Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்

MinnambalamOct 16, 2023 07:15AM
Israel Birth historical error

ராஜன் குறை

யூதர்களின் குடியேற்ற நாடாகிய இஸ்ரேல் அது உருவாகிய காலம் 1940-கள் முதலே பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களாகிய பாலஸ்தீன அரேபிய-இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தும், நிலத்தை ஆக்கிரமித்தும், அவர்களை பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் வருகிறது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில் முப்பது லட்சம் பேரும், காஸாவில் இருபது லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்கள். இதைத்தவிர இஸ்ரேல் குடிமக்களாகவும் முஸ்லிம்கள் உள்ளனர்.

இஸ்ரேல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் யூதர்களின் குடியிருப்பாக வலிந்து உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் அது ஒரு தேசிய அரசாக நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் அன்றிலிருந்தே அந்த நிலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அவர்கள் இஸ்ரேலின் இரண்டாம்தர குடிமக்களாக வாழ்வதா, இஸ்ரேலின் மேலாதிக்கத்தில் வாழ்வதா, அவர்களது உரிமைகள் என்ன, அவர்கள் சுயாட்சி எத்தகையது என விடை தெரியாத கேள்விகள் நிலவுகின்றன. இந்த துயர வரலாறு மிகவும் நீண்டது; சுருக்கிக் கூற கடினமானது. மகாத்மா காந்தி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு சொந்தமானது என்பது போல பாலஸ்தீனம் பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமானது; அங்கே யூதர்களைக் குடியேற்றுவது தவறு என்று 1938ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Oz8kt6Gn-Rajan-Kurai-1.jpg

இன்றைய நிலையில் குறிப்பாக காஸா பகுதி ஒருபுறம் கடலாலும், மற்ற எல்லா திசைகளிலும் இஸ்ரேல் நாட்டாலும் சூழப்பட்டுள்ளது. காஸாவினுள் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு விதத்தில் காஸா ஒரு திறந்தவெளி சிறைச்சாலை எனலாம். இஸ்ரேலின் மேற்பார்வையில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசம், இதில்தான் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். இந்த பகுதி ஹமாஸ் அமைப்பால் ஆளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஹமாஸ் இஸ்ரேலினுள் புகுந்து குடிமக்களைத் தாக்கியுள்ளது. ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவின் மீது ஏவுகணைகளை ஏவியதுடன், ராணுவத்தையும் காஸாவினுள் அனுப்பியுள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்; சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் காஸாவினுள் செல்லாமல் இஸ்ரேல் தடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஹமாஸின் வன்முறையைக் கண்டித்தாலும், அதற்கான காரணம் இஸ்ரேல் பாலஸ்தீனிய சுயாட்சிக்கான ஒரு முறையான அரசியல் தீர்வை காணாததுதான், அதன் ஆக்கிரமிப்பு நோக்குதான் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்ரேலின் முற்போக்கு சிந்தனையாளர்களே பிரதமர் நெடன்யாஹூ மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். அவருக்கெதிராக வெகுமக்கள் கிளர்ச்சிகள் இஸ்ரேலில் நடந்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மகாத்மா காந்தியின் கூற்றைத் தொடர்ந்து பாலஸ்தீனிய மக்களின் அரசியல் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்துள்ளது. பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராபத் இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரதமர் இந்திரா காந்தி அவரை வரவேற்றுள்ளார். பாலஸ்தீனியர்களுக்கான சுயாட்சி அரசை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் குரலாக இருந்துள்ளது. ஜனதா கட்சி ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறும் காணொலி இப்போது மீண்டும் வலைதளங்களில் காணக் கிடைக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறினாலும், இஸ்ரேலின் கடுமையான எதிர் தாக்குதலை, காஸாவிலுள்ள குடிமக்களைக் கொன்று குவிப்பதை இந்தியா கண்டிக்க இன்னும் முன்வரவில்லை. இந்தியாவில் சங்க பரிவாரம் சார்ந்த இந்துத்துவர்கள் பலர் இஸ்ரேலுக்கான கடுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். பாலஸ்தீனியர்களும் முஸ்லிம்கள் என்பதால் ஹமாஸை அழித்தொழிக்க வேண்டும் என்றும், தாங்கள் இஸ்ரேலுக்கு வந்து போராடத் தயாரென்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் கூறி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறியில் இந்துக்களும், யூதர்களும் ஒன்றுபடலாம் என இவர்கள் கூறுவது தெளிவு.

இப்படி இந்துத்துவம் இஸ்ரேலை ஆரத்தழுவுவது ஒரு வரலாற்று முரண் எனலாம். ஏனெனில் ஆரியர்கள் குறித்த கதையாடல்களே ஐரோப்பாவில் யூத வெறுப்பை அதிகரித்தது; அதுவே ஹிட்லரை மிகக் கொடூரமான யூத இன அழிப்புக்கு இட்டுச் சென்றது என்பதுதான் வரலாற்றின் மிகப்பெரிய துயரம். இந்த ஆரிய மாயை எப்படி உருவானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரியர்கள், யூதர்கள், பிராமணர்கள்: சில அடையாளங்களின் கதை

பேராசிரியர் டோரதி ஃபிகைரா (Dorathy Figueira,b.1955) ஓர் அருமையான ஆய்வு நூலை சமீபத்தில் எழுதியுள்ளார். அதன் பெயர் Aryans, Jews, Brahmins: Theorizing Authority through Myths of Identity (New Delhi: Navayana, 2015).

Israel Birth historical error

இந்த நூல் எப்படி வேத கால ஆரியர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட மிகையான புகழ்ச்சிகள், கட்டுக்கதைகள் சுருக்கமாகச் சொன்னால், ஆரிய மாயை ஐரோப்பாவில் ஆரிய இனவாதத்தைத் தோற்றுவித்தது, யூதர்கள் மீதான வெறுப்பைப் பரவலாக்கியது என்பதை விரிவான ஆய்வின் மூலம் எடுத்துரைக்கும் நூலாகும்.

இது எப்படி நடந்தது என்றால், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வரும் ஐரோப்பியர்கள் இங்கு புழங்கும் சமஸ்கிருத மொழி குறித்து அறிந்து கொள்கிறார்கள். அந்த மொழியில் ஏராளமான நூல்கள் இருப்பதையும், அவை மிகவும் தொன்மையானவை என்றும் அறிகிறார்கள். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சமஸ்கிருத சொற்களுக்கும், ஐரோப்பிய மொழிகளின் சொற்களுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் கவனிக்கிறார்கள். சமஸ்கிருத மொழியை பண்டைய இந்தியாவில் பேசியவர்கள் ஆரியர்கள் என்று தெரியும்போது அவர்களுக்கு ஆரிய இனம் பற்றி பெரும் வியப்பு தோன்றுகிறது. பலவிதமான கற்பனைகளும் தோன்றுகின்றன. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் சமஸ்கிருதம் குறித்தும், அதன் இலக்கியம் குறித்தும் எழுதுகிறார்கள். பலர் சமஸ்கிருதம் பயில்கிறார்கள். சமஸ்கிருத நூல்களை தப்பும் தவறுமாக மொழியாக்கம் செய்கிறார்கள். பலர் தங்கள் சொந்த சரக்கையும் சேர்த்து இதுதான் சமஸ்கிருத நூல் என்று எழுதி ஐரோப்பிய மொழிகளில் பிரசுரிக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் (1700-1800 CE) என்லைட்டன்மெண்ட் என்னும் அறிவொளிக்கால ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பலருக்கும் கிறிஸ்துவ மத நிறுவனங்கள் மீது கடும் விமர்சனம் நிலவியது. குறிப்பாக கத்தோலிக்க சமய நிறுவனம், அதன் போலித்தனம், போப் பாண்டவர், பாதிரியார்களின் ஊழல் மிகுந்த வாழ்க்கை, அரசியல் தலையீடுகள் எல்லாவற்றின் மீதும் அவர்களுக்கு விமர்சனம் இருந்தது. கிறிஸ்துவமும், அதன் முன்னோடியான யூத மதமும்தான் தங்கள் பண்பாட்டின் வேர்கள் என்று நினைப்பது அவர்களுக்கு உவப்பாக இல்லை.

அந்த நிலையில் சமஸ்கிருதம், ஆரிய பண்பாடு குறித்து கேள்விப்பட்டதும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பலர் ஆரியமே யூதர்களைவிட மூத்த பண்பாடு, அதுவே உலக நாகரிகத்தின் துவக்கம், ஐரோப்பியர்களின் பண்பாடும் ஆரிய பண்பாட்டின் தொடர்ச்சிதான் என்று நம்பத் தலைப்படுகிறார்கள்.  முற்போக்கான அரசியல் சிந்தனைகளுக்காகவே அந்த ஐரோப்பிய சிந்தனையாளர்களை அறிந்துள்ள நாம், அவர்களது ஆரிய மோகத்தைக் குறித்து கவனித்ததில்லை.

உதாரணமாக வோல்டேரை (Voltaire, 1694-1778) எடுத்துக்கொள்வோம். அரசியல் கோட்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்களில் ஒருவர். வோல்டேர் அவருக்குக் கிடைத்த அரைவேக்காட்டு ஆய்வு நூல்களின் அடிப்படையில் ஆரியர்களே உலக பண்பாடுகளின் தோற்றுவாய் என அறுதியிட்டுக் கூறுகிறார். வேதங்கள் என்ன என்று தெரியாமலேயே வேதங்களே பண்பாட்டின் துவக்கம் என்று கூறுகிறார். பிராமணர்களே உலகின் முதல் இறையியலாளர்கள். சீனா, எகிப்து, ஜப்பான் என எல்லா நாடுகளிலிருந்தும் சென்று பிராமணர்களிடமே இறையியல் பயின்றார்கள் என்றெல்லாம் அவர் கூறுகிறார். யூதர்கள் பிராமணர்களிடமிருந்துதான் தங்கள் சிந்தனைகளை களவாடினார்கள் என்று கூறுகிறார். அவருக்கு யூதர்களை அறவே பிடிக்காது.

வோல்டேரைப் போல பலரும் ஆரியமே பண்பாட்டின் ஆதிமூலம், யூதர்கள் அதற்குப் பின் வந்தவர்கள்தான் என்று எழுதுகிறார்கள். யூத, கிறிஸ்துவ மதங்களின் முன்னோடி ஆதி ஆரிய மதமே என்று நினைக்கிறார்கள். அதாவது வேதங்களுக்கும் முன்பு பிரம்மம் என்ற ஒற்றைக் கடவுளை சிந்தித்த மதம் என்று ஆரிய மதத்தை புகழ்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த ஆதி மதம் பின்னால் சீரழிந்துவிட்டது, பல்வேறு கடவுள்கள், புராணங்கள், பலியிடும் சடங்குகள் என சின்னாபின்னமாகிவிட்டது என்றும், அதற்கு இந்தியாவின் தட்பவெப்பமே காரணம் என்றும் பலர் எழுதுகிறார்கள்.

ஐரோப்பிய காலனீய சிந்தனை இதை இறுகப் பற்றிக்கொள்கிறது. பண்டைய இந்தியாவின் ஆரியப் பண்பாடு மிகவும் உயர்ந்தது. ஆனால் அது காலப்போக்கில் சீரழிந்து பலதெய்வ வழிபாடுகளாக, ஜாதியமாக, மூட நம்பிக்கைகளாக, புராணக் கதைகளாக சிதைந்து, தேங்கிப் போய்விட்டது. ஐரோப்பியர்கள்தான் அந்த தேக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டு மீண்டும் முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து எழுதுகிறார்கள். அது ஒருபுறம் காலனீய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த உதவினாலும், மற்றொரு புறம் ஆரிய பண்பாடே இந்திய, உலகப் பண்பாட்டின் தோற்றுவாய், பிராமணர்களே உலகின் முதல் இறையியலாளர்கள் என்றெல்லாம் மிகையான கற்பிதங்களையும் சேர்த்தே பரப்புகிறது.

பத்தொன்பதாம்  நூற்றாண்டில் இந்த பண்பாடு குறித்த சிந்தனை இனவாதமாக (Racism) மாறுகிறது. அதாவது உடற்கூற்றின் அடிப்படையில் ஆரியர்களை பிரித்து அறியலாம் என்ற எண்ணம் ஐரோப்பாவில் வலுவடைகிறது. தோலின் நிறம், தாடை, மூக்கு ஆகியவற்றின் அமைப்பு, உயரம், கண்களின் நிறம் என்பன போன்ற அடையாளங்கள் மூலம் தூய ஆரிய ரத்தம் உடையவர்கள் யார் என்பதைக் காணலாம் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஆரியர்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் ஆரியர்களுக்கு அங்கிருந்த கறுப்பு நிற மனிதர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்தியர்கள் யாரும் ஆரியர்கள் இல்லையென ஐரோப்பிய ஆரிய இனவாதிகள் நினைத்தார்கள்.

இந்தியாவில் ஆரியர்கள், ஆரியர் அல்லாதவர்கள், திராவிடர்கள் ஆகியவை பண்பாட்டு அடையாளங்களாக பார்க்கப்பட்டனவேயன்றி, உடற்கூறு சார்ந்த இனமாகப் பார்க்கப்படவில்லை. பிராமணர்கள் தங்களை ஆரியர்கள் எனக் கருதிக்கொண்டாலும், தீண்டாமை போன்றவற்றை கடைப்பிடித்தாலும், அவர்கள் வரலாற்றுக் காலம் முன்பிருந்தே பிற இனங்களுடன் கலந்து வாழ்ந்ததால் உடற்கூறு என்ற அளவில் வேறுபடுத்துவது சாத்தியமில்லை எனலாம். வேதங்களிலேயே இனக்கலப்பு பேசப்பட்டிருப்பதை தொமிலா தாப்பர் போன்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் வட இந்தியர்களும், தென்னிந்தியர்களும் வேறு, வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விவேகானந்தரே அமெரிக்க சொற்பொழிவில் கூறுகிறார். தென்னிந்தியர்கள் திராவிட பண்பாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வர்ண தர்மத்தை உருவாக்கிய ஆரிய பண்பாட்டைச் சேர்ந்தவர்களல்ல என்பது திராவிட சித்தாந்தம்.

ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் மீதான பண்பாட்டு விமர்சனம், வெறுப்பு போன்றவை இந்த ஆரிய இன அடையாளவாதத்துடன் சேர்ந்தபோதுதான் ஹிட்லரின் யூத இன அழிப்புக் கோட்பாடு இருபதாம் நூற்றாண்டில் தோன்றியது. ஹிட்லரின் ஜெர்மானிய படைகள் 1941 முதல் 1945 வரை கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தது. யூதர்களை முதலில் தனிமைப்படுத்தி கான்சென்ட்ரேஷன் காம்ப் என்னும் முகாம்களில் தங்கவைத்தார்கள். பின்னர் அவர்களை பலவகைகளில் கும்பல், கும்பலாகக் கொன்றார்கள். இந்த கொடூர நிகழ்வு ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இஸ்ரேல் உருவாக்கம்    

பாலஸ்தீனம் ரோமப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலேயே யூதர்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். அதன்பின் அப்பகுதி முழுவதும் அரேபிய, இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படுவதற்கு முன்னமே யூதர்கள் பெருமளவு இடம்பெயர்ந்து ஐரோப்பா முழுவதும் குடியேறி விட்டார்கள். யூதர்கள் தனியான ஒரு மத அடையாளத்துடன், பண்பாட்டுடன் வாழ்ந்தார்கள். அவர்களில் சிறந்த சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பலர் தோன்றினாலும், அவர்கள் முக்கியமாக பணத்தை வட்டிக்கு தருபவர்களாகவும் இருந்துள்ளார்கள். அதனால் செல்வந்தர்களாக இருந்தார்கள். இதன் காரணமாக பெரும்பான்மை கிறிஸ்துவ மக்களுக்கு அவர்கள் மீது ஒவ்வாமை பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரத்து வியாபாரி நாடகத்தில் வரும் இரக்கமற்ற வட்டிக்காரன் ஷைலக் பாத்திரம் புகழ்பெற்றது.

Israel Birth historical error

இந்த நிலையில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே யூதர்கள் அவர்கள் ஆதி நிலமான இஸ்ரேல்/பாலஸ்தீனத்துக்குத் திரும்புவது குறித்த சொல்லாடல் உருவாகத் தொடங்கியது. சிறிது, சிறிதாக சிலர் சென்று குடியேறத் தொடங்கினார்கள். இது முதல் உலகப் போருக்குப் பின் வலுவடைந்தது. பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இது சாத்தியமாகியது. இங்கிலாந்தின் மந்திரிகளில் ஒருவரான பெல்ஃபோர் 1917ஆம் ஆண்டு யூதர்களுக்கான ஒரு தாயகத்தை உருவாக்குவதாக அறிவித்தார். இது குடியேற்றங்களை அதிகரித்தது. ஆனால், ஹிட்லரின் யூத அழிப்பு இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்குவதைக் கட்டாயமாக்கியதுடன், அதை உலகின் பார்வையில் நியாயப்படுத்தவும் செய்தது. அதனால் சர்வதேச அமைப்புகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர்களான அரேபிய முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படவில்லை எனலாம். யூதர்களின் தேசமாக இஸ்ரேல் உருவானபின் அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அவர்கள் பலர் துரத்தியடிக்கப்பட்டார்கள். இரண்டாம்தர குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள். அதிலிருந்து துவங்கியதுதான் தங்கள் உரிமை மீட்புக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டம்.

தங்களை ஆரியப் பண்பாட்டின், அதன் சனாதன தர்மத்தின் வாரிசுகளாகக் கருதிக்கொள்ளும் இந்துத்துவர்கள் இன்று யூதர்களின் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு வரலாற்று முரண் அல்லவா? இஸ்லாமிய வெறுப்பே அவர்களை இன்று இணைக்கிறது. இன, மத அடையாள வெறுப்புச் சொல்லாடல்களுக்கு என்றைக்குத்தான் மானுடம் முடிவு கட்டி, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என ஒன்றுபடும் என்று தெரியவில்லை.  

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

https://minnambalam.com/political-news/annadurai-arya-mayai-israel-birth-historical-error-by-rajan-kurai/

 

  • கருத்துக்கள உறவுகள்

இராஜன் குறை போன்றோரே வரலாற்றை cherry pick பண்ணி தம் அரசியலுக்கு சார்பானதை மட்டும் முன்னிலைப்படுத்தும் போது எனைய தமிழர்கள் இதில் பிழையான புரிதலில் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே.

பலஸ்தீனரை மண்ணின் மைந்தர் எனும் ஆசிரியர் ஏனோ ஜெருசலேத்தில் கோவில் கட்டி வாழ்ந்த ஆதி குடியை, “குடியேறிகள்” என வர்ணிக்கிறார்🤣.

இன்னொரு திரியில் எழுதினேன் எமது அரசியல்வாதிகளும், புலமைசார் சமூகமும் இவ்விடயத்தில் எம்மை மூளை சலவை செய்துள்ளன என்று.

இந்த கட்டுரை அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொரு பகிடி என்னவென்றால் இப்ராஹிம்,  இஸ்ஹாக், யாக்கூப், யூசுப், மூஸா,  ஹாரூன், தாவூத், சுலைமான், யூனூஸ், எல்யாஸ், ஸக்கரியா, யஹ்யா, ஈஸா போன்ற யூதர்களை பாலஸ்தீன பயங்கரவாதிகளே நபிகளாக ஏற்றுகொண்டிருந்தாலும் இந்த அரைகுறைகள் ஏற்றுக்கொள்ளாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.