Jump to content

இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 அக்டோபர் 2023, 03:06 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இது இன்னும் ஆழமடைந்துள்ளது.

இரு நாடுகளும் இந்திய பெங்கடல் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புவதால் இந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனா தனது கடற்படையை நவீனமயமாக்கியுள்ளது. ஏராளமான விமான தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டு கடற்படை கொண்டுள்ளது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “கடந்த 20-25 ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் இருப்பு மற்றும் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீன கடற்படையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உங்கள் சுற்றுப்புறத்தில் இவ்வளவு பெரிய கடற்படை இருக்கும் போது, அதன் செயல்பாடுகள் உங்கள் பக்கத்தில் அவ்வப்போது தெரியும்.” என குறிப்பிட்டார்.

சீன துறைமுக நடவடிக்கைகளை குறிப்பிடும்போது, குவாதர் மற்றும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவின் முந்தைய அரசுகள் மீதும் விமர்சனத்தை வைத்தார்.

“இதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் இந்த துறைமுகங்கள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அன்றைய அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எனவே, அவை நம் நாட்டின் பாதுகாப்பில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் இப்போது உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ” என்றார்.

இந்தியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது , முன்பை விட மிகப் பெரிய அளவில் இருக்கும் சீனாவின் இருப்புக்கு ஏற்ப இந்தியா தயாராவது சரியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘முத்துச்சரம்’ உத்தி

இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி வரும் உத்தி “முத்துச் சரம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த மூலோபாயம், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் மூலோபாய துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கட்டமைத்து பாதுகாப்பதை உள்ளடக்கியது. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் இந்த துறைமுகங்களை பயன்படுத்தலாம்.

சீனா தனது எரிசக்தி நலன்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களைப் பாதுகாக்க மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் வழிகளில் பல நாடுகளுடன் மூலோபாய உறவுகளை உருவாக்க உதவும் வகையில் இந்த "முத்துக்கள்" உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தில் எத்தியோப்பியா, சோமாலியா, ஜிபூட்டி, எரித்திரியா ஆகியவை உள்ள பகுதி கொம்பு போன்ற் இருப்பதால் இவை ஹார்ன் ஆப் ஆப்ரிக்கா ( Horn of Africa) என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள ஜிபூட்டி மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடாரில் சீனா துறைமுகங்களை கட்டி வருகிறது. இதுதவிர, இலங்கையின் ஹம்பாந்தோட்டையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை செயல்பாடுகளையும் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தத் துறைமுகங்கள் உதவியாக உள்ளன.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,AFP

'சீனா நிரந்தர சவால்'

பாதுகாப்பு நிபுணர் சி. உதய் பாஸ்கர் இந்திய கடற்படையில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது டெல்லியில் உள்ள சொசைட்டி ஃபார் பாலிசி ஸ்டடீஸின் இயக்குநராக உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீனா கடற்படையின் இருப்பு அதிகரித்து வருவதால் இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்து என்ன என்று அவரிடம் கேட்டோம்.

இதற்கு அவர், “அச்சுறுத்தல் என்பதை விட, இது ஒரு நிரந்தர சவால் என்று நான் கூறுவேன். இந்தியப் பெருங்கடல் பகுதியில், தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்குவதன் மூலம், அந்த பகுதியில் தனது இருப்பைத் தக்கவைக்கும் திறன் இப்போது சீனாவிடம் உள்ளது. சீனா மிகவும் வலுவான கடல்சார் இருப்பைக் கொண்டுள்ளது, இது அதிகரித்து வருகிறது. அதில் கடற்படை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

சீனாவின் கடற்படை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு குறித்து பேசிய அவர், “அவர்களின் நோக்கம் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அதை என்ன செய்வார்கள்? இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்துவார்களா? போன்றவற்றை நாம் கவனமாக கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.

சரி சீனாவின் எண்ணம்தான் என்ன? “இந்தியப் பெருங்கடலில் சீனா எப்போதும் தனது வலுவான இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது” என்றும் உதய் பாஸ்கர் கூறுகிறார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?

சீன கடற்படையின் செல்வாக்கு ஒருபக்கம் அதிகரித்துவரும் சூழலில், இது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை எந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வி எழுகிறது.

சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை தற்போது சுமாராகவே உள்ளது என்கிறார் உதய் பாஸ்கர்.

“கடற்படையில் திறனை அடைவது என்பது மிகவும் மெதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்முறையாகும். ஒன்றிரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வாங்கினால் மட்டும் போதாது. நீர்மூழ்கி திறன்கள், வான்வழி கண்காணிப்பு என பலவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். ”

வைஸ் அட்மிரல் அனுப் சிங், இந்தியாவின் கிழக்கு கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

இந்த விவகாரம் குறித்து அவர் பேசும்போது, “சீனாவிடம் 500 கப்பல்கள் கொண்ட கடற்படை உள்ளது என்பது முக்கியமில்லை. கடல்வழி விநியோகம், மக்களிடையே, குறிப்பாக மாலுமிகளிடையே தொழில்முறையை வளர்ப்பதிலும் சீனா இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஏவுகணைகளின் எண்ணிக்கைதான் கடைசியில் முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை. அதேநேரம், கடற்படையின் தொழில்நேர்த்தி, தளவாட உதவி ஆகியவையும் முக்கியம். இந்தியப் பெருங்கடலில் தளவாட ஆதரவு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

சீனா அதிக எண்ணிக்கையில் பயணக் கப்பல்களை உருவாக்கியுள்ளது, ஆனால் எண்ணெய், உணவுப் பொருட்கள், நீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் துணைக் கப்பல்கள் அவர்களிடம் இல்லை என்றும் அனுப் சிங் கூறுகிறார்.

“இந்தியாவின் கடற்படை 138 கப்பல்களைக் கொண்டிருந்தாலும், புதிய கப்பல்களை கடற்படையில் இணைத்துக்கொள்வதை விட பழைய கப்பல்களை படையில் இருந்து நீக்கும் விகிதம் அதிகமாக இருப்பதால் தீபகற்ப நாடாக நம்மிடம் இன்னும் அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் உள்ளன. இது இந்தியா தன்னை சுற்றியுள்ள கடல் பகுதிகளை கட்டுப்படுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது

நீர்மூழ்கி கப்பலாக இருந்தாலும் கூட, இந்திய கடல் பகுதியில் எதுவும் இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“நீர்மூழ்கிக் கப்பல் ஒரு ஜலசந்தியைக் கடந்த பின்பு, அது நீரின் மேற்பரப்பிற்கு வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS)தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீன இதை செய்வதில்லை. எனினும் நாம் அவர்களை கண்டுபிடித்து விடுகிறோம். அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் விட்டுக்கொடுப்பதில்லை” என்றார்.

அனூப் சிங்கின் கூற்றுப்படி, “ஜிபூட்டியில் காலூன்ற சீனாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, எதிர்காலத்தில் அவர்கள் குவாடாருக்கும் வரலாம், ஆனால் அவர்கள் இன்னும் தீபகற்ப இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர்.”

மேலும், சீன கடற்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள பல மாலுமிகள் கட்டாய சேவையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அவர்களிடம் தொழில்முறை திறன் குறைவாகவே இருக்கும் என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“அவர்களின் மூத்த மாலுமிகள் மட்டுமே ஓரளவு தொழில்முறை வல்லுநர்கள். ஆனால், அவர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உளவு பார்ப்பதாக அச்சம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படைக்கு சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து சுமார் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தது.

அப்போது, இந்தக் கப்பல் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கப்பல் மேற்கொள்ளும் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான பணிகள் சர்வதேச சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் சீனா கூறியிருந்தது.

எனினும், இது மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே வேலையாக கொண்ட“உளவுக் கப்பல்”என்று இந்தியாவில் கவலை எழுந்தது.

அப்போது, மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட “உளவுக் கப்பல்” என்ற கவலை இந்தியாவில் எழுந்தது. யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏழு நாட்கள் நிறுத்தப்பட்டு இருப்பது இந்தியாவை அருகில் இருந்து உளவு பார்க்க அந்த கப்பலுக்கு வாய்ப்பை ஏற்படுத்துமா என்றும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குமா என்றும் கேள்விகள் எழுந்தன.

ஹம்பாந்தோட்டையில் இருந்து வெறும் 900 கி.மீ முதல் 1500 கி.மீ வரையிலான தூரத்தில் சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் உள்ளதும் இந்தியாவின் கவலைக்கு முக்கிய காரணமாகும். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், ஹம்பாந்தோட்டையில் இருந்து 1100 கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் எண்ணிக்கையும் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதால், அவை உளவு பார்ப்பதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் கவலையாக உள்ளது.

ஆராய்ச்சிக்கும் உளவு பார்ப்பதற்கும் இடையே மிக நுண்ணிய கோடு இருப்பதாக சி உதய் பாஸ்கர், விளக்குகிறார். மேலும் அவர் “இவை அனைத்தும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் (UNCLOS) கீழ் அனுமதிக்கப்பட்ட முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகளாகவும் வகைப்படுத்தப்படலாம். எனவே இது தொடர்பாக எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. கண்காணிக்க கூடிய வசதி உள்ள அனைத்து நாடுகளும் இதில் ஈடுபடுகின்றன.” என்று தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3g3q0d8wl4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.

வாயால வடை சுடல் மட்டுமே..😰

அதனால் தான், அமெரிக்கா களம் இறங்கி உள்ளது.🤦‍♂️

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.