவாஜி திரும்பச் சென்ற பிறகே வேலூர்க் கோட்டை விழுந்தது).

thiru.jpg

கெடிலக்கரையில் திருவதிகை என்ற இடத்தை அடைந்த சிவாஜி, அங்கே வாலிகொண்டபுரத்தின் ஆளுநரான ஷெர்கானை எதிர்கொண்டார். வீரமிக்க மராட்டியப் படையைச் சமாளிக்க முடியாமல் ஷெர்கான் சரணடைந்தான். அவருக்குக் கொடுக்கப் பணம் இல்லாததால் தன்னுடைய மகனைப் பிணையாக வைத்துப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டு மகனை மீட்டுக்கொண்டான் ஷெர்கான்.

இப்படியாகக் காவிரி ஆறு வரைக்கும் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திய சிவாஜி, அடுத்து தஞ்சை நோக்கித் திரும்பினார். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான ஏகோயிக்குத் தூதுவிட்டு தன்னைச் சந்திக்க வருமாறு செய்தி அனுப்பினார். அதோடு மதுரை நாயக்கருக்கும் தூது அனுப்பிய சிவாஜி, சமாதானமாகப் போக பிணைத்தொகை ஒன்றை அறிவித்தார். அவரோடு போரிட விரும்பாத சொக்கநாத நாயக்கர் பிணைத்தொகையைக் கொடுத்து அனுப்பினார்.

திருமழபாடியில் ஏகோயியும் சிவாஜியும் சந்தித்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ சிவாஜியிடம் அச்சம் கொண்ட ஏகோயி இரவோடு இரவாக அங்கிருந்து ஓடிவிட்டார். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த சிவாஜி குழந்தைத்தனமாக நடந்துகொண்ட தம்பி ஏகோயியைக் கண்டித்தாலும் தஞ்சை மீது படையெடுக்க விரும்பவில்லை. அதன்பின் ஔரங்கசீப்பின் படைகள் மராட்டியத்தில் தொல்லை தருவதாகச் செய்தி வரவே தன் திக்விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தலைநகர் திரும்பினார் சிவாஜி.

அவர் அந்தப் பக்கம் சென்றதும் தைரியமடைந்த ஏகோயி, சிவாஜி இங்கே நிறுத்தியிருந்த படைகளின் மீது தாக்குதல் தொடுத்தார். முதலில் பின்வாங்கினாலும் அதன்பின் முன்னேறித்தாக்கிய சிவாஜியின் படை தலைவனான அவருடைய மகனான சாம்பாஜி, ஏகோயியின் படையினரைக் கொன்று குவித்தார்.

இந்தச் சகோதரச் சண்டை மராட்டிய அரசுக்குப் பின்னடைவைத் தரும் என்று கருதிய இருதரப்பிலும் இருந்த அதிகாரிகள் சமாதானம் பேசினர். அதன்படி தமிழகத்தின் வடபகுதி சிவாஜியின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்றும் தஞ்சையின் சுற்றுப்பகுதிகளை ஏகோயி ஆட்சி செய்யலாம் என்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்து சமயத்திற்குப் புறம்பான எவரையும் ஆட்சிப்பகுதிக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அந்த உடன்படிக்கையின் முக்கிய ஷரத்துகளில் ஒன்று.

இப்படியாக மராட்டிய அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைகொண்டது. விஜயநகரப் பேரரசின் மறைவுக்குப் பிறகு முகலாயத்தை பரவவிடாமல் தமிழகத்தின் நிலைமையை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருந்ததில் நாயக்க மன்னர்களுக்கும் மராட்டிய அரசர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அதன்பின் ஐரோப்பிய அரசுகள் இங்கே கால்பதித்தன.

(முற்றும்)

 

krishnan-100x100.jpg

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில்
தொடர்ந்து எழுதி வருபவர். ‘அர்த்தசாஸ்திரம்’, ‘கிழக்கிந்தியக் கம்பெனி’, ‘பழந்தமிழ் வணிகர்கள்’ போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், ‘சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு’. தொடர்புக்கு : kirishts@gmail.com

http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-30/

டிஸ்கி :
தொடரின் ஆசிரியர் மராத்தியர் படையெடுப்போடு முடிக்கிறார்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி தமிழ்நாட்டிற்கு படையெடுத்த வரலாற்றுத் தகவலை  அறிந்துகொண்டேன்.
நன்றி புரட்சி தொடர் பகிர்விற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.